திங்கள், 26 டிசம்பர், 2022

மெய்யியலும் மதமும் - ''இந்து'' மதத்தின் ''மெய்யியல்”?

 

மெய்யியலும் மதமும் - ''இந்து'' மதத்தின் ''மெய்யியல்”?

------------------------------------------------------------------------------------------------------------------

திரு. இராமகி ஐயா அவர்கள் அத்வைதம், த்வைதம், விஷிஸ்டாத்வைதம் ஆகியவற்றிற்கான தமிழ்ச்சொற்களை முன்வைத்தபோது, மெய்யியல் , மதம் இரண்டும் வேறுபட்டவை என்று விளக்கியிருந்தார். அதையொட்டி நான் எனக்குள்ள ஐயம் ஒன்றை விளக்கும்படி ஐயாவைக் கேட்டிருந்தேன். அதற்கு நல்லதொரு விளக்கத்தை அளித்துள்ளார்.

இன்றைய சூழலில் - குறிப்பாக ''இந்துமதம்'' பற்றிய பலவேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகிற சூழலில் . . . இது அனைவருக்கும் நன்கு பயன்படும் என்று கருதி, இங்கே அவற்றைப் பதிவிடுகிறேன்.

திரு. இராமகி ஐயா

-----------------------------------------------------------------------

// மெய்யியலும் மதங்களும் வெவ்வேறு. அல்லொருமை, விதப்பொருமை, இருமை - மெய்யியல்கள். சனாதனம், சிவம். விண்ணவம் - மதங்கள்.//

ந. தெய்வ சுந்தரம்

-----------------------------------------------------------------------

//இந்த வேறுபாட்டைக் குறிப்பாக ஆய்வுமாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். மெய்யியல் (Philosophy) மதம் (Religion). ஒவ்வொரு மதத்திற்கும் பின்னால் ஒரு மெய்யியல் உண்டு.

அப்படியென்றால் ''இந்து மதம்'' (???) என்ற ஒரு மதத்தின் மெய்யியல் ஒன்றா? அல்லது பலவா? அல்லொருமை, விதப்பொருமை, இருமை ஆகிய மூன்று மெய்யியல்களும் ''இந்து மதம்'' என்பதில் அடங்குகிறதா? இது எனக்கு ஏற்படுகிற உண்மையான ஐயம்.

இராமகி ஐயா அவர்கள் கருத்து கூறினால் பயனுள்ளதாக இருக்கும். நண்பர் நாக இளங்கோவன் அவர்களும் கருத்து வழங்கினால் நல்லது. மேலும் அல்லொருமை, விதப்பொருமை, இருமை மூன்றுக்கும் ஏதோ ஒன்று பொதுவாக இருக்கிறது என்று கருதுகிறேன். அதனால்தான் இந்த மூன்று மெய்யியல்களையும் பின்பற்றுகிறவர்கள் தங்களை ''இந்து'' என்று அழைத்துக்கொள்கிறார்களா?//

திரு. இராமகி ஐயா

-----------------------------------------------------------------------

//அல்லிருமைக்காரர் சிவன், திருமால் போன்ற கடவுளரை ஏற்றவரில்லை. ”அகம் பிரம்மாஸ்மி” என்றவர் தமக்குள்ளே இறையிருப்பதாய் எண்ணுவோர். ”இறையும், தான் எனும் ஆன்மாவும இறையும் இரண்டல்ல; ஒன்றே” என்று எண்ணுவோர் அவர். அந்த நெறியை ஏற்றவர் எந்தக் கோயிலுக்குள்ளும் போகக் கூடாது. ஆனால் இப்பொழுது போகிறார். விதப்பொருமை எனும் நெறியை நிறுவிய இராமனுசர் ”விதப்பான ஒருமை” பேசி, சரணாகுதியை வலியுறுத்துவார். இந்தச் சரணாகுதி விளக்கத்தை ஏற்றதால் தான் அவர் திருவிண்ணவர் ஆகிப் பெருமாள் கோயிலை ஏற்றுக் கொள்வார். அவருக்குள் குரங்கின் பாவம், பூனையின் பாவம் என்று இருவேறு நிலையெடுத்தாலும் சரணாகுதி என்பது அவர்க்கு அடிப்படை. இருமை நெறி சொன்ன மத்துவர்க்கு கோயில் என்பது கட்டாயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. இந்த மூன்று நெறிகளில் விதப்பொருமையும், இருமையும் பேசுவோர் தம்மை இந்து என்று ஏற்றுக் கொள்ள மாட்டார். அல்லிருமையை ஒழுங்காய்ப் புரிந்துகொண்டோரும் இந்து என்ற கருத்தீட்டை ஏற்கார். வாயால் அல்லிருமை பேசி, அதில் ஆழ்ந்த பிடிப்புக் கொள்ளாது மேலோட்டமாய் இருப்போரே இந்துமதம், சனாதனம் என்று பேசுவார். , .//

ந. தெய்வ சுந்தரம்

----------------------------------------------------------------------

//இறையியலை அடிப்படையாகக்கொண்ட அத்தனை மெய்யியல்களையும் ஒரே பிரிவில் அடக்கிவிடலாம்; அதற்கு அடிப்படை . . . இவை அனைத்தும் உலகிற்கு . . . நாம் வாழும் இயற்கைக்கு . . . அப்பாற்பட்ட ஒரு ''பேராற்றலை'' ஏற்றுக்கொள்கின்றன. அந்தப் ''பேராற்றலுக்கு'' பல்வேறு மதங்கள் பல்வேறு ''பெயர்களை'' வைத்துள்ளன.

இதற்கு மாறாக, இயற்கையின் இயக்கத்திற்கு இயற்கைக்குள்ளேயேதான் ''ஆற்றல்'' உள்ளது என்று கூறுகிற மெய்யியல் - இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு ''பேராற்றல்'' கிடையாது என்று கூறுகிற மெய்யியல் - மற்றொரு பிரிவு. ஆகவே, மொத்தத்தில் மெய்யியலில் இரண்டு பெரும் பிரிவுகள்தான் உள்ளன. ''மூன்றாவதற்கு'' இடம் இல்லை !//

----------------------------------------------------------------------------------------------------------

 

சிவம் (சைவம்) , விண்ணவம் (வைணவம்), சனாதனம் என்பவை வெவ்வேறு மதங்களா அல்லது ஒன்றா? ''இந்துமதம்'' என்பது எது? அதற்குரிய தத்துவம் ஒன்றா, வேறுபட்ட பலவா? அவ்வாறு வேறுபட்டிருந்தால், வேறுபட்ட தத்துவங்களைத் தன்னுள்ளே கொண்டதா ''இந்துமதம்''?

----------------------------------------------------------------------------------------------------- எதை அல்லது எந்த இலக்கை அடைவது என்பது தெரியாமல் இருப்பது . . . ''அதை'' அடைவதற்கான பாதை என்ன என்று தெரியாமல் பயணிப்பது? இவை சரியா?

இறையியல் என்பது மெய்யியலில் ஒன்று; அதன் நிறுவனமே மதங்கள். மதநிறுவனங்களை உடைய எல்லா இறையியல்களையும் ஒரே பிரிவில் அடக்கலாம். சரியா?

இறையியலை அடிப்படையாகக்கொண்ட அத்தனை மெய்யியல்களையும் ஒரே பிரிவில் அடக்கிவிடலாம்; அதற்கு அடிப்படை . . . இவை அனைத்தும் உலகிற்கு . . . நாம் வாழும் இயற்கைக்கு . . . அப்பாற்பட்ட ஒரு ''பேராற்றலை'' ஏற்றுக்கொள்கின்றன. அந்தப் ''பேராற்றலுக்கு'' பல்வேறு மதங்கள் பல்வேறு ''பெயர்களை'' வைத்துள்ளன.

இதற்கு மாறாக, இயற்கையின் இயக்கத்திற்கு இயற்கைக்குள்ளேயேதான் ''ஆற்றல்'' உள்ளது என்று கூறுகிற மெய்யியல் - இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு ''பேராற்றல்'' கிடையாது என்று கூறுகிற மெய்யியல் - மற்றொரு பிரிவு. ஆகவே, மொத்தத்தில் மெய்யியலில் இரண்டு பெரும் பிரிவுகள்தான் உள்ளன. ''மூன்றாவதற்கு'' இடம் இல்லை !

------------------------------------------------------------------------------------------------------------------

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India