புதன், 27 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(11)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (11)
------------------------------------------------------------------------------
முந்தைய உரையில் எழுத்துக் கருத்தாடல்பற்றிச் சில கருத்துகளை முன்வைத்திருந்தேன். எழுத்துக்கருத்தாடலுக்கும் சொற்பொழிவுக் கருத்தாடலுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. சொற்பொழிவுக் கருத்தாடலில் பேசுபவர்முன் கேட்பவர்கள் இருந்தாலும்... பொதுவாக அங்கே வினா- விடைக்கு இடம் இருக்காது. எனவே சொற்பொழிவாளர் ... தனக்குமுன் இருக்கிற கேட்பவர்களுடன் உரையாடுவதுபோன்று... கற்பனைசெய்துகொண்டு... அவர்களுக்கு என்ன என்ன ஐயங்கள் ஏற்படலாம் என்று நினைக்கிறாரோ... அவற்றிற்கெல்லாம் விடைதரும் வகையில் அவர் சொற்பொழிவு அமையவேண்டும். அப்போதுதான் கேட்பவர்கள் ஆர்வத்துடன்... அமைதியாகச் சொற்பொழிவாளர் முன்வைக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துவார்கள். இது மிக முக்கியமானது!

அடுத்து.... ஒரு கட்டுரையை அல்லது நூலை ஒருவர் எழுதும்போது... வாசகர்களுடன் ஒரு கருத்தாடலைத் தன் மனதிற்குள் நடத்துகிறார் என்று பார்த்தோம். அந்தக் கருத்தாடலில்... அவர் வாசகர்கள் இன்னன்ன ஐயங்களை... வினாக்களை... கேட்கலாம் என்று நினைத்து, அவற்றிற்கான விடைகளை அளிக்கிறார். ஆனால் எழுத்தில் அவர் வடிப்பது... வாசகர்களின் வினாக்களை அல்ல.. மாறாக, அவற்றிற்கான விடைகளை மட்டுமே! அதாவது.. தன் மனதில் தானும் வாசகர்களும் நடத்துகிற ஒரு கருத்தாடலில் ஒரு பகுதியை மட்டுமே... வாசகர்களுக்கான விடைகளை மட்டுமே! வினாக்களை எழுத்தில் பதியாமல் விட்டுவிடுவார்! அவற்றை எழுதமாட்டார்! அதாவது... தான் மனதில் நிகழ்த்திய கருத்தாடலின் ஒருபகுதியை ... பனுவலாகத் தருகிறார். அந்தப் பனுவலை... நூலை... படிக்கிற வாசகர் அந்த ஆசிரியர் தன்முன் இருந்து, கருத்தாடல் நிகழ்த்துகிறமாதிரி நினைத்துக்கொண்டு... அதாவது பனுவலை மீண்டும் கருத்தாடலாக விரிவாக்கம் செய்து.. ஆசிரியர் கூறவந்த கருத்துகளைப் புரிந்துகொள்ள முயல்கிறார்!
நூலாசிரியர் கருத்தாடலைப் பனுவலாகக் குறைக்கிறார் (Reduction process)! வாசகர் அந்தப் பனுவலை மீண்டும் கருத்தாடலாக விரிக்கிறார் ( Expansion process)! எந்த அளவுக்கு அவர் ஆசிரியர் தன் மனதில் நிகழ்த்திய கருத்தாடலுக்கு நெருங்கிய கருத்தாடலை மீட்டுருவாக்கம்( Reconstruction) செய்யமுடிகிறதோ... அந்த அளவுக்கு அவரால் நூலாசிரியர் தனது நூலில் கூறவந்த கருத்துகளைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்! இங்கு ஒரு முக்கியமான செய்தி.... நூலாசிரியர் தனது வாசகர்களுக்கு ஒரு நூலை எழுதும்போது.... எழுதுகிற செய்திகளைப் புரிந்துகொள்ள... ஒரு குறைந்தபட்சப் பின்புல அறிவை எதிர்பார்த்துத்தான் எழுதுகிறார். அந்தப் பின்புல அறிவு வாசகர்களுக்கு இல்லையென்றால்... அந்த நூலை அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் நூல் எழுதும்போது... அந்த மாணவர்களுக்கு ... அந்த வயதில் .. முந்தைய வகுப்புகளின் படிப்புகளின் அடிப்படையில்... என்ன பின்புல அறிவு இருக்கும் என்பதை மனதில் இருத்திக்கொண்டுதான் நூல் எழுதவேண்டும்! அதுபோல் பத்தாம் வகுப்புமாணவர்களுக்கான நூல்கள் அவர்களின் பின்புல அறிவை அடிப்படையாகக்கொண்டுதான் அமையவேண்டும.
இங்கு மற்றொரு செய்தியையும் ... ஆசிரியப் பணியில் இருந்தவன் என்ற முறையில்... முன்வைக்க விரும்புகிறேன். பாடப்புத்தகங்களை.... அவை எந்தத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும்... வகுப்பில் அதன் அடிப்படையில் பாடம் நடத்தும்போது... அந்தப் புத்தகங்களை அப்படியே வாசித்துக்கொண்டு சென்றால்... எவ்விதப் பயனும் இல்லை. மாணவர்களுக்கு வாசிக்கத் தெரியாதா என்ன? அங்கே ஆசிரியரின் பணி.... அந்நூலில் கூறப்பட்டுள்ளவற்றைப் புரிந்துகொள்ள... மாணவர்களுக்கு இருக்கவேண்டிய பின்புல அறிவை வெளிக்கொண்டுவந்து , ஒருவேளை மாணவர்களிடம் அந்தப் பின்புல அறிவில் ஏதாவது இடைவெளி இருந்தால் ('' சில பின்புல அறிவை மாணவர்கள் மறந்திருந்தாலோ அல்லது முன்கொண்டுவர முடியவில்லையென்றாலோ'') ஆசிரியர் இடையிட்டு உதவிசெய்யவேண்டும. இதுதான் கற்பித்தல்! இதை வெறும் ''வாசித்தலாக'' ஆசிரியர் நினைத்துவிடக்கூடாது. நூலாசிரியரின் பனுவலை... அவர் தன் மனதில் நடத்தியிருந்த கருத்தாடலாக மாற்றி... மாணவர்களுக்குக் கொடுப்பதுதான் ஆசிரியரின் பணி!
மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பஞ்சதந்திரக் கதையை ஆசிரியர் நடத்துவதற்கும் ... ஒரு நாவலை முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு ஆசிரியர் நடத்துவதற்கும்... வேறுபாடு உண்டு. அதுபோன்று... திருக்குறளை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்துவதற்கும்... முதுகலை மாணவர்களுக்கு நடத்துவதற்கும் வேறுபாடு உண்டு! இருக்கவேண்டும்!
பழந்தமிழ் இலக்கணங்களுக்கும் இலக்கியங்களுக்கும் உரையாசிரியர்கள் செய்துள்ள பணிகள் எல்லாம் இதுதான்! மூல ஆசிரியர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள... மூல ஆசிரியர்களின் பனுவலை நாம் கருத்தாடலாக மாற்றிப் புரிந்துகொள்ள... தேவையான உதவிகளை அளிக்கும் மகத்தான பணிகளையே உரையாசிரியர்கள் செய்துள்ளார்கள்!
கட்டுரை இன்றும் நீண்டுவிட்டது. மன்னிக்கவும்! நாளை மீண்டும் தொடர்கிறேன்!

செவ்வாய், 26 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (10)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (10)
-----------------------------------------------------------------------------
முந்தைய உரையில் ... பேச்சுக் கருத்தடால்பற்றிப் பார்த்தோம். எழுத்துக் கருத்தாடல்பற்றிய சில கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன். பேச்சுக் கருத்தாடலைவிட ... எழுத்துக் கருத்தாடலில் ஒருவர் வெற்றிபெறுவது உண்மையில் மிகக் கடினமான ஒரு செயல்! அதற்கு ஒரு மிக முக்கியமான காரணம்... பேச்சுக் கருத்தாடலில் பேசுபவர்முன்.... கண்முன்... கேட்பவர் நிற்கிறார்! அதனால் பேசுபவர் முன்வைக்கிற கருத்துகளில் கேட்பவருக்கு ஐயங்கள் இருந்தால்... பேசுபவரிடம் உடனடியாகக் கேட்டுவிடலாம்! பேசுபவரும் அந்த ஐயங்களை அந்த இடத்திலேயே ... அப்போதே... தீர்க்க முயலலாம்!

ஆனால் ... எழுத்துக்கருத்தாடலில் அதை முன்வைத்தவர் முன்னால் ... அதாவது நூலாசிரியரின் முன்னால்.... அந்த உரையைப் படிப்பவர் இல்லை. நூலாசிரியர் எங்கேயோ... படிப்பவர் எங்கேயோ! காலத்தாலும் இடத்தாலும் இருவரும் பிரிக்கப்பட்டுள்ளனர்! அப்படியென்றால்... படிப்பவரின் ஐயங்களை எவ்வாறு நூலாசிரியர் தீர்க்கமுடியும்? இங்குத்தான் நூலாசிரியரின் திறமை உள்ளது!
எழுத்துக் கருத்தாடலை முன்வைப்பவருக்கு... அதை எழுதும்போது ... தனது எழுத்தைப் படிக்கப் போகிறவர்கள் யார் ... எங்கே இருக்கிறார்கள் ? ... எப்போது படிக்கப் போகிறார்கள் ? என்பதெல்லாம் தெரியாது! ஆனாலும் கண்ணுக்குத் தெரியாத படிப்பவர்களுக்காக அவர் எழுதுகிறார். அவர்கள் தன்முன் இருப்பதாகக் கற்பனைசெய்துகொண்டு... எழுதுகிறார். ஒரு கருத்தை முன்வைக்கும்போது... படிப்பவர் முன்னால் இருந்தால் என்னென்ன ஐயங்கள் ஏற்படலாம் என்பதை எழுதுபவரே உணர்ந்துகொண்டு... அவற்றிற்கான விடைகளை முன்வைக்கிறார்!
இங்கு ஒரு மிக முக்கியமான செய்தி ... படிப்பவர் கேட்கக்கூடிய கேள்விகளை தனது எழுத்தில் பொதுவாகப் பதியமாட்டார். அதற்கு மாறாக, அவற்றிற்கான விடைகளைமட்டும் எழுத்தில் வடிப்பார்! அதற்காக அவர்... சில சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, ''(1) மாணவர்களுக்குத் அன்று தொலைக்காட்சிச் செய்தியைக் கேட்டதும் மிக்க மகிழ்ச்சி! (2)ஏனென்றால், பலத்த மழைபெய்யலாம் என்ற வானிலை அறிவிப்பால், அன்று பள்ளி விடுமுறை என்று அச்செய்தி கூறியது'! .... இங்கு, முதல் வாக்கியத்தைக் கட்டுரையாளர் முன்வைத்தவுடன், அதைப் படிப்பவர்கள் அவர் முன்னால் இருந்தால்.... '' ஏன் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்?'' என்று கேட்கலாம். அதை எதிர்பார்த்த கட்டுரையாளர்... அந்தக் கேள்விக்கு விடையளிக்கிறார். ஆனால் படிப்பவர்கள் கேட்கலாம் என்று கட்டுரையாளர் எதிர்பார்த்த கேள்வியை .. '' ஏன் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்? ''... என்ற கேள்வியை .... எழுத்தில் எழுதவில்லை. அதற்கு மாறாக, அதற்கான விடையைமட்டும் ...'' ஏனென்றால்'' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி, விடையை மட்டும் பதிவு செய்கிறார். இங்கு அவர் '' ஏனென்றால்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கு அடிப்படையே... அந்த இடத்தில் படிப்பவர்கள் அந்தக் கேள்வியை எழுப்புவார்கள் என்று எதிர்பார்த்துத்தான்! அதுபோன்று .. '' பலத்த மழை பெய்தது. ஆகவே அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது'' என்ற தொடர்களில் .. படிப்பவர் ஒருவேளை ''ஏன் அன்று விடுமுறை விடப்பட்டது ?'' என்று கேட்கலாம் என்று எதிர்பார்த்து, கட்டுரையாளர் அதற்கான காரணத்தைக்கூறி, அதற்கு '' ஆகவே '' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இங்கு விடையைமட்டும் அளிக்கிறார்.... படிப்பவர் எழுப்பலாம் என்று அவர் எதிர்பார்த்த கேள்வியை எழுத்தில் பதிவு செய்யவில்லை.
முதல் விடையில் '' ஏனென்றால்'' என்ற சொல் பயன்படுத்தப்படதற்குக் காரணம்.... நடைபெற்ற காரியத்தை... ''மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்'' என்ற காரியத்தைக்கூறி... பின்னர் அதற்கான காரணம் சொல்லப்படுகிறது.
இரண்டாவது விடையில் '' ஆகவே'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதற்குக் காரணம்... காரணத்தை ... '' பலத்த மழை பெய்தது'' என்ற காரணத்தை முதலில் சொல்லி, பின்னர் அதன்காரணமாக நடைபெற்ற செயல் ... '' பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது '' என்ற செயல் கூறப்படுகிறது.
இங்கு நாம் கவனிக்கவேண்டியது.... எழுதுபவர் ஒவ்வொரு வாக்கியத்தை எழுதும்போதும்... தனக்குள் ஒரு உரையாடலை நடத்திக்கொள்கிறார். தனக்கு எதிரே ஒருவரோ பலரோ இருந்து.... தனது கருத்துகளைக் கேட்கிறார்கள் , ஐயங்களைக் கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டுதான் .... எழுதுகிறார். அவ்வாறு எழுதினால்தான் , அவரது எழுத்துகளைப் படிப்பவர்களுக்கு அவரது கருத்தாடலைப் புரிந்துகொள்ளமுடியும்! அவ்வாறு ஒரு உரையாடலை தனது மனதிற்குள் நிகழ்த்தாமல், ஒருவர் தனக்குத் தெரிந்த கருத்துகளைமட்டும் எழுதிக்கொண்டே சென்றால்... அந்த எழுத்துரை...அது கடிதமோ, கட்டுரையோ, நூலோ .... படிப்பவர்களுக்குத் தேவையான தெளிவைக் கொடுக்க இயலாது! இங்குதான்... எழுத்துரை படைப்பவர்களின் திறமை இருக்கிறது.
இங்கு ஒரு செய்தி முக்கியமானது. எழுதப்படுகிற எழுத்துரையானது ... பொதுமக்களுக்கானதா, மாணவர்களுக்கானதா அல்லது அத்துறையில் துறைபோகியவர்களுக்கானதா என்பதை எழுதுபவர் விளங்கிக்கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, புவிஈர்ப்புசக்தி அடிப்படையிலான ஒரு செயலை , உயர்நிலை அறிவியலாளர்களுக்கு எழுதும்போது, புவிஈர்ப்புவிசை என்றால் என்ன என்பதை விளக்கவேண்டியது இல்லை! விளக்கவும்கூடாது! அதேவேளையில், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் அதற்கான விளக்கங்களை நேரடியாக அளித்து, எழுதுபவர் விளக்கவேண்டும். இதை கருத்தைப் பொதுமக்களுக்கான ஒரு நாளிதழில் எழுதும்போது, மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தெரிந்த சில எடுத்துக்காட்டுகளைக்கூறி,அதனடிப்படையில் .. அவற்றோடு தொடர்படுத்தி... புவிஈர்ப்புவிசையை விளக்கி... பின்னர் அதனால் ஏற்படுகிற அந்தக் குறிப்பிட்ட செய்தியை அல்லது நிகழ்வை விளக்கினால், மக்களுக்கு நன்கு புரியும். எழுதுபவர் யாருக்காக எழுதுகிறார் என்பதை முடிவு செய்துகொண்டு... அந்தக் குறிப்பிட்ட வாசகரைத் தன் மனதில் நிறுத்தி.... உரை எழுதினால்தான் அவர் தனது எழுத்துக் கருத்தாடலில் வெற்றிபெறமுடியும்.
இந்தக் கட்டுரை மிக நீண்டுவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொண்டு... நாளை தொடர்கிறேன்.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(9)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (9)
--------------------------------------------------------------------------------
சென்ற உரையில் .... ஒரு முழுமையான ... கருத்திணைவு உள்ள ஒரு கருத்தாடலை ( Coherant Discourse) எவ்வாறு அமைத்து.... நாம் விரும்புகிற கருத்துப்புலப்படுத்தச் செயலை ( Communication) எவ்வாறு மேற்கொள்வது என்பதுபற்றிப் பார்த்தோம்.

கருத்தாடல் என்பது பேச்சுக்கருத்தாடலாகவும் ( Spoken Discourse) அமையலாம்... எழுத்துக் கருத்தடலாகவும் ( Written Discourse) அமையலாம்.
பேச்சுக் கருத்தாடலில் குறைந்தது இரண்டு நபர்கள் பங்கேற்கின்றனர். கருத்தாடலில் பங்கேற்கும் அனைவரும் உணர்வோடு .... கருத்துப்புலப்படுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்ற உணர்வோடு - கலந்துகொள்கிறார்கள். ஒருவர் பேசும்போது... அவர் முன்வைக்கும் தொடர்களை ... பேசுபவரின் உடல்மொழி, முகபாவம் போன்ற பிற மொழிசாராக் கூறுகளோடு ( Non-verbal means) இணைத்து... கேட்பவர்கள் பேசுபவர் கூற விரும்புகிற கருத்துகளைப் புரிந்துகொள்கிறார்கள். அவ்வாறு புரிந்துகொள்ள முயலும்போது... அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களை நீக்கிக்கொள்ள... இவர்களும் இப்போது பேசத்தொடங்குகிறார்கள். இப்போது முதலில் பேசியவர் கேட்பவராக மாறுகிறார். கேட்பவர்களாக இருந்தவர்கள் பேசுபவர்களாக மாறுகிறார்கள். இவ்வாறு மாற்றி, மாற்றி, இந்தக் கருத்தாடலில் ஈடுபடுகிறவர்கள் ஒரு செயலூக்கமுள்ள கருத்தாடலில் ஈடுபடுகிறார்கள்.
இங்கு மொழியியல் அறிஞர் விடோவ்சன் கூறுவதாவது.. பேசுபவருக்கு குறிப்பிட்ட மொழியில் பேசத் தெரிந்தால் ( Speaking Skill) மட்டும் போதாது. அந்த மொழியில் ஒரு கருத்தை சொல்லத் ( Saying Skill) தெரியவேண்டும். நாம் முன்பே பார்த்தமாதிரி... ஒருவருக்கு ஒரு மொழியில் பேசத் தெரிவது என்பது வேறு... ஒரு கருத்தை அம்மொழியின் எவ்வாறு புலப்படுத்துவது என்பது வேறு. இதுதான் " Speaking -- Saying " இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வது ஆகும். சொல்லும் திறனுக்கு... பேசும் திறன் தேவை என்பதை இங்கு மறுக்கவில்லை! ஆனால் ஒரு கருத்தாடலில் ஒருவர் அந்த மொழியில் ஏதோ ஒரு கருத்தைச் சொல்வதே அடிப்படை நோக்கம். வெறும் ஒலிகளையும் சொற்களையும் வாக்கியங்களையும் அந்தக் குறிப்பிட்ட மொழியில் உருவாக்குவது நோக்கமல்ல. குழந்தைகள் முதலில் ஆங்கிலம் படிக்கும்போது... பாடல்களையும் சில தொடர்களையும் தங்களது பொற்றோர்கள் முன்னிலையும் பாடியும் பேசியும் காண்பிக்குமே அது போன்றதே! பொருள் புரியாமல் ... தங்களுக்கு ஆங்கிலத்தை உச்சரிக்கவும் பேசவும் தெரியும் என்பதைக் காட்டுவதற்கு! அதுபோன்றதுதான் ஒருவர் தான் விரும்பும் கருத்தை முறையாகவும் தெளிவாகவும் சொல்லத் தெரியாமல் ... வெறும் வாக்கியங்களை உருவாக்கி வெளிப்படுத்துவது ஆகும்! இதைத்தான் சில வேளைகளில் நாம் ஒருவரைப் பற்றிக்கூறும்போது... '' அவருக்குத் தான் சொல்லவிரும்புவதைச் சொல்லத் தெரியவில்லையே '' என்று கூறுவோம்!
அடுத்து, பேசுபவர் தன் கருத்தைச் சொல்லத் தெரிந்தால் மட்டும் போதாது. கேட்பவர்களுக்கு அவர் சொன்னதில் ஐயம் ஏற்படும்போதோ... அல்லது அவர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கும்போதோ... அதை அனுமதித்து, தான் கேட்பவராகவும் மற்றவர்கள் பேசுபவர்களாகவும் தங்கள் பாத்திரங்களை ( Roles) மாற்றிக்கொள்ள இடமளிக்கவேண்டும். அப்போதுதான் கருத்தாடல் தொடரும்! தானே பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பி, அவர் பேசிக்கொண்டேயிருந்தால்... கருத்தாடல் முறிந்துவிடும். இதைத்தான் கிரைஸ் ( Grice) என்ற சமூகமொழியியல் அறிஞர் கருத்தாடலில் மேற்கொள்ளவேண்டிய '' கூட்டுறவுக் கொள்கை'' - "Principles of Co-operation" என்று கூறுவார். ஒரு கருத்தாடலில் கலந்துகொள்ளும் அனைவரும் இந்த கூட்டுறவு உறவுகளைப் பின்பற்றினால்தான், கருத்தாடல் தொடரும்... வெற்றி அடையும் என்று அவர்கூறுகிறார். இதுபற்றிப் பின்னர் விளக்கமாகக் கூறவிருக்கிறேன்.
எனவே கருத்தாடலில் பங்கேற்பவர்கள் ... ஒரு உரையாடலில் - TALKING - என்ற செயலை மேற்கொள்கிறார்கள். இதில் ஒருவர் ஒரு நேரத்தில் பேசுபவராகவும் , அடுத்து கேட்பவராகவும் மாறுகிறார். மேலும் பேசுபவருக்கு அந்த மொழியைப் பேசத் தெரிந்தால்மட்டும் போதாது! ஒரு கருத்தை முறையாக வெளிப்படுத்த ... தெளிவாக முன்வைக்க... தெரிந்திருக்கவேண்டும். Speaking - Saying இரண்டும் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் Speaking என்பது Saying என்ற செயலுக்கு அடிப்படையாக அமைகின்ற அடிப்படை அலகே! ஆனால் உயர்ந்த அலகு ... Saying என்பதேயாகும். அதுபோன்று கேட்பவர் ... பேசுபவர் முன்வைக்கிற கருத்தை வெறும் மொழித்தொடர்களாக மட்டும் கேட்பதோடு நிறுத்தாமல்.... அத்தொடர்களைப் புரிந்துகொள்ளவேண்டும். இதை Hearing - Listening Comprehension என்று சொல்வார்கள். எவ்வாறு பேச மட்டும் தெரிந்தால் போதாதோ, அதுபோன்று காதில் கேட்டால் மட்டும் போதாது. கேட்டதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே Talking என்ற ஒரு உணர்வுபூர்வமான கருத்தாடலில் ... அதன் இரண்டு பிரிவுகள் Saying and Listening Comprehension... இதில் Saying என்பதின் கீழ் அலகு Speaking .. அதுபோன்று Listening Comprehension என்பதன் அடிப்படை அலகு Hearing.
Speaking to Saying ..... Hearing to Listening ... அதுபோன்று , Saying and Listening இரண்டையும் கொண்ட ஒரு உயர்மட்ட அலகே ... அல்லது மொழித்திறனே Talking. மொழிபயிற்றலின் அடிப்படை நோக்கம்.... கருத்தாடலில் மேற்கொள்ளவேண்டிய Talking திறனை மாணவர்களுக்கு உருவாக்குவதேயாகும். மொழிபயிற்றல் அறிவியலில் ஒரு காலகட்ட்டத்தில் Speaking - Listening ( "Hearing") என்பதே மொழிபயிற்றலின் அடிப்படை என்று கூறப்பட்டது. ஆனால் விடோவ்சன் அதை மேலும் இவ்வாறு வளர்த்தெடுத்தார். அதுபோன்று எழுத்துக்கருத்தாடலிலும் அவர் சில தெளிவுகளை ஏற்படுத்தினார். அதுபற்றி அடுத்துத் தொடருகிறேன்.

வெள்ளி, 22 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(8)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (8)
-------------------------------------------------------------------------------
நேற்றைய எனது உரையில்.... ஒரு பத்தியில் அமைகிற பல்வேறு உரைக்கூற்றுகள் தாங்கள் பயின்றுவருகிற வரிசையில் கருத்திணைவு கொண்டதாக இருக்கவேண்டும் என்று கூறினேன். அப்போதுதான் அந்தப் பத்தியானது கருத்துப்புலப்படுத்தத்திற்கு உதவும்!

வாக்கியத்தின் உள்ளே அமைகிற சொற்கள் (Words and Phrases) எவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையவேண்டும் ( தொடரியல் - Syntax) என்று மொழிகளில் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவோ.... அதுபோல ஒரு பத்திக்குள் அமைகிற உரைக்கூற்றுகள் எவ்வாறு கருத்திணைவை அடிப்படையாகக்கொண்டு , குறிப்பிட்ட வரிசையில் அமையவேண்டும் என்பதற்கும் விதிகள் உண்டு!
ஆனால் பொதுவாக, வகுப்பறைகளில் வாக்கிய அமைப்பிற்கான தொடரியல் விதிகளைக் கற்றுக்கொடுப்பதோடு நிறுத்திவிடுகிறோம். ஆனால் வாக்கியங்களைத் தாண்டியும் பத்தியிலக்கணம் கற்றுக்கொடுக்கவேண்டும் '' ஆனால்'' , ''ஆகவே'', ''எனவே'' ''ஆகையால்'', ' 'ஏனென்றால்'' , ''ஏனெனில்'', '' இருப்பினும்'', 'இருந்தாலும்'' ''அதனால்'' போன்ற கருத்திணைவுக்குப் பயன்படும் பல தொடரிணைவுச் சொற்கள் உள்ளன. இவற்றை எவ்வாறு, எங்கே, முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கும்போது, பத்தி அமைவுக்கான இலக்கணத்தையும் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். ஆங்கிலத்திலும் , "because", "however" "that is why" "hence" "but" போன்று பல தொடரிணைவுச் சொற்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும்.
ஒரு வாக்கியத்துக்குள் சொற்கள் அமைவதற்குக் கட்டுப்பாடு இருப்பது போல ,, ஒரு பத்தியில் உரைக்கூற்றுகள் அமைவதற்குக் கட்டுப்பாடுகள் இருப்பதுபோல... ஒரு முழுக் கட்டுரையில் பல்வேறு பத்திகள் அமைவதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு! ... கருத்திணைவு கண்ணோட்டத்தில்... எவ்வாறு பத்திகளை வரிசைப்படுத்தவேண்டும் என்பதுபற்றியும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். உரைக்கூற்றுகளுக்கு இடையே தொடரிணைவுச் சொற்கள் அமைவதுபோல, ஒரு முழுக்கட்டுரையில் ஒரு பத்தியை ... அதற்கு அடுத்துவருகிற பத்தியோடு தொடர்படுத்துவதற்கும் மேற்குறிப்பிட்ட தொடரிணைவுச்சொற்கள் பயன்படும்.
அதுபோன்று ஒரு நூலில் அமைகிற பல்வேறு இயல்களை... அத்தியாயங்களை ( Chapters) ... கருத்திணைவுக் கண்ணோட்டத்தில் முறையாக வரிசைப்படுத்தவேண்டும். அப்போதுதான் அந்த நூலைப் படிப்பவர்களுக்கு அந்த நூலின் கருத்தை முழுமையாகவும். சரியாகவும் புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாறு... வாக்கியம் தாண்டி... பத்தி, இயல்கள் ... ஆகியவற்றை அமைக்கும் அடிப்படைகளையும் கற்றுக்கொடுப்பதே பனுவல் அலக்கணம் ( Text Grammar) என்று அழைக்கப்படுகிறது. எனவே ஒரு மொழியின் இலக்கணம் என்று சொல்லும்போது.... ஒரு சொல் அமைப்பிற்கான இலக்கணம் ... ஒரு சொல்லுக்குள் எந்த எழுத்துகளை அடுத்து எந்த எழுத்து வரும், எந்த விகுதியை அடுத்து எந்த விகுதி வரும் ( Phonology and Morphology) , வாக்கியம் அல்லது தொடர் அமைப்பிற்கான இலக்கணம் ( Phrase, Clause and Sentence structure - Syntax) , பத்தி, இயல் ஆகியவற்றைப் பற்றிய பனுவல் இலக்கணம் ( Text Grammar) ஆகியவை எல்லாம் அடங்கும். அப்போதுதான் மாணவருக்குத் தான் கூற விரும்புகிற கருத்துகளை முறையாக வெளிப்படுத்தும் ஒரு முழு உரையை ( பேச்சுரை . எழுத்துரை இரண்டிலும்) உருவாக்கிக் கொள்ளும் கருத்துப்புலப்படுத்தத்திறன் கைகூடும்!
இதற்காகத்தான் மாணவர்களுக்குத் தனியே கட்டுரை Composition Writing ) வகுப்பு என்று ஒன்று உண்டு. அந்த வகுப்பில் முறையாகத் திட்டமிட்டு, இந்தப் பனுவல் இலக்கணத்தை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுக்கொடுக்கவேண்டும்.
பனுவல் இலக்கணம் மட்டும் போதுமா?.... ஒரு முழுமையானக் கருத்துப்புலப்படுத்தத்திற்கு! இதுபற்றி அடுத்து எழுதுகிறேன்!

வியாழன், 21 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(7)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (7)
--------------------------------------------------------------------------
முந்தைய உரையில் நாம் பார்த்தமாதிரி... வெறும் பொருண்மை முக்கியத்துவம் உடைய வாக்கியங்கள்
( Sentences) வேறு... நடைமுறையில் கருத்துப்புலப்படுத்த மதிப்பு உடைய உரைக்கூற்று (Utterances) வேறு! இவ்வாறு கூறும்போது, வாக்கிய இலக்கண அறிவு ( knowledge of Grammar)தேவையில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். நிச்சயமாக தேவை! அரிசி இல்லாமல் சோறா? அதற்காக அரிசியை அப்படியே சாப்பிடமுடியுமா? சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் அரிசியை நாம் சாப்பிடுவதற்கு.... வயிற்றுக்கு ஏற்றவகையில் பக்குவப்படுத்தி.... சமைத்துத்தானே .... சாப்பிடுகிறோம். அம்மாவுக்குத் தெரியும் அந்த ரகசியம்!

அதுபோல... மொழிபயிற்றல் ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவேண்டும் எவ்வாறு பொருண்மை முக்கியத்துவம் உடைய வாக்கியங்களை .... நடைமுறையில் கருத்துப்புலப்படுத்தத்திற்கு ஏற்ற ... கருத்துப்புலப்படுத்த மதிப்புடைய ... உரைக்கூற்றுகளாக அமைத்து.... மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு! இது ஒரு சிக்கலான பிரச்சினைதான்! எந்த அளவிற்கு (அளவு மீறாமல்!) .. எந்த இலக்கணத்தை ... எப்படிக் கற்றுக்கொடுத்து... அதேவேளையில் அதை எவ்வாறு உரைக்கூற்றாக உருவாக்கி மாணவர்கள் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொடுக்கும் திறனுடையவரே மொழிபயிற்றல் ஆசிரியர் ஆவார். இலக்கணத்தைப் புறக்கணிக்கக்கூடாது! புறக்கணிக்கமுடியாது! ஆனால் மொழிபயிற்றலில் இலக்கணக்கல்வி இறுதி நோக்கமல்ல! அதன்மூலம் கருத்துப்புலப்படுத்த மதிப்புடைய உரைக்கூற்றுகளை உருவாக்கப் பயிற்றுவிப்பதே மொழிபயிற்றலின் (Teaching the language) நோக்கம் ! வெறும் இலக்கணத்தைக் கற்றுக்கொடுப்பது மொழியைப்பற்றிக் ( Teaching about the language) கற்றுக்கொடுப்பதாகவே அமையும்!
சரி! உரைக்கூற்றை உருவாக்க மாணவருக்குப் பயிற்றுவித்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம்! ஆனால் இது போதுமா நடைமுறையில் மாணவர் முழுமையான கருத்தை வெளிப்படுத்தும் ஒரு உரையைப் பேசுவதற்கு அல்லது எழுதுவதற்கு? இல்லை. போதாது! ஒரு முழுமையான கருத்தாடலுக்கு ... தனித்தனி உரைக்கூற்றுகளை அமைக்கத் தெரிந்தால் போதாது! கருத்தாடலில் பயன்படும் பல்வேறு உரைக்கூற்றுகளை ... ஒன்றுக்கு மேற்பட்ட உரைக்கூற்றுகளை .... சரியாக முன்பின் வரிசைப்படுத்தி... தொடர்புபடுத்தி... ஒரு முழுமையான கருத்தாடலை உருவாக்கத் தெரியவேண்டும். அப்படியென்றால் என்ன? '' நேற்று நான் வந்தேன். அமெரிக்காவின் ஜனாதிபதி ஓபாமா. என் பாட்டி நேற்று ஊரிலிருந்து வந்தார்கள். எனக்கு ஆங்கிலம் தெரியும்.'' இதில் நான்கு உரைக்கூற்றுகள் அமைந்துள்ளன. ஆனால் இதை யாராவது ஒரு கருத்திணைவான கருத்தாடல் ( Coherent Discourse) என்று கூறமுடியுமா? '' ''என்னடா, சம்பந்தம் சம்பந்தமில்லாமல் ஒவ்வொன்றும் இருக்கிறதே'' என்று கூறுவோம்! ஒரு உரைக்கூற்றுக்கும் பிற உரைக்கூற்றுகளுக்கும் எந்தவிதத் பொருள்தொடர்பும் கிடையாது! எனவே இதைக் கருத்தாடலாக ஏற்றுக்கொள்ளமுடியாது!
'' நான்கு இட்லி சாப்பிட்டேன். பிருந்தா ஓட்டல் பக்கத்தில் இருக்கிறது. இட்லிக்குச் சட்னி நன்றாகயிருந்தது. காலையில் பசியாக இருந்தது.சைக்கிளில் ஓட்டலுக்குச் சென்றேன் அம்மா வீட்டில் இல்லை. நேற்று இரவு சீக்கிரம் சாப்பிட்டுவிட்டேன்'' .....
மேற்கூறியதில் ஏழு உரைக்கூற்றுகள் உள்ளன. அமைந்துள்ள உரைக்கூற்றுகள் எல்லாம் தொடர்புடைய உரைக்கூற்றுகள்தான்! ஆனாலும் நாம் இதை ஒரு கருத்திணைவுள்ள ... உரைக்கூற்றுகள் தாங்கள் அமையவேண்டிய வரிசையில் அமைந்துள்ள ஒரு கருத்தாடல் என்று ஏற்றுக்கொள்வோமா? மாட்டோம். ஏன்? எந்த உரைக்கூற்றுக்கு அடுத்து எந்த உரைக்கூற்று அமைந்தால்... கருத்துப்புலப்படுத்தம் முறையாக நடக்கும் என்பதுபற்றிய அறிவு நமக்கு உள்ளது! கீழ்க்கண்டவாறு அவற்றை மாற்றி அமைத்துப் பார்ப்போம்!
'' நேற்று இரவு சீக்கிரம் சாப்பிட்டுவிட்டேன். காலையில் பசியாக இருந்தது. அம்மா வீட்டில் இல்லை.பிருந்தா ஓட்டல் பக்கத்தில் இருக்கிறது. சைக்கிளில் ஓட்டலுக்குச் சென்றேன். நான்கு இட்லி சாப்பிட்டேன். இட்லிக்குச் சட்னி நன்றாகயிருந்தது''.
மேற்கூறியதில் ஏழு உரைக்கூற்றுகளும் தாங்கள் அமையவேண்டிய வரிசைகளில் அமைந்துள்ளன. எனவே இது ஒரு சரியான... முழுமையான ... கருத்திணைவான கருத்தாடல் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். எனவே மாணவர்களுக்குத் தனித்தனி உரைக்கூற்றுகளை உருவாக்கத் தெரிந்தால்மட்டும் போதாது. பல்வேறு உரைக்கூற்றுகளை ... கருத்துத் தொடர்புகள் அடிப்படையில்... முன்பின் ஒழுங்காக வைத்துப் பேசவேண்டும். இதைக் கருத்தாடலில் '' கருத்திணைவு '' (Coherence") என்று அழைப்பார்கள். சில வேளைகளில் ஒரு உரைக்கூற்றுக்கும் அடுத்த உரைக்கூற்றுக்கும் தொடர்பு இல்லாததுமாதிரி தோன்றும். ஆனால் நாம் நமது பொது அறிவில் அடிப்படையில் கருத்திணைவு உள்ள கருத்தாடலாக ஏற்றுக்கொள்வோம் . கடைக்காரரிடம் '' லைப்பாய் சோப்பு ஒன்று கொடுங்கள்' என்று கேட்கும்போது , அவர் '' ஹமாம் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று கூறினால்... என்ன பொருள்? கடையில் 'லைப்பாய் சோப்பு'' இல்லை... மாற்றாக, 'ஹமாம் இருக்கிறது'' என்று கடைக்காரர் கூறுகிறார். சரிதானே? தொல்காப்பியத்திலும் இதுபற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்பது நமக்குப் பெருமை!
சில கருத்தாடல்களில், முந்தைய உரைக்கூற்றுக்கும் பிந்தைய உரைக்கூற்றுக்கும் இடையில் தொடர்பைக் காட்ட .... கருத்திணைவைக்காட்ட .. சில சொற்கள் பயன்படுத்தப்படலாம். அச்சொற்களைக் கருத்திணைவைக் காட்டப் பயன்படும் '' தொடர் இணைவு '' ( Cohesive devices) என்று கருத்தாடல் ஆய்வில் கூறுவார்கள்.
'' நேற்று நீ வரவில்லையா?'' - ஆசிரியர்
''வயிற்றுவலி சார். (அதனால் வரவில்லை)'' - மாணவர்

இங்கு '' அதனால்'' என்பது மாணவரின் இரண்டு உரைக்கூற்றுகளையும் கருத்திணைவுக் கூற்றுகளாக மாற்ற உதவும் ''தொடரிணைவுச் சொற்கள்'' ஆகும். ஆனால் இங்குகூட மாணவர் இரண்டு கூற்றுகளின் வரிசைமுறையை மாற்றினால், கருத்தாடல் சரியாக அமையாது.( மேலும் '' வயிற்றுவலி சார்'' என்று மாணவர் கூறினாலே போதும், ஆசிரியர் அதுதான் காரணம் என்று தெரிந்துகொள்வார். வினாவுக்கும் விடைக்கும் இடையில் உள்ள கருத்துத்தொடர்புதான் இங்குப் பயன்படுகிறது.)
அப்படி மாற்ற விரும்பினால், ''தொடரிணைவுச் சொல் '' மாறும். '' அதனால்'' என்பதற்குப் பதிலாக '' ஏனென்றால்'' என்ற தொடரிணைவுச் சொல் வரும்.
'' நேற்று நீ வரவில்லையா?' - ஆசிரியர்
'' வரவில்லை சார். ஏனென்றால் வயிற்றுவலி'' - மாணவர்.

எனவே உரைக்கூற்றுகளை உருவாக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. அவற்றைக் கருத்திணைவு உள்ள கருத்தாடலாக அமைக்கத் தெரியவேண்டும், கருத்துத் தொடர்பு அடிப்படையிலும் அமைக்கலாம். அல்லது அதற்குத் தொடரிணைவுச் சொற்களையும் பயன்படுத்தலாம்! நாளை மீண்டும் தொடருகிறேன்!

புதன், 20 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (6)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (6)
----------------------------------------------------------------------------
நாம் பிறரிடம் பேச்சுவழியாகவோ அல்லது எழுத்துரை வழியாகவோ .... ஒரு கருத்துப்புலப்படுத்தச் செயலில் Act of communication) ஈடுபடுகிறோம். இது உணர்வுபூர்வமான ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி ( active process) ஆகும். இந்த உணர்வுபூர்வமான செயலையே இங்குக் கருத்தாடல் (Discourse) என்று அழைக்கிறோம். கருத்தாடலின் நோக்கம்.... நமக்குத் தெரிந்த சொற்களையோ அல்லது தொடர்களையோ அல்லது அவற்றிற்கான இலக்கணத்தையோ மற்றவருக்கு வெளிப்படுத்துவது இல்லை..... மாறாக, நாம் விரும்புகிற கருத்துகள் அல்லது நோக்கங்களை மற்றவருக்கு வெளிப்படுத்துவதும் .... அதற்குத் தேவையான மொழிவழிச் செயல்களை ( Speech Acts.. விளக்குதல், விவரித்தல், வினவுதல், விடையளித்தல், ஐயத்தை முன்வைத்தல், தெளிவுபடுத்தல் போன்ற பலவகை மொழிவழிச் செயல்கள் .... ஏற்கனவே இதுபற்றி ஆஸ்டின், சியர்ல் ஆகியோரின் கருத்துகளை விளக்கியுள்ளேன்) மேற்கொள்வதும் ஆகும்.

வகுப்பில் ஆசிரியர் மாணவரிடம் '' நம்முடைய பள்ளியின் பெயர் என்ன ?' என்று கேட்கிறார் என்று கொள்வோம். மாணவரும் '' நம்முடைய பள்ளியின் பெயர் பாரதியார் பள்ளி '' என்று விடையளிக்கிறார் என்று கொள்வோம். ஆசிரியருக்குப் பள்ளியின் பெயர் தெரியாதா என்ன? மாணவருக்கும் பள்ளியின் பெயர் தெரியும்! அப்படி இருந்தும் இந்த ''அறிவினாவும்'' அதற்கான விடையும் எதற்கு? வினா வாக்கியத்தின் இலக்கண அமைப்பையும் விடை வாக்கியத்திற்கான இலக்கண அமைப்பையும் , அவற்றிற்குரிய சொற்களையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே ஆசிரியரின் நோக்கம்! மற்றபடி , இந்த வினாவுக்கும் விடைக்கும் வேறு எந்தவித மதிப்பும் கிடையாது. ஆசிரியர், மாணவர் வாக்கியங்களில் பொருண்மை (Meaning Significance) இருக்கிறது. ஆனால் .... கருத்துப்புலப்படுத்த மதிப்பு ( Communicative Value) கிடையாது ! வெறும் பொருண்மையைக் கொண்ட வாக்கியங்களே ( " Sentences ") !
சரி! மாணவர் முந்தைய நாள் பள்ளிக்கு வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆசிரியர் அப்போது அவரிடம் '' நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை? '' என்று கேட்கிறார் ... மாணவரும்'' எனக்கு காய்ச்சல் ஐயா'' என்று கூறுகிறார் என்று கொள்வோம். இங்கே ... ஆசிரியர் உண்மையில் தனக்குத் தெரியாத ஒன்றை ... தெரிய வேண்டிய ஒன்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.... மாணவரும் அதற்குரிய பதிலைத் தருகிறார். இங்கு ஆசிரியரின் நோக்கம் .... வாக்கிய இலக்கணத்தைக் கற்றுக்கொடுப்பதில்லை... மாறாக, கருத்தைப் பறிமாறிக்கொள்வதே ஆகும்! இங்கு ஆசிரியர் - மாணவர் இருவர்களும் ஒரு உணர்வுபூர்வமான கருத்துப்புலப்படுத்தச் செயலில் ஈடுபடுகிறார்கள்... இதுவே கருத்தாடல் .... குறிப்பிட்ட நோக்கங்களை உடைய கருத்தாடல்!
இந்தக் கருத்தாடலில் மொழி வெளிப்படுத்துகிற வாக்கியங்களோடு.... ஆசிரியர், மாணவர் இருவரும் உடல்மொழிகளையும் ( முகபாவம், கை, உடம்பு அசைவுகள் போன்றவை) பயன்படுத்தலாம். எனவே மொழித்தொடர்கள் + மொழிசாராக் கூறுகள் ( Verbal and non-verbal means) இரண்டும் இந்தக் கருத்தாடலில் பங்கேற்கின்றன.
இங்கு மொழிசார்க் கூறுகளும் மொழிசாராக் கூறுகளும் ஒரு உணர்வுபூர்வமான கருத்துப்புலப்படுத்தத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. அதன்வழியாக... ஆசிரியர், மாணவர் இருவரின் மொழிசார், மொழிசாரக் கூறுகளும் கருத்துப்புலப்படுத்த மதிப்பைப் பெறுகின்றன. இங்குப் பயன்படுத்தப்பட்ட வாக்கியங்கள் .... வெறும் பொருண்மையைக் கொண்ட (meaning significance) வாக்கியங்கள் இல்லை ... மாறாக, கருத்துப்புலப்படுத்த மதிப்பைப் ( Communicative Value) பெற்றுள்ள உரைக்கூற்று ( " Utterances") !
நடைமுறையில் ஆங்கிலம் படிக்கத் தொடங்கும் குழந்தைகள் நம்மிடம் சில வினாக்களைக் கேட்கச் சொல்லும். அதுவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட வாக்கிய இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு கேட்கச் சொல்லும்! நாமும் " What is your name ?" என்று கேட்போம். குழந்தையானது " My name is Balu" என்று சொல்லும். " How old are you ?" என்று கேட்போம். குழந்தை " I am five yers old" என்று சொல்லும். இவையெல்லாம் வாக்கிய இலக்கணத்தையும் சொற்களையும் தெரிந்துகொள்வதற்காகக் கற்றுக்கொடுக்கப்பட்ட வாக்கியங்களே ! கருத்துப்புலப்படுத்த மதிப்பைப் பெற்ற உரைக்கூற்று இல்லை!
உரைக்கூற்றை மேற்கொள்ளும் திறனைப் பெற்றபிறகு , இதுபோன்ற வாக்கியங்களைக் குழந்தையும் எதிர்பார்க்காது. நாமும் சொல்லமாட்டோம். மாறாக " (Your) name, please? " என்றும் " Balu" என்றும், " How old?" என்றும் " five " என்றும் அமையலாம். இதுவே கருத்துப்புலப்படுத்த மதிப்பு உடைய உரைக்கூற்றுகள்! இலக்கணத்தை வெளிப்படுத்தும் வாக்கியங்கள் இல்லை!
நம்முடைய தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு உள்ள பி்ரச்சினை என்ன? ஆங்கிலத்திற்கான இலக்கண நூல்களை நன்கு படித்து... , Active Vocie - Passive voice, Direct - Indirect Speech, Simple - Compound - Complex Sentence conversion போன்றவற்றையெல்லாம் கற்று, இலக்கணத்தில் 100 விழுக்காடு மதி்ப்பெண் வாங்கி, ஆனால் பின்னரும் இயற்கையாக ஆங்கிலத்தில் உரையாட முடியாமலும்.... கடிதங்கள் எழுதமுடியாமலும்... திணறுகிறார்கள்! காரணம்... அவர்களுக்குக் கருத்துப்புலப்படுத்தத்திற்கான கருத்தாடல் நோக்கில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவில்லை! இலக்கணத்தைக் கற்று மதிப்பெண்கள் வாங்குவதற்காகச் செயற்கையான வாக்கிய அமைப்புகளும் சொற்களுமே பெரும்பான்மையாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பாடப்புத்தகங்கள்கூட கருத்தாடல் நோக்கில் அமைந்திருக்கலாம்... ஆனால் ? அடுத்துத் தொடர்கிறேன்!

மருத்துவ மொழியியல் ( Clinical Linguistics)

மருத்துவ மொழியியல் ( Clinical Linguistics)
---------------------------------------------------------------------
மருத்துவமொழியியல் என்பதை ஆங்கிலத்தில் Clinical Linguistics என்று அழைக்கிறார்கள்!. நமது மொழிக்கும் ( Language), பேச்சுக்கும் (Speech) மிக அடிப்படையானவை மூளையும், வாய், தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல், உதரவிதானம் போன்ற உடலுறுப்புகளும் ஆகும். மூளையில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால்..... நமது மொழியும் பாதிக்கப்படும். பொதுவாக இடதுபுறம் உள்ள பெருமூளை பாதிக்கப்பட்டால், மொழியும் பேச்சும் தடைபடும். பேசுவதற்கும், கேட்டுணர்வதற்கும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் மூளையில் சில தனிப்பகுதிகள் அடிப்படையானவை. அவை பாதிக்கப்பட்டால், மொழி இழப்பு ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Aphasia ( Disphasia) என்று அழைப்பார்கள். இதில் பலவகைகள் உண்டு. அப்போது, மொழியின் எந்தப் பகுதி .... தொடரா, சொல்லா. பேச்சொலியா, எழுத்தா போன்ற மொழிக் கூறுகள் .... பாதிக்கப்படுகின்றது என்பதை ஆய்வுசெய்து, அதற்கேற்ற மொழிப் பயிற்சிகளை மருத்துவமொழியிலாளர்கள் அல்லது பேச்சுப்பயிற்சி வல்லுநர்கள் ( நரம்பியல் மருத்துவர்களுடன்) இணைந்து அளிப்பார்கள். இதுவே மருத்துவமொழியியல். 1881 இலிருந்து புரோக்கா (Broaca) , வெர்னிக்கஸ் ( Wernicks) போன்ற அறிஞர்கள் மூளைக்கும் மொழி,பேச்சுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப்பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும் பேச்சுக்கு அடிப்படையான வாயறை, நாக்கு, தொண்டை, அண்ணம், உதடு ஆகியவையும் கேட்பதற்கு அடிப்படையான காதுகளும் பாதிக்கப்பட்டாலும், மொழி இழப்பு இருக்காது... ஆனால் பேச்சு இழப்பு இருக்கும். இதை ஆங்கிலத்தில் disarthria என்று அழைப்பார்கள். இவ்வாறு மொழி, பேச்சு, இவற்றிற்கும் உடலுறுப்புகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு அடிப்படையில் மொழி இழப்பு, பேச்சு இழப்புக்காண காரணங்களைக் கண்டறிந்து, தேவையான மொழி மற்றும் பேச்சுப் பயிற்சிகளை அளிப்பதே மருத்துவமொழியியல். நரம்புமொழியியல் ( Neurolinguistics) என்ற ஒரு பிரிவும் இதில் அடங்கும். 1990 -வாக்கில் நானும் அரசு மருத்துவக் கல்லூரி நரம்பியல் பேராசிரியர் பி. தனராஜ் அவர்களும் இணைந்து, மொழி இழப்பை அளவிடுவதற்கான Western Aphasia Battery என்ற ஒன்றைத் தமிழுக்கேற்றவகையில் மாற்றியமைத்தோம். தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். சென்னை மருத்துவமனையில் பணியாற்றி, பின்னர் மும்பையில் உள்ள செவித்திறன், பேச்சுத் திறன் குறைபாடுடைய நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய திரு. ரங்கசாயி என்பவருடன் இணைந்து, சென்னையில் உள்ள இதற்கான பயிற்சி நிறுனவங்களுக்குத் தேவையான மொழியியல் உதவிகளைச் செய்தேன். ஆனால் மொழியியலின் முக்கியத்துவம் தமிழகத்தில் இன்னும் தெரிந்துகொள்ளப்படவில்லை என்பது வருத்ததிற்கு உரியது.

தடய அறிவியல் மொழியியல் ( Forensic Linguistics) :

தடய அறிவியல் மொழியியல் ( Forensic Linguistics) :
-------------------------------------------------------------------------
செயற்படுத்தமொழியியலின் இன்னொரு பிரிவு.... 1950 வாக்கில் தொடங்கி ... 1960 வாக்கில் பிரபலமடைந்த ஒரு துறை... ஒருவரின் மொழிநடையிலிருந்து அவர் உண்மையைக் கூறுகிறாரா , இல்லையா .... ஒருவரது ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் அவருடையதுதானா இல்லையா ....வழக்குகளில் சாட்சிகள் அளிக்கிற வாக்குமூலங்கள் உண்மையா, இல்லையா... ஒருவர் பெயரில் வெளிவந்த ஒரு கட்டுரை அல்லது நூல் உண்மையில் அவர் எழுதியதுதானா இல்லையா... ஆசிரியர் பெயர் தெரியாத ஒரு நூலின் ஆசிரியர் இவரா அவரா ....ஒரு பேச்சுரையைக்கொண்டு அதைப் பேசியவர் யார் ?... அவசர உதவி நிலையங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பில் உண்மை இருக்கிறதா இல்லையா... ஆளைக் கடத்திவைத்துக்கொண்டு, பெரிய தொகையைக் கேட்கும் நபரின் மிரட்டல் எந்த அளவு உண்மையானது ? .... கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுபவர் உண்மையில் கடத்தப்பட்டிருக்கிறாரா இல்லையா?... ஒரு டிரேட் மார்க் பிறரால் சட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்த்தப்பட்டுள்ளதா இல்லையா ( ''தலைப்பாக்கட்டு பிரியாணிக் கடை'' விவகாரம்) போன்ற பல சிக்கல்களில் உதவி புரியும் ஒரு புதிய துறை ... தடயவியல் மொழியியல் ஆகும்.

இந்தச் சொற்றொடரை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் ... இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஸ்வர்ட்விக் ( Jan Svatvik) . தரவுமொழியியலில் தலைசிறந்தவர். இங்கிலாந்தில் 1950-களில் ஒரு மிகப் பெரிய கொலைவழக்கு... ஈவான்ஸ் ( Timothy John Evans) என்பவர் தனது மனைவியையும் மகளையும் கொன்று புதைத்துவிட்டார் என்ற ஒரு கொலை வழக்கு. அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டு, தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் உண்மையில் கொலைசெய்தவர் பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர். கிறிஸ்டி ( Christy) என்பவர்தான் உண்மையில் இந்தக் கொலைகளையும் மேலும் நான்கு கொலைகளையும் செய்தவர். ஆனால் நீதிமன்றமோ ஈவானின் வாக்குமூலத்தை ஏற்கத் தயாரில்லை. எனவே தண்டனை விதித்தது. ஆனால் பல ஆண்டுகளாக அங்குள்ள பத்திரிகைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஈவான் குற்றவாளி இல்லை.. என்று போராடினார்கள். இறுதியில் மொழியியல் அடிப்ப்படையில் கிறிஸ்டிதான் கொலைபுரிந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் இவரும் வேறு ஒரு கொலைவழக்கில் நண்டனை விதிக்கப்பட்டு, தூக்கில் ஏற்றப்பட்டு இருந்தார். இருப்பினும் இறுதியில் பாராளுமன்றத்தின்வழியே ஈவான் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு.... அவரது தூக்குக்குப் பின்னர் ''விடுதலை'' ( posthumous pardon) செய்யப்பட்டார். இதையொட்டித்தான் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ''தூக்குத்தண்டனையே '' கைவிடப்பட்டது!
குற்றவாளிகள் கூறியதாகப் போலிஸ் எழுதிக்கொள்ளும் வாக்குமூலங்களில் மொழிநடையில் உள்ள முரண்பாடுகளைவைத்துக்கொண்டு, உண்மை எது, பொய் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம். இப்போதெல்லாம் plagiarism வழக்கமாகிவிட்டது. ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை இதற்காகத் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டது அறிந்ததே! இதையெல்லாம் இத்துறை கண்டுபிடித்துவிடலாம். இந்தத் துறைக்கு இந்தியாவில் அவ்வளவு முக்கியத்துவம் இன்னும் கொடுக்கப்படவில்லை! இதுபற்றிய மேல்விவரங்களுக்கு...


-------------------------------------------------------------------------------------------------------
மொழியின் பரந்து விரிந்த பயன்பாடுதான்! எனவே மொழி எங்கெல்லாம் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் மொழியாய்வு உண்டு! எனவே மொழியமைப்பை - இலக்கணத்தை - ஆய்வுசெய்கிற பிரிவு மட்டுமே மொழியியல் இல்லை. மொழிக்கும் மொழியோடு தொடர்புடைய பிற துறைகள் அனைத்துக்கும் இடையில் உள்ள ஊடாட்டம்பற்றிய ஆய்வுகள் அனைத்தும் மொழியியலில் அடங்கும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லோரும் இரண்டு கால்களைக்கொண்டுதான் நடக்கிறோம். இது பொது விதி. இந்த விதியை ஒருவர் மாற்ற நினைத்தால் கீழே விழுந்துவிடுவார். நடக்கமுடியாது. . ஆனாலும் ஆளுக்கு ஆள் கால்களைத் தூக்கிவைப்பதில் வேறுபாடு இருக்கிறது அல்லவா? இது தனி விதி. அது அவருடைய நடைப் பண்பு... சிறப்பு! அதுபோல, அனைவருடைய தமிழ் பேச்சுரை அல்லது எழுத்துரையில் தமிழின் பொது இலக்கணம் இருக்கும். இதை யாரும் மீறமுடியாது. மீறக்கூடாது. '' நான் நேற்று வந்தான் '' என்று கூறமுடியுமா? ''நான் நேற்று வந்தேன்'' என்றுதான் கூறவேண்டும். ஆனால் இதில் சில மாற்றங்கள் செய்யலாம் '' வந்தேன் நான் நேற்று'' ...'' நேற்று நான் வந்தேன் '' '' நான் வந்தேன் நேற்று'' என்று பலவகையில் மாற்றியமைக்கலாம். எதற்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதைப் பொருத்தும் மாற்றலாம். அல்லது கவிதை நடைக்காக மாற்றலாம். '' சீதையைக் கண்டேன்'' - உரைநடை... '' கண்டேன் சீதையை'' - கவிதையாகிறது. இவையெல்லாம் ஒருவரின் மொழி ஆளுமை.... தனிச்சிறப்பு. இதுவே நடையியல் (Stylistics).
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 19 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (5)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (5)
----------------------------------------------------------------------------
Discourse என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகக் '' கருத்தாடல் '' என்ற சொல்லை நானும் பேரா. பொற்கோ அவர்களும் இணைந்து உருவாக்கினோம். ''சொல்லாடல்'' '' உரையாடல்'' போன்ற சில தொடர்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் '' கருத்தாடல் '' என்ற சொல்லே இன்று நிலைத்துவிட்டது. கருத்தாடல் என்ற சொல்லானது மொழித்தொடர்களைமட்டும் குறிப்பது கிடையாது. நாம் மொழித்தொடர்களை வெளிப்படுத்தும்போது, அவற்றோடு இணைக்கிற உடல் மொழிகள் ( Body language) , படங்கள், அட்டவணைகள் போன்ற மொழிசாராக் கூறுகளையும் பயன்படுத்துகிறோம். எனவே மொழிசார் கூறுகளையும் (Verbal means) மொழிசாராக் கூறுகளையும் ( non-verbal means) இணைத்து , நமது கருத்துப்புலப்படுத்தத்தில் பயன்படுத்துகிறோம். எனவே கருத்தாடல் என்ற சொல்லே பொருத்தமானது என்று பொற்கோ அவர்கள் கூறினார். மொழிசார்கூறுகளை மட்டும் கொண்ட பகுதிக்கு (Text) ... பனுவல் என்ற பழந்தமிழ்ச்சொல்லைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்தினோம்.

1950 -களில் மொழியியலாளர்கள் பொதுவாகத் தனித்தனிச் சொற்களையும் , தொடர்களையும் மட்டுமே ஆய்வுசெய்வதில் முனைப்பாக இருந்தனர். அப்போது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷெல்லிக் எஸ் ஹாரிஸ் ( Zellig S Harris) என்ற மொழியியல் அறிஞர் கருத்தாடல்பற்றிப் பேசினார். இவர் நோம் சாம்ஸ்கியின் ( Noam Chomsky) ஆசிரியர் ... வழிகாட்டி / மொழியியல் தந்தை என்று பிரான்சில் அழைக்கப்பட்ட எட்வர்டு சபீர் ( Edward Sapir) இவரைத் தன் வாரிசு என்று அழைத்தார்..... அமெரிக்காவில் அமைப்புமொழியியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட புளூம்ஃபீல்டால்( Bloomfield) பாராட்டப் பெற்றவர் ..... முதன்முதலாக அமைப்புமொழியியல் கோட்பாடுகளைத் தெளிவாக வரையறுத்து, Methods in Structural Linguistics என்ற நூலில் கூறியவர்.... முற்போக்குச் சிந்தனையாளர். கருத்தாடல்பற்றி தனது முதல் கட்டுரையில் ஒரு முழுத்தொடராகத்தான் பேச்சையோ அல்லது எழுத்தையோ ஆய்வுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். இதுவே தற்கால மொழியியலில் கருத்தாடல் ஆய்வின் தொடக்கமாகும். " Sentences in Combination " - '' இணைந்து அமைகிற வாக்கியங்கள்'' ... என்பதே ஆய்வின் அடிப்படையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தில் எம் ஏ கே ஹாலிடே ( M A K Halliday) என்ற மொழியியல் அறிஞர் மொழி அமைப்புக்கு மட்டுமல்லாமல், மொழிப் பயன்படுத்தத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இவருக்கு வழிகாட்டி பிரபலமான மொழியியல் அறிஞர் ஜே ஆர் ஃபிர்த் ( J R Firth). இவருக்கு வழிகாட்டி முதன்முதலாக மானிடவியலையும் மொழியியலையும் இணைத்து ஆய்வு செய்த பிரபல அறிஞர் மாலினோஸ்கி ( B . Malinowski). இவர்கள் அனைவரின் முக்கியக் கருத்து .... மொழி அமைப்பை அதனுடைய பயன்படுத்தத்திலிருந்து பிரித்து ஆய்வு செய்யக்கூடாது. அவ்வாறு ஆய்வு செய்தால் மொழியின் இயற்கையை .. பண்புகளை.. நாம் புரிந்துகொள்ளமுடியாது . சுருக்கமாகச் சொன்னால், ஹாலிடே வலியுறுத்தியது '' Use of Sentences'' - வாக்கியங்களின் பயன்படுத்தம்'' என்பதாகும்.
ஹாரிஸ் வலியுறுத்தியது ... " Sentences in Combination"
ஹாலிடே வலியுறுத்தியது .... " Use of Sentences "

இந்த இரண்டின் அடிப்படைகளையும் இணைத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த மொழிபயிற்றல் அறிஞர் ஹென்றி விடோவ்சன் தற்போது வலியுறுத்துவது " Use of Sentences in Combination" .... ''இணைந்து அமைகிற வாக்கியங்களின் பயன்படுத்தம்''.
இதிலிருந்துதான் கருத்தாடல் நோக்கில் மொழிபயிற்றல் என்ற கண்ணோட்டம்... அணுகுமுறை... தற்போது மொழிபயிற்றலில் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்துகிறது. இவ்வளவு விரிவாக இந்த வரலாற்றை நான் கூறவேண்டியதன் அவசியம்.... மொழியியலில் கருத்தாடல் ஆய்வு என்பது திடீரென்று முன்வைக்கப்படுகிற ஒரு கருத்து இல்லை. 100 ஆண்டுகளுக்கு மேலாக மொழியியல் அறிஞர்கள் மேற்கொண்டு வருகிற ஆய்வுகளின் ஒரு தொடர்ச்சியே என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதேயாகும். இந்த வரலாற்றுப் பின்னணியில் இனி நாம் கருத்தாடல் நோக்கில் மொழிபயிற்றல்பற்றி ஆராயலாம். இதுபற்றி அடுத்து விரிவாக எழுதுகிறேன்.

திங்கள், 18 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (4)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (4)
----------------------------------------------------------------------------
இங்கிலாந்து மொழியியல் அறிஞர்களும் ஐரோப்பிய கவுன்சிலைச் சேர்ந்த மொழியியல் அறிஞர்களும் 1970-க்குப்பின்னர் ... இலக்கணத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட பாடத்திட்டம் , மொழிபயிற்றலுக்கு ... குறிப்பாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக அல்லது அந்நியமொழியாகக் கற்றுக்கொடுப்பதற்கு ... போதாது ... சரிவராது என்று முடிவுக்கு வந்தனர்.

டி ஏ வில்கின்ஸ் ( DA Wilkins) இதுபற்றித் தெளிவான கருத்துகளைத் தனது " Notional Syllabus " என்ற நூலில் முன்வைத்தார். ஏறத்தாழ அதேநேரத்தில் Dell Hymes என்ற சமூகமொழியியல் அறிஞர் , கருத்துப்புலப்படுத்தத் திறன் (Communicative Competence ) என்ற ஒரு புதுமையான கருத்தை முன்வைத்தார்.
அதுவரை நோம் சாம்ஸ்கி முன்வைத்த Linguistic Competence என்ற கருத்தே ஓங்கி ஒலித்தது. சாம்ஸ்கியின் கருத்துப்படி, ஒருவரின் வெளிப்படையான மொழிச்செயல்பாட்டிற்குப் பின்புலமாக ... அவரது மூளைக்குள் அந்த மொழிபற்றிய உள்ளார்ந்த அறிவு அமைந்துள்ளது. அதுவே ( Linguisitc Competence) அவரது புறமொழிச்செயல்பாடுகளுக்குக் காரணம் என்று கூறி.... அதைக் கண்டறிவதே மொழியியலின் பணி என்று வலியுறுத்தினார். இந்த ஆய்வானது இறுதியில் அனைத்துமொழிகளுக்கும் அடிப்படையான .... குழந்தை பிறக்கும்போதே அதனுடைய மூளைக்குள் அமைந்துள்ள ... ஒரு பொதுமை இலக்கணத்தைக் கண்டறிய உதவும் என்று கூறினார். அவரது ஆய்வு இன்று பல மடங்கு வளர்ந்துள்ளது என்பது உண்மை....
ஆனால் டெல் ஹைம்ஸ் கூறியதாவது .... ஒருவர் தனது மொழியில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு ... அவரது புறமொழிச்செயல்பாடுகளுக்கு ... சாம்ஸ்கி கூறுகிற உள்ளார்ந்த மொழித்திறன்மட்டும் போதாது... குறிப்பிட்ட சமுதாயத்தில் யாரிடம், எவ்வாறு , எதை , எப்போது பேசவேண்டும் என்ற கருத்துப்புலப்படுத்தத் திறனும் தேவை என்று கூறி, அதுதான் கருத்துப்புலப்படுத்தத்திறன் என்று கூறினார். இந்தத் திறனும் சாம்ஸ்கி கூறுகிற மொழித்திறனும் இணைந்துதான்..... ஒருவருக்கு மொழிச்செயல்பாட்டுத் திறனுக்கு அடிப்படையாக அமைகிறது என்று கூறினார். இந்தக் கருத்தானது .... மொழிபயிற்றலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதேவேளையில் இங்கிலாந்தில் விடோவ்சன் ( Henry Widdowson) என்ற மொழியியல் அறிஞர் .... கருத்தாடல் ( Discourse) நோக்கில் மொழிபயிற்றல் என்ற ஒரு கருத்தை வளர்த்தெடுத்தார். வில்கின்ஸ் முன்வைத்த கருத்துநோக்குப் பாடத்திட்டம் ( Notional Syllabus) , செயல்பாட்டுநோக்கில் பாடத்திட்டம் ( Functional Syllabus), இரண்டையும் இணைத்த கருத்துநோக்கு-செயல்பாட்டுநோக்குப் பாடத்திட்டம் ( Notional - Functional Syllabaus) ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று ஏற்றுக்கொண்டாலும் ... இவையும்கூட தனித்தனிக் கருத்துநோக்குக்கு ... தனித்தனிச் செயல்பாட்டுக்கு .... மொழித்தொடர்களை எவ்வாறு உருவாக்கிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொடுப்பதாகத்தான் அமைகிறது... இது போதாது.
ஒருவர் மற்றொருவருடன் உரையாடும்போது.... தனித்தனி மொழித்தொடர்களை உருவாக்கத் தெரிந்தால்மட்டும் போதாது.... ஒரு முழுமையான கருத்தாடலை.... உரையாடலை.. பல கருத்துநோக்குகளையும் பல செயல்பாடுகளையும் இணைத்து ... மேற்கொள்ளும் திறன் வேண்டும் என்று கூறினார். இதுவே அவர் முன்வைத்த கருத்தாடல் நோக்கில் மொழி பயிற்றல் ஆகும் ( Communicative Approach to Language Teaching - CLT) . மொழித்தொடர்களைக் கருத்துப்புலப்படுத்தத்திற்காகத்தான் உருவாக்கிப் பயன்படுத்துகிறோம்.... Language for Communication ... என்று வலியுறுத்தினார். அதுமட்டுமல்ல... மொழியைக் கற்றுக்கொடுக்கும் வழியும் கருத்துப்புலப்படுத்தச் செயல்பாடுகளின் வழிதான் ( Language as Communication). அவருடைய மொழிபயிற்றல் கோட்பாட்டின் அடிப்படை... கருத்துப்புலப்படுத்ததிற்காக மொழி கருத்துப்புலப்படுத்தவழி மொழி ( Language for Communication and as Communication) என்பதேயாகும். அதாவது கருத்துப்புலப்படுத்திற்கான மொழியைக் கருத்துப்புலப்படுத்தவழியே கற்றுக்கொடுக்கவேண்டும் ... இதுதான் விடோவ்சனின் மொழிபயிற்றல் கோட்பாட்டின் அடிப்படையாகும். இதுபற்றி விரிவாக அடுத்து எழுதுகிறேன்.


மேலும் உணர்ச்சிகளைக் காட்டு

ஞாயிறு, 17 ஜூலை, 2016

இளம் மாணவர்களை வாழவிடுங்கள்!

இளம் மாணவர்களை வாழவிடுங்கள்!
-------------------------------------------------------
50 ஆண்டுகளுக்கு முன்னர் எல்கேஜி, யுகேஜி கிடையாது! ஒன்றாம் வகுப்புதான் உண்டு! விரல்விட்டு எண்ணக்கூடிய நகரங்களில்தான் ஆங்கிலவழிப் பள்ளிகள் ( ''கான்வெண்ட்') உண்டு! தனியார் பள்ளிகள் மிகக் குறைவு! அரசாங்கப் பள்ளிகள்தான்! 5 ஆம்வகுப்புவரை உள்ள பள்ளிகள்! 8 ஆம் வகுப்புவரை உள்ள பள்ளிகள்! 11 ஆம் வகுப்புவரை உள்ள பள்ளிகள்! கையில் சிலேட்டு! குச்சி! ஒரு சில புத்தகங்கள், நோட்டுகள்! 5 ஆம் வகுப்பில்தான் A, B, C, D.... !

இன்றோ.... எல்கேஜி, யுகேஜி மட்டுமல்ல! பிரி-எல்கேஜி கூட இருக்கிறது! ஆங்கில வழிப் பள்ளிகள் இல்லாத ஊர்களே இல்லை! பெயர்கள்கூட ... ஆக்ஸ்போர்டு ஸ்கூல், கேம்பிரிட்ஜ் ஸ்கூல், அமெரிக்கன் ஸ்கூல் ! குழந்தை பிறக்கும்போதே ஆங்கிலத்தோடு பிறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு! தமிழ் ... தெரியாது என்று குழந்தை சொன்னால்தான் பெற்றோர்களுக்குப் பெருமை!
முன்னர் வாரத்திற்கு ஏதாவது ஒருநாள், இரண்டுநாள் சீருடை உண்டு! இப்போது தினந்தோறும் சீருடை மட்டுமல்ல... கழுத்தில் ''டை'' ! காலில் விலையுயர்ந்த ஷூ! முதுகில் ஒரு பெரிய ''கோணிச்சாக்கு'' மூட்டை! அதை மாணவர்களின் அம்மா, அப்பா அல்லது வேலையாள் தூக்கிக்கொண்டு வரவேண்டும்! கடன் வாங்கியாவது இதைச் செய்யவேண்டும்! பள்ளிக் கட்டணம் .... 50 ஆயிரம் ... 80 ஆயிரம்! நான் படிக்கும்போது, உயர்நிலைப் பள்ளி வரும்போதுதான் 10 அல்லது 20 ரூபாய் கட்டணம்! கல்லூரியில்கூட 500 அல்லது 1000 தான் கட்டணம்!
மாலையில் அன்று மாணவர்கள் .... நண்பர்களுடன் ''தொட்டுப்பிடித்து விளையாடுதல்'' , ''கோலி, பம்பரம் விளையாடுதல்'' , ''பாண்டி விளையாடுதல்'' .... இப்போது விளையாடுவதற்கே மாணவர்களுக்கு நேரம் கிடையாது! ''டியூஷன்''.... அப்படி ஏதாவது சனி, ஞாயிறு நேரம் கிடைத்தால்.... கிரிக்கெட், டென்னிஸ்... பெற்றோரின் வசதிகளைப் பொறுத்து!
6 ஆம் வகுப்பு படிக்கும்போதே (11 வயதில்) .... ஐஐடி-க்குப் பயிற்சி! சனி, ஞாயிறுகளில் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை! அதாவது 7 ஆண்டுகளுக்கு முன்னரே ''ஸ்பெஷல்'' படிப்பு! அப்படியென்றால்.. பள்ளியில் படிக்கிற படிப்பு? அது ''பெயரளவுக்கு'' ! அந்தச் சான்றிதழ் தேவைப்படுகிறது! அவ்வளவுதான்!
இதெல்லாம் சரி! மாணவர்கள் சமூகவாழ்க்கைக்கு எப்போது தங்களைத் தயார்படுத்தப்போகிறார்கள்? இதுதான் எனது ஐயம்! இதனால்தான் பல பண்பாட்டுப் பிரச்சினைகள்! ரோபோட்டுகளை மனிதர்களாக ஆக்க முயற்சி மேற்கொள்கிற தற்போதைய காலகட்டத்தில் .... மாணவர்களை உணர்வற்ற .... சுதந்திரம் அற்ற... ரோபோட்டுகளாக மாற்றுகிறார்கள்! உண்மையான அறிவு எது? ... மதிப்பெண்களுக்காக நெட்டுரு போடுகிற படிப்பு எது? வேறுபாட்டைப் பார்க்கத் தயாராக இல்லை! இப்போது! 1200 -க்கு 1200.... 1999, 1998.... வாங்கமுடியுமா?
உண்மையில் தெரிந்தோ, தெரியாமலோ ... இளம் மாணவர்கள் .... சர்க்கஸில் விலங்குளைப் பழக்குவதுபோல... பயிற்சிக்கு உட்படுகிறார்கள்! மக்கள் தலையில் ... அறிவுபற்றி ... அறிவுவளர்ச்சிபற்றி... குழந்தைகள் வளர்ப்புபற்றி .... மிகத் தவறான கருத்துகள் திணிக்கப்பட்டுள்ளன. இதனால் உண்மையில் சமுதாயத்திற்கோ... அல்லது தனிநபர்களுக்கோ... எவ்விதப் பயனுமில்லை! மாயைகள் ... போலிப் பண்பாடுகள் திணிக்கப்படுகின்றன! சமூக உணர்வு இல்லாமல்... இயந்திரமாக மாற்றப்படுகிறார்கள்! தாய்மொழி உணர்வோ.... பிறந்த மண்ணின் சமுதாய மாற்றம்பற்றியோ ... சிந்தனை இல்லாமல் வளர்க்கப்படுகிறார்கள்! 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? சிந்திக்கவேண்டும்! மிகத் தீவிரமாகச் சிந்திக்கவேண்டும்! பிறப்பில் குழந்தைகள் மனிதக் குழந்தைகளாகப் பிறந்துமட்டும் பயனில்லை..... மனிதர்களாக வளர்க்கப்படவேண்டும்! ரோபோட்டுகளாக.... இயந்திரங்களாக - வளர்க்கக்கூடாது!
குழந்தைகளின் மூளைவளர்ச்சிபற்றி அறிவியல் அடிப்படையில் சிந்தித்து .... புரிந்து... மூளையின் இயற்கையான வளர்ச்சியைத் தடைபடுத்தாமல்..... அதற்கேற்றவகையில் குழந்தைகளை வளர்ப்பது மிக அவசியமானது!

-------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எழுதியுள்ளது பள்ளிப் படிப்பைப் பற்றிமட்டும்தான்! கல்லூரிப் படிப்புபற்றி ..... அதைத் தனியாக எழுதவேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்வழிக் கல்வி ... ஆங்கிலமொழிக் கல்வி ... ஆங்கிலமொழியைக் குறைந்த காலத்தில் நிறைவாகக் கற்றுக்கொடுக்கமுடியும். இரண்டாம்மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் மிகத் தெளிவான வழிகாட்டுதலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பின்பற்றினாலே போதும்! ஆனால் அதுபற்றியெல்லாம் கவைலைப்படாமல் ... மொழிக்கல்வியை வறட்சியாக..... வெறும் இலக்கணக் கல்வியாக ..... மதிப்பெண் பெறுவதற்கான கல்வியாக ... இங்கு மாற்றியுள்ளார்கள்! ஒரு மொழியைக் கற்றுக்கொடுப்பது வேறு.... அந்த மொழியைப்பற்றி ( இலக்கணம் போன்றவை) கற்றுக்கொடுப்பது வேறு... இந்த வேறுபாடு இன்னும் சரியாக... முழுமையாக இங்கு உணரப்படவில்லை. மொழிக்கல்விபற்றிக் கடந்த சிலநாள்களாக முகநூலில் மூன்று உரைகள் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதயுள்ளேன். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலமொழிப்பாடத்திட்டம் இன்றைய மொழிபயிற்றல் வளர்ச்சியின் அடிப்படையில் இங்கு உருவாக்கப்படுவதில்லை. மொழித்திறன்களைவிட மதிப்பெண்களே இங்கு முக்கியம்! அதுபோன்று ,, முறையாகத் தயாரிக்கப்பட்ட ஆங்கிலமொழிப் பாடங்களை அதனடிப்படையைத் தெரிந்துகொண்டு, முறையாகக் கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். நிச்சயமாக, ஒரு சில ஆண்டுகளில் ஆங்கிலத்தை ..... இரண்டாம்மொழியாக - கற்றுக்கொடுக்கமுடியும். பின்னர் தமிழ்வழி பாடங்களைக் கற்ற மாணவர்கள் அவற்றை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தமுடியும். English for Specific Purpose (ESP) , English for Science and Technology ( EST) என்ற அடிப்படையில் அதற்கான பாடநூல்களும் சந்தையில் கிடைக்கின்றன. இது மாயஜாலம் இல்லை. அறிவியல் அடிப்படை.... மொழிபயிற்றல் துறையின் வளர்ச்சி!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்றுபோல இன்றும் .. சிலேட்டு, குச்சிகளைக்கொண்டு கற்றுக்கொடுங்கள் என்று நான் கூறவரவில்லை.... புளியங்கொட்டைகளை அடுக்கி, எழுத்துகளைக் கற்றுக்கொடுங்கள் என்று நான் கூறவரவில்லை.... கணினியையே பயன்படுத்துங்கள்!. வேண்டாமென்று நான் கூறவரவில்லை! ஆனால் கைவிரல்கள்கொண்டு எழுதும்போது ,, மூளையில் எழுத்துகள் பதிவதோடு மட்டுமல்லாமல்..... விரல்களின் நுண்ணிய திறனும் வளர்கிறது. வாய்பாடுகளை இடைவேளைகளில் அன்று கற்றுக்கொள்ளும்போது ..... மனக்கணக்குத் திறன் நன்றாக இருந்தது...... இன்று இளம் மாணவர்கள் எதற்கெடுத்தாலும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் சிந்த்தித்துப் பார்க்கவேண்டும். ஒரு கட்டுரையை எழுதும்போது .... ஆங்கிலத்தில்.... சொற்பிழைகள், இலக்கணப்பிழைகள் இருந்தால்... மென்பொருளே திருத்திக்கொடுத்துவிடும், எனவே நாம் பயப்படவேண்டாம் என்று மாணவர்கள் நினைக்கக்கூடாது. வீட்டுப்பாடங்களை ... இணையதளங்களில் '' cut and paste" செய்து எழுதலாம் என்று மாணவர்கள் நினைக்கக்கூடாது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்தவேண்டும். உடம்புக்குப் புரோட்டீன், குளுகோஸ் தானே தேவை ... ஏன் நாம் கஷ்டப்பட்டுச் சாப்பிடவேண்டும் என்று நினைத்து யாராவது மாத்திரைகள்.. டானிக்கை விழுங்கிவிட்டு , சாப்பிடாமல் இருப்பார்களா? .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 15 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (3)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (3)
---------------------------------------------------------------------
மொழியியலில் 50-களில் ( சாம்ஸ்கிக்கு முன்னர்) குறிப்பாக இரண்டு மாறுபட்ட கோட்பாடுகள் - ஆய்வுமுறைகள் - நிலவின. (1) மொழி ஆய்வில் கள ஆய்வில் கிடைக்கிற மொழித்தரவுகளிலிருந்து தொடர்களையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்திலிருந்து (Use) பிரித்து, அவற்றின் அமைப்பைமட்டுமே ஆய்வு செய்யவேண்டும் என்ற அமைப்புமொழியியல் கோட்பாடு ( Structural Linguistics) . அமெரிக்காவில் புளூம்ஃபீல்டு, பிரான்சில் சசூர் போன்றவர்கள் இக்கோட்பாட்டில் உறுதியாக இருந்தனர் (2) தொடர்களையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்தின் மத்தியில் வைத்துத்தான் செய்யவேண்டும். அப்போதுதான் மொழியின் இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும் என்ற கோட்பாடு. இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிர்த் ( மானிடவியலாளர் மாலினோஸ்கியின் மாணவர்) , அவருடைய மாணவர் ஹாலிடே போன்றவர்கள் இக்கோட்பாட்டில் ( Systemic/ Functional Linguistics) உறுதியாக இருந்தனர்.

மேற்குறிப்பிட்ட முதல் கோட்பாடே - அமைப்புமொழியியலே- மொழிபயிற்றலில் இலக்கணம், சொற்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதே மொழிபயிற்றல் என்ற கருதுகோளுக்கு அடிப்படையாக அமைந்தது. அவற்றைக் கற்றுக்கொடுப்பதில் வேறுபட்ட வழிமுறைகள் தோன்றின. உளவியல் அறிஞர் ஸ்கின்னரின் ( Skinner) கோட்பாடுகளும் இதில் தனது பாதிப்பைச் செலுத்தின.
அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டாவது கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் சூழல் சார்ந்த மொழிப்பாடத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு மொழிபயிற்றலை மேற்கொண்டனர். வெறும் இலக்கணமும் சொற்களும் அல்ல.... அவற்றின் பயன்படுத்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மொழிபயிற்றலுக்கான பாடத்திட்டம் அமையவேண்டுமென வற்புறுத்தினர். இதன் பயனாகவே சூழல்சார் மொழிப்பாடத்திட்டம் ( Situational Syllabus).... பயன்படுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு மொழிப்பாடத்திட்டம் ( Notional Syllabus, Functional Syllabus, Notional-Functional Syllabus) போன்றவை முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில் சமூகமொழியியல் (Sociolinguistics), இனவரைவுமொழியியல் ( Ethnography of Communication) போன்ற மொழிக்கும் சமூகத்திற்கும் ... இனத்திற்கும்... பண்பாட்டிற்கும் இடையில் உள்ள உறவுகளைப் பற்றிய ஆய்வுகள் மொழியியலில் முக்கியத்துவம் பெற்றன.
மற்றொரு முக்கியமான ஒரு கருத்து தத்துவ அறிஞர் ஜே.எல். ஆஸ்டின் ( J L . Austin) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ' சொற்களைக் கொண்டு செயல்களை எவ்வாறு செய்வது ? ( "How to do things with words?) 1955-62 ஆண்டுகளில் ஆற்றிய உரைகள் மொழியியலில் ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தன. அவருடைய முக்கியமான கருத்து, ஒருவர் மொழித்தொடர்களை வெளிப்படுத்தும்போது, ஒரு பொருண்மையைமட்டும்( menaing) வெளிப்படுத்தவில்லை.... ஒரு செயலையும் (act) மேற்கொள்கிறார் என்பதே ஆகும். எந்தச் செயலைப் பேசுபவர் செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அத்தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடியாது என்பது அவரது கருத்து. '' நாளைக்கு வருகிறேன்'' என்று ஒருவர் மற்றொருவரிடம் கூறும்போது , (1) உறுதியளிக்கிறாரா (2) தனது வருகையைச் செய்தியாகத் தெரிவிக்கிறாரா (3) நாளைக்கு வந்து உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று எச்சரிக்கிறாரா (4) இன்று வரமுடியாது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறாரா ... இப்படி ஒரே தொடர் பல செயல்களைச் செய்யலாம். எனவே தொடருக்குப் பின்னால் உள்ள செய்கையைக் கேட்பவர் புரிந்துகொண்டால்தான், அத்தொடரை அவர் புரிந்துகொண்டார் என்று கொள்ளமுடியும். ஒருவர் '' தாகமாக இருக்கிறது'' என்று வீட்டில் சொன்னால், அவருக்குத் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பார்களா அல்லது '' அப்படியா ?' என்று ஒரு செய்தியாக எடுத்துக்கொண்டு, செயல்படுவார்களா?
ஆஸ்டினின் கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு, ஜான் சியர்ல் ( John Searle) போன்றவர்கள் '' பேச்சுச்செயல்'' ( Speech Act) என்ற ஒரு முழுமையான கோட்பாட்டையே முன்வைத்தார்கள். இது மொழிபயிற்றல் துறையின் மீது மிகுந்த செல்வாக்கு செலுத்தத்தொடங்கியது. ஐரோப்பிய கவுன்சில் ( Council of Europe) பரிந்துரைத்த மொழிபயிற்றல் பாடத்திட்டத்தில் இது நன்றாகவே வெளிப்பட்டது.
இவ்வாறு மொழியியல் கோட்பாடுகள் மாற மாற, வளர வளர வளர, 1950 வாக்கில் நிலவிய மொழிபயிற்றலுக்கான பாடத்திட்டங்களானது அடிப்படையிலேயே மாறத்தொடங்கின. குறிப்பாக, ஒரு மொழியின் இலக்கணத்தையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்திலிருந்து புறமாக வைத்துக் கற்றுக்கொடுக்கக்கூடாது என்ற கருத்து மேலோங்கத் தொடங்கியது. அடுத்து, 1980,90 வாக்கில் விடோவ்சன் ( Widdowson), சிங்க்லயிர் ( Sinclair) போன்றோர் முன்வைத்த ''கருத்தாடல் ஆய்வு'' (Discourse Analysis) .. என்ற மொழியியல் ஆய்வுமுறையானது, மொழிபயிற்றல் கோட்பாடுகளை மேலும் ஒரு அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டுசென்றது. இதைப்பற்றி அடுத்து எழுதுகிறேன்.
இந்த இடத்தில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். மொழியியல் அறிவியல் பல்வேறு தளங்களில் புதுப்புதுக் கோட்பாடுகளை முன்வைத்து தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. அதையொட்டி, மொழிபயிற்றல் துறையும் மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறது. இவற்றையெல்லாம், தமிழகத்தில் மொழிபயிற்றலுக்குப் பயன்படுத்தவேண்டும். கிணற்றுத் தவளையாக நாம் இருந்துவிடக்கூடாது. இவ்வாறு நான் கூறுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நல்ல எண்ணத்தில்தான் கூறுகிறேன். '' சென்றிடுவீர் எட்டுத்திக்கும் ... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' ... மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்'.

வியாழன், 14 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... (2)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (2)
----------------------------------------------------------------
நேற்று நான் கூறிய மொழிபயிற்றல் வழிமுறைகளில் '' நேரடி முறை'' Direct Method என்பதையும் இணைத்துக்கொள்ளவும். இந்த வழிமுறையில் மாணவர்களின் சூழலை முழுமையாகப் பயிலுகிற குறிப்பிட்டமொழிச் சூழலாகவே மாற்றி அமைப்பது ஆகும். அதாவது மாணவர்கள் தங்கள் நடைமுறைச் சூழலில் அந்த மொழியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதால், அவர்களுக்கு அந்த மொழியின் இலக்கணமும் சொற்களும் பற்றிய அறிவு வந்துவிடும் கூறப்படுகிறது. 

மொழி பயிற்றல் கோட்பாடுகளைப்பற்றி உரையாடுவதற்குமுன்னர் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
மொழி பயிற்றல்பற்றிய கலந்துரையாடலில் ஒரு சிலவற்றைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். முதல்மொழி, இரண்டாம்மொழி, மூன்றாம் அல்லது அந்நியமொழி என்ற வேறுபாடு... தமிழகத்தில் தமிழ் முதல்மொழி .... ஆங்கிலம் இரண்டாவது மொழி. ஆங்கிலத்தை இங்கு வகுப்புக்கு வெளியேயும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. வகுப்பறையில் பெற்ற ஆங்கில மொழி அறிவைக் கொண்டு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் கருத்துப்புலப்படுத்தச் செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் பல பள்ளிகளில் பிரெஞ்சும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் வகுப்பறையில் பெறுகிற பிரெஞ்சுமொழி அறிவைப் பயன்படுத்திப் பார்க்க வகுப்பறைக்கு வெளியே வாய்ப்புகள் கிடையாது. எனவே பிரெஞ்சுமொழிக் கல்வியை மூன்றாம் மொழி அல்லது அந்நியமொழி என்று கூறலாம். மேலும் பிரெஞ்சுமொழியைத் தாய்மொழியான தமிழ்மூலம் கற்காமல், இரண்டாம்மொழியான ஆங்கிலம்மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மொழி பயிலுகின்றவர்களின் வயது மிக முக்கியம்.... மூன்றிலிருந்து எட்டுவயதுவரை உள்ள மாணவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். அடுத்து ஒன்பதிலிருந்து பதின்மூன்று... அடுத்து, பதினான்கிலிருந்து பதினெட்டு... இவ்வாறு வயது கூடக்கூட ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் வேகம் குறைகிறது என்பது உளவியல்மொழியியில் ஆய்வாளர்களின் கருத்து... இதற்கு அடிப்படை.... மூளையின் இளகுதன்மை ... Plasticity.
குழந்தைகளைப் பொறுத்தமட்டில்.... ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை ஒரேநேரத்தில் குழப்பமின்றி கற்றுக்கொள்ளமுடியும் (Simultaneous Acquisition ) என்று இத்துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்! அதற்குக் காரணம்... குழந்தை ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, அதை தனக்குத் தெரிந்த தாய்மொழியோடு ஒப்பிட்டுக் கற்றுக்கொளவதில்லை... ஒவ்வொரு மொழியையும் அந்தந்த மொழியாகவே கற்றுக்கொள்கிறது. ஆனால் பெரியவர்கள் ஒரு அந்நிய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, தங்களது தாய்மொழி அல்லது தமக்குத் தெரிந்த மற்றொரு மொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது மொழி கற்றலின் வேகத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்து, தமிழ்மொழியில் நிலவும் இரட்டைவழக்குச் சூழல்.... குழந்தை பிறந்து வளரும்போது , இயற்கையாகப் பெற்றுக்கொள்கிற மொழி வழக்கு... பேச்சுத்தமிழ் வழக்கே ஆகும். குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது... பேச்சுத்தமிழில் முழுமையான திறனோடு செல்கிறது. அங்கு அதற்கு எழுத்துவழக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் அடிப்படையான இலக்கணம் பெரும்பாலும் ஒன்றாக இருப்பதால், ஆங்கிலம் போல் அல்லாமல், எழுத்துத்தமிழைக் குழந்தை விரைவாகக் கற்றுக்கொள்கிறது. பேச்சுவழக்கைக் குழந்தை பேச்சுவாயிலாகவே பெற்றுக்கொள்கிறது. ஆனால் எழுத்துத்தமிழைப் பிரதானமாக எழுத்துவழியாகக் கற்றுக்கொள்கிறது. வாசிப்புவழியாகவும் கற்றுக்கொள்கிறது. பாடல்கள், கதைகள் போன்றவற்றைப் பேச்சொலி வழியாகவும் கற்றுக்கொள்கிறது. இருப்பினும் பேச்சுவழக்கின் செல்வாக்கானது குழந்தையானது எழுத்து வழக்கைக் கற்றுக்கொள்வதில் வெளிப்படுகிறது. சற்றுப் பாதிக்கவும் செய்கிறது.
மேற்கண்டவற்றின் அடிப்படையில் (1) முதல்மொழி, இரண்டாம்மொழி, மூன்றாம்மொழி பயிற்றல்களில் வேறுபட்ட அணுகுமுறை தேவை. (2) இளம் வயதினருக்கா அல்லது முதியவர்களுக்கா என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

புதன், 13 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.. (1)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (1)
'' அவருக்குப் பேசத் தெரியவில்லை! யாரிடம் பேசுகிறோம், எதைப் பற்றிப் பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். படித்து என்ன பயன்? '' என்று சிலரைப்பற்றி நாம் கூறியிருப்போம் அல்லது நினைத்திருப்போம்! அதுபோன்று '' என்ன எழுதியிருக்கிறார்? எதை எப்படிச் சொல்லவேண்டுமென்று தெரியவில்லை. எம் ஏ படித்திருக்கிறாராம்! என்ன பிரயோசனம்? '' என்று சிலருடைய எழுத்துகளைப்பற்றி (தமிழ் அல்லது ஆங்கிலம்) நினைத்திருப்போம்!

இங்கு நாம் பார்க்கவேண்டியது ..... பேசியவருக்கு அல்லது எழுதியவருக்குத் தமிழோ அல்லது ஆங்கிலமோ எழுத, வாசிக்க, பேச, கேட்டுணரத் திறமை இல்லை என்று நாம் நினைக்கவில்லை. இலக்கணமெல்லாம் தெரிந்திருக்கலாம். இலக்கணத்தில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்கலாம்! ஆனால் ... கருத்துப்புலப்படுத்தத் திறன் ( Communicative Performance) இல்லை! இதுவே நமது விமர்சனம்!
ஏன் இந்த நிலை? மொழிபயிற்றல் ( Language Teaching) என்றால், குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தையும் சொற்களையும் ( grammar & words) கற்றுக்கொடுப்பதே என்ற ஒரு நிலை இன்னும் நீடிப்பதுதான்! மொழிப்பாடத்தின் அடிப்படையே இலக்கணம் என்று ஒரு தவறான கருதுகோள்! இங்கு மட்டுமல்ல, மேலைநாடுகளிலும் இந்த நிலைதான் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் நீடித்தது! இலக்கணத்தையும் சொற்களையும் எவ்வாறு கற்றுக்கொடுப்பது (methods of language teaching) , பயிற்றுவிப்பது என்பதில் பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டன! நேரடியாக இலக்கணத்தைச் சொல்லிக்கொடுப்பதா (Grammar -Translation method) , அல்லது கேட்டல்-பேசுதல் முறையில் (Audio-lingual method) கற்றுக்கொடுப்பதா அல்லது சூழல் அடிப்படையில் (Situational method) கற்றுக்கொடுப்பதா என்ற விவாதமே நீடித்தது. அதாவது மொழிபயிற்றலின் பாடத்திட்டம்(content of syllabus) மாறவில்லை... ஆனால் வழிமுறைகள் (teaching methods) மாற்றப்பட்டன!
பின்னர் ... ஒரு கட்டத்தில் ... இலக்கணத்தை அடிப்படையாகக்கொள்ளாமல், பல்வேறு சூழலுக்கேற்ற தொடர்களைக் கற்றுக்கொடுக்கும் பாடத்திட்டமே ( Situational Syllabus)) சரியானது என்று கூறப்பட்டது. இதில் ஒரு பிரச்சினை... கற்றுக்கொடுத்த சூழல்களில் மாணவர்கள் சரியான மொழித்தொடர்களைப் பயன்படுத்தும் திறனைப் பெறலாம். ஆனால் புதிதாக ... கற்றுக்கொடுக்காத ஒரு சூழலைச் சந்தித்தால்? சிக்கல்தான்! எனவே இதுவும் சரியில்லை...
மாற்றாக , இந்த மொழிவழிச் செயலுக்கு ( for a particular speech act) இந்தவகைத் தொடர் .... ஒன்றை வேண்டுவதற்கு ( Request Act) ஒரு வகைத்தொடர்... ஒன்றை மறுப்பதற்கு( Refusal Act) ஒரு வகைத்தொடர்... ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு ( Accepting Act) ஒரு வகைத்தொடர் என்று பலவகைப்பட்ட மொழிவழிச் செயல்களுக்கு ஏற்ற பலவகைத் தொடர்களைக் கற்றுக்கொடுப்பதே சரி என்று நினைத்தார்கள். அதுபோன்று 'இயல்வதைக்கூற (ability) இந்த வினைச்சொல், இயலாமையைக்கூற ( inability) இந்த வினைச்சொல், முடியாது ( impossibility) என்பதை வெளிப்படுத்த இந்த வினைச்சொல், வாய்ப்பு உண்டு ( Possibility) என்பதை வெளிப்படுத்த இந்த வினைச்சொல் ... '' என்ற கருத்துநோக்கின் ( different semantic concepts/ moods) அடிப்படையிலும் தொடர்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. முந்தைய மொழிப்பாடத்திட்டங்களைவிட இது சிறந்ததாகத் தோன்றினாலும், ஒருவர் ஒரு குறிப்பிட்ட உரையாடலில் பல்வேறு மொழிவழிச் செயல்களை ... கருத்துநோக்குகளை .... இணைத்து ஒரு முழுமையான உரையாடல்களைச் ( Coherent discourse) செய்ய இந்தப் பாடத்திட்டம் சரியாக இருக்காது.
ஒரு முழுமையான கருத்தாடலில்.... Discourse ... ( விளக்கக்கட்டுரை, மறுப்புக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, பாடம் எடுக்கும் கருத்தாடல் என்று பலவகை கருத்தாடல்கள்) பல மொழிவழிச்செயல்களையும் கருத்துநோக்குகளையும் இணைத்து எவ்வாறு கருத்துப்புலப்படுத்தம் செய்வது (act of communication).... இலக்கியக் கருத்தாடல், அறிவியல் கருத்தாடல், விமர்சனக் கருத்தாடல், வகுப்பறைக் கருத்தாடல், ஆய்வுரைக் கருத்தாடல் ( முகநூல் கருத்தாடல் உட்பட ! ) என்று பலவகைப்பட்ட கருத்தாடல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் பாடத்திட்டமே ... மொழிபயிற்றலில் பின்பற்றப்பட வேண்டும் என்ற கருத்து இன்று வலியுறுத்தப்படுகிறது!.
மொழிபயிற்றல் என்பது வெறும் இலக்கணத்தையும், சொற்களையும், தொடர்களையும் கற்றுக்கொடுப்பது அல்ல... கருத்துப்புலப்படுத்தத்திற்காகத்தான் மொழி ( language is for communication) ...எனவே அந்த நோக்கிலேயே மொழிப்பாடம் அமையவேண்டும் என்பது இன்றைய மொழிபயிற்றல் அறிவியலில் ( Language Teaching Science) முன்வைக்கப்படுகிறது. கருத்துப்புலப்படுத்த அடிப்படையில் பாடத்திட்டத்தை எப்படி உருவாக்குவது .... அந்தப் பாடத்திட்டத்தை எவ்வாறு கற்றுக்கொடுப்பது... இதுபற்றி அடுத்து எழுதுகிறேன்!

வெள்ளி, 8 ஜூலை, 2016

ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா? 
------------------------------------------------------------------------
இன்று ( ஜூலை 7, 2016) தமிழ் 'தி இந்துவில்' ஒரு செய்தி! தமிழ்வழி பொறியியல் படிப்பில் 1257 இடங்கள் காலி! 121 பேர்மட்டுமே இதுவரை சேர்ந்துள்ளனர். அதற்குக் கூறப்பட்டுள்ள காரணம் ..... '' தனியார் துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், தமிழ்வழிப்பிரிவில் சேர மாணவர் தயக்கம் காட்டுகின்றனர்.. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்புகள் குறைவு. வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டாலும் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. படித்து முடிக்கும் அனைவர்க்கும் எப்படி அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்? அரசு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி, தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேரமுடியுமா என்று மாணவர்கள் கேட்கின்றனர்''
எனக்குள்ள ஐயங்கள்.....
1) தமிழில் படித்தாலும், ஆங்கிலத்திலும் படித்தாலும், பொறியியல் அறிவு ஒன்றுதானே? ஆங்கிலத்தில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறு... தமிழில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறா? எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை ...
2) சரி. அயல்நாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்க ஆங்கில அறிவு தேவை என்று வைத்துக்கொள்வோம். ஆங்கிலத்தை - ஒரு மொழியாக - சிறப்பாக மாணவர்கள் கற்றுக்கொள்ளலாமே! அறிவு வேறு.... அறிவைப் பெறுகின்ற மொழி வேறு. ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவா? அறிவைத் தாய்மொழியில் பெற்றுவிட்டு, அந்த அறிவை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தத் தேவையான English for Technology என்று சிறப்பு ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொள்ளலாமே!
3) ஆங்கிலத்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் அல்லது பிரான்ஸில் வேலைபார்க்கவேண்டிய ஒரு சூழலில், ஒருவர் என்ன செய்கிறார்? அங்கெல்லாம் அவர்கள் நாட்டு மொழியில்தானே வேலை நடைபெறுகிறது. அங்கு சென்றபின்னர், அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவில்லையா?
4) மொழிக்கல்விக்கும் பாடங்களைக் கற்றுக்கொளவதற்கும் உள்ள வேறுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தானே இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன? தாய்மொழி அல்லாத தேவைப்படுகிற பிற மொழிகளை மொழிக்கல்வியில் பெறுமுடியாதா?
5) சாம்ஸ்கி கூறியுள்ளதுபோல ( Manufcturing consent) , ஆங்கிலம்பற்றிய ஒரு தவறான எண்ணத்தை - ஆங்கிலம் இருந்தால்தான் வேலை அல்லது அறிவு என்ற மூடநம்பிக்கையை - மக்களிடம் உருவாக்கி வைத்துவிட்டு, அதனடிப்படையில் மக்கள் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறுவது சரியா?
6) ஆங்கிலத்தையோ அல்லது வேறு எந்த மொழியையோ மொழியியல் பின்னணியில் மிகக் குறைந்த காலத்தில் கற்றுக்கொள்ளலாம். அதற்கான பல வழிமுறைகள் மொழிபயிற்றல் என்ற செயற்படுத்த மொழியியலில் உருவாக்கப்பட்டுள்ளன.' ஆடத் தெரியாதவளுக்குத் தெரு கோணல்' என்ற பழமொழிபோல, பயிற்றுமொழிக்கும் மொழிக்கல்விக்கும் உடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் ... ஆங்கிலத்தில் பாட அறிவைப் பெறவில்லையென்றால், அறிவே இருக்காது... வேலை வாய்ப்பே இருக்காது என்று நினைப்பது சரியா'
இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அகற்றாமல், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சியை - தமிழ்ப் பரவலை - ஏற்படுத்துவது மிகக் கடினம்.
மூன்று மாதங்களில் அடிப்படை ஆங்கிலத்தையும் அடுத்துச் சில காலங்களில் உயர்நிலை ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கமுடியும் ... தேவைப்பட்டால்! எனவே மாயைகளில் ... மூடநம்பிக்கைகளில் நாம் வாழக்கூடாது! மொழி ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்கவேண்டும்

ஆங்கில நீடிப்புக்கு .... ஒரு முக்கியக் காரணம்... நமது தொழில் உற்பத்தி அந்நிய நாடுகளின் தொழில்நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. நாம் என்ன படிக்கவேண்டும்... எந்த மொழியில் படிக்கவேண்டும் என்பதை அவையே தீர்மானிக்கின்றன! அதுமட்டுமல்ல... என்னென்ன பொருள்களை வீடுகளில் உபயோகிக்கவேண்டும்... பீசா, கேக், பர்கர் போன்று எதையெதைச் சாப்பிடவேண்டும்.. எந்த மருந்துகளைச் சாப்பிடவேண்டும்.... எதுவுமே நம் கைகளில் இல்லை! .. அது மட்டுமா? நமது மென்பொருள் பொறியியலாளர்கள் தாங்கள் பிறந்து வளரும்போது தூங்கி எழுகிற நேரத்தைக்கூட அவைதான் தீர்மானிக்கின்றன. அந்நிய நிறுவனங்களுக்குப் பகல் என்றால் ... நமக்கு இரவு!. எனவே அவர்கள் பகலில் வேலைபார்க்கும்போது.... அவர்களுக்காக நமது பொறியியலாளர்கள் இரவில் வேலைசெய்யவேண்டும! இதைவிட ஒரு மோசமான சூழல் எங்காவது நீடிக்குமா? இதற்கிடையில் நம் சிந்தனையை மழுங்கடிக்க .... கிரிக்கெட், தொலைக்காட்சி. சூப்பர் சிங்கர் ... மோசமான சூழலா அல்லது கேவலமான சூழலா?

நான் முதல்வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை தமிழ்வழிக்கல்வியில்தான் படித்தேன். பின்னர் கல்லூரியில் தமிழ்வழிக்கல்வி இல்லாததால் இளங்கலை ஆங்கிலவழிக் கல்வியில் படித்தேன். பின்னர் தமிழ் முதுகலை படித்தேன். பின்னர் முதுகலை மொழியியல் ஆங்கிலத்தில் படித்தேன். முனைவர் பட்டம் அப்போது ஆங்கிலத்தில்தான். பிரச்சினை இல்லை. எனவே ஆங்கிலவழிக் கல்வியில் படிக்காததால் ஆங்கில அறிவு இருக்காது என்பது தவறான கருத்து. எனவே தமிழ்வழிக்கல்வியில் படித்ததால், ஆங்கிலம் பேசமுடியாது, பயன்படுத்தமுடியாது என்பது தவறு. எனது மகனையும் பள்ளிக்கல்வியில் தமிழ்வழிக்கல்வியில்தான் படிக்கவைத்தேன். இன்று அமெரிக்காவில் வேலைபார்க்கிறான். ஆங்கிலத்தில் பிரச்சினை இல்லை. நானும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறேன். மொழி ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை! சாம்ஸ்கியின் மொழியியல் நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. ஆனால் அதைச் சரியாக உணர்ந்து தமிழில் எழுதமுடிகிறது. மூளையில் கருத்துத் தெளிவு இருந்தால், தாய்மொழியியல் தானாக அது வெளிவரும். சில கலைச்சொற்களில் சிக்கல் வரலாம். அதையும் தீர்க்கமுடியும்.

வியாழன், 7 ஜூலை, 2016

மொழியியல் தமிழ்மொழிக்கு எதிரானதா?

வினா : மொழியியல் தமிழ்மொழிக்கு எதிரானது, அது உண்மையான தமிழ்மொழி ஆய்வுக்கு எதிரானது என்று கூறப்படும் கருத்து சரியா?

விடை: இல்லை. பிற அறிவியல்கள்போன்று சமூக வளர்ச்சியில் தேவையையொட்டித் தோன்றி வளர்ந்துள்ள ஒரு அறிவியல்தான் மொழியியல். குறிப்பிட்ட மொழிபற்றிய ஆய்வாக இல்லாமல், பொதுவாக ‘மனித மொழி’ என்பதை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கின்ற ஒரு அறிவியலே இது. ஆய்வுகளுக்குக் கருதுகோள்களை முன்வைப்பது, அவற்றின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது, அந்த ஆய்வுகளின் அடிப்படையில் மொழிபற்றிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் முன்வைப்பது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் மொழியியல். மொழியின் அமைப்பைப்பற்றி மட்டுமல்லாமல், மொழிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு, மொழிக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு, மொழிக்கும் மனித மனத்திற்கும் உள்ள தொடர்பு என்று பல முனைகளில் வளர்ந்துள்ளது மொழியியல். இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டில்தான் இத்துறை அறிமுகமாகியது. பூனே டெக்காண் கல்லூரியில்தான் இந்த அறிவியலைப் பயிற்றுவிக்கும் கோடைகாலச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. அதில் பயின்ற அல்லது பயிற்சியாளராகப் பணியாற்றிய பேராசிரியர்கள் தெ.பொ.மீ., வ.அய். சுப்பிரமணியம், முத்துச்சண்முகம்பிள்ளை, பி ஹைச் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் தென்னகத்தில் இந்தத் துறையைப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தினார்கள். தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கேரளப் பல்கலைக்கழகத்திலும் ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் மொழியியல் துறைகள் நிறுவப்பட்டன. அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்ப் பேராசிரியர்களாக உருவாகியிருந்த அகத்தியலிங்கம், இ. அண்ணாமலை, கு. பரமசிவம், இராம. சுந்தரம், குமாரசாமி ராஜா, தாமோதரன், செ.வை. சண்முகம், காமாட்சிநாதன், க. முருகையன், பா.ரா. சுப்பிரமணியன், இஸ்ரேல், விஜயவேணுகோபால் போன்றோர் தமிழ்மொழியை மொழியியல் அடிப்படையில் ஆராயத் தொடங்கினர். பேரா. வ. அய். சுப்பிரமணியம, அகத்தியலிங்கம், கு. பரமசிவம் போன்றோர் அமெரிக்காவிற்குச் சென்று சிறப்புப் பயிற்சிபெற்றார்கள். பின்னர் அவர்களின் மாணவர்களாகப் பேராசிரியர்கள் எம் எஸ் திருமலை, நீதிவாணன், கருணாகரன், சீனிவாசவர்மா, பொற்கோ, ஆர். கோதண்டராமன், ஞானசுந்தரம், கி. ரங்கன், ராஜாராம் போன்றார் மொழியியல் பயிற்சிபெற்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்ப்புலவர் படிப்பு பெற்றவர்கள். திராவிடமொழி ஒப்பிலக்கணம், தமிழ்மொழி வரலாறு, இன்றைய தமிழ் இலக்கணம், சங்கத்தமிழ் வரலாறு, பிற காலகட்டத் தமிழிலக்கியங்களின் மொழி ஆய்வு என்று பல்வேறு தலைப்புகளில் தமிழின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். உலகமொழிகள், திராவிடமொழிகள், சங்கத்தமிழ், இன்றைய தமிழ் என்ற பல தலைப்புகளில் பேரா. அகத்தியலிங்கம் தமிழை ஆராய்ந்து, நூல்கள் வெளியிட்டுள்ளார். பொற்கோ இன்றைய தமிழுக்கான இலக்கணம், தமிழை அயல்நாட்டவர்க்குக் கற்பித்தல் , தமிழுக்கும் ஜப்பானியமொழிக்கும் இடையில் உள்ள உறவு போன்ற தலைப்புகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றிய பேரா. வ.அய். சுப்பிரமணியம் தமிழாய்வை எவ்வாறு வளர்த்தெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்கள் அரசுகளின் உதவிகொண்டு, குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தையே உருவாக்குவதில் அவர் பெரும்பங்காற்றினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வரலாற்றைப் பேரா. தெ.பொ.மீ. முன்வைத்தார். இன்றும் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ஜெர்மனி , அமெரிக்கா, கனடா, போலந்து போன்ற பல நாடுகளில் தமிழ்மொழியைப் பயிற்றுவித்து வருபவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டில் மொழியியல் பயின்ற பேராசிரியர்கள்தான். இன்றைய தமிழுக்கான ஒரு சிறந்த அகராதியை அளித்த கிரியா அமைப்பில் அதற்காக உழைத்தவர்கள் பெரும்பாலும் மொழியியல் பின்னணி உள்ளவர்கள்தான். கணினித்தமிழிலும் மொழியியல் கல்வி பெற்றவர்கள் இன்று அளித்துவருகிற பங்கு தெரிந்ததே. இவ்வாறு தமிழ்மொழி ஆய்வுக்கும், தமிழ்க்கல்விக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு அளித்துவருகிற பேராசிரியர்கள் பலர் மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, மொழியியல் தமிழுக்கு எதிரானது என்று எவ்வாறு கூறமுடியும்? மேற்குறிப்பிட்ட மொழியியலார்கள் எல்லோரும் தமிழ் மொழியுணர்விலோ, மொழிக்காப்பிலோ குறைந்தவர்கள் அல்லர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பேரா. ஆரோக்கியநாதன் அமெரிக்காவிற்குச் சென்றும் தமிழ்பற்றித்தான் ஆய்வு மேற்கொண்டார் . செம்மொழித்தமிழ் மத்திய ஆய்வு நிறுவனம் உருவாகி, இன்று சிறந்த முறையில் செயல்படுவதற்கு அரும்பாடு பட்ட பேரா. க. ராமசாமி மொழியியல் பேராசிரியர்தான். மைசூரில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றும் மொழியியல் பேரா. ல. ராமமூர்த்தி கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் கணினித்தமிழ் பயிலரங்கம் பல நடத்தி, கணினித்தமிழ் வளர்ச்சிக்குப் பெரும்பாடு பட்டுவருகிறார். இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிற மொழியியல் பேராசிரியர்களுடைய பணிகள் எல்லாம் தமிழுக்குத் தீங்கா விளைவித்துள்ளன? எனவேதான் என்னுடைய முகநூல் தொடரில் தமிழ் மரபு இலக்கண ஆய்வாளர்கள், இலக்கிய ஆசியர்கள், நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் அனைவரையும் பற்றி எழுதிவருகிறேன்.

இன்றைய எழுத்துத்தமிழுக்கு இலக்கணம் படைத்தவர்களில்  ஐவர் மொழியியல் பேராசிரியர்கள் - 1. பேரா. அகத்தியலிங்கம், 2. பேரா. பொற்கோ, 3, பேரா. கருணாகரன் 4. பேரா. கு. பரமசிவம் 5. பேரா. நுஃமான் . இதையும் நண்பர்கள் கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
நண்பர்கள் பட்டாபு பத்மநாபன், முனைவர் முத்தையா இருவரும் முன்வைத்துள்ள கருத்துகள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டியவை. (1) மொழியியலில் ஒருவர் உண்மையான தேர்ச்சி பெற வேண்டுமென்றால், அவருடைய தாய்மொழி இலக்கணத்தைத் தெளிவாகக் கற்றிருக்கவேண்டும். இல்லையென்றால் மொழியியலையே அவரால் புரிந்துகொள்ளமுடியாது. (2) அதுபோன்றே மரபிலக்கணங்களை நன்றாகப் புரிந்துகொள்ள இன்றைய மொழியியல் அறிவு நிச்சயமாகத் தேவை. தொல்காப்பியத்தின் நுட்பங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றில் விடையளிக்கப்படாத ஐயங்களுக்குத் தெளிவுபெறவும் மொழியியல் கட்டாயம் தேவை. (3) கணினிமொழியியல் என்பது ஒரு தனித்துறை. அதற்கென்றே கோட்பாடுகளும் ஆய்வுமுறைகளும் உள்ளன. வெறும் மொழியியலும் வெறும் கணினியியலும் இணைந்த ஒரு துறை அல்ல அது. மொழியியலை அப்படியே கணினியில் பொருத்துவது அல்ல கணினிமொழியியல். அதற்கென்று தனிப்படிப்பும் ஆய்வும் தேவை. எனவேதான், கணினியியல் அறிவை மட்டும் கொண்டவர்களாலும் அத்துறையில் பங்களிக்கமுடியவில்லை. வெறும் மொழியியல் பின்னணி உள்ளவர்களாலும் பங்களிக்கமுடியவில்லை. இதனால்தான் சில கருத்தரங்குகளில் சிலருடைய கட்டுரைகள் சரிவர அமைவதில்லை. இதையே பல இடங்களில் நான் வலியுறுத்திவருகிறேன்.

மொழியியலுக்கு எதிராகக் கருத்துகளை முன்வைக்கும் நண்பர்கள் அந்தத்துறையைப்பற்றி த் தெரிந்து கொள்ளாமலேயே கருத்துரைக்கிறார்கள். அதுதான் எனக்கு வருத்தம். வரலாற்றில் பல அறிவியல்துறைகள் இதுபோன்ற எதிர்ப்புகளைச் சந்தித்துத்தான் வளர்ந்துள்ளன. மொழியியலுக்கும் இது பொருந்தும். இதுபோன்ற தவறான கருத்துரைகளால் மொழியியல் என்ற மொழி அறிவியலை வரலாற்றிலிருந்து யாரும் அழித்துவிடமுடியாது. சமூக வரலாற்றில் தேவையையொட்டித்தான் மொழியியல் தோன்றி வளர்ந்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும். தேவையில்லாததைச் சமுதாயமே கழித்துவிடும். கவலைவேண்டாம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India