சனி, 27 ஜூன், 2020

கொரோனாவும் மக்களுடைய பொருளாதார நெருக்கடியும்.....


கொரோனாவும் மக்களுடைய பொருளாதார நெருக்கடியும்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று காலையில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு தகவல் அளிக்கப்பட்டது. வாடகைக்கு குடியிருப்பாளர்கள் கிடைக்கவில்லை என்று ஒரு வீட்டு உரிமையாளர் அதில் கூறினார். வாடகையை நம்பித்தான் தன் வீட்டார் நம்பியிருப்பதாகவும் கூறினார். அதற்குக் கூறப்பட்ட காரணம்... லட்சக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு நீங்கி... வெளியூர்களுக்கு , குறிப்பாகத் தங்கள் கிராமங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதாகும்.
\
இங்கு நமக்கு இரண்டு ஐயங்கள் .....ஏன் அவ்வாறு சென்னையைவிட்டுச் சொந்தக் கிராமங்களுக்குச் செல்கிறார்கள்? அடுத்து, அப்படியென்றால், சென்னையில் தற்போது உள்ள மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி இருக்கிறதா? இல்லை என்பதே விடை! சற்று வசதியான வாடகை வீடுகளில் இருப்பவர்கள்கூட தற்போது வருமானம் இல்லை அல்லது குறைந்துள்ளதால்.... வசதி இல்லாத சிறிய வீடுகளுக்கு மாறிக் கொள்கிறார்கள்.
காரணம் ... வேலை இழப்பு ... ஊதியம் குறைப்பு ! மென்பொருள் பணிகளில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்து ஊதியம் வாங்கலாம். ஆனால் இவர்களுக்குக்கூட ஊதியம் குறைப்பு... மேலும் பல மென்பொருள் நிறுவனங்கள் அயல்நாடுகளின் தொழில்களுக்கு மென்பொருள்கள் தயாரித்துக்கொடுக்கும் பணிகளையே மேற்கொண்டுவருவதால், அந்த நாடுகளிலும் கொரோனா பாதிப்பால் உற்பத்தி தடைபட்டு நிற்பதால், அங்கிருந்தும் மென்பொருள் உருவாக்கத்திற்கான பணிகள் இங்குள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவது குறைகிறது அல்லது நிறுத்தப்படுகிறது என்பதால், மென்பொருள் பணியாளர்களும் எந்த நேரமும் பணிகள் பறிபோய் விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
மென்பொருள் அல்லாத பிற தொழிற் சாலைகளிலும் உற்பத்தி தடைபட்டு நிற்பதால், ஊதியம் குறைப்பு.... பணி நீக்கம்! அன்றாடம் சிறுசிறு வழக்குளை நடத்தும் வழக்கறிஞர்கள், வசதியில்லாமல் சிறிய அளவில் மருத்துவத்தொழிலை மேற்கொள்ளும் மருத்துவர்கள், இவர்களை நம்பியுள்ள பிற பணியாளர்கள் ....
அன்றாட வேலைகளில் ஈடுபடுகிற மின்பழுது பார்ப்பவர்கள், தண்ணீர்க்குழாய் பழுதுபார்ப்பவர்கள், வீடுகளுக்கு வர்ணம் அடிக்கிறவர்கள், கொத்து வேலை, தச்சு வேலை செய்பவர்கள், இந்தத்தொழில்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கான கடைகளில் வேலைபார்ப்பவர்கள், கடைவசதி இல்லாமல் தெருக்களில் காய், கனி, பூ விற்பவர்கள், கடற்கரையில் (மெரினா, எலியட் போன்றவை) சிறுசிறு வியாபாரங்களைச் செய்துவருபவர்கள், கையேந்தி உணவுக்கடைகளை நடத்துபவர்கள், சுண்டல், முறுக்கு விற்பவர்கள், ஆட்டோ, சிற்றுந்து, சரக்குந்து ஓட்டுநர்கள், தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் ..... பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
எதிர்பாராத ஒரு நோய்த்தொற்றால் ... கொரோனாவால் ... சென்னை பாதிக்கப்படும்போது ( பிற நகரங்களும் கிராமங்களும்தான் ... இதுபற்றி அடுத்து எழுதுகிறேன்) ஒரு மூன்று மாத ஊரடங்கைத் தாங்கமுடியாமல் சென்னை இருப்பதற்குக் காரணம் என்ன? 73 ஆண்டுகள் நாடு விடுதலை பெற்று ஆகியும்.... இதுபோன்ற எதிர்பாராத பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் திறமை ஏன் இந்தப் பொருளாதார அமைப்புக்கு இல்லை? தற்காலிக உற்பத்தித் தடை, வணிகத்தடைகளை ஏன் தாங்கிக் கொள்ளமுடியவில்லை? என்ன பலவீனம்? ஏன் இந்தப் பலவீனம்? இந்த மூன்று மாதப் பொருளாதாரப் பாதிப்புக்கான காரணம் .... 73 ஆண்டுகாலமாக நீடிக்கிற இந்தியப் பொருளாதார அமைப்பே... 73 ஆண்டுகாலமாக இந்தியாவையும் அதன் மாநிலங்களையும் ஆட்செய்து வந்துள்ள அனைத்துக் கட்சிகளும்தான் காரணம்.... தற்போது நாடளவிலும் மாநில அளவிலும் ஆட்சிபுரிகிற கட்சிகள் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மக்களின் பாதிப்புகளுக்கு ... நேற்று ஆட்சி செய்து, இன்று எதிர்க்கட்சிகளாக நீடிக்கிற கட்சிகள்.... இன்று ஆட்சிசெய்கிற கட்சிகள்தான் காரணம் என்று கூறுவது எந்தவகையில் சரியானது ? இதனால் இன்று ஆட்சி செய்கிற கட்சிகளை இங்கு நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகக் கடந்த 73 ஆண்டுகால மாறி மாறி ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும்தான் காரணம்! 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளும்கட்சிகள் மாறி மாறி வந்தாலும்.... இந்தியப் பொருளாதார அமைப்பை உண்மையில் கட்டுப்படுத்திவைத்துள்ளவே பெரும் தொழில் அதிபர்களும் பிற பொருள் உற்பத்தியாளர்களுமே! இவர்கள் அனைவரும் இந்தியாவின் பொருளாதார அமைப்பைச் சுயசார்பு பொருளதார அமைப்பாக மாற்றாமல்.... அந்நிய ... பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் உள்நாட்டு ஏஜெண்டுகளாகச் செயல்பட்டு வருவதுதான் காரணம்! ஆகவேதான் அங்கு அவைகளுக்குத் '' தேள் கொட்டினாலும்'' இங்கு நமக்கு '' வலி '' ஏற்படுகிறது!
உள்தாட்டிலேயே தொழில்களுக்குத் தேவையான மூலதனத்தை உருவாக்க ... இங்குள்ள விவசாய உற்பத்திமுறை மாற்றியமைக்கப்பட்டு இருக்கவேண்டும். நமது தேவைக்கு அதிகமாக விவசாய உற்பத்தி வளர்க்கப்பட்டு, உபரியைத் தொழில் மூலதனமாக மாற்றியமைத்து இருக்கவேண்டும். அவ்வாறு கிராமப்புற விவசாயிகளின் கைகளில் உருவாகும் உபரியைத் தொழில் நிறுவனத்திற்குக் கொண்டுவர, அவர்களுக்குத் தேவையான நுகர்பொருள் உற்பத்தியை வளர்த்து இருக்கவேண்டும். அதனடிப்படையில் கனரக உற்பத்தி வளர்க்கப்பட்டு இருக்கவேண்டும். தொழில் உற்பத்தி நகர்ப்புறங்களில் மட்டும் குவிக்கப்படாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பகிரப்பட்டு இருக்கவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள விவசாய உற்பத்திக்கும் சிறு தொழில்களுக்கும் நுகர்பொருள்களுக்கும் தேவையான தொழிற்சாலைகள் அம்மாவட்டத்திற்குள்ளேயே இயங்கவேண்டும். மிகப்பெரிய தொழில் ஆலைகள் அனைத்து மாநிலங்களிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு இருந்திருந்தால்.....
இன்றைய கொரோனாப் பாதிப்பை நம்மால் தாங்கியிருக்கமுடியும். தற்காலிக தொழில் உற்பத்தி, வணிகத் தடைகள் , கைத்தொழில்களின் தற்காலிகப் பணிநிறுத்தம் ஆகியவற்றை மக்களால் தாங்கியிருக்கமுடியும். இதற்கென்றே தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகள் போதிய நிதியைக் கையில் வைத்திருக்கமுடியும்.
மேற்கூறிய திசையில் இந்தியப் பொருளாதார அமைப்பு செல்லாததன் காரணத்தால்தான்.... இன்றைய அத்தனை இன்னல்களும் மத்திய , மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளன. பிற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தற்காலிக '' மருந்துகளாக'' மக்களுக்காக அளிக்கப்படவேண்டிய ஒரு அவல நிலை! மக்கள் தெருக்களில் இலவச அரிசிக்காகவும் 1000 ரூபாய்க்காகவும் கையேந்தி நிற்கவேண்டியுள்ளது. இதனால் பிற திட்டங்களும் பாதிக்கப்படுகின்றன. அதனுடைய பாதிப்புகள் இனித் தான் தெரியவரும்.
மத்திய, மாநில அரசுகளின் கஜானா காலியாகிறது.. அவ்வாறு காலியாக்கவில்லை என்றால்.... அடுத்த தேர்தல்களில் அவற்றிற்குப் ''பாதிப்புகள் '' ஏற்படும். கடந்த 73 ஆண்டுகளாகச் சரியான திசையில் பொருளாதார அமைப்பை மாற்றிக்கொண்டுசெல்லாத தவறுக்கு ... நேற்று ஆளும் கட்சிகளாகவும் இன்று எதிர்க் கட்சிகளாகவும் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு.
எனவே.... '' ஐயோ, எங்களுக்கு வீட்டு வாடகை இல்லாமல் கஷ்டப்படுகிறோம் '' என்று அலறுகிற வீட்டு உரிமையாளர்களும் .... தொழில் உற்பத்தி, வணிகம் தடைபட்டுள்ளதே என்று கூறுபவர்களுக்கும் ரயில் போக்குவரத்து இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள சுமைதூக்கும் கூலித்தொழிலாளிகள் வரை.... அனைவரின் இன்றைய இன்னல்களுக்கு .... இன்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிசெய்கின்ற ஆளுங்கட்சிகளுக்கு மட்டும் அல்ல... நேற்று ஆட்சி செய்த இன்றைய எதிர்க்கட்சிகளுக்கும் '' பொறுப்பு'' உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
கடந்த 73 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத் தாயின் கருவில் இருந்த '' பொருளாதார அமைப்பு.. உற்பத்திமுறை '' தேவையான, போதுமான , சரியான '' ஊட்டச்சத்துகள் '' கிடைக்காததால் ... இன்று ஊனமுற்ற , நலிந்த , எழுந்து நிற்கமுடியாத குழந்தையாகப் பிறந்து அழுதுகொண்டிருக்கிறது என்பதே உண்மை!

பேராசிரியர் முனைவர் தங்க மணியன்

பேராசிரியர் தங்க மணியன் ..... 47 ஆண்டுகால நட்பு எங்களிடையே! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அருமையான வார்ப்பு. ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் மைசூர் பல்கலைக்கழகத்தில் மொழியியல், தமிழ்ப் பேராசிரியர். கன்னடத்திலும் மிகத் திறமை பெற்றவர். தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.
பேராசிரியர் முனைவர் தங்க மணியன் .... எனது இணைபிரியா ஆயுட்கால நண்பர்! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரா. இராமசாமிப்பிள்ளை, பேரா. வ.சுப. மாணிக்கம் ஆகியோரிடம் இளங்கலை , முதுகலை தமிழ் பயின்றவர். பேரா. அகத்தியலிங்கம் அவர்களின் மொழியியல்துறை மாணவர்! பேர. பொற்கோ அவர்களிடம் ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை) முழுநேர ஆய்வாளர் என்ற முறையில் முனைவர் பட்டம்பெற்ற முதல் மாணவர். நானும் அவரும் முதுகலை மொழியியல், முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றில் ஒருசாலை மாணவர்கள். தமிழ் நாளிதழான தினத்தந்தியின் செய்தித் தலைப்புகளின் மொழிநடையே அவரது முனைவர் பட்ட ஆய்வு!
முனைவர் பட்டம் பெற்றவுடனேயே மைசூர் பல்கலைக்கழகத்தின் கன்னட உயராய்வு நிறுவனத்தில் மொழியியல், தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். தனது பணி ஓய்வுவரை அங்கேயே பணியாற்றினார். ஏராளமான அயல்நாட்டு மாணவர்கள் அவரிடம் அங்குத் தமிழ்க்கல்வியும் ஆய்வும் மேற்கொண்டுள்ளார்கள். பேரா. பொற்கோ அவர்களின் தமிழ் ஜப்பானிய மொழியுறவுபற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அதனடிப்படையில் ஜப்பானிய மொழிப் பேராசிரியர் ஓனோ அவர்களின் அழைப்பின்பேரில் பேரா. பொற்கோ அவர்களுடன் ஜப்பான் சென்றார். மைசூரில் பணியாற்றியபோது, கன்னடத்தில் திராவிடமொழி ஒப்பிலக்கணம் பற்றியும் தமிழ் இலக்கணம், மொழியியல்பற்றியும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அப்பணிகளுக்காகப் பல விருதுகளையும் கர்நாடக அரசில் பெற்றுள்ளார்.
பேரா. பொற்கோ அவர்களின் உறவினர். பேரா. பொற்கோ அவர்களின் துணைவியார் திருமதி பூங்கோதை அவர்களும் பேரா. மணியன் அவர்களின் துணைவியார் திருமதி பகுத்தறிவு அவர்களும் (இணைபிரியா) உடன்பிறந்த சகோதரிகள்! சகோதரிகள் இருவரும் பகுத்தறிவுத் தமிழறிஞர் திரு. பொன்னம்பலனார் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! பொற்கோ அவர்களும் திரு. பொன்னம்பலனார் அவர்களின் உறவினரே! எங்களுடைய நட்பின் வயது 43. அண்மையில் பேரா. மணியன் அவர்களும் திருமதி பகுத்தறிவு அவர்களும் பொற்கோ அவர்களின் அன்புப் புதல்விகள் திருமதி பொன்னரசி, திருமதி மருதச்செல்வி இருவரின் சிறப்பு விருந்தினராக அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ளார், என்னிடம்கூட சொல்லிக்கொள்ளாமல்!
நாளை .... 2016 ஜூன் 28 பேரா.தங்க மணியன் அவர்களின் பிறந்தநாள்! நண்பருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

பேராசிரியர் எஸ். இராஜேந்திரன்

பேராசிரியர் ச. இராஜேந்திரன். தமிழகத்தின் மூத்த கணினிமொழியியல் பேராசிரியர். கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக இத்தளத்தில் மிகப்பெரிய உழைப்பை நல்கி வருபவர். அமைதியாக ஆனால் மிக ஆழமாகத் தனது ஆய்வைத் தொடர்ந்துவருபவர். அவர் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.

தமிழறிஞர்கள்பற்றி (60)
பேராசிரியர் எஸ். இராஜேந்திரன் (1950) … எனது தொடரில் நான்காம் தலைமுறை – எனது தலைமுறையைச் சேர்ந்த மொழியியல் பேராசிரியர். தமிழகத்தில் இன்று தமிழ்க் கணினிமொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரில் ஒருவர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டம் (1971) பெற்றபிறகு, கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப்பட்டமும் (1971), பூனா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் (1978) பெற்றார். பின்னர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம் (1979-80), பூனா டெக்கான் கல்லூரி (1980-83), கல்கத்தாவில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் மொழிப்பிரிவு (1983-89) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியபிறகு, தமிழகத்திற்குத் திரும்பி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராக, துறைத்தலைவராக 1989-2011 வரை 22 ஆண்டுகள் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார். தற்போது கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் மின்னணுத்துறையில் உள்ள கணினிமொழியியல் பிரிவில் சிறப்புநிலை மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழ், ஆங்கில மொழிகளோடு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் புலமை உடையவர். இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு – ‘ தமிழ் வினைச்சொற்களின் தொடரியல் , பொருண்மையியல் பண்புகள் ( Syntax and Semantics of Tamil Verbs )”. முதுமுனைவர் ஆய்வுக்குத் ‘தமிழ் வினைச்சொற்களின் பொருண்மையியல் ( Semantics of Tamil Verbs) “ என்ற தலைப்பில் தமிழ் வினைச்சொற்களைப்பற்றி மிக நுண்ணிய ஆய்வை மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்ப் பொருண்மையியலில் விரிவான ஆய்வை மேற்கொண்டுவருகிற இவர், உலக அளவில் உள்ள பல்வேறு கணினிமொழியியல் நிறுவனங்களுடன் இணைந்து ‘ சொல்வலை ( WORDNET) ‘ என்ற மிகப்பெரிய ஆய்வுத்திட்டத்தில் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளுக்கும் பணியாற்றிவருகிறார். தமிழ்த்தரவுத்தளம் ( Tamil Corpus Analysis ), தமிழ் மின்னகராதி ( Tamil E-dictionary), தமிழ் – ஆங்கில , இந்தி மற்றும் திராவிட மொழிகள் இயந்திரமொழிபெயர்ப்பு (Machine Translation) போன்ற மிக முக்கியமான கணினிமொழியியல் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தற்கால மொழியியல் நோக்கில் தமிழ்ச்சொல்லாக்கம்பற்றிய ( Word-formation – Generative Morphology) ஒரு துறையிலும் சிறப்பான பங்கை ஆற்றியுள்ளார். தமிழ்ச் சொல்லாக்கம்பற்றி இரண்டு முக்கிய நூல்கள் உட்பட 7 நூல்கள் எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் ( AU-KBC Centre ), கான்பூர் ஐஐடி , அமிர்தா பல்கலைக்கழகம் , மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுக்குத் தமிழ்க்கணினிமொழியியல் தொடர்பான பல பணிகளை மேற்கொண்டுவருகிறார். தமிழ்க் கணினிமொழியியலில் பல மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். ஏராளமான தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று ஆய்வுகளை அளித்துள்ளார். நான் ஏற்கனவே எழுதியுள்ள முனைவர் வி. தனலட்சுமி அவர்களும் இவருடைய மாணவியே. மற்றொரு மாணவி முனைவர் காமாட்சி அவர்கள் இயந்திரமொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் பெற்று, இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். தமிழ்க் கணினிமொழியியலில் பேராசிரியர் ஆற்றியுள்ள பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இவருடைய ஆய்வுகள் பெரிதும் பயன்படும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. இவர் பணி இன்றும் தொடர்கிறது என்பதில் மகிழ்ச்சி. இவருடைய மின்னஞ்சல் முகவரி - rajushush@gmail.com.

பேராசிரியை வி. தனலட்சுமி

அன்புத்தோழியர் பேரா. வி. தனலட்சுமி அவர்களைப்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் முகநூலில் இட்ட பதிவை மீண்டும் பதிவிடுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். சில ஆண்டுகளுக்குமுன் சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றினார். தற்போது இவர் தமிழ்நாடு அரசுக் கல்லூரியில் (கிருஷ்ணகிரி) பணியாற்றுகிறார். கணினித்தமிழில் ஆர்வம்கொண்டு... அத்துறையில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் இவருக்கு அதற்கான நிறுவனங்களில் பணிவாய்ப்பு கிடைத்தால். உண்மையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்கு நிச்சயம் தன்னால் இயன்ற பணிகளைத் தொடரலாம். அந்த வாய்ப்பு விரைவாகக கிடைக்க எனது வாழ்த்துகள்.
தமிழறிஞர்கள்பற்றி (59) :
பேராசிரியை வி. தனலட்சுமி (1975) … எனது தொடரில் ஐந்தாவது தலைமுறை வரிசையில் முக முக்கியமான இளம் ஆய்வாளர் . இவர்களைப்போன்ற இளம் ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சி , குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சி நல்ல திசையில் நிச்சயமாகச் செல்லும் என்பதை அடையாளம் காட்டும் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குகிறார்கள். அறிவியலில் ( Nutrition & Dietetics) இளங்கலைப் பட்டமும் , தமிழில் முதுகலை , எம்ஃபில், முனைவர் பட்டங்களையும் பெற்றவர். ஆங்கிலத்திலும் ஊடகவியலிலும் முதுகலைப்பட்டங்கள் பெற்றுள்ளார். கணினிமொழியியலில் முனைவர் பட்டம் (2011) பெற்றுள்ளார். இயற்கைமொழி ஆய்வில் (Natural Language Processing – NLP) முதுகலைப் பட்டயம் பெற்றுள்ளார். ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை ஏனாதி ராஜாப்பா கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியபின்னர், கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் கணினிமொழியியல் தொடர்பான பிரிவில் தமிழ் முதுநிலை ஆய்வாளராக நான்காண்டுகள் (2007-2011) பணியாற்றியுள்ளார். 2001 முதல் இன்றுவரை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழுக்கான கணினிவழி பகுப்பாய்வி ( A Shallow Parser for Tamil) என்ற ஒரு மிக முக்கியமான தலைப்பாகும். அமிர்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றும்போது, அங்கே பணியாற்றுகிற பிற பேராசிரியர்கள், ஆய்வாளர்களோடு இணைந்து பல கணினிமொழியியல் திட்டங்களைத் தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தமிழ்ச் சொற்களைப் பகுபத இலக்கண அடிப்படையில் பகுத்து, அவற்றின் இலக்கண வகைப்பாடுகளைத் தானாகவே காட்டும் மென்பொருள் கருவிகளை உருவாக்கியுள்ளார். தமிழ்த்தொடரியல், பொருண்மையியல் , மின்னகராதி போன்ற பிற கணினிசார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தற்போது செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனத்தின் உதவியோடு பழந்தமிழ் இலக்கியங்களுக்கான உருபன் , தொடர்ப் பகுப்பாய்விகளை ( Dependency Parser for Tamil classical Literature – Kurunthokai ) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குறுந்தொகைக்கான பணியைத் தற்போது முழுமை செய்துள்ளார். கணினிவழி மொழிபெயர்ப்புக்கான பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, கணினிக்கற்றல் ( Machine Learning) என்ற ஒரு வழிமுறையில் கணினிக்கு இலக்கணப் பயிற்சியளித்து, பின்னர் அதுவே தானாகவே சொற்களையும் தொடர்களையும் பகுக்கும் ஒருவகை கணினிமொழியியல் வழிமுறையில் முன்னோடியாகத் திகழும் ஒரு இளம் ஆய்வாளராகச் செயல்பட்டுவருகிறார். தேசிய, உலக அளவிலான பல கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுகளை வழங்கியுள்ளார். பல ஆய்விதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘நிலாக்கால நினைவுகள் ‘ என்ற ஒரு கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவருடைய ஆய்வுகள்பற்றிப் பின்கண்ட கூகில் இணைப்பில் பார்க்கலாம். http://scholar.google.com/citations…
தமிழகத்தில் தமிழில் , குறிப்பாகக் கணினித்தமிழில் சிறப்பான இளம் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழும் முனைவர் வி. தனலட்சுமிக்குத் தனது ஆய்வுகளைத் தொடர நல்ல வாய்ப்புகள் தமிழகத்தில் அமையவேண்டுமென விரும்புகிறேன். இவரது மின்னஞ்சல் முகவரி - dhanagiri@gmail.com — Dhanalakshmi Giri உடன்.


செவ்வாய், 23 ஜூன், 2020

பேராசிரியர் க.ப. அறவாணன்

பேராசிரியர் க.ப. அறவாணன் (1941) … தமிழுலகம் நன்கு அறிந்த ஆய்வாளர். இலக்கியம், மொழி, மானுடவியல், வரலாறு என்று பல துறை அறிவுகளைக் கொண்ட தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பேராசிரியர். நெல்லை மாவட்டத்தில் கடலங்குடி என்ற ஊரில் பிறந்தவர். தமிழில் பி ஓ எல், எம்.ஏ., எம்.லிட்., முனைவர் ஆகிய பட்டங்களையும் மானுடவியல் போன்ற பிற துறைகளில் பட்டயங்களையும் பெற்றவர். கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் படிக்கும்போது, பெரும் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பிடித்த மாணவரானார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.லிட். பட்டத்திற்காக இவர் நன்னூல்பற்றி ஆய்வு மேற்கொண்டார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பகுதிநேர ஆய்வாக, தொல்காப்பிய உரையாசிரியர் பற்றிய ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். முதலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் செந்தமிழ்க் கல்லூரியில் பணியில் இணைந்தார். பின்னர் பாளை தூயசவேரியர் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, புதுவை நடுவண் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 198-2001 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். சில ஆண்டுகள் மேற்காப்பிரிக்கச் செனகல் நாட்டுத் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். திராவிடர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் ஒற்றுமைகளைக் கண்டறியும் ஆய்வை அங்கு மேற்கொண்டார். 60-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அற இலக்கியக் களஞ்சியம் – ஆறு தொகுதிகள்’ , ‘தொல் தமிழர் காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரை தமிழ்நாட்டு வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். ‘சைனர்களின் தமிழிலக்கணக்கொடை’, ‘தொல்காப்பியக் களஞ்சியம்’, ‘கவிதை – கிழுக்கும் மேற்கும்’, ‘தமிழரின் தாயகம்’ ‘தமிழ்ச்சமுதாய வரலாறு’, ‘தமிழ் மக்கள் வரலாறு’ போன்ற பல துறைகளிலும் நூல்கள் படைத்துள்ளார். இவருடைய ஆய்வுகள் எல்லாம் சமூகவியல், மானுடவியல் நோக்கில் அமைந்துள்ளன. தொடக்க காலத்தில் ‘ஒளி பரவட்டும் ‘ என்ற ஒரு கவிதை நூலையும் எழுதியுள்ளார். சிறந்த நூல்களுக்கான தமிழக அரசு பரிசுகளை மூன்று தடவைகள் பெற்ற ஒரு சிறந்த ஆய்வாளர். 1986 – இல் சிறந்த பேராசிரியருக்கான விருது பெற்றார். இவரது ‘ தமிழர் அடிமையானது ஏன்’ என்ற ஆய்வு நூலுக்கு ‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு ‘ அளிக்கப்பட்டுள்ளது. 2007-இல் தமிழக அரசு இவருக்கு ‘திருவள்ளுவர் விருது’ அளித்துச் சிறப்பித்தது. 2010 –இல் ‘கு.சின்னப்பபாரதி விருது’ தமிழ் ஆய்வுக்காக இவருக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் செயலாளராகப் பணிபுரிந்து, பல மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். ‘அறவாணன் அறக்கட்டளை ‘ என்ற ஒன்றை உருவாக்கி, ஆண்டுதோறும் ‘அனைத்துலகச் சாதனையாளர் விருது’ , ‘அனைத்திந்தியச் சாதனையாளர் விருது ‘ என்ற இரண்டு விருதுகளை வழங்கிவருகிறார். இவரது துணைவியார் முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்களும் தமிழ்ப் பேராசிரியை … சிறந்த ஆய்வாளர். மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/vhu


பேராசிரியை வி. ரேணுகா தேவி

பேராசிரியை வி. ரேணுகா தேவி (1954) … தமிழகத்தில் மொழியியல் துறையில் சிறந்து விளங்குகிற பெண் மொழியியலார்களில் ஒருவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலேயே பயின்று , அங்கேயே விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் , புலத்தலைவர் என்று பல பணிகளை மேற்கொண்டு, தற்போது பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். இளங்கலையில் வேதியியல் கல்வி பெற்ற இவர், முதுகலையில் மொழியியல் துறையைத் தேர்ந்தெடுத்தார். தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1987-90 ஆம் ஆண்டுகளில் மதுரையில் உள்ள இந்திய ஆய்வியலுக்கான அமெரிக்க நிறுவனத்தில் ( American Institute of Indian Studies) தமிழ்மொழி பயிற்றுநராகப் பணியாற்றினார். ஆங்கிலம், தமிழ் இரண்டின் தொடரியல் அமைப்பை ஒப்பிட்டுப் பார்க்கும் ( Typological Study ) ஒரு மிக முக்கிய ஆய்வைத் தனது முனைவர் பட்டப் படிப்பில் மேற்கொண்டார். 1990 –இல் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் ஆசிரியப் பணியில் இணைந்தார். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு( UGC) , இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் ( Indian council of social Science Research – ICSSR) போன்ற பல ஆய்வு நிறுவனங்களின் உதவிகளோடு மொழிசார்ந்த பல ஆய்வுத்திட்டங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார். மொழி வகைப்பாட்டியல் ( Language Typology) , கருத்தாடல் ஆய்வு ( Discourse Analysis), உலகமயமாக்கமும் மொழிகளும் ( Globalization and Languages) , மொழிக்கல்வி, மொழிபெயர்ப்பு, மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம் ஆகிய பல மிக முக்கியமான ஆய்வுத் தளங்களில் இவர் தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்த ஆய்வுகளை அளித்துள்ளார். ‘தமிழ்ப்பொழில்’, ‘செந்தமிழ்’, ‘மொழியியல்’. போன்ற இதழ்களில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மதுரை வானொலி நிலையத்தின் வாயிலாக மொழி, இலக்கியம் சார்ந்த பல உரைகளை ஆற்றியுள்ளார். 7 ஆய்வுநூல்களை வெளியிட்டும், 4 ஆய்வுநூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். 90 –க்கும் மேற்பட்ட மொழிசார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் பல்வேறு ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள், மாநாடுகள், பயிலரங்குகளில் பங்கேற்றுள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் மொழிச் சிறுபான்மையினர் , குறிப்பாகச் சௌராஷ்டிரா மொழியினர் பற்றிப் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ‘ அபாயத்திற்குள்ளாகியுள்ள இந்தியமொழிகள் ( Endangered Languages - SPPEC)’ பற்றிய திட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவருடைய முக்கிய ஆய்வான “ Grammatical Comparison of Tamil and English – A Typological Stuidies” என்ற நூல், தற்போதைய கணினித்தமிழின் ஒரு மிக முக்கியத் திட்டமான ‘தமிழ் – ஆங்கில இயந்திர மொழிபெயர்ப்புக்கு ( Tamil - English Machine Translation)’ மிகவும் பயன்படும். இவருடைய வழிகாட்டுதலில் ஏராளமான மாணவர்கள் எம்ஃபில், முனைவர் பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இவருடைய வாழ்க்கைத் துணைவர் முனைவர் பசும்பொன் ( உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர்) அவர்களும் ஒரு மொழியியல் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மின்னஞ்சல் முகவரி prof.renuga@gmail.com


பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் ( 1922 - 2014)

பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் ( 1922 - 2014) … தமிழுலகத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல், தமிழ்ப்பணி மேற்கொண்ட ஒரு தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர். தொல்காப்பியத்திலும் அதற்கான அனைத்து உரைகளிலும் ஆழமாக மூழ்கி எழுந்தவர். பள்ளிப் படிப்புக்குப் பின்னர், கடலூர் ஞானியார் மடத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் பயிற்சிபெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றார். சிறிதுகாலம் நெல்லை மாவட்ட வீரவநல்லூரில் (நானும் அங்கு படித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி) பள்ளி ஒன்றில் (1941) பணியாற்றினார். பின்னர் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் (1942) விரிவுரையாளராக இணைந்தார். அக்கல்லூரியிலேயே தொடர்ந்து பணியாற்றி, முதல்வராகவும் பதவி உயர்வுபெற்று, 1972 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1973 –இல் சேலம் மோகனூர் சுப்பிரமணியம் தமிழ்க் கல்லூரியிலும் பணியாற்றினார். அவரது தமிழ்ப் புலமைமீது அளவற்ற மதிப்புகொண்ட சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பேரா. ச.வே.சுப்பிரமணியம் அவரைத் தொல்காப்பிய உரைகளை மேலும் பல விளக்கங்களுடன் பதிப்பிக்க வேண்டினார். தொல்காப்பியத்தின் ஒவ்வொரு இயலுக்கும் தனித்தனி நூல்களை உருவாக்க வேண்டினார். அதனடிப்படையில் 27 இயல்களுக்கும் 27 நூல்களைப் பேராசிரியர் பதிப்பித்தார். உண்மையிலேயே இந்தப் பணி மிகப்பெரிய கடுமையான, ஒரு அரும்பணி. தமிழாய்வு வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு பணி. ஆய்வு நூல்கள்(5), திறனாய்வு நூல்கள் (7), கவிதை நூல்கள் (9), உரைநூல்கள் (15), கட்டுரைகள் (200-க்கு மேல்) எனப் பல பங்களிப்புகளைத் தமிழுலகத்திற்கு அளித்துள்ளார். செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, வீரசைவமுரசு, மக்கள் சிந்தனை முதலிய திங்கள் இதழ்களில் இலக்கண, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்தார். 1981-83 –இல் நான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, பேராசிரியர் மேற்கூறிய பணியை மேற்கொண்டிருந்ததின் பயனாக அவருடன் மரபிலக்கணங்கள்பற்றி மொழியியல் நோக்கில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகவும் தன்னடக்கமானவர். மிகப் பொறுமையாகவும் ஆய்வு நோக்கிலும் அவர் உரையாடுவார். மொழியியல் நோக்கில் தொல்காப்பிய நூற்பாக்களை எவ்வாறு அணுகலாம் என்பதுபற்றி அவரும் பல வினாக்களை என்னிடம் எழுப்புவார். சைவ இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு உடையவர் பேராசிரியர். வீரசைவப் பின்னணி உடையவர் பேராசிரியர். தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் அவரைச் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்துப் பயன்பெற்றுள்ளன. இராசா.சர். அண்ணாமலைச் செட்டியார் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘தொல்காப்பியச் செம்மல்’, ‘ சிவநெறிப்புலவர்’, ‘முது பேராளார்’ போன்ற பல சிறப்புப் பட்டங்களைப் பல்வேறு தமிழ் நிறுவனங்கள் அவருக்கு அளித்துள்ளன. தமிழகப் புலவர் குழு உறுப்பினராகவும் குன்றக்குடி ஆதீனத் தமிழ்ச் சங்க உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் ஆ. சிவலிங்கனாரின் தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளை இன்றைய ஆய்வு மாணவர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டும். பேராசிரியர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் இவ்வுலகைவிட்டு மறைந்தது தமிழுலகிற்கு ஒரு பெரிய இழப்புதான். மேலும் விவரங்களுக்கு : http://muelangovan.blogspot.in/2008/09/30111922.html


சனி, 20 ஜூன், 2020

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள்.... 74 வயது இளைஞர்... தமிழாகவே வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் தமிழ் மகன்... ஆய்வுலகிற்கு அறிமுகம் தேவையில்லாதவர்... மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளர்... கவிஞர்... மொழிபெயர்ப்பாளர்... அமைதியான தமிழ்ப் பேராசிரியர்... தமிழ் இனம், தமிழ்மொழி என்று இன உணர்வோடும் தாய்மொழி உணர்வோடும் அன்றும் இன்றும் வாழ்ந்து வருபவர்... அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இன்றைய இளம் தமிழ் ஆய்வாளர்களுக்காக நான் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு பதிவிட்ட முகநூல் பதிவை மீண்டும் இன்று மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (1946) … தமிழாய்வுலகில் நன்கு அறிமுகமான ஒரு பேராசிரியர். மிக அமைதியாகவும் ஆனால் ஆழமாகவும் ஆய்வுகளை மேற்கொண்டுவருபவர். பெரும்பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் புதல்வர். திருநெல்வேலியில் (சிந்துபூந்துறையில்) பிறந்தவர். பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தனது புதல்வருக்குத் தனித்தமிழ்ப் பேரறிஞர் மறைமலை (அடிகளார்) அவர்களின் பெயரை இட்டார். தந்தையார் பேராசிரியராக இருந்ததால், மறைமலை அவர்கள் தமிழகத்தின் பல பள்ளிகளில் கல்வி மேற்கொண்டார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (1962-63), விலங்கியலில் இளங்கலை (1963-66) ஆகிய படிப்புகளை மேற்கொண்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டம் (1969) பெற்றார். சமசுகிருத்திலும் (1979) , எண்மக் காணொளிப் படைப்பாக்கத்திலும் (2006) பட்டயங்கள் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொற்கோ அவர்களின் வழிகாட்டுதலில் ‘இக்காலத் தமிழில் சொல்லாக்கம் – ஆட்சித்துறைச் சொற்களில் ஒரு சிறப்பாய்வு ‘ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் (1984) பெற்றார். 1969-இலிருந்து 2005 வரை தமிழகத்தின் பல அரசுக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி, இறுதி 5 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றுள்ளார். 1997-98 – இல் அமெரிக்காவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியத் திறனாய்வில் தலைசிறந்தவர். அவருடைய நூல்களில் 10-க்கும் மேற்பட்டவை இலக்கியத் திறனாய்வு தொடர்பானவையே. கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார். பேராசிரியர்கள் மு.வரதராசனார், இலக்குவனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்த முறையில் எழுதி வெளியிட்டுள்ளார். கவிதைகள் மொழிபெயர்ப்பிலும் திறன்வாய்ந்த பேராசிரியர் அதிலும் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். ‘ சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு மிகச் சிறந்த மொழியியல்தொடர்பான ஆய்வு நுலை வெளியிட்டுள்ளார். தற்போது இளம் கிறித்தவர் ஆடவர் (YMCA) ஆணையத்தின் வழியாக வாழும் கவிஞர்கள்பற்றித் தொடர்சொற்பொழிவாற்றி வருகிறார். ‘குறள்நெறி’ என்ற இதழுக்குப் பொறுப்பாசிரியராகவும் ‘ செம்மொழிச் சுடர் ‘ என்ற மின்னிதழின் ஆசிரியராகவும் இருந்துவருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வலைப்பூவில் இட்டிருக்கிறார். 2014-இல் சிட்னி தமிழ்ச்சங்கம் பேராசிரியருக்குத் தொல்காப்பியர் விருது அளித்துப் பாராட்டியுள்ளது. அமெரிக்கா. ஆஸ்திரேலியா, ஜப்பான், மோரிஷியஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழி, இலக்கியம்பற்றிப் பல உரைகளை நிகழ்த்தியுள்ளார். பேராசிரியர் மறைமலையும் நானும் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் ஒரே நேரத்தில் முனைவர் பட்டம் ஆய்வு செய்தோம் என்பதில் மகிழ்வடைகிறேன். பெரும்பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டுவிழாவை 2009- ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் கொண்டாட (அப்போதைய துறைத்தலைவராகிய ) நான் ஏற்பாடு செய்தபோது அனைத்து உதவிகளையும் அவர் அளித்ததையும் நினைவுகூர்கிறேன். அவரது சகோதரர் திரு. திருவள்ளுவன் இலக்குவனாரும் இன்றும் தொடர்ந்து பல தமிழ்ப்பணிகளை மேற்கொண்டுவருகிறார். பேராசிரியர் மறைமலை அவர்களின் துணைவியாரும் ஒரு பொருளாதாரப் பேராசிரியர். மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/2n1k


வெள்ளி, 19 ஜூன், 2020

பேராசிரியர் சு. சண்முக சுந்தரம்

பேராசிரியர் சு. சண்முக சுந்தரம் (1949) … தமிழகத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வில் மிகவும் மூத்தவர். நெல்லை மாவட்டத்தில் கால்கரை என்ற ஊரில் பிறந்தவர். பாளை தூய சவேரியர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகைலப் பட்டமும் பெற்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் வழிகாட்டுதலில் ‘ திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் (1977) பெற்றவர் ( அப்போது நானும் அங்கே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன்). அடுத்த ஆண்டே அவர் பெங்களூர் தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். தமிழகத்தில் அவருக்கு முறையான வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் அங்கேயே பணியாற்றி 2006 – இல் விருப்ப ஓய்வு பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே (1972) ‘ கதம்பம் ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டார். Folklore என்பதற்கு நாட்டுப்புறவியல் என்ற ஒரு நல்ல சொல்லாக்கத்தை உருவாக்கியதில் இவருக்குப் பங்குண்டு. 1975 – இல் இவரது முதல் ஆய்வு நூலாக ‘ நாட்டுப்புறவியல் – ஓர் அறிமுகம்’ என்ற நூல் வெளிவந்தது. 1981- இல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த தமிழ் நூல்களை வெளியிடுவதற்காகத் தனது மகள் பெயரான ‘காவ்யா’ என்ற பெயரில் ஒரு நூல் வெளியீட்டகத்தை நிறுவினார். தனது நூல்களை மட்டுமல்லாமல், இளம் ஆய்வாளர்கள், முதுபெரும் ஆய்வாளர்கள், படைப்பிலக்கியவாதிகள் அனைவரின் நூல்களையும் வெளியிட்டுவருகிறார். மூன்று தடவைகள் தமிழக அரசின் தமிழ் நூல்களுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கிறார். 2006-08 – இல் ‘நாட்டுப்புற அரங்கியல்’ என்ற தலைப்பில் முதுநிலை ஆய்வு மேற்கொண்டார். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தின் நிதி உதவியுடன் ‘ காலந்தோறும் கண்ணகி கதைகள்’ என்ற ஆய்வை (2008-09) மேற்கொண்டார். ‘ நாட்டுப்புறத் தெய்வங்கள் – வழிபாடும் பண்பாடும்’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆய்வுத் திட்டப் பணியைச் (2008-11) செய்து முடித்தார். 25 –க்கும் மேற்பட்ட ஆய்வுகளைத் தந்துள்ள இவர், ஆய்வுகளோடு தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், சிறுகதை (4), நாவல் (5), நாடகம் ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தனது பங்களிப்பைத் தந்துள்ளார். 1995-2005 –ஆம் ஆண்டுகளில் ‘ தன்னன்னானே ’ என்ற ஒரு நாட்டுப்புறவியல் இதழை வெளியிட்டுவந்தார். தற்போது ‘தமிழ் சினிமா வரலாறு’, ‘ நெல்லைக் கலைக்களஞ்சியம்’ ஆகியவற்றிற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார். சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சென்னைத் தமிழ்த்துறையில் (எனது இத்தொடரில்) நான்காம் தலைமுறையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளராகிய இவரைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முறையாகப் பயன்படுத்தாது ஒரு குறையே - தமிழகத்திற்குச் சற்று இழப்பே - என்று நான் கருதுகிறேன்.… தமிழகத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வில் மிகவும் மூத்தவர். நெல்லை மாவட்டத்தில் கால்கரை என்ற ஊரில் பிறந்தவர். பாளை தூய சவேரியர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகைலப் பட்டமும் பெற்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் வழிகாட்டுதலில் ‘ திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் (1977) பெற்றவர் ( அப்போது நானும் அங்கே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன்). அடுத்த ஆண்டே அவர் பெங்களூர் தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். தமிழகத்தில் அவருக்கு முறையான வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் அங்கேயே பணியாற்றி 2006 – இல் விருப்ப ஓய்வு பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே (1972) ‘ கதம்பம் ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டார். Folklore என்பதற்கு நாட்டுப்புறவியல் என்ற ஒரு நல்ல சொல்லாக்கத்தை உருவாக்கியதில் இவருக்குப் பங்குண்டு. 1975 – இல் இவரது முதல் ஆய்வு நூலாக ‘ நாட்டுப்புறவியல் – ஓர் அறிமுகம்’ என்ற நூல் வெளிவந்தது. 1981- இல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த தமிழ் நூல்களை வெளியிடுவதற்காகத் தனது மகள் பெயரான ‘காவ்யா’ என்ற பெயரில் ஒரு நூல் வெளியீட்டகத்தை நிறுவினார். தனது நூல்களை மட்டுமல்லாமல், இளம் ஆய்வாளர்கள், முதுபெரும் ஆய்வாளர்கள், படைப்பிலக்கியவாதிகள் அனைவரின் நூல்களையும் வெளியிட்டுவருகிறார். மூன்று தடவைகள் தமிழக அரசின் தமிழ் நூல்களுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கிறார். 2006-08 – இல் ‘நாட்டுப்புற அரங்கியல்’ என்ற தலைப்பில் முதுநிலை ஆய்வு மேற்கொண்டார். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தின் நிதி உதவியுடன் ‘ காலந்தோறும் கண்ணகி கதைகள்’ என்ற ஆய்வை (2008-09) மேற்கொண்டார். ‘ நாட்டுப்புறத் தெய்வங்கள் – வழிபாடும் பண்பாடும்’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆய்வுத் திட்டப் பணியைச் (2008-11) செய்து முடித்தார். 25 –க்கும் மேற்பட்ட ஆய்வுகளைத் தந்துள்ள இவர், ஆய்வுகளோடு தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், சிறுகதை (4), நாவல் (5), நாடகம் ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தனது பங்களிப்பைத் தந்துள்ளார். 1995-2005 –ஆம் ஆண்டுகளில் ‘ தன்னன்னானே ’ என்ற ஒரு நாட்டுப்புறவியல் இதழை வெளியிட்டுவந்தார். தற்போது ‘தமிழ் சினிமா வரலாறு’, ‘ நெல்லைக் கலைக்களஞ்சியம்’ ஆகியவற்றிற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார். சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சென்னைத் தமிழ்த்துறையில் (எனது இத்தொடரில்) நான்காம் தலைமுறையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளராகிய இவரைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முறையாகப் பயன்படுத்தாது ஒரு குறையே - தமிழகத்திற்குச் சற்று இழப்பே - என்று நான் கருதுகிறேன்.


பேராசிரியர் ரா. வேல்முருகன்

பேரா. ரா. வேல்முருகன் இன்று நம்மிடையே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த இவர் சிங்கப்பூரில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எப்போதும் சிரித்த முகம். சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்


பேராசிரியர் ரா. வேல்முருகன் … தமிழகத்தின் உருவாக்கம் … தற்போது சிங்கப்பூரில் தமிழ்ப்பணி. தமிழில் இளங்கலைப் பட்டம் (1978) பெற்றபிறகு, மொழியியல் துறையில் நாட்டம்கொண்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (1980) பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் மேலாய்வு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று, 1981-85 – இல் முழுநேர ஆய்வாளராகப் பணிமேற்கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழிலும் முதுகலைப் பட்டமும் (1986) கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். 2000- ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தேசியக் கல்விக் கழகத்தில் - NIE ( நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – NTU) ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுப் பிரிவில் உதவிப் பேராசிரியராக இணைந்து, இன்று முதுநிலை விரிவுரையாளராகவும் பதவி உயர்வு பெற்று, அங்கேயே பணியாற்றி வருகிறார். இவருடைய முக்கிய ஆய்வானது மொழிச்சிறுபான்மையினரின் – குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கன்னடம் பேசும் மக்களின் – மொழிபற்றியதாகும் சிங்கப்பூரில் பணியில் சேர்ந்ததிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்தல் தொடர்பான ஆய்வில் குறிப்பிடத்தக்க பல பணிகளை மேற்கொண்டுவருகிறார். சிங்கப்பூர் தமிழ்மொழிபற்றியும் , அங்குத் தமிழைக் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்பற்றியும் பல ஆய்வுகளை அளித்துள்ளார். இது தொடர்பான சில சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை “ Singapore Tamil Language , Literature – A multi-dimensional Approach” என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் வெளியிட்டுள்ளார். “ A Linguistic Study of a Minority Language in Tamilnadu” என்ற இவருடைய முனைவர் பட்ட ஆய்வை அடிப்படையாகக்கொண்ட ஒரு நூலும் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் சூழலில் மாணவர்களுக்குத் தமிழ் உச்சரிப்பு உட்பட பல திறன்களை ஒலி-ஒளி நாடாக்கள் துணையுடன் கற்றுக்கொடுக்கும் சில திட்டங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார். சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தமிழ்ப் பிரிவுக்கு ஆலோசகராகவும் இருந்துவருகிறார். பாடத்திட்டம் தயாரித்தல், நூல் உருவாக்கம் ஆகியவற்றிற்குத் தேவையான பல தமிழ்ப்பணிகளை அங்கு மேற்கொண்டுவருகிறார். சிங்கப்பூரில் தமிழ்மொழிக்கான மொழியியல் நோக்கிலான ஆய்வுகளில் முனைவர் வேல்முருகன் பல குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுவருகிறார். மொழி ஆய்வில் மட்டுமல்ல, தற்காலத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வைரமுத்து ஆகியோர்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று ,தமிழ்மொழி பயிற்றல்பற்றிய சிறந்த கட்டுரைகளை அளித்துவருகிறார். அங்கே பேராசிரியர் சுப. திண்ணப்பனுக்கு ( தமிழகத்திலிருந்து சென்ற பேராசிரியர்தான்) அடுத்து மொழியியல் துறை, தமிழ்த்துறை இரண்டிலும் முறைசார் கல்விபெற்று, தமிழாய்வுகளையும் தமிழ் கற்பித்தலையும் மேற்கொண்டுவருகிற ஒரே தமிழ் மொழியியலாளர் இவர்தான். தற்போது தமிழ்மொழி ஆய்வில் ஈடுபடும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துவருகிறார். பழகுவதற்கு இனியவர். தமிழறிஞர்கள்பற்றிய எனது இத்தொடரில் இவர் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழ்மொழியாய்வாளர். இவரைப்பற்றிய மேலதிக விவரங்களுக்கு - C:\Users\Windows 7\Desktop\Rakkappan Velmurugan _ Staff Directory _ National Institute of Education (NIE), Singapore.html. இவரது மின்னஞ்சல் முகவரி – velmurugan.r@nie.edu.sg

செவ்வாய், 16 ஜூன், 2020

பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் (1902-1986)

பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் (1902-1986) … ‘பயன்பாட்டுத் தமிழ் வளர்த்த பாவலர்’, ‘பல்துறை வித்தகர்’, ‘பைந்தமிழ்ப் பாவலர்’ என்று தமிழுலகம் பாராட்டும் பேராசிரியர். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த பேராசிரியர், பின்னர் தான் கற்ற பள்ளியிலேயே 23 ½ ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மேற்படிப்பில் ஆர்வம் கொண்டு, பணி விடுப்பு எடுத்து, சென்னைப் பச்சையப்பான் கல்லூரியில் இடைக்கலை ( F.A) , இளங்கலை படிப்புகளை மேற்கொண்டார். 1949 ஆம் ஆண்டில் தனது 47 –ஆம் வயதில் தமிழ் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1950 ஆம் ஆண்டுமுதல் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார். 1962 – இல் மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் பேராசிரியருக்கு மணிவிழா கொண்டாடினர். அப்போது மதுரை எழுத்தாளர் மன்றம் அவருக்குப் ‘ பைந்தமிழ்ப் பாவலர் ‘ என்னும் சிறப்புப் பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. அங்கேயே 17 ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வாழ்ந்தார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழகப் புலவர் குழு முதலான பல்வேறு உயர் அமைப்புகளில் வல்லுநராகப் பணியாற்றியுள்ளார். 1981- இல் தமிழக அரசு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கியபோது, பேராசிரியருக்கு ‘திரு.வி.க. விருது’ அளித்துச் சிறப்பித்தது. 1985-இல் தமிழக அரசின் திருக்குறள் நெறி மையம் பேராசிரியருக்கு ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் இலக்கணம், வரலாறு, வாழ்வியல், மொழிபெயர்ப்பு, கவிதைகள், இலக்கிய விமர்சனம் என்று பல பிரிவுகளில் தனது படைப்புகளை அளித்துள்ளார். மதுரை கருமுத்து தியாகராசர் நடத்திவந்த ‘தமிழ்நாடு’ நாளிதழில் எழுத்துத் தமிழைப் பிழையின்றி அனைவரும் எழுதுவதற்குப் பயன்படும் வகையில் ஞாயிறுதோறும் இவர் கட்டுரைகள் எழுதிவந்தார். அவையே பின்னர் விரிவாக்கத்துடன் ‘ நல்ல தமிழ் எழுதவேண்டுமா?’ என்ற நூலாக வெளிவந்து, பல பதிப்புகளைக் கண்டுள்ளது. வரலாற்றில் ‘மதுரை நாயக்கர் வரலாறு’ ‘ திருமலை நாயக்கர் வரலாறு ‘ போன்ற சிறந்த நூல்களைத் தந்துள்ளார். பேராசிரியரின் கவிதைப்பணி பாரதிதாசனுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்புடையது என்றும், தமிழியக்க எழுச்சிப் போர் முழக்கத்தில் இவர் புரட்சிக் கவிஞருக்கு முன்னோடி என்பதை இன்றைய ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் பேரா. மறைமலை இலக்குவனார் ( பேராசிரியரின் மாணவரே!) கூறுகிறார். பிரபலக் கவிஞர்களான அப்துல் ரகுமான் , மீரா, நா. காமராசன், மு. மேத்தா, இன்குலாப், பி.மூ. அபிபுல்லா, முதலிய பெருங்கவிஞர்கள் பலர் பேராசிரியருடைய மாணவர்கள் என்று பேரா. மறைமலையார் கூறுகிறார். பேராசிரியரை அவரது மாணவர்கள் ‘முண்டாசுக் கவிஞர்’ என்று அழைப்பார்கள் என்று பேரா. மேத்தா கூறுகிறார். சென்னையில் 1925 வாக்கில் தென்னிந்தியத் தமிழ்க் கல்வி கழகம் அமைப்பைத் தோற்றுவித்துத் தமிழ் வகுப்புகளை நடத்தியுள்ளார். பேராசிரியரின் நூற்றாண்டினையொட்டி, அவரது மகனார் அ.ப. சோமசுந்தரன் அவர்கள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் அ.கி.ப. அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம். http://ta.wikipedia.org/s/2qch


திங்கள், 15 ஜூன், 2020

பேரா. பெரு. பெருமாள்சாமி

பேராசிரியர் பெரு. பெருமாள்சாமி அவர்கள்.......
-------------------------------------------------------------------------------------
பேரா. பெரு. பெருமாள்சாமி அவர்கள் மைசூரில் அமைந்துள்ள இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் தற்போது பேராசிரியராகவும் துணை இயக்குநராகவும் பணியாற்றும் மொழியியல், தமிழ்மொழி அறிஞர். தமிழகத்தில் திண்டுக்கல் நகரில் பிறந்த இவர், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றபிறகு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இவருடைய முனைவர் பட்ட ஆய்வானது தமிழ்மொழிக் கருத்தாடல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாகும். ஒருவர் தனது மொழிவழியே கருத்தாடலில் ஈடுபடும்போது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே ஈடுபடுகிறார் . வேண்டுகோள், கட்டளை, விருப்பம், பாராட்டு... என்று பலவகைப் பேச்சுச்செயல்களை (Speech Acts) அவர் மேற்கொள்கிறார். அதுபோன்று, அவர் கருத்தாடலில் ஈடுபடும்போது, அக்கருத்தாடலை யாருடன் நிகழ்த்துகிறாரோ, அவர் இவருடன் கருத்தாடலைத் தொடர்வதற்குச் சில நெறிகளைப் பின்பற்றவேண்டும் (Principles of Co-operation) . கருத்தாடல் முறிந்துவிடக்கூடாது. அதற்கேற்ற கையில் இருவர்களும் தங்கள் பணிவையும் தங்களது தகுதிநிலையையும் (அதிகாரத்தையும்) வெளிப்படுத்தவேண்டும். இதில் அவர்கள் தவறினால், கருத்தாடல் முறிந்துவிடும். தடைபட்டுவிடும். எனவே தற்போதைய மொழியியல் ஆய்வில் மொழிக் கூறுகளோடு, குறிப்பிட்ட சமூக அமைப்பின் மேற்குறிப்பிட்ட கருத்தாடல் கூறுகளும் (Discourse features) ஆய்வு செய்யப்படுகின்றன. இதுபோன்ற ஆய்வுகள் குறிப்பிட்ட மொழிச்சமூகத்தின் சமூகக்கூறுகளை அறிந்துகொள்ள உதவுவதோடு, மொழிக்கற்றல் அல்லது கற்பித்தலுக்கும் மிகவும் பயன்படும்.
மேலும் இவர் இந்தியச் சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR ) குறுகிய கால ஆய்வுத் திட்டத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் அலுவலகத்தின் மொழிப் பிரிவில் இந்திய மொழிகளின் கணக்கெடுப்புத் திட்டத்தின் (Linguistic Survey of India) கீழ் வெளி உலகிற்கு சிறிதளவே அறியப்பட்ட மொழிகளைப்பற்றி ஆய்வு செய்து அம்மொழிகளின் கட்டமைப்புக்களை ஆய்வு அறிக்கையாக இந்திய அரசிற்குச் சமர்ப்பித்துள்ளார். இதற்கிணங்க, திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த கிசான் (ஒடிஸா), திபத்தோ – பர்மீய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த போடோ மேச், டோடோ (மேற்கு வங்காளம்), லிம்பு, தமங் (சிக்கிம்), கின்னெளரி (இமாச்சல பிரதேம்), இந்தோ –ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த போஜ்புரி, சுர்ஜாபுரி (பீகார்: இவ்விரு மொழிகளையும் மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து) மற்றும் ஆஸ்ட்ரோ – ஆஸியாட்டிக் (முண்டா) மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஹோ போன்ற மொழிகளையும் ஆய்வு செய்துள்ளார்.
மொழித் தரவுகளைச் சேகரிப்பதற்கு இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்றவர். இந்தியாவில் பேசப்படுகின்ற பல மொழிக் குடும்பங்களுக்கு அறிமுகமானவர். திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்தவுடன், பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகின்றன மொழிகளின் தொகுப்பை மாநில வாரியாக வெளியிடுவதற்கு பல்வேறு மாநிலத் தொகுதிகளில் உறுதுணை புரிந்தவர். தான் பெற்ற களப்பணி அனுபவத்தின் அடிப்படையில், பல்வேறு பல்கலைக்கழக மொழியியல் மாணவர்களுக்கு ஒரு மொழியின்/ தாய் மொழியின் மாதிரி இலக்கணத்தை (Sketch Grammar) வடிவமைப்பதற்குப் பயிற்சி கொடுத்தவர். மொழிப் பிரிவில் இயங்கும் இந்திய மொழிகளின் கணக்கெடுப்புத் திட்டம், தாய்மொழிக் கணக்கெடுப்புத் திட்டம் மற்றும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்திய மொழிகளின் கணக்கெடுப்பு போன்றவற்றில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவில் இருந்து அயராது உழைத்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகளுக்குமேல் வெளியீடு செய்தவர். மொழிப்பிரிவில் வெளியிடப்பட்ட பல்வேறு மொழிகளின் மாதிரி இலக்கணங்கள் புத்தக வடிவிலும், மின் இதழாகவும் (www.censusindia.gov.in) கிடைக்கின்றன.

கொல்கத்தாவில் பணியாற்றுகின்றபொழுது தமிழ்ச் சங்கப் பணிகளிலும் பங்கேற்றார். ஆய்வு அரங்குகளிலும் , பட்டிமன்றங்களிலும், பொங்கல் விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றியதற்காக இருமுறை குடியரசுத்தலைவர் விருது பெற்றவர் (2001 மற்றும் 2011 மக்கள் தொகை). யுனொஸ்கோவின் உலக மொழிகள் திட்டத்திற்காகத் தமிழகத்தில் பேசப்படும் தெலுங்கு மொழிபற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை அந்நிறுவனத்திற்குச் சமர்ப்பித்தற்காக நற்சான்றிதழ் பெற்றவர்.
தற்போது இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் பேச்சொலி அறிவியல், கல்வித்தொழில்நுட்பம், மின்தரவாக்கம், மொழி மேம்பாட்டுத்திட்டம், தாய்மொழிக் கணக்கெடுப்பு போன்ற துறைகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்.
தமிழகத்தைச்சேர்ந்த இவருடைய துறை அறிவும் பணியும் ... தமிழ் ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை. அவர் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.


பேராசிரியர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ( 1902 – 81)

பேராசிரியர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ( 1902 – 81) … தமிழ் , தமிழர் பற்றிய ஆய்வுகளில் தனது முடிவுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் நின்ற ஒரு மிகப் பெரிய ஆய்வாளர். தமிழ் ஒரு இயற்கைமொழி … உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் … தமிழே திராவிட மொழிகளுக்குத் தாய் … ஆரியத்திற்கும் மூலம் … மேலும் மூழ்கிவிட்ட குமரிக்கண்டத்திலிருந்துதான் முதல் மாந்தரினம் தன் தாய்மொழியான - உலக முதல் மொழியான – தமிழுடன் தோன்றியது. இதுவே பாவாணரின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்ற ஊரில் பிறந்த ‘தேவநேசன்’ பின்னர் ‘தேவநேயன்’ என்று அழைக்கப்பட்டார். தமிழாசிரியர் மாசிலாமணி என்பவர் இவருக்குச் சூட்டிய ‘கவிவாணர்’ என்ற அடைமொழியும் பின்னர் ‘பாவாணர்’ என்று மாற்றமடைந்து, ‘தேவநேயப் பாவாணர்’ என்று அழைக்கப்பட்டார். ‘திராவிட மொழி நூல் ஞாயிறு ‘ என்ற சிறப்புப்பட்டத்தைப் பெரியார் ஈ.வே. இரா. அவர்கள் தலைமையில் 1955 – இல் சேலம் தமிழ்ப் பேரவை அளித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் படிப்பிலும் திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப்புலவர் படிப்பிலும் தேறிய பாவாணர் 1934 – இல் பி ஓ எல் பட்டமும் பெற்றார். 22 ஆண்டுகள் பள்ளி ஆசிரியப் பணி … 12 ஆண்டுகள் கல்லூரிப் பணி … 5 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி … 6 ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதித்திட்டத்தில் பணி. ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் ‘ மொழியாராய்ச்சி ‘ என்ற இவரது கட்டுரை முதன்முதலாக 1931- இல் வெளிவந்தது. 1940 இல் ‘ ஒப்பியன் மொழிநூல்’ என்ற இவரது மிகச் சிறப்பான ஆய்வுநூல் வெளிவந்தது. அதையொட்டி, ‘இயற்றமிழ் இலக்கணம்’ என்ற இவரது நூலைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. ‘திராவிடத் தாய்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’ ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழாட்சி’, ; முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம், ‘ A critical survey of Madras University Lexicon ‘ ‘ The Primary classical Language of the World’, ‘ The Language Problem of Tamilnad and its logical Solution ‘ ‘ வேர்ச்சொல் கட்டுரைகள்’, ‘தமிழிலக்கிய வரலாறு’ ‘ இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ‘, ‘ வண்ணனை மொழிநூலார் வழுவியல்’ ஆகியவை இவர் எழுதியுள்ள நூல்களில் சில. 1956 –ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘திராவிட மொழியாராய்ச்சித் துறையில்’ இணைப்பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்கும் வங்காளமொழிப் பேராசிரியர் சுநீதி குமார் சட்டர்ஜிக்கும் ஏற்பட்ட கருத்துமோதல், இவர் தான் கொண்டிருந்த மொழிக் கோட்பாட்டு அடிப்படையில் மேற்கொள்கிற ஆராய்ச்சிக்குத் தடையாக அமைந்தது. இதன் விளைவாக, 1961 ஆம் ஆண்டு இவர் அப்பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறினார். 1959 –இல் இவரது மாணவரும் பல வகைகளில் அவருக்குத் துணை நின்றவருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தொடங்கிய ‘தென்மொழி’ இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். 1960 –இல் இவரது ஆட்சித்துறைக் கலைச்சொல்லாக்கங்களைப் பாராட்டி, தமிழ்நாட்டரசு செப்புப்பட்டயம் வழங்கி இவரைச் சிறப்பித்தது. 1974 – இல் தமிழ்நாட்டரசு வகுத்த ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டு, அப்பணியைத் தொடங்கினார். 1979 – இல் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுத்தட்டமும் விருதும் வழங்கினார். அப்போது ‘செந்தமிழ்ச்செல்வர் ‘ என்ற பட்டமும் தமிழ்நாட்டரசால் வழங்கப்பட்டது. இவருக்குப் பலவகைகளில் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிறுவனர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் உதவியுள்ளார். முக்கூடலைச் சேர்ந்த இராமகிருஷ்ணா பீடி நிறுவனத்தின் உரிமையாளரும் உதவியுள்ளார். 1981 – ஆம் ஆண்டு (5.1.81) மதுரையில் நடைபெற்ற 5 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் ‘ மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்’ என்னும் தலைப்பில் ஒன்றேகால் மணிநேரம் சொற்பொழிவாற்றினார். அன்று இரவே உடல்நலம் கெட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்த பத்தாவது நாள் (15.1.81) இயற்கை எய்தினார். மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தையொட்டி, பாவாணர் வாழ்க்கையும் ஒரு இயக்கமாகவே தோன்றி, வளர்ந்து, இன்றும் நீடிக்கிறது. உலகெங்கும் அவரது கோட்பாட்டை ஆதரிப்பவர்களும் அதனடிப்படையில் தமிழாய்வை மேற்கொள்வோர்களும் இருக்கின்றனர். மறைந்த பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார், முனைவர் வளனரசு போன்றோரெல்லாம் இவரது கோட்பாடுகளை ஏற்றவர்களில் சிலர். இன்றும் முனைவர் அரணமுறுவல், முனைவர் கு. அரசேந்திரன், திரு. பூங்குன்றன், திரு. அருளி போன்றோர் தொடர்ந்து பாவாணர் வழியில் தமிழ்த்தொண்டு ஆற்றிவருகின்றனர். இவரது நினைவாகத் தபால்தலையும் வெளியிடப்பட்டுள்ளது.மேலதிக விவரங்களுக்கு: http://ta.wikipedia.org/s/3f1

                               

வெள்ளி, 12 ஜூன், 2020

பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம்


பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் (1926-2009) … வ(டசேரி) (அய்)யம்பெருமாள் சுப்பிரமணியம் … துறைகள் பலவற்றையும் பேராசிரியர்கள் பலரையும் உள்ளடக்கிய ஒன்றுதான் பல்கலைக்கழகம் என்றால், பேரா. வ.அய்.சு. அவர்களும் நம்மிடையே நடமாடிய உயிர்ப்புள்ள , துடிப்புள்ள ஒரு பல்கலைக்கழகம்தான்! கேரளத்தில் மொழியியல்துறையை (1963) உருவாக்கினார். திராவிட மொழியியல் கழகத்தை நிறுவினார் (1971). உலகத் திராவிட மொழியியல் பள்ளியை (1997) நிறுவினார். தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்தார். ஆந்திரத்தில் குப்பம் என்ற இடத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஹம்பியில் கன்னடப் பல்கலைக்கழகமும் உருவாகக் காரணமாக அமைந்தார் எனப் பேரா. தமிழவன் கூறுகிறார். பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், இராம. சுந்தரம், ச.வே. சுப்பிரமணியன், பி.ஆர். சுப்பிரமணியன், இரா. தாமோதரன் , இளவரசு … பேராசிரியர் உருவாக்கிய மாணவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்த ஒரு பேராசிரியர். 1943-இல் நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் .. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பி.ஏ.,ஹானர்ஸ் - முதுகலைப்பட்டம் (1946). அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேரறிஞர் ஹவுஸ்கோல்டர் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் (1957). நெல்லை மதிதா இந்துக்கல்லூரியில் 6 ஆண்டுகள் (1947-53) ஆசிரியப்பணி. 1953 முதல் 58 வரை அன்றைய திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பணி. பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் மொழியியல் துறையில் பணி. 1963 – இல் மொழியியல்துறை தோற்றுவிக்கப்பட்டபிறகு அதன் தலைவராகச் செயல்பட்டார். தமிழகத்தில் 1981-இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவித்தபோது அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது தடவையும் அப்பதவியில் சில ஆண்டுகள் நீடித்தார். ஆந்திரத்தில் திராவிடப் பல்கலைக்கழகம் உருவாகியபோது, அதன் இணைவேந்தராகப் பணியேற்றார் (1997-2001). செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனம் அமைக்கப்பட்டபோது, அதன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம், திராவிடப் பல்கலைக்கழகம், விசுவபாரதிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டி.லிட்., பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளன. சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது இவருக்கு 2007-இல் வழங்கப்பட்டது. பேரா. தனிநாயகம் அடிகளாருடன் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கினார். 1972 – இல் இவர் தொடங்கிய “International Journal of Dravidian Linguistics “ இன்றுவரை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. DLA News என்ற ஒரு செய்தி இதழையும் தொடங்கிவைத்தார். ‘ புறநானூற்றுச் சொல்லடைவு ‘ என்பது இவரது ஆய்வேடாகும். இவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, இரண்டு தொகுதிகளாக – ‘ மொழியும் பண்பாடும் ‘, ‘ இலக்கணமும் ஆளுமையும்’ – வெளிவந்துள்ளன. DLA வெளியீடுகளாக ‘திராவிடக் களஞ்சியம் - 3 தொகுதிகள்’, ‘திராவிடப் பழங்குடி மக்கள் களஞ்சியம் – 3 தொகுதிகள்’ , ‘ தொல்காப்பிய மூலவேறுபாடுகள்’, தொல்காப்பியச் சொல்லடைவு’, தென்னிந்தியாவில் சமணர்’, ‘தெலுங்கு இலக்கணக் கோட்பாடுகள் ‘ ஆகியவை வெளிவந்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்க்கலை’, “Tamil Civilization “ என்ற இரு ஆய்விதழ்களைத் தொடங்கினார். மொழியியலில் நிலவுகிற புளூம்பீல்டு அமைப்பியல் கோட்பாடு ( Structural Linguisitcs), பைக் டாக்மீமிக்ஸ் கோட்பாடு (Pike’s Tagmemics) , ஹெம்ஸ்லேவ் கிளாஸ்மேடிக் கோட்பாடு ( Hjelmslev’s Glossematics), சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு ( Chomskey’s Generative Grammar) என்று பல கோட்பாடுகளைப் பின்பற்றி , தன் மாணவர்களைத் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தது உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய சாதனையாக நான் பார்க்கிறேன். அவரது மாணவர் ஒருவர் தனது பேராசிரியரை Very important Subrmaniom (VIS) என்று குறிப்பிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் மேற்கொண்ட கணினிமொழியியல் ஆய்வுகளின் விவரங்களைப்பற்றி DLA News வெளியிடுவதற்காக ஒரு பேராசிரியரை அவர் நேரில் அனுப்பிவைத்ததை நான் மறக்கமுடியாது. பேராசிரியர்பற்றிய மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளங்களைப் பார்க்கலாம். http://keetru.com/…/2009-10-07-1…/09/320-2009-08-27-08-38-34 http://www.kalachuvadu.com/issue-116/page75.asp


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India