வெள்ளி, 31 மார்ச், 2023

சேட்ஜிபிடி - தேவையா?

 நண்பர் மாலன் அவர்கள் சேட்ஜிபிடி பற்றிய எனது பதிவுக்குத் தனது கருத்தை அளித்துள்ளார்கள். அதுபற்றிய எனது கருத்தை மேலும் இங்குப் பதிவிடுகிறேன்.

நண்பர் மாலன் அவர்கள்
--------------------------------------------------------------------------
//Chat GPT மிக மிக ஆரம்ப நிலையில் இருக்கிறது. தொழில்நுடபத்தின் -குறிப்பாக மின்னணு தொழில்நுட்பத்தின் - சிறப்பே அது விரைவில் மேம்படுத்திக் கொள்ளும் என்பதுதான். மனிற்ற்களை விடச் சிறப்பாகவும் விரைவாகவும் மேம்படுத்திக் கொள்ளும் என்பதுதான். தீர்ப்பெழுத இன்னும் காலமிருக்கிறது. பி.கு: இள்நிலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு மாணவரிடம் பேரா.பொற்கோ பற்றிச் சிறு குறிப்பு வரைக என்றால் பெரும்பாலானோரது விடைகள் எவ்விதம் அமையும்?//
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------------
நன்றி நண்பரே. எந்தவொரு அறிவியல் வளர்ச்சியையும் ஆதரிப்பவன்தான் நான். இந்த வளர்ச்சியையெல்லாம் மனிதன்தான் செய்கிறான். எனவே இது மனிதனின் திறமை என்பதில் நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். அதில் ஐயமே இல்லை. மேலும் மேலும் இந்தச் செயற்கை அறிவுத்திறன் வளரவேண்டும்; வளரும்.
நான் கூற வருவது . . .
(1) ஒரு ஐயத்திற்குத் தேவையான விவரங்கள் தன்னிடம் இல்லையென்றால் அல்லது அதுபற்றி எதுவும் தெரியவில்லையென்றால், அதை வெளிப்படையாகக் கூறலாம். அதில் தவறு இல்லை. எல்லா அறிவும் ஒரு மனிதரிடம் இருக்கிறது என்று கருதுவது தவறு. எனவே ஒருவர் நம்மிடம் அதுபோன்ற ஒரு வினாவை யாரும் எழுப்பினால், ''இப்போது தெரியவில்லை; அதுபற்றிப் படித்துவிட்டு அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டுக் கூறுகிறேன்'' என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், தப்புந்தவறுமாக பதில் அளித்தால், அந்த மனிதர்மீது நமக்குத் நம்பகத்தன்மை இல்லாமல்போய்விடும்.
எனவே சேட்ஜிபிடி-க்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டியது - தன்னிடம் கேட்கப்படும் வினா அல்லது ஐயத்திற்குத் தன்னிடம் போதுமான, தேவையான விவரங்கள். தரவுகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் திறன் ஆகும்.
(2) தன்னிடம் சேகரிக்கப்படும் விவரங்களை ( எழுத்துவழியோ பேச்சுவழியோ அல்லது பிற வழிகளிலோ கிடைப்பதை) புரிந்துகொண்டு - அதாவது அவற்றின் பொருண்மையைப் புரிந்துகொண்டு - தனது அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் பதில் அளிக்கவேண்டும்.
இங்கு ஒரு சிக்கல் என்னவென்றால், இணையத்தில் சிலர் தவறான செய்திகளை எழுதியிருப்பார்கள். அவற்றைத் தவறு என்று எவ்வாறு புரிந்துகொள்வது? மேலும் சிலவற்றைச் சிலர் உண்மை என்று கூறுவார்கள்; சிலர் தவறு என்று கூறுவார்கள். இதில் எவ்வாறு சரியான முடிவு எடுப்பது? மனிதமூளைக்கே இது ஒரு மிகப் பெரிய சிக்கல். அவ்வாறு இருக்கும்போது, கணினிக்கு அந்தத் திறமையை எவ்வாறு அளிப்பது? இதுபற்றிய ஆராய்ச்சிகள் வளரவேண்டும்.
(3) இணையத்திலோ அல்லது அச்சிலோ ஒருவரது ஆய்வுமுடிவுகள் இருந்தால் , அவற்றிக்குக் காப்புரிமை உண்டா? என்ற வினா. ஒரு குறிப்பிட்ட அச்சிடப்பட்ட நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை அல்லது செய்தியை , அந்த நாளிதழிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தமுடியாது.
நான் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்திற்காக ஒரு கணினி மென்பொருள் தயாரிக்கும் பணியைப் பெற்றேன். அதற்கு அங்கு வெளிவரும் ''தமிழ்முரசு'' நாளிதழில் வெளிவந்த கட்டுரை. செய்திகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதற்கு நான் அந்த நாளிதழ் உரிமையாளரிடமிருந்து அனுமதிபெற இரண்டு வேலைகள் செய்யவேண்டியிருந்தது - ஒன்று, ஒவ்வொரு நாள் இதழுக்கும் நான் பணம் கட்டவேண்டும்; இரண்டு, எந்த நிறுவனத்தின் பணிக்கு உரிமைபெற்றுப் பயன்படுத்துகிறேனோ , அதைத் தவிர வேறுபணிக்குப் பயன்படுத்தக்கூடாது. எனவே அதற்குரிய பணத்தைக் கட்டியதோடு, சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலையும் அந்த நாளிதழுக்கு அளித்து அனுமதி பெற்றேன்.
ஆனால் தற்போதைய சேட்ஜிபிடி மென்பொருள் தயாரிப்பாளர்கள் அவ்வாறு செய்துள்ளார்களா? அவ்வாறு தெரியவில்லை. இணையத்தில் ஏற்றப்பட்ட எல்லா விவரங்களையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் எடுத்துப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இது சரியா தவறா?
(4) மேலும் தொழில்நுட்பத்திலும் ஒரு சிக்கல். தனக்குக் கிடைக்கிற செய்திகளை, நம்மைப்போன்று படித்துப் புரிந்துகொள்ளாமல், கோடியே கோடி தரவுகளை நிகழ்தகவு புள்ளியியல் (Probabilistic Statics) , கணினியின் தானியங்குக் கற்றல் (Machine Learning) நரம்புவலைப் பின்னல் (neural network) , ஆழ்நிலைக்கற்றல் (Deep Learning) கொண்டு, முடிவுக்கு வருகிறது. அதாவது மனிதமூளையின் கற்றல்திறன், புரிதல் திறன் ஆகியவற்றைப்பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படையில் பெற்ற அறிவைக் கணினிக்குக் கொடுக்காமல், கோடியே கோடி தரவுகளை ஒரு சில விநாடிகளில் சேகரித்து, புள்ளியியலைப் பயன்படுத்தி, இந்தச் சொல் வடிவத்திற்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வருகிற ஒரு ''திறனை'' அளிப்பது மேஜிக் போன்ற ஒன்றாக ஆகாதா? எப்படிக் கொடுத்தால் என்ன? முடிவுதானே வேண்டும் என்று கூறுவது அறிவியல் ஆகுமா? இது மனிதரின் அறிவுத்தேடல் முயற்சிக்குத் தடையாக அமையாதா? எப்படி பணம் சம்பாதித்தால் என்ன? பணம் பணம்தானே என்று கூறலாமா?இதற்கு தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதை இங்குப் பயன்படுத்துவது கணினியை அறிவியலைக் கொச்சைப்படுத்துவதாக அமையும் எனக் கருதி, அதைக் கூறுவதைத் தவிர்க்கிறேன்.
அறிவியல் வளர்ச்சியை முற்றிலும் ஏற்றுக்கொள்பவன் நான்! அறிவியல் வளர்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும், ஆகவே அறிவியல் வளர்ச்சி கூடாது என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். ஏனென்றால் இயற்கையைத் தனக்காகச் சரியான முறையில் - இயற்கைக்குப் பாதிப்பில்லாமல் - பயன்படுத்துவதுதான் மனித உழைப்பின் நோக்கம்.
டிராக்டர் போன்ற நவீனக் கருவிகளைப் பயன்படுத்துவதால், ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற கருத்து தவறானது; மாறாக, அவ்வாறு விவசாயத்தில் அறிவியல் வளரும்போது, அதில் அதுவரை வேலைசெய்துகொண்டிருக்கிற விவசாயிகளுக்கு மாற்றுவேலை அளிக்கும் கடமை சமுதாயத்திற்கு உண்டு. அளிக்கவும் முடியும். வெறும் லாபநோக்கில் செயல்படும் முதலாளிகள் போன்று இல்லாமல், மக்களுக்கான ஒன்றாக சமுதாய அமைப்பு இருப்பதுதான் அதற்குத் தேவை.
இவ்வாறுதான் மேலைநாடுகளில் விவசாயத்தில் அறிவியல் தொழில்நுட்பங்கள் வளரும்போது, நகர்ப்புறங்களில் தொழில்கள் பெருகின. வேலையிழந்த கிராமப்புற விவசாயிகளுக்கு வேலையும் கிடைத்தது. நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியில் ஈடுபட உழைப்பாளிகளும் கிடைத்தனர். இதுபோன்ற சிக்கல்களை ஒரு சோசலிச சமுதாயம் சரியான வழிகளில் தீர்க்கும்.
அறிவியல் வளர்ச்சிக்கும் சமுதாய அமைப்புக்கும் இடையில் தொடர்புகள் உண்டு!
எனவே சேட்ஜிபிடி, பார்ட் போன்ற கணினித்தொழில் நுட்ப வளர்ச்சியை முரட்டுத்தனமாக எதிர்க்காமல், அதை அறிவியல், சமுதாயப் பார்வையில் அணுகவேண்டும் என்பதே எனது கருத்து.

வியாழன், 30 மார்ச், 2023

செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) - AI) மென்பொருள்களும் மொழியியல் (Linguistics) அடிப்படையான தமிழ்மொழி ஆய்வுகளும்!

செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) - AI) மென்பொருள்களும் மொழியியல் (Linguistics) அடிப்படையான தமிழ்மொழி ஆய்வுகளும்!
--------------------------------------------------------------------------
ChatGPT - இல் ஆர்வமுள்ளவர்கள் இன்றைய "The Hindu" இன்றைய நாளிதழில் பக்கம் 12-இல் வெளிவந்துள்ள "GPT-4- a shift from "what it can do' to 'what it augurs' என்ற தலையங்கப் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கலாம்.
இக்கட்டுரையில் செயற்கை அறிவுத்திறன்பற்றிய ஒரு நல்ல விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மொழியியல் மாணவர் என்ற முறையில் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்.
நான் ஏற்கனவே இதுபற்றி முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளேன். இந்தவகை மென்பொருள்களுக்கு அல்லது எந்தவொரு செயற்கை அறிவுத்திறன் மென்பொருளுக்கும் அடிப்படையானது . . .
நாம் அவற்றின்முன் வைக்கிற நமது மொழித் தொடர்களை அவை புரிந்துகொள்ளவேண்டும் (understanding) . அதுபோன்று நமது வினாக்கள் அல்லது ஐயங்களுக்குத் தேவையான விவரங்களை அந்த மென்பொருள்கள் திரட்டியவுடன் . . . அவற்றிற்குரிய நமது மொழிக்குரிய தொடர்களை (generation or production) உருவாக்கி அளிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுவதற்கு மிக அடிப்படையான ஒன்று . . . குறிப்பிட்ட மொழியின் அமைப்பை - அது எவ்வாறு கருத்துக்களை வெளிப்படுத்துகிறது - அதற்குரிய சொற்களஞ்சியம், இலக்கணம் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதாகும்.
இதைத்தான் மொழியியலில் முறைசார் மொழிவடிவம் (Linguistic Formalism) என்று அழைக்கிறார்கள், மொழியியல் துறையில் பல வேறுபட்ட முறைசார் வடிவங்கள் முன்வைக்கப்பட்டுத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. மனித மூளைக்குரிய இந்த மொழித்திறனைப் புரிந்துகொள்வதே மொழியியல்துறையின் முதன்மையான ஆய்வாக இருக்கிறது.
அடுத்து, இந்த மொழித்திறனை எவ்வாறு கணினிக்கு அளிப்பது என்பதாகும். இத்துறையே இன்று கணினிமொழியியல் (Computational Linguistics) என்று அழைக்கப்படுகிறது.
கணினியின் திறனும் (Computing Power) இணையமும் (Internet) இன்று மிகவும் வியக்கத்தக்க அளவில் வளர்ந்துள்ளன. அதனால் மனிதமொழிகளின் கோடியே கோடி மொழித்தொடர்களை ஒரு சில வினாடிகளில் திரட்டி . . கணினியில் சேமித்துவைக்கமுடிகிறது.
இதன் பயனாக, நான் முன்புகூறிய இயற்கை மொழிகளுக்கான மொழிசார் வடிவங்களை - மொழி இலக்கண ஆய்வு அடிப்படையில் இல்லாமல் - நிகழ்தகவுப் புள்ளியியல் (Probabilistic Statistics) அடிப்படையில் உருவாக்கலாம் என்னும் கருத்து இன்று வலுப்பெற்றுவருகிறது. ஒரு சொல்லின் அல்லது தொடரின் வருகையை (பொருண்மை அல்லது பொருளை இல்லை ) அதற்கு முந்தைய அல்லது அடுத்த சொல்லின் அல்லது தொடரின் வருகையின் ( Probability of Occurrences) அடிப்படையில் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட சொல்லின் தொடரின் பொருண்மையை - பொருளை - மனித மூளை புரிந்துகொண்டு செயல்படுவதுபோல . .. இந்த மென்பொருள்கள் செயல்படத் தேவை இல்லை!
எனவே, இன்று இயற்கைமொழிகள்பற்றிய ஆய்வு (Language Research) இரு வேறுபட்ட முனைகளில் நடைபெறுகிறது. ஒன்று . . . மொழியியல் அடிப்படை (Linguistics based) ; மற்றொன்று நிகழ்தகவுப் புள்ளியியல் அடிப்படை( Probability Statistics) !
இந்த இரண்டாவது முனைக்கு ஒரு சொல் அல்லது தொடரின் இலக்கணமோ அல்லது அகரமுதலி விவரங்களோ தேவை இல்லை. எடுத்துக்காட்டாக, ஒரு கிளிக்கு நாம் பேசுகிற பேச்சின் பொருள் தெரியாது. ஆனால் நாம் அதனிடம் சொல்கிற சில சொற்களை அப்படியே திருப்பிச் சொல்லும். நாம் சொல்கிற சொல்லின் பொருள் அதற்குத் தெரியாது.
இதை மேற்குறிப்பிட்ட "இந்து" கட்டுரையில் ஒரு மொழியியல் ஆய்வாளர் - Emily Bender - என்பவர் "Stochastic Parrot" ( நிகழ்தகவுப்புள்ளியியல் கிளி'' ) என்று அழைக்கிறார். ஏற்கனவே மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி வேறு ஒரு நோக்கில் இருந்து " High-tech Plagiarism என்று கூறியுள்ளார்.
இதுபற்றிய ஐயத்துக்கு விளக்கம் அளித்துள்ள மைக்ரோசாஃப்ட் குழுவினர், ''நாங்கள் நிகழதகவுப்புள்ளியியலைமட்டும் '' சார்ந்து இந்தப் பணியை மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர். நானும் அவ்வாறே கருதுகிறேன். மொழியியல் ஆய்வுகளையும் புள்ளியியலையும் இணைத்தே பயன்படுத்தியிருப்பார்கள் எனக் கருதுகிறேன். அதனால்தான் இந்த அளவு வெற்றி கிட்டியுள்ளது.
ஆங்கிலம், பிரஞ்சு, சீனம், ஜெர்மானியம்போன்ற மொழிகளில் மொழியியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அவற்றின் பயன்களையும் இந்தச் செயற்கை அறிவுத்திறன் மென்பொருள் உருவாக்கங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.
ஆனால் தமிழ்மொழிக்கு ? இன்றைய தமிழுக்கான மொழியியல் ஆய்வு அந்த அளவுக்கு வளரவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் அதன் முக்கியத்துவம் தமிழ்நாட்டில் சரியாக உணரப்படவில்லை. மேலும் மொழியியல் என்பது ஏதோ தமிழுக்கு எதிரான ஒரு அறுவை மருத்துவமுறை என்ற கருத்தே மிக ஆழமாகத் திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு என்பதுபற்றிய விவாதத்திற்கு நான் இங்கு வரவில்லை.
ஆனால் தமிழ்மொழிக்கான மொழியியல் நோக்கிலான ஆய்வுகளின் முக்கியத்துவத்தை . . . தமிழ் ஆய்வாளர்கள், பல்கலைக்கழகங்கள், அரசாங்கம் உணரவேண்டும்! மொழியியல் படிப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மொழியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மொழியியல் ஆய்வுகளுக்குத் தேவையான நிதி உதவி அளிக்கவேண்டும்! தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறைகளில் மொழியியல் ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும்.
இந்த ஒரு திசையில் தமிழ்மொழி ஆய்வு நடைபெற்றால்தான் . . . ChatGPT, Burd போன்ற செயற்கை அறிவுத்திறன் ஆய்வு வளர்ச்சியைத் தமிழுக்கும் பயன்படுத்தமுடியும்; தமிழுக்கு உலக அளவில் மற்ற மொழிகளுக்கு இன்றைய அறிவியலால் கிடைத்துள்ள மதிப்பைப் பெறமுடியும் ! கணினி உலகில் . . . இணைய உலகில் . . . தமிழ்மொழி வெற்றி நடைபோடமுடியும்! உலகெங்கும் உள்ள அறிவியல் உண்மைகளைத் தமிழிலேயே பெறமுடியும்!

வெள்ளி, 24 மார்ச், 2023

காதல் . . . கலப்புத் திருமணம் கட்டாயமா?

 காதல் . . . கலப்புத் திருமணம் கட்டாயமா?

நண்பர் வேல்முருகன் அவர்களே. நான் கூற வந்தது நாளிதழ்களில் சாதி அடிப்படையில் வருகின்ற விளம்பரங்களைப்பற்றித்தான்! காதல் திருமணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஒருவர் எதிர்க்கக்கூடாது என்பதுதான்! ஆனால் ஒருவர் காதலிக்கிற அல்லது விரும்புகிற ஆண் அல்லது பெண் அவரது சாதியைச் சேர்ந்தவராக இருந்தால், அந்தத் திருமணம் கூடாது என்று நான் கூறவரவில்லை.

 

மேலும் காதலித்துத்தான் திருமணம் செய்யவேண்டும்; அது கலப்புத் திருமணமாகவே இருக்கவேண்டும் என்று நான் கூறவரவில்லை.

இன்றைய இந்தியாவில் அனைவருக்கும் காதலிக்க வாய்ப்பு உண்டு என்று கூறமுடியாது. மேலும் நகர்ப்புறங்களில்தவிர, பெரும்பான்மையான ஊர்களில் பணிபுரியும் இளைஞர், இளைஞிகளுக்கு நெருக்கமானவர்கள் அவர்கள் ஊரைச் சேர்ந்த - அல்லது அவர்களது உறவினர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இருக்கும்போது ஒருவர் காதலிக்கிற அல்லது விரும்புகிற காதலரோ அல்லது காதலியோ அவரது சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ( இன்று பலர் தங்களது சாதிகளைச் சேர்ந்தவர்களையே பார்த்துக் காதலிக்கிறார்கள் ! அதற்குக் காரணம் . . . அவருக்குச் சாதி உணர்வு இருக்கலாம். அல்லது திருமணத்திற்குப் பெற்றோர்கள் தடையாக அமைந்துவிடக்கூடாது என்று எண்ணலாம்! ) அதனாலேயே அவர்களுக்குத் திருமணம் செய்யக்கூடாது என்று நான் கூறவரவில்லை.

 

திருமண விவகாரங்களில் சுயமாக ஒருவர் சிந்தித்து முடிவு எடுப்பதற்கான முதலாளித்துவச் சுதந்திரம்கூட இன்னும் இங்குப் பரவலாக ஏற்படவில்லை. சொத்துப் பாதுகாப்பு, உணவுமுறை ஆகியவற்றில் நீடிக்கிற நிலவுடமைக் கட்டுப்பாடுகள் இன்னும் மிக வலிமையாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன.

 

என்னுடைய கருத்து . . . ஒருவருக்குத் தனது திருமணத்தில் தனது துணையைத் தேர்ந்தெடுப்பதற்குச் சாதியோ, மதமோ தடையாக இருக்கக்கூடாது. குடும்ப உறவுகளும் தடையாக இருக்கக்கூடாது. அவ்வளவுதான்! திருமணத்தில் சாதி, மதம், இனம், வர்க்கம், நாடு என்ற எந்த ஒன்றும் தடையாக இருக்கக்கூடாது!

காதல், சாதி, மதம், வர்க்கம் பார்க்காத திருமணம், பிரிந்துசெல்லும் உரிமை, மறுமணம், விதவைத் திருமணம் போன்றவையே நீடிக்கிற ஒரு சூழல் ஏற்படுவதற்கு . . . இங்கு நிலவுகிற நிலவுடமை உற்பத்தி உறவுகள் முழுமையாக மறையவேண்டும். அதுவரை . . . இவையெல்லாம் ''விதிவிலக்குகளாகத்தான்'' நீடிக்கும்! சாதி, வர்க்கம் இரண்டையும் புறக்கணித்து நடைபெறும் திருமணமுறை வரவேண்டும் என்பதே எனது கருத்து.

 

இன்று நாளிதழ்களில் சாதி அடிப்படையில் திருமண விளம்பரம் வெளிவருவது மட்டுமல்ல . . . சாதி, மத அடிப்படையில் ''மணமகன், மணமகள் பார்க்கும்'' நிறுவனங்களும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன!

இவற்றையே நான் எதிர்க்கிறேன்.

 

தமிழ்மொழியானது தமிழ் இனத்தின் மொழிதான்! இன அடையாளம் உண்டு!

தமிழ்மொழியானது தமிழ் இனத்தின் மொழிதான்! இன அடையாளம் உண்டு!

-------------------------------------------------------------------------------------------------------------------------- 

எந்தவொரு மொழிக்கும் வர்க்க அடிப்படையோ அல்லது சாதி, மத அடிப்படையோ கிடையாது.

ஆனால் இன அடையாளம் உண்டு. ஒரு இனத்தின் உரிமையாக அந்த இனத்தின் மொழியைப் பார்ப்பதில் தவறு இல்லை! அதுதான் புறவய உண்மையும் கூட!
ஆனால் அந்த இனத்திற்குள் நிலவும் சாதிகளுக்கும் வர்க்கங்களுக்கும் அந்த மொழிமீது எந்தவொரு தனிப்பட்ட உரிமையும் கிடையாது. தமிழ் இனத்திற்கே முழு உரிமை !
ஆனால் தமிழ்மொழியைத் தமிழினமானது தன் இன அடையாளமாகமட்டும் பார்த்து, ''அருங்காட்சியகத்தில் வைத்து வணங்கக்கூடாது''. இதில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு!
மாறாக, தமிழினமானது தன் தேசத்தின் உற்பத்திமொழியாக - பொருள் உற்பத்திமொழியாக - வணிக மொழியாக - பயிற்றுமொழியாக - அறிவியலுக்கான மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.
ஆனால் தமிழ்மொழியைத் தமிழினத்திலிருந்து பிரித்துப்பார்ப்பது சரியல்ல என்பது எனது கருத்து. தமிழ்மொழி பல்துறை மொழியாக - வணிகமொழியாக மாறவேண்டும் .

எந்தவொரு மனித மொழியும் பிற எந்தவொரு மொழிகளையும்விடச் சிறந்ததோ அல்லது தாழ்ந்ததோ இல்லை. ஒரு மொழிச்சமுதாயத்தின் கருத்துப்புலப்படுத்தத் தேவைகளை அந்தச் சமுதாயத்தின் மொழி நிறைவேற்றினால், அந்த மொழியே அந்த இனத்திற்குச் சிறந்த, போதுமான மொழி.
அதுபோன்று மொழித்தோற்றம்பற்றிய சில கருத்தாடல்களில் ஒரு குறிப்பிட்ட மொழியே முதல்மொழி, மற்ற எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்று கூறுவதும் இன்றளவும் மொழி அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்து இல்லை.
ஆனால் சில குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களில் ஒரு இனம் தன்மீது பிற இனங்களின் மொழிகளைத் திணிக்க முயலும்போது, அந்தத் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தம் மொழியின் சிறப்பை அந்த இனத்தின் மக்கள் உயர்த்திப் பிடிப்பார்கள். இது தவறு இல்லை!
ஆனால் சில வேளைகளில் ''தேர்தல் அரசியலுக்காகவும்'' இதைச் சிலர் 'தொடரலாம்'! அது அவர்களது தன்னலச் செயல்பாடு என்பதில் ஐயம் இல்லை! அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்!
தமிழ்மொழியானது தொன்மையானது, வேறு சில மொழிகள்போல் வரலாற்றில் வழக்கிழந்துபோகாமல் தொடர்கிற ஒரு மொழி, இன்றும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தத் தேவையான வளர்ச்சிகளைக் கொண்ட மொழி என்று கூறுவதில் தவறு இல்லை.
வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் தமிழ்மொழியானது பிறமொழி ஆட்சியாளர்களாலும் பிறமொழிகளாலும் பாதிப்புக்கு உட்பட்ட காரணத்தால், அவ்வப்போது தமிழனமானது தன் மொழியை உயர்த்திப்பிடிக்கத் தேவை ஏற்பட்டுவருகிறது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், வரலாற்றுக்கட்டாயம் என்று கொள்வதே சரி. அதேவேளையில் தமிழ்மொழி தொடர்ந்த வளர்ச்சிக்கான செயல்களை மேற்கொள்ளாமல் , உதட்டளவில் தமிழ்மொழிபற்றிப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருப்பது தவறு இல்லை.

மொழித் தரவுச் சேகரிப்புக்கு நல்ல வருமானம் !

மொழித் தரவுச் சேகரிப்புக்கு நல்ல வருமானம் !

------------------------------------------------------------------------------------------------------------------

தற்போது பெங்களூரில் இயற்கைமொழி ஆய்வுக்கான நிறுவனங்கள் பல உள்ளன. பெரும்பாலும் இந்த நிறுவனங்கள் செயற்கை அறிவுத்திறன் அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு இந்திய மொழிகளுக்கான தேவையான தரவுகளை இந்த நிறுவனங்கள் அளித்துவருகின்றன.

நிகழ்தகவு புள்ளியியல் (Probabilistic statistics) , நரம்பு வலைப்பின்னல் ( neural network) , ஆழ்நிலை கற்றல் (Deep Learning) , செயற்கை அறிவுத்திறன் ( Artificial Intelligence) அடிப்படையில் மொழித்தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் கணினித்திறன் ( வன்பொருள், மென்பொருள் இரண்டிலும்) கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்குத்தான் தற்போது இருக்கின்றன.

மேலும் நூற்றுக்கணக்கான மொழிகளுக்கு அவை மொழித்தொழில்நுட்பத்தை மேற்கொள்ள இயலுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் கோடியே கோடித் தரவுகளை இந்த நிறுவனங்கள் அந்தந்த மொழி பேசுவோர் நாட்டிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. இந்த நிறுவனங்களின் மொழித்தொழில் நுட்பத்திற்கும் கணினிமொழியியல் - இலக்கணம் - விதிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிற ஆய்வுக்கும் வேறுபாடு உள்ளது.

கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஆங்கிலம்போன்ற மொழிகளுக்குத் தரவுகளைக் கோடியே கோடி எண்ணிக்கையில் இணையத்திலிருந்து பெற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை. ஆனால் தமிழ்மொழி போன்ற மொழிகளுக்கு அவ்வாறு கிடைப்பது இல்லை. எனவே இந்திய மொழிகளுக்கான மொழித்தரவுகளை - பேச்சுத் தரவு, எழுத்துத்தரவு இரண்டுமே- பெறுவதற்குப் பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. அதற்கு ஏராளமான பணத்தைச் செலவிடத் தயாராக அவை இருக்கின்றன.

ஆண் - பெண் தரவு, இளையர் - முதியோர் தரவு என்று பல அடிப்படைகளில் தரவுகள் அவற்றிற்குத் தேவைப்படுகின்றன. பெங்களூர்போன்ற நகரங்களில் செயல்படும் பல பெரிய நிறுவனங்கள் இதில் மிகுந்த ஆர்வமும் கவனமும் செலுத்திவருகின்றன என்று நான் கருதுகிறேன்.

தரவுகளைச் சேகரித்தல், பிழைகள் அகற்றல் (Proofreading) , சீர்மைப்படுத்தல் (Normalization) போன்ற பணிகளைமட்டுமே மேற்கொண்டு, நல்ல ஊதியம் பெறத் தற்போது வாய்ப்பு உள்ளது. ஆனால் முறையான தொடர்பு வேண்டும். அத்தரவுகளைக் கொண்டு, பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு, மொழித்தொழில்நுட்பக் கருவிகளை ( language tools - from Spellchecking to Machine Translation) இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிக்கொள்ளும். இளைஞர்கள் இதற்குத் ''தரவுமொழியியல் (Corpus Linguistics) '' என்ற துறையில் பயிற்சிபெற்றால் நல்லது.

ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவிலிருந்து மூலப்பொருள்களைத் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அவற்றைக்கொண்டு நுகர்வோர் பொருள்களை உற்பத்திசெய்து, மீண்டும் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்றதுமாதிரி . . . தற்போது இந்தத் தரவுசேகரிப்பு இங்கு நடைபெறுகிறது.

தரவு ஏற்றுமதி - மொழிக்கருவிகள் உருவாக்கம் - அவற்றின் இறக்குமதி என்று தற்போது ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் இதை இங்கேயே உருவாக்கக்கூடாது என்று நண்பர்கள் கேட்கலாம்! உற்பத்தித்திறன் , மூலதனம், தொழில்நுட்பம் - இங்கு இல்லையே!

அடுத்த கட்டமாகக் கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்குத் தங்கள் நிதிமூலதனத்தை இறக்குமதிசெய்து, உள்ளூர் நிறுவனங்களை உருவாக்கி, உள்ளூர் உழைப்பைப் பயன்படுத்தி, கருவிகளை உருவாக்கி, இங்கேயேயும் விற்கும்; பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும்.

இங்குள்ள உள்ளூர் நிறுவனங்கள் செக்கிழுத்த செம்மல் வ உ சி போன்று . . . மூழ்கும் ''தேசியக் கப்பல் '' ஓட்டவேண்டியதுதான்!

இன்று தமிழகத்தில்கூட நண்பர்கள் பலர் '"தமிழுக்குத் தேவையான மென்பொருள்களை கூகுள், மைக்ரோசாப்ட் கொடுத்துவிடும்; மேலும் அவை கொடுக்கும் மென்பொருள்களின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும்; என்னயிருந்தாலும் தமிழகத்திலேயே உருவாக்கப்படும் மென்பொருள்கள் அந்தத் தரத்திற்கு வரமுடியுமா?'' என்று தங்களுடைய ''சர்வதேசிய உணர்வோடு'' இருப்பதைப் பார்க்கலாம். கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர்கள் அல்லது உயர் அதிகாரிகளை ( பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை, நாதெல்லா ) ஆகியோர்களுக்குச் ''சிவப்புக் கம்பள மரியாதை'' அளித்துக்கொண்டிருக்கிறோம்! அவர்கள் எதற்காக இந்தியாவைத் தேடிவருகிறார்கள் என்பதுபற்றிக் கவலைப்படுவதில்லை! நல்லதொரு தேசிய உணர்வு . . . நாட்டுப்பற்று!



இறைமறுப்புக்கொள்கையும் போலி நாத்திகவாதமும்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------

அறிவியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்து ஒருவர் இறைமறுப்பாளராக நீடிப்பது வேறு. வெறும் பிராமணிய எதிர்ப்பு, புராண விமர்சனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தன் இளம்வயதில் நாத்திகராக நீடிப்பது வேறு.

முதல் வகையினர் தனது உயிரின் இறுதிவரை இறைமறுப்பாளராகவே நீடிப்பார்கள்.இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்களை எதிர்நோக்கும்போது, தங்களது நாத்திகத்தை விட்டுவிடுவதை நாம் பலரின் வாழ்க்கையில் பார்த்துவருகிறோம். எம் ஆர் இராதா உட்பட பலரைப் பார்த்துள்ளோம். எனவே நாஞ்சில் சம்பத் இவ்வாறு மாறியிருந்தால் அது வியப்பு இல்லை!
மார்க்சியத் தத்துவத்தை அறிந்து , தங்கள் இளம்வயதில் இறைமறுப்பாளராக இருந்து, பின்னர் ஏது ஏதோ காரணங்களைக் கற்பித்து, இறை நம்பிக்கை உடையவர்களாக மாறுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஏதோ நம்மைமிறீய ஒரு ''சக்தி'' இருக்கிறது என்று பொத்தம்பொதுவாகக் கூறிக்கொண்டு, தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு, இறை நம்பிக்கையாளராக இவர்கள் எல்லாம் மாறிவிடுவார்கள். இந்தியாவில் உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர் இன்று இறை நம்பிக்கையாளர்களாகவே நீடிக்கின்றனர். ஆனால் அவர்கள் முட்டாள்கள் இல்லை! அவர்களுடைய இன்னல்களுக்கு - சோதனைகளுக்கு- அவர்களுக்கு ஒரு ''கற்பனை மயக்க மருந்தாக'' அது நீடிக்கிறது. அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் மாறும்போதுதான், நாம் கூறும் இறை மறுப்புக்கொள்கையை ஏற்றுக்கொள்ளும் நிலை வரும். ஆனால் நாஞ்சில் சம்பத் போன்றவர்களை இந்தப் பிரிவில் சேர்க்கக்கூடாது. வெறும் வாய்ச்சவாடல் பேர்வழிகள் இவர்கள்! இவர்கள் ''முட்டாள்கள்'' இல்லை! பிழைக்கத் தெரிந்தவர்கள்!
இவர்களுடைய ''நாத்திகம்'' வெறும் பிராமணிய எதிர்ப்பிலிருந்து தோன்றிய ஒன்றே! பிராமணச் சமூகத்தாரின் அன்றைய ''நிலவுடைமை'', ''பண்பாட்டு ஆதிக்கம்'' ஆகியவற்றை எதிர்த்து, பிராமணர் அல்லாத பிற உயர்சாதியினர் ( இவர்கள் தங்களைப் பிராமண சமூகத்தினர் ''தீண்டத்தகாத '' சாதியினர் என்று கூறுவதை எதிர்ப்பார்கள்; ஆனால் இவர்களே தங்களுக்காக உழைப்பில் ஈடுபடுகிற தாழ்த்தப்பட்ட சாதியினரைத் ''தீண்டமாட்டார்கள்''; தெருவில் மிதியடி அணிந்துகொண்டு வருவதைக்கூட விரும்பமாட்டார்கள்!) முன்வைத்த போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட ''நாத்தீகம்'' அறிவியல் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட நாத்திகம் இல்லை! எனவேதான் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் இந்த 'நாத்திகத்தில்' வராமல் , இன்றும் தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களாகவே நீடிக்கின்றனர்.

புதன், 22 மார்ச், 2023

சாதி அடிப்படையில் திருமண விளம்பரங்கள்!

 சாதி அடிப்படையில் திருமண விளம்பரங்கள்!

----------------------------------------------------------------------------------------------------------
சாதி அடிப்படை கூடாது என்று கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக இங்குப் பேசப்பட்டுவருகிறது.
ஆனால் இன்றைய நிலை ?
ஒரு நாளிதழில் 'மணப்பந்தல்' என்ற தலைப்பில் ஒரு முழுப் பக்கத்தில் 'மணமகன், மணமகள் தேவை' என் தலைப்பில் வெளிவந்துள்ள விளம்பரங்களைப் பார்த்தால் . . . உண்மை தெரியும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், தேவேந்திரகுலம், முதலியார், நாடார், நாயுடு, வன்னியர், விஸ்வகர்மா, பிராமணர், செட்டியார், கவுண்டர், மருத்துவர், நாயக்கர், யாதவர், பிள்ளை, வண்ணார், தேவர், ரெட்டியார், நாயர், போயர், உடையார் - 21 சாதிகள்! சாதி அடிப்படையில் 'மணமகன், மணமகள்' தேவை!
இந்த விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் , இங்கு இவ்வளவு சாதிகளா? என்பது தெரியவருகிறது!
மேலே உள்ள சாதிகள் பெரும்பாலும் இந்து மதத்தினரே.
கிறிஸ்தவர், முஸ்லிம் - என்ற அடிப்படையிலும் விளம்பரம்!
ஜாதி, மதம் தடையில்லை என்றும் சில விளம்பரங்கள் உள்ளன. அவற்றில் விதவை, விவாகரத்து, மறுமணம், ஆதவற்றவர், வயது முதிர்ச்சி ஆகிய அடிப்படையிலான விளம்பரங்களே மிகுதி! மேலும் 'அழகு' 'படிப்பு' 'பதவி' ஆகியவற்றில் 'உயர்நிலை' தேவை! 'படித்த, அழகான' பெண்களுக்கு ஜாதி தடை இல்லை!
செவ்வாய்க் கோளுக்கு மனிதர் சென்று வரலாம் என்ற இன்றைய அறிவியல் உலகில் . . . மனிதரின் உடலில் உள்ள மரபணுக்கள் பற்றிய ஆய்வு வளர்ச்சியடைந்த இன்றைய நிலையில் . . . 'பகுத்தறிவுப் புரட்சி' நடைபெற்ற (வெற்றியடைந்ததா என்பது வேறு வினா!) தமிழ்நாட்டில் . . . 'தமிழ் இனம்', 'நாம் தமிழர்' என்று பேசப்பட்டுவருகிற தமிழ்நாட்டில் . . . இதுபோன்ற திருமண விளம்பரங்கள்!
மதங்களும் சாதிகளும் வல்லாண்மை செலுத்தும் திருமணங்கள் நீடிக்கும்வரை . . . 'நாம் தமிழர்' 'தமிழ் இனம்' என்று நாம் முழக்கம் இடுவது எந்தவகையில் சரியாக இருக்கும்?
இவற்றிற்கு அப்பாற்பட்ட திருமணங்கள் பெருகும்போதுதான் . . . சாதி ஒழிப்பு முழக்கங்களுக்கு உண்மையான மதிப்பு உண்டு! சாதிப் பிரிவினை இல்லாமல் போகும்! தமிழ்க் குடும்பங்கள் என்று அழைத்துக்கொள்ளமுடியும்! 'நாம் தமிழர்' என்று மார்தட்டிக்கொள்ளமுடியும்!
சாதி, மதம் மட்டுமல்ல . . . இனத்தையும் தாண்டி, நாடு என்பதையும் தாண்டி . . . மனிதர்கள் என்ற அடிப்படையில் திருமணங்கள் நடைபெறவேண்டும்!
'மணமகன் தேவை . . . மணமகள் தேவை . . . ' என்று மதம், சாதிகளைத் தவிர்த்து, என்றைக்குத் திருமண விளம்பரங்கள் வருகிறதோ அன்றுதான் . . . 'நாம் மனிதர்' என்று மார்தட்டிக் கொள்ளமுடியும்!
என்னைக் கேட்டால் . . . இதுபோன்ற சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் 'ஆபாசம், அருவருப்பு' என்ற அடிப்படையில் அரசுகளால் தடைசெய்யப்படவேண்டும்!
'புகைபிடிப்பது , மது அருந்துவது உடல் நலனுக்குக் கேடு' என்ற விளம்பரங்களையெல்லாம் பார்க்கிறோம்! அதுபோல, 'மத, சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் மனித குலத்திற்கு பெருங்கேடு' என்று அரசுகள் விளம்பரப்படுத்தவேண்டும்!

சாதிகள் மறையாதா? என்றுமே நீடிக்குமா?

 

கலப்புத்திருமணம் . . . காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் படுகொலை செய்யப்படுவது ஏன்?
-------------------------------------------------------------------------
சாதிகள் என்பவை மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சூழலில் தோன்றிய ஒரு வரலாற்று விளைபொருள்தான்.
எந்தவொரு வரலாற்றுப்பொருளுக்கும் தோற்றம் உண்டு; மறைவும் உண்டு. ஒரு குறிப்பிட்ட சமுதாயச்சூழலில் - அதன் நீடிப்புக்கான சமுதாயக் கூறுகள் மறையும்போது - சாதிகள் மறைந்துதான் ஆகவேண்டும்.
சமுதாய வளர்ச்சியில் சில சமுதாயக் கூறுகள் தங்கள் நீடிப்புக்கான உண்மையான அடிப்படைகள் தகர்ந்தபின்னும், அவற்றால் பயன்பெறுகிற கூட்டத்தால் சிலகாலம் தக்கவைக்கப் -பட்டுக்கொண்டிருக்கும். . அப்போது மக்களின் விழிப்புணர்வும் போராட்டமும் அவற்றைத் தகர்த்துவிடும்.
குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சி தனது உச்சகட்டத்தை அடையும்போது, சாதிகள்போன்ற பழைய சமுதாய அமைப்புக்களின் கூறுகளின் நீடிப்புக்கான அடித்தளம் தகர்ந்துவிடும்; இருப்பினும் சமுதாயத்தின் பிற்போக்குச் சக்திகளால் அவை ''செயற்கையாக'' நீடிக்கவைக்கப்பட்டிருக்கும். சோசலிச சமுதாயத்தில் சமுதாயத்தின் மேல்தளத்தில் மக்கள் நடத்தும் பண்பாட்டுப் புரட்சியால் அவை வீழ்த்தப்படும். இது வரலாற்று விதி. தனிநபரின் விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது இல்லை இது!
சாதிபற்றிய விவாதம் ஒரு நீண்ட விவாதம். ஒரு முகநூல் பதிவில் முடியக்கூடிய ஒன்று இல்லை. இதுபற்றி ஏராளமான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
இருப்பினும் ஒருக்காலும் சாதி அமைப்புக்கள் இந்தியாவில் தகர்க்கப்படாது என்று கருதுவது சமுதாய வளர்ச்சியில் நம்பிக்கை இல்லாத ஒரு மனப்பான்மையே ஆகும். மேலும் இந்த மனப்பான்மையானது சாதிய உறவுகளைத் ''தக்கவைக்க'' - சாதிய உணர்வாளர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள - முன்வைக்கப்படும் ஒரு முயற்சியே ஆகும்!
அதன் தொடர்ச்சியே இன்று கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் நடுத்தெருவில் . . . பட்டப்பகலில் - - - கொடூரமாகக் கொலைசெய்யப்படுகிறார்கள்!
கலப்புத் திருமணம் மட்டுமல்ல . . . . ஒரே சாதிக்குள் கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களும் இவ்வாறே 'வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள்'!
இவையெல்லாம் பழைய குடும்ப அமைப்புமுறையைத் தக்கவைக்கப் பிற்போக்குச் சக்திகள் மேற்கொள்ளும் வன்முறை . . . பயங்கரவாத நடவடிக்கைகளே! நிலவுடமைச் சொத்துரிமையைப் பாதுகாத்துக்கொள்ள முயலும் பிரிவினர்கள் மேற்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளே!

செவ்வாய், 21 மார்ச், 2023

தமிழும் ஆங்கிலமும் - உச்சரிப்புமுறை

 

தமிழும் ஆங்கிலமும் - உச்சரிப்புமுறை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒலிவடிவே ஒரு மொழியின் அடிப்படை என்றாலும் அந்த மொழியின் எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததே. எனவே ஒவ்வொரு மொழியையும் அந்தந்த மொழிகளின் எழுத்துக்களில் எழுதுவதே சரி. ஏனென்றால் ஒரு மொழியின் பேச்சொலியியல், ஒலியனியல் ஆகியவை அந்த மொழியின் எழுத்துவடிவங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. தமிழில் எல்லா ஒலியன்களுக்கும் வரி வடிவம் - எழுத்துவடிவம் - உண்டு. க, கா, கி, கீ என்று உயிர்மெய்களுக்கும் எழுத்துக்கள் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் 40-க்கு மேற்பட்ட ஒலியன்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கான எழுத்து வடிவங்கள் 26 தான்! ஆங்கிலத்தில் பல பேச்சொலிகள், ஒலியன்கள் ஆகியவற்றிற்கு நேரடியான எழுத்து வடிவங்கள் கிடையாது. cat - city - இதில் cat-இல் உள்ள "'c" என்ற எழுத்து [k] என்ற ஒலியனைக் குறிக்கிறது. இரண்டாவது சொல்லான city -யில் "c" என்ற எழுத்து 's" என்ற ஒலியனைக் குறிக்கிறது. ("c" யை அடுத்து முன்னுயிர் வந்தால் "s" உச்சரிப்பு; பின்னுயிர் வந்தால் k உச்சரிப்பு. ) இதுபோன்று பல வேறுபாடுகள் ஆங்கிலத்தில் ஒலியன்களுக்கும் எழுத்துக்களுக்கும் இடையில் இருக்கின்றன.

 

ஆனால் தமிழில் [k] [g] [x] ஆகிய மூன்று மாற்றொலிகளைக்கொண்ட /k/ ஒலியனுக்கு ஒரு எழுத்துத்தான்! மாற்றொலிகளாக இருப்பதால், அவை வரும் சூழல்கள் தெளிவாக இருக்கின்றன. சொல் முதலிலும் இடையில் இரட்டித்து வரும்போதும் [k] , /கடல்/, /அக்கா/; சொல்லிடையில் மெல்லினங்களுக்கு ( மூக்கொலிகளுக்கு) அடுத்து வரும்போது [g] ,, /தங்கம்/; சொல்லிடையில் இரண்டு உயிர்களுக்கு இடையில் [x], /பகல்/. இவ்வாறு ஒரு ஒலியனுக்கு ( அவற்றின் பேச்சொலிகளுக்கு இல்லை) ஒரு எழுத்து என்பதால் உச்சரிப்பில் சிக்கல் நேராது. எழுதுவதை - மாற்றொலிகளின் சூழல்கள் அடிப்படையில் - அப்படியே உச்சரிக்கமுடியும்.

 

ஆனால் ஆங்கிலத்தில் சொல்லில் பயின்றுவரும் எழுத்துக்கள் அடிப்படையைச் சார்ந்துமட்டும் உச்சரிப்பைத் தெரிந்துகொள்ளமுடியாது. உச்சரிப்பைத் தனியே தெரிந்துகொள்ளவேண்டும். எனவேதான் ஆங்கிலத்திற்கு உச்சரிப்பு அகராதிகளை Daniel jones, Gimpson போன்ற மொழியியலாளர்கள் ( பேச்சு ஒலியியலாளர்கள் - phoneticians ) உருவாக்கியுள்ளார்கள். மேலும் ஆங்கில அகராதிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் உச்சரிப்பையும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கிறார்கள். மேலும் சொல்லுக்குள் அசை அழுத்தமும் ஆங்கிலத்தில் உண்டு. இது ஒரு சொல்லின் இலக்கண வகைப்பாட்டைத் தீர்மானிக்கும். "permit" என்பதில் இரண்டு அசைகள். per , mit. இதில் முதல் அசைக்கு அழுத்தம் கொடுத்தால் பெயர்; இரண்டாவது அசைக்கு அழுத்தம் கொடுத்தால் வினை. ஒரு சொல்லில் மொழியசைகளின் அழுத்த வேறுபாடுகள் , பொருண்மை வேறுபாடுகளுக்குக் காரணமாக அமைகின்றன. தமிழில் இந்தச் சிக்கல் கிடையாது. எனவே ஆங்கிலத்தைக் கற்கும்போது spelling மட்டும் அல்லாமல், அசை அழுத்தம், உச்சரிப்பு ஆகியவற்றைக் குறிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India