சனி, 2 ஜூலை, 2016

சாதி அடிப்படையான இட ஒதுக்கீடு தேவையா?


சாதி அடிப்படையான இட ஒதுக்கீடு தேவையா?
-------------------------------------------------------------------------------

எனது முகநூல் பக்கத்தில் ஒரு நண்பர் இட ஒதுக்கீட்டையும் வேலையில்லாத்திண்டாட்டத்தையும் இணைத்து வினாக்களை எழுப்பியிருந்தார். அதற்கு நான் அளித்துள்ள பதில்கள்:
1) // வேலையில்லாத்திண்டாட்டம் என்பது அரசியல்வாதிகளின் அப்பட்டமான பொய் // உலகம் உருண்டை இல்லை என்பதுபோல் தங்களது கூற்று அமைந்துள்ளது. இதற்குமேல் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 2) வேலை வாய்ப்பில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்பான தங்களது கூற்று தொடர்பானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி கொடுக்கப்படாமல், உயர்பதவிகள் கொடுக்கப்படாமல், பொருளாதார அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் ஒடுக்கப்பட்டிருந்த சாதிகளின் மக்கள் கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளாகத்தானே சற்றுத் தலைநிமிர்ந்து நிற்கமுடிகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பொறுத்திருந்தவர்கள் தற்போது இட ஒதுக்கீட்டில் சில சலுகைகளைப் பெறவதில் என்ன தவறு? இதனால் உயர் சாதிகள் என்று அழைத்துக்கொள்ளும் சாதியின மக்களில் ஒரு சிலர் பாதிக்கப்பட்டாலும், சிறிது காலம் பொறுத்திருக்கலாமே! கலெக்டராக ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பதவியில் அமர்ந்தாலும் இன்றும் அவரைக் கீழ்ப்பதவிகளில் உள்ள உயர்சாதியின மக்கள் கேவலமாகக் கருதுகிறார்களே! கண்கூடாக இது நடக்கிறது. 3) இட ஒதுக்கீடா இன்றைய வேலையில்லாத்திண்டாட்டத்திற்குக் காரணம்? அதற்கான காரணங்கள்பற்றிச் சிந்திக்கலாமே? 4) பொருளாதார நிலையையும் தாண்டி, இன்னும் சாதி அமைப்பானது மக்களைப் பாதிப்பது என்பது உண்மை. 5) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடியும் உதையும் பட்டுக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்று தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முற்பட்டபிறகுதானே அவர்கள் இன்று காலில் செருப்புகளோடு, சட்டை அணிந்து, தெருக்களில் நடமாட முடிகிறது? சில இடங்களிலாவது!! எனவே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளின் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுவது சரியல்ல.
எனக்கு இப்போது வயது 67 ! சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டைத்தைச் சேர்ந்த கொற்கை என்ற ஊரில் நான் பார்த்த உண்மைச் சம்பவங்கள்! பாட்டி வீட்டில் நிலத்தில் உழுது பயிர் செய்யும் விவசாயித்தோழர், பாட்டியின் வீட்டுக்குள் நுழையமுடியாது. தாழ்வாரத்தில்தான் நிற்கவேண்டும்! அவருக்குச் சாப்பாடு தேவையென்றால், அவரே வாழையிலைகளை வெட்டிவந்து, தாழ்வாரத்தில் உட்கார்ந்து, சாப்பிடவேண்டும்! பாட்டியை நாச்சியார் என்றும் தாத்தாவை நயினா என்றுதான் கூப்பிடவேண்டும. அவ்வளவு ஏன்? பாட்டியின் சிறுவயது ஆண் பேரனைக்கூட நயினா என்றும் பேத்தியை நாச்சியார் என்றுதான் கூப்பிடவேண்டும. பாட்டியின் வீட்டுக் குழந்தைகள் அந்த விவசாயித்தோழரைத் தொட்டுவிட்டால், தனது ஆடைகளைக் கழற்றித் துவைக்கப் போட்டுவிட்டுத்தான், வீட்டுக்குள் குழந்தை நுழையவேண்டும! இதெல்லாம் என்ன கொடுமைகள்? விவசாயித்தோழர் வீட்டுக்குழந்தைகள் பள்ளிக்குச் சென்று நான் பார்ததுகிடையாது. நிலத்தில்தான் வேலைசெய்யவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மிகக் கேவலமான சூழலிருந்து ... சற்று .... சற்றுத்தான்.... தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கருதப்பட்ட மக்கள் வெளிவந்துள்ளனர். உயர்கல்வியைப் பெறுவதிலும் அரசு பதவிகளையும் பெறுவதிலும் சில சலுகைகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் செல்வந்தர்களாக இருக்கலாம். ஆனாலும் அவர்களின் தாத்தா, பாட்டிகள் எந்த ஒரு அவலச் சூழல்களில் வாழ்ந்து வந்தனர் என்பதைச் சற்றுச் சிந்திக்கவேண்டும். எனவே இட ஒதுக்கீடு காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் நீடிக்கிறது என்றும் திறமையானவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறுவதும் சரியல்ல என்பது எனது கருத்து!
அனைத்து சாதிகளிலும் வர்க்கப் பிரிவினைகள் உண்டு. எனவே ஒரு சாதியில் - அது எந்த சாதியாக இருந்தாலும் - உயர் வர்க்கத்தினர் பின்தங்கிய, வர்க்கத்தினரை - செல்வத்தில் பின்தங்கியவர்களை - மதிப்பதில்லை. அது வர்க்க குணம்.... எனவே தாழ்த்தப்பட்ட ... அதேவேளையில் பின்தங்கிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் - இரண்டு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். ஒன்று சாதிய ஒடுக்குமுறை... மற்றொன்று வர்க்க அடிப்படையிலான ஒடுக்குமுறை.. எனவே அனைத்து சாதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் ஒன்றிணைந்து .... சாதியைத் தூக்கிப்பிடிக்கும் சுயநலவாதிகளையும் எதிர்க்கவேண்டும்... அதேவேளையில் ஒட்டுமொத்தமான அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடவேண்டும். இந்த இரண்டாவது வகையான போராட்டமே மக்களிடையே நிலவும் சாதி வேறுபாட்டை அகற்றும். இப்போராட்டத்தின் வெற்றியே.... வர்க்க வேறுபாடுகளையும் அகற்றும்... சாதியப் பிரிவினைக்கும் முடிவுகட்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India