வியாழன், 30 ஜூன், 2016

சுவாதி படுகொலையும் சமூகப் பின்னணியும்...

சுவாதி படுகொலையும் சமூகப் பின்னணியும்...
-------------------------------------------------------------------
அரசியல், பொருளாதாரம், மதம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் நிலவுகிற ஒடுக்குமுறைகளுக்குச் சமூகக் காரணிகள் காரணம்... இந்தவகை ஒடுக்குமுறைகளில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆணும் பாதிக்கப்படுகிறான். பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.
ஆனால் மேற்கூறிய பாதிப்புகளோடு .... பெண் என்பவள் சமுதாயத்தில் பெண்ணாகப் பிறந்ததினால் பாதிக்கப்படுகிறாள். இந்தவகைப் பாதிப்பை ஏற்படுத்துவதில் சமூகமானது அரசியல், பொருளாதாரம். மதம் , ஜாதி அடிப்படைகளைப் பார்ப்பதில்லை. பெண்... அவ்வளவுதான்.
கருவிலேயே பெண் சிசுவை அழிப்பது.... குழந்தை வளர்ப்பில்கூட ஆண் குழந்தைக்கு இருக்கிற உரிமைகளைப் பெண் குழந்தைகளுக்கு அளிக்காமல் இருப்பது... . குடும்ப வாழ்க்கையில் கூட பெண்களுக்கென்று வீட்டுவேலைகளை ஒதுக்குவது ( சமையல், வீடு பெருக்குவது, குழந்தை பெறும் கருவியாகப் பார்ப்பது, குழந்த்தைப் பராமரிப்புப் பணியைப் பெண்ணுக்கே உரிய பணியாகப் பார்ப்பது... பட்டியல் நீளும்), குழந்தைப் பேறு இல்லாமலிருந்தால் அந்தப் பெண்ணைப் பலவகையில் அவமானப்படுத்துவது, கணவன் இறந்துவிட்டால் பெண்ணை மிகக் கேவலமான சடங்குகளுக்கு உட்படுத்துவது, பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெருக்களில் பெண்களைக் காமப்பொருளாகக் கருதிக் கேலிசெய்வது, சில வழிபாட்டுத்தல்ங்களில் பெண்களை அனுமதிக்காமல் இருப்பது, தொலைக்காட்சிகள், திரைப்படங்களில் மனைவிகளைக் கணவர்கள் அடிப்பதுபோலக் காட்டுவது ( உண்மையிலும் வீடுகளில் நடைபெறும் ஒன்றுதான்) ... இவ்வாறு பலவகைகளில் பெண்ணடிமை நீடிக்கிறது.
தாய்வழிச் சமுதாயமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பெண் '' தெய்வமாக'' கருதப்பட்டாள். சமூகத்தில் பொருளாதாரத் தேவைகளைப் பெற்றுத் தரும் மறு உற்பத்திச் செயலை ( குழந்தைகளைப் பெறுவது) மேற்கொள்ளும் முக்கியமான நபராகக் கருதப்பட்டாள். ,வேட்டைக்குச் செல்லும் ஆண்களுக்கு வேட்டை கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம்.. ஆனால் காய்கனி பொறுக்குவதிலும், சிறு அளவிலான விவசாய உற்பத்தியில் ஈடுபட்ட பெண்களின் வருமானம் நிரந்தரமானது. இதன் காரணமாகவும் அவளுக்கு உயர்மதிப்பு இருந்தது. பெண்ணைச் சமுதாயம் கொண்டாடியது. ''தெய்வங்களிலும்'' பெண் தெய்வங்களே நீடித்தன.
ஆனால் பொருளாதார உற்பத்தியில் ஆண்களின் பங்கு என்று அதிகரித்ததோ, அன்றே பெண் வீட்டுக்குள் முடக்கப்பட்டாள். ஆண்களுக்குச் சுகம் தரும் கருவியாக.. சொத்துக்கு வாரிசு பெற்றுத் தரும் கருவியாக ஆக்கப்பட்டாள். அன்றே பெண்களின்மீதான வன்முறை தொடங்கிவிட்டது. இன்றுவரை நீடிக்கிறது. பெண்ணின்மீதான ஒடுக்குமுறைகளின் வடிவங்கள் இன்று வேறுபட்டிருக்கலாம்.. ஆனால் அடிப்படையில் மாற்றம் கிடையாது.
பெண்ணடிமை என்பது மனித வரலாற்றின் தொடக்கத்தில் கிடையாது. இடையில் தோன்றியதுதான். அதற்கு இயற்கை அடிப்படை கிடையாது. சமூக அடிப்படையே காரணம்.. அவை அழித்தொழிக்கப்படும்போதுதான்.... பெண் விடுதலை சாத்தியம். அப்போதுதான் கருவறையிலும் வீட்டுக்குள்ளேயும் தொடர்வண்டி நிலையங்களிலும் நடைபெறும் பெண் படுகொலைகள் இல்லாமல் போகும். ஆனால் அதற்காக இன்று சமூக உணர்வுள்ளவர்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமென்று நான் கூறவரவில்லை.. முழுமையான தீர்வுபற்றிக் கூறுகிறேன்.
அதாவது, அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறைகளோடு, இவற்றிற்கு அப்பால் பெண்களுக்கு இன்னொரு ஒடுக்குமுறையும் நீடிக்கிறது என்பதைக் கூறுகிறேன். '' இதில் வர்க்கம், மதம், சாதி கிடையாது' !!!
முடிந்தால் '' குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்பற்றிய'' பிரடரிக் எங்கல்சு நூலைப் படிக்கவும்.

தமிழுக்கு உள்ள உரிமை !

                                                     தமிழுக்கு உள்ள உரிமை !
இந்திய அரசியல் சட்டத்தின் பின்னிணைப்பாக உள்ள 8 ஆவது பிரிவில் இன்றுவரை 22 இந்தியமொழிகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் சட்டத்தின் உள்ளே இவை இடம்பெறவில்லை. மேலும் இந்தப் பின்னிணைப்பின் நோக்கம் ..... ஆட்சிமொழியாகிய இந்தியைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்குச் சமசுகிருதத்தை முதன்மையாகவும், எட்டாவது இணைப்பில் உள்ள மொழிகளின் வளங்களை இரண்டாவதாகவும் பயன்படுத்தவதேயாகும். இந்த 22 மொழிகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆட்சிமொழியாகிய இந்தியை வளர்ப்பதற்கான பாராளுமன்றக்குழுவில் இடம் பெறலாம். இந்த உரிமைமட்டுமே 8 ஆவது பிரிவில் உள்ள மொழிகளுக்கு உண்டு!
-------------------------------------------------------------------------------------
PART XVII
CHAPTER IV.-SPECIAL DIRECTIVES
351. Directive for development of the Hindi language.
It shall be the duty of the Union to promote the spread of the Hindi language, to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India and to secure its enrichment by assimilating without interfering with its genius, the forms, style and expressions used in Hindustani and in the other languages of India specified in the Eighth Schedule, and by drawing, wherever necessary or desirable, for its vocabulary, primarily on Sanskrit and secondarily on other languages.
Article 351 of the Constitution
provides that it shall be the duty of the Union to promote the spread of the Hindi language to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India and to secure its enrichment by assimilating without interfering with its genius, the forms, style and expressions used in Hindustani and in the other languages of India specified in the Eighth Schedule, and by drawing, wherever necessary or desirable, for its vocabulary,
primarily, on Sanskrit and secondarily on other languages. It would thus appear that the Eighth Schedule was intended to promote the progressing use of Hindi and for the enrichment and promotion of that language.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக்கொள்கை

                                 ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக்கொள்கை


ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு!
ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்து வெளியேறியது.
கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அந்நாடு எடுத்துள்ளது.

இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனில் 24 மொழிகள் ஆட்சிமொழிகளாகவும் பயன்பாட்டு மொழிகளாகவும் இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஐரோப்பிய யூனியனின் ஆவணங்களைத் தனது தாய்மொழியில் பெறும் உரிமை உண்டு. தனது தாய்மொழியியலேயே எந்தவொரு மடலும் எழுதலாம். அதற்கானப் பதிலையும் தனது தாய்மொழியிலேயே பெறமுடியும். இதற்காக 1750 மொழியியலாளர்களும் 600 பிற அலுவலர்களும் பணிபுரிகின்றனர். மேலும் 600 முழுநேரப் பணியாளர்ளும் 3000 பகுதிநேர ஆர்வலர்களும் பணிபுரிகின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய மொழிபெயர்ப்பு அமைப்பாக இது நீடிக்கிறது. மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.

http://ec.europa.eu/languages/policy/linguistic-diversity/official-languages-eu_en.htm

இந்தியாவில் 22+1 மொழிகள் ( அரசியல் சட்டப்ப்டி) உள்ளன. அனைத்து மொழிகளையும்ஆட்சிமொழிகளாக ஆக்கிவிட்டு, ஐரோப்பிய யூனியனில் இருப்பதுபோல 2000 அல்லது மூவாயிரம் பணியாளர்களை வைத்துக்கொண்டு, அவரவர் மொழியில் ஒவ்வொருவரும் கருத்தாடல் மேற்கொள்ள வழிவகை செய்யமுடியும் அப்படியிருக்க ..... தற்போது இந்த மொழி ஜனநாயகத்தை ஏற்று, நடைமுறைப்படுத்த ஏன் நடுவண் அரசு விரும்பவில்லை? நடைமுறைச் சிக்கல் இல்லை. இந்திமொழி ஏகாதிபத்தியம்தான் காரணம்... ஆதிக்க உணர்வுதான் காரணம்...

உண்மையில் மக்கள் உணர்வை மதிக்கக்கூடிய அரசுகளாக இருந்தால் .... தாங்கள் கூறுவது நடக்கும். இப்பிரச்சினையில் மக்கள் பொதுவாக்கெடுப்புக்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லாமலிருந்தாலும், ... மக்களின் போராட்டங்களால் அப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்தவைக்கலாம். அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டால்... இது நடக்கும். நடக்கவைக்கமுடியும்.

ஏற்கனவே இதற்கான நல்லதொரு முயற்சியை நண்பர் ஆழிசெந்தில்நாதன் அவர்கள் மேற்கொண்டுவருகிறார். அதற்கான ஒருங்கிணைப்பு மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளார். அதைத் தொடரலாம்.https://www.facebook.com/.../PromoteLinguisticEq.../members/


வெள்ளி, 24 ஜூன், 2016

இடையினம் என்பது உயிரா அல்லது மெய்யா?

தமிழ்மொழி அமைப்பின் சிறப்புகளில் சில (2)..... (தமிழிலக்கணத்தில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.. மற்றவர்களுக்கு மிகவும் அலுப்பு(த்) தட்டலாம் ... முன்னெச்சரிக்கை ... மன்னிக்கவும். 


தமிழ் ஒலியன்களில் ( எழுத்துகளில்) இடையினம்பற்றிய ஆய்வில் இலக்கண ஆசிரியர்களின் மதிநுட்பம் ...

இடையினம் என்பது வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஒன்றா? அல்லது உயிருக்கும் மெய்யுக்கும் இடையிலான ஒன்றா? எனக்கு ஒரு ஐயம் .. ஐயம்தான் !
பேச்சொலியியல் ( Phonetics) அடிப்படையில் பேச்சொலிகளை இரண்டாக வகைப்படுத்தலாம். (1) மூச்சுக்குழாயிலிருந்து வாயறைக்கு வரும் காற்றை எவ்விதத் தடையும் செய்யாமல், ஒலி பிறப்பித்தால் .... தடையற்ற ஒலியாக இருந்தால் ... அது உயிரொலி. (2) வாயறைக்கு வந்த காற்றைத் தடுத்துநிறுத்தி, ஒலி பிறப்பித்தால் ... தடையுள்ள ஒலியாக இருந்தால்... அது மெய்யொலி.
12 உயிரொலிகளும் தமிழில் தடையற்ற பேச்சொலிகள்...

வல்லினம், மெல்லினம் , இடையினம்உட்பட 18 மெய்யொலிகளும் தடையுடன் பிறக்கிற பேச்சொலிகள் ஆகும். இவற்றில் க் -ங் , ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன் ஆகியவை இன ஒலி ( homorganic phones) இணைகள். வல்லின ''க்'' பிறக்கிற இடத்தில்தான் ... பின்னண்ணத்தைப் பின்னாக்கானது தொடும் இடத்தில்தான் ... இது பிறக்கிறது. மெல்லின ''ங்'' -உம் இதே இடத்தில்தான் பிறக்கிறது. இரண்டுமே தடையொலிகள்தான். பிறப்பிடமும் (Position of Articulation) ஒன்றுதான். ஒரே வேறுபாடு... வல்லின ''க்'' வாயின்வழியே வெளிவருகிறது. மெல்லின ''ங்'' மூக்குவழியே வருகிறது. அத்தோடு, மெல்லினங்களுக்கான காற்று தொண்டையில் குரல்வளைநாண்களை அதிரவைத்துக்கொண்டு வெளிவரும். இதுபோன்றதுதான், மேற்குறிப்பிட்ட பிற இன ஒலி இணைகளும்! ஆனால் இடையின ஒலிகள் .... இவை வாயறையில் தடையின்றியும் வெளிவரவில்லை. அதேவேளை முழுத்தடையோடும் வெளிவரவில்லை. அதிகமான உயிரொலித்தன்மையும் இருக்கிறது... கொஞ்சம் மெய்யொலித் தன்மையும் இருக்கிறது. இவற்றை APPROXIMANTS என்று அழைப்பார்கள். இவற்றை உயிரொலிகளோடு வைத்துவிடலாம். ஆனால் இலக்கண ஆசிரியர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஏன் என்பதுதான் எனது ஐயம்!

பேச்சொலிகள் நேரடியாக பொருள்தரும் உருபனாக அல்லது சொல்லாக அமைவதில்லை. மொழியசைகளாக ( Linguistic Syllables) அமைந்து, பின்னர்தான் உருபனாக அமைகிறது. அசையில் மூன்று உறுப்புகள்.... (1) அசையின் தொடக்கம் (ONSET) (2) உச்சி அல்லது சிகரம் (PEAK) (3) ஒடுக்கம் அல்லது இறுதி (CODA). இவற்றில் உச்சி அல்லது சிகரமாக எல்லா மொழிகளிலும் அமைவது ( ஆங்கிலத்தில் சிறிது வேறுபாடு உண்டு) உயிரொலிகளே. தொடக்கமாகவும் ஒடுக்கமாகவும் அமைவது மெய்யொலிகள். ஒரு அசை தொடக்கம் அல்லது ஒடுக்கம் இல்லாமல் அமையலாம். ஆனால் உச்சி அல்லது சிகரம் இல்லாமல் அமையாது. 12 உயிரொலிகளும் தனித்தனி அசைகளே! எனவே மெய்கள் இல்லாமல் அவற்றைத் தனியே உச்சரிக்கமுடிகிறது. ஆனால் மெய்களோ உயிர் என்ற உச்சியுடைய அசையில்மட்டுமே வரமுடியும். அதாவது உயிரின்றி மெய்கள் தனித்து வரமுடியாது. ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தும் ( மெய் + உயிர் .... க்+அ = க) ஒரு தனி அசை.
இடையின ஒலிகள் அதிகமான உயிரொலித்தன்மை ( SONARANCE) உடையதாக இருந்தாலும், அவை தமிழில் அசையின் உச்சியாக அமைவதில்லை. உச்சிகளாக அமைந்தால்தான் ''உயிர்'' என்ற முழுத்தகுதி கிடைக்கும். இல்லையென்றால், ''மெய்'' என்ற தகுதிதான் கிடைக்கும். எனவேதான் இலக்கண ஆசிரியர்கள் இடையின ஒலிகளைத் தமிழில் மெய்களோடு சேர்த்துக் கூறியுள்ளதாகக் கூறலாமா?
பேச்சொலியியல் அடிப்படையில், தடையில்லா ஒலிகளை VOCOID என்றும் தடையொலிகளை CONTOIDS என்றும் கூறுவார்கள். பின்னர் எந்த ஒலிகள் அசைகளின் உச்சிகளாக அமைகின்றனவோ அவற்றை VOWELS என்றும் அவ்வாறு அமையாமல் அசைகளின் தொடக்கம் அல்லது இறுதியில் அமைகின்ற ஒலிகளை CONSONANTS என்றும் கூறுவார்கள் முதல் வகைப்பாடானது பேச்சொலித்தன்மையில் அமைவதாகும். இரண்டாவது வகைப்பாடு அசைக்கூறுகளின் அடிப்படையில் அமைவதாகும். பொதுவாக VOCOIDS அசைகளின் உச்சிகளாக அமையும். CONTOIDS அசைகளின் தொடக்கம் அல்லது இறுதியாக அமையும். ஆனால் சில மொழிகளில் CONTOIDS அசையின் உச்சிகளாக அமையலாம். ஆங்கிலத்தில் bottle என்ற ஈரசைச்சொல்லில் இரண்டாவது அசையில் " l " உச்சியாக அமைகிறது. button என்பதில் இரண்டாவது அசையில் " n " உச்சியாக அமைகிறது. ஆனால் தமிழில் இவ்வாறு கிடையாது. மாறாக, VOCOIDS தன்மையுடைய இடையின ஒலிகள் அசைகளின் உச்சிகளாக அமைவதில்லை. எனவே அசைகளின் தொடக்கமாகவும் இறுதியாகவும் மட்டுமே அமைகின்றன. எனவே, அவற்றை இலக்கண ஆசிரியர்கள் உயிர்களோடு ( VOWELS) சேர்க்காமல், மெய்களோடு ( CONSONANTS) சேர்த்தார்கள் என்று கூறலாம். எனவே இடையின ஒலிகளின் ஒலிப்புத்தன்மையில் உயிரொலித்தன்மை அதிகமாகயிருந்தாலும், அசைகளின் உச்சிகளாக ஆகும் தகுதி இல்லாததால், அவை மெய்யொலிகளோடு வைக்கப்பட்டுள்ளன.
எனவே இடையின ஒலியன்களை ... எழுத்துகளை வல்லினங்களுக்கும் மெல்லினங்களுக்கும் இடைப்பட்டவை என்று இலக்கண ஆசிரியர்கள் கருதாமல், உயிர்களுக்கும் மெய்களுக்கும் இடைப்பட்டவை என்று கருதினார்கள் என்று கூறலாம் என்பது எனது கருத்து. இது முடிந்த முடிவல்ல. நாளை இந்த இடையின ஒலியன்களின் சிறப்பான ... மற்ற மெய்களுக்கு இல்லாத தனிப்பட்ட ... பண்புகளைப்பற்றிக் கூறலாமென நினைக்கிறேன். இந்த உரை மிகவும் நீண்டதற்கு மன்னிக்கவும்.


வியாழன், 23 ஜூன், 2016

தமிழ்ச்சொல் வகைப்பாட்டில் வளர்ச்சி !

தமிழ்மொழி அமைப்பின் சிறப்புகளில் சில ..... (தமிழிலக்கணத்தில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.. மற்றவர்களுக்கு அலுப்பு தட்டலாம் ... முன்னெச்சரிக்கை) 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தொன்மையும் தொடர்ச்சியுமுடைய தமிழ்மொழி தனது மொழிச்சமுதாயத்தின் தேவைகளையொட்டித் தொடர்ந்து வளர்ந்துவருகிறது. அவ்வாறு வளர்ச்சியடையும்போது, மிகத் தெளிவான வரையறைகள் அல்லது விதிகளுக்கு உட்பட்டு மாறவும் வளரவும் செய்கிறது. நமது இலக்கண ஆசிரியர்கள் இதை மிக நுட்பமாக ஆய்ந்து வகைப்படுத்தியுள்ளார்கள்!



(1) தமிழ்ச்சொற்கள் பெயர், வினை என்று வகைப்படுத்தப்படுகின்றன. பெயர்ச்சொல் தனக்கு முன் பெயரடைகள் அல்லது பெயரெச்சங்களையும் தனக்குப்பின்னால் வேற்றுமைவிகுதிகளையும் ஏற்கிறது ( ''அழகான குழந்தையை''') . அதாவது + பெயரடை , + வேற்றுமை என்பது அதன் அடிப்படைப் பண்புகள். வினைச்சொல்லானது தனக்கு முன்னர் வினையடைகள் அல்லது வினையெச்சங்களையும் பின்னர்க் கால விகுதிகளையும் பெறுகிறது ( ''அழகாக இருக்கிறது''). அதாவது + வினையடை, + காலவிகுதி அதன் அடிப்படைப் பண்புகள். ஆனால் சில சொற்கள் + வினையடை + வேற்றுமை என்று அமைகின்றன. அதாவது வினையின் ஒரு பண்பையும் ( வினையடை ஏற்பது : + வினையடை) பெயரின் ஒரு பண்பையும் ( வேற்றுமை விகுதிகளை ஏற்பது: + வேற்றுமை) . 'வேகமாகப் படித்தவனை ' - இங்கு 'படித்தவன் ' என்பது வினையடியாகப் பிறந்து, வினையடையை ஏற்கிறது. அப்படியென்றால், இதை வினை என்று சொல்லலாமா? முடியாது. ஏனென்றால், பெயருக்குரிய + வேற்றுமைப் பண்பையும் ஏற்கிறது. அப்படியென்றால் இதைப் பெயர் என்று கூறலாமா? கூறமுடியாது. பெயர், வினை இரண்டின் பண்புகளையும் கொண்டிருக்கிறது. எனவேதான் இதை நமது இலக்கண ஆசிரியர்கள் 'வினையாலணையும் பெயர்' என்று வகைப்படுத்தினார்கள். என்ன ஒரு அருமையான வகைப்பாடு! ''படித்தல்'' என்பதும் தற்காலத்திய 'படிக்கிறது', 'படித்தது' 'படிப்பது' என்று காலம் காட்டும் சொற்களும் ''தொழிற்பெயர்'' என்று அழைக்கப்படுகிறது. இவையும் வினையாலணையும்பெயர்போன்று பெயர், வினை இரண்டின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. (' வேகமாகப் படித்தலை'', '' அழகாகப் படிப்பதை'') . வினையாலணையும் பெயர் , தொழிற்பெயர் இரண்டும் பெயர், வினை இரண்டுக்கும் பொதுவான ஒன்றாக அமைந்துள்ளன. ( + பெயர் , + வினை)

(2) வரலாற்றில் வினையாலணையும் பெயர்களாக நீடித்த சில சொற்கள், தமக்கு முன்பாக வினையடையைப் பெறுவதை விட்டுவிட்டு, பெயரடையைப் பெறத் தொடங்கியவுடன், அவை முழுப்பெயர்களாக அமைந்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக ''பெற்றோர்'' ''உற்றோர்'' என்ற இரண்டு சொற்களும் '' வந்தோர்'' , '' சாப்பிட்டோர்'' போன்ற அமைப்புகளை உடையவைதான். ஆனால் அவை '' அன்பான பெற்றோரை'' என்று முன்னால் பெயரடையும் பின்னால் வேற்றுமையும் ஏற்கிறது. எனவே வினையின் பண்பைவிட்டுவிட்டு, முழுக்க முழுக்கப் பெயரின் பண்புகளை ஏற்றுக்கொள்வதால், இதைத் தற்போது நாம் வினையாலணையும் பெயராகப் பார்ப்பது இல்லை. மாறாக, பெயராகவே பார்க்கிறோம். ஆனால் ''அன்பான வந்தோர்களை'' என்று சொல்லமுடியாததால், இந்தச் சொல், இன்னும் வினையலாணையும்பெயராகவே நீடிக்கிறது. பெயராக மாற்றம் அடையவில்லை. ''ஆகியோர்'', ''என்போர்'' போன்ற சொற்களையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.
(3) ''பாடல்'' ''ஆடல்'' ''செயல்'' போன்ற இன்றைய பெயர்ச்சொற்களின் ( அன்றைய தொழிற்பெயர்கள்) வரலாறும் இவ்வாறு இருக்கலாம். '' பாடல்'' என்ற சொல்லுக்கு இணையாக ''பாட்டு'' என்று பெயர்ச்சொல் இருப்பதையும் ''ஆடல்'' என்ற ''ஆட்டம்'' என்ற பெயர்ச்சொல் இருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆராயலாம். ஆனால் சில இடங்களில் ''வேகமாகப் பாடல்'' '' வேகமாக ஆடல்'' என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன். மாற்றம் முழுமையாக நடக்கவில்லையோ?


செவ்வாய், 21 ஜூன், 2016

மார்க்ஸ் - மனித சமுதாயமும் மனித மனமும்

வினா : அறிவியலென்பது இயற்கையிலேயே இருப்பது,சமூக அறிவியலென்பது மனித இனத்தின் மனக்கூறுகள் சம்பந்தப்பட்டதல்லவா,மாரக்ஸின் காலகட்டத்தில் இருந்தது போன்றா மனிதமனங்கள் இன்று இருக்கின்றன?

விடை : இயற்கை, சமுதாயம், மனம் - மூன்றுமே அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டவைதான். எனவேதான் உளவியல்துறையும் அறிவியல்கீழ் வருகிறது. நிலவும் சமுதாயம்தான் தன்னைப்பற்றி - தன் பண்புகள்பற்றி - நமது மனத்தில் வெளிப்படுத்துகிறது. மனமும் உண்மைதான்... ஆனால் அது புற உலகத்தைப்பற்றிய ( இயற்கை, சமுதாயம் இரண்டுமே) ஒரு பதிவு. சமூக அறிவியல் மனம் சம்பந்தப்பட்டது என்று தாங்கள் கூறுவதில் ஒரு உண்மை உண்டு. இன்றைய சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுற்று இருப்பதால், ஒருவரின் வர்க்க நிலைபாடானது, தன்னைச் சுற்றியுள்ள சமுதாய நிகழ்வுகளைப் பார்க்கும் கோணத்தைப் பாதிக்கும். இது தவிர்க்க இயலாது. அதனால்தான் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒருவர் வறுமையில் வாடும்போது, அதை நான் இந்த சமுதாயத்தின் விளைபாடு என்று பார்க்கிறேன். ஆனால் வேறு வர்க்க நிலைபாடு உள்ளவர்கள் இந்த வறுமைக்குக் காரணம், அவர் முன்ஜென்மத்தில் செய்த பாவம் என்று பார்க்கலாம். அல்லது அவர் வேலைசெய்யத் தயாரில்லை என்று கூறலாம். வறுமையும் அதற்கான புறக்காரணிகளும் யதார்த்தமானவை. ஆனால் அதற்குக் கொடுக்கப்படுகிற விளக்கங்களை ஒருவரின் வர்க்க நிலைபாடு பாதிக்கும். எனவே சமூக அறிவியலானது இயற்கை அறிவியல்போன்று முழுமையாகப் புறவயமாக இருக்காது. ஆனால் இயற்கைபோன்று, சமுதாயமும் யதார்த்தமானது. வறுமையும் அதற்கான காரணிகளும் யதார்த்தமானது. புறச் சமுதாயம் ஒன்றுதான். எனவே அதைப்பற்றிய மனமும் ஒன்றுபோல்தான் இருக்கவேண்டும். ஆனால் வர்க்க சமுதாயத்தில் அவ்வாறு இருக்காது. நாம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, புறத்தே கூச்சலாக இருந்தாலும், அதைத் தவிர்த்துவிட்டு, நமது உரையாடலைமட்டுமே புரிந்துகொளகிறமாதிரி, புறச் சமுதாயத்தை ஆய்வுசெய்யும்போதும், முதலாளித்துவக் கூச்சல்களைப் புறந்தள்ளிவிட்டு, உணமைகளைக் கண்டறியவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவிடாமல், முதலாளித்துவமும் ''அறிவு'' என்ற பெயரில் தேவையற்ற குப்பைகளை நமது மூளையில் திணிக்கும். நாம்தான் போராடி, சரியான திசையில் செல்லவேண்டும்.

மார்க்சியத் தத்துவம் - நடைமுறைக்குச் சாத்தியமா?

வினா : ''மார்க்ஸ் தத்துவம் உலகில் செயல் படுத்தக் கூடிய ஒரு தத்துவமா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?''

விடை: ''புவிஈர்ப்புவிசை பற்றிய அறிவியல்விதி இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏன் பயன்படுகிறது? புவிஈர்ப்புவிசையை அறிவியலாளர்கள் உருவாக்கவில்லை. மாறாக அந்த விசை இயற்கையில் இயற்கையாக நிலவுகிறது. அது இயற்கையின் இயற்கை. அதை அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள். அவ்வளவுதான். உருவாக்கவில்லை.. அறிவியலாளர்கள் கண்டறிந்த இந்த விதி இயற்கையில் செயல்படுமா என்று இங்கு கேட்பதற்கே இடமில்லையல்லவா? .... அதுபோன்றதுதான் காரல்மார்க்சின் அரசியல்பொருளாதாரம்பற்றிய சமூகவியல் விதிகள். இவற்றை மார்க்ஸ் உருவாக்கவில்லை. மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து, தொடர்ந்து வரலாற்று ஊடே அது எவ்வாறு, மாறியும், வளர்ந்தும் வருகிறது என்பதைக் கண்டறிந்தார். அந்தச் சமுதாய வளர்ச்சி விதிகளை அவர் உருவாக்கவில்லை. அவர் முன்வைக்கிற அரசியல்பொருளாதார விதிகள் சமூகத்தின் இயற்கை... இயற்கைவிதிகள்... அவை அவரது கற்பனையில் உருவாகியதில்லை.எனவே இன்று மட்டுமல்ல, என்றுமே அவை உலகில் செயல்படுத்தக்கூடிய கோட்பாடுகள்தான். இதில் எங்கல்ல்ஸ் அவர்களின் பங்கும் உண்டு. அரசியல்பொருளாதார மாற்றத்தில் ... வளர்ச்சியில் மேலும் பல தெளிவுகள் கிடைக்கும்போது, அதை உள்ளடக்கி, இந்த மார்க்ஸின் கோட்பாடுகளும் மாறும். வளர்த்தெடுக்கப்படும். அவ்வாறுதான் லெனின் ஏகாதிபத்தியத்தின் இயக்கத்தைக் கண்டறிந்தார். தொடர்ந்து ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரும் பல நுட்பங்களைக் கண்டறிந்து கூறினார்கள். மார்கிசயக் கோட்பாடுகள் தனிமனிதர்களின் கற்பனையில் .. அவர்களது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு, உருவாக்கப்பட்டவை இல்லை. மாறாக ,சமூகத்தின் இயக்கம்பற்றிய புறவயமான அறிவியல்''.


மார்க்ஸின் '' மூலதனம் - முதலாளித்துவ வளர்ச்சிபற்றிய ஒரு அரசியல் பொருளாதாரம்'' என்ற ஆய்வுநூல், மிகவும் புறவயமாக முதலாளித்துவ வளர்ச்சிபற்றி அவர் மேற்கொண்ட ஆய்வாகும். மிகவும் குறிப்பிடத்தக்க கூறுகள் ....., வரலாற்றில் ஒரு கட்டத்தில் நிலவுடமைச் சமுதாயத்தைத் தகர்த்து, புதிதாகத் தோன்றிய முதலாளித்துவமும் சமுதாய வளர்ச்சியின் ஒரு கட்டமே என்பதும், முதலில் சமுதாயத்திற்குத் தேவையாகத் தோன்றிய அது, பின்னால் ஒருகாலகட்டத்தில் சமுதாயத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு தடையாக அமைந்தது என்பதையும், அதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயமும் சோசலிசமாக அடுத்த கட்ட வளர்ச்சியை அடையும் என்பதையும் அறிவியல்பூர்வமாக அவர் எடுத்துரைத்தார். மேலும் முதலாளித்துவம் அதன் சொந்த வளர்ச்சியின் விளைவாகவே மிகப் பெரிய நெருக்கடியை - தவிர்க்க இயலாத நெருக்கடியை- சந்திக்கும் என்பதைக் கணித அடிப்படையில் தெளிவுபடுத்தினார். மாறா மூலதனத்திற்கும் ( constant capital) மாறும் மூலதனத்திற்கும் ( variable capital - wages to workers) இடையில் உள்ள விகிதத்தின் மாற்றத்தின விளைவாக, லாப விகிதம் வீழ்ச்சியடைந்து, முதலாளித்துவம் பின்னடவைச் சந்திக்கும் என்பதை ஒரு கணித வாய்பாடுமூலம் விளக்கினார். இயற்கை அறிவியலாளர்கள் E = mc2 என்ற கணித விதியை அணுவின் உடைப்பில் ஏற்படும் சக்தியை அளக்க உருவாக்கினார்களோ, அதுபோன்றது மார்க்ஸ் முன்வைத்த கணினிவிதி. எனவே மார்க்சியம் என்பது அறிவியல் - சமுதாய அறிவியல் ! அது ஒரு கற்பனையல்ல.

திங்கள், 20 ஜூன், 2016

மொழிவழிச் செயல் ( Speech Act) : மனிதமூளையும் கணினியும்

         மொழிவழிச் செயல் ( Speech Act) : மனிதமூளையும் கணினியும்
-----------------------------------------------------------------------------------------------------------------
நாம் ஒரு தொடரை முன்வைக்கும்போது, அத்தொடரானது ஒரு பொருளை - பொருண்மையை- தருவதோடு, ஒரு செயலையும் செய்கிறது. '' நாளைக்கு வருகிறேன்'' என்று ஒருவர் சொல்லும்போது.. ...
1) அவர் தான் வருகிற செய்தியைத் தெரிவிக்கிறாரா ?, (தெரிவித்தல் செயல்)
2) அல்லது கேட்பவரிடம் தன் வருகையை உறுதிப்படுத்துகிறாரா?, (உறுதிப்படுத்தும் செயல்)
3) அல்லது இன்று தன்னை அழைப்பவரிடம் தன் இயலாமையைத் தெரிவித்து, நாளைக்கு வருகிறேன் என்று ஒரு மாற்றை முன்வைக்கிறாரா ? ( இயலாமையைத் தெரிவித்து , ஒரு மாற்றை முன்வைக்கும் செயல்)
4) அல்லது கேட்பவரிடம் தன் நாளைக்கு வந்து அவருடைய சிக்கலைத் தீர்த்துவைக்கிறேன், கவலைவேண்டாம் என்று ஆறுதல் கூறுகிறாரா.?( ஆறுதலளிக்கும் செயல்)
எனவே கேட்பவர், தான் கேட்கிற தொடருக்குப் பின்னால் இருக்கிற மொழிவழிச்செயலைப் புரிந்துகொண்டால்தான், அத்தொடரைப் புரிந்துகொண்டதாக அமையும். வெறும் சொற்றொடரின் பொருண்மையை மட்டும் தெரிந்துகொண்டால் பயனில்லை. சில இடங்களில் இந்த மொழிவழிச்செயலை வெளிப்படையாகவே உணர்த்தும் வினைச்சொற்கள் ( Performative Verb) அமையும். '' நீ வரக்கூடாது என்று என்னை அவன் மிரட்டினான்'' . இங்கு ''மிரட்டல் '' என்ற செயல் நடைபெற்றுள்ளது. ''நாளைக்குப் பணம் தருகிறேன் என்று அவன் உறுதியளித்தான்'' . இங்கு ''உறுதியளிப்பு'' என்ற செயல் நடைபெறுகிறது. '' இதைத் தொடாதே என்று கெஞ்சினான்'' . இங்கு 'கெஞ்சல்'' என்ற செயல் நடைபெறுகிறது. ''இவர் இந்த வேலைக்குப் பொருத்தமானவர்''. இங்கு ''பரிந்துரைப்பு'' என்ற செயல் நடைபெறுகிறது.
இதை இங்கு நான் கூறுவதற்குக் காரணம்.... மொழிவழிக்கருத்தாடலில் இந்த மொழிச்செயல்பற்றிய கண்ணோட்டம் மிகத் தேவையான ஒன்று. தொடரமைப்பு, முன்பின் தொடர்கள், கருத்தாடல் சூழல், உரையாடுபவர்களுக்கிடையே உள்ள புரிதல் போன்றவையெல்லாம் இங்குச் செயல்படுகின்றன. எனவே நாம் எழுதும்போதும், உரையாடும்போதும் இதில் கவனமாக இல்லையென்றால்.... தொடரின் உண்மையான பொருள் முழுமையாக வெளிப்படாது. பிரச்சினையும் ஏற்படும். இதுபற்றிய ஆய்வுகள் சமூகமொழியியலில் நடைபெற்றுள்ளன. ( AL Austin, John Searle).
இச்சூழலில் கணினிக்கு நமது இயற்கைமொழிகளைக் கற்றுக்கொடுத்து, புரியவைக்கும்போது, இச்சிக்கல்களையெல்லாம் தீர்ப்பதற்கு வழிதேடவேண்டும். ஐந்து வயது குழந்தைக்கு உள்ள இதுதொடர்பான திறமையைக்கூட Super computer -க்குக் கொடுப்பது மிகச் சிக்கலான பணி. எனவே கணினியானது நம்மைப்போல, நமது மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறும்போது, கவனமாக இருக்கவேண்டும். மனிதமூளையின் திறனே வேறு. அதனுடைய மொழித்திறனே வேறு. கணினியின் திறமை வேறு.
தொல்காப்பியத்தில் இதுபற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்பது ஒரு சிறப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சொற்றொடரின் பொருண்மையை மூன்று முக்கியக் கூறுகள் தீர்மானிக்கின்றன. (1) சொற்றொடரில் உள்ள சொற்கள், சொல்லமைப்பு இலக்கணம், சந்தியிலக்கணம், தொடரிலக்கணம் ஆகியவை எல்லாம் இணைந்து அளிக்கும் பொருண்மை ( Linguistic features) (2) குறிப்பிட்ட தொடரோடு இணைந்துள்ள அசையழுத்தம், சொல்லழுத்தம், தொடரின் ஏற்ற இறக்கங்கள் ( Paralinguistic features / Prosodic features) அளிக்கும் பொருண்மை (3) சொற்றொடர் பயன்படுத்தப்படுகிற மொழிசாராக் கூறுகள் ( Extralinguistic features) . இவற்றோடு நான் மேலே சொல்லிய மொழிவழிச்செயல் - அதாவது குறிப்பிட்ட தொடர்வழியாகப் பேசுபவர் மேற்கொள்கிற செயல்.( Speech Act) . இவை எல்லாவற்றையும் இணைத்து ஒரு சொற்றொடரை மனிதமூளை புரிந்துகொள்கிறது. இதற்கு அடிப்படை, மனிதமூளை பெற்றுள்ள பின்புல உலகறிவு.( Pragmatic knowledge) இந்தத் திறனைக் கணினிக்கு அளிக்கும்போதுதான் கணினியானது இயற்கைமொழிக் கருத்தாடலை மேற்கொள்ளமுடியும். Natural Language Processing ( Generation and Understanding) செயலைக் கணினியால் மேற்கொள்ளமுடியும். எனவே கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் என்பது ஒரு கடினமான அறிவியல், தொழில்நுட்பத்துறையாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
நான் மேலே மிக நீளமான விளக்கங்களைக் கொடுத்தற்குக் காரணம், மொழியியல் ஆய்வு என்பது வெறும் எழுத்து, சொல், தொடர் இலக்கணங்களோடு நின்றுவிடுவதில்லை என்பதை வலியுறுத்துவதற்கேயாகும். மொழியமைப்பியல், உளவியல், சமூவியல் போன்ற பல்துறை சார்ந்த ஒரு இயலே மொழியியலாகும். இவற்றில் ஏதோ ஒன்றுமட்டுமே மொழியாய்வாக அமைந்துவிடாது. மொழியிலக்கணம்மட்டுமே மொழியாய்வாக அமைந்துவிடாது. அது ஒரு முக்கியமான பகுதி என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மட்டுமே போதாது. மனம்/ மூளை , சமுதாயம், மொழியியலக்கணம் மூன்றையும் இணைத்த ஒன்றுதான் மொழியியல்.

மக்கள் ஜனநாயக மொழிக்கொள்கை ..

மக்கள் ஜனநாயக மொழிக்கொள்கை .. 
மொழிவெறி அல்ல... மொழி உணர்வு!
-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு மொழியியல் மாணவன் என்ற முறையிலும் மக்கள் ஜனநாயகக்கொள்கையை விரும்புகிறவன் என்ற வகையிலும் நான் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை. எல்லா மொழிகளும் மனிதசமுதாயத்தின் - மனிதமூளையின் - படைப்புத்தான். அவை மக்களால்தான் தான் பேசப்படுகின்றன. ஒரு மொழியைத் தரக்குறைவாகக் கருதுவது என்பது அந்த மொழி பேசும் மக்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதாகும் என்பது எனது கொள்கை. எனவே ஆங்கிலமோ, இந்தியோ, சமசுகிருதமோ - எந்தமொழியாக இருந்தாலும் அதை நான் மதிக்கிறேன். ஆனால்.... எனது தாய்மொழியின்மீது வேறொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தனது தாய்மொழியின்மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தாய்மொழியில் ஒருவர் தனது அத்தனை மொழிச்செயற்பாட்டுத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வசதியும் வேண்டும். இதுவே மக்கள் ஜனநாயக அடிப்படையிலான ஒரு மொழிக்கொள்கையாக இருக்கமுடியும்.

தமிழகத்தில் அடிப்படையற்ற ஆங்கிலமோகம் !

தமிழகத்தில் அடிப்படையற்ற ஆங்கிலமோகம் !

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலமொழியின் ஆதிக்கம் என்பது ஆதிக்க வர்க்கங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இந்திமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிற அல்லது எதிர்த்துப்போராடுகிற தமிழர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.
ஒரு பிரிவினர் இந்திமொழிக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் – அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நிர்வாகமொழி உரிமை உட்பட- தமிழுக்கு அளிக்கப்படவேண்டும்; தமிழ்மொழியே தமிழகத்தில் உயர்கல்விஉட்பட அனைத்துக் கல்விநிலையிலும் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும், உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து நீதித்துறைகளிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்கவேண்டும் , ஆட்சி நிர்வாகமொழியாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்ற பல மொழிஜனநாயக உரிமைகளை வலியுறுத்துகின்றனர்.
மற்றொரு பிரிவினர், தமிழுக்குப்பதிலாக ஆங்கிலமே மேற்கூறிய துறைகளிலெல்லாம் நீடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உலக அளவில் ‘மொழி ஏகாதிபத்தியமாக’ ஆங்கிலமே தற்போது நீடித்துவருகிறது. அந்த ‘மொழி ஏகாதிபத்தியத்தின்’ திட்டமிட்ட நடவடிக்கைளின் ஒரு பகுதியே தமிழகத்திலும் ஆங்கிலத்தை உயர்த்திப்பிடிக்கும் குழுவை உருவாக்குவதாகும். அதில் தற்போது ‘ஆங்கில மொழி ஏகாதிபத்தியம் ‘ வெற்றிபெற்றதாகவே அமைந்துள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
தமிழகத்தில் ஒருபுறம் உலக ஏகாதிபத்தியத்தின் ஆங்கில மொழி ஆதிக்கம்; மறுபுறம் அவர்களின் இந்தியத் தரகர்களின் இந்தித்திணிப்பும் ஆதிக்கமும்! இதற்கிடையில் தமிழ் இனத்தின் தமிழ்மொழி தவித்துக்கொண்டிருக்கிறது.
ஆங்கிலமோகம் தற்போது தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவு உள்ளவர்கள் என்ற ஒரு மாயை செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. அயல்நாடுகளில் – குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து சென்று வேலை பார்ப்பதையே தங்களது வாழ்க்கையின் ‘ இலட்சியமாகக் கொண்ட’ மத்தியதர வர்க்கக் குடும்பத்தினர் , ஆங்கில அறிவு தங்களது குழந்தைகளுக்கு இல்லையென்றால் , அவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையே இல்லை என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தவறான , பொய்யான கருத்தியல் திட்டமிட்டு இங்குப் பரப்பப்பட்டுள்ளது. இதன் விளைவு, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலமொழி, ஆங்கிலப் பண்பாடு ஆகியவற்றைநோக்கித் திருப்பிக்கொண்டிருக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
Krishna Reddy Anban: It is not good to use English in all fields in Tamil nadu. There is nothing wrong in giving importance in learning English as it has more accumulated knowledge in many modern fields. Hindi too is useful for north Indian mobility. Learning more languages is always good 
You untie importance of English in computer science better than me and I wonder why you're discouraging the learning of it
N.Deiva Sundaram : Dear Sir, I suppose you have misunderstood me. I am not against learning of English. Just I am against the "illusion about English". Also we should not sacrifice the status of our mother tongue for the sake of any alien language including English. As you said, I am always for the learning of many languages , especially by the academic people. But it should be voluntary: it should not be imposed.
ஒரு மொழியியல் மாணவன் என்ற முறையிலும் மக்கள் ஜனநாயகக்கொள்கையை விரும்புகிறவன் என்ற வகையிலும் நான் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை. எல்லா மொழிகளும் மனிதசமுதாயத்தின் - மனிதமூளையின் - படைப்புத்தான். அவை மக்களால்தான் தான் பேசப்படுகின்றன. ஒரு மொழியைத் தரக்குறைவாகக் கருதுவது என்பது அந்த மொழி பேசும் மக்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதாகும் என்பது எனது கொள்கை. எனவே ஆங்கிலமோ, இந்தியோ, சமசுகிருதமோ - எந்தமொழியாக இருந்தாலும் அதை நான் மதிக்கிறேன். ஆனால்.... எனது தாய்மொழியின்மீது வேறொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தனது தாய்மொழியின்மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தாய்மொழியில் ஒருவர் தனது அத்தனை மொழிச்செயற்பாட்டுத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வசதியும் வேண்டும். இதுவே மக்கள் ஜனநாயக அடிப்படையிலான ஒரு மொழிக்கொள்கையாக இருக்கமுடியும்.

மொழியியலாளர்களும் பேச்சுத்தமிழும்

                           மொழியியலாளர்களும் பேச்சுத்தமிழும்            
                            
அண்மையில் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் ... '' நீங்கள் மொழியியலாளர்கள் பேச்சுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். பேச்சுத்தமிழைப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வற்புறுத்துகிறீர்கள். இது சரியா?'' என்று!
1) பேச்சுத்தமிழும் தமிழின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று. காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும்வரை அன்றாட உரையாடல்களுக்குப் பயன்படுத்துவது பேச்சுத்தமிழே. இந்தத் தமிழும் தெளிவான இலக்கணத்தைக் கொண்டதே! எனவே அதைத் தரக்குறைவாக நினைப்பது சரியல்ல. எனவே தமிழ்மொழி ஆய்வு என்பது பேச்சுத்தமிழையும் உள்ளடக்கியே இருக்கவேண்டும். இதைத்தான் தமிழ் மொழியியலாளர்கள் செய்கிறார்கள்.
2) தமிழகத்தில் பேச்சுத்தமிழைக் குழந்தைகள் பிறந்து வளரும்போதே இயற்கையாகப் பெற்றுக்கொள்கிறார்கள். இது உயிரியல் அடிப்படையில் நடைபெறுகிற ஒன்று. எனவே தமிழகத்தில் பேச்சுத்தமிழைப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கத் தேவையேயில்லை. அவ்வாறு கற்றுக்கொடுக்கவேண்டுமென்று எந்த மொழியியலாளரும் கூறவில்லை. செவித்திறன் குறையுடைய அல்லது மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு - உயிரியல் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு - பேச்சுத்தமிழை அவர்களால் இயற்கையாகப் பெறமுடியாததால் கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மற்றபடி பள்ளிகளில் கற்றுக்கொடுக்கவேண்டியது நிச்சயமாக எழுத்துத்தமிழே ! இதில் ஐயமே வேண்டாம்!
3) இலங்கையிலும் பேச்சுத்தமிழை இயற்கையாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே அவர்களுக்கும் பள்ளிகளில் எழுத்துத்தமிழையே கற்றுக்கொள்கிறார்கள்.
4) மலேசியாவில்கூட பேச்சுத்தமிழைப் பள்ளிகளில் பொதுவாகக் கற்றுக்கொடுக்கவேண்டிய தேவையில்லை. எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அது சரியே!
5) சிங்கப்பூரில் பள்ளிகளில் எழுத்துத்தமிழே கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் வீடுகளில் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் ஆங்கிலம் அல்லது சீனத்தையே பயன்படுத்துகிறார்கள். பேச்சுத்தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்று இன, மொழி உணர்வுள்ள பெற்றோர்கள் விரும்புகிறார்கள். எனவே பள்ளிகளில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுத்தபோதிலும், அன்றாட உரையாடல்களுக்குப் பேச்சுத்தமிழைப் பயன்படுத்தப் பயிற்சி அளிக்க அங்குள்ள தாய்மொழிக்கல்வித்திட்டத்தை அமுல்படுத்தும் கல்வித்துறையினர் முயல்கின்றனர். எழுத்துத்தமிழைப் புறக்கணிக்கவில்லை.
6) அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாட்களில் அன்றாட உரையாடல்களுக்குப் பேச்சுத்தமிழைப் பயன்படுத்தும் சூழலே இல்லாததால், தமிழ்ப்பள்ளிகளில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இது சரியே!
7) தமிழகத்திற்கு வந்து கள ஆய்வு செய்ய விரும்பும் அயலக ஆய்வாளர்கள், இங்குள்ள மக்களிடையே இயற்கையாக உரையாட விரும்பி, பேச்சுத்தமிழையும் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். அதேவேளையில் நூல்களையும் இதழ்களையும் படிக்க எழுத்துத்தமிழையும் கற்றுக்கொள்கிறார்கள் .
மேற்குறிப்பிட்ட கருத்துகளின் அடிப்படையில், பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்கவேண்டிய சமூகச்சூழல் உடைய நாடுகளில் மட்டுமே பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்கத் தமிழ் மொழியியலாளர்கள் பாடம் தயாரித்து அளிக்கிறார்கள். இப்பாடங்கள் தமிழகத்துக் குழந்தைகளுக்கு இல்லை.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ்க்கல்விபற்றிய கருத்தரங்கில் சிங்கப்பூர், மலேசியா ஆசிரியர்கள் தங்களுடைய நாடுகளில் பேச்சுத்தமிழை எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பதுபற்றி பல கட்டுரைகளை வழங்கியுள்ளார்கள்.
மேலும் தமிழகத்தில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்கவேண்டிய ஒரு சூழலில் பேச்சுத்தமிழின் பாதிப்பு அதில் இல்லாமல் இருப்பதற்கும் உதவிகளை மொழியியலாளர்கள் செய்துவருகிறார்கள். எழுத்துத்தமிழையே அதற்கான சூழல்களில் பயன்படுத்தவேண்டும் என்பதில் ஐயமே தேவையேயில்லை.
இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல், மொழியியலாளர்கள் ... பேச்சுத்தமிழை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் .... எழுத்துத்தமிழைப் புறக்கணிக்கிறார்கள் ... சிதைக்க விரும்புகிறார்கள் என்று சிலர் நினைப்பது தவறானது என்பதில் ஐயமேயில்லை.
------------------------------------------------------------------
நாங்கள் உருவாக்கியுள்ள மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர், மென்தமிழ் - சந்தித்துணைவன், மென்தமிழ் - ஆய்வுத்துணைவன் ஆகியவையெல்லாம் எழுத்துத்தமிழுக்கானதே! ஏனென்றால் கணினியில் கோப்புகளை, ஆவணங்களை, எழுத்துத்தமிழில்தான் தயாரிக்கவேண்டும். பேச்சுத்தமிழ் கூடாது. எதிர்காலத்தில் பேச்சுத்தமிழை மட்டுமே பெற்றுக்கொண்ட - எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்ளாத - தமிழர்களுக்குப் பேச்சுத்தமிழில் அவர்கள் பேசுவதைத் தானாகவே எழுத்துத்தமிழில் மாற்றுவதற்கான மென்பொருளைத் தயாரிக்கும் திட்டமும் உண்டு எங்களுக்கு! அதற்கு நீண்ட காலம் ஆராய்ச்சியும் நிதியும் தேவை.
------------------------------------------------------------------------
தமிழ்க்கணினிமொழியியலில் எனது விருப்பம் ... எழுத்துத்தமிழைப் பள்ளியில் சென்று கற்றுக்கொள்ளமுடியாதவர்கள்கூட , அவர்கள் பேச்சுத்தமிழில் பேசினால், அதை எழுத்துத்தமிழ் உரையாக மாற்றி, அந்த உரையைத் எழுத்துத்தமிழ் பனுவலாக மாற்றவேண்டும். மக்களுக்குத் தேவையான தகவல்கள் எல்லாம் கணினியில் எழுத்துத்தமிழில் இருந்தாலும், மேற்கூறிய வகையில் மென்பொருள் உதவிகொண்டு, மக்களுக்கு அவர்களுக்குப் புரிகிற தமிழில் கிடைக்கவேண்டும். பேச்சுத்தமிழ் உரை ( Spoken utterance ) ----> எழுத்துத்தமிழ் உரை ( Written Speech Utterance) -----> எழுத்துத்தமிழ் பனுவல் ( Written Text) -----> ----------> தகவல் தளம் ( Information Database) ------> எழுத்துத்தமிழ் பனுவல் -( Written Text) ----> எழுத்துத்தமிழ் உரை ( Written Tamil Utterance) ------> பேச்சுத்தமிழ் உரை ( Spoken Tamil utterance) . ... எதிர்காலத்தில் இந்த வளர்ச்சி ஏற்பட்டால், சாதாராண மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும். இது சாத்தியமே! ஆனால மிகக் கடுமையாகப் பணிமேற்கொள்ளவேண்டும். தமிழ்ப் பேச்சை ( பேச்சுத்தமிழ்) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வளர்ச்சிநிலையையும் பெறமுடியும் ... தேவைப்பட்டால்!
-------------------------------------------------------------------

திங்கள், 13 ஜூன், 2016

தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம்

தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம்

மொழிமனித இனத்திற்கே உரிய ஒரு சிறப்பான ஊடகம். உயிரியல் அடிப்படையில் மனித மூளை உருவாக்கித் தந்துள்ள  தனித்துவம்மிக்க ஒன்று. ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் தங்களுக்குள் கருத்துப்புலப்படுத்தச் செயல்களுக்காகப் பயன்படுத்துகிற பலவித ஊடகங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல்மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள புற உலகத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கும் அதைத் தங்களது மூளையில் சேமித்துவைக்கவும்  உதவுகிறது.

மனித மூளையின் அல்லது மனத்தின் ஒரு பகுதியாகவே மொழி விளங்குகிறது. ஒருவரின் மொழியறிவானது அவரது பேசுதல், கேட்டல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு வெளிப்பாட்டுத் திறன்களால் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்த நான்கு வெளிப்பாட்டுத் திறன்களுக்கும் மனிதரின் வாய், காது, கண், கை ஆகிய நான்கு உடல் உறுப்புகளும் பயன்படுகின்றன. இவ்வாறு மூளை உட்பட ஐந்து உடல் உறுப்புகளை அடிப்படையாகக்கொண்ட மனித மொழிகள் ஒவ்வொன்றும் தன்னைத் தாய்மொழியாகக்கொண்ட சமூகத்தின் தேவைகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது வளர்த்துக்கொள்கிறது. தனது சமூகத்தின் பொருள் உற்பத்தியில் பிற உற்பத்திசக்திகளோடு தானும் ஒரு முக்கிய சக்தியாகப் பயன்படுகிறது. சமூக வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளில் தன்னையும் வளர்த்துக்கொள்கிறது.

எழுத்து உருவாக்கம்
வரலாற்றில் மனிதமொழிகள் அனைத்தும் பேச்சுமொழிகளாகவே தொடக்கத்தில் இருந்திருக்கமுடியும். பின்னர் பல்வேறு சமுதாயங்கள் தங்களின் வளர்ச்சிப் படிநிலையில் தங்களது மொழிகளுக்கு வரி வடிவங்களைஎழுத்துகளைஉருவாக்கிக்கொண்டன. அதன் பயனாக, எழுத்துகளை உருவாக்கிக்கொண்ட சமுதாயங்கள் தங்களது அனுபவங்களைஅறிவுகளை- காலம் கடந்து, இடம்கடந்து சேமித்துவைக்கும் திறனைப் பெற்றன. பாறைகளிலும் பானைகளிலும் கற்களிலும் ஓலைகளிலும் எழுத்துகள்வழியே அச்சமுதாயங்களின் அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், இலக்கணம் ஆகியவை பொறிக்கப்பட்டன. எழுத்துகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அவற்றை எழுதப் பயன்படும் ஊடகங்களிலும் கருவிகளிலும் வளர்ச்சி ஏற்பட்டன. இன்று எழுத்துகள் அச்சு வடிவில் ஏறியதோடு மட்டுமல்லாமல், மின்னணுக் கருவியான கணினியிலும் எழுத்துரு என்றவொரு வடிவத்தில் ஏறிவிட்டன. ஒரு மொழியின் எழுத்துகளின் வடிவங்களும் தாங்கள் பொறிக்கப்படுகிற அல்லது எழுதப்படுகிற ஊடகங்களைப் பொறுத்துத் தொடர்ந்து மாறிவந்துள்ளன.

ஒரு மொழியின் எழுத்து வடிவங்களும் அவை பொறிக்கப்படுகிற அல்லது எழுதப்படுகிற ஊடகங்களும் மாறியும் வளர்ந்தும் வருவதற்கு அடிப்படை அம்மொழி பேசும் சமுதாயத்தின் வளர்ச்சியே ஆகும். அச்சமுதாயத்தின் திட்டமிட்ட செயல்பாடுகளின் விளைபொருளேயாகும்.

மொழி வளர்ச்சி
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அம்மொழியின் எழுத்துவடிவங்களிலும் அவை எழுதப்படுகிற ஊடகங்களிலும்  ஏற்படுகிற வளர்ச்சி மட்டுமல்ல; அம்மொழியின் சொற்கள், தொடர்கள் போன்றவற்றில் ஏற்படுகிற மாற்றங்களும் வளர்ச்சியும் அடங்கும். குறிப்பிட்ட மொழி பேசும் சமுதாயத்தின் கருத்துப்புலப்படுத்தத் தேவைகளுக்கேற்ப அம்மொழியின் அமைப்பும்சொற்கள், தொடர்கள் ஆகியவையும்மாறுகின்றன அல்லது வளர்ச்சியடைகின்றன. சமுதாயப்  பொருள் உற்பத்தித்தேவை, கலை, இலக்கியத்தேவை , தத்துவ வளர்ச்சித்தேவை என்று பல வகைத் தேவைகளையொட்டி ஒரு சமுதாயத்தின் மொழி மாற்றமடைகிறதுவளர்ச்சியடைகிறது. புதியபுதிய சொற்களும் புதியபுதிய தொடரமைப்புகளும் தோன்றி நிலவுகின்றன.

தமிழ்மொழிவளர்ச்சி
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி நிலவுகிற தமிழ்மொழியின் சிறப்பு, அதன் தொன்மை மட்டுமல்ல; தனது வரலாற்றில் எந்த ஒரு காலகட்டத்திலும் தொடர்ச்சி அறுந்துபோகாமல் இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருவது அதன் தனிச்சிறப்பாகும். தொன்மை, தொடர்ச்சியோடு தமிழ்மொழியானது தொடர்ந்து தமிழ்ச்சமுதாயத்தின் தேவைகளையொட்டி மாறியும் வளர்ந்தும் வருகின்றது என்பது அதனுடைய மற்றொரு சிறப்பாகும். தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி என்ற மூன்று பண்புகளுமே தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளாகும்.

இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய தமிழ்மொழி தனது வரலாற்றில் தமிழ்ச்சமுதாயத்தின் தேவைகளைவளர்ச்சிகளைஒட்டித் தானும் வளர்ந்து வந்துள்ளது என்பது உண்மை. இன்றைய அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல்தொடர்புத்துறையின் வளர்ச்சி ஆகியவை இன்றைய தமிழை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சொல்ல ஒரு அவசியத்தை உருவாக்கியுள்ளது.

மொழிவளர்ச்சித்திட்டம்
பத்தொன்பது, இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் பல நாடுகளில் மொழிகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன, வளப்படுத்தப்படுகின்றன. மொழி வளம் அல்லது ஆதாரம் ஒரு நாட்டின் பிற செல்வ ஆதாரங்களுக்கு இணையான ஒரு ஆதாரமாக விளங்குகிறது. மொழியியல் துறையின் வளர்ச்சியானது மொழிகளைத் திட்டமிட்டு எவ்வாறு வளப்படுத்துவது என்பதுபற்றிப் பல சிறப்பான கருத்துகளை முன்வைத்துள்ளது. அதனடிப்படையில் புதிதாக விடுதலையடைந்த நாடுகளில் பாதிக்கப்பட்டிருந்த மொழிகள் எல்லாம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுவருகின்றன.  

பிறமொழி ஆதிக்கம்
மனித சமுதாய வரலாற்றில் புராதானப் பொதுவுடமைச் சமுதாய அமைப்பைத் தவிர பின்னால் தோன்றிய வர்க்கப்பிரிவினைகளின் அடிப்படையிலான சமுதாயங்களின் வளர்ச்சிகளையொட்டி, ஒரு மொழியின் ஆதிக்கம் பிறமொழிகளின்மீது திணிக்கப்படுகிற ஒரு மொழிச்சூழலும் தோன்றியது. ஆதிக்க வர்க்கங்கள் தாங்கள் சார்ந்த இனங்களின் மதங்கள் , பண்பாடுகள், மொழிகள் ஆகியவற்றைத் தங்களுக்கு அடிமைப்பட்ட வர்க்கங்களின் இனங்களின்மீது திணித்தன. இன ஒடுக்குமுறைகளின் ஒரு பகுதியாக மொழி ஒடுக்குமுறையும், மொழி ஆதிக்கமும் தோன்றி நிலவின. ஆதிக்க இனங்கள் தங்கள் மொழிகளை உயர்த்திப்பிடிக்கவும் வளர்க்கவும் முயற்சிக்கின்ற அதேவேளையில் அடிமைப்பட்ட இனங்களின் மொழிகளை அடக்கவும் அழிக்கவும் முயன்றன. சில நூற்றாண்டுகளுக்குமுன்னர் தமிழ்மீதும் பிராகிருதம்,பாலி , சமசுகிருதம் ஆகிய மொழிகள் ஆதிக்கம் செலுத்த முயன்றன. அதை எதிர்த்து, தமிழகத்தில் சைவக்குரவர்கள்போர்க்குரல் எழுப்பினர். இதற்குச் சமய அடிப்படை காரணமாகயிருந்தபோதும், தமிழின் உரிமையைத் தக்கவைக்க இது உதவியது

ஆங்கிலேயர் வருகைக்குப்பின்னர் ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுஇன்றுவரை அந்த ஆதிக்கம் நீடித்துவருகிறது. பிறமொழிகளின் ஆதிக்கம் மட்டுமல்லாமல், தமிழ்மொழிக்குள்ளேயே சமசுகிருதம், பாரசீகம் மொழிகளின் ஊடுருவலும் அதிகரித்தன. அதையெதிர்த்தும் மறைமலையடிகள், தேவநேயப்பாவணர் போன்றோர் தனித்தமிழ் இயக்கத்தை முன்வைத்தனர். இவற்றோடு இன்று இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழி / நிர்வாகமொழி (Official Language) என்ற அரசியல்சட்டத்தில்பிரிவு 343(1) - அளிக்கப்பட்டுள்ள உரிமையைப் பெற்றுள்ள இந்தியும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. தமிழகத்தில் இதையெதிர்த்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. அதையொட்டி, ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் உரிமைதமிழைப் பயன்படுத்தும் உரிமையல்ல - தற்காலிமாகத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலமொழியின் ஆதிக்கம் என்பது ஆதிக்க வர்க்கங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இந்திமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிற அல்லது எதிர்த்துப்போராடுகிற தமிழர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒரு பிரிவினர் இந்திமொழிக்கு உள்ள உரிமைகள் அனைத்தும்அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நிர்வாகமொழி உரிமை உட்பட- தமிழுக்கு அளிக்கப்படவேண்டும்; தமிழ்மொழியே தமிழகத்தில் உயர்கல்விஉட்பட அனைத்துக் கல்விநிலையிலும் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும், உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து நீதித்துறைகளிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்கவேண்டும் , ஆட்சி நிர்வாகமொழியாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்ற பல மொழிஜனநாயக உரிமைகளை வலியுறுத்துகின்றனர். மற்றொரு பிரிவினர், தமிழுக்குப்பதிலாக ஆங்கிலமே மேற்கூறிய துறைகளிலெல்லாம் நீடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உலக அளவில்மொழி ஏகாதிபத்தியமாகஆங்கிலமே தற்போது நீடித்துவருகிறது. அந்தமொழி ஏகாதிபத்தியத்தின்திட்டமிட்ட நடவடிக்கைளின் ஒரு பகுதியே தமிழகத்திலும் ஆங்கிலத்தை உயர்த்திப்பிடிக்கும் குழுவை உருவாக்குவதாகும். அதில் தற்போதுஆங்கில மொழி ஏகாதிபத்தியம்வெற்றிபெற்றதாகவே அமைந்துள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

தமிழகத்தில் ஒருபுறம் உலக ஏகாதிபத்தியத்தின் ஆங்கில மொழி ஆதிக்கம்மறுபுறம் அவர்களின் இந்தியத் தரகர்களின் இந்தித்திணிப்பும் ஆதிக்கமும்! இதற்கிடையில் தமிழ் இனத்தின் தமிழ்மொழி தவித்துக்கொண்டிருக்கிறது. ஆங்கிலமோகம் தற்போது தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவு உள்ளவர்கள் என்ற ஒரு மாயை செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறதுஅயல்நாடுகளில்குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து சென்று வேலை பார்ப்பதையே தங்களது வாழ்க்கையின்இலட்சியமாகக் கொண்டமத்தியதர வர்க்கக் குடும்பத்தினர் , ஆங்கில அறிவு தங்களது குழந்தைகளுக்கு இல்லையென்றால் , அவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையே இல்லை என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தவறான , பொய்யான கருத்தியல் திட்டமிட்டு இங்குப் பரப்பப்பட்டுள்ளது. இதன் விளைவு, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலமொழி, ஆங்கிலப் பண்பாடு ஆகியவற்றைநோக்கித் திருப்பிக்கொண்டிருக்கின்றனர்.
     
மொழித்தகுதிக்கான திட்டம் ( Status Planning)
தற்போது தமிழகத்தில் தமிழ்மொழிக்கு அனைத்துவகை உரிமைகளையும் பெறுவதற்காகவும், ஆங்கிலம் , இந்தி உட்பட பிறமொழிகளின் ஆதிக்கமும் ஊடுருவலும் முழுமையாக அகற்றப்படுவதற்காகவும் தொடர்ந்து தமிழ் இயக்கங்கள் போராடவேண்டியுள்ளது. தமிழுக்குச் சட்டரீதியான அனைத்து மொழி ஜனநாயக உரிமைகளையும் வழங்கப்படவேண்டும் என்ற இந்த வேண்டுகோளானது மொழி வளர்ச்சித்திட்டத்தில் முதல் படியாகும். இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழும் இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவேண்டும். இதுவே இந்தியமொழிகளில் மிகத்தொன்மையான, அதேவேளையில் வரலாற்றில் தொடர்ச்சி அறுந்துவிடாமல் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மொழியாக நீடித்துவருகிற தமிழ்மொழி பெறவேண்டிய முதல் தகுதி ஆகும். இத்தகுதிக்கான இயக்கத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்துப் பிரிவு மக்களும், தமிழ்நாடு அரசும் உட்பட இணைந்து போராடவேண்டும்.  

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசின் நிர்வாகமொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடைமுறையில் ஆங்கிலமே நீடிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோன்று கல்வித்துறையிலும் அரசுப்பள்ளிகளிலும்கூட ஆங்கிலப் பயிற்றுமொழிக்கொள்கையைப் பின்பற்ற அண்மையில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது. உயர்கல்வியில் பெயரளவிற்குச் சில பாடங்களுக்குத் தமிழ் பயிற்றுமொழி என்று  அறிவிக்கப்பட்டாலும்  அதற்குரிய ஊக்கம் தமிழில் படித்தவர்களுக்கு அரசு அளிக்காததால், உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழி என்பது உதட்டளவு வெற்று முழக்கமாகவே இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்கள் போராடி வருகிறபோதிலும், அதற்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால் இன்னும் அளிக்கப்படவில்லை.

இவ்வாறு தமிழ்நாடு அரசு நிர்வாகமொழி, பயிற்றுமொழி, நீதிமன்றமொழி, வணிக மொழி, வழிபாட்டுமொழி என்று அனைத்துத் தளங்களிலும் தமிழுக்குத் தமிழகத்தில் முழு மதிப்பு அல்லது தகுதி அளிக்கப்பட அனைவரும் தமிழகத்தில் இணைந்து போராடவேண்டும். .  
   
மேற்கூறியவாறு தமிழுக்கு முழு மதிப்பைஅரசியல் சட்ட அங்கீகாரம் உட்படபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மொழித்தகுதித் திட்டத்திற்கான  (Status planning) நடவடிக்கைகளாகும். இந்த நடவடிக்கைகளின் வெற்றியைப் பொறுத்தே தமிழின் எதிர்கால வளர்ச்சி அமையும். இதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தின் அரசியல்கட்சிகள், அரசாங்கம் ஆகியவை ஈடுபடுவதோடு மக்களும் ஈடுபடவேண்டும். இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்த தமிழக மக்களின், குறிப்பாக மாணவர்கள் போராட்டங்களே  இந்திமொழியை நாடுமுழுவதும் ஒரே ஆட்சிமொழியாக நீடிக்கவழிசெய்யும் இந்திய நடுவண் அரசின் நடவடிக்கையைத் தற்காலிகமாக தடுத்துநிறுத்தி வைத்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  

இந்திமொழியை இந்திய அரசியல்சட்டமானது இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக அங்கீகரித்ததன்  பயனாக, இந்தியைத் திட்டமிட்டு வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும் இந்திய அரசியல்சட்டத்திலேயே (பிரிவு 351) அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கென்று ஒரு பாராளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திவளர்ச்சியைத் திட்டமிட்டு வளர்ப்பதற்கான செயல்முறைகளை அது வரையறுத்துக் கொடுக்கும். இதுவரை அக்குழு எட்டு விவரமான அறிக்கைகளைக் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளது. அதனடிப்படையில் இந்திமொழியைத் திட்டமிட்டு வளர்த்துஇந்திய நடுவண் அரசின் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் ஆட்சிமொழித்துறை என்ற ஒரு துறை தனியாக அமைக்கப்பட்டு, இந்திமொழியின் வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதேவேளையில் வழக்கிழந்த சமசுகிருத மொழிக்கும் இந்திய அரசு தனது முழுமையான ஆதரவை அளித்துவருகிறது. இதற்குத் தெளிவான அரசியல், மதப் பின்னணி உண்டு. தமிழகத்திலும்மத நம்பிகையின்அடிப்படையில் வழிபாட்டுமொழியாகவும், திருமணம், இறுதிச்சடங்கு, புகுமனை புகுதல் போன்ற பல்வேறு விழாக்கள், சடங்குகளில் உச்சரிக்கப்படுகிற சடங்கு மொழியாகவும் சமசுகிருதமே ஆதிக்கம் செலுத்திவருகிறது.   
ஆனால் ஆட்சிமொழிகளாக அறிவிக்கப்படாத ஏனைய 22 மொழிகளுக்கும் ( தமிழ் உட்பட) அரசியல் சட்டத்தின் கீழ் எந்தவொரு வளர்ச்சிக்கான நடவடிக்கையும் கிடையாது. இந்த 22 மொழிகளின் சிறப்புகளையும் இந்திமொழிக்குக் கொண்டு சேர்க்கவேண்டுமென்று கூறி, அரசியல்சட்டத்தின் 8-ஆவது பின்னிணைப்பில் இந்த மொழிகள் அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 22  மொழிகளைச் சேர்ந்த அறிஞர்களின் கருத்துகளை இந்திமொழிக்கான குழு உள்வாங்கி, இந்தியை மேற்கொண்டு வளர்க்கவேண்டுமென்று அரசியல் சட்டமே கூறுகிறது. இதைவிட இந்திமொழி மொழி ஏகாதிபத்தியம் இந்தியாவில் நீடிக்கிறது என்பதற்கு வேறு  எடுத்துக்காட்டு தேவையில்லை

மொழி வளர்ச்சி அல்லது மேம்பாட்டுத் திட்டம் ( Corpus Planning):
ஒரு மொழி தனக்குரிய மதிப்பை அல்லது தகுதியைப் பெற்றபிறகு, பெற்ற தகுதிகளுக்கேற்ப அந்த மொழியைத் திட்டமிட்டு வளர்ப்பது அல்லது மேம்படுத்துவதே மொழி வளர்ச்சி அல்லது மேம்பாட்டுத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, நீதிமன்ற மொழியாகத் தமிழ் ஏற்கப்பட்டவுடன், நீதிமன்றத்தின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான சட்டச் சொற்களஞ்சியம் உட்பட பல்வேறு மொழி ஆதாரங்களைத் திட்டமிட்டு உருவாக்கவேண்டும். அப்போதுதான் நடைமுறையில் சிக்கலின்றி, தமிழானது நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்படமுடியும்.
சொல், தொடர், கருத்தாடல் என்று பல முனைகளில் தமிழ் வளர்க்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழானது முழுமையாக நிர்வாக மொழியாக, பயிற்றுமொழியாக, வணிகமொழியாக, வழிபாட்டுமொழியாக, நீதித்துறைமொழியாக நடைமுறையில் நீடிக்கமுடியும்.

மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெறும் தமிழ் உணர்வு மட்டும் போதாது. தமிழ்மொழியை அறிவியல் அடிப்படையில் அணுகும் நோக்கும் அதனடிப்படையில் தமிழ்மொழியின் சொற்களஞ்சியம், இலக்கணம் , கலைக்களஞ்சியம் , பயிற்றுநூல்கள், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குத் தேவையான பாடநூல்கள் போன்றவை உருவாக்கப்படவேண்டும். தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கிற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் திறனுடையதாகத் தமிழ் வளர்க்கப்படவேண்டும்.

தமிழ் வாழ்கஎன்ற வெற்று முழக்கங்களால் தமிழ் தனக்குரிய மேம்பாட்டைப் பெற்றுவிடமுடியாது. தமிழைச் செம்மொழி என்று பெருமையாகக்கூறி, அதைக் காட்சியகத்தில்வைத்து நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. வாழும் மொழியாக, வளரும் மொழியாகத் தமிழ் நீடிக்கவேண்டும்.

பண்டைக் காலத்தில் அன்றைய தேவைக்கேற்ப இலக்கியமொழியாகவும், தத்துவமொழியாகவும் இருந்த தமிழ் இன்றைய தேவைகளுக்கேற்ப அறிவியல் மொழியாகவும் கணினிக்கேற்ற மொழியாகவும் வளர்ந்து நிற்கவேண்டும். அதற்கேற்றவகையில் தமிழின் சொல்வளமும் இலக்கணவளமும் செழுமைப்படுத்தப்படவேண்டும். திட்டமிட்ட செயல்பாடுகள் இதற்குத் தேவை.   

இதற்கான பணிகளை மேற்கொள்வதற்குத் திறன்படைத்த  தமிழ்மொழி, மொழியியல் அறிஞர்களைக்கொண்ட ஒரு உயர்மட்டக்குழு நிறுவப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைப் பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவேண்டும். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திலிருந்து கலைச்சொல் உருவாக்கம், மொழித் தரப்படுத்தம் வரை பல பணிகளை மேற்கொள்ளவேண்டும். உலகத்தரத்தில் இன்றைய தமிழுக்கான ஒரு முழுமையான இலக்கணம் எழுதப்படவேண்டும். தொல்காப்பியமும் நன்னூலும் தமிழ் வரலாற்றில் மிகச் சிறந்த இலக்கணங்கள். இதில் மாறுபாடு ஏதும் இல்லை. ஆனால் அவை தோன்றிய காலத்தில் நீடித்த தமிழ்மொழி, இன்று மாறாமலும் வளர்ச்சியில்லாமலும் இல்லை. மாறியும் வளர்ந்தும் உள்ளது. எனவே இன்றைய தமிழுக்கான புது இலக்கணங்கள் உருவாக்கப்படவேண்டும்இன்றைய தமிழுக்கான பல வகை அகராதிகள் உருவாக்கப்படவேண்டும். தமிழ்மொழி வளர்ச்சியை வரலாற்றுநோக்கில் ஆய்ந்து ஒரு மிகச்சிறந்த வரலாற்று இலக்கணம் எழுதவேண்டும். சங்க இலக்கியங்களிலிருந்து இன்றுவரை தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்கான அகராதி உருவாக்கப்படவேண்டும்
.
பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்கள் தலைமையில் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குமுன்னர் உருவாக்கிய தமிழ் லெக்சிகன் விரிவாக்கப்படவேண்டும். கடந்த சில ஆண்டுகளில் இதற்காகப் பல இலட்சங்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் நிதி ஒதுக்கியும் எதிர்பார்த்த பலன் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுபோன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1965-இல் பேராசிரியர் அ. சிதம்பரம் செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்ட  மிகச் சிறந்த ஆங்கிலம்தமிழ் அகராதியின் புதிய பதிப்பு வெளிவரவேண்டும்.

தற்போதைய கணினியுகத்தில் பிற மொழிகளுக்கு இணையாகத் தமிழைக் கணினியில் செயல்படுத்தத் தேவையான செயல்களை மேற்கொள்ளவேண்டும். பலவகை அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், இலக்கணங்கள் போன்றவை உலகத் தரத்திற்கு உருவாக்கப்படவேண்டும். இன்றைய தமிழுக்கான தரவகமொழியியல் அடிப்படையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு மின்தரவகம் உருவாக்கப்படவேண்டும். தமிழர்களுக்குத் தேவையான பலவகைத் தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட வழிவகை செய்தல் வேண்டும். இதற்கான சில பணிகளைத் தற்போது தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்டுவருகிறது.  

இந்திமொழிக்கும் சமசுகிருதமொழிக்கும் கணினிமொழியியல் அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கிவருகிறது. இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை ஆட்சிமொழியாக நிலைநாட்டுவதற்காக, இந்தியை அடிப்படையாகக்கொண்டு தானியங்கு கணினிமொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கத்திற்குப் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுவருகிறது.  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமசுகிருதக் கணினிமொழியியல் துறை என்ற ஒரு தனித்துறையே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுபோன்ற பணிகளைப் பிறமொழிகளுக்கு இந்திய அரசு மேற்கொள்வதில்லை.   

தமிழக அரசானது தமிழ் வளர்ச்சிக்காக ஒரு துறையை 30 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, அதற்கு ஒரு இந்திய அரசுப்பணிச் செயலரையும் நியமித்துவருகிறது. அவரது நிர்வாகத்தின்கீழ், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் தமிழ் முழுமையாக நிர்வாகமொழியாகப் பின்பற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளதமிழ் வளர்ச்சி இயக்ககம்என்ற ஒரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு   நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி, அரசு அலுவலகங்களில் கோப்புகள் தமிழில் உருவாக்கப்படுகிறதா, கையொப்பம் தமிழில் இடப்படுகிறதா என்பதையெல்லாம் கண்காணிப்பதேயாகும். அத்தோடு, நிர்வாகத்திற்குத் தேவையான ஆட்சிச்சொல் அகராதியை உருவாக்குவதாகும். இந்தப் பணிகூட பல ஆண்டுகளாகத் தோய்வடைந்துதான் இருக்கிறது. மேலும் தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், தமிழ் நூல்களுக்கு விருது வழங்குதல், தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பணிகளையே செய்துவருகின்றது. பிற மாநிலங்களில் பல்கலைக்கழகங்களில்   தமிழ்மொழி, இலக்கியங்களைக் கற்பிப்பதற்கான பேராசிரியர்களை உருவாக்கவும் நிதி ஒதுக்குகிறது. ஆனால் நாம் முன்னர் குறிப்பிட்ட தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டமிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்வதில்லை. தேவநேயப் பாவாணரின் வழிகாட்டுதலில் நிறுவப்பட்ட செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் திட்டத்திற்கான இயக்ககம் ஓரளவு தனது பணியை நிறைவேற்றியுள்ளது. அதுவும் அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டும்.

இந்திய நடுவண் அரசானது தமிழ்மொழிக்குச் செம்மொழி தகுதி அளிக்கவேண்டுமென்ற தமிழ்மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தமிழுக்குத் தற்போது செம்மொழித் தகுதியை ஒரு அரசாணையின்மூலம் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில்செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்ஒன்று சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின்வாயிலாக கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றைப்பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆண்டுதோறும் சில கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. தமிழறிஞர்கள், ஆய்வாளர்களுக்குச் சில விருதுகளையும் வழங்கிவருகிறது. இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி ஆக்கப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்குப் பதிலாக , தமிழர்களைஅமைதிப்படுத்தவே’ ‘ திசைதிருப்பவேஇத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கான எந்தவொரு குறிப்பிட்ட சிறப்பான பணியையும் மேற்கொள்ள அந்த நிறுவனத்தால் இயலவில்லை என்பதே உண்மை. இந்நிலையை மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக, நீதித்துறைமொழியாக, வணிகமொழியாக, வழிபாட்டுமொழியாக, ஊடகமொழியாக முழுமையாகத் தமிழகத்தில் நீடிப்பதற்குத் தேவையான அனைத்துவகை மொழிவளங்களையும் உருவாக்குவதே மொழிவளர்ச்சித்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். ஆனால் அந்தத் திசையில் தமிழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்கது.

உலக அளவில் தமிழ் பரப்பலுக்கான திட்டம் ( Acquisition Planning) :
ஒரு மொழியின் சிறப்பு, அம்மொழி பேசும் நாட்டைத் தாண்டி, உலக அளவில் கொண்டுசெல்லப்படவேண்டும். ஆனால் அதன் நோக்கம், பிறமொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கக்கூடாது. பிறமொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்த முயலும்  . ‘மொழி ஏகாதிபத்தியநடவடிக்கையாக இருக்கக்கூடாது. இதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்ஏனென்றால், ஆங்கிலத்தை அவ்வாறு கொண்டுசெல்லப் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு  ‘பிரிட்டிஷ் கவுன்சில்என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் கிளைகள் உலகெங்கும் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம், தனது முந்தைய காலனி நாடுகளில்  ஆங்கிலத்தைத் தொடர்ந்து கல்வி, பண்பாடு, தொழில் ஆகியவற்றில்  ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தேவையான பணிகளை மேற்கொள்வதாகும். அதற்கான பல திட்டங்களை இந்நிறுவனம் உலகெங்கும் செயல்படுத்திவருகிறது. இதுபோன்ற ஒரு நிறுவனத்தை – ‘மாக்ஸ்முல்லர் கழகம்நிறுவனம் ஒன்றைஜெர்மனி அரசு உலகெங்கும் நிறுவியுள்ளது. பிரெஞ்சுமொழியை இதுபோன்று உலகெங்கும் பரப்பஅலையன்ஸ் பிரான்சிஸ்என்ற ஒரு நிறுவனத்தைப் பிரஞ்சு அரசாங்கம் நிறுவியுள்ளது. இவை போல அல்லாமல், தமிழின் சிறப்பை உலகெங்கும் எடுத்துச் சொல்வதற்கும் அங்குள்ள தமிழர்களுக்கு மொழிசார்ந்த பணிகளில் உதவிசெய்வதற்கும் செயல்படுகிற நிறுவனமாகத் தமிழ்மொழி நிறுவனம் பல நாடுகளில் நிறுவப்படவேண்டும்.

இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழியாகிய இந்திமொழிக்கு இதுபோன்ற நிறுவனம் பல வெளிநாடுகளில் இந்தியத் தூதரகங்களில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தமிழுக்கோ அல்லது அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழியாக அங்கீகாரம் பெறாத  மற்ற மாநில மொழிகளுக்கோ வெளிநாடுகளில் இந்தியத் தூதரகங்களில் இது போன்ற அமைப்பு கிடையாது. இன்னும் சொல்லப்போனால், இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழர்களுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்களைக்கூட இந்திய நடுவண் அரசுமூலம்தான் தமிழ்நாடு அரசு அளிக்கமுடியும்.

எனவேதான் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுக்குள்ளேயேஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’, ‘உலகத் தமிழ்ச்சங்கம்போன்ற நிறுவனங்களை நிறுவி, சில பணிகளை மேற்கொள்ள முயல்கிறது. ஆனால் அந்த நிறுவனங்களும் இந்தப் பணிகளைக் குறிப்பிடத்தக்கவகையில் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட மூன்று வகை மொழிவளர்ச்சித்திட்டங்களோடுமொழித்தகுதிக்கான திட்டம் ( Status Planning), மொழி மேம்பாட்டுக்கான திட்டம் ( Corpus Planning) , மொழி பரப்பலுக்கான திட்டம் ( Acquisition Planning) ஆகிய மூன்றோடுஒரு மொழியின் மதிப்பைக் கூட்டவும் அதன் சிறப்பை வெளிப்படுத்தவும் தேவையான பணிகளை மேற்கொள்வதைச்சிறப்பு/ மதிப்பு கூட்டும் திட்டம்’ ( Prestige Planning) என்று மொழிவளர்ச்சித்திட்டத் துறையினர் அழைக்கின்றனர்.

மேற்கூறிய நான்குவகையான மொழிவளர்ச்சித் திட்டங்களையும் தமிழ்மொழிக்குச் செயல்படுத்தவேண்டும். அதுவே தமிழ்மொழியை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.   
   
ஆனால் தமிழகத்தில் மேற்கூறியவகையில் திட்டமிட்டுத் தமிழ்வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தெளிவான மொழிக்கொள்கையை உருவாக்கத் தமிழ்மக்கள், அரசியல் கட்சிகள், அரசுகள் இணைந்து முனையவேண்டும். அதற்கு அடுத்த கட்டமாகசரியான முறையில்அறிவியல் அடிப்படையில்தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கவும் அதற்குரிய பணிகளைக் கண்காணிக்கவும் தமிழ்மொழி, மொழியியல் ஆய்வாளர்களைக்கொண்ட சுயேச்சையான ஒரு நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு நிறுவவேண்டும். அதன்கீழ் மேற்கூறிய பணிகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்படவேண்டும். மொழிக்கொள்கை, மொழிவளர்ச்சி என்று தெளிவாக இரண்டாகப் பிரித்து, அவரவர்கள் செய்யவேண்டிய பணிகளை முறையாக மேற்கொள்ளவேண்டும். மொழிவளர்ச்சிக்கான குழுவில் தமிழ்மொழி, மொழியியலாளர்கள் போன்ற துறை வல்லுநர்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்.   
திட்டமிட்ட வளர்ச்சி தேவை

எனவே தொன்மையும் தொடர்ச்சியும் வளர்ச்சியும் கொண்ட தமிழ்மொழியானது 21 ஆம் நூற்றாண்டில் பிறமொழிகளுக்கு இணையாக உலகச்சிறப்பு பெற்ற ஒரு மொழியாகத் திகழ்வதற்கு ஒரு தெளிவான மொழிவளர்ச்சித்திட்டம் தேவை. செயல்பாட்டுத் தளங்களில்பயன்பாட்டுத் தளங்களில்தமிழ்மொழியின் சிறப்பையும் மதிப்பையும் வளர்த்தெடுக்கத் தேவையான தமிழ்மொழி வளர்ச்சித்திட்டம் உருவாக்கப்படவேண்டும். தமிழ்மொழிக்கான இந்த மொழிக்கொள்கையை உருவாக்குவதிலும் வெற்றிபெறுவதிலும் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் பங்கேற்கவேண்டும்.

தமிழ்மொழிக்கான ஒரு தெளிவான மொழிக்கொள்கை உருவாக்கப்பட்டபிறகு, அக்கொள்கையைச் செயல்படுத்தத் தேவையான தமிழ்மொழி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளத் தமிழ்மொழி, மொழியியல் துறைகளைச் சேர்ந்த அறிஞர்களைக்கொண்ட ஒரு வல்லுநர் குழு உருவாக்கப்படுதல் வேண்டும். இந்தக் குழுவின் வழிகாட்டுதலில் தமிழ்மொழி வளர்ச்சிக்கான அனைத்துப் பணிகளும்எழுத்துச் சீர்திருத்தத்திலிருந்து அகராதி உருவாக்கம், இலக்கணம் உருவாக்கம், தரப்படுத்தம் ஆகியவற்றிற்கான பணிகள்வரைமேற்கொள்ளப்படுதல் வேண்டும். வெற்று முழக்கங்களைவிடத் திட்டமிட்ட, தெளிவான பாதையே தமிழ்மொழி வளர்ச்சிக்கு இன்று தேவை. 21 ஆம் நூற்றாண்டில் உலகளவில் சிறப்புவாய்ந்த ஒரு மொழியாகத் தமிழ்மொழி விளங்கவேண்டும். இதற்கான பணிகளை அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழ் வாழ்க, தமிழ் வளர்கஎன்ற முழக்கம் வெறும் வாய் முழக்கமாகமட்டும் இல்லாமல், நடைமுறையில் தமிழ்மொழியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் முழக்கமாக அமையவேண்டும். அறிவியல் அடிப்படையில் மொழி ஆய்வை மேற்கொள்ளவேண்டும். தமிழுக்கான மொழிக்கொள்கையைத் தெளிவாக வரையறுத்து, அதனடிப்படையில் தமிழ்மொழிவளர்ச்சிப்  பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும். ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்றமொழி, வணிகமொழி, வழிபாட்டுமொழி போன்ற பல்வேறு மொழித்தகுதிகளைத் தமிழ் பெற்று, அதற்கேற்ற வகையில் தமிழானது அறிவியல்மொழியாகவும், கணினிமொழியாகவும் வளர்ந்து நிற்கவேண்டும.  



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India