வெள்ளி, 29 மார்ச், 2024

இயற்கையின் ஆழிப்பேரலையும் சமுதாயத்தின் புரட்சிகரப் பேரலையும்!

 

இயற்கையின் ஆழிப்பேரலையும் சமுதாயத்தின் புரட்சிகரப் பேரலையும் . . . (வேறொரு பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் இது!)

---------------------------------------------------------------------------------------------------------------

இயற்கையின் உள்ளார்ந்த அமைப்பால் ஏற்படுகிற ஒன்றே ஆழிப்பேரலை. பூகம்பம், எரிமலை, புயல் போன்ற இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த வகையே.நமது விருப்பு வெறுப்பைப்பொறுத்து அவை இல்லை. அதுபோன்றதே சோசலிச, கம்யூனிசப் பேரலை.

 சமுதாய அமைப்பில் உள்ள முரண்பாடுகள் வரலாற்றில் அவ்வப்போது சமுதாய மாற்றத்திற்கான அலைகளை உருவாக்கியே தீரும். அதை யாராலும் தடுக்கமுடியாது. இதைத்தான் காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் ஆய்ந்து கூறினார்கள். இது அவர்களின் 'விருப்பு வெறுப்புக்களைச்'' சார்ந்த ஒன்று இல்லை!

 இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் சமுதாய நிகழ்ச்சிகளுக்கும் ஒரு வேறுபாடு . . . ஆழிப்பேரலை நிகழ்ச்சியில் மனிதர்களுக்குப் பங்கு கிடையாது. இயற்கையின் புறவய விதிகள் மட்டுமே அதில் செயல்படுகிறது. ஆனால் சமுதாயப் புரட்சியில் மனிதர்களின் அகவய வளர்ச்சிக்கும் முன்முயற்சிகளுக்கு இடம் உண்டு.

 ஆனால் தனி மனிதர்களின் அகவய உணர்வுகளுக்கு அப்பால் . . . வெளியே . . . புறவயமாக நீடிக்கிற அடிப்படைக் காரணங்களால் ஏற்படுவதே சமுதாய மாற்றம். அதில் மனிதர்களின் அகவயச் செயல்பாடுகளுக்கு பங்கு உண்டு. ஆனால் அவையே புறவயவிதிகளைமீறி, சமுதாய மாற்றத்தைத் தடுத்துவிடமுடியாது.

 இதுதான் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை.

 ஓராயிரம் சாரு மசூம்தார்கள் கொல்லப்பட்டாலும், ஒருபோதும் சமுதாய மாற்றம் நின்றுவிடாது. இந்த நம்பிக்கை ஒருவருக்கு வேண்டும். என் வாழ்க்கையிலேயே - நான் இறப்பதற்குமுன்னே - அந்தச் சமுதாய மாற்றத்தைப் பார்த்துவிடமுடியும் என்று நான் எண்ணிவிடக்கூடாது. அவ்வாறு எண்ணுவது ஒரு குட்டிமுதலாளித்துச் சிந்தனைப் போக்கே. ஒருவரின் வாழ்க்கை உச்சபட்சம் 100 நூறாண்டுகள். ஆனால் சமுதாயமாற்றங்கள் நிகழ்வதற்கு அதைத் தாண்டிய காலம் தேவைப்படலாம். தேவைப்படும். 1970-களில் பத்தாண்டுகளில் புரட்சி வெற்றிபெற்றுவிடும் ( Decade of Liberation) என்று கூறப்பட்டது இளைஞர்களின் எழுச்சிக்காக முன்வைக்கப்பட்ட ஒரு முழக்கமே. அவ்வளவுதான்.

 இதில் ஒன்றை உணரவேண்டும். கம்யூனிசப் புரட்சி நடைபெறும் என்று புறவய விதிகளைக்கொண்டு விளக்கிய காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் தம் காலத்திலேயே அதைப் பார்க்கவில்லை. அவ்வாறு பார்த்துவிடலாம் என்று அவர்கள் கருதியதும் இல்லை. மேலைநாடுகளில் நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு ஒரு முதலாளித்துவச் சமுதாய அமைப்பாக முழுமையாக மாறுவதற்கு சுமார் நான்கு நூற்றாண்டுகள் ஆகியது என்பதே உண்மை.

 ஒன்றுபட்ட புரட்சிகர இயக்கங்கள் உறுதியாக உருவாகத்தான் செய்யும். சமுதாயத்தில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் தீரும். ஒருவர் இதை விரும்புவதாலோ அல்லது ஒருவர் இதை விரும்பாததாலோ இது நடக்காமல் இருக்காது.

 ஆனால் ஒரு எச்சரிக்கை. ''காலம் கனியும் அல்லது கனியட்டும்; அப்போது நானும் அதில் இணைவேன்'' என்று ஒருவர் கூறி, தமது செயலற்றப் பண்பை நியாயப்படுத்திவிடக்கூடாது! சமுதாய மாற்றங்களில் மனிதர்களுக்குப் பங்கு உண்டு. இதை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது! ''காற்று அடிக்கட்டும், தூசி விலகும்'' என்று இருக்கக்கூடாது! ''மலையை அகற்றிய மூடக்கிழவன்'' என்ற சீனக் கதையின் பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும!

 

புதன், 27 மார்ச், 2024

மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (2)

 மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (2)

--------------------------------------------------------------------------
//இலக்கியத்தில் இலக்கியப்படைப்பு, இலக்கிய ரசிப்பு, இலக்கிய ஆய்வு என்று பிரிவுகள் இருப்பதுபோல . . . மொழி ஆய்விலும் ஒரு மொழியைத் தெரிந்திருப்பது அல்லது பயன்படுத்துவது வேறு, மொழியைப்பற்றிய ஆய்வை மேற்கொள்வது வேறு; மொழியின் சிறப்பை உணர்ந்து மகிழ்வடைவது வேறு; மொழி உரிமைகளுக்காகப் போராடுவது வேறு. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் வேறுபடுத்தியும் பார்க்கவேண்டும் - ஆய்வுநோக்கில்!//
//எடுத்துக்காட்டாக, அன்பிற்குரிய இராமகி ஐயா அவர்கள் நாம் அயல்மொழிச்சொல் என்று கருதிக்கொண்டிருக்கிற ஒரு சொல் தமிழ்ச்சொல்தான் என்று ஆய்வின் அடிப்படையில் கூறும்போது நான் மகிழ்வடைவேன். அதேவேளையில் அவர் அந்த முடிவை தனது விருப்பத்தின் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது ஆய்வின் அடிப்படையில் கூறுகிறாரா என்பதையும் கருதிப்பார்க்கவேண்டும். அவரது முடிவுகள் எல்லாம் தெளிவான ஆய்வுமுறைகளின் அடிப்படையில் இருப்பதால் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. ஒன்று தமிழின் பெருமை; மற்றொன்று தெளிவான ஆய்வுவிதிகளுக்கு இந்தக் கருத்து உட்பட்டு இருத்தல்.//
//இவ்விடத்தில் ஒன்றை மிக அழுத்தமாகத் தெரிவிக்கவிரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணம் (தொல்காப்பியம். நன்னூல், Wren and Martin English Grammar) என்பது வேறு. எந்தவொரு மொழியையும் பொதுவாக ஆய்வு செய்வதற்கான கோட்பாடுகள், ஆய்வுமுறைகள் என்பது வேறு. மொழியியல் இந்த இரண்டாவது பிரிவைச் சேர்ந்தது. அது எந்தவொரு மொழியின் குறிப்பிட்ட இலக்கணம் இல்லை. இந்தத் தெளிவு முதலில் தேவை. இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.//
//எந்தவொரு அறிவியலும் தொடர்ந்து மாறும்; வளரும். அதற்கு அடிப்படை . . . ஆய்வுக்கு உட்படுகிற அனைத்துமே - இயற்கையோ, சமுதாயமோ - மாறக்கூடியவை; வளரக்கூடியவை. அதுபோன்று அறிவியல் ஆய்வுமுறைகளும் மாறும்; வளர்ச்சி அடையும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு அறிவியலும் கிடையாது. உயிருள்ள எந்தவொரு மொழியும் அந்த மொழிச்சமுதாயத்தின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப மாறத்தான் செய்யும். மாறவும் வேண்டும். மொழி ஆய்வுமுறையும் தனது எல்லை விரிவடைய விரிவடைய மாறத்தான் செய்யும். தமிழ்மொழி ஒரு உயிருள்ள மொழி; தொன்மையோடு தொடர்ச்சியாக நீடித்துவருகிற ஒரு மொழி. எனவே மாற்றமும் வளர்ச்சியும் அதற்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் தமிழ்மொழி ஆய்வும் அமையவேண்டும் என்பதே எனது கருத்து. ஒரு உயிர் அணுவிற்கு வளர்-சிதை - மாற்றம் தொடர்ந்து நடைபெறுவதுபோல, மொழிக்கும் ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' நடைபெறும். இது நமது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது இல்லை. புறவயமான உண்மை.//

மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (1)

 மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (1)

---------------------------------------------------------------------
முகநூல் பதிவுகளில் தற்போது மொழிபற்றிய பதிவுகள் மிக அதிகமாகவே வந்துகொண்டிருக்கின்றன. வரவேற்கவேண்டிய ஒரு வளர்ச்சி இது. இந்த வளர்ச்சியை அடுத்த உயர்கட்டத்திற்குக் கொண்டுசெல்ல . . .
ஒருவர் தமது பதிவு மொழிதொடர்பானவற்றில் எந்தப் பிரிவில் எழுதுகிறோம் என்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டு பதிவிட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஒரு சில பிரிவுகளைமட்டும் இங்குப் பதிவிடுகிறேன்.
1) மொழியைக் கற்பித்தல் (முதல், இரண்டாம், மூன்றாம் மொழி கற்றல் & மொழித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மொழி கற்பித்தல்)
2) மொழியைக் கற்றல்
3) மொழிப் பயன்படுத்தம்
4) ஆட்சிமொழி, பயிற்றுமொழி , மொழி வளர்ச்சித்திட்டம் போன்ற மொழிக்கொள்கை தொடர்பான ஆய்வு
5) குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தைக் கற்பித்தல்
6) குறிப்பிட்ட மொழியின் இலக்கண ஆய்வு
7) குறிப்பிட்ட மொழியின் சொல்லாக்க விதிகள்
8)குறிப்பிட்ட மொழியின் வேர்ச்சொல் ஆய்வு
9) குறிப்பிட்ட மொழியின் வரலாற்று இலக்கண ஆய்வு
10) மொழிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான உறவுகள்
11) மொழிக்கும் மனித மூளை, மனம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகள்
12) மொழிபெயர்ப்புத் துறை
13) அகராதியியல் துறை
14) கணினிமொழியியல்
மேற்குறிப்பிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் மொழியியல் துறை அறிவு மிகவும் பயன்படும். இதனால் மொழிகளின் உலகப்பொதுமை தெரியவரும். மொழியியல் துறைகளிலும் பல பிரிவுகள் உள்ளன. (1) கோட்பாட்டு மொழியியல், (2) செயற்படுத்த மொழியியல், (3) மொழிக்கும் பிற துறைகளுக்கும் இடையில் உள்ள உறவுகள் என்று அவை அமையும்.
ஒருவர் மேற்கண்ட எல்லாப் பிரிவுகளிலும் முழுமையான அறிவு பெறுவது என்பது கடினம். ஏனென்றால் மொழித்துறை என்பது ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது.
இருப்பினும் மொழி ஆய்வின் எந்தப் பிரிவில் ஒருவர் ஈடுபட்டாலும், தம் தாய்மொழியின் இலக்கணம், அகராதி பற்றிய அறிவு உறுதியாகத் தேவை. இந்த அறிவு இல்லாமல் ஒருவர் மொழி ஆய்வுத்துறையிலோ அல்லது மொழி பயிற்றல் துறையிலோ பணிசெய்யமுடியாது. அதுபோன்று மொழியியல் துறையின் மாணவரோ ஆசிரியரோ தம் தாய்மொழியின் இலக்கணம், அகராதித் துறையில் அடிப்படை அறிவு இல்லாமல் மொழியியல் ஆய்வில் ஈடுபடமுடியாது.
இவற்றையெல்லாம் நான் இங்குப் பதிவிடுவதற்கான காரணம் . . . மொழிபற்றிய பதிவுகளை இடுபவர்கள் முதலில் தெளிவாகத் தாங்கள் எந்தப் பிரிவுபற்றிப் பதிவிடுகிறோம் என்பதில் தங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்; மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்தவேண்டும். தாங்களும் குழம்பிக்கொண்டு, மற்றவர்களையும் குழப்பிவிடக்கூடாது. ஒவ்வொரு அறிவியலும் தனக்குள் தற்போது பல்வேறு நுட்பப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. அதுபோன்றே மொழி அறிவியலும் ஆகும். எனவே தமிழ்மொழி ஆய்வில் இந்தத் தெளிவோடு எந்தவொருப் பதிவும் முகநூலில் அமைந்தால் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது எனது கருத்து.
எல்லா உணர்ச்சிகளு

தமிழ்மொழி ஆய்வாளர் ஒருவர் என்னைப்பற்றிக் கூறிய ''பாராட்டுக்கள்'' கீழே . .

 தமிழ்மொழி ஆய்வாளர் ஒருவர் என்னைப்பற்றிக் கூறிய ''பாராட்டுக்கள்'' கீழே . . .

-----------------------------------------------------------------------
//இந்த வினாவினை எழுப்பியவர்க்கு எல்லா இலக்கணமும் தெரியும். இருந்தும் இவ்வினாவினை வினவுதற்கு பாரிய நோக்கம் உண்டு. தமிழின் நுட்பங்களை ஒழிக்கவேண்டுமென்பதே அந்நோக்கம். அந்நோக்கத்திற்கு அவர் பயன்டுத்தும் கருவி கணிணி; கணிணி தரப்படுத்துதல் (standardization). அவ்வளவே.//
//தமிழ்ப்பேராசிரியர் இந்த விதியினை அறிந்திருந்தும் ஒழித்துக்கட்டிவிட்டார். ஓரம்பில் ஏழு மராமரங்களைத்துளைத்த இராமபிரான் போல, ஒருவரி வினாவில் இரண்டு விதிகளை ஒழித்துக்கட்டிவிட்டார். என்னே அவர்தம் ஆற்றல். ஒரு சொல் இருந்தாலும் அதனை விட்டுவிடக்கூடாதென அதற்கு ஒரு சூத்திரம்செய்த பவணந்தியாரும், தொல்காப்பியரும் utter waste .//
//ஒரு வினாவிலேயே இரண்டு விதிகளை ஒழித்ததுப்போல், இன்னுமொரு நூறு வினாக்களை எழுப்பினாரென்றால் நன்னூலும், தொல்காப்பியமுமே அன்னாரின் ஆய்வால் ஒழிந்துபோகாதோ. வாழ்க அவர்தம் கொற்றமும் ஜனநாயகமாண்பும்.//
//தமிழ்த்துறையில் ஓய்வுபெற்ற தமிழ்ப்பேராசிரியர்க்கு வருவதால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கவேண்டும். அவர் கூறும் காரணம் கணிணிக்கு தரப்படுத்தலுக்காக.//
அவருடைய ''பாராட்டுக்களுக்கு'' மிக்க நன்றி.
எனக்கு இருக்கிற ''தமிழ் இலக்கண அறிவு '' இவ்வளவுதான் நண்பரே. என்ன செய்ய?
தங்களுடன் விவாதிக்கிற அளவுக்குத் ''தொல்காப்பியம் - நன்னூல் அறிவு '' எனக்கு இல்லை என்பது உண்மையே. அப்படியே இருந்தாலும் ''அவர்கள் இருவரும்'' எனக்கு ''வேண்டாதவர்கள்''! ''கணினியும் மொழியியலும் ஆங்கில இலக்கணமும் மட்டுமே'' எனக்குத் தெரியும். அதுவும் ''முழுமையாகத் தெரியுமா?'' என்பது மற்றொரு ஐயம்! எனவே , ''தொல்காப்பியத்தையும் நன்னூலையும்''எப்படியாவது''ஒழித்துக்கட்டிவிடவேண்டும்'' என்பதே எனது ''முழு நோக்கம்''! அவர்கள் இருவரும் எனக்கு ''விரோதிகள்''!
தாங்கள் தங்கள் பணிகளைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்! நானும் எனது பணியைத் (தங்கள் கருத்துப்படி, ''தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஒழித்துக்கட்டுவதற்கும் தமிழ் இலக்கணத்தின் நுட்பங்களை ஒழித்துக்கட்டுவதற்கும்'' ) தொடர்கிறேன்.

Lexeme / Word and Wordform - explanation

 Lexeme / Word and Wordform - explanation

-----------------------------------------------------------------------
" The basic lexical form found in a dictionary is here called "Lexeme" or "Word". The different inflected forms of a lexeme/word are called "Wordforms". The different wordforms of a lexeme/word belong to a same grammatical category and form its paradigm. Their lexical meaning is same. For example, the different inflected wordforms "go, goes, went, gone, going, to go" form a paradigm for the word "go".
Though the basic lexical meaning of the different wordforms belonging to a paradigm is similar, their syntactic distribution / positions are different. The inflectionally variant forms of the same lexeme do not, in general, have the same distribution; and that is the why Syntax and Inflection are complementary parts of grammar. For example, the wordform "goes" cannot occur in the syntactic position where the wordform "gone" occurs.
He has gone
*He has goes.
However, the lexical meanings of both wordforms are same.
The different wordforms of a Word or Lexeme are inflected for different inflectional / grammatical properties.
go - inflected for present tense
goes - inflected for 3rd Person Singular and Present tense
went - inflected for Past tense
gone - inflected for Past Participle
going - inflected for Present Participle
to go - inflected for Infinitive Participle
( Umadevi, K. " English Equivalence for Tamil Inflection ( A Transfer Module in Tamil - English Machine Translation system)" , Ph.D., dissertation submitted to the University of Madras, 2014, , p.44. )

''சொல்'' என்பதற்கான வரையறை . . .

 ''சொல்'' என்பதற்கான வரையறை . . .

-------------------------------------------------------------------------
சொற்களை (1) அகராதிச்சொல் (Lexeme / Dictionary Word) , (2) இலக்கணக்கூறு அல்லது இலக்கணப்பண்பு ஏற்ற சொல் (Inflected Form - Wordform) என்று வகைப்படுத்தலாம்.
அகராதிச்சொல் என்பது பொருண்மையோடு ( lexically- oriented) தொடர்பு உடையது; இலக்கணப்பண்பு ஏற்ற சொல் என்பது தொடரியலோடு (Syntactically- oriented) தொடர்புடையது.
அகராதியில் பார்க்கிற பெயர்ச்சொற்கள் அல்லது வினைச்சொற்கள் , சொற்றொடர்களில் பயின்று வரும்போது குறிப்பிட்ட இலக்கணப் பண்புகளை ஏற்றுவரும்.
அகராதியில் பார்க்கிற 'ஆசிரியர்' என்ற சொல், 'ஆசிரியர் வந்தார்' என்று தொடரில் அமையும்போது 'ஆசிரியர்' என்பது 'எழுவாய்' என்ற இலக்கணப் பண்பைப் பெற்ற சொல்லாகும்.; வெறும் அகராதிச்சொல் இல்லை. தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் வேறு வேறு.
அதுபோன்று 'படி' என்ற அகராதி வினைச்சொல் 'நீ படி' என்று வரும்போது முன்னிலை ஒருமை இறவாக்காலம் என்ற இலக்கணப் பண்பை ஏற்ற ஒன்று. 'வந்து, வர , வராமல்' போன்றவையெல்லாம் 'வா' என்ற அகராதிச்சொல்லின் பொருண்மையை உள்ளடக்கி இருந்தாலும், தொடரியலில் அடிப்படையில் வேறு வேறு. 'வந்து' என்பதுடன் வரும் சொற்கள் வேறு; 'வர' என்பதுடன் வரும் சொற்கள் வேறு.
இலக்கணப்பண்பு ஏற்ற சொல்லுக்கு(Wordform) மூன்று பண்புகள் இருக்கும்.
ஒன்று, ஒரு தொடரில் அது ஒட்டுமொத்தமாக இடம் மாறலாம். 'நான் நேற்று வீட்டுக்கு வந்தேன்' என்பதில் உள்ள 'வீட்டுக்கு' என்பது 'வீட்டுக்கு நான் நேற்று வந்தேன்' என்பதில் இடம் மாறலாம். (பொதுவாக, தொடரில் பெயர்ச்சொற்கள் தங்களுடைய அடைகளோடும், வினைகள் தங்களது அடைகளோடும் இடம் மாறும்.) இந்தப் பண்பை ஆங்கிலத்தில் "Positional mobility" என்று அழைப்பார்கள்.
அடுத்து, இலக்கணப்பண்பு ஏற்ற சொல்லின் நடுவில் பொதுவாக வேறு எந்த விகுதியும் வராது. 'வந்தான்' என்ற வினைமுற்றுச் சொல்லின் நடுவில் வேறு எந்த விகுதியும் செருகுவது கடினம். இதை ஆங்கிலத்தில் ''Uninterruptability" என்று அழைப்பார்கள்.
அடுத்து, இலக்கணப்பண்புகளை வெளிப்படுத்தும் விகுதிகள் பொதுவாக ஒரு சொல்லுக்குள் ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் அமையும். மாறி அமையாது. 'வந்தான்' என்பதில் வினையடி - காலம் - திணை,எண்,பால் விகுதி என்பது ஒரு குறிப்பிட வரிசையில் அமைந்துள்ளது. இது மாறி அமையாது. இதை ஆங்கிலத்தில் "Internal Stability" என்று அழைப்பார்கள்.
மேற்கூறிய மூன்று பண்புகளையும் பெற்ற சொல் வடிவங்களும் அகராதியில் இடம்பெறுகின்ற சொல் வடிவமும் வேறு வேறு. அகராதிச்சொற்கள் இரண்டு அகராதிச் சொற்களை உள்ளடக்கிய தொகையாகவும் இருக்கலாம்.
'சொல்' என்பதை வரையறுக்கப் பலர் முயன்றுள்ளனர். ஆனால் ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றே கருதுகிறேன்.

சரியான சொல் எது? எதையாவது ஒன்றைத் தரப்படுத்தவேண்டும்.

 சரியான சொல் எது? எதையாவது ஒன்றைத் தரப்படுத்தவேண்டும். நண்பர்கள் உதவி தேவை!

-----------------------------------------------------------------------
(1) கருத்துகள் - கருத்துக்கள் ('க்' மிகுமா?)
(2) நாள்கள் - நாட்கள் ('ள்' என்பது 'ட்' என்று மாறுமா?)
(3) கால்சட்டை - காற்சட்டை ('ல்' என்பது 'ற்' என்று மாறுமா?
(4) செயல்படு - செயற்படு ('ல்' என்பது 'ற்' என்று மாறுமா?)
(5) ஒருவர் தனது நூல்களை வெளியிட்டார் - ஒருவர் தமது நூல்களை வெளியிட்டார் ('தனது' ? 'தமது'?)
(6) ஒரு உயிர் - ஓர் உயிர் ('ஒ' என்பது 'ஓ' என்று மாறுமா?)
(7) அவரைப்பற்றி - அவரைப் பற்றி ('பற்றி ' என்ற பின்னொட்டு வேற்றுமை விகுதியோடு இணைந்து வருமா? தனித்து வருமா?)
8. என்னால் வரமுடியும் - என்னால் வர முடியும் ('முடியும்' என்ற துணைவினை முதன்மைவினையோடு இணைந்து வருமா? தனித்து வருமா?)
(9) நான் போகவேண்டும் - நான் போக வேண்டும்.('வேண்டும்' என்ற துணைவினை முதன்மைவினையோடு இணைந்துவருமா? தனித்து வருமா?)
(10) வந்துகொண்டிருக்கிறான் - வந்து கொண்டிருக்கிறான் ('கொண்டிருக்கிறான்' என்ற துணைவினை தனித்து வருமா? முதன்மைவினையோடு இணைந்து வருமா?)
(13) பல மாணவர்கள் - மாணவர்கள் பலர்
(14) சில நூல்கள் - நூல்கள் சில
(15) பசுகள் - பசுக்கள் ('க்' தேவையா இல்லையா?
(16) பூகள் - பூக்கள் , ஈகள் - ஈக்கள் ( இதில் வேறுபாடு உண்டா என்பது தெரியவில்லை. பலுக்கும்போது 'க்' தானாக வருகிறது!)
மேற்கூறியவற்றில் தமிழ் உரைநடையில் இருவேறுபட்ட கருத்து(க்)கள் நிலவுகின்றன. மேற்கூறியவற்றைத் தரப்படுத்தினால் தமிழ் உரைநடை சீராக இருக்கும்.
பெரும்பாலும் இன்றைய தமிழ் உரைநடையில் இவற்றில் ஒரு ('ஓர்') ஒழுங்கு இல்லை. எழுதும்போது எனக்குத் தயக்கம் ஏற்படுகிறது.
பொதுவாக, மேற்கூறிய 16-உம் தரப்படுத்தவேண்டிய முக்கியச் சொற்கள் ('சொல்கள்') என நான் கருதுகிறேன். இவற்றில் ஒரு முடிவு எடுத்துத் தரப்படுத்தினால் பல சிக்கல்கள் ('சிக்கல்கள் பல') தீரும்.
நடை வேறுபாடு என்று மேற்கூறியவற்றை எடுத்துக்கொள்ளமுடியாது. 'வந்தார்கள்' - 'வந்தனர்' என்பவை இரண்டும் சரி. இதை நடை வேறுபாடு என்று கூறிவிடலாம். ஆனால் மேற்கூறிய 16-இல் அவ்வாறு கூறமுடியாது. இலக்கணம் தொடர்பானவை அவை.

புதன், 13 மார்ச், 2024

திராவிட இனமும் ஆரிய இனமும்

 திராவிட ஒப்பீட்டுமொழியியலில் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டுள்ள மொழியியல் பேராசிரியர் முனைவர் காமாட்சி அவர்களின் ஒரு சரியான பதிவையொட்டி நான் இட்ட ஒரு பதிவு இது.

------------------------------------------------------------------------
(1) மூலதிராவிட மொழி என்று ஒன்று உண்டு,
(2) அதிலிருந்துதான் பின்னர் 24-க்கும் மேற்பட்ட மொழிகள் தோன்றின,
(3) மூலதிராவிடம் பேசியவர்கள் திராவிடர் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்,
(4) எனவே இந்த 24 -க்கும் மேற்பட்ட மொழியைப் பேசுபவர்கள் ஒரே இனத்தை - ''திராவிட இனத்தை''- சேர்ந்தவர்கள் என்று race கருத்து அடிப்படையில் ஏற்றுக்கொள்வது
(5) தமிழ்ச் சமுதாய வரலாற்றில் புறவயமாகத் தோன்றி நீடிக்கிற தமிழ்த் தேசிய வகை அல்லது தேசிய இனம் என்பதற்குமேல் ''திராவிட இனம்'' என்ற ''கற்பனை இனம்'' ஒன்றை உயர்த்திப்பிடிப்பது -
இவையெல்லாம் மொழியியல் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்பதைத் தாங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.
அதுபோன்றதுதான் ''ஆரிய இனம்'' என்ற ஒரு கற்பனைக் கருத்தியலே இந்தியச் சமுதாயத்தில் உண்மையில் தோன்றி நீடிக்கிற பிராமணியம் என்று கூறுவதும் ஆய்வுக்கு உரியது.
மொத்தத்தில் ''ஆரிய மொழிகள்'' ''திராவிட மொழிகள்'' இரண்டுக்கும் மூதாதையர்கள் ''ஆரியர்'' ''திராவிடர்'' என்ற இரண்டு ''இனங்கள்'' என்ற ''கருத்தியல்'' உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் ''திணிக்கப்பட்டது'' என்பதில் எனக்கு ஐயம் இல்லை!
மேலும் இந்த ''இரண்டு மொழிக்குடும்பங்களுக்கும் - ஆரியம், திராவிடம்' இரண்டுக்குமே '' மேற்கத்திய மொழிகளே மூலம்'' என்பதை ''நிரூபிப்பதும்'' ஆங்கிலேய ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கும் ''ஆய்வாளர்கள்'' கருத்து.
''மூலமொழி ஒன்றே, இறைவன் மக்கள் ஒன்றுபட்டு இருக்கக்கூடாது'' என்பதற்காக வேறுபட்ட மொழிகளை மூலமொழியிலிருந்து உருவாக்கினார் என்ற ஒரு கதையும் உண்டு.
தென்னகத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளி என்ற நான்கு தேசிய வகைகளும் (தேசிய இனங்களும்) 20-க்கும் மேற்பட்ட பழங்குடிக் குலங்களும் இருக்கின்றன என்பதுமே உண்மை. மேற்கூறிய நான்கு தேசிய வகைகளும்கூட வரலாற்றில் பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட ஒரு வளர்ச்சியையொட்டியே தோன்றின என்பதும் உண்மை. இதுபற்றி மிக ஆழமான ஆய்வு தேவை என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அது வேறு.
ஆனால் அதற்காக ''ஒரு மூல மொழியிலிருந்துதான்'' தற்போதைய மொழிகள் எல்லாம் தோன்றின என்பதையும், அந்த ''மூலமொழிகளின்'' அடிப்படையில் ''ஆரிய இனம், திராவிட இனம் '' என்ற கருத்தியலைத் திணிப்பதும் சரி இல்லை.
ஆனால் ஒன்று. 100 ஆண்டுகளுக்குமேலாக நீடிக்கிற இந்தத் தவறான ''கருத்தியல்'' இன்று ஒரு ''கடுமையான கருத்துமோதலாக'' மாற்றப்பட்டுள்ளதற்கும் ஒரு ''அரசியல் '' உண்டு என்பதில் ஐயம் இல்லை!

வெள்ளி, 8 மார்ச், 2024

இந்திய நாட்டில் தேசிய இனப் பிரச்சினையே இல்லையா?

 நண்பர் திரு. மாலன் அவர்கள்

--------------------------------------------------------------------------
' தேசிய இனப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ள கால கட்டம் இது' எங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது? தமிழ் நாட்டிற்கு வெளியே எங்காவது தேசிய இனம் பற்றிய விவாதங்கள், முழக்கங்கள், செயல்பாடுகள், உண்டா? திராவிடம் என்பது ஓர் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல். கால்டுவெல் உட்பட அந்த அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஒரு வாக்கு வங்கியைக் கட்டமைக்க அரசியல்வாதிகள் உருவாக்கிய கருத்தியல் இது. இன்று நேற்றல்ல, இந்தியா முழுவதிலும் ஒரே விதமான விழுமியங்கள், பண்பாடுக்க் கூறுகள்தான் இருந்தன. சங்க இலக்கியங்கள் சாட்சி.
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------------------
இந்திய நாட்டில் தேசிய இனப் பிரச்சினையே இல்லை என்று தாங்கள் கருதுவது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று கூறுவதுபோல் இருக்கிறது.
பிரிவினையைக் கேட்பதுதான் தேசிய இனப்பிரச்சினை என்று தாங்கள் கருதுவதுபோல் இருக்கிறது. அவ்வாறு கிடையாது. தேசிய இனப்பிரச்சினை பல்வேறு வகைகளில் வெளிப்படும். மொழி உரிமைப் போராட்டம், நீர்ப்பங்கீடு போராட்டம், மாநிலங்கள் தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரும் போராட்டம், முதன்மையாக ஒரு மொழி இருக்கிற மாநிலத்தில் பிற மொழிக்காரர்களை எதிர்க்கும் போராட்டம், தங்களுக்குச் சிறப்புத்தகுதி வேண்டும் என்று ஒரு மாநிலத்தின் மக்கள் தொடுக்கும் போராட்டம் என்று பல வகைகளில் தேசிய இனப்பிரச்சினை வெளிப்படும்.
மேலும் இந்தியக் குடியரசு பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு நாடு என்பது வரலாற்று உண்மை. இவ்வாறு கூறுவது ''பிரிவினைவாதம்'' என்று நினைப்பது தவறு. எனவே ''பிரிவினை'' கேட்கப்படுகிற நாடுகளில்தான் ''தேசிய இனங்கள்'' உண்டு என்று நினைப்பது தவறு.
தமிழ்த் தேசிய இனம் என்பதையும் ''திராவிடம்'' என்பதையும் போட்டுக் குழப்பவேண்டாம். முந்தையது ஒரு வரலாற்று விளைபொருள். உலகில் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்காலகட்டத்தில் தோன்றும் ஒரு வரலாற்று விளைபொருள். நிலம், மொழி, பண்பாடு, பொருளாதார அமைப்பு போன்ற பல கூறுகளை உள்ளடக்கிய ஒன்று. பிந்தையது - திராவிடம் - மொழிக்குடும்ப ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்தியல்.

 

மொழிக்குடும்பம், இனம் பற்றிய ஆராய்ச்சிக்கும் சமுதாய அமைப்பில் நீடிக்கிற வர்க்க நலன்களுக்கும் இடையில் உறவுகள் உண்டா?

 மொழிக்குடும்பம், இனம் பற்றிய ஆராய்ச்சிக்கும் சமுதாய அமைப்பில் நீடிக்கிற வர்க்க நலன்களுக்கும் இடையில் உறவுகள் உண்டா?

-------------------------------------------------------------------------------------------------------
மொழிக் குடும்பம் பற்றிய ஆராய்ச்சி வளர்ச்சிக்கும் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய முதலாளித்துவ வளர்ச்சி, காலனித்துவ நீடிப்பு, அப்போது பல முதலாளித்துவ நாடுகளின் மதமாக நீடித்த கிறித்தவ மதம் ஆகியவற்றிற்கும் இடையில் உள்ள உறவுகள் ஆகியவைபற்றிய மிக ஆழமான ஆய்வு தேவை.
இப்படிப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில்தான் ஆரிய மொழிக்குடும்பம், இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் போன்ற மொழிக்குடும்பங்கள்பற்றியும் ஆரிய இனம், திராவிட இனம் போன்றவைபற்றியும் தெளிவான முடிவுகளுக்கு வரமுடியும்.
வெறும் உணர்ச்சி அடிப்படையிலும் விருப்பு வெறுப்பு அடிப்படையிலும் மொழிக்குடும்பங்கள், அவற்றின் இனங்கள் ஆகியவை உண்மையே அல்லது பொய்யே என்று கூறுவது அறிவியல் ஆகாது. மேலும் மொழிக்குடும்பம், இனம் என்ற இரண்டு கருத்தாக்கங்களுமே சமுதாயங்களின் அரசியல் பொருளாதார அமைப்புக்களுடன் தொடர்பு உடையவையே! இவ்வாறு பிணைத்துப் பார்க்காமல் பிரித்துப் பார்ப்பது தவறு என்பதே எனது கருத்து.
இவ்வாறு சமுதாயத்தின் அரசியல் பொருளாதார அமைப்புக்களுடன் மொழிக்குடும்பம், இனம் என்ற இரண்டுமே தொடர்பு உடையதால் - வர்க்க நலன்களுடன் தொடர்பு உடையதால் - இவை தொடர்பான ஆய்வுகளும் கருத்துக்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உட்படும் என்பதில் ஐயம் இல்லை!
இயற்கைபற்றிய அறிவியலில்கூட - பிரபஞ்சம் இயற்கையாகத் தோன்றி நிலவுகிற ஒன்றா, அல்லது படைக்கப்பட்ட ஒன்றா- உயிர் இயற்கை நிகழ்வில் விளைந்த ஒன்றா அல்லது படைக்கப்பட்டதா - மழை, புயல் போன்ற நிகழ்வுகள் இயற்கையின் இயல்பான செயல்பாடுகளா அல்லது ஏதோ ஒரு ''சக்தியினால்'' தோன்றுகின்றவையா - என்று ''வர்க்க நலன்கள்'' அடிப்படையிலான மோதல்கள் நிலவுகின்றன!
அவ்வாறு இருக்கும்போது , மொழி, இனம் ஆகியவைபற்றிய கருத்துக்களுக்கும் வர்க்க நலன்களுக்கும் எவ்வாறு தொடர்பு இல்லாமல் இருக்கமுடியும்?
எந்தவொரு மொழியிலும் - அவற்றின் மொழி அமைப்பிலும் - வர்க்கப் பண்புகள் கிடையாது! ஒரு சமுதாயத்தின் மொழி அச்சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் பயன்படுகிற ஒன்றே!
ஆனால் குறிப்பிட்ட மொழிகளைத் தூக்கிப்பிடிப்பதிலும் குறிப்பிட்ட மொழிகளை அடக்குவதிலும் வர்க்க நலன்கள் உண்டு. எனவே மொழிபற்றிய கருத்துக்கள் வர்க்க நலன்களுக்கு அப்பாற்பட்டவை என்று கருதுவது தவறு.
தற்போது தமிழகத்தில் இது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது! அவ்வளவுதான்! திராவிடமா- தமிழா? மூல திராவிடமா - தமிழா? திராவிடனா - தமிழனா?
இவற்றில் இன்றைய சமுதாய அமைப்பில் இரண்டுவகைக் கருத்துக்கள் நீடிக்கவே செய்யும்!

திராவிடம்பற்றிய பிரச்சினை ஏன் சூடு பிடிக்கிறது?

 நண்பர் திரு மணி மணிவண்ணன்

--------------------------------------------------------------------------------------------------------
இவை ஏன் கால்டுவெல்லுக்குப் பின் நூறாண்டுகள் கடந்து இப்போது எழுகின்றன, சூடாகின்றன? இதன் அரசியல் என்ன? இதன் நட்பு அணிகள், பகையணிகள் எவை? பெயர் மாற்றத்தால் என்ன விளையும்? தற்பெருமை, சாதிப்பிணக்கு இவற்றில் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றன?
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------------------------------------------
தேசிய இனப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ள காலகட்டம் இது. ஆகவே ''திராவிடம்'' பற்றிய பிரச்சினை சூடுபிடிக்கிறது.
''தமிழ்த் தேசிய இனம் (Tamil Nationality) '' என்பதற்கான பொருளாதாரம், மொழி, பண்பாடு, நிலவியல் (பூகோளம்) , அரசியல் புறவயமாக நீடிக்கின்றன. அதாவது புறவயமான கூறுகளைப் பிரதிபலிக்கிற ஒரு கருத்து.
''திராவிடம்'' என்பதற்கு அடிப்படையே மொழிக்குடும்பக் கருத்தியல்தான்! அதிலிருந்து 'திராவிடன்' என்ற இனவாதக் கருத்தியல் (Racial ideology) முன்வைக்கப்படுகிறது. பிறகு அதற்குத் தேவையான ''சான்றுகள்'' முன்வைக்கப்படுகின்றன! இந்த 'இனம்' என்பது ''தேசிய இனத்தைக் (Nationality) '' குறிக்கவில்லை! மாறாக, race என்ற நிறம், முடி, உடல் வலிமை போன்றவற்றை அடிப்படையாகக்கொண்ட ஒரு கருத்தருவாக்கத்தைக் குறித்து நிற்கிறது. இந்த வகையான ''இனம்'' என்ற ''கருத்தியல் வகைப்பாட்டுக்கு'' தேவையான புறவயமான கூறுகள் இல்லை என்பதே எனது கருத்து.
"தேசிய இனம் (Nationality)" என்பது வேறு! முன்சொல்லப்பட்ட ''இனம் (Race) '' என்பது வேறு!
இந்தப் பிரச்சினை வெறும் ''பெயர் மாற்றப் பிரச்சினை'' இல்லை! இந்த இரண்டுக்குமான மோதல் என்பது வெறும் ''பெயர்க் குறியீட்டுப் '' பிரச்சினை இல்லை! தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல், பொருளாதார, பண்பாடு, மொழி ஆகியவை முக்கியத்துவம் பெறுகிற காலக்கட்டத்தில் தோன்றியுள்ள ஒரு பிரச்சினை என நான் கருதுகிறேன். இது ஒரு அனுமானம்தான்! மேற்கொண்டு ஆழமாக ஆராயவேண்டும். இதை வெறும் பாராளுமன்ற அரசியல் கட்சிகளின் பிரச்சினையாகக் குறுக்கிவிடமுடியாது என்றும் நான் கருதுகிறேன்.

மொழிக்குடும்ப (language family) ஆய்வும் இன (race) ஆய்வும்!

 மொழிக்குடும்ப (language family) ஆய்வும் இன (race) ஆய்வும்!

------------------------------------------------------------------------------------------------------------------------
மொழிக்குடும்ப ஆய்வு ஒரு புறம் இருக்கட்டும். வேறு சில ஐயங்கள்.
(1) மொழிக்குடும்ப ஆய்வை இன அடிப்படைக்கான (racial ) ஆய்வாகக் கொள்ளலாமா?
(2) உடலமைப்பு, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை இனமாகப் ( Race) பிரிக்கலாமா?
(3) மரபணு ஆய்வில் (Genetics) இன வேறுபாட்டை வெளிப்படுத்தும் மரபணுக்கூறு (Genes) இருக்கிறதா?
(4) உடம்பின் வலிமை. நிறம், முடி , உயரம் போன்றவற்றைக்கொண்டு "இனவேறுபாடுகளை" விளக்குவதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறதா?
(5) மேற்கூறிய வேறுபாடுகளுக்கு ஒருவர் வாழும் இடத்தின் தட்பவெட்பம், கிடைக்கும் உணவுப்பொருள்கள், உ.ழைப்பின் பண்பு ( வேட்டையாடுதல், தானிய உற்பத்தி செய்தல் போன்ற பிரிவினைகள்) போன்றவை காரணமா?
(6) மொழிக்குடும்ப ஆய்வை இனங்களின் ஆய்வுக்குப் பயன்படுத்தலாமா?
(7) இனக்குழுக்கள் (tribal ) , தேசிய இனம் (nationality) போன்றவை சமுதாய வரலாறு சார்ந்த விளைபொருள்கள் (historical products - தோற்றமும் உண்டு, மறைவும் உண்டு.) . இதுபோன்று இனம்(race) என்பதை ( அவ்வாறு இருப்பதை ஏற்றுக்கொண்டாலும்) ஒரு வரலாற்றுவிளைபொருளாகப் (historical product) பார்ப்பதா அல்லது மனிதனின் தோற்றத்திலே இருந்து நிரந்தரமாக (அன்றும் இன்றும் என்றும் - eternal ) நீடிக்கும் உயிரியல் அடிப்படையிலான ஒன்றாகப் பார்ப்பதா? (biological product) ?

ஞாயிறு, 3 மார்ச், 2024

மயிற்றோகை? மயில்தோகை? எது சரி?

'இலக்கணம்' என்ற முகநூற்குழுவில் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து. மற்றவர்களுக்கும் பயன்படலாம் எனக் கருதி அதை இங்கே பதிவிடுகிறேன்.

நண்பர் திரு. ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்
----------------------------------------------------------------
அரைக்கிணறு தாண்டாதே .
=========================
கல் + கண்டு = கற்கண்டு
கல் + சிலை = கற்சிலை
பல் + பொடி = பற்பொடி
என்று புணரும் . ஆனால் ,
நல் + திணை = நற்றிணை
நல் + தமிழ் = நற்றமிழ்
கல் + தூண் = கற்றூண்
என்று புணரும் . வருமொழி முதலில் தகர இனவெழுத்துக்கள் வந்தால் , அது றகரமாகவோ , றகர இனவெழுத்துக்களாகவோ மாறும்.
மயில் + தோகை = மயிற்றோகை
என்றே எழுத வேண்டும் . மயிற்தோகை என்று எழுதுவது , அரைக்கிணறு தாண்டுவதற்கு ஒப்பாகும் . அதற்குப் பதிலாக " மயில்தோகை " என்று எழுதுவதே நன்று .
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------------
மிகச் சரியான எடுத்துக்காட்டுக்கள். இத்துடன் மற்றொரு விளக்கமும் அளிக்கலாம் எனக் கருதுகிறேன். தமிழ்ப் புணர்ச்சியிலக்கணத்தில் திரிதல் செயற்பாடு நடைபெறுவதற்கு ஒரு விளக்கம் அளிக்கலாம். வேற்றுமைத்தொகை அமையும்போது, தொகை என்பதைக் காட்ட, இடையில் ஒற்று மிகும். எனவே கல் + க் + கண்டு = கல்க்கண்டு ; தமிழில் -ல்க்- மெய்ம்மயக்கம் இல்லை. எனவே -ல்க்- என்பது - ற்- என்று 'ல்' -க்கு வல்லின இனமான 'ற்' தோன்றுகிறது. ஆகவே மூன்று மெய்ம்மயக்கங்கள் ஏற்படும்போதுமட்டுமே இந்தத் திரிதல் ஏற்படுகிறது.
கள் + குடம் -> கள்க்குடம் -> கட்குடம் ;
மண் + குடம் -> மண்க்குடம் -> மட்குடம்;
பொன் + குடம் -> பொன்க்குடம் -> பொற்குடம்.
ஆனால் கூழ் + பானை -> கூழ்ப்பானை.
வாய் + பாடல் -> வாய்ப்பாடல்;
தேர் + சக்கரம் -> தேர்ச்சக்கரம்.
தமிழில் ழ், ய், ர் ஆகிய மெய்களைக்கொண்ட மூன்று மெய்ம்மயக்கங்கள் வரலாம். எனவே இங்குத் திரிதல் கிடையாது.
இவ்வாறு புணர்ச்சியில் திரிதலுக்குக் காரணம் கூறலாமா என்று கருதிப்பார்க்கலாம்.
எனவே மயில் + தோகை -> மயில்த்தோகை ; மயிற்றோகை.
இந்த மாற்றமே 'பொற்றாமரை' 'கற்றூண்' என்பவற்றில் ஏற்படுகிறது. ஆனால் இன்றைய தமிழில் இவ்வாறு சொல்வதற்குச் சற்றுக் கடினம் என்று கருதி, சிலர் 'மயிற்தோகை' அல்லது 'மயில்தோகை' என்று எழுதுகிறார்கள்.
ஆனால் 'மயில்தோகை' என்பதைவிட, 'மயில்த்தோகை' என்று எழுதினால், வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகும் என்ற விதி செயற்படும். (ஆனால்'ல்த்' என்ற மெய்ம்மயக்கம் தமிழில் கிடையாதுதான் !) எனவே 'மயிற்றோகை' அல்லது ஒரு விதிவிலக்காக 'மயில்த்தோகை' என்று எழுதவேண்டும். 'மயில்தோகை' என்று எழுதக்கூடாது என்று நான் கருதுகிறேன். அவ்வாறு எழுதினால் வேற்றுமைத்தொகை என்று அது அமையாது.
இது ஒரு கருதுகோள்தான். கருதிப்பார்க்கவும்.
தற்போதைய " Optimality Theory" என்ற ஒரு மொழியியற்கோட்பாட்டில் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஒரு இடத்தில் இரண்டு விதிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டால் (அதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் மற்றது அதற்குத் தடையாக அமையும்!) , அந்த இரண்டில் தலையாய விதியைத் தக்கவைத்துக்கொண்டு, அதற்கு அடுத்த விதியைக் கைவிடலாம். எனவே இலக்கணவிதிகளை ranking செய்வது முக்கியம் என்று கூறப்படுகிறது.
நாம் தற்போது விவாதிக்கிற சிக்கலில் - வேற்றுமைத்தொகைக்கு ஒற்று மிகும் என்பது ஒரு விதி; அதேவேளையில் 'ல்த்' என்ற மெய்ம்மயக்கம் கிடையாது என்பது மற்றொரு விதி! ! இந்த இரண்டில் எதைத் தக்கவைப்பது? எதைக் கைவிடுவது? முடிவு எடுக்கவேண்டும்.
என்னைப்பொறுத்தவரையில் வேற்றுமைத்தொகைக்கு ஒற்று மிகும் என்பதைத் தக்கவைக்கவேண்டும்.

இங்கு நான் முன்வைக்கிற சிக்கல் . . . வேற்றுமைத்தொகைக்கான புணர்ச்சி விகுதி, மெய்ம்மயக்க விதி இரண்டில் எதை உயர்தளத்திலும் எதை அடுத்த தளத்திலும் வைக்கலாம் என்ற சிக்கல். இரண்டையும் ஒரே இடத்தில் தக்கவைக்க இயலவில்லை.
(1) மயில் + தோகை -> மயில்த்தொகை என்றால் மெய்ம்மயக்க விதி ( 'ல்' என்பதையடுத்து 'த்' என்பது வரக்கூடாது) புறக்கணிக்கப்படுகிறது!
(2) மாறாக, மயில்தோகை என்றால் வேற்றுமைத்தொகைக்கான புணர்ச்சி விதி (ஒற்று மிகவேண்டும் என்ற விதி) புறக்கணிக்கப்படுகிறது.
(3) மயில்தோகை என்றால் இரண்டுவிதிகளுமே - வேற்றுமைத்தொகைக்கான (ஒற்று மிகும் என்ற) புணர்ச்சி விதி, -ல்த்- என்று வரக்கூடாது என்ற மெய்ம்மயக்கவிதி இரண்டுமே புறக்கணிக்கப்படுகின்றன.
எனவே, குறைந்தது ஒரு விதியையாவது தக்கவைக்கலாம் என்ற முடிவு எடுத்தால் , 'மயில்த்தோகை' என்பதை எடுத்துக்கொள்ளலாம். இங்கு மெய்ம்மயக்கவிதி புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகவேண்டும் என்ற புணர்ச்சி விதி கவனத்தில் கொள்ளப்படுகிறது.
இரண்டுவிதிகளையுமே தக்கவைக்கவேண்டும் என்றால், 'மயிற்றோகை' என்பதுதான் சரி.
இந்தச் சிக்கலுக்கு விடை தேவை!

செய்யறிவுத் திறனும் ( Artificial Intelligence AI) தமிழும் . . . ''உலகத் தாய்மொழி நாளையொட்டி'' நான் வலியுறுத்தும் ஒரு கருத்து

 செய்யறிவுத் திறனும் ( Artificial Intelligence AI) தமிழும் . . . ''உலகத் தாய்மொழி நாளையொட்டி'' நான் வலியுறுத்தும் ஒரு கருத்து . . . இதைப் படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்!

-----------------------------------------------------------------------
செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் - குறிப்பாக, சேட் ஜிபிடி (Chat GPT) - ஆங்கிலத்திற்குச் சிறப்பாகப் பயன்படுகின்றன. ஆனால் தமிழ்மொழிக்குச் சிறப்பாகச் செயல்படவில்லையே? ஏன்?
இந்த வினாவைச் சேட் ஜிபிடி -க்கே முன்வைத்து, பதில் எதிர்பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் ஆங்கிலமொழிக்கான தரவுகள் (data / corpus) கோடியே கோடியே (trillions) கிடைத்துள்ளன; ஆனால் அத்துடன் ஆங்கிலமொழியின் நுட்பங்கள் (nuances) - குறிப்பாகப் பல்வேறுவகைப்பட்ட கருத்தாடல்கள் (discourses) அமைப்புக்கும் ஆங்கிலத் தொடர் அமைப்புக்கும் (Sentence structure - Syntax) இடையில் உள்ள பல்வேறு மொழிசார்ந்த நுட்பங்கள் - ஆங்கிலத்தரவுகளுடன் அளிக்கப்பட்டுள்ளன என்பதே என் கருத்து. செய்யறிவுத்திறன் அறிமுகமானபிறகு, மொழி இலக்கணம், மொழியியல் துறைகளுக்கே இனி வேலை இல்லை என்ற ஒரு கருத்து பலரிடம் நிலவுகிறது. அது தவறானது என்பதே எனது கருத்து.
இனிமேல்தான் அதிக முக்கியத்துவம் தமிழ் இலக்கணத்திற்கும் மொழியியலுக்கும் உள்ளது என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவுசெய்கிறேன்.
எனவே, தமிழ்மொழியின் இலக்கணம், தமிழ்க்கணினிமொழியியல் அடிப்படையான தமிழ் ஆய்வுகள் தேவை என்பதே எனது கருத்து. அதனடிப்படையில் சேட் ஜிபிடி-இடம் என் ஐயத்தை முன்வைத்தேன். அது அளித்துள்ள பதில் எனது கருத்துக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது. அந்தப் பதிலை அப்படியே கீழே தருகிறேன். நண்பர்கள் படித்துக்கொள்ளலாம்.
Improving Chat GPT’s Tamil capabilities requires a concerted effort involving several key areas:
1. High-Quality Training Data:
o Curated Text Corpora: Collecting diverse and high-quality text data in Tamil is crucial. This includes books, articles, websites, and other written content.
o Domain-Specific Data: Incorporating domain-specific texts (e.g., legal, medical, scientific) ensures better performance across various contexts.
2. Linguistic Annotation:
o Part-of-Speech Tagging: Annotating words with their grammatical roles (nouns, verbs, adjectives) helps the model understand sentence structures.
o Named Entity Recognition: Identifying entities (names, locations, dates) aids in context comprehension.
3. Fine-Tuning and Adaptation:
o Tamil-Specific Fine-Tuning: Iteratively fine-tune ChatGPT using Tamil data. This process adapts the model to Tamil linguistic nuances.
o User Feedback Loop: Encourage users to provide feedback on model outputs to refine its performance.
4. Lexical Resources:
o Word Embeddings: Creating word embeddings (vector representations) for Tamil words enhances semantic understanding.
o Tamil WordNet: Developing a resource similar to WordNet for Tamil helps capture word meanings and relationships.
5. Grammatical Rules and Patterns:
o Syntax Rules: Explicitly encoding Tamil syntax (sentence structure, verb conjugations) aids in generating grammatically correct sentences.
o Morphological Rules: Understanding Tamil morphemes (prefixes, suffixes) improves word formation.
6. Semantic Understanding:
o Semantic Role Labeling: Identifying roles (agent, patient, location) in sentences improves comprehension.
o Word Sense Disambiguation: Resolving word ambiguities based on context enhances accuracy.
7. Cultural Context and Idioms:
o Cultural Sensitivity: Incorporate knowledge of Tamil culture, customs, and idiomatic expressions.
o Proverbs and Sayings: Recognizing common proverbs and idioms enriches language generation.
8. Multimodal Data:
o Speech Data: Collecting spoken Tamil data allows for speech-to-text and text-to-speech capabilities.
o Visual Context: Integrating image descriptions or visual cues enhances context-aware responses.
9. Collaboration and Community Involvement:
o Research Community: Collaborate with linguists, NLP researchers, and Tamil language experts.
o Open Source Contributions: Encourage contributions to open-source Tamil NLP tools and resources.
10. Ethical Considerations:
o Bias Mitigation: Ensure fairness and avoid biases in model outputs.
o Privacy and Security: Safeguard user data and respect privacy.
Remember that improving Chat GPT’s Tamil involves a holistic approach, combining linguistic expertise, data availability, and community efforts.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India