அயல்மொழிச்
சொற்களை எவ்வாறு கையாளுவது ?
----------------------------------------------------------------------------------------------------------------------
திரு. நாக இளங்கோவன் அவர்களின் ''அயல்மொழிச் சொற்களை எவ்வாறு கையாள்வது'' என்பதுபற்றிய முகநூல் பதிவையொட்டிய எனது கருத்துக்கள் . . .---------------------------------------------------------------------- ---------------------------------------------------
அயல்மொழிச்சொற்களைக்
''கடன் வாங்குவதில்'' மூன்று வழிமுறைகள் உள்ளன. ஒன்று, அச்சொல்லின் பொருண்மையோடு அந்தச் சொல்லையும்
அப்படியே ஏற்றுக்கொள்வது ( bus - பஸ்) ; இரண்டாவது
அச்சொல்லை அவ்வாறே மொழிபெயர்ப்பது ( Chief minister - முதல் அமைச்சர் ); மூன்றாவது அச்சொல்லின் பொருண்மையைப்
புரிந்துகொண்டு, புதிய சொல்
ஒன்றை உருவாக்குவது (Radio - வானொலி). இந்த
மூன்றிலுமே தமிழ்மொழியின் சொல்லமைப்பு இலக்கணம் - குறிப்பாக, மெய்ம்மயக்கம், மொழியசை விதிகள் - பின்பற்றப்படவேண்டும்.
நபர்கள், நிறுவனங்கள்
ஆகியவற்றின் பெயர்களை மொழிபெயர்ப்பது (மேற்கூறியவற்றில் இரண்டாவது) சரியாக
இருக்காது எனக் கருதுகிறேன்.
ஆனால்
இயன்றவரை தமிழ்ச்சொல் அமைப்பு விதிகளுக்கேற்ப அதைச் சற்று மாற்றிக்கொண்டு
பயன்படுத்துவதே சரியாக இருக்குமெனக் கருதுகிறேன். மைக்ரோசாஃப்ட் (Microsoft)
என்பது ஒரு
நிறுவனத்தின் பெயர். ஆனால் தமிழில் சொல்லிறுதியில் வல்லின ஒற்றுக்கள் வராது. எனவே
மைக்ரோசாஃப்ட்டு என்ற எழுதலாம்.
இந்தச் சொல் -
மைக்ரோசாஃப்ட் - தமிழ் வேற்றுமை விகுதிகளை ஏற்கும்போது, 'மைக்ரோசாஃப்ட்டை, மைக்ரோசாஃப்ட்டோடு என்று தான் வரும். அதாவது, அயல்மொழிச்சொற்களோடு தமிழ் இலக்கண விதிகளை
இணைக்கும்போது, தமிழ்
புணர்ச்சி விதிகள் செயல்படுகிறது.
சொல்லிறுதியில்
வருகிற ஒற்று ஒலிப்பிலா ஒலியா (voiceless phone), ஒலிப்புள்ள ஒலியா ( Voiced
phone) என்பதைப்
பொறுத்துப் புணர்ச்சி அமைகிறது. அயல்மொழிச்சொல்லின் இறுதியில் ஒலிப்பிலா ஒலி
வந்தால், இரட்டிக்கும்; ஒலிப்புள்ள ஒலி வந்தால் இரட்டிக்காது. கோல்ட்
(gold)
என்பதோடு
ஐ-விகுதி இணையும்போது 'கோல்டை' என்று அமைகிறது; ஆனால் காட் (cot ) என்பதோடு ஐ-விகுதி சேரும்போது, 'காட்டை' என்று இரட்டித்துத்தான் கூறுகிறோம். அதாவது
இறுதியில் " t " (ஒலிப்பிலா ஒலி) வந்தால் இரட்டிக்கும்; "d" ( ஒலிப்புள்ள ஒலி ) வந்தால் இரட்டிக்காது.
அதாவது, அயல்மொழிச்சொற்கள்
தமிழ் இலக்கண விகுதிகளை ஏற்கும்போது, தமிழ்ப் புணர்ச்சி விதிகளே செயல்படுகின்றன. cot என்பதோடு இறுதியில் "tu"
என்று
எழுத்துவருகையை ஏற்று, cottu என்ற
அடிச்சொல் அமைந்து ( 'நாடு' என்பது 'நாட்டு' என்ற அடிச்சொல்லாக மாறுவதுபோல) , பின்னர்தான் ''ஐ '' விகுதி இணைகிறது.
Driver (ட்ரைவர்) என்ற
ஆங்கிலச்சொல்லில், சொல் முதலில்
இரண்டு மெய்கள் வருகின்றன; ஆனால் தமிழில்
அதைக் கூறும்போதும் எழுதும்போதும் தமிழ் மொழியசை விதிகளுக்கேற்ப - சொல் முதலில்
இரண்டு மெய் ஒற்றுக்களைத் தவிர்ப்பதற்காக - 'டிரைவர்' என்றுதான் கூறுகிறோம். டேங்க் " tank"
என்பது 'டேங்க்கு' ( அடிச்சொல்) என்று அதன்பின்னர்தான் பின்னர் ஐ
- விகுதியை ஏற்று 'டேங்க்கை' என்று அமைகிறது.
இங்கு நான்
வலியுறுத்துவது . . . அயல்மொழிச்சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது, தமிழ் மெய்ம்மயக்கங்கள், மொழியசை விதிகளை அடிப்படையாகக்கொண்டு, மாற்றியமைக்கலாம். எனவே நபர், நிறுவனம், பொருள் ஆகியவற்றை மொழிபெயர்க்காமல், ஆனால் தமிழ் சொல் இலக்கணத்தின்படி சற்று
மாற்றியமைக்கலாம். நாம் மாற்றியமைக்கவில்லையென்றாலும் தொடர்களில் அவை தமிழ் இலக்கண
விதிகளை ஏற்கும்போது, தமிழ் சொல்
அமைப்புப்படி மாற்றியமைந்துவிடும். எனவே 'மைக்ரோசாஃப்ட்' என்பதை 'மைக்ரோசாஃப்ட்டு' என்று எழுதலாம் ( ட்ரைவர் என்பதை டிரைவர்
என்று மாற்றுவதுபோல).
எல்லாவற்றையும்விட
நான் முதன்மையாகப் பார்ப்பது ... மக்கள் புழக்கத்தில் உள்ள சொற்களாக இருந்தால்
சிறப்பாக இருக்கும் என்பதேயாகும்!
அடுத்து . . . புதிய சொற்களை அறிமுகப்படுத்தும்போது . . . கவனிக்க வேண்டிய ஒரு செய்தி . . . துறைசார்ந்த கலைச்சொற்களா (ஏவுகணை, புவியீர்ப்பு விசை போன்றவை) அல்லது மக்களின்
அன்றாடப் பழக்கவழக்கங்களில் பயன்படுத்தப்படுகிற அயல்மொழிச் சொற்களுக்கான ( கஷ்டம், ஆஸ்திகம், ஆகாரம் போன்ற சொற்கள்) தமிழ்ச்சொற்களா?
இரண்டாவது
வகைபற்றிய சொற்களில் மக்களின் அன்றாட வழக்கிலிருந்து பெற்ற சொற்களைக்கொண்டு புதிய சொற்களை அறிமுகப்படுத்தினால், எளிதாக அவை மக்களுக்குப் போய்ச்சேரும்!
என்னைப்
போன்றவர்களுக்கு உள்ள ஒரு உண்மையான சிக்கல் . . . ஒரு சொல் தமிழ்ச்சொல்லா அல்லது
அயல்மொழிச்சொல்லா என்பதைக் கண்டறிவதாகும். எனக்குச் சொற்பிறப்பியல் துறையில்
எந்தவித அறிவும் கிடையாது. . . பயிற்சியும் கிடையாது. ஒரு சொல்லை அறிஞர்கள் சிலர்
அயல்மொழிச்சொல் என்று கூறுவார்கள். சிலர் தமிழ்ச்சொல்லே என்று கூறுவார்கள். இரண்டு
பேரும் தங்களது கூற்றுக்குத் தகுந்த ஆதாரங்களை அளிப்பார்கள். தமிழிலிருந்து
பிறமொழிக்குச் சென்று பின்னர் அது தமிழுக்கு வந்த சொல்லே என்று சிலர் கூறுவார்கள்.
இதில் நானே முடிவெடுப்பது என்பது இயலாது. ஏதாவது ஒரு கருத்தைத் தான்
ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருமித்த முடிவாக ''இது தமிழ்ச்சொல், இது அயல்மொழிச்சொல்'' என்று முடிவு எடுத்த ஒன்றாக அமைந்தால்
சிறப்பு. ''காலம்'' என்பதைத் தமிழ்ச்சொல்லாகவும் சிலர்
கூறுகிறார்கள். சிலர் அயல்மொழிச்சொல் என்றும் கூறுகிறார்கள்.
மற்றொரு வகைச்
சிக்கல் . . . 'பசு' என்பது வடமொழிச்சொல்லா? அவ்வாறு இருந்தால் ''ஆ'' என்பதுதானே அதற்கு இணையான தமிழ்ச்சொல். ஆனால்
மக்களிடம் இந்தச் சொல்லைக் கொண்டுசென்று பயன்படுத்தச் சொல்லமுடியுமா? 'ஆவின்' என்ற ஒரு சொற்றொடரில்தான் தற்போது ''ஆ'' நிலைகொண்டிருக்கிறது. என்ன செய்யலாம்? இதற்கெல்லாம் சொற்பிறப்பியல் துறையைச்
சேர்ந்த அறிஞர்கள் ஒருமித்த முடிவுகளுக்கு வந்தால், என்னைப் போன்றவர்களுக்குப் பயனுள்ளதாக
இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னைப்
போன்றவர்களுக்கு உள்ள ஒரு உண்மையான சிக்கல் . . . ஒரு சொல் தமிழ்ச்சொல்லா அல்லது
அயல்மொழிச்சொல்லா என்பதைக் கண்டறிவதாகும். எனக்குச் சொற்பிறப்பியல் துறையில்
எந்தவித அறிவும் கிடையாது. . . பயிற்சியும் கிடையாது. ஒரு சொல்லை அறிஞர்கள் சிலர் அயல்மொழிச்சொல் என்று கூறுவார்கள். சிலர்
தமிழ்ச்சொல்லே என்று கூறுவார்கள். இரண்டு பேரும் தங்களது கூற்றுக்குத் தகுந்த
ஆதாரங்களை அளிப்பார்கள். தமிழிலிருந்து பிறமொழிக்குச் சென்று பின்னர் அது
தமிழுக்கு வந்த சொல்லே என்று சிலர் கூறுவார்கள். இதில் நானே முடிவெடுப்பது என்பது
இயலாது. ஏதாவது ஒரு கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருமித்த முடிவாக ''இது தமிழ்ச்சொல், இது அயல்மொழிச்சொல்'' என்று முடிவு எடுத்த ஒன்றாக அமைந்தால்
சிறப்பு. ''காலம்'' என்பதைத் தமிழ்ச்சொல்லாகவும் சிலர்
கூறுகிறார்கள். சிலர் அயல்மொழிச்சொல் என்றும் கூறுகிறார்கள்.
மற்றொரு வகைச் சிக்கல் . . . 'பசு' என்பது வடமொழிச்சொல்லா? அவ்வாறு இருந்தால் ''ஆ'' என்பதுதானே அதற்கு இணையான தமிழ்ச்சொல். ஆனால் மக்களிடம் இந்தச் சொல்லைக் கொண்டுசென்று பயன்படுத்தச் சொல்லமுடியுமா? 'ஆவின்' என்ற ஒரு சொற்றொடரில்தான் தற்போது ''ஆ'' நிலைகொண்டிருக்கிறது. என்ன செய்யலாம்? இதற்கெல்லாம் சொற்பிறப்பியல் துறையைச் சேர்ந்த அறிஞர்கள் ஒருமித்த முடிவுகளுக்கு வந்தால், என்னைப் போன்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னைப்
பொறுத்தவரையில் தமிழில் சொற்கள் இருக்கும்போது, தேவையின்றி ட்ரைவர், ப்ளாட்ஃபார்ம், ப்ரின்சிபல் என்று எழுதுவது சரி இல்லை.
இதற்கு நாம் இசைவு அளிக்கக்கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை. என்னுடைய மென்பொருளில் இதற்கான உதவிகளை
அளிப்பதற்கு மிகவும் முயன்றுவருகிறேன். ஆனால் இதையும் காதில் வாங்காமல், ட்ரைவர் என்று எழுதுபவர்களுக்கு இரண்டாம்நிலை
பரிந்துரை . . . தமிழ் ஆவணங்களில் பிறமொழிச்சொற்களைத் தெரிந்தோ தெரியாமலோ
எழுதுபவர்கள் தமிழ் சொல்லிலக்கணத்தின் விதிகளை மீறக்கூடாது! ஆனால் இதுபோன்ற
அனுமதிகளை அளிப்பது தவறுதான். நான் கூறவருவது . . . ஒருவர் ஆங்கிலச்சொல்லைப்
பயன்படுத்தினாலும் அதனுடன் இலக்கணவிகுதிகளை இணைக்கும்போது அவர் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் தமிழ்ப் புணர்ச்சி விதிகள் செயல்படத்தான் செய்யும். இதை நான்
மிகப் பெரிய தரவுகளிலும் ஆய்வுசெய்துபார்த்துவிட்டேன்.
இயற்பெயர்களைப்
பொறுத்தவரையில் பிறமொழிச்சொற்களை அவ்வாறே எழுதுவதால் தமிழ்ச்சொற்களஞ்சியத்தில்
சிக்கல் வராது எனக் கருதுகிறேன். இது எனது தற்போதைய நிலைபாடுதான். ஆனால் அதனால்
தமிழ்மொழி அமைப்பு (மெய்ம்மயக்க விதிகள்) பாதிக்கப்படும் என்பது தெளிவானால், எனது நிலைபாட்டை எப்போதும் மாற்றிக்கொள்ள
அணியமாக இருக்கிறேன்.
ஆங்கிலச்சொற்களைப்
பொறுத்தவரையில் ஆங்கிலம் என்று வெளிப்படையாகத் தெரிந்துவிடுகிறது. ஆனால் மக்கள்
புழக்கத்தில் உள்ள பல்வேறு அயல்மொழிச் சொற்களைப்பற்றிய ஆய்வில் சொற்பிறப்பியல்
அறிஞர்களின் கூட்டு உழைப்பு தேவைப்படுகிறது. ஒருமித்த கருத்து உருவாகவேண்டும்.
அடுத்து, மிகவும்
புழக்கத்தில் உள்ள அயல்மொழிச்சொற்களைக் கண்டறிந்து அவற்றிற்கான தமிழ்ச்சொற்களை
அளிப்பதிலும் சற்றுக் கவனம் தேவை. இதற்கு தமிழ் அகரமுதலி உருவாக்கத்தில் மிகுந்த
கவனம் செலுத்தவேண்டும். 'கஷ்டம்' என்ற சொல்லுக்கு வேறுபட்ட பொருள்கள் உள்ளன. ''எனக்கு இந்த வேலை கஷ்டமாக இருக்கிறது' என்ற தொடரில் 'கஷ்டத்திற்குப்பதில்' 'கடினம்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் 'எனக்கு மனக் கஷ்டமாக இருக்கிறது' என்ற தொடரில் 'கஷ்டம்' என்பதற்குக் 'கடினம்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது சரி இல்லை எனக்
கருதுகிறேன். இதற்கெல்லாம் மிகப் பெரிய அளவில் "இணைபொருள் சொற்களஞ்சியம் ( thesaurus
) உருவாக்கப்படவேண்டும்.
ஆனால் இதுபற்றியெல்லாம் இங்குக் கவலைப்பட மேலிடங்கள் எப்போதும் அணியமாக இருந்ததில்லை!
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக