வியாழன், 25 மே, 2023

தமிழ்வழிக் கல்விக்கான கருத்தாடலில் ஒரு கருத்து . . .

 நண்பர் திரு மாலன் கருத்தும் எனது கருத்தும்

------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்வழிக் கல்விதொடர்பான எனது இன்றைய இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து, நண்பர் திரு. மாலன் அவர்கள் நடுவண் அரசு, மாநில அரசு முயற்சிகள் பற்றி விளக்கியிருந்தார். தமிழ்வழிக் கல்வியை ஏற்றுக்கொண்டுதான் அவர் அதைக் கூறுகிறார். இதில் ஐயம் இல்லை! ஆனால் இவ்வளவு முயற்சிகள் நடைபெற்றும் தமிழ்வழிக் கல்விக்கு நாம் எதிர்பார்க்கிற வரவேற்பு கிடைக்கவில்லை என்ற ஒரு ஆதங்கத்தில் சில கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். அவருக்கு நன்றி. அதையொட்டி, எனக்குத் தோன்றிய கருத்துக்களையும் இங்கு முன்வைக்கிறேன்.
நண்பர் திரு. மாலன் அவர்கள்
-----------------------------------------------------------------------
''அரசு எதுவும் செய்யவில்லை என்பது சரியல்ல. தமிழ்வழியில் படித்த மாணவருக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு, அரசுப்பணிகளுக்கான தேர்வில் தமிழில் கட்டாயத் தேர்ச்சி, பொறியியல் கல்வியில் முதலாண்டு இரு பருவங்களில் தமிழ்ப்பாடம், பள்ளிகளில் அறிவியல் பாடம், பாடத்திட்டத்தில் தமிழ் முதல் மொழி, தமிழ்நாட்டிலுள்ள எத்தகைய பள்ளியாயினும் அவற்றில் தமிழ்ப்பாடம் என்பன மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, குடிமைப்பணி, நீட் போன்ற தேர்வுகளைத் தமிழில் எழுத வாய்ப்பு, தொழிற்கல்வியை தமிழில் பயிற்றுவித்தல் இவை மத்திய அரசின் முயற்சிகள் கணினி, கைபேசி, செய் மதியில் (செயற்கை நுண்ணறிவில்) தமிழ் என்பன தனியார் அளித்த கொடைகள் இருந்தும் நீங்கள் சொல்லும் நிலைதான் இருந்து வருகிறது (ஏறத்தாழ 100 ஆண்டுகளாக) ஆனால் யாரும் எதையும் திட்டமிட்டுத் திணித்ததாக சொல்வதற்கில்லை''.
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------------------
நன்றி நண்பர் மாலன் அவர்களே. மிகத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். பல முனைகளிலும் தமிழ்வழிக் கல்விக்கு நடுவண் அரசும் தமிழ்நாடு அரசும் பல முயற்சிகளை எடுத்துள்ளன. இருப்பினும் . . . ?
நிலைமை மாறவில்லை! தமிழ்வழிக் கல்விக்கு மக்களிடையே ஆதரவு இல்லை! இதைத்தான் நான் மற்றொரு பதிவில் கூறியுள்ளேன். ''ஆங்கிலத்திற்கு ஆதரவான ஒரு பொய்ம்மை நீண்ட நாள்களாக . . . . இல்லை வருடங்களாக . . . உருவாக்கப்பட்டிருக்கிறது!
//''பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் ஆதரவு ஆட்சியாளர்களும் . . . . முதலிலேயே ஒரு பொருளை உற்பத்திசெய்து விற்பதைவிட . . . அப்பொருளுக்கான ''சந்தையை'' . . . அப்பொருளின் விற்பனைக்குத் தேவையான ''மக்களின் வரவேற்பை . . . இசைவை'' முதலில் ''உற்பத்தி'' செய்வார்கள்! அதன்பின்னர் அந்தப் பொருளின் விற்பனைக்குச் சிக்கலே இல்லை! அந்த நிறுவனங்களே வந்து, ''இந்தப் பொருள் வேண்டாம்'' என்றாலும் , மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! //
எனவே, 100 ஆண்டுகளுக்குமேலாக இங்குத் திணிக்கப்பட்டுள்ள . . . ''உருவாக்கப்பட்டுள்ள'' ''உற்பத்திசெய்யப்பட்டுள்ள'' ஆங்கிலமோகம் . . . ஆங்கில ஆதிக்கத்தை . . . அவ்வளவு ''எளிதில்'' தகர்த்தெறியமுடியாது!
தகர்த்தெறியவே முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால் அதற்கு பல முனைகளில் மக்கள் முயல வேண்டும்! ஏனென்றால் அதற்கு அவ்வளவு பலமான அடித்தளம் இங்குப் போடப்பட்டிருக்கிறது!
அதற்கு அடிப்படையான சமூக, பொருளாதார, அரசியல் கூறுகள் மறையவேண்டும். இதை ''நிமிடங்களில், மணிகளில், நாள்களில், மாதங்களில், ஆண்டுகளில் ''செய்துவிடமுடியும் என்ற ஒரு ''கற்பனை ஆசை'' எனக்குக் கிடையாது! அதுபோன்று சமூக உளவியல் ஆய்வுகளும் தீர்வுகளும் தேவைப்படும்!

"இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing consent)"

 "இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing consent)"

------------------------------------------------------------------------------------------------------------
உலகறிந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி அவர்கள் தனது மற்றொரு நண்பருடன் இணைந்து ''Political Economy of Mass Media - Manufacturing Consent" என்ற ஒரு மிகச் சிறந்த நூலை உருவாக்கினார்.
இந்த நூலின் அடிப்படைக் கருத்து . . . இன்றைய ஊடகங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் நீடிக்கின்றன. இவற்றின் நோக்கமே . . . இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கும் . . . இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்களுக்கும் ''சந்தை '' உருவாக்கிக் கொடுப்பதே ஆகும்!
ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றிப் பல வகைகளில் ''புகழ்ந்து பேசி'' ஆதரவு திரட்டுவது முதல் படி! இந்தப் ''பொருள்கள்'' என்பவை வெறும் பொருள்கள் மட்டுமல்ல, அரசியல் கருத்துக்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், ஆட்சிகள் போன்றவையும் அடங்கும்!
இந்த ஆதரவு திரட்டலின் ஒரு கட்டத்தில் . . . குறிப்பிட்ட பொருள் இல்லையென்றால், தங்கள் வாழ்க்கையே இல்லை . . . . அந்தப் பொருள் மிகவும் தேவையான ஒன்று என்ற ''மனநிலைக்கு'' மக்கள் தள்ளப்படுவார்கள்!
தமிழகத்தில் தற்போதைய தொலைக்காட்சிகள், அலைபேசிகள் , ஆங்கில வழிக்கல்வி ஆகியவை எல்லாம் அடங்கும்.
அதாவது, பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் ஆதரவு ஆட்சியாளர்களும் . . . . முதலிலேயே ஒரு பொருளை உற்பத்திசெய்து விற்பதைவிட . . . அப்பொருளுக்கான ''சந்தையை'' . . . அப்பொருளின் விற்பனைக்குத் தேவையான ''மக்களின் வரவேற்பை . . . இசைவை'' முதலில் ''உற்பத்தி'' செய்வார்கள்! அதன்பின்னர் அந்தப் பொருளின் விற்பனைக்குச் சிக்கலே இல்லை! அந்த நிறுவனங்களே வந்து, ''இந்தப் பொருள் வேண்டாம்'' என்றாலும் , மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!
(அப்படித்தான் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்த ஆட்சியாளர்களே . . . இன்று தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவருகிறோம்'' என்று சொன்னாலும், ''தமிழ் உணர்வுள்ள'' தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை!)
இந்தக் ''கருத்து இசைவை'' உருவாக்குவதில்தான் தமிழகத்தில் இன்றைய ஊடகங்கள் எல்லாம் மிகத் தீவிரமாக இருக்கின்றன. அதுவும் தற்போது இணையம் வந்தபிறகு . . . யூடியூப் வந்தபிறகு . . . கேட்கவே வேண்டாம்! ''ஊடகவியலாளர்கள்'' குவிகிறார்கள்! டெல்லியிலிருந்தும் ஊடகவியலாளர்! குக்கிராமத்திலிருந்தும் ஊடகவியலாளர்!
நிமிடத்திற்கு நிமிடம் . . . பரபரப்புச் செய்திகள்! வீடியோ காட்சிகள்! பேசுபவருக்குத் தெரியாமல் அவரது பேச்சைப் பதிவுசெய்து, வெளியிடுதல்! ஆட்சியில் உயர் பதவிகளில் இருப்பவர்களின் அந்தரங்களிலிருந்து . . . கிராமக் கோவில்களில் நடைபெறுகிற ''கரகாட்டம்'' வரை . . . அப்போது அப்போது பார்க்கலாம்! கேட்கலாம்! காலையில் எழுந்திருக்கும்போதே அலைபேசியோடு எழுந்திருந்து . . . இரவு படுக்கையில் கண் அசருகிற வரை அலைபேசியில் வீடியோக்கள்!
இன்று அலைபேசி இல்லாமல் . . . குழந்தைகள்கூட சாப்பிடமாட்டார்கள்! பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுகூட அலைபேசிகளில்! ''மிகப் பெரும் தொழிற்புரட்சி'' தமிழகத்தில்!
இதைத்தான் சாம்ஸ்கி ''இசைவுச் சந்தையை உற்பத்தி செய்தல்'' என்று கூறுகிறார்.
இந்த ''இசைவுச் சந்தைதான்'' ஆங்கிலத்திற்கும் ஆங்கில வழிக்கல்விக்கும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது!
இந்த ஒரு சூழலில் ''தமிழ்வழிக் கல்வியை'' எவ்வாறு கொண்டுவருவது? ''தாயைப் பழித்தாலும் எனது தமிழைப் பழித்தவனை விடமாட்டேன்'' ''உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு'' என்ற வசனங்கள் அரசியல் மேடைகளில் ''ஒலிக்கப்படுவது'' காதில் விழுந்தாலும் . . . . கல்வியில்மட்டும் தமிழை விடமாட்டோம் என்ற ஒரு மிகப் பெரிய ''தாய்மொழி உணர்வு'' . . . . ஆங்கிலவழிக்கல்விக்கான ''இசைவுச் சந்தை'' இங்கு உற்பத்திசெய்யப்பட்டுள்ளது!

தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?

 தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?

----------------------------------------------------------------------------------------------------------
இன்றைய நாளிதழ்களில் ஒரு செய்தி!
தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளுக்கு ஒரே ஒரு மாணவர்தான் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் தமிழ்வழிப் படிப்புகளை ரத்து செய்யமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சரும் பொறியியல் படிப்புகளுக்கான துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்!
ஏன் இந்த நிலை தமிழ்வழிப் படிப்புகளுக்கு?
தமிழ் மக்களே - தமிழ்ப் பெற்றோர்களே - தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளுக்கு ஆதரவாக இல்லை! இந்த நிலை உயர்நிலைப் படிப்புகளில்மட்டும் இல்லை! பாலர் வகுப்பிலிருந்தே இது நீடிக்கிறது!
இது ஒரு பொருளாதாரம்சார்ந்த சமூக உளவியல் பிரச்சினை!
ஒரு பாட அறிவு தமிழில் படித்தாலும் அதே அறிவுதான்! ஆங்கிலத்தில் படித்தாலும் அதே அறிவுதான்! எந்தவகையிலும் மொழி அடிப்படையில் தமிழ் தாழ்ந்ததோ அல்லது ஆங்கிலம் உயர்ந்ததோ இல்லை!
இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு கருத்து - தவறான கருத்து - நிலவுகிறது! ஆங்கிலத்தில் படித்தால் உயர் பதவிகளுக்குச் செல்லலாம்! அயல்நாடுகளில் வேலைக்குச் செல்லலாம்! ஆனால் தமிழில் படித்தால்? தமிழ்நாட்டிலேயே உயர்பதவிகள் - வேலை வாய்ப்புகள் - கிடைக்காது!
இந்தக் கருத்து மக்கள் இடையே நிலவுவதற்குக் காரணம் . . . மறைமுகமான ஒரு கருத்துத் திணிப்புத்தான்! நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) வேறொரு துறைக்குப் பயன்படுத்திய ஒரு சொல் இங்கும் பொருந்தும்!
''இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing Consent) "!
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் மறைமுகமாக அரசியல் , பொருளாதாரச் சூழல்கள் மக்களிடையே ''ஆங்கிலத்திற்கான இசைவை'' உற்பத்தி செய்துள்ளன! இதன் தாக்கத்தினால் தமிழ்ப் பெற்றோர்கள் உளவியல் ரீதியில் ''சலவை'' செய்யப்பட்டுள்ளனர்!
பண்டைத் தமிழர் பெருமை, தமிழ் இலக்கியப் பெருமை ஆகியவற்றைமட்டுமே முன்னிலைப்படுத்துவது . . .
அவற்றை 'அலங்காரக் கண்காட்சிகளில்'' வைத்து பெருமைப்படுவது . . .
தமிழறிஞர்களுக்கு விருதுகள், வீடுகள், மாதாந்திரப் பண உதவி, அவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் , படிப்புக்களில் '' இட ஒதுக்கீடு'' அளிப்பது . . .
தமிழ் மாநாடுகள் நடத்துவது . . . மறைந்த தமிழறிஞர்களுக்குச் சிலை வைப்பது . . .
தமிழறிஞர்களின் ''நூல்களை'' அரசுடைமையாக்குவது . . .
தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்வது . . .
இத்தனையும் இங்கு நடைபெறுகின்றன!
ஆனால் . . . பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் படிப்புவரை . . . . பாடமொழியாக . . . பயிற்றுமொழியாக நீடிக்க . . . தமிழ்மொழிக்கு - தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழியாகிய தமிழுக்கு - உரிமையோ அல்லது வாய்ப்போ கிடையாது!
தமிழ்மொழியை நாம் ''அருங்காட்சியகத்தில்'' வைத்துப் பார்க்க விரும்புகிறோமேதவிர, 'அறிவியல் ஆய்வுக்கூடங்களில்'' வைத்துப் பார்க்க விரும்பவில்லை!
இன்று அரசுகள் கூறலாம் . . . ''நாங்கள் தமிழ்வழிப் படிப்புக்களை அறிமுகப்படுத்தத்தான் செய்யலாம் ! ஆனால் அதில் மாணவர்கள் சேராததற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?''
இங்குதான் நான் முன்கூறிய ''இசைவை உற்பத்தி செய்தல்'' என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும்!
தமிழ்வழிப் படிப்புக்கு எதிராக நீடிக்கிற மக்களின் நிலைபாட்டுக்குக் காரணம் . . .
பல ஆண்டுகளாக . . . மக்கள் மனதில் உருவாக்கப் -பட்டுள்ள ஒரு அச்சமே!
1) ''தமிழில் படித்தால் ஆங்கில அறிவு கிடைக்காது''
2) ''தமிழில் படித்தால் உலக அளவிலான அறிவு கிடைக்காது''
3) ''தமிழில் படித்தால் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைக்காது''!
இந்த ''பொய்ம்மையான அச்சம் '' மக்களிடமிருந்து அகற்றப்பட்டால் ஒழிய . . .
கல்வியில் தமிழ்மொழி பயிற்றுமொழியாக ஆவது என்பது நடவாத ஒன்றே ஆகும்!
இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கவேண்டும்! தவறான சமூக உளவியலை மாற்றி அமைக்கவேண்டும்! இதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு!
புராணக் கதைகளில் படித்திருப்போம் . . . ''ஒரு அரக்கனைக் கொல்வதற்கு அவனைத் தாக்கினால் போதாது. அவனுடைய உயிர் எங்கேயோ ஒரு இடத்தில் ஒரு கிளியிடமோ, குருவியிடமோ இருக்கும்! அதைப் பிடித்துக் கொன்றால்தான் அரக்கன் சாவான்''!
அதுபோல . . . தமிழ்மொழி வாயிலான கல்விக்குத் தமிழ் மக்கள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதற்கு அடிப்படையான காரணத்தைப் புரிந்துகொண்டு . . . அதைத் தகர்த்து எறியாமல் . . . தமிழகத்தில் தமிழ்வழிப் படிப்பு வராது!
உண்மையான தமிழ்த்தாய் அன்பு என்பது . . . அந்தத் தாயைச் சிலைவடிவிலும், விருதுகள், மாநாடு வடிவங்களிலும் பார்ப்பது மட்டும் இல்லை. . . .
மக்களின் அறிவுக்கு அடிப்படையான கல்வியில் . . . பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைக் கல்விவரை . . . பாடங்களில் தமிழைப் பார்ப்பதே ஆகும்! அதுதான் உயிர் உள்ள தமிழ்த்தாய்!
கலைப்பாடம், அறிவியல் பாடம் இரண்டையுமே தாய்மொழியில் - தமிழில் படிக்கலாம் . . . படிக்கவேண்டும்! ஆங்கிலத்தையோ - அல்லது வேறு எந்த மொழியையோ - மொழி என்ற அடிப்படையில் நன்றாகவே கற்றுக்கொடுக்கலாம். அப்போது மாணவர்கள் தங்களுடைய அறிவை அந்தப் பிறமொழிகளிலும் வெளிப்படுத்தலாம்.
இதுதொடர்பான நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இங்கு எப்படிப்பட்ட ஒரு சூழல் என்றால் . . . சுயமான அறிவு வளர்ச்சியும் தடைபடுகிறது. ஆங்கிலமும் அரைகுறையாகத் தெரிகிறது. உயர் நிலைகளில் விரும்பினால் ''English for Science and Technology" " English for specific Purpose" என்று கற்றுக்கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட வகுப்புவரை பொது ஆங்கிலம் . . . பின்னர் மாணவர்களின் துறைக்கேற்ப ஆங்கிலம் கற்றுக்கொடுத்தல் . . . இதுவே சரியான அணுகுமுறை என நான் கருதுகிறேன்.

கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !

 கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !

---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் சேர்ந்து பணியாற்றும்போது, அப்பணிக்குரிய அறிவைப் பெற்றிருப்பார்; பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதேவேளையில் . . . அவர் இந்தப் பிரபஞ்சத்தின் . . . சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் . . . அவைபற்றிய அறிவையும் கொண்டிருப்பார்.; கொண்டிருக்கவேண்டும்.
அதனால் ஒருவர் தமிழாசிரியராக இருப்பதாலேயே . . . . தமிழ்மொழி அறிவியல், தமிழ் இலக்கிய அறிவியல் தாண்டி . . . பிற அறிவியல்துறைகள்பற்றிய அறிவைப் பெற்றிருக்கமாட்டார் என்று கருதக்கூடாது.
இது பிற துறைப் பேராசிரியர்களுக்கும் பொருந்தும். பிரபஞ்ச, சமுதாய அறிவியல்களில் மொழியும், இலக்கியமும் அடங்கும்.
மேலும் கல்விக்கொள்கை என்பதில் வெறும் துறைசார் பாடத்திட்டம் மட்டும் அடங்குவது இல்லை; மாணவரின் மனித மூளை எந்த ஒன்றையும் எவ்வாறு கற்றுக்கொள்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, கற்றல் - கற்பித்தல் கொள்கையை வரையறுப்பதும் அடங்கும்; இந்தக் கொள்கையானது அனைத்துத் துறை ஆசிரியர்களுக்கும் பொதுவானது.
ஒரு மாணவருக்கு எதையும் உணரும் திறன், ஒன்றைப் படைக்கும் திறன் ஆகியவற்றை எவ்வாறு கற்றுக்கொடுப்பதும் என்பதும் அடங்கும்.
இவை எல்லாவற்றையும் விட . . . ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் . . . மக்களின் . . . . வாழ்க்கையை மேம்படுத்துவதற்கே கற்றலும், கற்பித்தலும் நீடிக்கின்றன; எனவே குறிப்பிட்ட சமுதாயத்தின் தேவைகள் என்ன, அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதுபற்றிய அறிவும் தேவைப்படுகிறது. இதுவும் அனைத்துத் துறை ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கான கல்விக்கொள்கையை வரையறுப்பதற்கான குழுவில் ஒரு (தமிழ்ப்) பேராசிரியர் இணைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றே. இங்குப் பேராசிரியர் என்று பார்க்கவேண்டுமே ஒழிய, அவரது சிறப்புத்துறைபற்றிய விமரிசனத்திற்கு இங்கு இடம் இல்லை!
ஆனால் இந்தக் குழு பரிந்துரைக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டு, செயல்படுத்துவது ஆட்சியாளர்களின் - அவர்களின் முடிவுகளைச் செயல்படுத்துகிற அதிகாரிகளின் - பொறுப்பு ஆகும். கல்வித் துறையில் தனியார் ஆதிக்கம் வளர்ந்துநிற்கிற ஒரு சூழலில் இது எந்த அளவு சாத்தியம் என்பது ஒரு தனி வினா!

தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள்

 தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே !

----------------------------------------------------------------------------------------------------
நேற்று தமிழ் ஆசிரியர்கள்பற்றித் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு பதிவு இட்டிருந்தார்கள். அதற்கு நானும் பதில் கூறியிருந்தேன். அதன்பின்னர் தோழர் அப்பதிவை நீக்கிவிட்டு, ஒரு விரிவான பதிலை இன்று இடுவதாகக் கூறியிருந்தார். தான் சொன்னபடி இன்று ஒரு பதிவை இட்டு, என் கவனத்திற்கும் அதைக் கொண்டுவந்தார்.
முழுவதும் படித்துப்பார்த்தேன். அவரது புரிதல் மிகத் தவறானது என்பதே எனது கருத்து! ஆனால் இதுபோன்ற கருத்துக்களுக்கு நீண்ட பதில் எழுத நான் விரும்பவில்லை! பயன் இருந்தால் உறுதியாக நான் எழுதுவேன்.
ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தியில் . . . . பிற உற்பத்தி சக்திகளுக்கு இணையாக அந்த மக்களின் மொழி நீடிக்கிறது என்பதே தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுகிற மார்க்சியத்தின் - மக்கள் ஜனநாயகத்தின் அடிப்படை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.
ஆனால் இந்தியாவில் அந்நிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார ஆதிக்கம்தான் நீடிக்கிறது என்பதால் . . . . அந்நிய மொழியாகிய ஆங்கிலம் மற்ற இந்திய மொழிகள்மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
மேற்கூறிய அந்நிய ஏகாதிபத்தியங்களின் தரகர்களாகச் செயல்படும் இந்திய முதலாளிகள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு . . . அதற்கு அடுத்தபடியாக ''இந்தியின்'' ஆதிக்கத்தை ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். பொருளாதார உற்பத்தியில் ஆங்கிலம், நிர்வாக அதிகாரத்தில் இந்தி என்ற இந்த மக்கள் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக மக்கள் போராடவேண்டிய ஒரு சூழலில் . . .
சில தனிப்பட்ட அறிவியலாளர்களைத் தமிழ் ஆசிரியர்களுக்கு எதிராக நிறுத்தி . . . தமிழ்மொழிக் கல்வியையும் தமிழ் ஆசிரியர் , ஆய்வாளர்களையும் மிகத் தவறாகச் சித்தரிக்க முயல்கிறார் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள்! ஏதோ பிற துறை அறிவியலாளர்களுக்கு எதிராக மொழி, இலக்கிய அறிவியலாளர்கள் ( இதைத் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!) நிற்பதுபோன்ற ஒரு மாயையை உருவாக்க அவர் முயல்கிறார்.
எந்தவொரு பிற துறை அறிவியலாளர்களையும் தாழ்வாகக் கருதும் எண்ணம் தமிழ் ஆசிரியர்களுக்குக் கிடையாது. மாறாக, தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அவர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள்!
நான் ஒரு தமிழ் ஆசிரியன்தான்! அறிவியல் பார்வையும் சமுதாய நோக்கும் உள்ள ஒரு ஆசிரியன்தான்!
பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம்பற்றியும் . . . ஏன் மார்க்சியப் பொருளாதாரம், அரசியல்பற்றியும் பேசக்கூடிய தமிழ் ஆசிரியர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். மேலும் உண்மையான போராட்டக் களத்தில் நின்று உயிரை இழக்கவும் தயாராக இருக்கின்றனர்! எனவே தமிழ் ஆசிரியர்களைத் ''தற்குறிகள்'' என்று கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் தோழரே.
அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கமும் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையும் இந்தி மொழி ஆதிக்கமும் நீடிக்கிற இன்றைய இந்தியச் சூழலில் . . . அவற்றை எதிர்த்து நின்று போராடவேண்டிய தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களின் இதுபோன்ற தவறான புரிதல்களுக்கு . . . கருத்துக்களுக்கு என்ன பதில் சொல்வது?
ஒரே பதில் . . . அவரது ''கருத்துச் சுதந்திரத்தை'' மதித்து . . . இந்தப் பதிவுத்தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
உண்மையில் தூங்குகிறவர்களை எழுப்ப முயலலாம்! ஆனால் . . . ?
இந்த எனது பதிலே தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களுக்கானது இல்லை! தமிழ்மொழி அறிவு எந்த அளவுக்குத் தேவை என்பதை மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவே எழுதியுள்ளேன்.

தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!

 தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!

----------------------------------------------------------------------------------------------------
இன்று நிலவுகிற கல்வியானது இந்தியாவின் தற்சார்புப் பொருளாதாரம், உற்பத்தி ஆகியவற்றிற்குப் பயன்படாத ஒன்று மட்டுமல்ல . . . அதற்கு எதிரானதும்கூட!
தற்சார்புப் பொருளாதாரத்திற்குப் பயன்படாத ஒன்று என்றால் . . . எதற்குப் பயன்படுகிறது?
அந்நிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு உதவுகிறது இந்தக் கல்விமுறை! பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நீடிப்புக்கும் உதவுகிறது இந்தக் கல்விமுறை!
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தேவையான மனிதசக்தியை உருவாக்கித் தருவதே அதன் நோக்கமாகும்! அவற்றின் இந்திய மண்ணில் நீடிக்கிற தொழிற்சாலைகளுக்குமட்டும் அல்லாமல் . . . அவற்றின் சொந்த நாடுகளாகிய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இந்திய மனித சக்தியை ''ஏற்றுமதி செய்யும்'' கல்விக்கொள்கைதான் தற்போதைய கல்வி! (அதனால்தானே ''ஆங்கிலத்தின் செல்வாக்கு'' ஓங்கி நிற்கிறது!)
மறுபுறம் . . . அறிவியல்பூர்வமான சமுதாயநோக்கு மக்களிடையே ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக . . . இந்தியாவின் ''பழம்பெருமை , பழம்பண்பாடு'' என்ற போர்வையில் . . . ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நீடிப்புக்கு ஆணிவேராக நீடிக்கிற நிலவுடமைச் சிந்தனைகளை . . . பண்பாடுகளை . . . இலக்கியங்களைப் ''புனிதப்படுத்தி'' மக்களிடையே நீடிக்கவைக்கிற கல்விமுறையாக நீடிக்கிறது!
தத்துவச் சிந்தனையோ, இலக்கியங்களோ, பண்பாடோ . . . எதுவும் வர்க்க நலன்களுக்கு அப்பாற்பட்டது இல்லை! கல்வி அமைப்பும் இதற்கு விதிவிலக்கு இல்லை!
இந்தக் கல்விமுறையை அவ்வப்போது தங்களுக்கு ஏற்றாற்போல . . . ''புதிய மொந்தையில் பழைய கள்'' என்ற பழமொழிக்கேற்ப . . . மாறி மாறி ''புதுப்பித்துக் கொள்கின்றன '' இந்தியாவின் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்!
''நாடுதழுவிய கல்விக்கொள்கை '' ஆகட்டும், ''மாநிலங்கள் தழுவிய கல்விக்கொள்கை ஆகட்டும்'' இரண்டுமே மேலே நான் குறிப்பிட்ட பயன்பாடுகளையே அடிப்படையாகக்கொண்டவை ஆகும்!
பன்னாட்டு ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரான . . . அதற்கு உதவுகிற நிலவுடைமை உறவுக்கு எதிரான . . . ஒரு சமுதாய, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு இங்கு உருவாகாதவரையில் . . . இந்திய மக்களுக்கான உண்மையான ஒரு கல்விக்கொள்கை இங்கு உருவாகாது! உருவாக்கவிடமாட்டார்கள்!
ஏதோ மக்களுக்கான ஒரு ''புதிய கல்விக்கொள்கையை'' உருவாக்குகிறோம் என்று நடுவண் அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு . . . 'பிரகடனப்படுத்தி வருவது'' ஒரு ஏமாற்று வித்தையேயாகும் என்பதில் ஐயம் இல்லை!
இந்தியாவில் தற்சார்புப் பொருளாதாரம் உருவாகாதவரையில் . . . எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்திலும்கூட . . . ஏகாதிபத்திய, நிலவுடமை நலன்களுக்கு எதிரான ஒரு கல்விமுறையைக் கொண்டுவரமுடியாது!
ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை . . . ''மரத்தில் பால் வடிகிறது'' என்று கூறுகிற ஏமாற்றுவேலையும் நீடிக்கத்தான் செய்யும்! ஏமாற்றுவது அவர்களின் உயிர்நாடிக்குத் தேவையான ஒன்று! அதை அவர்கள் செய்யத்தான் செய்வார்கள்!
மக்கள்தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்!

தமிழாசிரியர்கள்பற்றிய தவறான பதிவுக்கு மறுப்பு!

 தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமித்தது தவறு என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ள தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களுக்கான தோழமை அடிப்படையிலான பதில் இது!

-----------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு முற்போக்குத் தோழர் (எனக்கு நெருங்கிய நண்பரும்கூட). அவர் தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமிப்பது தவறு என்று கூறிய பதிவுக்குப் பதிலாகத் தோழமை அடிப்படையில் நான் இந்தப் பதிவை இடுகிறேன்.
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே. தங்களது கருத்து மிகத் தவறு என்றே நான் கருதுகிறேன். பொதுவாகத் தமிழாசிரியர்கள்பற்றித் ''தமிழகத்தில்'' ''தமிழ் உணர்வுமிக்க தமிழகத்தில்'' சிலர் கொண்டிருக்கிற கருத்தையே தங்களைப் போன்றவர்கள் கொண்டிருப்பது மிக்க வேதனையாக இருக்கிறது.
தமிழ்த்துறையில் பணிபுரிபவர்களுக்குக் ''மக்களுக்கான கல்விக் கொள்கையை'' வரையறுப்பதில் ''திறமையோ அல்லது அறிவோ'' இருக்காது என்று தாங்கள் கருதுவது தவறு. அதுபோல பிற ''அறிவியல் துறைகளில்'' இருப்பவர்கள் அனைவருக்கும் அந்தத் ''திறமையும் அறிவும் இருக்கும்'' என்று தாங்கள் கருதுவதும் தவறு.
ஒருவர் ஆசிரியர் பணிக்கு வருகிறார் என்றாலே அவருக்குக் கல்விக்கொள்கைகளைத் தீர்மானிப்பதிலும் பங்கு உண்டு. இதில் தமிழ்த்துறை, பிற அறிவியல் துறை என்று வேறுபடுத்துவது தவறு.
மக்களுக்கான கல்விக்கொள்கைகளை வரையறுப்பதற்குத் தேவையானது . . . சமுதாயம்பற்றிய முற்போக்குக் கொள்கைகளும் ஆய்வுமுறையுமே தேவை! மாணவர்களிடம் நேரடித் தொடர்பும் தேவை. இவை ''தமிழ்ப் பேராசிரியர்களுக்கு'' இருக்காது, ஆனால்'' பிற அறிவியல் துறையினருக்கு'' மட்டுமே இருக்கும் என்று தாங்கள் கருதுவது ஆசிரியர் சமுதாயத்தில் ஒருவகையான ''வர்க்க வேறுபாடுகளை'' திணிப்பதாகவே அமையும்.
இந்தக் குழுவில் பிற துறையினர்கள் நீடிக்கும்போது, அதுவும் ஒரு நீதிபதியின் தலைமையில் குழு இயங்கும்போது, தமிழ்ப் பேராசிரியர்களை உறுப்பினராக நியமிப்பது தவறு என்று தாங்கள் கருதுவது ஒருவகை''மேலாண்மைத் தன்மைகொண்ட'' ஒரு ''ஆதிக்கக் கருத்தே'' ஆகும்.
பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் ''அ, ஆ-வைக்'' கற்றுக்கொடுத்து, பிற துறை அறிவுகளைப் பெறுவதற்கான மொழித்திறனை அளிப்பது மொழிக் கல்வியே ஆகும்.
தமிழாசிரியர்களின் மத்தியில் மட்டுமல்ல, பிற துறை ஆசிரியர்கள் மத்தியிலும் சமூக விழிப்புணர்வும் அறிவியல் நோக்கு, பார்வையும் கொஞ்சம்கூட இல்லாதவர்கள் பலர் இருக்கின்றனர். தங்களுடைய துறை அறிவைத்தவிர , பிற துறை அறிவு இல்லாதவர்கள் பலர் நீடிக்கின்றனர். மேலும் இயற்கைபற்றிய பல்வேறு ''மூட நம்பிக்கைகளை'' கொண்டிருக்கின்றவர்கள் இருக்கிறார்கள்.
மேலும் பல்கலைக்கழக நிலையில் - தமிழ் ஆய்வுத் துறையில் பணியாற்றுகிற ஒரு பேராசிரியர் கல்விக்கொள்கை குழுவில் இடம்பெற்றதைத் தவறு என்று கூறுவது எவ்விதத்திலும் சரியில்லை.
மேலும் தற்போதைய இந்தியாவில் கல்விக்கொள்கைகளின் பின்புலம் . . . இன்றைய ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஆகும். மக்களின் நலன் இல்லை! எனவே தாங்கள் முன்வைத்துள்ள ''அறிவியலாளர்கள்'' உண்மையில் மக்களுக்கான கல்விக்கொள்கையை முன்வைத்தாலும், இறுதிமுடிவு யார் கைகளில்?
எனவே, தாங்கள் இந்தப் பதிவில் கூறியிருப்பதற்கு எவ்வித அடிப்படையும் கிடையாது. ஒரு தமிழாசிரியராகப் பணியாற்றி - அதுவும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றி - ஓய்வுபெற்ற ஒரு தமிழாசிரியர் என்ற முறையில் தங்களது கருத்தை உறுதியாக மறுக்கிறேன்.
தயவுசெய்து, பிற துறை ஆசிரியர்களிடமிருந்து தமிழ் ஆசிரியர்களைப் ''பிரித்துப் '' பேசுவதைத் தவிர்க்கவும். இந்தப் பதிவில் தாங்கள் முன்வைத்த கருத்துக்களுக்கு மிக்க வேதனையுடன் மறுப்பு தெரிவிக்கிறேன். முற்போக்குக் கொள்கையுடைய தங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை!


சனி, 13 மே, 2023

மனிதமூளையும் கணினி மூளையும் / ஆய்திறன் அறிவும் ( Intelligence) தரவுத்தொகுப்பு அறிவும் (Knowledge)

 மனிதமூளையும் கணினி மூளையும் / ஆய்திறன் அறிவும் ( Intelligence) தரவுத்தொகுப்பு அறிவும் (Knowledge)

------------------------------------------------------------------------------------------------------------------------

fact / data = புறவயமாக இருக்கும் ஒன்று; truth = புறவயமாக இருக்கின்றவற்றின் உள்ளார்ந்த பண்பு; from fact to truth; மரத்தில் உள்ள பழம் கீழே விழுகிறது என்பது fact; அதற்கு அடிப்படைக் காரணம் புவியீர்ப்பு விசை என்பது truth: இந்தப் புறவய நிகழ்ச்சிகளிலிருந்து அவற்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உதவுவது மனித மூளையின் நுட்பத்திறன். இந்த நுட்பத்திறனே Intelligence;
எனவே, புறவயமாக நீடிக்கிற பொருள் அல்லது நிகழ்விலிருந்து (Empirical / facts/ knowledge) அதனுடைய பண்பைத் தெரிந்துகொள்வது அறிவியல் அறிவு (Scientific knowledge / truth) . இந்த அறிவு மாற்றத்திற்கு அல்லது வளர்ச்சிக்கு உதவுவது Intelligence. இதை 'அறிவு உருவாக்க நுட்பத் திறன்' என்று விளக்கலாம்.
மனிதமொழி அறிவுபற்றிய ஸ்கின்னர் கோட்பாட்டின்படி, குழந்தையானது stimulus - response என்ற அடிப்படையில் மொழியைக் கற்றுக்கொள்கிறது. இந்த responses அனைத்தின் திரட்டே மொழி - மொழியறிவு (knowledge of language).
ஆனால் நோம் சாம்ஸ்கியின் கருத்துப்படி . . . குழந்தையானது தனது மூளைக்குள் உள்ள ஒரு ''திறமையைப்'' பயன்படுத்தி, தனக்குத் தேவையான ('கிடைக்கிற ஒன்று' என்று இல்லாமல்) மொழித்தரவுகளைப் பெற்று, அதன் உதவியுடன் தனது மொழியைப் பெற்றுக்கொள்கிறது. கிடைக்கின்ற தரவுகளை வைத்துக்கொண்டுதான் அது மொழியைக் கற்றுக்கொள்கிறது என்பது இல்லை. ஏனென்றால் அதற்கு மூன்று வயதுக்குள் ஒரு மொழியின் அனைத்துத் தரவுகளும் கிடைக்கும் என்று கூறமுடியாது (Poverty of Stimulus). குறைந்த காலம் - குறைந்த தரவுகள் - ஆனால் பெற்றுக்கொள்வதோ ஒரு மொழியின் நிறைந்த அறிவு. இதற்கு உதவுகிற மனிதமூளையின் நுட்பத் திறனே Intelligence.
ஆனால் இன்று கணினியானது கோடியே கோடி தரவுகளைப் பெற்றுக்கொள்கிறது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் அது மொழிச் செயல்பாட்டை மேற்கொள்கிறது. அதற்குச் சரியான தரவுகளோ அல்லது தேவையான அளவுக்குத் தரவுகளோ கிடைக்கவில்லையென்றால், மொழிச் செயல்பாட்டை மேற்கொள்ளமுடியாது.
எனவேதான் தமிழ்போன்ற மொழிகளுக்கு இன்று ChatGPT அல்லது Bard மென்பொருள்களால் சரியான முடிவுகளைத் தர இயலவில்லை. தரவுகளின் விரிவாக்கத்தைப் பொறுத்துதான் அதனுடைய மொழியறிவு அமைகிறது.
எனவே மொழியைப் பொறுத்தமட்டில் மனிதமூளையானது தனது உள்ளார்ந்த ஒரு நுட்பத்திறனைப் பயன்படுத்துகிறது. ஆனால் கணினியானது ஸ்கின்னர் கூறியதுபோல, stimulus - response அடிப்படையில்தான் மொழியைக் கற்றுக்கொள்கிறது( 'குழந்தை மூளைபோன்று 'பெற்றுக்கொள்ளவில்லை').
எனவே கணினியானது தனக்குக் கிடைக்கிற மொழித் தரவுகளைக் கொண்டு - அந்தத் தரவுகளை ஒழுங்குபடுத்தி - அதனடிப்படையில் செயல்படுகிறது. மொழிச் செயலைச் செய்ய அதனால் முடிகிறது. எனவே இதைச் ''செய்யறிவு'' (அல்லது ''பட்டறிவு''- empirical knowledge ?) என்று நண்பர் சுந்தர் இலட்சுமணன் கூறியது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது. ( அவர் எந்த அடிப்படையில் கூறினார் என்பது எனக்குத் தெரியாது.)
எனவே கணினியின் இந்த மொழிக்கற்றல் திறமையை intelligence என்று கூறுவதைவிட knowledge என்று கூறலாம் எனக் கருதுகிறேன். Stimulus - Response திறன் / (அல்லது) தரவுகளின் தொகுப்பு - அதனடிப்படையில் செயல்பாடு என்பது knowledge : எனவே, கணினிக்கு இன்று அளிக்கப்பட்டுள்ள அறிவானது, தரவுத் தொகுப்பின் அடிப்படையிலான அறிவா அல்லது மனிதமூளைக்குரிய ஆய்திறன் அல்லது உணர்திறன் அடிப்படையில் அமைகிற அறிவா? இதுவே எனக்குள்ள ஐயம்.


செவ்வாய், 9 மே, 2023

சேட்ஜிபிடி-யும் மொழிதொடர்பான வினாக்களும்!

 சேட்ஜிபிடி-யும் மொழிதொடர்பான வினாக்களும்!

------------------------------------------------------------------
தமிழ்பற்றிய ஒரு இலக்கண ஐயத்தையும் ஆங்கிலம் பற்றிய ஒரு ஐயத்தையும் சேட்ஜிபிடி-க்கு அளித்து, விடை கேட்டேன். தமிழ் வினாவை இரண்டு தடவை மாற்றிக் கேட்டேன்.
ஆங்கில வினாவுக்குத் தெளிவான விடை கிடைக்கிறது; ஆனால் தமிழ்பற்றிய வினாவுக்கு விடை கிடைக்க வில்லை!
இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்!
--------------------------------------------------------------------------
ந. தெய்வ சுந்தரம் : படித்தான் என்ற சொல்லைப் பிரித்து இலக்கணக் குறிப்பைத் தரவும்.
"சேட் ஜிபிடி : படித்தான்" என்ற சொல் ஒரு பகுத்தியைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. இது தமிழ் மொழியில் பயன்படுகின்ற ஒரு கால சொற்களில் ஒன்றும் ஆகும். "படித்தான்" என்பது முன்னாக வரும் காலத்தில் நடக்கின்ற ஒரு நிகழ்வை முன்னேற்றுகின்றது.
இலக்கணம் என்பது ஒரு மொழியின் செயல்பாட்டின் விதிகள் மற்றும் வினாக்களை குறிப்பிடுகின்றது. தமிழ் மொழியில் இலக்கணம் பல உருப்படிகளைக் குறிப்பிடுகின்றது, பொதுவாக பாடப் பயிற்சி காலத்தில் நாம் கற்புக்குறிப்பாக பயன்படுத்துகின்ற மூன்று வகையான வினாக்கள் உள்ளன:
வடிவமைப்பு அல்லது வடிவமைப்பின்போது பயன்படுத்தப்படும் வினாக்கள், பெயர்ச்சி, கடைசி முதலியவற்றை உள்ளடக்குகின்றன.
பயன் அல்ல
ந. தெய்வ சுந்தரம் : ''படித்தான்'' என்ற தமிழ்ச்சொல்லைப் பிரித்து இலக்கணக் குறிப்பைத் தரவும்.
சேட்ஜிபிடி : படித்தான் என்பது தமிழ் மொழியில் பயன்படுகின்ற ஒரு கால சொல் ஆகும். இது பழைய தமிழ் மொழியின் மாணவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொற்களில் ஒன்றும் ஆகும்.
இலக்கணம் பற்றிய மேலும் தகவல்களைத் தரவேன். தமிழ் மொழியின் இலக்கணம் மூன்று வகையாக வேறுபாடுகளின் தொடர்பில் உள்ளது. அவை,
வடிவமைப்பு வினாக்கள்
பயன் வினாக்கள்
பகுத்தியின் காலங்கள்
படித்தான் என்ற சொல் முன்னாக வரும் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிடுகின்றது. இது ஒரு வடிவமைப்பு வினாக்கம் ஆகும். இது "படி" என்பது "படிக்க" என்று மாற்றப்பட்டது மற்றும் "ஆன்" என்று இணைந்து குறிப்பிடப்பட்டது. இது ஒரு காலத்தில் நடந்த நிகழ்வுக்கு செயல்பட்ட ம
ந. தெய்வ சுந்தரம் : Could you please segment the word "beautifully" into various segments and tell me its Parts-of-speech?
சேட் ஜிபிடி : Sure! The word "beautifully" can be segmented into "beau-ti-ful-ly".
The Parts-of-speech of "beautifully" are:
Adverb - "beautifully" is an adverb that describes how an action is performed. In this case, it describes how something is done in a beautiful manner.
Adjective - "beautiful" is an adjective that describes a noun or pronoun. In this case, "beautiful" is part of the word "beautifully" and describes how something is done.
Note: "beau" and "ti" are not separate parts of speech in English language.

செய்யறிவுத்திறன் மென்பொருள்களும் தமிழ்மொழியியல் ஆய்வும்

 செய்யறிவுத்திறன் மென்பொருள்களும் தமிழ்மொழியியல் ஆய்வும் . . . -----------------------------------------------------------------------------------------------------------------

செய்யறிவுத் திறன்கொண்ட ( இந்தத் தொடரை நண்பர் சுந்தர் இலட்சுமணன் அவர்களிடமிருந்து பெற்றேன்) சேட்ஜிபிடி தனது மொழிச்செயல்பாட்டுக்கு நிகழ்தகவுப் புள்ளியியலைமட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளதா அல்லது மொழியியல் ஆய்வையும் உட்படுத்திச் செயல்படுகிறதா என்ற ஒரு ஐயத்தை சேட்ஜிபிடி-யிடமே கேட்டேன்.
அது அளித்த பதிலின்படி மொழியியல் அறிவையும் உட்படுத்தித்தான் அது செயல்படுகிறது என்று தெரியவருகிறது.
ந. தெய்வ சுந்தரம்
------------------------------------------------------------------------
Whether ChatGPT Language modelling is purely depending on Probabilistic statistics or it uses the linguistic knowledge wherever it is necessary?
சேட்ஜிபிடி-யின் பதில்
--------------------------------------------------------------------------
ChatGPT's language modelling is a combination of probabilistic statistics and linguistic knowledge.
At its core, ChatGPT is based on a neural network architecture that has been trained on massive amounts of text data. During training, the model is exposed to patterns and structures within language and learns to predict the most likely word to come next given a sequence of previous words. This approach is known as probabilistic language modelling and is based on the statistical properties of language.
However, the model's ability to make accurate predictions also relies on its ability to understand the underlying linguistic structure of language. The neural network architecture that underlies ChatGPT is designed to capture and model syntactic, semantic, and pragmatic information in language. This allows the model to go beyond simple statistical patterns and make more sophisticated predictions based on its understanding of the meaning and context of the text.
So, while probabilistic statistics play a central role in ChatGPT's language modelling, the model also relies on its knowledge of linguistic structures and patterns to make accurate predictions.
--------------------------------------------------------------------
செய்யறிவுத்திறன்பற்றி நேற்று நான் முகநூலில் இட்ட பதிவுபற்றி. அந்த ஆய்வில் ஈடுபட்டுவரும் எனது நண்பரும் கணினியியல் அறிஞருமான திரு. சுந்தர் இலட்சுமணன் அவர்களின் கருத்துக்காக மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். தவறாக நான் ஏதாவது புரிந்திருக்கிறேனா என்பதை அவர்மூலம் தெரிந்துகொள்ள விரும்பினேன். என்னுடைய எதிர்பார்ப்பு வீணாகவில்லை. தனது தெளிவான பதிலை இட்டிருந்தார். அவருக்கு எனது நன்றி.
அவர் தன் பதிவில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருந்தார்:
''மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் , ஐயா! எனினும் மொழியியல் அடிப்படையிலான ஆய்வு அறவே தேவைப்படாது என்று நான் நினைக்கவில்லை. சில இடங்களில் புள்ளியியல்வழி மாதிரிகளை மேம்படுத்த உதவுமென்றே தோன்றுகிறது. மொழியியல் ஆய்வுகளும் இந்தச் செய்யறிவு மாதிரிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்''.
நன்றி நண்பரே. தாங்கள் கூறியிருக்கிறமாதிரி, ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மொழியியல் அடிப்படையிலான ஆய்வுகள் நிறைய நடைபெற்றுள்ளதால், அவற்றையும் பயன்படுத்தித்தான் கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் செய்யறிவு மென்பொருள்களை உருவாக்கியுள்ளார்கள். எனவே ஆங்கிலம் தொடர்பான பல வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் அவற்றால் சரியான பதில்களை அளிக்கமுடிகிறது.
ஆனால் தமிழ்மொழிக்கு அதுபோன்ற மொழியியல் ஆய்வுகள் - குறிப்பாக, கணினிமொழியியல் நோக்கிலான ஆய்வுகள் - இல்லாததால், தமிழ்மொழி தொடர்பான வினாக்களுக்குப் பல இடங்களில் அவை தவறு செய்கின்றன. எனவே இது அவற்றின் தவறு என்று கூறுவதைவிட, தமிழ் மொழியியல் ஆய்வின் பற்றாக்குறையே என்று கூறலாம். ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்புக்களில் அதனால்தான் நிறைவு இல்லை என்று கூறலாம்.
எனவே, தமிழுக்குத் தேவையான அனைத்தையும் கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களே கொடுத்துவிடும்; எனவே மொழியியல் நோக்கிலான தமிழ்மொழி ஆய்வு தேவையில்லை என்று கருதுவது மிகத் தவறானது என்பதைத் தமிழுலகம் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் தமிழ்மொழியியல் ஆய்வுக்கும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களின் பயன்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

மொழி வடிவ மாதிரி ( Language Modelling) - மூளையும் செயற்கை அறிவுத்திறனும் ( Human brain and Artificial Intelligence)

மொழி வடிவ மாதிரி ( Language Modelling) - மூளையும் செயற்கை அறிவுத்திறனும் ( Human brain and Artificial Intelligence)

--------------------------------------------------------------------------------------------------------------------------

உலகில் கணினித் துறையில் இன்று வியக்கத்தக்க மாபெரும் சாதனைகளைச் செயற்கை அறிவுத்திறனை அடிப்படையாகக்கொண்ட மென்பொருள்கள் (Artificial Intelligence oriented software) நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் ஆய்வு, பொருளாதார உற்பத்தி, வணிகம், அரசு நிர்வாகம் என்று பல்வேறு துறைகளில் செயற்கை அறிவுத் திறனின் பயன்பாடு பெருகிவருகிறது.

 

மனித உழைப்பைச் சாராமலும் வேகமாகவும் ஒரு பணியைச் செயற்கை அறிவுத்திறன் மென்பொருள் செய்துமுடிக்கிறது என்றால், உறுதியாக எவரும் அந்த மென்பொருளைப் பயன்படுத்தவே விரும்புவார்கள். இதில் தவறும் ஒன்றும் இல்லை!

 

குறிப்பாக, லாப நோக்கையே அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டுப் பெரும் நிறுவனங்கள் - உற்பத்தி, வணிகம் இரண்டிலும் - இதற்கே முக்கியத்துவம் அளிக்கும்.

 

மொழிசார்ந்த பணிகளிலும் (language dependent tasks) இன்று செயற்கை அறிவுத்திறன் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இத்துறையில் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றன.

 

இதற்கு முக்கியக் காரணம் . . . நாம் எந்த ஒரு துறைதொடர்பான வினாவை - ஐயத்தை- எழுப்பினாலும் கணினிமென்பொருள் தேவையான விடையை - விளக்கத்தைத் தரவேண்டும். அதற்கு முதல் தேவை . . . நாம் முன்வைக்கிற வினா அல்லது ஐயத்தை நமது மொழிவாயிலாகத்தான் வெளிப்படுத்துகிறோம். அதைக் கணினி புரிந்துகொள்ளவேண்டும். கணினியும் அதற்கான விடையை அல்லது விளக்கத்தை மொழிவாயிலாகத்தான் வெளிப்படுத்துகிறது. அதற்குக் கணினிக்கு மொழித் திறன் (Language Capacity) வேண்டும்.

 

அதாவது . . . மொழித்தொடர்களின் பொருளை - பொருண்மையை- கணினி பொருள் மயக்கமில்லாமல் ( meaning ambiguity) புரிந்துகொள்ளவேண்டும். நாம் முன்வைக்கிற விரும்புகிற கருத்தை நமது மொழியில் புதைத்துத்தான் ( encoding) வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு நாம் புதைத்து அனுப்புகிற மொழித் தொடர்களிலிருந்து கணினிமென்பொருளானது புதைக்கப்பட்டுள்ள பொருண்மையை - பொருளை- மீட்டெடுக்கவேண்டும் ( decoding).

 

இவ்வாறு குறிப்பிட்ட ஒரு பொருண்மையை மொழியில் புதைத்து வெளிப்படுத்தவும், மீண்டும் அந்தப் பொருண்மையை மொழியிலிருந்து மீட்டெடுக்கவும் நமது மூளையில் உள்ள மொழி அறிவு - பேச்சொலி, எழுத்து, சொல், தொடர் பற்றிய அறிவு - உதவுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் இதுதொடர்பான தெளிவான விதிகள் - இலக்கணம் - நீடிப்பதாலும் அந்த அறிவை நமது மூளையின் மொழிப்புலன் பெற்றிருப்பதாலும் இது சாத்தியமாகிறது.

 

ஒவ்வொரு மனிதமொழியும் தனக்கென்று ஒரு கட்டமைப்பை - இலக்கணத்தை- பெற்றிருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. இந்தக் கட்டமைப்புபற்றிய அறிவை மொழியாய்வு, இலக்கண ஆய்வு நமக்குத் தருகிறது. இந்தக் கட்டமைப்பே மொழி வடிவ மாதிரி ( Language Modelling) என்று அழைக்கப்படுகிறது.

 

மனித மூளையில் நிலவுகிற இந்த மொழி வடிவ மாதிரியை ஆராய்ந்து, உணர்ந்து, அதைக் கணினியின் மின்னணு மூளைக்குத் தகுந்தவகையில் எவ்வாறு மாற்றியமைப்பது என்பதுபற்றிய அறிவியல்துறையே கணினிமொழியியல் துறையாகும். இந்தவகை ஆய்வு கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக நடைபெற்று வருகிறது. இதில் மிக முக்கியமானது என்றால் மொழி அமைப்புக்கும் (Grammar / Structure) பொருண்மைக்கும் (Meaning) இடையில் உள்ள உறவை அறிவதே ஆகும்.

 

மேற்கண்ட ஆய்வில் தற்போது ஒரு புதிய வளர்ச்சி- மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படை இன்றைய கணினி அறிவியலின் வளர்ச்சியே ஆகும். கோடியே கோடி மொழித்தரவுகளை விநாடியில் பெற்றுத்தரக் கூடிய இணையமும் அவற்றை ஆய்வுசெய்யக்கூடிய கணினித்திறனும் வியக்கத்தக்க அளவில் வளர்ந்து உள்ளன.

 

இதன் பயனாகவே இன்று நிகழ்தகவுப் புள்ளியியல் ( Probabilistic Statistics) அறிவை அடிப்படையாகக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட சொல்லை நாம் முன்வைத்தால் அதற்கு முன்னர் எந்தச் சொல் அதிகமாக வரும், அதற்குப் பின்னர் எந்தச் சொல் அதிகமாக வரும் என்பதை ஒரு சில மில்லி விநாடிகளில் கணினியால் இன்று கூற முடியும். இதற்கு நாம் மேலே கூறியுள்ள மொழிக் கட்டமைப்பு - இலக்கணம் - தேவை இல்லை.

 

ஏனென்றால் மொழி அமைப்பு - பொருண்மை என்ற அடிப்படையில் கணினி செயல்பட வேண்டியதில்லை. இந்த வழிமுறையில் எதிர்பார்க்கிற விடை 100 விழுக்காடு சரியாக இல்லை என்றாலும் கவலை இல்லை; 80 விழுக்காடு சரியாகக் கிடைத்தாலே போதும்; நாம் அதில் உள்ள குறைகளைக் களைந்துகொள்ளலாம்.

 

ஆக, ஒருவர் ஒரு குறிப்பிட்ட மொழியில் தனது தேவையை முன்வைக்கும்போது, அந்த மொழிபற்றிய இலக்கண, சொற்களஞ்சிய அறிவு இல்லாமலேயே . . . அல்லது அந்த அறிவையெல்லாம் புள்ளியியல் அடிப்படையிலான ஒரு அறிவாக மாற்றி . . . நிகழ்தகவுப் புள்ளியியலை அடிப்படையாகக்கொண்டே நமக்குத் தேவையான விடையை- விளக்கத்தை - கணினியால் அளிக்கமுடியும்.

 

குறிப்பாக, ஒரு 100 பக்கத் தமிழ்க் கட்டுரையை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கவேண்டும் என்றால், தமிழ் - ஜப்பானிய மொழி அறிவு தேவை இல்லை. கூகுளில் தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறது. ஆங்கில - ஜப்பானிய மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறது. எனவே, தமிழ்ப் பக்கங்களை முதலில் கூகுளின் உதவியுடன் ஆங்கிலத்தில் விநாடியில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். அந்த மொழிபெயர்ப்பு 70 விழுக்காடு சரியாக இருந்தாலும் கவலை இல்லை; அதை ஆங்கிலம் தெரிந்த ஒருவர், தேவையான 30 விழுக்காட்டுச் சிக்கல்களை நீக்கிவிடலாம். அதில் கிடைத்த ஆங்கில மொழிபெயர்ப்பைக் கூகுளின் ஆங்கில - ஜப்பான் மொழிபெயர்ப்பு மென்பொருளின் உதவியுடன் விநாடியில் மொழிபெயர்த்துவிடலாம். அந்த ஜப்பானிய மொழிபெயர்ப்பின் காணப்படும் தவறுகளையும் ஒரு ஜப்பானியரைக்கொண்டு திருத்திக்கொள்ளலாம்.

 

அதாவது , தமிழ் , ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய மொழிகளின் சொற்களஞ்சியம், இலக்கணம் ஆகியவைபற்றிய அறிவை அடிப்படையாகக் கொள்ளாமலேயே . . . தமிழ் - ஜப்பானிய மொழிபெயர்ப்பைப் பெறமுடியும். இதுவே இன்று கணினியின் மொழிச்செயல்பாட்டின் அடிப்படை ஆகும். அதாவது, ஒரு கட்டுரையில் அமைகிற எழுத்து, சொல், தொடர் ஆகியவற்றின் இலக்கண அமைப்பையும் பொருண்மை வெளிப்பாட்டையும் பற்றிய மொழி அறிவு இல்லாமலேயே . . . அவற்றின் நிகழ்தகவுப் புள்ளியியல் அடிப்படையிலான வருகையை அடிப்படையாக வைத்தே . . . நமது மனிதமூளை செய்கிற மொழிச் செயல்பாட்டை மேற்கொள்ளமுடியும்.

 

எனவே, எதிர்காலத்தில் ஒரு மாணவர் எந்த ஒரு மொழியிலும் - மொழிக் கல்வி இல்லாமலேயே - தனது மொழிச்செயல்பாட்டை மேற்கொள்ளமுடியும். ஒரு கணினியின் முன் உட்கார்ந்துகொண்டே - தனது கருத்தைப் பல மொழிகளில் வெளிப்படுத்தமுடியும். அல்லது 70 விழுக்காடு கணினி சரியாகச் செய்கிறது என்றால், எந்த மீதி 30 விழுக்காட்டு அறிவைக் கணினியால் பெறமுடியவில்லையோ, அதைமட்டும் அவர் கற்றுக்கொண்டால் போதும். கணினிக்குக் கொடுக்கப்படுகிற உரையைச் சற்று முன்பதிப்பு (pre-edit ) செய்யவேண்டியது இருக்கும்.

 

அதாவது, நமது மொழிநடையைக் கணினிக்கு ஏற்றவகையில் சற்று மாற்றவேண்டியிருக்கும். அதுபோலக் கணினி அளிக்கிற உரையைச் சற்றுப் பின்பதிப்பு (post edit) செய்யவேண்டியிருக்கும். இந்த இரண்டுமே எதிர்காலத்தில் நமது மொழிநடையானது கணினியைச் சார்ந்து இருக்கலாம். கணினியானது நமது மொழிநடையைத் தீர்மானிக்கலாம்.

இனி, ஒரு மொழியின் அமைப்பை இலக்கணம், மொழியியல் அடிப்படையில் கற்றுக்கொள்ளத் தேவை இருக்காது; மாறாக, நிகழ்தகவுப் புள்ளியியல், கணினியியல் இரண்டிலும் தேர்ச்சிபெற்றாலே போதும்.

 

இங்கு, மீண்டும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டியது . . நமது மனித மூளையில் உள்ள இயற்கைமொழி அமைப்புபற்றிய ஆய்வுக்குத் தேவை இருக்காது. மாறாக, கோடியே கோடி மொழித்தரவுகளை முறையாகக் கணினிக்கு அளித்து, நிகழ்தகவுப் புள்ளியியல் அடிப்படையிலான மாதிரி வடிவங்களை உருவாக்கிக் கணினிக்கு அளித்தால் போதும் என்ற ஒரு 'வளர்ச்சிநிலை' ஏற்படும்.

 

நமது மூளையில் நீடிக்கிற நமது மொழி அமைப்பு (Language Modelling) வடிவம் வேறு; கணினிக்கு அளிக்கப்படுகிற மொழி அமைப்பு வடிவம் வேறு.

 

இன்று மொழித்தொழில்நுட்பத்துறையில் இரண்டுவகையான ஆய்வுமுறைகள் - கணினிமொழியியல் (Computational Linguistics) ஆய்வுமுறை , நிகழ்தகவு ஆய்வுமுறை (Probabilistic Statistics) - நிலவுகின்றன. முதல்வகை ஆய்வுமுறைக்கு ஒரு மொழியின் இலக்கண அமைப்புபற்றிய அறிவு தேவை; இரண்டாவது வகையான ஆய்வுமுறைக்கு நிகழ்தகவுப் புள்ளியியல், தரவுத்தளம் அமைப்பு, கணினியின் செயல்திறன் ஆகியவைபற்றிய அறிவு தேவை.

 

கணினிமொழியியல் அடிப்படையிலான ஆய்வுமுறையிலும் புள்ளியியல் பயன்படுகிறது. ஆனால் அதன் நோக்கமும் பயன்பாடும் வேறு.

இந்தச் செயற்கை அறிவுத்திறன் வடிவமைப்பிலும் பல வேறுபட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன ( Supervised / Unsupervised Machine Learning, Neural Network, Deep Learning etc... ). பொதுவாக, இவை எல்லாவற்றிற்கும் மிக அடிப்படையானவை மிகப் பெருந்தரவுத்தளம் (Mega Corpus ), நிகழ்தகவுப் புள்ளியியல் ( Probabilistic Statistics ) , கணினியின் செயல்பாட்டுத்திறன்(Computing Power) ஆகியவை ஆகும்.

மனிதமூளை மொழி கற்றல், கற்பித்தல்பற்றி வேறுபட்ட பல கோட்பாடுகள் மொழியியலில் நிலவுகின்றன. ஸ்கின்னர் கருத்து, சாம்ஸ்கி கருத்து என்று பல கருத்துக்கள் நீடிக்கின்றன. ஆனால் இங்கு நாம் பேசுவது . . . கணினியானது மனிதமொழியைக் கற்றுக்கொள்வது ஆகும். மனிதனுக்கும் கணினிக்கும் இடையிலான கருத்துப்பரிமாற்றத்திற்குக் கணினிக்கு மனிதமொழி இலக்கண அறிவு தேவை இல்லை! மொழி இலக்கணம், சொற்களஞ்சியம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்காமலேயே கணினிக்குப் பெருந்தரவு, புள்ளியியல் அடிப்படையில் மொழியைக் கற்றுக்கொடுக்கமுடியும் என்ற ஒரு கோட்பாடு. இவ்வாறு கற்றுக்கொடுக்கமுடியும் என்றால் எதிர்காலத்தில் ஒருவர் கணினிப்பயன்பாட்டில் தனது தாய்மொழி தவிர வேறு எந்தமொழியையும் கற்றுக்கொள்ளவேண்டாம்! ஆனால் மனிதர்களுக்கிடையிலான கருத்துப்பரிமாற்றத்திற்கு மொழி அறிவு தேவைப்படும். ஆனால் ஒருவர் மற்றொருவருடன் கணினிவழி, கணினி உதவியுடன் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளலாமே! கணினி ஒரு மொழிபெயர்ப்பாளர்போன்று செயல்படலாமே!

 


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India