திங்கள், 26 டிசம்பர், 2022

மறைமலை அடிகளாரின் நினைவு நாள் இன்று ... தமிழில் பிறமொழிச் சொற்களின் மேலாண்மை . . .

 

மறைமலை அடிகளாரின் நினைவு நாள் இன்று ... தமிழில் பிறமொழிச் சொற்களின் மேலாண்மை . . .

----------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய எழுத்துத்தமிழுக்கான ஒரு அடிப்படை அகராதியை . . . தமிழ்ச்சொற்பிழை திருத்திக்காக . . . உருவாக்க முயன்றேன். ஏறத்தாழ 70 ஆயிரம் அடிப்படைச் சொற்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

அவற்றில் வடமொழி, ஆங்கிலம் , தெலுங்கு, அராபியம், பாரசீகம் என்று பல அயல்மொழிகளின் சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 15 ஆயிரம் . அதாவது 20 விழுக்காடு சொற்கள் அயல்மொழிச்சொற்கள். ஆங்கிலச்சொற்கள் ஏறக்குறைய 2500 . வடமொழிச்சொற்கள் 11 ஆயிரம். 1500 சொற்கள் பிறமொழிச்சொற்கள். ''பரவாயில்லையே '' என்று நினைத்தேன்.

ஆனால், அந்த 15 ஆயிரம் சொற்களின் புழக்கம் மிகுதியாக இருக்கிறது. ஏனைய 50 ஆயிரம் தமிழ்ச்சொற்களின் புழக்கத்தைவிட, இந்த அயல்மொழிச் சொற்களின் புழக்க விழுக்காடு மிகுதியாக இருக்கிறது.

அதாவது அன்றாட நடைமுறையில் அவற்றின் மேலாண்மை மிகுதியாக உள்ளது. அவற்றில் பல சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. இருப்பினும் அயல்மொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.

இது ஒரு சமுதாயமொழியியல் சிக்கல். ஆனால் இதைத் திட்டமிட்டுக் குறைக்கமுடியும். பெரும்பான்மையான அயல்மொழிச் சொற்களுக்கு அன்றாடம் நாம் புழங்கக்கூடிய தமிழ்ச்சொற்கள் இருக்கவே செய்கின்றன.

அப்படியானால் . . . திட்டமிட்ட தமிழ்மொழி வளர்ச்சிச் செயல்பாடுகள் மூலம் இந்நிலையை மாற்றி அமைக்க முடியும். இதற்கான முயற்சிகளை எங்கள் தமிழ்மென்பொருளில் மேற்கொண்டுவருகிறோம். அயல்மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் தெரியாததாலோ அல்லது அயல்மொழிச்சொற்களுக்குப் பழக்கப்பட்டு விட்டதாலோ பலர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு நாம் உதவலாம்.

ஆனால் ''இல்லை, இல்லை, அயல்மொழிச்சொற்களைப் பயன்படுத்தினால் என்ன ?'' என்று கேட்பவர்களை நாம் என்ன செய்யமுடியும்? இன உணர்வு, மொழி உணர்வு அவர்களுக்கு இல்லை என்றுமட்டுமே நாம் கூற இயலும்!

முதலில் தமிழ்நாடு அரசாங்கம் தனது அலுவலகங்களில் தமிழ்மொழிச் சொற்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும்; உறுதிப்படுத்தவேண்டும். அதற்கான கருவிகளையும் பயிற்சிகளையும் அரசு அலுவலர்களுக்கு அளிக்கவேண்டும்.

அடுத்து, பள்ளிப் பாடநூல்களில் தமிழ்ச்சொற்களைக் கட்டாயப்படுத்தவேண்டும்.

அடுத்து, எழுத்துவழி ஊடகங்களுக்கு - குறிப்பாக விளம்பரங்களில் - இதைக் கட்டாயப்படுத்தவேண்டும்.

இவ்வாறு பலவழிகளில் முயன்றால்தான் . . . அயல்மொழிச்சொற்களின் புழக்கத்தைத் திட்டமிட்ட வகையில் இல்லாமல் ஆக்கமுடியும்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூன்று அகராதிகளை வெளியிட்டுள்ளது. ஆட்சிச்சொல் அகராதி. அயற்சொல் அகராதி, இணைச்சொல் - எதிர்ச்சொல் அகராதி.

பேராசிரியர் அருளி அவர்கள் ''இவை தமிழல்ல!'' என்னும் அயற்சொல் அகராதி (நான்கு தொகுதிகள்) வெளியிட்டுள்ளார். திரு. சுந்தரசீனிவாசன் என்பவர் '' பிறமொழிச்சொல் அகராதி'' வெளியிட்டுள்ளார். கோட்டையூர் இரா. மதிவாணன் அவர்கள் ''அயற்சொல் கையேடு'' வெளியிட்டுள்ளார். திரு. மு. அப்பாஸ் மந்திரி என்பவர் ''வடசொல் தமிழ் அகராதி'' வெளியிட்டுள்ளார். திரு. இறைக்குருவனார் உட்பட தமிழறிஞர்கள் பலர் இதுபோன்ற அகராதிகளை வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இவற்றையெல்லாம் பயன்படுத்தி, மேற்கொண்ட திட்டத்தை - ''தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவோம்'' என்ற திட்டத்தை நாம் செயல்படுத்தலாம்.

எனது எழுத்துக்களிலும் அயல்மொழிச்சொற்களின் புழக்கம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். ஆனால் இயன்றவரையில் நான் குறிப்பிட்டுள்ள அகராதிகளைப் பயன்படுத்தி, அவற்றைக் குறைத்துவருகிறேன். இதற்குத் தமிழ்ச்சொற்களைத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கமே தேவை. பழகப் பழக நாம் இந்தச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளலாம்.

நாம் செய்யவேண்டியது ... நாம் ஒரு உரையை எழுதியவுடன் மீண்டும் ஒருமுறை அதைப் படித்துப்பார்த்து, எங்கெங்கு பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம் என்பதைப் பார்த்து, அவற்றை மேற்குறிப்பிட்ட அகராதிகளின் உதவியுடன் திருத்திக்கொள்ளவேண்டும்.

மனம் இருந்தால் வழி உண்டு. ஊடகங்கள், விளம்பரங்கள், அரசு அறிக்கைகள், நாளிதழ், வாரயிதழ் போன்றவை போன்றவற்றில் இது கட்டாயமாக்கப்பட்டால், மக்கள் இதற்குப் பழக்கம் ஆகிவிடுவார்கள். தரையிலிருந்துகொண்டே செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களைக் கட்டுப்படுத்திச் செயல்படுத்த இயலும் இக்காலகட்டத்தில் .... மொழியில் இதைச் சொயல்படுத்துவது ஒன்றும் கடினமான செயல் இல்லை! தமிழ் மக்களிடையே இந்தத் ''தாய்மொழிப்புரட்சி'' நடைபெறவேண்டும்.

''புகைபிடித்தல், போதைப்பொருள் அருந்துதல், மது குடித்தல் போன்றவை உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும்'' என்று விளம்பரப்படுத்துவதுபோல, ''அயல்மொழிச்சொற்களைப் பயன்படுத்தல்'' என்பது தாய்மொழிக்கும் இன நலன்களுக்கும் கேடு விளைவிக்கும் என்ற பரப்புரை எடுத்துச்செல்லப்படவேண்டும். திரையரங்குகளில் இதை விளம்பரப்படுத்தவேண்டும். இல்லையென்றால் இலங்கைத் தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட இன்னல்களை நாமும் எதிர்நோக்கவேண்டியிருக்கவேண்டும் என்பதைத் தொடர்ந்து நினைவுபடுத்தவேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India