சாதிய மோதல்களுக்குத் தீர்வு என்ன?
----------------------------------------------------------------
----------------------------------------------------------------
மருத்துவர் பொன்முடி ஐயா அவர்கள் கூறியுள்ளது:
// மாற்றம்வருவதென்பது அதற்கிணையானதன்று. சமூகவமைப்பில் சாதியைப்பொருத்தவரை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவென்பது உண்மையேயென்றாலும் அதனால் சாதிக்கட்டுமானமென்பது எந்தவகையிலும் மாறிவிடவில்லை. ...........................
சாதியை ஒழிப்பதென்பதொன்றும் எளிதானவொன்றாகத்தெரியவில்லை. அது நம் சமூகத்தில் ஒவ்வொருமனிதனுக்குள்ளும் ஆழமாய்ப்பதிந்துள்ளது. இதில் ஆண்பெண்வேறுபாடேதும் இல்லையென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.//
எனது பதில் :
மருத்துவர் ஐயா அவர்களே! தாங்கள் கூறியுள்ளவை உண்மைகளே! ஆனாலும் ஒரு கருத்து! 100 ஆண்டுகளுக்குமுன்னர் இன்றைக்கு நாம் பார்க்கிற நேரடியான சாதி மோதல்கள் இல்லை! அதற்குக் காரணம் ... அன்று சாதியக் கொடுமைகள் இல்லை என்பது இல்லை. இன்று இருப்பதைவிட பன்மடங்கு அதிகமாக இருந்துள்ளது. ஒடுக்கப்பட்ட ... அடக்கப்பட்ட .. தாழ்த்தப்பட்ட சாதிகள் பொருளாதார ரீதியாகக் கிராமப்புற நிலப்பிரபுத்துவ அமைப்போடு மிக வலுமையாகப் பிணைக்கப்பட்டிருந்தது. சிந்தனைரீதியாகவும் '' அதுவே இயற்கை'' என்று திணிக்கப்பட்டிருந்தது. (உயர்சாதி) ஆண்டையின் நிலத்தோடு (தாழ்த்தப்பட்ட சாதியின்) அடிமை பிணைக்கப்பட்டிருந்தான். அங்கு நீடித்த வேலைப்பிரிவினையோடு பிணைக்கப்பட்டிருந்தான். அந்தப் பிணைப்பு மிக வலுமையாக நீடித்தது. எனவே ஆண்டைகளை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட உழைப்பாளிகள் போராட இயலவில்லை. ஆங்காங்கே சிற்சில போராட்டங்கள் நீடித்து இருக்கலாம்.
ஆனால் இன்று அந்தக் கிராமப்புற அமைப்பு .... முழுமையாகத் தகர்க்கப்படவில்லை என்றாலும் ... அது பல முனைகளில் தகர்க்கப்பட்டு ... பலவீனமுடைந்துள்ளது என்பது உண்மை. தாழ்த்தப்பட்ட ... ஒடுக்கப்பட்ட மக்கள் ... நிலத்தோடு ... பிற வேலைப்பிரிவினைகளோடு பிணைக்கப்பட்ட அடிமைச் சங்கிலிகள் இன்று வலுவிழந்துவிட்டன. நகரமயமாக்கமும் மக்களிடையே இட நகர்வும் வளர்ந்துள்ளன. இதன் பயனாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மனதில் '' உரிமை உணர்வு'' வளர்ந்துள்ளது. இதைப் பார்க்கிற '' உயர் மற்றும் இடைமட்ட'' சாதிகளைச் சேர்ந்த ஆண்டைகள் .... தங்கள் சாதியின மக்களிடையே '' கருத்துரீதியில்'' சாதியத்தைத் தக்க வைக்க முயல்கிறார்கள். எனவேதான், சாதியச் சிந்தனைகளும் சாதிய மோதல்களும் வளர்ந்துள்ளன. பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சாதியமைப்பு... வேலைப்பிரிவினை... தன்னைக் ''கருத்துரீதியில்'' தக்கவைக்க முயல்கிறது. எனவேதான் ''இட ஒதுக்கீட்டை' எதிர்ப்பதையும், '' சாதி மறுப்புத் திருமணங்களை'' எதிர்ப்பதையும், '' சுடுகாட்டுப் பிரச்சனையை'' உருவாக்குவதையும் '' கோயில் வழிபாட்டுப் பிரச்சினையை'' உருவாக்குவதையும் இங்கு 'உயர், இடைமட்ட'' சாதிகளைச் சேர்ந்த ... ஆனால் உயர்வர்க்கத்தினர்... திட்டமிட்டு வளர்த்துவருகிறார்கள்! அவர்கள் ... இந்த உயர்வர்க்கத்தினர் ... தங்களைப் பாதுகாத்துக்கொள்ள.. தங்கள் சாதிகளைச் சேர்ந்த அடிமட்ட வர்க்கத்தைச் சேர்ந்த மக்களைத் தூண்டிவிடுகின்றனர். ''வன்முறையிலாவது சாதியுணர்வைத் தக்கவையுங்கள்... சட்டப் பிரச்சினை வந்தால், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'' என்று ''பின்னாலிருந்து'' சாதிமோதல்களை இயக்குகின்றனர். இதுவே 100 விழுக்காடு உண்மை! இதற்குத் தீர்வு ... அனைத்து சாதிகளிலும் உள்ள அடித்தள மக்கள் ... இந்த ''உயர்வர்க்கத்தினரின்'' சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல், ஒன்றிணைந்து , ஒட்டுமொத்தமான அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களுக்காகப் போராடுவதேயாகும். தங்கள் சாதிகளைத்தாண்டி, இளைஞர்கள் சமுதாய மாற்றத்திற்காகப் போராட முன்வரவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக