திங்கள், 26 டிசம்பர், 2022

சொற்பிறப்பியல் அறிஞர் இராம கி ஐயா அவர்கள் . . .

 

சொற்பிறப்பியல் அறிஞர் இராம கி ஐயா அவர்கள் . . .

------------------------------------------------------------------------------------------------------------------------

// பழந்தமிழ் இலக்கியங்களை ஒழுங்காய்ப் படிக்காமல், தப்பும் தவறுமாய்ப் புரிந்துகொண்டு,”அது திராவிடம், இது இந்து” என்று மொண்ணையாய்ச் சொல்லி ஒவ்வொரு பழந்தமிழ்க் குமுகப் பழக்கத்தையும் சாடிக் கொண்டிருப்பது நம்மிடையே ஒரு வெற்றிடத்தையே உருவாக்கும். இது சரியல்ல.//

உண்மை. தற்போது எங்களது கணினித்தமிழ் மென்பொருளுக்காக நான் தமிழில் உள்ள பிறமொழிச் செயல்களைத் தொகுத்துவருகிறேன். ஆனால் இப்பணி மிகவும் சிக்கலாக உள்ளது. அறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கும்போது, முடிவு எடுப்பது என்பது மிகவும் சிக்கலாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, ''காலம்'' ''பயணம்'' போன்ற சொற்கள். மூதறிஞர் பாவாணர் அவர்கள் ''பயணம்'' என்பதைத் தமிழ்ச்சொல்லே என்று கூறுவதாகத் தெரிகிறது. ஆனால் அறிஞர் அருளியார் அவர்கள் இதை வடமொழிச்சொல் என்று கூறுவதாகக் கருதுகிறேன்.

அதுபோன்று ''காலம்'' என்பதை அருளியார் அவர்கள் தமிழ்ச்சொல் என்று கருதுவதாக எண்ணுகிறேன். ஆனால் மற்றவர்கள் இதை வடமொழிச்சொல் என்று கொள்வதாகத் தெரிகிறது. ''சங்கம்'' என்பதும் அப்படியே.

சொற்பிறப்பியல், வரலாற்றுத்தமிழ் போன்ற துறைகளில் எவ்வித அறிமுகமும் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு இது மிகச் சிக்கலான ஒன்றாக இருக்கிறது.

எனவே, இவற்றையெல்லாம் சொற்பிறப்பியல் அறிஞர்களைக்கொண்ட ஒரு உயர்மட்டக்குழு, இத்துறையில் தொடர்புடைய பிற அறிஞர்களையும் இணைத்துக்கொண்டு, ''இதுதான் தமிழ்ச்சொல் , இதுதான் அயல்மொழிச்சொல்'' என்று தக்க சான்றுகளுடன் சொற்களைத் தொகுத்து, அரசு சார்பாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு அரசு - தமிழ்வளர்ச்சித்துறை ''அயல்மொழிச்சொல் அகராதி'' ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதையும் மீள் ஆய்வுக்கு உட்படுத்தி, ஒரு செம்மையான பதிப்பை வெளிக்கொண்டுவந்தால் பயனுடையதாக இருக்கும்.

மேலும் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் ''செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்டம் ''( பாவாணர் ஐயா இதன் முதல் இயக்குநர்) ஒன்று தொடர்ந்து செயல்படுகிறது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நிறுவனம் சொற்பிறப்பியல் தொடர்பான பட்டயப் படிப்புக்களைத் தொடங்கி, இளைஞர்களை இத்துறையில் பயிற்றுவிக்கலாம்.

அயல்மொழிச்சொற்கள் கலப்பில்லாமல் நாம் தமிழை எழுதுவதற்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். உண்மையைச் சொல்லப்போனால், தமிழ்மொழியை பிறமொழிகளின் '' மேலாண்மையிலிருந்து'' மீட்டெடுக்க உதவும்.

மேலும் இத்துறையில் ஆழ்ந்த , அகன்ற அறிவுடைய அறிஞர் பெருமக்கள் பெரும்பாலானோர் அகவை முதிர்ச்சி உடையவர்கள். இவர்கள் தங்களது தமிழ்ப்பற்றால் தனித்தே இத்துறையில் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னர் இத்துறை நீடிக்க, அவர்களின் உதவியுடன் இளம் ஆய்வாளர்கள் உருவாக்கப்படவேண்டும். அதற்கு மிகத் தேவையான ஒன்று . . . இத்துறை அறிவு தனிப்பட்ட அறிஞர்கள் சிலரின் தமிழார்வத்தினால் நீடிக்கிற அறிவாக இல்லாமல், அவர்களின் துணையுடன் ஒரு அறிவியல்துறையாக வளரவேண்டும். இது மிக மிக ''முகமையானது'' !

நான் தற்போது இயன்றவரை அயல்மொழிக் கலப்பு இல்லாமல் எழுத முயல்கிறேன். அதற்காக என்முன் அறிஞர்கள் அருளியார், கோட்டையூர் இரா. மதிவாணன், எஸ். சுந்தரசீனிவாசன், மு. அப்பாஸ் மந்திரி ஆகியோர்களின் நூல்களை வைத்துள்ளேன். இணையத்தில் நீடிக்கிற தளங்களையும் பயன்படுத்துகிறேன். இவற்றையெல்லாம் பயன்படுத்தித்தான் . . . 40 ஆண்டுகளுக்குமேலாகத் தமிழ்த்துறையுடன் தொடர்புடைய என்னால் .... ஓரளவுக்காகவது அயல்மொழிக் கலப்பில்லாமல் எழுத இயலுகிறது. இந்த முயற்சியை நான் பல ஆண்டுகளுக்குமுன்பே மேற்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் வேதிப்பொறியியல் துறையைச் சேர்ந்த இராமகி ஐயா அவர்களால் இந்நூல்களின் துணையின்றியே இதைச் செய்யமுடிகிறது! சற்றுப் ''பொறாமைதான்'' எனக்கு அவர்மேல்!

தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் (1) போராடும் மக்கள் இயக்கங்கள், (2) அதை நிறைவேற்ற முனையும் அரசாங்கம், (3) இந்த முனைப்புக்குத் தெளிவான திட்டங்களை அறிவியல் அடிப்படையில் வகுத்துக்கொடுக்கும் அறிஞர் குழு - இவ்வாறு மூன்று அமைப்புக்களும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழ் வளர்ச்சிக்கான பணிகள் வெற்றியடையமுடியும். இவற்றில் முதல் இரண்டும் மொழிக்கொள்கை (Language Policy) தொடர்பானவை. மூன்றாவது மொழி மேம்பாட்டுத் திட்டம் (Language Planning / Language Engineering) தொடர்பானது. இவற்றில் ஒன்றின் பணிகளை மற்றொன்று செய்யமுடியாது. அவ்வாறு செய்ய முயல்வது தமிழ் வளர்ச்சிக்குத் தடையாகவே அமையும். இது சரிவரத் தமிழகத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பதே இன்றைய உண்மை! இது புரிந்துகொள்ளப்பட்டு, பணிகள் மும்முனைகளில் நடைபெறும்போதுதான் உண்மையான தமிழ்மொழி வளர்ச்சி ஏற்படும். மற்றவையெல்லாம் வெறும் முழக்கங்களாகவே முடியும்!

 தமிழ்மொழியின் தோற்றம்பற்றிய பதிவு இல்லை இது. இன்றைய எழுத்துத்தமிழில் ஆங்கிலம் , வடமொழி முதல் மேலும் 10-க்கும் மேற்பட்ட அயல்மொழிகளின் சொற்கள் இடம்பெற்றுவருகிறது. பெரும்பான்மையான அயல்மொழிச்சொற்களை நம்மால் இனங்காணமுடியும். டாக்டர், டீச்சர்காலேஜ், ஸ்கூல், பஸ் போன்ற ஆங்கிலச்சொற்களை நம்மால் இனங்காணமுடியும். அதுபோன்று ஏராளமான வடமொழிச்சொற்களையும் (அக்னி, கௌரவம், ஜீரணம், அதிசயம் ) இனங்காணமுடியும். இவற்றைத் தவிர்த்தால் என்ன? மேலும் இவற்றிற்கான தமிழ்சொற்கள் நிலவும்போது, ஏன் அயல்மொழிச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும்? அதுபோன்று அயல்மொழிச்சொற்களுக்கு தமிழில் சொற்கள் இல்லாமலிருந்தால், ஏன் தமிழ்ச்சொற்களை உருவாக்கக்கூடாது? செவ்வாய்க் கோளத்திற்கே விண்கலத்தை அனுப்பி, ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, இதுபோன்ற மொழிவளர்ச்சிப் பணிகளை ஏன் செய்யமுடியாது? அமெரிக்க ஆங்கிலத்தை இங்கிலாந்து ஆங்கிலத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும், அவற்றிற்குத் தனி அகரமுதலிகள், இலக்கணங்கள் வேண்டும் என்று அந்த நாடுகளில் உள்ள ஆங்கிலேய மொழியறிஞர்கள் கூறும்போது, தமிழுக்கான இந்தப் பணிகளை ஏன் மேற்கொள்ளக்கூடாது? நான் கூறுவது மொழிவெறி (language chauvinism) இல்லை. மொழிவளர்ச்சி (language development) ! மேலும் இன உணர்வும் இப்பணியில் அடங்கியுள்ளது. இன ஒடுக்குமுறை நீடிக்கிற இக்காலகட்டத்தில் ஒரு இனத்தின் அடையாளமாக விளங்கும் மொழியைப் பிற மொழிகளின் மேலாண்மையிலிருந்து வெளிக்கொணர இதுபோன்ற பணிகள் தேவை. போக இயலாத ஊருக்கு நான் போகச் சொல்லவில்லை! அரசியல், பொருளாதாரக் காரணிகளால் இன்னலுக்கு உட்பட்டுள்ள தமிழ்மொழியைக் காப்பதற்கான வழிகளைத்தான் கூறுகிறேன்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India