சுவாதி படுகொலையும் சமூகப் பின்னணியும்...
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
அரசியல், பொருளாதாரம், மதம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் நிலவுகிற ஒடுக்குமுறைகளுக்குச் சமூகக் காரணிகள் காரணம்... இந்தவகை ஒடுக்குமுறைகளில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆணும் பாதிக்கப்படுகிறான். பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.
ஆனால் மேற்கூறிய பாதிப்புகளோடு .... பெண் என்பவள் சமுதாயத்தில் பெண்ணாகப் பிறந்ததினால் பாதிக்கப்படுகிறாள். இந்தவகைப் பாதிப்பை ஏற்படுத்துவதில் சமூகமானது அரசியல், பொருளாதாரம். மதம் , ஜாதி அடிப்படைகளைப் பார்ப்பதில்லை. பெண்... அவ்வளவுதான்.
கருவிலேயே பெண் சிசுவை அழிப்பது.... குழந்தை வளர்ப்பில்கூட ஆண் குழந்தைக்கு இருக்கிற உரிமைகளைப் பெண் குழந்தைகளுக்கு அளிக்காமல் இருப்பது... . குடும்ப வாழ்க்கையில் கூட பெண்களுக்கென்று வீட்டுவேலைகளை ஒதுக்குவது ( சமையல், வீடு பெருக்குவது, குழந்தை பெறும் கருவியாகப் பார்ப்பது, குழந்த்தைப் பராமரிப்புப் பணியைப் பெண்ணுக்கே உரிய பணியாகப் பார்ப்பது... பட்டியல் நீளும்), குழந்தைப் பேறு இல்லாமலிருந்தால் அந்தப் பெண்ணைப் பலவகையில் அவமானப்படுத்துவது, கணவன் இறந்துவிட்டால் பெண்ணை மிகக் கேவலமான சடங்குகளுக்கு உட்படுத்துவது, பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெருக்களில் பெண்களைக் காமப்பொருளாகக் கருதிக் கேலிசெய்வது, சில வழிபாட்டுத்தல்ங்களில் பெண்களை அனுமதிக்காமல் இருப்பது, தொலைக்காட்சிகள், திரைப்படங்களில் மனைவிகளைக் கணவர்கள் அடிப்பதுபோலக் காட்டுவது ( உண்மையிலும் வீடுகளில் நடைபெறும் ஒன்றுதான்) ... இவ்வாறு பலவகைகளில் பெண்ணடிமை நீடிக்கிறது.
தாய்வழிச் சமுதாயமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பெண் '' தெய்வமாக'' கருதப்பட்டாள். சமூகத்தில் பொருளாதாரத் தேவைகளைப் பெற்றுத் தரும் மறு உற்பத்திச் செயலை ( குழந்தைகளைப் பெறுவது) மேற்கொள்ளும் முக்கியமான நபராகக் கருதப்பட்டாள். ,வேட்டைக்குச் செல்லும் ஆண்களுக்கு வேட்டை கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம்.. ஆனால் காய்கனி பொறுக்குவதிலும், சிறு அளவிலான விவசாய உற்பத்தியில் ஈடுபட்ட பெண்களின் வருமானம் நிரந்தரமானது. இதன் காரணமாகவும் அவளுக்கு உயர்மதிப்பு இருந்தது. பெண்ணைச் சமுதாயம் கொண்டாடியது. ''தெய்வங்களிலும்'' பெண் தெய்வங்களே நீடித்தன.
ஆனால் பொருளாதார உற்பத்தியில் ஆண்களின் பங்கு என்று அதிகரித்ததோ, அன்றே பெண் வீட்டுக்குள் முடக்கப்பட்டாள். ஆண்களுக்குச் சுகம் தரும் கருவியாக.. சொத்துக்கு வாரிசு பெற்றுத் தரும் கருவியாக ஆக்கப்பட்டாள். அன்றே பெண்களின்மீதான வன்முறை தொடங்கிவிட்டது. இன்றுவரை நீடிக்கிறது. பெண்ணின்மீதான ஒடுக்குமுறைகளின் வடிவங்கள் இன்று வேறுபட்டிருக்கலாம்.. ஆனால் அடிப்படையில் மாற்றம் கிடையாது.
பெண்ணடிமை என்பது மனித வரலாற்றின் தொடக்கத்தில் கிடையாது. இடையில் தோன்றியதுதான். அதற்கு இயற்கை அடிப்படை கிடையாது. சமூக அடிப்படையே காரணம்.. அவை அழித்தொழிக்கப்படும்போதுதான்.... பெண் விடுதலை சாத்தியம். அப்போதுதான் கருவறையிலும் வீட்டுக்குள்ளேயும் தொடர்வண்டி நிலையங்களிலும் நடைபெறும் பெண் படுகொலைகள் இல்லாமல் போகும். ஆனால் அதற்காக இன்று சமூக உணர்வுள்ளவர்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமென்று நான் கூறவரவில்லை.. முழுமையான தீர்வுபற்றிக் கூறுகிறேன்.
அதாவது, அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறைகளோடு, இவற்றிற்கு அப்பால் பெண்களுக்கு இன்னொரு ஒடுக்குமுறையும் நீடிக்கிறது என்பதைக் கூறுகிறேன். '' இதில் வர்க்கம், மதம், சாதி கிடையாது' !!!
முடிந்தால் '' குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்பற்றிய'' பிரடரிக் எங்கல்சு நூலைப் படிக்கவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக