திங்கள், 26 டிசம்பர், 2022

இலக்கியப் படைப்புக்கள் முற்றும் கற்பனைகளா?

 

இலக்கியப் படைப்புக்கள் முற்றும் கற்பனைகளா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------

எனக்கும் இலக்கிய ஆய்வுக்கும் தொடர்பு கிடையாது! ஆனால் சமூகவியல் நோக்கில் இலக்கியங்களைப் பார்க்கும் விருப்பம் எப்போதும் எனக்கு உண்டு! அதனடிப்படையில் சில கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்!

நரகாசுரனைப்பற்றிய எனது முகநூல் பதிவும் அதையொட்டி இராமாயணம், மகாபாரதம்பற்றிய முகநூல் பதிவும் நண்பர்கள் பலரிடையே சிறந்த கருத்துப்பரிமாற்றத்தை உருவாக்கியுள்ளது மகிழ்வைத் தருகிறது.

நண்பர் மாலன் அவர்கள் தமிழகத்து நாட்டுப்புறவியல் தந்தையான பேராசிரியர் நா. வானமாமலை (மொழியியல் படிப்பில் நான் சேர்வதற்கு எனக்கு உதவிய . . . அவரது ஆய்வுவட்டத்தில் என்னை இணைத்துக்கொண்ட . . . எனக்குப் பலவகைகளில் உதவிசெய்த பேராசிரியர்) அவர்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, இலக்கியப்படைப்புக்களில் வரும் நாயகர்கள் வெறும் கற்பனை இல்லை . . . வரலாற்றில் இடம்பெற்றவர்களே அவ்வாறு நாட்டுப்புற இலக்கிய நாயகர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 100 % விழுக்காடு உண்மை! நான் மறுக்கவில்லை!

படைப்பிலக்கியங்களின் மையக் கருத்துக்களோ அல்லது நாயகர் - நாயகிகளோ முழுக்க முழுக்க படைப்பாளிகளின் கற்பனை இல்லை! அவ்வாறு இருக்கவும் முடியாது! அவர்கள் வாழ்ந்த அல்லது வாழுகின்ற சமுதாயத்தின் அமைப்பும் அதன் பிற பண்புகளுமே அவற்றை அடிப்படையில் தீர்மானிக்கின்றன!

புற உலகில் இல்லாத ஒன்றை . . . மனிதரால் ஐம்புலன்களால் உணராத அல்லது உணரமுடியாத ஒன்றைப் ( அப்படிப்பட்ட ஒன்று இருக்கவே முடியாது!) படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களில் கொண்டுவர முடியாது!

ஆனால் சமுதாயம் தொடர்ந்து மாறுகிறது! வளர்ச்சியடைகிறது! அதையொட்டி மனிதர்களின் சிந்தனைகளும் மாற்றமடைகின்றன . . . வளர்ச்சியடைகின்றன! படைப்பிலக்கியங்களின் தேவைகளும் மாறுகின்றன! அவற்றின் மையக் கருத்துக்களும் மாறுகின்றன! ''நாயகர் - நாயகிகளும்'' மாறுகின்றனர்!

தமிழகத்தின் இன்றைய தேவைகளுக்குச் சங்க இலக்கியம் (''வீரயுகப்பாடல்கள் அல்லது செவ்விலக்கியங்கள்'') போன்ற இலக்கியங்கள் உருவாகாது! திருக்குறள்போன்ற அற இலக்கியங்கள் உருவாகாது! சிலம்பும் மேகலையும் போன்ற காப்பியங்கள் உருவாகாது! அப்பரும் சுந்தரரும் இயற்றிய பக்தி இலக்கியங்கள் உருவாகாது!

இன்றைய கட்டத்தில் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் மாலனும்தான் இலக்கிய உலகில் நடமாடுவார்கள்! இவர்களது இலக்கியங்களில் இன்றைய சமுதாயச் சிக்கல்களும் அவற்றில் தொடர்புடைய மாந்தர்களும்தான் இருப்பார்கள்! பொன்னியின் செல்வர்களும் சீதைகளும் கண்ணகிகளும் மணிமேகலைகளும் அவற்றில் கதைமாந்தர்களாக இருக்கமாட்டார்கள்!

ஆனால் . . . இந்த எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயச் சூழலை . . . சிக்கல்களை எவ்வாறு பார்க்கிறார்கள் . . . எதை உண்மையான சிக்கல் என்று கொள்கிறார்கள் . . . எந்தவகை மாந்தர்களைத் தங்கள் இலக்கியங்களின் மாந்தர்களாக ஆக்க விரும்புகிறார்கள் . . . என்பவற்றையெல்லாம் அவர்களின் உலகக் கண்ணோட்டங்களும் தத்துவப் பின்னணிகளுமே தீர்மானிக்கின்றன!

இன்றைய தமிழகத்து எழுத்தாளர்கள் வாழுகின்ற சமுதாய அமைப்பு ஒன்றாக இருந்தாலும், இவர்களின் உலகக்கண்ணோட்டமும் தத்துவப் பின்னணியும் வர்க்க உணர்வுகளும் வேறுபட்டு அமையும்போது . . . இவர்களது இலக்கியங்களின் தன்மையும் மாறுபட்டு அமைகிறது! ஜெயகாந்தனை ஜெயமோகனிடம் பார்க்கமுடியாது! அதுபோல ஜெயமோகனை ஜெயகாந்தனிடம் பார்க்கமுடியாது! பிரபஞ்சனைப் பாலகுமாரனிடம் பார்க்கமுடியாது! அதுபோல பாலகுமாரனிடம் பிரபஞ்சனைப் பார்க்கமுடியாது!

ஆனால் இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்களது சமுதாயச் சூழலையே எதிரொலிக்கிறார்கள்! இந்தச் சமுதாயத்தின் இலக்கியத் தேவைகளையே நிறைவேற்றுகிறார்கள்! இலக்கியத் தேவைகள் வர்க்கத்திற்கு வர்க்கம் மாறும் என்பதையும் இங்கு நாம் கணக்கில் கொள்ளவேண்டும்!

இதுபோன்று இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள் அவை தோன்றிய சமுதாயங்களின் தேவைகளையே எதிரொலித்தன! உறுதியாக அந்தச் சமுதாயங்கள் இன்றைய முதலாளித்துவ சமுதாயமோ ஏகாதிபத்தியச் சமுதாயமோ இல்லை!

மாறாக . . . இனக்குழுக்களின் இறுதிக் காலகட்டச் சமுதாயமாகவே எனக்குப் படுகிறது! அங்குதான் ''வீரமும், போரும்'' முன்னிலைப்படுத்தப்படுகிறது! இதுபற்றிய விரிவான விளக்கங்களைப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் அவர்களின் ''பண்டைய கிரேக்க சமுதாயம்பற்றிய ஆய்விலும்'' பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் ''தமிழ் வீரயுகப் பாடல்களிலும்'' பார்க்கலாம்!

இராமாயணத்தில் ஒரு அரசைச்சுற்றிக் காடுகளில் பல ''கொடியவர்கள்'' வாழ்ந்ததாகவும், அவர்களின் ''அட்டூழியங்கள்'' முனிவர்களுக்கு இன்னல் விளைவித்ததாகவும், அதிலிருந்து முனிவர்களுக்கு ''விடிவு'' தேடித்தர இளமையிலையே இராமரையும் இலக்குவனனையும் விசுவாமித்திரர் (?) அழைத்துச் சென்றதாகவும் படிக்கிறோம்! இதன் பின்னணி . . . காடுகளில், மலைகளில் வசித்துவந்த இனக்குழுக்களை அழிக்க . . . ஒழித்துக்கட்ட . . . ஆற்றோரங்களில் குடியேறி, தனிச்சொத்துரிமையை அடிப்படையாகக்கொண்ட அரசு என்ற வன்முறை நிறுவனம் செயல்படுகிறது! இந்த வன்முறையின் ''வெற்றிநாயகர்'' இராமாயணத்தின் ''கதாநாயகராக'' ஆக்கப்படுகிறார்! இந்தக் காப்பிய நாயகர், பின்னர் ''உண்மையான வரலாற்றுநாயகராக'' ஆக்கப்படுகிறார், ஆளும் உடைமைவர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க! இன்றுவரை அது தொடர்கிறது!

அதுபோன்றுதான் மகாபாரதம்! இரத்த உறவுடைய இனக்குழுக்கள் தனியுடைமைச் சமுதாயமாக மாறியபிறகு. . . '' இரத்த உறவுக்கோ தொப்பூள்கொடிக்கோ நிலத்தின்மீதான 'பட்டா' உரிமையில் இடம் கிடையாது!'' என்ற ''சமூக நியாயம்'' முன்வைக்கப்படுகிறது! அதையொட்டியே பாரதத்தின் அத்தனை முதன்மைக் கதைகளும் கிளைக்கதைகளும் அமைந்துள்ளன! கீதையும் இதன் ஒரு பகுதிதான்!

எனவே நண்பர் மாலன் அவர்கள் கூறியதுபோல, இந்த ''இராமாயண, மகாபாரத நாயகர்கள்'' அன்றைய சமுதாயத்தில் தோன்றிய வாழ்ந்த ''வெற்றிநாயகர்களின்'' கற்பனை உருவங்களே! அந்த ''வெற்றிநாயகர்களின் சாதனைகளை'' அன்றைய இலக்கியப் படைப்பாளிகள் ''தங்களுக்கு உரிய'' பார்வையில் . . . தத்துவப் பின்னணியில் . . . ஆளும் வர்க்கங்களின், அரசர்களின் தேவைகளின் அடிப்படையில் . . . இலக்கியங்களில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்! வெறும் ''கற்பனை நாயகர்கள் இல்லை இவர்கள்'' என்பதை நானும் உறுதியாக நம்புகிறேன் . . .

ஆனால் ஒரு எச்சரிக்கையுடன்!

இந்தப் படைப்பாளிகள் வாழ்ந்த காலத்தில் நடமாடிய பல்வேறு உண்மையான ''மனிதர்களின்'' செயல்களையெல்லாம் தொகுத்து, அவை அனைத்தையும் ஒரு ''நாயகரின்'' செயல்களாக மாற்றி, மேலும் அந்த ''நாயகருக்கு'' ஒரு ''இறைத் தன்மையை'' ஏற்றி , இன்றளவும் அச்செயல் இந்திய ஒன்றியத்தின் மக்களிடையே சிக்கல்களும் மோதல்களும் ஏற்பட வழிவகுத்த ''இலக்கியப் படைப்பாளிகள்'' வால்மீகி போன்றவர்கள்!

இன்றும் நமது திரைப்படங்களில் வரும் ''கதாநாயகர்களும்'' இப்படித்தான்!

அவர்கள் இதை முன்கூட்டியே ''தீர்மானித்து'' செய்தார்கள் என்று நான் கூறவரவில்லை! ஆனாலும் அவர்களது ''இலக்கியப் படைப்புக்கள்'' இன்றைக்கு உண்மையான வரலாறாகத் திரிக்கப்பட்டு . . . மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதே! அதுதான் தவறு!

''கடமையைச் செய் ; பலனை எதிர்பார்க்காதே'' என்ற கீதையின் சொற்றொடர்கள் . . . 1975 அவசரநிலைப் பிரகடனத்தின்போது எல்லா இடங்களிலும் தொங்கவிடப்பட்டிருந்தது என்பதை நினைவுகூருகிறேன்! எதற்காக என்பதை நண்பர்களின் கருத்துக்களுக்கே விட்டுவிடுகிறேன்!

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India