வெள்ளி, 3 ஜூலை, 2020

பேராசிரியர் தி. முருகரத்தினம்

பேராசிரியர் தி. முருகரத்தினம் (1934) … பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையில் தமிழிலக்கியங்களை ஆராய்ந்து வருகிற ஒரு பெரும்பேராசிரியர். இலக்கியங்களின் கருத்துகளைப் பெரியாரிய அடிப்படையிலும் மொழிநடையை

மொழியியல் பார்வையிலும் ஆராய்ந்து, பல நூல்களை வெளியிட்டுள்ளார். வருணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் திருக்குறள் உட்பட பல்வேறு தமிழிலக்கியங்களை நோக்குகிற ஆய்வுகளை எதிர்த்துத் துணிவாகப் பல புதிய கருத்துகளைப் பேராசிரியர் முன்வைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ (ஹானர்ஸ்), எம்ஏ ஆகிய பட்டங்களைப் பெற்றார். ‘ஆண்டாள் பாசுரங்கள் – ஒரு மொழியியல் பார்வை’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு (1961-64), எம் லிட் பட்டம் பெற்றார். ‘அகநானூற்றின் மொழிநடை’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, 1966-இல் முனைவர் பட்டம் பெற்றார். தமிழகத்திலும் பூனா டெக்கான் கல்லூரியிலும் நடைபெற்ற பல்வேறு மொழியியல் வகுப்புகளில் கலந்துகொண்டு, மொழியியல் துறையிலும் தேர்ச்சிபெற்றார். மானிடவியல் துறையிலும் பட்டயம் பெற்றுள்ளார். 1956-66 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிவிட்டு, 1969 ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வகப்பணியில் பேராசிரியராகப் பணியேற்றார். அப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராகவும் புலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1981-இல் பேரா. வ.அய். சுப்பிரமணியம் இவரைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து, ‘ தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக’ நியமித்தார். அப்பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் பதிவாளர் பொறுப்பிலும் இருந்துள்ளார். 1995 –இல் பணி ஓய்வு பெற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற அண்டைநாடுகளில் தமிழ்க்கல்வி எவ்வாறு நடைபெற்றுவருகிறது என்பதுபற்றிய ஆய்வை மேற்கொண்டார். அமெரிக்காவில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டின் இந்தியப் பொறுப்பாளராகவும் ஒன்றிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து, கனடா, மொரிஷியஸ், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்சு, ஸ்வீடன், ரஷ்யா, பின்லாந்து, எஸ்தோனியா, லாட்ஸ்வியா என்று பல அயல்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, தனது ஆய்வுகளைத் தொடர்ந்துள்ளார். தமிழ் மொழியியல், பொதுமொழியியல், இந்தியவியல், சமூகவியல் நோக்கில் சமயம், இலக்கியம் என்று இவரது ஆய்வுகள் பரந்து விரிந்துள்ளன. திராவிடமொழியியல் கழகத்தின் ஆய்வாளராகவும் பணியாற்றி (1979), ‘பழந்தமிழில் வேர்ச்சொற்கள்’ பற்றிய ஆய்வை மேற்கொண்டார். திருக்குறள் அறத்துப்பாலுக்கு உரை எழுதியுள்ளார். ‘எழுத்தியல் இன்றும் அன்றும்’ , ‘ மொழியாய்வுக் கட்டுரைகள்’ போன்ற மொழியியல் நூல்களையும், ‘புதுமைப்பித்தன் சிறுகதைக் கலை’ போன்ற இன்றைய தமிழ் இலக்கிய ஆய்வுகளையும், ‘குறள் கண்ட பொருள் வாழ்வு’, ‘ குறள் கூறும் இறைமாட்சி’, ‘குறள் கூறும் அரசு’, ‘குறள் நெறி’, ‘ வள்ளுவரை அறிந்தோமா?’ போன்ற திருக்குறள் பற்றிய ஆய்வு நூல்களையும் , வருணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் தமிழர் வரலாறு, இலக்கியம் ஆகியவற்றை ஆய்ந்த அயல்நாட்டு அறிஞர்களுக்கு எதிரான பல ஆய்வுநூல்களையும் பேராசிரியர் வெளியிட்டுள்ளார். ‘ஞாலத் தமிழ் மன்றம்’, ‘ வள்ளுவம்’ போன்ற மன்றங்களை நிறுவிப் பணிசெய்துள்ளார். தொல்லியல் ஆய்வுகளையும் திருக்குறள் பதிப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இவரது தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, குன்றக்குடி ஆதீனமும் திருப்பத்தூர்த் தமிழ்ச்சங்கமும் இணைந்து குன்றக்குடி அடிகளார் தலைமையில் இவருக்குத் ‘ தமிழாகரர் ‘ என்ற சிறப்புப் பட்டத்தை அளித்தன. தமிழகத்தில் வருணாசிரம அடிப்படையிலான ஆய்வுகளை மறுத்து, பெரியாரியப் பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களையும் தமிழ்ச் சமூகத்தையும் ஆராய்ந்துள்ள பேராசிரியர் தமிழ்மொழியைத் தற்கால மொழியியல் நோக்கில் ஆராய்ந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
பேராசிரியர்பற்றிப் பல தகவல்களை அளித்து உதவிய சேலம் அரசுக் கலைக் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் ஜ. பிரேமலதா அவர்களுக்கு மிக்க நன்றி. பேராசிரியர்பற்றிய இவரது நூல் ஒன்றும் அண்மையில் வெளிவந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India