திங்கள், 26 டிசம்பர், 2022

சொற்பிறப்பியல் அறிஞர் திரு. இராமகி ஐயா அவர்களின் கருத்து . .

 

சொற்பிறப்பியல் அறிஞர் திரு. இராமகி ஐயா அவர்களின் கருத்து . . .

--------------------------------------------------------------------------------------------------------------

வெறும் உணர்விலிருந்து இல்லாமல் . . . அறிவியல் ஆய்வின் அடிப்படையில் மூல-திராவிடம் என்பது ஒரு ஏமாற்று என்ற கருத்தை திரு. இராமகி அவர்கள் முன்வைக்கிறார். மேலும் வரலாற்றுமொழியியல் ஆய்வு தேவை என்பதையும் வலியுறுத்துகிறார். தமிழ்மொழியின் தொன்மைபற்றியும் ஒரு கருத்தை முன்வைக்கிறார். இரண்டிலும் எனக்கு உடன்பாடே!

ஒரு இனம் தன் இனத்தின் உரிமைகளைத் தக்க வைக்கவும் தன் இனத்தின்மீதான பிற இனங்களின் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடுவதிலும் இன உணர்வு முதன்மையானது; தேவையானது.

அதேவேளையில் இன வரலாறு, மொழி வரலாறு ஆகியவற்றில் புறவயமான உண்மைகளைக் கண்டறிய அறிவியல் அடிப்படை தேவை . . . வெறும் உணர்வுமட்டுமே போதாது . . . என்பதை திரு. இராமகி வற்புறுத்துகிறார். மிகச் சரியான ஒரு நிலைபாடு!

// ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரை ஒட்டியே, தென்னிந்தியா, தென்கிழக்கு ஆசியா வழி ஆத்திரேலியா சென்ற பழங்குடிகள் (இவரை நான் நெய்தலார் என்பேன் Spenser wells இவரைக் coastal people என்பார்) நகர்ந்துபோன வழியில் தான் தமிழ்நாட்டில் ஒரு சாரார் தங்கி தமிழ் எனும் மொழி எழுந்திருக்க முடியும். என் ஆய்வுப் பார்வையில், தமிழ் என்பது உலக முதன் மொழியாய் இருக்கப் பெரிதும் வாய்ப்பில்லை. ஆனால் மிகமிகப் பழமையான மொழியாக அது கட்டாயம் இருந்திருக்கும். (4500 ஆண்டு Proto- Dravidian என்ற கருதுகோளை நான் நம்பவில்லை.. அது ஒரு ஏமாற்று.) நம்மூரில் உள்ள வரலாற்று மொழியியல் ஆய்வாளரில் நாலைந்து பேராவது அடுத்த பத்தாண்டுகளில் இதை ஆய்வார் ஆகுக. //

 

''மூலதிராவிடம் என்று ஒன்று இருந்தது '' என்ற கருதுகோளை ''மெய்ப்பிக்கப்பட்ட ஒரு புறவய உண்மை'' என்று ஏற்றுக்கொண்டு , அதை அடிப்படையாகக்கொண்டுதான் இங்கு ஒப்பீட்டுமொழியியல், வரலாற்று மொழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அது ஒரு கருதுகோளே; மேலும் அதுபற்றி ஆய்வுசெய்யவேண்டும் என்ற அடிப்படையில் இங்கு ஆய்வுகள் நடைபெறுவதில்லை என்பது உண்மை. அதுபோன்ற ஆய்வுகள் நடைபெறவேண்டும். ''மூல திராவிடம்'' என்பதை ஏற்றுக்கொண்டே . . . அதிலிருந்தே . . . மொழி ஆய்வுகள் இங்கு நடைபெறுகின்றன.

''மூலமொழி'' என்ற கோட்பாடு , மொழிகளில் நிலவும் ஒற்றுமைக்கூறுகளை - குறிப்பாக, ஒலியியல் (phonetic) , ஒலியனியல் (Phonemic) கூறுகளை - ஒன்று திரட்டி, அவற்றிலிருந்து ''மூலச் சொற்களை (Proto-forms) '' அமைத்துக்காட்டும் ஒரு ஆய்வுமுறை. இதன் முடிவுகள் கருதுகோள்களாகத்தான் (Hypothesis) இருக்கமுடியும். தொல்வரலாறு (Archeology, Ancient History) , மானிடவியல் (Anthropology) போன்ற பிற துறை கண்டுபிடிப்புக்களும் நமக்குத் தேவை.

இல்லையென்றால், ''மூல மொழிகள்'' ஆய்வை . . . ''மூல இனங்கள் ("Primitive Races") '' என்ற நிலைக்கு எடுத்துச்சென்று , சமுதாயப் போராட்டங்களில் சரியான ஒரு நிலைபாடு எடுப்பதில் குழப்பத்தைத்தான் உருவாக்கும். உண்மையான தேசிய இனங்கள் (Nationalities) இன அடிப்படையில் தங்களை ஒன்றுபடுத்திக்கொள்வதில் பின்னடைவுகளை ஏற்படுத்தும். இதைத்தான் நான் கூற வருகிறேன்.

''மூலமொழி '' என்ற ஒப்பீட்டுமொழியியலே (Comparative Linguistics) வேண்டாம் என்று நான் கூறவரவில்லை! ஒப்பீட்டுமொழியியல், வரலாற்றுமொழியியல் (Historical Linguistics) , மானிடவியல்மொழியியல் ( Anthropological Linguistics) போன்ற பல துறை அறிவுகளும் இணைந்துசெயல்படவேண்டும். தற்போது என்னுடைய ஆய்வுகள் எல்லாம் தற்காலத் தமிழைநோக்கியே இருக்கின்றன. மேற்கூறிய ஆய்வுகளில் ஈடுபடும் விருப்பம் இருப்பினும், தற்போது வாய்ப்பு எனக்கு இல்லை! ஆனால் அதற்காக தற்போதைய ஆய்வுகளைப்பற்றி மொழியியல் மாணவன், சமூகவியல் மாணவன் என்ற முறையில் சில கருத்துக்களை - ஆனால் முடிந்த முடிவுகளாக இல்லை - கூறுகிறேன்.

''மூலமொழி'' கோட்பாடும் ''மூல இனம்'' கோட்பாடும் ஆய்வுக்கு உரியவை என்பதே எனது கருத்து.

 

'இனம்' என்ற சமூகவியல் சொல்லை "race" என்று கூறுவதா? 'பழங்குடி மக்கள்தொகுதி (tribal community) " என்று சொல்வதா? அல்லது ''தேசிய இனம் (Nationality) '' என்று கொள்வதா? இதற்கான தெளிவான விடையைத் தேடவேண்டும்! தேசிய இனம் என்பது மனித சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றிய ஒரு வரலாற்று விளைபொருள் ( historical product) ! ஆனால் முதலாளித்துவ, ஏகாதிபத்திய அறிஞர்கள் முன்வைக்கிற " Race " என்பது வரலாற்று விளைபொருளாக இல்லாமல், மாந்தர் தோற்றத்திலிருந்தே உடலமைப்பு, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றி நீடிக்கிற இயற்கையான ( natural, eternal) ஒன்று - வரலாற்று விளைபொருள் இல்லை! - என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறோமா? இதுபற்றிய தெளிவு தேவைப்படுகிறது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India