திங்கள், 26 டிசம்பர், 2022

''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!

 

''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!

-----------------------------------------------------------------------------------------------------------------------

புராணத்தில் நீடிக்கிற நரகாசுரன் உண்மையில் இருந்திருந்தால் . . . அவரைக் கொன்ற ''கடவுளும்'' இருந்திருக்கவேண்டும்! காப்பியங்களில் நீடிக்கிற ''இராவணன்'' இருந்திருந்தால் ''இராமனும்'' இருந்திருக்கவேண்டும்! ''அசுரர்கள்'' இருந்திருந்தால்''தேவர்களும்'' இருந்திருக்கவேண்டும்!

ஆனால் அவ்வாறு இருந்ததற்கான எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது! இந்த இரண்டு வகையான புராணப்படைப்புக்களுமே கற்பனைப் படைப்புக்கள்தான்! இரண்டு எதிர்மறையான புராணக் ''கதாநாயகர்கள், வில்லன்கள்" ஆகிய இரண்டு தரப்பினரும் இரண்டு எதிர்மறையான கற்பனை ''தத்துவங்களின்'' - '' உலகக் கண்ணோட்டங்களின்'' - ''வர்க்க நலன்களின்'' எதிரொளிப்புக்கள்தான்!

''இராமனுக்குக்'' கோயில் கட்டுவதும், ''இராமநவமியைக்'' கொண்டாடுவதும் ஆளும் வர்க்கங்களின் திட்டமிட்ட செயல்பாடுகள்தான்! அவர்களது நலன்களைக் காப்பாற்றுகிற ''கருத்துக்களுக்கு'' உண்மை வடிவங்கள் அளித்து, சமுதாயத்தைத் திட்டமிட்டு ஏமாற்றுவதே ஆகும்.

அந்த வகையில்தான் ''நரகாசுரனுக்கான'' வீரவணக்க நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளவேண்டும்! ஆனால் நரகாசுரனை உண்மையான நபராக எடுத்துக்கொண்டால், எதிர்த்தரப்பினர் ''அவரைக் கொன்ற'' கடவுள்களையும் உண்மையான நபராகக்கொண்டு மக்களை ஏமாற்றுவது தொடரும்! ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடும் போராளிகள் இதில் கவனமாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து!

''இராமன் - இராவணன்'' ''தேவர் - அசுரர்'' ''நரகாசுரன் - அவரை அழித்த கடவுள் (?) '' - என்ற எதிர்மறையான கற்பனைப்படைப்புக்கள் . . . வரலாற்றில் வர்க்க வேறுபாடற்ற ஒரு சமுதாயம் இரண்டு எதிர்மறை நலன்களைக்கொண்ட வர்க்கங்களாக மாறியதைச் சுட்டிக்காட்டும் ''நபர்களே '' ஆவர்!

கம்பன் தமிழ்ப் புலவர் என்பதில் ஐயம் இல்லை! அவர் அவருக்குப் பிடித்த வால்மீகி எழுதிய புராணக் காப்பியத்தின் கதையைக்கொண்டு, ''கம்பராமாயணம்'' எழுதி, தமிழ்ப்படைப்புலகத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்தார். இதை நான் மறுக்கவில்லை! அவரது படைப்பு ஒரு மிகச் சிறந்த ''தமிழ்ப் படைப்பு . . . படைப்பிலக்கியம்''!

வால்மீகியின் ''புராண இலக்கியப் படைப்பில்'' வருகிற நிகழ்ச்சிகள், நபர்கள் எல்லாம் கற்பனைதான்! இன்று ரஜினிபோன்ற நடிகர்கள் நடித்துவெளிவருகிற திரைப்படங்கள் எல்லாவற்றையும் . . . அவற்றில் வருகிற நாயகர்கள், வில்லன்கள், நிகழ்வுகள் எல்லாவற்றையும் நமக்குப் பிந்தைய சமுதாயம் அப்படியே ''உண்மை'' . . . ''உண்மையான வரலாறு'' என்று கொள்வதை நாம் ஏற்றுக்கொள்வோமா? ஒரு படைப்பாளி தான் வாழ்கிற சமுதாயத்தின் நிகழ்வுகள், நபர்கள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றிலிருந்து தனது ''கதையை'' ''நபர்களைப்'' படைத்து, தனது படைப்பை வெளிவிடுகிறான்! அவ்வளவுதான்! தனது உலகக் கண்ணோட்டங்களுக்குத் தகுந்தவாறு தனது கதைகளையும் நபர்களையும் முன்வைக்கிறான். அவ்வளவுதான்!

அவ்வாறு இல்லாமல், தான் வாழ்ந்த சமுதாயத்தைப் ''படைப்பிலக்கியமாக '' மாற்றாமல் , அப்படியே எழுதினால் அது உண்மை வரலாறு ஆகிவிடும்! படைப்பிலக்கியங்கள் வரலாறு இல்லை! ஆனால், வரலாற்றில் உள்ள சில நிகழ்ச்சிகளின், நபர்களின் செல்வாக்கு அவற்றில் பதிந்திருக்கும்! இராமாயணம், மகாபாரதம், ஏன் சிலப்பதிகாரம், மணிமேகலை கூட படைப்பாளிகளின் உருவாக்கங்களே! அவையே வரலாறு இல்லை! ஆனால் அவற்றில் படைப்பாளிகளின் சமுதாய நிகழ்வுகளின் பாதிப்புக்கள் இருக்கும்! அதை அப்படியே உண்மை வரலாறாக கொள்ளக்கூடாது!

இனக்குழுக்களை அழித்து, அரசுகள் தோன்றிய காலத்து நிகழ்வுகளை இராமாயணம் நினைவூட்டுகிறது! இரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாயமானது ''மண்ணை'' அடிப்படையாகக்கொண்ட சமுதாயமாக மாறியதைப் ''பாரதம்'' நினைவூட்டுகிறது! ''இரத்த உறவுகளைக் கொல்வது தவறு, கொல்லமாட்டேன்'' என்று அர்ச்சுணன் தயங்கியபோது, ''பழைய சமுதாயம்தான் இரத்த உறவை அடிப்படையாகக்கொண்டது; அதில்தான் இரத்த உறவுகளைக் கொல்வது பாவம்; இனிவரும் சமுதாயம் மண்ணை அடிப்படையாகக்கொண்டது; எனவே மண்ணுக்காக இரத்த உறவுகளைக் கொல்லலாம்; அதுவே ஷத்திரியனின் கடமை; கடைமையைத் தான் நீ செய்யவேண்டும்'' என்று ''கிருஷ்ணபகவான்'' அர்ச்சுணனுக்குப் ''போதிக்கிறார்''! இவ்வாறு சமுதாய மாற்றங்களின் சில நிகழ்வுகள், மரபுகள், கண்ணோட்டங்கள் படைப்பிலக்கியங்களில் எதிரொளிக்கலாம். ஆனால் அதற்காக இந்த இலக்கியங்களையே உண்மையான வரலாறாக கொள்ளக்கூடாது!

எனவே இராமாயணம் ஒரு சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பு என்ற அடிப்படையில் கம்பர் ஒரு மிகச் சிறந்த தமிழ் அறிஞர்தான்! அதில் ஐயமே இல்லை! ஆனால் அவரது இலக்கியப் படைப்பானது ஒரு படைப்புத்தான் என்பதில் ஐயம் இல்லை! அவர் தமிழ் அறிஞர் என்பதால், அவருடைய இலக்கியப் படைப்பானது உண்மையான வரலாறாக ஆகிவிடமுடியாது!

வால்மீகியின் படைப்பை அப்படியே மொழிபெயர்க்காமல் . . . அந்தக் கதையை தனக்கே உரிய வகையில் உள்வாங்கி. . . தமிழ் மரபுக்கேற்ப . . . ஒரு புதிய படைப்பைக் கம்பர் உருவாக்கியுள்ளது அவரது ''இலக்கியப் படைப்புத் திறனை'' வெளிக்காட்டி நிற்கிறது! மேலும் தனது படைப்பில் அவர் தமிழ்மொழியை ஒரு மிகச் சிறந்த இலக்கிய நடையில் வெளிப்படுத்துவது அவரது மொழிப் புலமையைக் காட்டிநிற்கிறது! இதுவே அவரது சிறப்புக்கள்! இந்தச் சிறப்புக்களால் அவரது படைப்பிலக்கியம் வரலாறாக மாறிவிடமுடியாது!

----------------------------------------------------------------------------------------------------------------------

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India