திங்கள், 26 டிசம்பர், 2022

மொழிக்குடும்பம்பற்றிய ஆய்வானது எவ்வாறு இன ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தப்படுகிறது?

 

மொழிக்குடும்பம்பற்றிய ஆய்வானது எவ்வாறு இன ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தப்படுகிறது?

---------------------------------------------------------------------

நண்பர்கள் சிலர் மொழிக்குடும்ப ஆய்வை ஆளும் வர்க்கங்கள் இன ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தமுடியுமா என்ற ஒரு ஐயத்தை எழுப்பியுள்ளார்கள். அதற்கான ஒரு சுருக்கமான பதிவு இது ....

பல்வேறு இனக்குழுக்கள் (tribal communities) வேறுபட்ட பல மொழிகளைப் பேசினார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்த வேறுபட்ட இனக்குழுக்களை races என்று அழைப்பது தவறு என்பதே என் கருத்து.

அருகருகே இருந்த இனக்குழுக்களின் மொழிகளில் ஒற்றுமைகளும் இருக்கும். அவ்வாறு இருந்த சில இனக்குழுக்கள் பின்னர் வெவ்வேறு நிலப் பரப்புகளுக்குச் சென்றிருக்கலாம். இந்த இனக்குழுக்களின் மொழிகளில் ஒற்றுமை காணப்படுவதால் அவற்றை ஆராயலாம். அதற்கு ஒப்பீட்டு மொழியியல் துறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தவறு இல்லை. மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்ந்து, ஒற்றுமைகள் மிகுதியாகக் காணப்பட்டால், அவற்றை ஆய்வுநோக்கில் ஒரு மொழிக்குடும்பம் என்று அழைக்கலாம்.

''குடும்பம்'' என்ற சொல்லாட்சி இங்குச் சரியில்லை. இருப்பினும் ஒரு கலைச்சொல்லாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இதை ''விரிவுபடுத்தி'' இந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவர்களை ஒரே ''இனமாக'' (Race) கருதுவதுதான் பிழை என்று நான் கருதுகிறேன்.

Race என்பதே நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஆதிக்கக் கூட்டங்கள் உருவாக்கிய ஒரு ''கற்பனை'' ! சமுதாயத்தின் வரலாற்றில் இனக்குழுக்கள் (இரத்த உறவுகளின் அடிப்படையில் நிலவியவை) பின்னர் நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்ட சமுதாயங்களாக மாறின. நிலப்பரப்பு, வாழ்க்கைமுறைகள், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இனக்குழுக்கள் வெவ்வேறு ''இனங்களாக'' (nationalities) அமைந்தன.

அவ்வாறு மாறியமைந்த இனங்கள் உற்பத்தித்துறையின் வளர்ச்சியையொட்டி, நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்ட ''தேசங்களாக (nations)'' மாறியமைந்தன.

இந்தக் கட்டத்தில்தான் ''வளர்ச்சியடைந்த இனங்கள் அல்லது தேசங்கள்'' பிற இனங்களை அல்லது ''தேசங்களை'' அடிமைப்படுத்தத் தொடங்கின. இதற்குப் பொருளாதாரக் காரணிகளே அடிப்படை! ''வலிமைவாய்ந்த'' இனங்கள் அல்லது தேசங்கள் பிற இனங்களை அல்லது தேசங்களைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்து, நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்ட ''நாடு'' என்ற பெயரில் நீடிக்கின்றன.

ஆதிக்க இனம், தன்னால் அடிமைப்படுத்தப்பட்ட இனங்கள் இன அடிப்படையில் தங்கள் ''தேசிய'' உரிமைகளைப் பெறவிடாமல் தடுப்பதற்காகவே மொழிக்குடும்ப ஆய்வுகளைப் பயன்படுத்திக்கொண்டு, உண்மையான இனங்களின் நீடிப்பை மறுக்கிறது; வரலாற்றில் இல்லாத Race என்ற கருத்தைத் திணிக்கிறது.

இதுவே சமுதாய வரலாற்றின் அடிப்படையிலான எனது கருத்து. இதனால் ஆளும் வர்க்கங்களுக்கு என்ன பயன்? பாதிக்கப்படுகிற இனங்களுக்கு என்ன நட்டம் என்ற ஐயம் எழலாம்.

அடக்கப்படும், ஒடுக்கப்படும் இனங்கள் தங்கள் இனங்களைப்பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல், இல்லாத அல்லது கற்பனையான ''இன அடிப்படையை'' தங்களது மூளையில் இருத்திக்கொண்டு, போகாத ஊருக்கு வழியைத் தேடுகிற இனங்களாக ஆக்கப்படுகிறது. இது ஆளும் வர்க்கத்திற்கு நல்லதுதானே!

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India