ஞாயிறு, 27 நவம்பர், 2016

உயிரும் உயிரும் சந்தித்தால்?(2)

உயிரும் உயிரும் சந்தித்தால்?(2)
-----------------------------------------------------
முந்தைய உரையில் நிலைமொழி இறுதியில் வல்லின மெய்கள் தனித்து நிற்காது.... எனவே அவற்றிற்கு உதவி செய்ய, குற்றியலுகரம் என்ற ஒரு உதடு குவியாத உயிரொலி வந்து நிற்கிறது என்று பார்த்தோம் ( பாக்கு, கன்று, சார்பு, அழகு, ஏடு ) ஆனால் அவ்வாறு குற்றியலுகரத்தை இறுதியாக உடைய சொற்களையடுத்து, உயிரொலிகளில் தொடங்கும் நிலைமொழிகள் வந்தால் மேற்கூறிய நிலைமொழிகளின் குற்றியலுகரம் மறைந்துவிடும் என்றும் பார்த்தோம் ( பட்டு+ஆடை = பட்டாடை, சங்கு +ஒலி = சங்கொலி).

ஆனால் இன்றைய பேச்சுத்தமிழில் நிலைமொழியின் இறுதியில் வல்லினங்கள் மட்டுமல்ல, மெல்லினங்கள், இடையினங்கள்கூட வருவதில்லை என்றும் பார்த்தோம் ( கண்- கண்ணு, தேர் -தேரு, தோல்-தோலு, தேள்-தேளு). அவ்வாறு வரும்போது, உகரம் அல்லது இகரம் இணைந்துகொள்கின்றன. இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் எழுத்துத்தமிழில்கூட இடம்பெறலாம். இப்போது அதுபற்றிய விவாதம் வேண்டாம்.
நிலைமொழி இறுதியில் வல்லினங்களோடு சேருகிற குற்றியலுகரம், வருமொழியில் உயிர்கள் வரும்போது மறைகிறது என்ற விதி, மெல்லினங்கள், இடையினங்களுக்கும் பொருந்துமா?
''தொலைவு'' என்ற சொல்லின் இறுதியில் இடையின வகரத்தோடு உகரம் சேர்ந்து ''வு'' என்று அமைந்துள்ளது. வகரம் வல்லினம் இல்லை. ஆகவே இலக்கணவிதிப்படி, ''வு'' -வில் உள்ள உகரமானது குற்றியலுகரம் இல்லை. எனவே இதையடுத்து வருமொழியில் உயிரில் தொடங்கும் ஏதாவது சொல் வந்தால், இரண்டுக்குமிடையில் ''வ்'' உடம்படுமெய் வரவேண்டும். அதாவது தொலைவு+ இல் = தொலைவுவில் என்று அமையவேண்டும். ஆனால் அவ்வாறு வராமல், ''தொலைவில்'' என்றுதான் வருகிறது. அதாவது ''வு''-வில் உள்ள உகரம் மறைந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? ஒன்று, மறைந்த இந்த உகரம் குற்றியலுகரமாக இருக்கவேண்டும். அல்லது முற்றியலுகரமாக இருந்தாலும், சில இடங்களில் அது மறையும் என்று கூறலாம்.
''அது+ஐ = அதை / அதனை '' ... இங்கு ''அது''வில் உள்ள ''து'' முற்றியலுகரம்தான். ஏனென்றால் அது தனிக்குறிலையடுத்து வருகிறது. அதனால் ''அது+வ+ஐ = அதுவை '' என்று வரவேண்டும். ஆனால் அவ்வாறு வரவில்லை.
சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கிறார் ..... 'இதோ வந்துவிட்டார் '' என்ற தொடரையும் '' இதுவோ அதுவோ தெரியவில்லை'' என்ற தொடரையும் பார்க்கும்போது, முதல்தொடரில் ''ஓ'' என்பது ஒரு இடைச்சொல். இரண்டாவது தொடரில் ''ஓ'' என்பது வினா எழுத்து. முதல் தொடரில் ''இது'' என்பதில் உள்ள உகரமானது, குற்றியலுகர விதிக்கு உட்பட்டு மறைந்துவிடுகிறது. இரண்டாவது தொடரில் ''இது'' என்பதில் உள்ள உகரமானது முற்றியலுகரத்திற்கான விதிக்கு உட்பட்டு உடம்படுமெய் எடுக்கிறது!
அதுபோல ''அது+ஐ= அதை'' என்று (இறுதி உகரம் மறைந்து) அமையும்போது, ''அது+உம்= அதுவும்'' என்று ( இறுதி உகரம் மறையாமல் இடையில் உடம்படுமெய் தோன்றி) அமைகிறது.
எனவே, இங்கு நாம் கவனிக்கவேண்டியது.... பொருள்தெளிவுக்கு முதலிடமா? அல்லது அடிப்படை சந்தி விதிகளுக்கா? இரண்டும் முக்கியமானவைதான். ஆனால் இரண்டில் முதலாவதே மிக முக்கியமானது. இரண்டையுமே பின்பற்றினால் மிக நல்லது. அதற்கு வழியில்லாத நேரத்தில்.... பொருள் தெளிவே முக்கியம்! இதைத்தான் தற்கால மொழியியலில் Optimality Theory என்ற கோட்பாடு முன்வைக்கிறது! ஒரு இடத்தில் இரண்டு விதிகளின் தேவைகள் உள்ளன என்றால், ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்படும்போது, , எதைத் தக்கவைப்பது, எதைக் கைவிடுவது? அதற்கு இலக்கணவிதிகளை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தவேண்டும் ( Ranking). இரண்டு விதிகளில் எது உயர்ந்த நிலையில் உள்ளதோ (which is more optimal) அதற்காக அதற்குக் கீழ்நிலையில் உள்ள விதியைக் கைவிடலாம்! இலக்கண ஆசிரியர்கள் ஆங்காங்கே ''சிலவற்றிற்கு விதிவிலக்குகள் உண்டு.... அதனால் தவறு இல்லை'' என்று கூறுவதற்கு இதுதான் காரணம்!
''கோயில் - கோவில்'' , ''வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்'' ''கருத்துகள் - கருத்துக்கள்'' ''சங்க காலம் - சங்கக் காலம்'' போன்றவற்றைப்பற்றிய முரண்பட்ட கருத்துகள் எழும்போது, இதைக் கவனத்தில் கொள்ளலாம். மக்களது நடைமுறை மொழி வழக்கிற்குத்தான் இலக்கணம். இலக்கணத்திற்காக மொழி இல்லை. இவ்வாறு கூறுவதால் நம் விருப்பப்படி மொழியைக் கையாளலாம் என்று நினைத்துவிடக்கூடாது. மேற்கூறியவை போன்று சில இடங்களில் சிக்கல்கள் ஏற்படும்போதுமட்டுமே இதுபோன்ற முடிவுகளுக்கு வரவேண்டும். அதனால்தான் இலக்கண ஆசிரியர்களும் ''மரபு'' ''என்மனார் புலவர்'' என்றெல்லாம் கூறிச்சென்றுள்ளார்கள்!

''பார்''  ''கேள்'' ''வாழ்'' ''காண்'' என்ற வினையடிகள் முன்னிலைப் பன்மையில் ''பாருங்கள்'' ''கேளுங்கள்'' ''வாழுங்கள்'' ''காணுங்கள்'' என்று ஒலித்துணை உகரம் எடுத்து வருவதையும் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறியுள்ளார்.

''நிலவு+ஒளி = நிலவொளி'' ''கனவு+உலகம் = கனவுலகம்'' ஆகியவற்றில் ''நிலைமொழி ஈறாக (வ்+உ)  ''உ''  என்று உயிர் வந்துள்ளது. முதல் விதிப்படி இந்த உகரத்துக்குப்பிறகு ''ய்'' என்ற உடம்படுமெய் வரவேண்டும். ஆனால் ''வு'' என முடியும் இந்த ஈறுகளில் , ''வ்+உ'' என்று ''வ்'' சேர்ந்திருப்பதால், இதற்கு மேலும் இன்னொரு வ் வந்து அதில் உயிர் கலந்தால் நிலவுவொளி என்றோ , கனவுவுலகம் என்றோ ஆகும் . இதனால் , அவற்றிலுள்ள ''வுவொ'' அல்லது ''வுவு'' என்ற எழுத்துகளை அடுத்தடுத்து ஒலிப்பது கடினமாகும். எனவேதான் , ''வு'' ஈற்றுக்குப்பிறகு உடம்படுமெய் தோன்றாமல், அதிலுள்ள உகரத்தைத் தவிர்த்து, எஞ்சியுள்ள ''வ்'' என்ற மெய்யில் வருமுயிர் சேர்ந்து ஒலிப்பை எளிதாக்கியது. இஃது ஒலிப்பு எளிமை கருதிய புணர்ச்சி முறையாகும்''. மலேசிய தமிழறிஞர் செ. சீனி நைனா முகம்மது. ஆகவே ஒலிப்பு எளிமையா , புணர்ச்சி விதியா .... இரண்டில் ஒலிப்பு எளிமைக்கே இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .

 ஆகவே சந்தியில் .... நான்கு அடிப்படைகளை - பொருள் தெளிவு, ஒலிப்பு எளிமை, மரபு அல்லது வழக்கியல், புணர்ச்சிவிதி ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளலாம். இவற்றை எவ்வாறு வரிசைப்படுத்துவது என்பதைக் கருதிப் பாருங்கள்!

சனி, 26 நவம்பர், 2016

உயிரும் உயிரும் சந்தித்தால்?

உயிரும் உயிரும் சந்தித்தால்?
-----------------------------------------------
முன்பு நான் பதிவுசெய்த ஒரு உரையில் உடம்படுமெய் என்பதுபற்றிக் கூறியிருந்தேன். ''தெரு'' என்று உகரத்தில் முடிகிற சொல்லானது ''ஆ'' என்ற வினாவுக்கான விகுதியோடு இணையும்போது ,'' தெருவா'' என்று மாறுகிறது என்றும் ''இலை'' என்று ஐகாரத்தில் முடியும் சொல்லானது அதே ''ஆ'' என்ற சொல்லோடு இணையும்போது ''இலையா'' என்றும் மாறுகிறது என்றும் கூறியிருந்தேன். இவ்வாறு உயிரும் உயிரும் இசையும்போது ய்,வ் என்ற மெய்யொலிகள் இடையில் வந்து உதவுகின்றன என்று பார்த்தோம்.

ஆனால் ''சிறகு'' என்று உகரத்தில் முடிகிற சொல்லானது ''ஆ'' என்ற முன்பு கூறிய வினாவுக்கான விகுதியோடு இணையும்போது .... ''சிறகுவா'' என்று மாறவில்லை. அதாவது இறுதி உகரமும் அடுத்துவருகிற ஆகாரமும் இணையும்போது வ் என்ற உடம்படுமெய் வரவில்லை. மாறாக, ''சிறகு'' என்ற சொல்லில் உள்ள உகரம் மறைந்து, ''சிறகா'' என்று ஆ -வுடன் இணைந்து அமைகிறது. காடு + ஆ = காடா என்றும் கன்று + ஆ = கன்றா என்றும் அமைகின்றன. அதாவது நிலைமொழியின் இறுதி உகரம் மறைந்துவிடுகிறது. ஆனால் தெரு + ஆ என்பதில் மட்டும் நிலைமொழியின் இறுதி உகரம் ஏன் மறையவில்லை? அதற்குப்பதிலாக ஏன் உடம்படுமெய் வருகிறது? அப்படியென்றால் இந்த இரண்டு உகரமும் ஒன்று இல்லையா? வேறு வேறா?
ஆமாம் , வேறு வேறாகத்தான் தமிழில் அவை பயின்றுவருகின்றன. அவற்றை உச்சரிப்பதிலும் வேறுபாட்டைக் காணலாம். ''தெரு'' என்று சொல்லில் இறுதி உகரத்தை உச்சரிக்கும்போது உதடு முழுமையாகக் குவியும். ஆனால் ''சிறகு'' என்ற சொல்லில் இறுதி உகரத்தை உச்சரிக்கும்போது உதடு குவியாது. இதுவே அடிப்படை வேறுபாடு. அவ்வாறு உதட்டைக் குவித்து உகரத்தை உச்சரிக்கும்போது அதற்கு ஆகிற நேரமும் உதட்டைக் குவிக்காமல் உகரத்தை உச்சரிக்கிற நேரமும் கூட மாறுபட்டவைதான். இதைத்தான் இலக்கண ஆசிரியர்கள் உதட்டைக் குவித்து உச்சரிக்கும் உகரத்திற்கு ஒரு மாத்திரை அளவு நேரம் என்றும் குவிக்காமல் உச்சரிக்கிற உகரத்திற்கு அரை மாத்திரை நேரம் என்று கூறுகிறார்கள்.
உதடு குவித்து உச்சரிக்கிற உகரத்தை முற்றுகரம் என்றும் உதடு குவிக்காமல் உச்சரிக்கிற உகரத்தைக் குற்றியலுகரம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்..
வருமொழியில் ஒரு உயிர் வரும்போது, நிலைமொழியில் உள்ள குற்றியலுகரம் ஏன் மறைகிறது? மறைவதால அந்த நிலைமொழின் ஒரு உறுப்பு - ஒரு எழுத்து - இல்லாமல் போய்விடுகிறதே? அவ்வாறு போய்விடுவதால், அந்தச் சொல்லின் பொருள் மாறிவிடாதா? அதற்குப் பாதிப்பு ஏற்படாதா? இதற்கு விடை காணவேண்டும். உண்மையில் இந்த உகரம் அந்தச் சொல்லின் உறுப்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தற்காலிகமாக, , ஏதோ ஒரு காரணத்திற்காக அது சேர்ந்துவந்துள்ளது. அந்தச் சொல்லை உச்சரிப்பதற்கு உதவிசெய்வதற்காக வந்துள்ளது என்று சொல்லலாமா? இங்கு இந்த உகரத்தின் மற்றொரு முக்கியமான பண்பையும் கணக்கில் கொள்ளவேண்டும். சொல் இறுதியில் வல்லின எழுத்துகளுடன்மட்டும்தான் ( க், ச், ட்,த்,ப்,ற் ) இந்த உகரம் வருகிறது ( இன்றைய எழுத்துத்தமிழில் பிற மெய்களுக்கும் இந்தப் பண்பு ஏறியிருக்கிறது) . இதைப்பற்றி ஒரு கருத்தைக் கூறுவதற்குமுன் , இன்றைய பேச்சுத்தமிழின் ஒரு பண்பைக் காண்பது சரியாக இருக்கும்.
வாய் --> வாயி ; தேர் --> தேரு ; கால் --> காலு ; தேள் --> தேளு ; கூழ் --> கூழு என்றும் பெரும்பான்மையோர் பேச்சில் மாறுகின்றன. இவை எல்லாவற்றிலும் முதல் எழுத்து நெடில்களாக இருக்கின்றன. எய் --> எய்யி ; கல் --> கல்லு ; எள் --> எள்ளு (ர், ழ் ஆகியவை சொல்முதலில் குறிலையடுத்து வராது, வ் இறுதிச் சொல் இன்றைய பேச்சுத்தமிழில் இல்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது) இவை அனைத்திலும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். சொல் இறுதியில் பேச்சுத்தமிழில் இன்று எந்தவொரு இடையின மெய்களும் வருவது கிடையாது. அதுபோல, மெல்லின எழுத்துகளான ண்,ன்,ம் ஆகியவையும் சொல் இறுதியில் வருவது கிடையாது. ஆண் --> ஆணு; பேன் --> பேனு; கண்--> கண்ணு; அல்லது இவை மறைந்து, அவற்றின் மூக்கொலித்தன்மையானது முந்தைய உயிரெழுத்தில் கலந்துவிடும். அவன் --> அவ(ன்) ; மரம் --> மர(ம்) . அதாவது இன்றைய பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டிலும் க்,ச்,ட்,த்,ப்,ற் என்று சொற்கள் முடிவதில்லை. ஆனால் மெல்லினம் (ண்,ன்,ம்) , இடையினம் (ய்,ர்,ல்,ள்,ழ் ) எழுத்துத்தமிழில் சொல் இறுதியில் வரும். ஆனால் பேச்சுத்தமிழில் மெல்லினம், இடையினங்கள்கூட இன்று வருவது இல்லை! .
இதுபோன்றே ஒரு காலத்தில் வல்லின மெய்கள் (க்,ச்,ட்.த்,ப்,ற்) சொல் இறுதியில் வந்திருக்கலாம். பின்னர் இன்றை ய பேச்சுத்தமிழில் மெல்லினம் இடையின இறுதிச் சொற்களில் ஏற்பட்ட மாற்றங்கள்போல, சொல்லிறுதி வல்லினங்களை வெளியிடுவதற்கு - உதவுவதற்கு- உதடு குவியாத உகரம் வந்திருக்கலாம்.அதாவது வல்லின மெய் ஒற்றுகளை எளிதாக வெளிப்படுத்த உதவுவதற்காக இந்த உதடு குவியாத உகரம் வந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சொற்களையடுத்து, உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் வந்தால், முன்னர் உதவிக்கு வந்த உதடுகுவியாத உகரம் தேவையில்லை அல்லவா? உதவிக்கு வந்த உகரம்தானே! அடுத்த சொல்லின் தொடக்கத்தில் மற்றொரு உயிர் வந்தவுடன் - இந்த உதடு குவியாத உகரத்தின் உதவி தேவைப்படவில்லை . எனவே மறைந்துவிடுகிறது! எனவேதான் நன்னூல் என்ற இலக்கணநூலில் '' உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்'' என்று கூறப்பட்டுள்ளது. பேரா. மு.வ. அவர்களும் இதை ''ஒலித்துணை உகரம்'' என்று கூறியிருப்பதாகச் சிங்கப்பூர் சித்தார்த்தன் கூறுகிறார். பேரா. தெ.பொ.மீ. அவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
மேற்கூறியது ஒரு கருதுகோள்தான்!
நாளை மீண்டும் தொடர்கிறேன்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா? (2).

பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா? (2).
--------------------------------------------------------------------------------------
(1) முந்தைய உரையில் ''அழகான குதிரை'' என்பதில் உள்ள ''அழகான '' என்பது கூட்டுநிலைப் பெயரடை என்று பார்த்தோம். அதாவது ''அழகு'' என்ற பெயர்ச்சொல்லோடு ''ஆன'' என்ற பெயரடைவிகுதி இணைந்து இது உருவாகிறது. ''ஆன'' போன்றே ''உள்ள'' ''ஆர்ந்த'' ''சான்ற'' ''வாய்ந்த'' ''வாய்ந்த'' ''இல்லாத'' போன்ற விகுதிகளும் கூட்டுநிலைப் பெயரடை விகுதிகளாகப் பயன்படுகின்றன (பேரா. பொற்கோ).

'' அன்புள்ள தம்பி .... பண்புள்ள பையன்
அன்பார்ந்த தலைவர் ... அன்புசான்ற தலைவர்
தகுதிவாய்ந்த தலைவர் ... அறிவாய்ந்த தலைவர்
தகுதியில்லாத தலைவர் ''

மேற்கண்ட கூட்டுப்பெயரெச்சங்களுக்குப்பின்னர் ( வருமொழியில் வல்லினத்தை முதலாகக்கொண்ட சொற்கள் வந்தாலும்) மிகாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(2) ''என்ற'' ஈற்றுப் பெயரடை: குறிப்புப்பொருளைக்கொண்ட சில பெயரடைகள் உள்ளன. அந்தக் குறிப்பு ஒலிக்குறிப்பாகவோ உணர்வுக்குறிப்பாகவோ இருக்கலாம். இவற்றின்பின்னும் வல்லொற்று மிகாது என்று பேரா. பொற்கோ கூறுகிறார்.

''திடீரென்ற சத்தம்''... ''கலகலவென்ற சிரிப்பு''
''கன்னங்கரேலென்ற நிறம்'' ''பச்சைப்பசேலென்ற நிறம்''
(3) ''ஒரு'' என்ற எண்ணுப்பெயரடையின் பின்னும் வல்லொற்று மிகாது. ''ஒரு பையன்''
(4) ''ஆவது''  என்னும் விகுதியைக்கொண்ட எண்ணுமுறை அல்லது வரிசைமுறைப் பெயரடைகளின்பின்னும் வல்லொற்று மிகாது.
''நான் பத்தாவது படிக்கிறேன்'' 

(5) ''தக்க'' ''வேண்டிய'' ''தகாத'', ''வேண்டாத'' போன்ற கூட்டுப்பெயரெச்சங்களுக்குப்பின்னும் வல்லொற்று மிகாது. இது கட்டாயம்.
செய்யத்தக்க காரியம்
செய்யவேண்டிய காரியம்
செய்யத்தகாத காரியம்
செய்யவேண்டாத காரியம்

(செய்யத்தக்க என்பதில் ''செய்ய'' என்பது செயவாய்பாட்டு வினையெச்சவடிவமாக இருப்பதாலும் அதனுடன் இணைகிற தக்க, தக்க என்பவை வல்லினத்தை முதலாகக் கொண்டுள்ளதாலும், இரண்டுக்கும் இடையில் வல்லின ஒற்று மிகுகிறது என்பதைக் கவனிக்கவும்).
ஆகவே,
(1) அந்த , இந்த, எந்த, புது, எல்லா ஆகியவையும் ''செல்லா'' போன்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள், எட்டு, பத்து ஆகிய வன்தொடர்க்குற்றியலுகரத்தை இறுதியாகக்கொண்ட எண்ணுப்பெயரடைகள் ஆகியவற்றைத்தவிர , வேறு எந்த பெயரெச்சத்திற்கும் அல்லது பெயரடைக்கும்பின்னால் (வருமொழியானது வல்லினத்தில் தொடங்கினாலும்) வல்லொற்று மிகாது.

இதற்குக் காரணம் தொடரியலே என்று நான் கருதுகிறேன். பெயரெச்சம் அல்லது பெயரடைக்குப்பின்னர் எந்த ஒரு விகுதியையும் சேர்க்க முடியாது. எடுத்துக்காட்டாக, ''நல்ல'' , ''வந்த'' ஆகியவற்றுடன் ஏதாவது ஒரு இலக்கணவிகுதியைச் சேர்த்துப்பாருங்கள்! ( ஆனால் வினையெச்சங்களுடன் சேர்க்கலாம் .... ''வரவே (வர+ஆ) செய்தான்' ' ''படித்தா (படித்து+ஆ) இருக்கிறான் '').
தமிழில் பெயரெச்சம்பற்றி ஒரு மிக ஆழமான முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் க. இராமசாமி ( மேனாள் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர்) 80-களில் மேற்கொண்டார். தமிழில் பெயரடைபற்றி முனைவர் அ. கோபால் 80-களில் ஒரு முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இவர்களுக்கு வழிகாட்டிகள் பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்களும் பேரா. செவை. சண்முகம் அவர்களும் ! இரண்டு ஆய்வுகளுமே நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாட்டின் அடிப்படையில் - தொடரியல் அடிப்படையில் - மேற்கொள்ளப்பட்டவையாகும். பெயரெச்சம்பற்றி முதன்முதலாக ஒரு தெளிவான ஆய்வுக்கட்டுரையைப் பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்கள் 70-களில் வெளியிட்டார். இக்கட்டுரை பேரா. ந. வானமாமலை அவர்கள் நடத்திய ''ஆராய்ச்சியில்'' வெளிவந்த நினைவு!

வியாழன், 24 நவம்பர், 2016

பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா?

பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா?
-----------------------------------------------------------------------------------------------
தமிழில் பெயருக்கு அடையாகச் செயல்படுவதற்கு - அதாவது பெயர்ச்சொல் குறித்து நிற்கும் பொருள், நபர், நிகழ்ச்சி, போன்றவற்றின் பண்புகளை அல்லது செயல்களை விளக்கி நிற்பதற்கு - இரண்டுவகையான சொற்கள் பயன்படுகின்றன. ஒன்று பெயரடை... மற்றொன்று பெயரெச்சம்.

1) நல்ல பையன் ... தீய செயல்கள் - பெயரடை
2) அழகான மயில் , வேகமான குதிரை - பெயரடை
3) படித்த மனிதர்.... உயர்ந்த கோபுரம் - பெயரெச்சம்
4) பேசிய தலைவர் ... ஓடுகிற பையன் - பெயரெச்சம்

முதலில் (1) கூறப்பட்டுள்ள பெயரடைகளை இலக்கணத்தார் குறிப்புப் பெயரெச்சம் என்று கூறுவார்கள். அதாவது காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வந்து நிற்பவை. ஆனால் அதுபற்றிய விவாதங்களை நாம் இங்கு மேற்கொள்ளவேண்டாம். பேரா. பொற்கோ அவர்கள் இத்தகைய பெயரடைகளைத் தனிநிலைப் பெயரடைகள் என்று அழைக்கிறார். இவற்றில் ஒரு அடிச்சொல்லும் , ''அ'' என்ற இறுதி விகுதியும் அமையும்.
இரண்டாவது (2) கூறப்பட்டுள்ள பெயரடைகளின் அமைப்பானது பெயர் + ஆன என்று இருக்கிறது. ''ஆன'' என்பது ''ஆகு'' என்ற வினையின் பெயரெச்சம்போலத் தோன்றினாலும், இங்கு அதை ஒரு இலக்கண விகுதியாகத்தான் பார்க்கவேண்டும். பெயர்களைப் பெயரடைகளாக மாற்றுகிற விகுதியாக இது பயன்படுகிறது. இதுபோன்ற பெயரடைகளைப் பேரா. பொற்கோ அவர்கள் ''கூட்டுநிலைப் பெயரடைகள்'' என்று அழைக்கிறார்.
மூன்றாவதாகக் (3) கூறப்பட்டுள்ள பெயரெச்சங்கள் தோற்றத்தில் இறந்தகாலத்தை ஏற்ற எச்சங்களாகத் தோன்றினாலும், அவை அவ்வாறு காட்டவில்லை. மாறாக, பொதுத்தன்மையை அல்லது பொதுப்பண்பைச் சுட்டிநிற்கின்றன. அதாவது தொடரில் சுட்டிக்காட்டப்படுகிற அந்தக் குறிப்பிட்ட மனிதர் ''படித்தவர்'' என்பதையும், அந்தக் கோபுரம் '' உயர்ந்தது'' என்பதையும் , அதாவது பொதுவான பண்புகளைக் காட்டி நிற்கின்றன.
நான்காவதாகக் (4) கூறப்பட்டுள்ள பெயரெச்சங்கள் உண்மையில் காலத்தைக் காட்டிநிற்கின்றன. ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை - நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றில் ஒன்றை - காட்டி நிற்கின்றன.
பெயரெச்சங்கள் எல்லாம் தொடர்களிலிருந்து வருவிக்கப்படுகின்றன. '' நேற்று தலைவர் பேசினார்'' என்பது '' நேற்று பேசிய தலைவர் '' என்றும் '' இப்போது பையன் ஓடுகிறன்'' என்பது '' ஓடுகிற பையன்'' என்றும் மாறுகின்றன. பெயரெச்சங்களும் அவற்றையடுத்து நிற்கிற பெயர்களும் பல வேறுபட்ட உறவுகளைக் கொண்டிருக்கும் அந்த உறவுகளைப் பொறுத்துத்தான் அந்தப் பெயரெச்சத்தின் பொருளை அறிந்துகொள்ள முடியும்.
'' படித்த பையன் '' என்பது ''பையன் படித்தான் '' என்ற தொடரிலிருந்து உருவாகுவதால், இவற்றிற்கிடையே உள்ள உறவு எழுவாய் உறவு. ஆனால் ''படித்த புத்தகம் '' (புத்தகம் படிக்கப்பட்டது) செயப்படுபொருள் உறவு, ''படித்த கண்ணாடி'' ( கண்ணாடியால் படித்தேன்) கருவி வேற்றுமை உறவு, ''படித்த பள்ளிக்கூடம்'' ( இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தேன்) இடவேற்றுமை உறவு. ஆகவே தொடரியல் அணுகுமுறை இல்லாமல், பெயரெச்சங்களின் பொருள்களைப் புரிந்துகொள்வது சிக்கலாகும்.
இங்கு நமக்குத் தேவையானது பெயரடை, பெயரெச்சங்களுக்கும் அவற்றையடுத்து வரும் பெயர்ச்சொற்களுக்கும் இடையில் ஒற்று மிகுமா , மிகாதா என்பதேயாகும்.
பொதுவாக, வல்லொற்று மிகாது என்று கூறலாம். ஆனால் விதிவிலக்குகள் இருக்கின்றன.
(1) அந்த, இந்த, எந்த ஆகிய பெயரெச்சங்களின்பின்னர் வல்லொற்று மிகும்.
அந்தக் குதிரை, இந்தப் பையன், எந்தப் புத்தகம்

(2) ''எல்லா'' என்பது ஒரு பெயரெச்சம். '' புத்தகங்கள் எல்லாம் '' .... '' எல்லாப் புத்தகங்களும்''... 
இங்குக் கவனிக்கவேண்டியது.....'' புத்தகங்கள்'' என்பது முதலில் வந்தால் ''எல்லாம்'' (இடைச்சொல்???) என்பது பின்னர் அமையும். அவ்வாறு இல்லாமல் ''எல்லா'' என்பது முதலில் வந்தால், ''உம்'' என்பது ''புத்தகங்கள்'' உடன் இணைந்து ''புத்தகங்களும் '' என்று வரும். இதை முழுமையாகப் புரிந்துகொள்ள, வரலாற்று இலக்கணத்திற்குச் செல்லவேண்டும்.ஆனால் '' எல்லா'' என்பது அடையாக நிற்கிற ஒரு பெயரெச்சமாகப் பயன்படுகிறது. இந்தப் பெயரெச்சத்தின்பின் வல்லொற்று மிகும் ( எல்லாப் புத்தகங்களும்) என்று மட்டும் தெளிவாகக் கூறலாம்.

(3) ''புது'' என்பது ஒரு கட்டுண்ட உருபன் ( அதாவது தனியாக வராது!) . ''புதிய'' என்பதே இதன் கட்டில்லாத உருபன். ''புது'' என்பதன்பின்னர் வல்லொற்று மிகும்.
புதுச்செருப்பு ..... ( புதிய செருப்பு)

(4) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: இங்கு வல்லொற்று மிகும்.
செல்லாக் காசு .... கேளாக் காதினராய் ... மாறாப் பகை ...

மேற்குறிப்பிட்ட நான்கு இடங்களைத்தவிர வேறு எந்த ஒரு பெயரெச்சத்தின் பின்னும் வல்லொற்று மிகாது. இது ஒரு கட்டாயமான சந்திவிதி. சந்தி இடவேகூடாது.
''கேட்ட கேள்வி .... நல்ல புத்தகம்.... தீய பண்புகள்''
பின்வரும் பெயரெச்சங்களுக்குப்பின்னர் சந்தி வரவே வராது. இது ஒரு கட்டாயச் சந்திவிதியாகும்.
அத்தகைய, இத்தகைய, எத்தகைய
அன்றைய, இன்றைய, என்றைய
அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட
அப்போதைய, இப்போதைய, எப்போதைய
மேற்கத்திய, கிழக்கத்திய, வடக்கத்திய
முன்னைய, பின்னைய, 
நேற்றைய, நாளைய, இன்றைய

செவ்வாய், 22 நவம்பர், 2016

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (2)

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (2)
-------------------------------------------------------------------------------------
நேற்று பார்த்த வினைக்கூறு துணைவினைகளிலிருந்து (Aspects) மாறுபட்ட மற்றொரு வகைத் துணைவினைகள் தமிழில் உள்ளன.

'' மழை வரப்போகிறது''
''அவர் கீழே விழப்பார்த்தார்''
''மழை வரக்கூடும்''
''நாளை நான் அவரைப் பார்க்கவேண்டும்''
''அவர் நாளை வரமாட்டார்''
''அவர் இன்று வரவில்லை''

மேற்கூறிய தொடர்களில் வினைமுற்றுகளின் அமைப்பானது முதன்மைவினை + துணைவினை என்று உள்ளது.
முதன்மைவினையானது ''செய / செய்ய'' வினையெச்ச வாய்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. அதையடுத்து ''போ'', ''பார்'' ''கூடு'' ''வேண்டும்'' ''மாட்டு'' ''இல்லை'' என்பவை வருகின்றன. இவை துணைவினைகள் ஆகும். அதாவது இவற்றிற்கு அகராதிப் பொருள் கிடையாது. மாறாக, இலக்கணப்பொருளே உண்டு.
இவை துணைவினைதான் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு நாம் செய்யவேண்டியது.... முதன்மைவினைக்கும் இவற்றிற்கும் இடையில் வேறு ஏதாவது அகராதிச்சொல்லைச் சேர்க்கமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
''மழை வர இன்று போகிறது'' என்றோ, ''நான் அவரைப் பார்க்க இன்று வேண்டும்'' என்றோ, '' அவர் வர நாளை கூடும்'' என்றோ சொல்லமுடியாது!
ஆனால் '' பார்க்கவாவேண்டும்?'' ''பார்க்கத்தான்வேண்டும்'' ''பார்க்கவேவேண்டும்'' என்று இலக்கணப்பொருள்களைத் தரும் இடைச்சொற்களைச் சேர்க்கலாம்!
ஆனால் இந்தத் துணைவினைகள் எல்லாம் தமிழில் முதன்மை வினைகளாகவும் வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. அவ்வாறு வரும்போது அவற்றிற்கு அகராதிப்பொருள் உண்டு.
'' மாடு போகிறது''
'' அவர் என்னைப் பார்த்தார்''
'' கூட்டம் நன்கு கூடியது''
''எனக்கு இலக்கணப்புத்தகம் வேண்டும்''
''சட்டையை அங்கே மாட்டு''
''அது அங்கு இல்லை''

மேற்கூறிய துணைவினைகள் நாம் ஏற்கனவே பார்த்த வினைக்கூறு ( Aspects) என்ற இலக்கணப்பொருளிலிருந்து மாறுபட்ட ஒரு இலக்கணப்பொருளைத் தருகின்றன. வினைக்கூறுகள் ஒரு வினைநிகழ்ச்சி எவ்வாறு நடைபெற்றது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இந்தத் துணைவினைகள் பேசுவோரின் மனநிலையையும் விருப்பங்களையும் காட்டுகின்றன. எனவே இவற்றை வினைநோக்கு என்று பேரா. பொற்கோ அழைக்கிறார். ஆங்கிலத்தில் இது "" Modal" என்று அழைக்கப்படுகிறது.
இந்த வினைநோக்குத் துணைவினைகள் எல்லாம் முதன்மைவினைகளின் செயவென் வினையெச்ச வாய்பாட்டு வடிவங்களுடன்தான் சேர்ந்து வரும். மேலும் கால இடைநிலைகள், திணை எண் பால் விகுதிகளை ஏற்கும்.
அவற்றில் ''போ'' ''பார்'' ''கூடு'' ஆகியவை வல்லின எழுத்துகளில் தொடங்குவதால், முதன்மைவினைகளுக்கும் இவற்றிற்கும் இடையில் வல்லொற்று மிகும்!
''வரப்பார்த்தான்'' '' வரக்கூடும்'' ''வரப்போகிறது''
ஆங்கிலத்தில் உள்ள " may, might, can, could, should, must , ought, need "" ஆகியவே எல்லாம் வினைநோக்குத் துணைவினைகளே! ஆங்கிலத்தில் இந்தத் துணைவினைகள் வரும்போது, முதன்மைவினைகள் வினையின் முதல் வடிவத்தில்தான் வரும். இறந்தகால வடிவமோ அல்லது பிற வினையெச்ச வடிவங்களோ வராது.
"He may go .... He must go .... He can go .... He should go"
ஆனால் "have" "has" "had" என்ற வினைக்கூறுத் துணைவினைகள் வரும்போது, முதன்மைவினைகள் வினையெச்சவடிவமான " Past Particple / Passive Participle" வடிவங்களில்தான் வரவேண்டும என்பதைக் கவனிக்கவும் (have gone, has gone, had gone, is killed, was eaten). ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. இதுவே கணிதப்பண்பு!
தமிழில் வினைக்கூறுத் துணைவினைகள் வரும்போது முதன்மைவினைகள் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வரவேண்டும் என்றும் வினைநோக்குத் துணைவினைகள் வரும்போது முதன்மைவினைகள் ''செய, செய்ய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வரவேண்டும் என்றும் தமிழில் இலக்கணம் அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும் . கணிதப்பண்பு உடையதாகும். தமிழ்க்கணினிமொழியியலுக்கு ஏற்ற ஒன்றாகும்!

திங்கள், 21 நவம்பர், 2016

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (1)

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (1)
-------------------------------------------------------------------------------------
(1) வினைக்கூறு ( Aspectuals) :

''கண்ணன் பட்டம் விட்டார் ''
''கண்ணன் வந்துவிட்டார்''

முதல்தொடரில் ''விட்டார்'' என்பது ''விடு'' என்ற முதன்மைவினையின் வினைமுற்று ஆகும்.
இரண்டாவது தொடரில் ''வா'' என்பதுதான் வினைநிகழ்ச்சியைக் குறிக்கும் முதன்மைவினை. அதோடு இணைந்துவரும் ''விட்டார்'' என்பது அந்த வினைநிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காகப் பயன்படுகிற ஒரு துணைவினையாகும்.
இந்தத் துணைவினைக்கு அகராதிப்பொருள் கிடையாது. மேலும் ''வந்துவிட்டார் என்பதில் ''வந்து'' என்பதற்கும் ''விட்டார்'' என்பதற்கும் இடையில் அகராதிப்பொருளைக் காட்டும் ஒரு சொல்லைச் சேர்க்கமுடியாது. ஆனால் இலக்கணப்பொருளைக் காட்டும் இடைச்சொற்களைச் சேர்க்கலாம் (வந்தேவிட்டார் என்பதில் இடையில் ஏகாரம் சேர்கிறது. வந்தாவிட்டார் என்பதில் ஆகாரம் சேர்கிறது).
இதுபோன்ற துணைவினைகள், விகுதிகளை ஏற்பதில் முதன்மைவினைகளாகப் பயன்படும்போது எந்த இடைநிலைகள், திணை எண் பால் விகுதிகளை ஏற்குமோ, அவற்றையே ஏற்கும். (''வந்துவிடுகிறார், வந்துவிட்டார், வந்துவிடுவார்). இதுபோன்று வினைக்கூறுகளைக் காட்டும் துணைவினைகள் சில:
''அவர் வந்துகொண்டிருக்கிறார் '' (கொண்டிரு'')
''அவர் வந்திருக்கிறார் '' ( ''இரு'')
''அவர் வந்துவிட்டார் '' (''விடு'')
''அவர் செய்துபார்த்தார்''(''பார்'')
''அவர் செய்துகாட்டினார்'' (''காட்டு'')
''அவர் வாங்கிக்கொண்டார்'' (''கொள்'')
''அவர்கள் அடித்துக்கொண்டார்கள்'' (''கொள்'')
''அது தொலைந்துபோயிற்று '' (''போ'')
''அவர் வந்துதொலைத்தார்'' (''தொலை'')
''நான் வாங்கிவைக்கிறேன்'' (''வை'')
''அவர் கொடுத்தருளினார்'' (''அருள்'')
''அவர் பல ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டுவந்தார்'' (''வா'')

மேற்கூறியவற்றில் சிலமுக்கியச் செய்திகளை அறிந்துகொள்ளவேண்டும். வினைக்கூறுகளைத் தெரியவைக்கும் இந்தத் துணைவினைகள் முதன்மைவினைகளோடு இணையும்போது, முதன்மைவினைகள் எல்லாம் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சங்களாகவே வரும். இது ஒரு கணிதப்பண்பு!
அடுத்து, முதன்மைவினைகளுக்கும் இந்த துணைவினைகளுக்கும் இடையே அகராதிப்பொருள் தரும் வேறு எந்தச் சொல்லும் வரமுடியாது. ஆனால் இலக்கணப் பொருள்களைக் காட்டும் இடைச்சொற்கள் வரலாம்.
''அவர் வந்தேவிட்டார்'' , '' அவர் வாங்கித்தான்வைத்தார்''.
அடுத்து, நாம் கவனிக்கவேண்டியது, முதன்மைவினைகளையும் துணைவினைகளையும் பிரித்து எழுதக்கூடாது. தமிழில் இலக்கணச் சொற்களெல்லாம் பெரும்பாலும் தாம் இணையும் முதன்மைச்சொற்களோடு இணைந்துதான் வரும்.
இப்போது சந்திவிதிகளுக்கு வருவோம். முதன்மைவினைகள் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வருகின்றன. இவை வன்தொடர்க்குற்றியலுகரச் சொற்களாக இருந்து, அடுத்து வரும் துணைவினைகள் வல்லொற்றுகளில் தொடங்கினால் ( கொண்டிரு, கொள், பார், காட்டு,தொலை), ஒற்று மிகும். இதில் தவறு செய்யக்கூடாது. இது ஒரு கட்டாயச்சந்தி!
''அவர் படித்துக்கொண்டிருக்கிறார்''
''அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்''
''அவர் படித்துக்காட்டினார்''
''அவர் எனக்குப் படித்துக்காட்டினார்''
''அவர் செத்துப்போனார்''
''அவர் கேட்டுத்தொலைத்தார்''

(2) வினைப்பாங்கு ( Voice):
'' பூனை எலியைக் கொன்றது'' - செய்வினை (Active voice) 
''எலி பூனையால் கொல்லப்பட்டது'' - செயப்பாட்டு வினை ( Passive voice)

தமிழில் செயப்பாட்டுவினைமுற்றில் செயப்பாட்டுவினையைக் காட்டும் சொல்லாக ''படு'' என்பது அமைகிறது. இதுவும் ஒரு துணைவினையாகும்.
''படு'' என்பது முதன்மைவினையாகவும் தமிழில் இருக்கிறது.
'' குழந்தை தாயை மிகவும் படுத்துகிறது'' ... இங்கு ''படு'' என்பது முதன்மைவினை.
செயப்பாட்டுவினைச்சொல்லை உருவாக்கப் பயன்படும் ''படு'' என்ற துணைவினையானது இணையும்போது, முதன்மைவினையானது ''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களாகவே இருக்கும்! இதில் மாற்றம் கிடையாது. இது ஒரு கணிதப்பண்பு!
''சொல்லப்பட்டது''
''உடைக்கப்பட்டது''
''எழுதப்பட்டது''

''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களையடுத்து, வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வந்தால் வல்லொற்று மிகும் என்று முன்பு பார்த்துள்ளோம். எனவே இங்கு ''படு '' என்பது வல்லினத்தில் தொடங்கும் சொல்லாக இருப்பதாலும், அது இணைகிற முதன்மை வடிவம் ''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவத்தில இருப்பதாலும், இங்கு ஒற்று மிகும். இதில் தவறு செய்யக்கூடாது. இது ஒரு கட்டாயச்சந்தி!
மேற்கூறிய துணைவினைகள் எல்லாம் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் முதன்மைவினைகளாகமட்டுமே இருந்திருக்கலாம். பின்னர், தேவைகளைமுன்னிட்டு, அவை இலக்கணப் பண்புகளைக் காட்டும் துணைவினைகளாகவும் - இலக்கணச் சொற்களாகவும் - மாறியிருக்கின்றன. இதையே முன்னர் ''இலக்கணமயமாக்கம்'' என்று பார்த்துள்ளோம். ஆனால் இவை இலக்கணச் சொற்களாக மாறியபிறகும், விகுதிகள் ஏற்கும் தங்கள் பண்புகளில் முதன்மைவினைகள்போன்றே செயல்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
ஆகவே, வினைக்கூறுகளைக் காட்டும் துணைவினைகள் வந்தால், முதன்மைவினைகள் தங்களது ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில்தான் அமையும்!
வினைப்பாங்கைக் காட்டும் ''படு'' என்ற துணைவினை வரும்போது, முதன்மைவினையானது ''செய'' வாய்பாட்டு வடிவத்தில்தான் வரும். ஒரு மிக அருமையான கணிதப்பண்பை - இலக்கண ஒழுங்கமைவை - இங்கு நாம் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் "has, have,had " ( Perfect Aspectuals) வரும்போது முதன்மைவினைகள் வினையின் மூன்றாவது வடிவமாகிய "Past Participle" வடிவத்தில்தான் வரும். ( ""He has gone", "I have spoken" " they had written")
Passive Voice வரும்போதும், முதன்மைவினைகள் Past Participle"' வடிவத்தில்தான் வரும். ("It is written" "He was killed"") எனவே ஆங்கிலத்திலும் துணைவினைகள் சேரும்போது, முதன்மைவினைகள் வினையெச்ச வடிவங்களையே எடுக்கின்றன ( வினைமுற்று தனித்து வருவதுபோல வராது ) என்பது கவனிக்கத்தக்கது!
வினைநோக்கு ( Modals) என்ற துணைவினைகள்பற்றி அடுத்து எழுதுகிறேன்.

சனி, 19 நவம்பர், 2016

தமிழில் பின்னொட்டுகளின்பின் (Postpositions) ஒற்று மிகுதல்

தமிழில் பின்னொட்டுகளின்பின்  (Postpositions)ஒற்று மிகுதல்
---------------------------------------------------------------------------
தமிழில் சில வேற்றுமை உருபுகளின்பின் சில பின்னொட்டுகள் என்னும் விகுதிகள் இணைந்து, வேற்றுமைப்பொருளை அல்லது வேற்றுமை உறவுகளை ( Casal relations) மாற்றியமைக்கும்.

''அவனைப் பார்த்தேன்'' ... ''அவனைப்பற்றிப் பேசினேன்''
''ஐ'' என்ற வேற்றுமை உருபு வரும்போது, ''அவன்'' என்பதற்கும் ''பார்த்தேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு வேறு! ''ஐப்பற்றி'' என்று வரும்போது, ''அவன்'' என்பதற்கும் '' பேசினேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு. அதாவது தொடரின் பொருள் வேறுபடுகிறது.
பிற்காலத் தமிழில் - குறிப்பாகத் தற்காலத் தமிழில் - ''பற்றி'' போன்ற பல பின்னொட்டுகள் அல்லது விகுதிகள் தோன்றியுள்ளன. இதில் மேலும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று... ''பற்றி '' என்பது '' பற்று'' என்ற முதன்மை வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லின் வடிவம். ஆனால் ''பற்றி'' என்ற முதன்மை வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வினையெச்சமும் , ''பற்றி'' என்ற ''ஐ'' வேற்றுமைக்கு அடுத்து வருகிற பின்னொட்டு அல்லது விகுதியும் வேறு வேறு. வரலாற்று ரீதியில் உறவு  - "தொப்புள்கொடி உறவு'' -    உள்ளது. அவ்வளவுதான்.
''அவனது கரங்களைப் பற்றிக்கொண்டு பேசினேன்''
''அவனது கரங்களைப்பற்றிப் பேசினேன்''

இரண்டு தொடர்களுக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
இதுபோன்று பல இலக்கணச் சொற்கள் ( பின்னொட்டுகள், விகுதிகள்) ஏற்கனவே தமிழில் நீடிக்கிற முதன்மை வினைச்சொற்களிருந்து - அகராதிச்சொற்களிலிருந்து - தோன்றியுள்ளன. சொற்பொருளைக் குறிப்பதிலிருந்து மாறி, இலக்கணப் பொருளைக் குறிக்கப் பயன்படுகிறது. இதை ''இலக்கணமயமாக்கும் '' ( Grammaticalization) என்று அழைப்பார்கள்.
ஆனால் இவ்வாறு அகராதிச் சொற்களிலிருந்து இலக்கணச் சொற்கள் மாறியபிறகும் தொடர்ந்து , முந்தைய முதன்மைச் சொற்களின் சில இலக்கணப் பண்புகளைத் தொடர்ந்து பெற்றுவரும். இங்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கிற ''பற்றி''- அப்படித்தான். ''பற்றி'' என்ற செய்துவாய்பாட்டு வினையெச்ச வன்தொடர்க்குற்றியலுகரச் சொல்லின்பின் வல்லினத்தை முதன்மையாகக்கொண்ட வருமொழி வந்தால் ஒற்று மிகும் என்று முன்பு பார்த்துள்ளோம்.
''அவனது கரங்களைப் பற்றிப் பேசினேன்'' (அதாவது அவனது கரங்களைப் பிடித்துக்கொண்டு பேசினேன்).
அந்த வினையெச்ச விதியானது , ''பற்றி'' என்ற வேற்றுமைக்கான பின்னொட்டு வரும்போதும் செயல்படுகிறது.
''அவனைப்பற்றிப் பேசினேன்'' ( I talked about him).
இவ்வாறு 'இரண்டாம் வேற்றுமையாகிய 'ஐ' - யோடு இணைந்து தற்போது தமிழில் நிலவுகின்ற பின்னொட்டுகளுக்குப்பின் வல்லொற்று மிகும்.
''அவனைக்குறித்துப் பேசினேன்'' (''குறி'')
''அவனைநோக்கிப் போனேன்'' (''நோக்கு'')
''அதைச்சுற்றிக் கூட்டமாக இருந்தது'' (''சுற்று'')
''அவன் வகுப்பைவிட்டுப் போய்விட்டான்''.(''விடு'')
''அதையொற்றிப் பேசினேன்'' (''ஒற்று'')
''அதைப்பொறுத்துப் பேசலாம்'' ('பொறு''
''அவனைப்பொறுத்தவரைத் தரமே முக்கியம்''

இதுபோன்று சில முதன்மைவினைகளின் ''செய'' வாய்பாட்டு வினையெச்சங்களும் பின்னொட்டுகளாக வருகின்றன. எனவே அவற்றிற்குப் பின்னும் வல்லொற்று மிகும். இவற்றில் சில ''ஐ'' வேற்றுமைவிகுதிக்குப்பின்னும் , சில ''க்கு'' என்ற நான்காம் வேற்றுமைக்குப்பின்னும் சில உடைமை வேற்றுமைக்குப்பின்னும் வரும்.
பின்கண்டவற்றில் ''ஆகு'' என்பதன் செய வாய்பாட்டு வினையெச்ச வடிவத்துடன் (''ஆக'') சில சொற்கள் இணைந்து, பின்னொட்டுகளாகப் பயின்றுவருகின்றன. எனவே இங்கும் வல்லொற்று மிகும்.
நான்காம் வேற்றுமைக்குப்பின்னர் (''கு,க்கு'')
--------------------------------------------------------
''அவனுக்காகக் காத்திருக்கிறேன்'' 
 ''அவர்மூலமாகப் பணம் வாங்கினேன்'' 
 ''பணத்திற்குப்பதிலாகப் பொருளைக் கொடுக்கவும்''
''அவர்வாயிலாகச் செய்தி அனுப்பினேன்'' 
 ''அதற்குமாறாகப் பேசாதே'' 
 ''வீட்டுக்குநேராகப் போகவும்''

உடைமை வேற்றுமைக்குப்பின்னர் (''இன், அது'')
--------------------------------------------------------- 
''என்வாயிலாகக் கொடுத்துவிடவும்''
''அதன்மூலமாகக் கொடுத்துவிடவும்''
''அந்தச் சந்தின்வழியாகப் போகவும்''

ஆனால் சில பின்னொட்டுகள், அவற்றின் முந்தைய வினைகளின் பெயரெச்ச வடிவத்தில் வருகின்றன. பெயரெச்சத்திற்குப் பின்னர் வல்லொற்று மிகாது ( சில விதிவிலக்குகள் உண்டு. அதைப் பின்னர் பார்க்கலாம்.)
''உரிய'' ''உள்ள'' ''தகுந்த'' ''உடைய'' ...... இவை பெயரெச்சங்கள். ஆனால் இவை வேற்றுமைகளுக்குப் பின்னர் பின்னொட்டுகளாக அமையும்போது, வல்லொற்று மிகாது.
''அவனுக்குரிய பொருள் இது''
''அவனுக்குள்ள குணம்''
''அவனுக்குத்தகுந்த பண்பு''
''அவனுடைய பணி இது''

ஆகவே வேற்றுமைகளுக்குப் பின்னர் வருகின்ற பின்னொட்டுகள், தமது வடிவங்களில் செய்து வாய்பாட்டு வன்தொடர்க்குற்றியலுகர வடிவம், செய வாய்பாட்டு வினையெச்ச வடிவம் ஆகியவற்றில் அமைந்தால், அவற்றின் பின்னர் வல்லினங்களை முதலாகக்கொண்ட வருமொழிகள் வந்தால் வல்லொற்று மிகும். பின்னொட்டுபற்றிய ஒரு தெளிவான ஆய்வை முன்வைத்தவர் பேராசிரியர் பொற்கோ அவர்களே!

வியாழன், 17 நவம்பர், 2016

தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!

தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!
-----------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் தமிழ்ச் சொற்களின் அமைப்பை மொழியசை அடிப்படையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில செய்திகள்!

தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் வரும்போது, ஒரு கட்டுப்பாடு உள்ளது. முதல் அசையைத் தவிர ஏனைய அசைகள் எல்லாம், தவறாமல் அசைத் தொடக்கத்தைப் - ஒரு மெய் எழுத்தைப் - பெற்றிருக்கவேண்டும்! அவ்வாறு மெய் வராத அசைகள் ஏதாவது இருந்தால், அந்த இடத்தில் ஒரு மெய் சேர்க்கப்படும்.
(1) தெரு + ஆ = தெருஆ* = த்எ - ர்உ - ஆ
இந்தச் சொல்லில் மூன்றாவது அசையில் உச்சியாகிய உயிர் மட்டுமே உள்ளது. இது தமிழ் மொழியசை அமைப்பு விதிக்கு எதிரானது. எனவே அங்கு ஒரு மெய் எழுத்தைச் சேர்க்கிறோம். இங்கு ''வ்'' என்ற மெய் சேர்கிறது.
தெருவா = த்எ - ர்உ - வ்ஆ
அடுத்து ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.
(2) இலை + ஆ = இலைஆ = இ - ல்ஐ - ஆ
இங்கு முதல் அசையில் அசைத் தொடக்கம் இல்லை. ஆனால் இது மொழியசை விதிக்கு எதிரானது இல்லை! ஆனால் மூன்றாவது அசையில் அசைத் தொடக்கம் - மெய் - இல்லை. அதைச் சரிசெய்ய , ''ய்'' மெய் சேர்க்கப்படுகிறது.
இலையா = இ - ல்ஐ - ய்ஆ
இதுதான் உடம்படுமெய் என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இவ்வாறு முதல் அசையைத் தவிர ஏனைய அசைகளில் அசைத் தொடக்கமாக மெய் வராமல் இருந்தால், அதை முறைப்படுத்த ''ய்'' ''வ்'' என்ற மெய்கள் உதவுகின்றன!
(3) அது + ஆ : இங்கு நிலைமொழியின் இறுதியில் முற்றியலகரம் வருகிறது. எனவே இச்சொல் ''ஆ'' என்ற வருமொழி விகுதியோடு இணையும்போது, முற்றியலுகரம் நீங்காது ( ஆனால் குற்றியலுகரம் நீங்கும் .. ''விட்டு ஓடும்'')! எனவே ''வ்'' உடம்படுமெய் உதவுகிறது.
அதுவா - அ -த்உ - வ்ஆ
(4) கல் + ஐ : இது கல்ஐ என்று அமைந்தால் ( க்அல் - ஐ) இரண்டாவது அசையில் தொடக்கம் இல்லை. இது விதி மீறலாகும். எனவே ''ல்'' என்ற மெய் ஒற்று இரட்டித்து, ''கல்லை'' என்று அமைகிறது!
கல்+ ஐ = கல்லை - க்அ ல் - ல்ஐ
எனவே உடம்படுமெய்யின் தேவைபற்றிய விதியே இதிலும் செயல்டுகிறது.
(5) அயல்மொழிச்சொல் தமிழில் ஊடுருவும்போதும் அசைவிதி மீறப்படாது. தமிழில் முதல் அசையில் (மெய்) குறில் அமைந்தால், அதையடுத்து ''ர்'' ''ழ்'' வராது.
''அர்த்தம்'' = அர்த் -த்அம் .
இங்கு முதலசையில் தொடக்கம் இல்லை. ஆனால் உச்சியானது குறில் அகரம். அதற்கு அடுத்து ஒடுக்கமாக ''ர்த்'' என்ற மெய் ஒற்றுகள் வருகின்றன. இது தமிழ் அசைவிதிக்கு எதிரானது. எனவே 'ர்'' உடன் உகரத்தைச் சேர்க்கிறோம். இதனால்,
அ -ர்உத் -த்அம் என்று அசையமைப்பு மாறுகிறது. ''கர்த்தா'' என்பது ''கருத்தா' என்று மாறும்.
(6) ''ஓராயிரம் '': '' ஒரு ஆயிரம்'' என்ற தொடர், ஒரு சொல்நீர்மையாக மாறும்போது, ஒரு முக்கியமான மாற்றம் ஏற்படுகிறது.
ஒருஆயிரம் ----- > ஒர்ஆயிரம் (வருமொழியில் உயிர் ''ஆ'' வரும்போது, நிலைமொழி இறுதியிலுள்ள உயிர் ''உ'' மறைகிறது.)
ஒர் -ஆ -ய்இ -ர்அம் ...... இங்கு முதலசையில் (ஒ) குறிலையடுத்து ''ர்'' மெய் ஒற்று வருகிறது இது அசைவிதி மீறலாகும். ஆனால் நெடிலையடுத்து ''ர்'' ஒற்று வரலாம். எனவே ''ஓராயிரம் '' என்ற மாறுகிறது.
ஓர் - ஆ -ய்இ-ர்அம் ...... இப்போது அசைவிதி சரியாகவிட்டது. ''ஓராயிரம் '' கிடைத்துவிட்டது. ஒரு சொல்நீர்மையாக மாறும்போது ஏற்பட்ட மாற்றம் இது! ஆனால் பின்னர் சிலர் அதைப் பிரித்து எழுதும்போது, ''ஓர் ஆயிரம் '' என்று எழுதியிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் backformation என்று அழைப்பார்கள்.ஆனால் சிலர் கூறும் கருத்து .. '' அடுத்த சொல் உயிரில் தொடங்கினால் முதல்சொல்லில் ''ஒ'' குறில் வரக்கூடாது. நெடிலே - ''ஓ'' தான் வரவேண்டும்'' . ஆனால் அசையமைப்பு அடிப்படையில் ஒரு சொல்நீர்மையாக இரண்டு சொற்கள் ( ஒரு ஆயிரம் ) இணையும்போது ஏறபட்ட மாற்றமே என்பது எனது கருத்து!
(6) ''ன்'' உடம்படுமெய்: தமிழில் செய்து வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களைப் பெறுவதற்கு, வினையடியோடு இறந்தகால விகுதிகளை இணைத்து, அவற்றோடு ''உ'' -வை இணைப்போம். ''படி-த்த் - உ' (படித்து). இங்கு இறந்தகால இடைநிலை வல்லின ஒற்றில் முடிந்ததால், குற்றியலுகரம் சேர்க்கப்படுகிறது. ''ஓடு+இன்+ஆன்'' என்ற வினைமுற்றுக்கு, செய்து வாய்பாட்டு வினையெச்சமாக ''ஓடின்'' என்பது வரவேண்டும். ஆனால்''ஓடி'' என்றுதான் வருகிறது. எனவே இறந்தகால விகுதியாக ''இ'' மட்டுமே. அப்படியென்றால், ''ன்'' என்பது என்ன? வினைமுற்றில் திணை எண் பால்விகுதிகள் ஆகாரத்தில் தொடங்குவதால் (ஆன், ஆள், ஆர், அது, அன) இறந்தகால விகுதிகளுக்குப்பின்னர், ''ன்'' ''ய்'' என்ற உடம்படுமெய்கள் தோன்றுகின்றன.
ஓடு -இ -ன்-ஆன் = ஓடினான் ; ஓடு -இ-ய்-அது = ஓடியது
எனவே ''ய்'' ''வ்'' போன்று ''ன்'' ஒற்றும் உடம்படுமெய்யாக வருகிறது. பேரா. சோ.ந. கந்தசாமி அவர்கள் 'இந்தோ+ ஆசியா = இந்தோனேசியா'' என்ற எடுத்துக்காட்டை எனக்குத் தந்து உதவினார். (ஆங்கிலத்திலும் ய்,வ் உடம்படுமெய்கள் உண்டு. Two eggs, three eggs என்பவற்றைச் சேர்த்து இடைவெளியில்லாமல் சொல்லிப்பாருங்கள். twovegs, threeyeggs என்று வரும்)
இதுபோன்று மொழியசை அமைப்பு விதிகள் மீறப்படாமல் இருப்பதற்காகவே பல சந்தி விதிகள் செயல்படுகின்றன என்பது எனது கருத்து. தற்போது மொழியியலில் " Optimality Theory" என்ற ஒரு கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோட்பாடானது மொழியசைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் சுமார் 20 ஆண்டுகளுக்குமுன் ( சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையில் நான் பணியாற்றியபோது) நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் தமிழுக்கு அந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்தி, மேற்கூறியவற்றை விளக்கினேன். பேராசிரியர்கள். ச. அகத்தியலிங்கம், பேரா. ச வே சுப்பிரமணியம், சோ.நா. கந்தசாமி, பொற்கோ உட்பட பல தமிழ், மொழியியல் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

புதன், 16 நவம்பர், 2016

தமிழில் மொழியசை விதிகள்

தமிழில் மொழியசை விதிகள்
 ------------------------------------------------------------------
தமிழ்ச் சொற்களில் ஓரசைச் சொற்களும் பல அசைகளைக்கொண்ட சொற்களும் இருக்கின்றன.

ஆ, ஈ, தா, பல், ஆண் - இவை அனைத்திலும் ஒரு உயிர் ஒலிதான் உள்ளது. ஆகவே இவை ஓரசைச் சொற்களே!
''ஆ'', ''ஈ'' இரண்டிலும் அசையின் உச்சியாகிய உயிருக்கு முன்னால் தொடக்கமாகவும், பின்னால் ஒடுக்கமாகவும் எந்தவொரு மெய்யும் வரவில்லை. எனவே இவற்றில் அசையின் உச்சி மட்டுமே அமைந்துள்ளது.
0 - ஆ -0 ; 0 - ஈ - 0;

''தா'' என்ற சொல்லில் த் என்று தொடக்கமாக ஒரு மெய்யும் அதையடுத்து ஆ என்ற உச்சியும் வருகின்றன.
த் - ஆ - 0;

''பல் '' என்ற சொல்லில் ப் என்ற தொடக்கமும் அ என்ற உச்சியும் ல் என்ற ஒடுக்கமும் வருகின்றன. 
ப் - அ - ல்;

''பார்த்-தான்'' என்ற சொல்லில் முதல் அசையில் தொடக்கமாக ''ப்' என்ற மெய்யும், அதையடுத்து உச்சியாக ''ஆ'' என்ற உயிரும் , அதையடுத்து ஒடுக்கமாக ''ர்த்'' என்று இரண்டு மெய்களும் வருகின்றன.
ப் -ஆ - ர்த் ;

தமிழில் அசையின் தொடக்கமாக ஒன்றுக்கு மேற்பட்ட மெய்கள் வராது. ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு, மூன்று மெய்கள் வரலாம் ( plan, screw).
ஆனால் தமிழில் அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வரலாம். அந்த இரண்டு மெய்களில் முதல் மெய்யாக ''ய்'' ''ர்'' ''ழ்'' ஆகியவற்றில் ஏதாவது ஒன்றே வரும். 
வாழ்த்-து ; பார்த்-து; வாய்க்-கால் . இவை இரண்டும் ஈரசைச் சொற்கள்! இடையில் உள்ள கோடு, அசைகளைப் பிரித்துக் காட்டுகிறது!

ஆனால் இறுதிஅசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் தமிழில் வராது. சொல்லிடையில் மட்டுமே ஒடுக்கத்தில் இரண்டு மெய்கள் வரலாம்.
சொல் முதல் எழுத்துகள்;
------------------------------------------
அடுத்து, தமிழ்ச்சொற்களில் முதல் அசையில் ( இது முக்கியம்) தொடக்கமாக மெய்யொலி வந்தால் எந்தெந்த மெய்கள் எல்லாம் வரும் என்பதை இலக்கண ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். க்,ச்,த்,ப் .... ஞ்,ந்,ம் ... ய்,வ் . மொத்தம் ஒன்பது மெய்கள்! இவைதான் சொல்முதல் எழுத்துகள் என்று கூறப்படுகின்றன. இன்றைய தமிழில் ர், ல் என்பவையும் அயல்மொழிக் கலப்பினால் வருகின்றன (ரப்பர், ரோடு, லட்டு, லட்சணம்). தமிழ் விதிப்படி இது தவறே!

சொல்லின் முதல் அசையில் தொடக்கமாக மெய் வராமல், உச்சியாகிய உயிர் மட்டும் தமிழில் வரலாம். 12 உயிர்களில் எதுவென்றாலும் வரலாம்.
சொல் இறுதி எழுத்துகள்:
---------------------------------------------
தமிழ்ச் சொற்களில் இறுதி அசையின் ( இது முக்கியம்) ஒடுக்கத்தில் மெய்கள் வந்தால், அவை ண்,ம்,ன் ... ய், ர், ல், ழ், ள் ( மொத்தம் எட்டு மெய்கள்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.. இவைபோக பழந்தமிழில் ஞ், ந், வ் ஆகியவையும் ( உறிஞ், பொருந், தெவ்) வரலாம். இவை இலக்கணத்தில் சொல்லிறுதி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இரண்டு மெய்கள் இறுதி அசையின் ஒடுக்கமாக வராது.

அதுபோன்று சொல் இறுதி அசையில் மெய்கள் ஒடுக்கமாக வராமல், உச்சி மட்டுமே வருமேயானால், ''எ'' என்ற உயிரைத்தவிர ஏனைய 11 உயிர்களும் வரலாம். ''எ'' -வில் தமிழில் எந்தச் சொல்லும் முடிவதில்லை!
இவ்வாறு தமிழ் இலக்கண ஆசிரியர்கள் சொல் முதல் அசையில் வருகிற தொடக்கம் (மெய்), உச்சி (உயிர்) பற்றியும் சொல் இறுதியில் வருகிற ஒடுக்கம் (மெய்), உச்சி (உயிர்) ஆகியவைபற்றித் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மெய் மயக்கங்கள்:
------------------------------
அடுத்து, அவர்கள் கூறியுள்ளது மிக முக்கியமானது ஆகும். சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் அமைந்தால், முந்தைய அசையின் ஒடுக்கமாக ஒரு குறிப்பிட்ட மெய் வந்தால், அதற்குப் பிந்தைய அசையின் தொடக்கமாக எந்த மெய் வரலாம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதை அவர்கள் மெய் மயக்கங்கள் என்று கூறியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக ஒரு அசையில் ''க்'' என்ற மெய் அசையின் ஒடுக்கமாக அமைந்தால் அதற்கு அடுத்த அசையின் தொடக்கமாக ''க்'' மட்டுமே அமையலாம். ''அக்கா'' என்ற சொல்லில் (அக் - க்ஆ ) முதல் அசை ''க்'' இல் முடிகிறது. அடுத்த அசை ''க்'' -இல் தொடங்குகிறது. வேறு எந்த மெய்யும் அடுத்த அசையின் தொடக்கத்தில் வராது.
உடனிலை மெய் மயக்கம்:
-----------------------------------------
இவ்வாறு ஒரே மெய்கள் வருவதை உடனிலை மெய்ம்மயக்கம் என்ற அழைப்பார்கள். க்,ச்,ட், த், ப் ,ற் (ஆறு வல்லினங்கள்) ..... ஞ்ஞ், ங்ங், ண்ண், ந்ந், ம்ம், ன்ன் (ஆறு மெல்லினங்கள்) ... ய்ய், ல்ல், வ்வ், ள்ள் ( நான்கு இடையினங்கள்) ஆகிய 16 மெய்கள் மட்டுமே இவ்வாறு வரும் ( அக்காள், அச்சம், பட்டம், பத்து, கப்பல் , குற்றம் .... மஞ்சை, இங்ஙனம், வண்ணம், முந்நூறு, அம்மா, அன்னை ... வெய்யில், எல்லாம், கொவ்வை, பள்ளம்) . ர், ழ் இரண்டுமட்டும் இவ்வாறு வராது. அதாவது ர் -ஐ அடுத்து இன்னொரு ''ர் வராது. ''ழ்'' ஐ அடுத்தும் இன்னொரு ''ழ்'' வராது!

வேற்றுநிலை மயக்கம்:
------------------------------------------
அவ்வாறு இல்லாமல், ஒரு அசையின் ஒடுக்கமாக வருகிற ஒரு குறிப்பிட்ட மெய்யுக்கு வேறுபட்ட ஒரு மெய் அடுத்த அசையின் தொடக்கமாக வரலாம். ஆனால் அதற்கும் கட்டுப்பாடு உண்டு. ''ட்'' என்பது முந்தைய அசையின் ஒடுக்கமாக இருந்தால், அடுத்த அசையின் தொடக்கமாக ''க்'' ''ச் '' ''ப்'' வரலாம் ( வேட்கை, கட்சி, தட்பம்) . வேறு எந்த மெய்யும் வராது. 'ட்த்'' , ட்ற்'' போன்றவற்றைத் தமிழில் பார்க்கமுடியாது. அவ்வாறு வந்தால் அது தமிழ்ச்சொல் இல்லை என்ற முடிவுக்கு வரலாம். இதுபோன்றவற்றை இலக்கண ஆசிரியர்கள் வேற்றுநிலை மயக்கங்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மெய்யுக்கும் இவ்வாறு அடுத்த எந்த மெய் வரும் என்பதைத் தெளிவாக இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.

இரண்டு மெய்கள் ஒடுக்கமாக வருதல்:
-------------------------------------------------------------
ஒரு அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வந்தால், அதன் முதல் மெய்யாக ''ய்'' ''ர்'' ''ழ்'' ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுதான் வரும். அடுத்த மெய்யாக ''ய்'' க்குப்பின் ம், ந்,ஞ்,ங்,ப்,த்,க்,ச் ஆகியவையும் ''ர்'' க்குப்பின் ந், ஞ், ங், ப், த், க், ச் ஆகியவையும் ''ழ்'' க்குப்பின் ம்,ந்,ஞ்,ங்,ப்,த்,க்,ச் ,ஆகியவையும் மட்டுமே வரும்.

இந்த இரண்டு மெய்கள் ஒடுக்கமாக வருகிற அசைக்கு அடுத்த அசையின் தொடக்கமாக , அந்த இரண்டாவது மெய்யோ அல்லது அதன் இன மெய்யோ வரலாம். வேறு எதுவும் வரமுடியாது. பேரா. பொற்கோ கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள்:
மெய்ம்மை, மொய்ம்பு,செய்ந்நன்றி, பாய்ந்தான், ஐஞ்ஞூறு, வேய்ஞ்சினை, வேய்ங்குறை, வாய்ப்பு, மொய்த்தது, வாய்க்கால், பாய்ச்சி, சேர்ந்து, ஈர்ஞ்சுனை, ஈர்ங்கை, தவிர்ப்பு, பார்த்து, சேர்க்கை, வளர்ச்சி, பாழ்ம்புதூர், சூழ்ந்து, பாழ்ஞ்சுனை, பாழ்ங்கிணறு, காழ்ப்பு, வாழ்த்து, வாழ்க்கை, வீழ்ச்சி.
மேற்கூறியவற்றில் பல இன்றைய தமிழில் வருவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். 
 மேலும் சொல்லின் இறுதி அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வராது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே, தமிழ்ச் சொற்கள் மேற்கூறிய விதிகளுக்கு - மொழியசை விதிகளுக்கு - உட்பட்டே அமையமுடியும். மாறாக அமைந்தால், அது தமிழ்ச் சொல் இல்லை என்ற முடிவுக்கு வரலாம். தமிழில் புதிய சொற்களை உருவாக்கும்போது, மேற்குறிப்பிட்ட அசைவிதிகளுக்கு - தமிழ் மரபுக்கு - உட்பட்டே உருவாக்கவேண்டும்.
இந்த மொழியசை விதிகளைத் தக்கவைக்கவே உடம்படுமெய் போன்ற சந்திவிதிகள் நிலவுகின்றன. நாளை அதுபற்றிப் பார்க்கலாம்!
இன்றும் கட்டுரை தவிர்க்க இயலாமல் நீண்டுவிட்டது! ஒரு பதிவில் ஒரு கருத்தை முழுமையாகக் கூறிவிட வேண்டும் என்ற அடிப்படையே ( ''பேராசையே'') இதற்குக் காரணம்! மன்னிக்கவும்! தவறு ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டவும்! தமிழ்க் கணினிமொழியியலுக்கு இது மிகவும் பயன்படும்!

தமிழில் மொழியசையும் யாப்பசையும்!

தமிழில் மொழியசையும் யாப்பசையும்! 
--------------------------------------------------------------------------------------
யாப்பிலக்கணத்தில் நேரசை, நிரையசை என்று பாரக்கிறோம். இதை யாப்பசை ( Prosodic Syllable) என்று கூறலாம். செய்யுள்களின் அமைப்பு அல்லது ஓசைக்கு இந்த அசை என்ற அலகு மிக அடிப்படையானது.
நேரசையில் ஒரு உயிர் மட்டுமே வரும் ( உல-கு, உல-கம், பா, பால்). கு, கம் என்பதில் ஒரு உயிரே வருகின்றது.
நிரையசையில் இரண்டு உயிர்கள் வரும் ( படி, படம், நிலா, விளாம்). இது யாப்பசையின் விதிகள்!
மொழியசை ( Linguistic Syllable) என்ற ஒன்று எல்லா மொழிகளிலும் உள்ளது. உயிரை அடிப்படையாகக்கொண்டே இந்த மொழியசை அமைகிறது. ஒரு உயிர் இருந்தால் ஒரு அசை. இரண்டு உயிர்கள் இருந்தால் ஈரசை. முதலில் குறிப்பிட்ட யாப்பு நேரசையில் ஒரு உயிரே இருக்கிறது. எனவே இது மொழியசை போன்று அமைந்துள்ளது. ஆனால் நிரையசையில் இரண்டு உயிர்கள் உள்ளன. எனவே மொழியசைப்படி, இது இரண்டு அசைகளைக் கொண்டது.
ஏன் உயிரை அடிப்படையாகக்கொண்டு மொழியசை அமைகிறது? உயிர் எழுத்துகள் தனித்து இயங்குபவை. காரணம், மூச்சுக்குழாயிலிருந்து வாயில் நுழைகிற காற்று, தடைசெய்யப்படாமல், அதில் ஒரு பேச்சொலி பிறந்தால், அது உயிர் ஒலி. வாயைத் திறந்து காற்றை வெளிவிட்டாலே உயிர் பிறந்துவிடும். தமிழில் 12 உயிர்களும் இத்தகையதே!
ஆனால் மெய் ஒற்று அவ்வாறு இல்லை. தமிழில் 18 மெய் ஒற்றுகளும் மூச்சுக்குழாயிலிருந்து வாயில் நுழைகிற காற்றைத் தடை செய்வதால் பிறக்கிற ஒலிகளாகும். பல வகைத் தடைகளுக்கேற்ப , பலவகை மெய்கள் அமைகின்றன. இங்குக் கவனமாகப் பாரக்கவேண்டியது.. மெய்களுக்கான காற்று தடைசெய்யப்படுவதால், அந்த மெய்கள் நமது காதில் விழாது. அதற்கு நாம் வாயைத் திறந்து, அந்தக் காற்றை வெளியிடவேண்டும்.
ஆனால் வாயைத் திறந்தாலே உயிர் ஒலி பிறந்துவிடும். எனவேதான் எந்தவொரு மெய் எழுத்தும் ஏதாவது ஒரு உயிரோடுதான் பிறக்கும். ''க்'' என்பதைக் கூறிப் பாருங்கள்! ஒன்று முதலில் ''இ' என்ற உயிரொலியோடுதான் ''இக்'' என்று கூறுவீர்கள் அல்லது ''அ'' என்ற உயிரொலியோடுதான் 'க'' என்று கூறுவீர்கள். உயிர் ஒலி தனித்து இயங்குவதற்கும், மெய்யானது உயிரைச் சார்ந்து இயங்குவதற்கும் இதுதான் அடிப்படை.
ஒரு சொல்லை நாம் கூறும்போது, அந்தச் சொல்லில் எத்தனை உயிர் ஒலிகள் இருகிறதோ, அத்தனை தடவை நாம் வாயைத் திறந்து காற்றுக் கற்றை அல்லது காற்றுக்கொத்தை வெளியிடுகிறோம். வாய்த் திறப்பின் எண்ணிக்கையை உயிர் ஒலிகள்தான் தீர்மானிக்கின்றன. மெய் ஒலிகள் இல்லை !
இப்போது மொழியசைக்கு வருவோம்! ஒரு உயிரொலிக்கு முன்னும் பின்னும் மெய் ஒலிகள் வரலாம். உயிரொலிக்கு முன்னால் வரும் மெய்யை அசையின் தொடக்கம் (Onset) என்றும் பின்னால் வரும் மெய்யை அசையின் ஒடுக்கம் ( Coda) என்றும் அழைப்பார்கள். அசையின் உயிரைச் சிகரம் அல்லது உச்சி ( Peak) என்று அழைப்பார்கள். ஆகவே அசையின் உறுப்புகள் மூன்று - தொடக்கம், உச்சி, ஒடுக்கம்!
ஒரு மொழியசையில் உச்சி நிச்சயமாக இருக்கும். இருக்கவேண்டும். ஆனால் அசையின் தொடக்க மெய்யோ, அல்லது ஒடுக்க மெய்யோ வரலாம், வராமலும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ''ஈ'' ''ஆ'' என்ற தமிழ்ச்சொற்களில் உச்சி - உயிர் மட்டுமே வந்துள்ளது. ''போ'' ''வா'' ''தா'' என்பவற்றில் தொடக்கம், உச்சி இரண்டும் வருகின்றன. ஆனால் ஒடுக்கம் இல்லை. ''ஆள்'' , ''ஊர்'' ஆகியவற்றில் உச்சி, ஒடுக்கம் இரண்டும் இருக்கின்றன. ஆனால் தொடக்கம் இல்லை. ''பல்'' ''கால்'' ஆகியவற்றில் தொடக்கம், உச்சி, ஒடுக்கம் மூன்றும் வருகின்றன.
தமிழில் ஒரு மொழியசையின் தொடக்கமாக ஒரு மெய் மட்டுமே வரமுடியும். ஆனால் ஒடுக்கத்தில் இரண்டு மெய்கள் வரலாம் ''வாழ்த் - து, வாய்க் - கால், பார்த் -தான் ஆகிய மூன்று சொற்களிலும் முதல் அசைகளில் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வருவதைப் பார்க்கலாம்.
எனவே எழுத்துகள் ( உயிர், மெய் ) பொருள் தரும் சொற்களாக அமையும்போது, மொழியசைகளாக அமைந்துதான், சொற்களாக மாறுகின்றன. எவ்வாறு சொற்கள் (Words)தொடர்களாக ( Phrase) அமைந்து, பின்னர் வாக்கியமாக ( clause/ sentence ) அமைகிறதோ, அதுபோல எழுத்துகளும் மொழியசைகளாக அமைந்துதான் சொற்களாக மாறுகின்றன. அதாவது ஒரு சொல்லில் தனி எழுத்துகளுக்கும் சொல்லுக்கும் இடையில் அசை - மொழியசை- என்ற ஒரு அலகு - அமைப்பு உள்ளது.
ஒவ்வொரு மொழியும் தனக்கென்று மொழியசை அமைப்பு விதிகளைக் கொண்டுள்ளது. மொழிகளிடையே வேறுபாடுகளுக்கு முதல் காரணம், மொழியசை அமைப்பே!
தமிழ்மொழியில் மொழியசையின் தொடக்கத்தில் ஒரு மெய்தான் வரும் என்று பார்த்தோம். ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு, மூன்று மெய்கள் வரலாம் .... slip, plot இரண்டு மெய்கள், screw மூன்று மெய்கள் தொடக்கமாக அமைகின்றன. ஒடுக்கத்தில் ஆங்கிலத்தில் இரண்டு மெய்கள் வருவதுபோல ( camp, womb) தமிழிலும் இரண்டு மெய்கள் வரலாம் ( வாழ்த்-து, வாய்க்-கால்). ஆங்கிலத்தில் சில மெய்கள்கூட அசை உச்சியாக வரும். bootle என்ற சொல்லின் உச்சரிப்பில் இரண்டாவது அசையில் ஒரு மெய்மட்டுமே உச்சியாக அமைகிறது.
தமிழ் மொழியசைகளில் எந்த ஒலிகள் - எழுத்துகள் - தொடக்கத்தில் வரலாம், ஒடுக்கத்தில் வரலாம், உச்சியாக வரலாம் என்பதை விளக்குவதே தொல்காப்பியரின் நூன்மரபு, மொழிமரபு இயல்களும் நன்னூலாரின் எழுத்தியலும் ஆகும். . மொழியசை என்று தொல்காப்பியரோ நன்னூலாரோ நேரடியாகக் கூறவில்லை. ஆனால் சொல்முதல், சொல் இறுதி, மெய் இரட்டித்தல் ( உடனிலை மயக்கம், வேற்றுநிலை மயக்கம்) ஆகியவைபற்றி விரிவாகக் கூறியுள்ளார்கள். கட்டுரை நீண்டுவிட்டது மன்னிக்கவும். நாளை தொடரலாம்!
தமிழ்ச் சந்தி விதிகளுக்கு ஒரு மிக முக்கியமான அடிப்படை இந்த மொழியசை அமைப்புக் கட்டுப்பாடுகள் அல்லது விதிகளே ஆகும்!

செவ்வாய், 15 நவம்பர், 2016

சந்தி - உடம்படுமெய்

5) நாம் முன்பு பார்த்துள்ள ஆறு கட்டாயச் சந்தி 
விதிகளுடன் இன்று மேலும் ஒன்றைச் 
சேர்த்துக்கொள்ளலாம்.
தமிழில் ஒரு சொல்லுக்குள் ஒரு உயிர் எழுத்தை 
அடுத்து இன்னொரு உயிர் எழுத்து வராது. அவ்வாறு வருமிடத்தில் அந்த இரண்டு உயிர்களுக்குமிடையில் ஒரு இடையின மெய் - ''ய்'' அல்லது ''வ்'' - தோன்றும். இந்த இரண்டு மெய்களின் தோற்றத்தையே உடம்படுமெய் தோற்றம் என்று இலக்கணத்தில் அழைக்கின்றனர்.
''கிளி'' என்ற சொல்லோடு ''ஆ'' என்ற வினா விகுதி இணையும்போது, ''கிளியா? '' என்று அமைகிறது.
கிளி +ய்+ஆ = கிளியா?
''பூ'' என்ற சொல்லோடு '''ஆ '' என் வினா விகுதி இணையும்போது, ''பூவா?'' என்று அமைகிறது.
பூ + வ்+ ஆ - பூவா?

இ , ஈ , ஐ, ஏ (4 உயிர்கள்) - நிலைமொழி இறுதி:
---------------------------------------------------
தமிழில் நிலைமொழிகளின் இறுதியில் இ, ஈ, ஐ, ஏ ஆகிய உயிர்களில் ஏதாவது ஒன்று வந்து, வருமொழியில் ஏதாவது ஒரு உயிரைக்கொண்டு தொடங்கும் விகுதி வந்து ஒரு சொல்லாக அமையும்போது, இடையில் ''ய்'' உடம்படுமெய் தோன்றும்.
கிளி + ஆ = கிளியா? (''இ'' இறுதி)
தீ + ஆ = தீயா? (''ஈ'' இறுதி) 
வளை + ஓசை = வளையோசை (''ஐ'' இறுதி)
பொருளே + இல்லை = பொருளேயில்லை (''ஏ'' இறுதி)

அ, ஆ, ஊ, ஓ ( 4 உயிர்கள்) - நிலைமொழி இறுதி:
-------------------------------------------------------------------------------
தமிழில் நிலைமொழிகளின் இறுதியில் அ,ஆ, ஊ, ஓ ஆகிய உயிர்களில் ஏதாவது ஒன்று வந்து, வருமொழியில் ஏதாவது உயிரைக்கொண்டு தொடங்கும் விகுதி வந்து ஒரு சொல்லாக அமையும்போது, பெரும்பாலும் இடையில் ''வ்'' உடம்படுமெய் தோன்றும். சில இடங்களில் யகரமும் வரலாம்.
வர + இல்லை = வரவில்லை (''அ'' இறுதி)
மா + இல் = மாவில் (''ஆ'' இறுதி)
பூ + இதழ் = பூவிதழ் (''ஊ'' இறுதி)
கோ + இல் = கோவில் / கோவில் (''ஓ'' இறுதி)
எ, ஒ , ஔ என்ற மூன்று உயிர்களும் நிலைமொழியின் இறுதியில் வருவது இல்லை. (ஔ என்பதும் கௌ, வௌ என்பதும் ஓரெழுத்து ஒருமொழிகளில் தவிர, வேறு எந்த இடத்திலும் சொல்லின் இறுதியில் வருவது கிடையாது - சிங்கப்பூர் சித்தார்த்தன்)

முற்றியலுகரம் நிலைமொழி இறுதியாக வரும்போது...
--------------------------------------------------------------------------------------
அது + அல்ல = அதுவல்ல
அது + உம் = அதுவும்
சில இடங்களில் இறுதிக் குற்றியலுகரம்போன்று உடம்படுமெய்யும் வரும்.
அது + ஏ = அதுவே ....... அது + ஏ = அதே
அது + அல்ல = அதுவல்ல --- அது+ அல்ல = அதல்ல
ஆனால் நடு, மடு,வடு போன்ற சொற்களில் உடம்படு மெய் தவறாமல் வருகிறது. ( சிங்கப்பூர் சித்தார்த்தன்)
மடு + ஆ = மடுவா 
வடு + ஆ = வடுவா 
பசு + எங்கே = பசுவெங்கே ;
கொசு + எங்கே = கொசுவெங்கே
இவ்வாறு உயிரை அடுத்து உயிர் வரும்போது, இடையில் உடம்படுமெய்கள் - ய்,வ் ஏன் வருகின்றன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். தமிழின் ஒரு மிகச் சிறப்பான பண்பு அது!
இன்று சிலர் ''குடிஅரசு'' ''வாழைஇலை'' என்றெல்லாம் எழுதுகிறார்கள். இது தவறு. ''குடியரசு'' ''வாழையிலை'' என்றுதான் எழுதவேண்டும்.
'குற்றியலுகரப் புணர்ச்சிபற்றியும் தனியே எழுதவேண்டும்!
மொத்தம் உயிர் 12 (+ஆய்தம்)! இவற்றில் .....
இ, ஈ, ஐ, ஏ, ----- அ, ஆ, ஊ, ஓ ----- முற்றியலுகரம்
-------- குற்றியலுகரம் என்று நான்கு பிரிவுகளாகப் பார்க்கலாம். ஏனைய எ,ஒ, இரண்டும் நிலைமொழியின் இறுதியில் வருவதில்லை! ஔ என்பது ஓரெழுத்து ஒருமொழியில் மட்டுமே வரும்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

எளிமையான தமிழ்ச் சந்தி இலக்கணம்

சந்தி இலக்கணம் மிக எளிமையானது! முயன்றால் வெகுவிரைவில் கற்றுக்கொள்ளலாம். நான் 1975-இல் முனைவர் பட்டப் படிப்புக்காகப் பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவராகச் சேர்ந்தேன். அப்போது சந்திபற்றிய தெளிவு எனக்குக் கிடையாது. என்னைப் போன்ற பிற மாணவர்களுக்காகவும் பேராசிரியர் சில வகுப்புகளை நடத்தினார். அதன் சுருக்கமே பின்னர் '' நாமும் தமிழில் தவறில்லாமல் எழுதலாம் '' என்ற நூலாக வெளிவந்தது. அதிலிருந்து தினந்தோறும் ஒரு விதியைச் சந்தி இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு முகநூலில் அளிக்கிறேன். சில விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப் படவேண்டியவை. அவற்றை முதலில் தருகிறேன்.
(1) இரண்டாம் வேற்றுமை - '''' வேற்றுமை - விகுதியை ஏற்று வருகிற எந்த ஒரு பெயர்ச்சொல்லையடுத்தும் (நிலைமொழி), வல்லின எழுத்தை முதலாகக்கொண்ட ஒரு பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் அல்லது வேறு எந்தவகைச் சொல் (வருமொழி) வந்தாலும், நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் வல்லொற்று ( வருமொழியின் முதல் வல்லொற்று) மிகும். இதற்கு விதிவிலக்கே கிடையாது. கண்ணை மூடிக்கொண்டு, வல்லொற்றை இடலாம்.
வல்லொற்றுகள் என்பவை க்,ச்,த்,ப், ட்,ற். இவற்றில் ட், ற் இரண்டும் சொல்லின் முதலாகத் தமிழில் வராது. எனவே வருமொழியில் க், ச், த், ப் நான்கு மட்டுமே வரும். இவையே மிகும்.
(எ-கா.) கண்ணனைக் கண்டேன்.
கண்ணனைப் பாண்டியன் கண்டான். 
கண்ணனைத் திட்டாதீர்கள்!
கண்ணனைச் சென்னைக்குப் போகச்சொல்!

கண்ணனைப் பார்த்தபிறகு போகலாம்.
கண்ணனைப்பற்றி என்ன நினைக்கிறாய்?

(2) நான்காம் வேற்றுமை விகுதியாகிய ''கு'', ''க்கு'' என்ற விகுதிகளை ஏற்று நிலைமொழியாக ஒரு பெயர்ச்சொல் அமையும்போது, வல்லின ஒற்றை (க்,ச்,த்,ப்) முதலாகக்கொண்ட சொற்கள் வருமொழியாக வந்தால், அங்குத் தவறாமல் வருமொழியின் அந்த முதல் ஒற்று மிகும். 
(எ-கா.)

அவனுக்குக் கொடுத்தேன்.
அவருக்குக் காட்டினேன்.

அவனுக்குச் சிறப்பே அவனது நாவன்மைதான்.
அவருக்குச் சொன்னேன்.

எனக்குப் பகைவர்களே கிடையாது.
அவனுக்குப் பாம்பைக் கண்டால் பயம்.

எனக்குத் தந்தான்.
யாருக்குத் தெரியும்?

இந்தச் சந்தி விதிக்கு விதிவிலக்கே கிடையாது.
நேற்று நாம் பார்த்தது இரண்டாம் வேற்றுமை '''' பற்றியது!
இன்று பார்ப்பது நான்காம் வேற்றுமை ''க்''/ ''க்கு'' பற்றியது.

எனவே '''' என்ற இரண்டாம் வேற்றுமை விகுதியையும் ''க்''/ ''க்கு'' என்ற நான்காம் வேற்றுமை விகுதியையும் பெற்றுவருகிற பெயர்ச்சொற்கள் நிலைமொழிகளாக அமைந்து, வருமொழிகளாக வல்லின ஒற்றை (க்,ச்,த்,ப்) முதலில் பெற்றுவருகிற பெயர்ச்சொற்கள் அமைந்தால், விதிவிலக்கின்றி, இடையில் வருமொழிகளின் முதல் வல்லொற்று மிகும்.
இந்த இரண்டு விதிகளையும் பின்பற்றினாலே பெரும்பான்மை இடங்களில் சந்திப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
வேற்றுமைபற்றிய அறிவும் மிக இன்றியமையாதது. ஒரு தொடரில் உள்ள பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையில் உள்ள உறவே வேற்றுமை உறவு என்பதாகும்.
'' நான் அவருக்கு உண்மையை விளக்கினேன்''.
இங்கு ''நான்'' என்பது ''விளக்கிய'' செயலைச் செய்தவர்.
''அவருக்கு'' என்பது ''விளக்கிய'' செயல் யாருக்கு நடைபெற்றது என்பதைக் காட்டுகிறது.
''உண்மையை'' என்பது எது '' விளக்கப்பட்டது'' என்பதைக் குறித்து நிற்கிறது.

இந்தத் தொடரில் அமைந்துள்ள மூன்று பெயர்ச்சொற்களும் ( ''நான்'', ''அவர்'' ''உண்மை'') ''விளக்கினேன்'' என்ற வினைச்சொல்லோடு வேறுபட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் உள்ள உறவைத்தான் - தொடரியல் உறவைத்தான் - வேற்றுமை என்று தமிழ் இலக்கணத்தில் குறிப்பிடுகிறோம். மேற்காட்டிய தொடரில் அமைந்துள்ள மூன்று பெயர்ச்சொற்களும் ''விளக்கு'' என்ற வினைச்சொல்லோடு வேறுபட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. எனவே இதை வேற்றுமை என்று அழைக்கிறோம்.
''நான் கடையில் வேலை பார்த்தேன்''
''நான் முருகன் கைகளில் இருந்த வேலைப் பார்த்தேன்''

முதல் தொடரில் ''வேலை'' என்பது பணியைக் குறிக்கிறது. இறுதி எழுத்தாகிய '''' வேற்றுமை விகுதி இல்லை. மாறாக, ''வேலை'' என்ற சொல்லின் ஒரு பகுதியே அது. எனவே வருமொழியில் வல்லின ஒற்று முதல் எழுத்தாக அமைந்தாலும், ஒற்று மிகாது.
ஆனால் இரண்டாவது தொடரில் '''' என்பது ''வேல்'' என்ற பெயர்ச்சொல்லோடு இணைந்த இரண்டாம் வேற்றுமை விகுதி. எனவே இங்கு வல்லின ஒற்று மிகுகிறது.
இதை ஏன் இங்குச் சொல்கிறேன் என்றால், மாணவர்கள் '''' இறுதியாக வருகிற எல்லாச் சொற்களிலும் ஒற்று இட்டுவிடக்கூடாது. சொல்லைப் பகுத்து, அங்குள்ள '''' வேற்றுமை விகுதியா அல்லது அந்தச்சொல்லின் பகுதி எழுத்தா என்று கண்டறியவேண்டும். வேற்றுமை விகுதியான '''' வந்தால்மட்டுமே , வல்லொற்று இடவேண்டும்.
அதுபோல,
'' நான் கணக்கு செய்தேன்'' என்பதில் ''க்கு'' என்பது ''கணக்கு'' என்ற சொல்லின் ஒரு பகுதியே! எனவே இங்கு ஒற்று இடக்கூடாது.

''நான் ஊருக்குப் போனேன்'' என்பதில் ''க்கு'' என்பது நான்காம் வேற்றுமைவிகுதி. இது ''ஊர்'' என்ற பெயர்ச்சொல்லோடு இணைகிறது. எனவே இங்கு ஒற்று இடவேண்டும்.
எனவே மாணவர்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துகளைமட்டும் மனதில் வைத்துக்கொண்டு, ஒற்று இட்டுவிடக்கூடாது. அவை முழுச்சொற்களின் பகுதி எழுத்துகளா அல்லது வேற்றுமைவிகுதிகளாக என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்குச் சொல்லைப் பகுத்து ஆராயும் அறிவு தேவை.
இலக்கணம் என்றாலே கசப்பானது.. அதிலும் சந்தி இலக்கணம் மிகவும் கசப்பானது என்ற ஒரு உணர்வு பொதுவாக மாணவர்களிடையேயும் பொதுவான நண்பர்களிடையேயும் இருக்கிறது. அவ்வாறு கருதுவது தவறு... இலக்கணம் கணிதம் போன்றது... மிக எளிமையானது... சந்தி விதிகள் கணிதப் பண்பு உடையது என்பதை நண்பர்களுக்கு விளக்கி , இலக்கணத்தின்மீது விருப்பத்தை உருவாக்கவே இங்கு நான் முயல்கிறேன். நண்பர்கள் தங்கள் அடிப்படை எழுத்துப்பணிகளில் பயன்படுத்தத் தேவையான இலக்கணத்தைமட்டுமே இங்கு விளக்க விரும்புகிறேன். எனவே படிப்படியாக இந்தத் தொடரைக் கொண்டுசெல்ல விரும்புகிறேன். அறிஞர்களுக்கிடையே நீடிக்கும் மிகப்பெரிய கருத்துவேறுபாடுகளில் இங்கு முதலில் ஈடுபட நான் விரும்பவில்லை. நண்பர்கள் இதைப் புரிந்துகொண்டு, உதவ வேண்டுகிறேன்.
(3) ''த்து'' ''ட்டு'' ''ற்று'' '''' ''ய்'' - ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச விகுதிகளுக்குப் பின் வல்லொற்று மிகும்!
--------------------------------------------------------------------------------- 
முன்பு கூறிய இரண்டு சந்திவிதிகளும் கட்டாயச் சந்தி விதிகள் என்று பார்த்தோம். '' அவனைப் பார்த்தேன்'', ''அவனுக்குக் கொடுத்தேன்'' என்ற இரண்டு தொடர்களிலும் - இரண்டாம் வேற்றுமை '''', நான்காம் வேற்றுமை ''கு/க்கு'' ஆகியவற்றிற்குப் பின்னர் கண்டிப்பாக வல்லொற்று மிகும் என்று பார்த்தோம்.

அதுபோன்று மற்றொரு கட்டாயச் சந்தியை இன்று பார்க்கலாம். வினைச்சொற்களை - முற்றுவினை, எச்ச வினை என்று இரண்டாக இலக்கணத்தில் பிரித்துப்பார்க்கிறோம். பொதுவாக, வினைச்சொற்கள் கால விகுதிகள் ஏற்கும். அதுபோல, திணை எண் பால் விகுதிகளையும் ஏற்கும். '' படித்தான்'' என்ற வினைச்சொல்லை மூன்றாகப் பிரிக்கலாம். படி + த்த் + ஆன் .... இதில் ''படி'' என்பது வினையடிச்சொல். ''த்த்'' என்பது இறந்தகாலத்தைக் காட்டும் விகுதி. ''ஆன்'' என்பது படர்க்கை, ஆண்பால், ஒருமை ஆகிய பண்புகளைக் காட்டும் திணை எண் பால் விகுதி. இவ்வாறு திணை எண் பால விகுதியோடு ஒரு வினைச்சொல் முடிந்தால் அதை முற்றுவினை அல்லது வினைமுற்று என்று அழைக்கிறோம்.
ஆனால் ''புத்தகம் வேண்டும்'' , '' என்னால் முடியும்'' ''அது இல்லை'' போன்ற தொடர்களில் ''வேண்டும்'', ''முடியும்'', ''இல்லை'' ஆகியவற்றில் திணை எண் பால் விகுதி இல்லாமல் இருந்தாலும் வினைமுற்றுகள்தாம்.
முதலில் பார்த்த திணை எண் பால் விகுதிகள் ஏற்கிற வினைச்சொற்கள், அவற்றை ஏற்காமல் வந்தால், அவற்றை வினைமுற்று என்று அழைக்கக்கூடாது. அவற்றை வினையெச்சம் அல்லது எச்சவினை என்று அழைப்பார்கள். எடுத்துக்காட்டாக , ''படித்து'' என்பதைப் பின்வருமாறு இரண்டாகத்தான் பிரிக்கமுடியும்.
''படி + த்து'' - இதைச் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சம் என்று கூறுவார்கள்.
அதுபோன்று, 
''படிக்க (படி+க்க )'' .... ''செய'' வாய்பாட்டு வினையெச்சம்
''படித்தால் (படி+த்தால்)'' .. நிபந்தனை வினையெச்சம்
''படிக்காமல் (படி+க்காமல்)''... எதிர்மறை வினையெச்சம்
''படிக்காது (படி+க்காது)''.... எதிர்மறை வினையெச்சம்

ஆகியவற்றிலும் திணை எண் பால் விகுதிகள் வரவில்லை. எனவே இவையும் வினையெச்சங்கள்தான். வினைமுற்றுகள் இல்லை.
இவற்றில் இன்று நாம் பார்க்க இருக்கிற வினையெச்சம் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சம். இந்த வினையெச்சங்களின் விகுதிகள் .... ''து'' (செய்து) , ''த்து'' (படித்து), '' று (கொன்று) , ''ற்று'' (விற்று) , ''ந்து'' (வந்து), ''ண்டு (ஆண்டு), ''ட்டு (கேட்டு) '''' (ஓடி), ''ய்''(போய்) ஆகியவையாகும். ஆகவே இந்தச் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சத்திற்கு ஒன்பது மாறுபட்ட விகுதிகள்! இவற்றில் ''து'', ''த்து'' ''ந்து'' ''று'' ''ற்று'' ''ட்டு'' ஆறும் குற்றியலுகரத்தில் முடிகின்றன. இந்த ஆறில் ''த்து'' என்பதில் இறுதி ''து''யானது குற்றியலுகரத்தில் முடிவதோடு மட்டுமல்லாமல். அதற்கு முன் மற்றொரு வல்லின எழுத்தும் வருகிறது. எனவே இதை வன்தொடர்க் குற்றியலுகரம் என்று அழைப்பார்கள். அதுபோல, ''ற்று'' என்பதில் இறுதி ''று'' -க்கு முன்னர் ''ற்'' என்ற மற்றொரு வல்லினம் வருகிறது. இதுவும் வன்தொடர்க் குற்றியலுகரம்தான். அதுபோன்று ''ட்'' க்குமுன்னர் வல்லினம் வருகிறது. இதுவும் வன்தொடர்க் குற்றியலுகரம்தான். ஆனால் ''து'' ''று'' ''டு'' வுக்குமுன், மெல்லினமும் (''வந்து'' ''கொன்று'' ''ஆண்டு''), இடையினமும் (''செய்து'')வந்துள்ளன . எனவே இவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள் இல்லை.
மேற்கண்ட வன்தொடர்க் குற்றியலுகர விகுதியான ''த்து'', ''ற்று'' ''ட்டு'' என்பவற்றிலும் '''', ''ய்'' ஆகிய விகுதிகளிலும் முடிகிற ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சங்களுக்குப் பின்னர் வல்லின எழுத்தை முதலாகக்கொண்ட வருமொழிகள் வந்தால், அங்கே வல்லினம் மிகும். 
(எ-கா.)
நான் படித்துப் பார்த்தேன் - நான் விற்றுப் பார்த்தேன்.
நான் சட்டையைப் போட்டுப் பார்த்தேன்.
நான் ஓடிப் பார்த்தேன் - நான் செடியை நட்டுப் பார்த்தேன்.
நான் போய்ப் பார்த்தேன்.

ஆனால்,
'' நான் செய்து பார்த்தேன்'' என்பதில் வல்லொற்று மிகவில்லை. காரணம், இங்கு வன்தொடர்க்குற்றியலுகரம் விகுதி வரவில்லை. மாறாக, இடையின எழுத்து முன் வருகிற இடைத்தொடர்க் குற்றியலுகர விகுதியே வருகிறது!

''நான் வந்து பார்த்தேன்'' என்பதிலும் ''நான் கொன்று போட்டேன்'' என்பதிலும் '' நான் ஆண்டு பார்த்தேன்'' என்பதிலும் மிகவில்லை. காரணம், இங்கும் வன்தொடர்க்குற்றியலுகரம் விகுதி வரவில்லை. மாறாக, மெல்லின எழுத்து முன் வருகிற மென்தொடர்க் குற்றியலுகர விகுதியே வருகிறது!
''த்து'' ''ட்டு'' ''ற்று'' '''' ''ய்'' ஆகிய ஐந்து ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சங்களுக்குப் பின்னர் வல்லொற்று மிகும்.
இந்தச் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சத்திற்கான சந்தி விதியும் கட்டாயச் சந்தி விதியாகும். இதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம்.
குற்றியலுகரம் என்றால் என்ன? 
-------------------------------------------------------------------------------------------------
தமிழ்ச் சொற்களில் ( வேர்ச்சொற்களில்) இறுதியில் வல்லொற்று - வல்லின எழுத்து - தனித்து வராது. ஆனால் உயிர் எழுத்துகளோடு இணைந்து உயிர்மெய் எழுத்துகளாகத்தான் வரும். அவற்றில் முக்கியமானது உகர எழுத்தோடு வருவது ஆகும். இந்த உகரத்திலும் தனிக் குறில் அடுத்து வருகிற சொற்களின் இறுதியில் வருகிற உகரத்திற்கும் ஏனைய உகரத்திற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. முதலில் கூறப்படுகிற உகரம் உதடுகள் குவிந்து பிறக்கிற உகரமாகும். . இதை முற்றியலுகரம் என்று அழைப்பார்கள். (எ.கா.) அது, இது, எது, மது போன்றவை. பிற உகரங்கள் எல்லாம் உதடு குவியாமல் பிறக்கிற உகரங்கள் ஆகும். ஒலிக்கும் நேர அளவும் குறைந்திருக்கும் இவற்றைக் குற்றியலுகரம் என்று அழைப்பார்கள்.(எ.கா.) கொக்கு, குரங்கு, நல்கு, எஃகு, ஆடு, அழகு, மிலாறு. இவற்றை அந்த குற்றியலுகரம் இணைந்து வருகிற வல்லின எழுத்துகளுக்கு முன்னர் வருகிற எழுத்துகளை அடிப்படையாகக்கொண்டு வகைப்படுத்தலாம். வல்லின எழுத்துகள் வந்தால் அது வன்தொடர்க் குற்றியலுகரம் (கொக்கு) ; மெல்லினம் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் (குரங்கு); இடையினம் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் (நல்கு); ஆய்தம் வந்தால் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ( எஃகு); தனிநெடில் வந்தால் நெடில்தொடர்க்குற்றியலுகரம் (ஆடு); உயிர் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (அழகு, மிலாறு). இந்தக் குற்றியலுகரச் சொற்களின் புணர்ச்சி இயல்பு முற்றியலுகரப் புணர்ச்சியின் இயல்பிலிருந்து மாறுபட்டது. . எனவே தொல்காப்பியர் குற்றியலுகரப் புணர்ச்சிக்குத் தனி இயலே வகுத்திருக்கிறார். இங்கு நாம் பார்த்தது வன்தொடர்க்குற்றியலுகரப் புணர்ச்சி விதியாகும். அதுவும் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சச் சொற்களுக்கான புணர்ச்சி இலக்கணமாகும்.

இலக்கணத்தில் வாய்பாடு ( Paradigm ) என்றால் என்ன ? 
----------------------------------------------------------------------------------------
இந்த வினா மிகச் சரியான வினா ! நன்றி! கணக்குப் பாடத்தில் வட்டத்தின் பரப்பளவு πr^2 என்று படிக்கிறோம். அது எந்த வட்டமாக இருந்தாலும் - சிறிய வட்டமோ பெரிய வட்டமோ அது பிரச்சினை இல்லை- அதன் பரப்பளவு மேற்குறிப்பிட்ட வாய்பாட்டின் அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம். r என்ற வட்டத்தின் ஆரம் - அதன் மதிப்பு - மாறலாம்.. ஆனால் அதன் பரப்பளவு இந்த வாய்பாட்டின் அடிப்படையில்தான் அமையும். அதற்குக் காரணம், எல்லா வட்டங்களின் இயல்புகளும் ஒன்றுதான். அதுபோல ஒரு சொல் வினைச்சொல்லாக இருந்தால் போதும், வினையெச்ச வாய்பாட்டின் அடிப்படையில் அதனுடைய பல்வேறு வடிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவே இங்கு வாய்பாடு என்று அழைக்கப்படுகிறது. பேரா. பொற்கோ அவர்கள் தனது '' இலக்கணக் கலைக் களஞ்சியம்'' என்ற நூலில் இதுபற்றிப் பின்வருமாறு கூறுவார்.: '' ஒரே இலக்கண இயல்பை உடைய நூற்றுக்கணக்கான சொற்களை ஒரே வகையில் அடக்கிக்கொண்டு அந்த வகையில் உள்ள ஒரு சொல்லை அந்த வகைக்குக் குறியீடுபோல ஆளும் வழக்கம் தமிழிலக்கணங்களில் நாம் தொன்றுதொட்டுக் காணும் மரபுகளில் ஒன்று. ஓடு, ஆடு, நில், கேள், செல் முதலாய வினையடிகள் எல்லாவற்றையும் செய் என்னும் சொல்லால் குறிப்பதும், ஓட, ஆட, பாட நடக்க எனவரும் எல்லாச் சொற்களையும் செய என்னும் சொல்லால் குறிப்பதும் மேற்காட்டிய மரபுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இங்கே விளக்கிய இந்த முறையினை வாய்பாட்டு முறை என்பர். ஒரே இலக்கண இயல்புடைய நூற்றுக்கணக்கான சொற்களைக் குறிக்க்க் குறியீடாகப் பயன்படும் சொல்லினை வாய்பாட்டுச் சொல் என்பர். நில், கேள், செல் முதலாயவற்றைச் செய் வாய்பாட்டு வினைகள் என்றும் ஓட, பாட, ஆட முதலாயவற்றைச் செய வாய்பாட்டு வினைகள் என்றும் இலக்கணப் புலவர்கள் சுட்டுவது வழக்கம்'' (பக்கம் 154-55).

ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லைத் தெரிந்துகொண்டால், அதன் வேறுபட்ட இலக்கண வடிவங்களைத் தெரிந்துகொள்கிறோம். எடுத்துக்காட்டாக , go என்ற வினைச்சொல்லைக் கொடுத்தால், மாணவர்கள் go, goes, went, gone, going, to go என்று கூறிவிடுவார்கள். அதாவது ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லுக்கு ஆறு வடிவங்கள் உண்டு. அவற்றில் go, goes, went ஆகிய மூன்றும் வினைமுற்றுகள்! தனித்துவரும் (They go, He goes, He went) . ஏனைய மூன்றும் gone, going, to go மூன்றும் தனித்து வராது. He has gone, He is going, He likes to go என்று தன்னுடன் வேறு சில இலக்கணச் சொற்களை எடுத்துக்கொண்டுதான் வரும். எனவே இவை வினையெச்சங்கள். எனவே ஒரு மாணவருக்கு ஒரு வினைச்சொல்லைக் கொடுத்தவுடன் அதன் ஆறு வடிவங்களையும் - மூன்று வினைமுற்று வடிவங்கள், மூன்று வினையெச்ச வடிவங்கள் - வரவழைத்துவிடுவார். இதுவே வாய்பாடு.
மொழிமுதல் குற்றியலுகரம் .....
----------------------------------------------------
(பெ. முத்துராஜ்) : ஐயா வணக்கம் மொழிமுதல் குற்றியலுகரம் பற்றி(நுந்தை) விளக்கந்தந்தால் நன்றாக இருக்கும்.

ந.தெ.சு. : உதடு குவிந்து உகரம் பிறந்தால் முற்றுகரம்... உதடு குவியாமல் பிறந்தால் குற்றுகரம் என்பது பேச்சொலியல் விதி ஆகும். குற்றியலுகரம் பொதுவாகச் சொற்களின் இறுதியில் வல்லொற்றுகளோடு இணைந்துதான் வரும். ஆனால் சொல் முதலில் குற்றுகரம் வருமா?
தொல்காப்பியத்தில் மொழிமரபில் இரண்டு நூற்பாக்கள் இதுபற்றிக் கூறுகின்றன.
''குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின், 
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்'' (67)

''முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது , 
அப்பெயர் மருங்கின் நிலையிய லான'' (68).

தாய், தந்தை, மகன், மகள் போன்ற சொற்கள் உறவு முறைமை காட்டும் பெயர்ச்சொற்கள் ஆகும். அதுபோன்று ''நுந்தை'' என்பது ''நுன்( உன்) தந்தை'' என்ற ஒரு முறைப்பெயர் ஆகும். பாரதியார் ''எந்தை'' என்று (என் +தந்தை) என்று கூறியிருக்கிறார் அல்லவா?
''நுந்தை''யில் சொல் முதலில் நகரமும் (ந்) அதனுடன் குற்று உகரமும் இணைந்து வருகிறது. எனவே ''ந்'' தான் முதலில் வந்து, அதைப்பின் தொடர்வதே '''' ஆகும் என்பதால், இதை மொழிமுதல் குற்றியலுகரம் என்று சொல்லக்கூடாது என்று மயிலைநாதர் கூறுகிறார். ஆனால் இரண்டுமே இணைந்து உயிர்மெய்யாக வருவதால் அவ்வாறு சொல்லலாம் என்பதும் ஒரு கருத்து.
இதையொட்டிய மற்றொரு கருத்து: ''கட்டு'' என்ற சொல்லின் இறுதி உகரம் முற்றியலுகரமாக இருந்தால் அது பெயர்ச்சொல்லைக் குறிக்கும் என்றும் குற்றியலுகரமாக இருந்தால் அது வினைச்சொல்லைக் குறிக்கும் என்பதும் இலக்கண ஆசிரியர்களின் கருத்து. எனவே முற்றியலுகரமும் குற்றியலுகரமும் ஒரே இடத்தில் வந்து பொருள் வேறுபாட்டைத் தருகின்றன. ''எத்தனை கட்டு உள்ளன'', ''அதைக் கட்டு''... முதல் ''கட்டு'' பெயர்ச்சொல், இரண்டாவது ''கட்டு'' வினைச்சொல். அதுபோல, ''ஓடு'' வும் இறுதி உகரம் முற்றுகரமாக இருந்தால் பெயர்ச்சொல், குற்றுகரமாக இருந்தால் வினைச்சொல் என்றும் கூறுவார்கள்.
ஆனால் ''நுந்தை'' என்ற சொல்லில் உள்ள உகரத்தை முற்றுகரமாக ஒலித்தாலும், குற்றுகரமாக ஒலித்தாலும் ஒரே பொருள்தான் என்று தொல்காப்பியர் கருதுகிறார். இன்றைய தமிழில் இந்த மொழிமுதல் குற்றியலுகரம் கிடையாது என்று கூறலாம்.
(4) செய / செய்ய வாய்பாட்டு வினையெச்சத்தில் சந்தி..
-------------------------------------------------------------------------------------
நாம் முன்னர் பார்த்தபடி, செய அல்லது செய்ய என்பது மற்றொரு வினையெச்ச வடிவம். இந்த வடிவத்தில் வினையடியோடு '''' சேர்கிறது. இடையில் வேறு எந்த இலக்கண விகுதிகளும் கிடையாது. ஆனால் வேர்ச்சொல்லை அடிச்சொல்லாக மாற்றுவதற்குத் தேவையான எழுத்துகள் - ''க்'', ''க்க்'' சேரலாம்.

''போ'' என்பது ''போக (போ+க்+அ) என்று மாறும்! ''படி'' என்பது ''படிக்க (படி+க்க்+அ) '' என்று மாறும். அதுபோல சில வினையடிகளுக்கு மாற்று வடிவங்கள் இருக்கும். ''வா'' என்பதற்கு மாற்றுவடிவம் ''வர்'' ஆகும்.
மேற்கூறிய வினையெச்ச வடிவங்களோடு '''' சேர்ந்து ''செய / செய்ய'' வினையெச்ச வடிவம் அமையும்.
இந்த வினையெச்ச வடிவத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு. ஆனால் அவற்றைப்பற்றிப் பின்னர் சொல்லிலக்கணம்பற்றிப் பேசும்போது விரிவாகப் பார்க்கலாம்.
(4.1.) சந்தியில் எந்தவொரு ''செய, செய்ய'' வினையெச்ச வடிவங்களுக்குப்பிறகும், வல்லொற்றை - வல்லின எழுத்தை- முதலாகக்கொண்ட சொற்கள் வருமொழிகளாக அமைந்தால், அங்குத் தவறாமல் வல்லொற்று மிகும். இதற்கு விதிவிலக்கே கிடையாது.
வரச் சொல் .... எழுதச் சொல் ... போகச் சொல்
செய்யச் சொல்... நீந்தத் தெரியும்... எழுதப் பழகிக்கொள்

இதுவும் ஒரு கட்டாயச் சந்தி!
(4.2. ) இதுமட்டுமல்ல, செய/ செய்ய வடிவத்தில் அமைகிற பிற இலக்கணவகைச்சொல்கூட இதுபோன்று ஒற்று ஏற்று வரும். ''மிக'' என்ற அகர ஈற்று வல்லடையானது ''மிகு'' என்ற வினைச்சொல்லின் செய வாய்பாட்டு வினையெச்ச வடிவமாக அமைந்துள்ளது. எனவே '' மிகப் பெரிது'' என்று வல்லொற்று ஏற்று அமைகிறது.
(4.3.) வினையடை விகுதியாக அமைகிற ''ஆக'' என்பதுகூட வரலாற்றில் ''ஆகு'' என்பதின் செய வாய்பாட்டு வினையெச்ச வடிவம் என்று கொள்ளலாம். எனவே ,
'' வேகமாக (வேகம்+ஆக)'' என்ற வினையடையானது ''வேகமாகப் போ'' என்று வல்லொற்று ஏற்று வருகிறது என்று சொல்லலாம்.

(4.4.) ''செய்ய'' என்பதின்பின்னர் ''கூடிய'', ''தக்க'', ''கூடாத'' என்ற பெயரெச்சக் குறிப்பன்கள் வரும்போதுகூட வல்லொற்று மிகும்.
''செய்யத்தக்க'' , ''செய்யக்கூடிய'' , ''செய்யத்தக்க''
''சொல்லத்தகாத'' , ''செய்யக்கூடாத'' .............

(4.5.) செயவென் எச்சத்தின்பின் , போ, பார், கூடு, படு, பெற போன்ற துணவினைகள் வரும்போதும் வல்லொற்று மிகும்.
''அழப்போகிறது'', ''வரக்கூடும்'', '' வழங்கப்படும்'', ''போகப்பார்த்தான்'' , சொல்லப்பட்டது'' ''கூறப்பெற்றது''
(4.6.) செய அல்லது செய்ய வாய்பாட்டு வினையெச்ச வடிவத்தில் வருகிற '''' இறுதிபோலவே , பெயரெச்சத்திலும் '''' இறுதி வருகிறது. ஆனால் இந்தப் பெயரெச்ச '''' விகுதியானது காலவிகுதிக்குப்பின்னரே வரும். ''படித்த (படி+த்த்+அ)'' , ''படிக்கிற (படி+க்கிறு+அ)'' ''செய்த (செய்+த்+அ)''.
எனவே வினையடிக்குப்பின்னர் காலவிகுதி வந்து, அதன்பின்னர் பெயரெச்ச விகுதியாக அமைகிற '''' வேறு! வினையடிக்குப்பின்னர் கால விகுதி அமையாமல் நேரடியாக வினையெச்ச விகுதியாக இணைகிற '''' விகுதி வேறு. இதில் குழப்பமே தேவையில்லை.
அதாவது அகரத்தில் முடிகிற எச்சங்கள் எல்லாம் வினையெச்சங்கள் இல்லை. வினைச்சொல்லில் காலவிகுதிக்குப் பின்னர் அமைகிற அகர (பெயரெச்ச) விகுதி வேறு! கால விகுதி அமையாமல் வினையடியைத் தொடருகிற அகர (வினையெச்ச) விகுதி வேறு!
எனவே செய/ செய்ய வாய்பாட்டு வினையெச்சத்திற்குப் பின்னர் வல்லினங்களை முதலாகக்கொண்ட வருமொழிகள் வரும்போது, கட்டாயமாக வல்லொற்று மிகும். இதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India