'' சடங்குகளின் தோற்றமும் நீடிப்பும்''
( இன்றைய ''சடங்குகளின் '' தோற்றம்பற்றிய ஆய்வில் ஆர்வம் உள்ளவர்களுக்காக மட்டும்! )
பழமையான மனித சமூகத்தில் மனிதன் தான் வாழ்கிற இயற்கையின் செயல்பாடுகள் - பண்புகள் - பற்றிய விதிகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாத ஒரு சூழல் நிலவியது. விவசாயத்திற்கு மழை தேவை! ஆனால் மழைக்கு அடிப்படை என்ன என்று முழுமையாகத் தெரிந்திராத ஒரு நிலையில்... அன்றைய சமூகம் மழையை வரவழைக்கச் சில நடனங்களை மேற்கொண்டுள்ளது. மக்கள் கூட்டமாக மேகங்கள்போன்று திரண்டு, இடி இடிப்பதுபோல பலத்த ஓசையை எழுப்பிக்கொண்டு, மழைத்துளிகள் தரையில் விழுவதுபோல தாங்களும் விழுந்தால் .. அதாவது மழை என்ற இயற்கைச் செயல்பாட்டைச் செயற்கையாகத் தாங்கள் ஒரு நடனம்மூலம் நடத்திக்காட்டினால், மழை உண்மையில் வந்துவிடும் என்று நம்பினார்கள். அதுபோன்று, வளமுள்ள நிலமாகத் தங்கள் விளைநிலங்கள் ஆகவேண்டுமென்றால், பருவமடைந்த பெண்கள் நிலத்தில ஏர்பிடித்து உழுதால், அவர்களுடைய குழந்தைபெறும் தன்மையானது நிலத்திற்கும் ஏற்றப்பட்டு, நிலமும் பயிர் செழித்துவளரும் பண்பைப் பெறும் என்று நினைத்தார்கள். அதுபோன்று, குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்குக் குழைகுழையாக உற்பத்தி செய்யும் வாழைமரத்தின் தண்டைக்கொண்டு சில காரியங்களைச் செய்தால், வாழைக்குரிய பண்பு அந்தப் பெண்களுக்கு வந்துவிடும் என்று நம்பினார்கள். இதில் மிக முக்கியமான ஒன்று .... இதற்கெல்லாம் '' கடவுள்'' என்ற ஒரு சக்தியை அவர்கள் நம்பவில்லை. மாறாக, இயற்கை நிகழ்வுகளைத் தங்களது சில ஆடல், பாடல்கள் மூலம் வரவழைக்கமுடியும் என்று நம்பினார்கள். இதுபோன்ற நிகழ்வுகளின் அடிப்படையில்தான் தாந்திரியம் தோன்றியுள்ளது. பின்னர் மதங்கள் தோன்றியபோது, அவற்றோடு இந்தச் சடங்குகளும் '' பிணைக்கப்பட்டுவிட்டன. ஆனால் மதங்களுக்கு முன்னரே இந்தச் சடங்குகள் தோன்றி நிலவின என்பதுதான் வரலாற்று உண்மை!
ஆனால் பின்னர் இயற்கையின் செயல்பாடுகளுக்கு - மழை, நிலத்தின் செழிப்பு, பெண்ணின் குழந்தைப்பேறு போன்றவற்றிற்கு உண்மையான இயற்கை விதிகள் கண்டுபிடிக்கப்பட்டபின்னரும் ... அறிவியல் வளர்ந்தபிறகும் .... தேவையில்லாத முந்தைய சமுதாயத்தின் ஆடல், பாடல்கள், பிற நம்பிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்போதுதான் ... அவை '' சடங்குகளாக'' மாறுகின்றன. அதாவது அவற்றிற்குத் தேவையில்லாத இன்றைய சூழலிலும் அவை நிகழ்த்தப்படும்போது, சடங்குகளாக மாறுகின்றன. நாம் சில சமயம் கூறுவோம் ..'' அவர் நம்மை உண்மையில் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கவில்லை. வெறும் சடங்குக்காகக் கூப்பிடுகிறார்'' என்று. அதுதான் ''சடங்கு''!. இன்று நம்மிடையே நீடிக்கும் விவசாயச் சடங்கு, திருமணச் சடங்கு, இறப்பையொட்டிய சடங்கு... என்ற பல சடங்குகளின் அடிப்படைகள் இதுதான். அதுவும் குறிப்பாக விவசாயச் சடங்குகளுக்கும் திருமணச் சடங்குகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு. காரணம், இரண்டுமே '' மறு உற்பத்தித் தன்மை'' - Fertility - தொடர்பான நிகழ்வுகள்!
இதுபற்றியெல்லாம் இந்திய தத்துவப் பேராசிரியர் தேபி பிரசாத் சட்டோபாத்யா போன்றோர் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார்கள். சட்டோபாத்யாவின் '' LOKAYATHA" என்ற நூல் மிக முக்கியமானது. தமிழிலும் இது மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது மற்றொரு பேராசிரியர் பட்டார்ச்யா என்பவரும் பல சில நூல்களை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக