புதன், 1 மார்ச், 2023

'அது' - வினைமுற்றுக்கான திணை-எண்-பால் விகுதி ; வினையாலணையும் பெயர் விகுதி ; தொழிற்பெயர் விகுதி

 

'அது' - வினைமுற்றுக்கான திணை-எண்-பால் விகுதி ; வினையாலணையும் பெயர் விகுதி ; தொழிற்பெயர் விகுதி

-------------------------------------------------------------------------------------------------------------------------

படிப்பு' 'படித்தல்' 'படிப்பது' - இலக்கண வகைப்பாடுகள் . . .  ஐயம்!

------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு இலக்கண ஐயத்தை முன்வைக்க விரும்புகிறேன். 

பெயர், வினை, தொழிற்பெயர், வினையாலணையும்பெயர் . . .

இவற்றில் ''பெயர்ச்சொல்'' என்பது தனக்கு முன்னால் பெயரடைகளை ஏற்கும்; தனக்குப்பின்னர் பன்மைவிகுதியையும் வேற்றுமை விகுதியையும் ஏற்கும்; + பெயரடை , + பன்மை, வேற்றுமை ( 'நல்ல பையன்களை')

''வினைச்சொல்'' என்பது தனக்கு முன்னால் வினையடை ஏற்கும்; தனக்குப்பின்னர் கால விகுதி, எச்ச விகுதிகளை ஏற்கும்; + வினையடை, + காலம், எச்சவிகுதி ( அழகாக இருக்கிறான், அழகாக இருக்க, அழகாக இருந்து . . . )

தொழிற்பெயர் என்பது தனக்குமுன்னர் வினையடை ஏற்கும்; தனக்குப்பின்னர் வேற்றுமை விகுதி ஏற்கும்; + வினையடை, + வேற்றுமை விகுதி. ( நன்றாக ஒடுவதை, நன்றாக ஓடுதலை ).

''வினையாலணையும்பெயர்'' என்பது தனக்குமுன்னர் வினையடை ஏற்கும்; தனக்குப்பின்னர் பன்மை, வேற்றுமை விகுதிகளை ஏற்கும்; + வினையடை, + பன்மை, வேற்றுமை விகுதிகள் ( அழகாக இருந்தவனை, அழகாக இருந்தவர்களை) . + வினையடை, + பன்மை, வேற்றுமை விகுதிகள்.

படி - வினைச்சொல்; படித்தல், படிப்பது - தொழிற்பெயர் , படிப்பவன் - வினையாலணையும்பெயர், படிப்பு - பெயர்.

'படிப்பு' என்பது தனக்குமுன்னர் பெயரடை ஏற்கும்; தனக்குப்பின்னர் பன்மை, வேற்றுமை விகுதிகள் ஏற்கும்.

எனவே, பெயர்த்தன்மை, வினைத்தன்மை இரண்டையும் ஏற்பதால் , இவற்றை 'முழுப்பெயர்' என்று கொள்ளாமல், இலக்கண ஆசிரியர்கள்  தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் என்று அழைக்கிறார்கள் எனக் கருதுகிறேன்.

எனவே 'படிப்பு' என்பது 'படி' என்ற வினையடியிலிருந்து பிறந்தாலும், முழுப்பெயராக நீடிக்கிறது. எனவே இதைப் ''படித்தல்' , 'படிப்பது' போன்ற தொழிற்பெயரோடு இணைத்துக் கூறலாமா? 

சிலர் அவ்வாறு கூறுவதைப் பார்க்கிறேன். எனவேதான் இந்த ஐயம்.

மேலும் வரலாற்றில் சில தொழிற்பெயர்கள் முழுப் பெயர்களாகவே மாறி அமைகின்றன. 'பாடு - பாடல்' 'ஆடு- ஆடல்' . ஆனால் 'ஆடு - ஆட்டம்' 'பாடு - பாட்டம்' என்று 'ஆட்டம்' 'பாட்டம்' என்ற முழுப் பெயர்ச்சொற்களும் இருக்கின்றன. 'ஆட்டபாட்டம் அதிகமாக இருக்கிறதே' !

ஒரு சொல்லின் இலக்கண வகைப்பாடானது அதனுடைய செயல்பாடுகள் , அதனுடன் இணையும் இலக்கண விகுதிகள் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் உள்ளது. இங்கு 'படிப்பு' என்ற சொல்லானது 'படித்தல், படிக்கிறது, படித்தது, படிப்பது' ஆகிய தொழிற்பெயர் சொற்களோடு தான் ஏற்கும் விகுதிகளில் வேறுபடுகிறது. மேலும் பெயர்ச்சொற்கள் ஏற்கும் விகுதிகளையே ஏற்கிறது. அதாவது + பெயரடை, + பன்மை, + வேற்றுமை. ஆனால் தொழிற்பெயர்கள் + வினையடை, + வேற்றுமை ( பன்மை விகுதி இணையாது என்று கருதுகிறேன்.) என்றுதான் அமைகின்றன. எனவே 'படிப்பு' என்பதும், 'படித்தல்' என்பதும் இரண்டுமே வினையடிலிருந்து தோன்றினாலும், இலக்கணச் செயல்பாடுகளில் வேறுபட்டு இருப்பதால், இவற்றை வேறுபடுத்தித்தான் பார்க்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

பழைய இலக்கண நூல்கள் இவற்றை ஒன்றாகப் பார்த்திருந்தாலும் ( இதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரியாது!) இன்று இவற்றை வேறுபடுத்தித்தான் பார்க்கவேண்டுமென்று நான் கருதுகிறேன்.

(1) ''இவற்றில் மிகச் சிறந்த படிப்புக்களைக் கூறு!'' ('சிறந்த' பெயரடை; 'கள்' பன்மை விகுதி; ''ஐ'' வேற்றுமை விகுதி ) +பெயரடை, + பன்மை, + வேற்றுமை

(2) '' அவர் மிக வேகமாகப் படிப்பதால் எனக்கு விளங்கவில்லை'' ; ('வேகமாக' வினையடை; 'ஆல்' வேற்றுமை விகுதி ) + வினையடை , + வேற்றுமை விகுதி

(3) '' மிக வேகமாகப் படித்தலை நான் ரசிக்கிறேன்''; ('வேகமாக' வினையடை; 'ஐ' வேற்றுமை விகுதி ) + வினையடை, + வேற்றுமை விகுதி

(4) '' மிக வேகமாகப் படிக்கிறவரை நான் விரும்புகிறேன்'' ; ('வேகமாக' வினையடை; 'ஐ' வேற்றுமைவிகுதி ) + வினையடை + வேற்றுமை விகுதி

(5) ''மிக வேகமாகப் படிக்கிறவர்களை நான் விரும்புகிறேன்.''('வேகமாக' வினையடை; 'கள்' பன்மை விகுதி; "ஐ' வேற்றுமை விகுதி) + வினையடை + பன்மை விகுதி + வேற்றுமை விகுதி

1- முழுமையான பெயர்ச்சொல் ('படிப்பு')

2- தொழிற்பெயர் ('(படிப்பது')

3- தொழிற்பெயர் ('படித்தல்')

4- வினையாலணையும் பெயர் ('படிக்கிறவர்')

5- வினையாலணையும் பெயர் ('படிக்கிறவர்')

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 'படித்து' -> படி + த்து -- செய்து வாய்பாட்டு வினையெச்சம்தானே! இதைத் தொழிற்பெயர் என்று அழைக்கமுடியுமா? பெயருக்குள்ள மூன்று பண்புகளில் ( + பெயரடை, + பன்மை, + வேற்றுமை ) ஒன்றுகூட 'படித்து' என்பதில் இல்லையே! ஆனால் ''வேகமாகப் படித்து'' என்பதில் + வினையடை + காலம் இருகின்றன. எனவே இது வினைத்தன்மையுள்ள , ஆனால் முற்றுப்பெறாத எச்சம்தானே - வினையெச்சம்தானே! 'படித்து' என்பதில் உள்ள 'த்து' என்பதை இரண்டுவகைகளில் விளக்கலாம். ஒன்று, படி + த்த் + உ (வினையடி + இறந்தகாலம் + வினையெச்ச விகுதி); பேரா. பொற்கோ அவர்கள் இவ்வாறு பிரிக்காமல் , படி + த்து என்று பிரித்து, த்து என்பது செய்துவாய்பாட்டு வினையெச்சவிகுதி என்று கூறுவார். மூன்று கால வினைமுற்றுத் தொடர்களிலும் இது வரும். - நான் படித்து வருகிறேன், நான் படித்து வந்தேன், நான் படித்து வருவேன். இத்தொடர்களில் காலம் என்பது வினைமுற்றுத் தொடர்களில்தான் - வருகிறேன், வந்தேன், வருவேன் - வெளிப்படுகிறது. 'படித்து' என்பதில் இல்லை!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் இவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பதால் கணினிமொழியியல் அடிப்படையில் ஒரு பயன் உண்டு. செயற்கை அறிவுத்திறன் முறையில் ஒரு சொல்லின் இலக்கண வகைப்பாட்டைக் கண்டறியவும் ஒரு சொல்லின் உச்சரிப்பைக் கண்டறிவதற்கும் N-gram model, Hidden Markov model என்ற வழிமுறை மாதிரிகளைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் அடிப்படை . . . ஒரு சொல்லின் இலக்கணம் அல்லது உச்சரிப்பைக் கண்டறிய அவற்றிற்கு முன்பு வருகிற சொல் அல்லது இலக்கணச் சொல்லைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில்தான் இன்று Machine Learning, Neural Network, Deep Learning, Artificial Intelligence போன்ற வழிமுறைகள் அமைந்து, இயற்கைமொழி ஆய்வுக்கு மிகவும் உதவுகின்றன. இவற்றின் அடிப்படையில்தான் ''மொழி மாதிரி ( Language Modelling) இவற்றில் உருவாக்கப்படுகின்றன. எனவே கணினித்தமிழ் ஆய்வுக்கும் இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றவேண்டுமென்றால், ஒவ்வொரு சொல்லின் இலக்கண வகைப்பாட்டையும் அந்தச் சொல்லின் செயல்பாடுகளை ( behavior) வைத்துக்கொண்டு ஆராயவேண்டும். ''ஒருவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், அவருடைய நண்பர்களை வைத்துக்கொண்டு தெரிந்துகொள்ளலாம்'' என்ற பழமொழிபோன்று இந்த வழிமுறைகள் அமைகின்றன.

எனவே, தமிழ்மொழி ஆய்வாளர்கள் இதை மனதில்கொண்டு, தமிழில் ஒவ்வொரு சொல்லையும் ( வேர்ச்சொல், அடிச்சொல், விகுதியேற்ற சொல்) அதனுடைய பண்புக்கூறுகளின் - செயல்பாடுகளின் - அடிப்படையில் வேறுபடுத்தி வகைப்படுத்தவேண்டும். ஒருவேளை பழந்தமிழ் இலக்கணங்களில் இதுபோன்ற வகைப்பாடுகள் இல்லை என்றால், அதற்காக இன்று நாம் அந்த வகைப்பாடுகளைக் கொள்ளக்கூடாது என்று கருதக்கூடாது என்பது எனது கருத்து.

-----------------------------------------------------------------------------------------------------------------------------வறு (வினைச்சொல்) - வறுவல் என்பது வறு + அ [(உடம்படுமெய்) + அல் (தொழிற்பெயர்) ; வறு + த்தல் (தொழிற்பெயர்; இந்த இரண்டு தொழிற்பெயர்களில் முதலாவதான ''வறுவல்'' என்பது இன்று முழுப்பெயராகச் செயல்படுகிறது என்று கூறலாமே!

வற்று (வினைச்சொல்) - வற்றல் என்பது வற்று + அல் ( தொழிற்பெயர்) . இன்று இந்த 'வற்றல்' என்ற வடிவம் தொழிற்பெயராகவும் நீடிக்கிறது; (கூழ்)வற்றல் , (மிளகாய்) வற்றல் என்று முழுப்பெயராகவும் செயல்படுகிறது என்று கூறலாமே! மாணவர்களுக்கும் இது எளிமையாக இருக்குமே! இன்றைய மாற்றத்தை அடிப்படையாகக்கொண்டு இலக்கணம் கற்றுக்கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

இது ஒரு பரிந்துரைதான்!

--------------------------------------------------------------------------------------------------------------------

வறுவல் - இன்று முழுப்பெயராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது!

வற்றல் - இன்று முழுப்பெயராகவும் பயன்படுகிறது - (கூழ்) வற்றல்;

- தொழிற்பெயராகவும் பயன்படுகிறது - ''கோடைகாலத்தில்

வாய்க்காலில் தண்ணீர் வற்றல் நீடிக்கும்.''

இவ்வாறு கூறுவதில் என்ன தவறு? இலக்கணம் எளிமையாக மாணவர்களுக்குப் புரியுமே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் ஒற்றுமையும் இருக்கிறது; வேற்றுமையும் இருக்கிறது. இரண்டுமே தனக்கு முன்னர் வினையடை எடுப்பதில் ஒன்றாக இருக்கின்றன. ஆகவே பெயர்ச்சொல்லோடு இரண்டும் வேறுபட்டு நிற்கின்றன. ஆனால் இந்த இரண்டுக்கும் - தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் இரண்டுக்கும் - இடையில் உள்ள வேற்றுமையானது வினையாலணையும் பெயர் பன்மை விகுதி ஏற்கும் - (வந்தவன், வந்தவர்கள்); தொழிற்பெயர் பன்மை விகுதி எடுக்காது. ஆனால் இரண்டுமே வேற்றுமை விகுதியை எடுக்கும். மொத்தத்தில் மூன்றுமே - பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் மூன்றுமே - வேற்றுமை ஏற்கும். எனவேதான் மூன்றிலும் 'பெயர்' என்பது நீடிக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய தமிழ் இலக்கணத்தைத் தெளிவான - கணிதப்பண்பு உடைய இலக்கணமாக - எழுதினால்தான் கணினித்தமிழ் வளர்ச்சி ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உண்மையில் கணினிக்கான மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபடுவதால்தான் இதுபோன்ற விவாதங்களில் என்னால் கலந்துகொள்ளமுடிகிறது. உண்மையில் பார்த்தால், எனது பணி ஓய்வுக்குப்பிறகுதான் - இப்போதுதான் - தமிழ் இலக்கணத்தைத் தரவுகளின் அடிப்படையில் கற்றுவருகிறேன். அதாவது தேவை இருக்கிறது - கணினிக்குப் புரிய வைக்க முயலும்போது!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மொழிபெயர் (பெயரோடு வினைசேர்ந்த வினை) - மொழிபெயர்ப்பு ;

(மொழி + பெயர்) + ப்பு

மொழி + பெயர்ப்பு என்பது இல்லை.

மொழிபடி = (மொழி + படி) + ப்பு

பெயர் + வினை என்பதில் ஒற்று மிகாது.

ஆனால் பெயர் + பெயர் என்பதில் ஒற்று மிகும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

"அது' என்ற விகுதி வடிவம் மூன்று வேறுபட்ட இலக்கணக்கூறுகளை வெளிப்படுத்துகிறது.

1) அவர் படிப்பது சங்க இலக்கியம். (இதில் படிப்பது என்பது வினையாலணையும் பெயர்)

2) அவர் அவ்வாறு படிப்பது எனக்குப் பிடிக்கவில்லை ( இதில் படிப்பது என்பது தொழிற்பெயர்)

எனவே (1) வினையாலணையும் பெயரைக் குறிக்கும் 'அது' என்ற விகுதியைக் கொண்டுள்ளது.

(2) தொழிற்பெயரைக் குறிக்கும் 'அது' என்ற விகுதியைக் கொண்டுள்ளது.

இரண்டிலும் 'அது' விகுதி வந்தாலும், இரண்டிலும் 'அது' வேறுபட்ட இலக்கணச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

3) அது படித்தது - என்பதில் அது என்பது வினைமுற்று விகுதியாகப் பயன்படுகிறது. திணை-எண்-பால் விகுதியாக - வினைமுற்று பண்பைக் குறிக்கும் ஒன்றாகப் பயன்படுகிறது.

இதில் தங்களுக்கு வேறுபாடு ஏதும் உண்டா?

வடிவம் ஒன்று; ஆனால் இலக்கணப் பண்பு வேறு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சில ஐயங்கள் நண்பரே!

1) 'இராமாயணம் படிப்பதால் அறம் வளரும் '' - தொழிற்பெயர் ? வினையாலணையும் பெயர்?

(இராமாயணம் படிக்கிறதால் அறம் வளரும், இராமாயணம் படித்ததால் அறம் வளர்ந்தது - இராமாயணம் படித்தலால் அறம் வளரும் - தொழிற்பெயராகத் தோன்றுகிறது.) தொழிற்பெயராகத்தான் எனக்குத் தென்படுகிறது.

2) 'தம்பி படிப்பது என்ன' - வினையாலணையும் பெயர். இது சரி.

3) 'குழந்தை பாட்டு பாடுகிறது' 'குழந்தைகள் பாட்டு பாடுகின்றன' ? இதில் பாடுகிறது, பாடுகின்றன என்பவற்றை பொருளற்ற வினைமுற்று என்று கூறலாமா?

4) 'அவன் வந்தான்' - அது எனக்குத் தெரியும்' --> அது ( அவன் வந்தான்) எனக்குத் தெரியும். --> அவன் வந்தது எனக்குத் தெரியும். இதில் 'அவன் வந்தது' என்பது மொத்தத்தில் வினையாலணையும் பெயராக மாறுகிறது என்று கருதுகிறேன். ஒரு வாக்கியத்தை nominalization மூலம் பெயராக மாற்றுவதாக இது அமைகிறது. தனியாக 'வந்தது' என்பதைப் பார்த்தால், தொழிற்பெயராகத் தெரியும்.

அவன் வந்தது எனக்குத் தெரியும். அவன் வருகிறது எனக்குத் தெரியும். அவன் வருவது எனக்குத் தெரியும்.

எனக்குச் சற்றுக் குழப்பம்தான். தவறு இருந்தால் திருத்தி உதவவும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் சில விளக்கங்கள்.

1) குழந்தை பாடம் படித்தது. - வினைமுற்று

2) குழந்தை நேற்றுப் படித்தது அறிவியல்பாடம்தான் - வினையாலணையும் பெயர்

3) குழந்தை வேகமாகப் படித்தது (படிப்பது, படிக்கிறது) வியப்பாக இருக்கிறது. - தொழிற்பெயராகத் தெரிகிறது. ('குழந்தை வேகமாகப் படித்தல் வியப்பாக இருக்கிறது' என்பதுதான் பழங்காலத் தொழிற்பெயர்.)

'அது' - வினைமுற்றுக்கான திணை-எண்-பால் விகுதி, வினையாலணையும் பெயர் விகுதி, தொழிற்பெயர் விகுதி ஆகிய மூன்றாகவும் இன்றைய தமிழில் பயன்படுகிறது. பழங்காலத்தில் தொழிற்பயர் விகுதி காலங்காட்டாது. படித்தல் என்பது மட்டுமே தொழிற்பெயர். இன்றைய தமிழில் மூன்று காலத்தையும் காட்டக்கூடிய படிக்கிறது, படித்தது, படிப்பது என்ற வடிவங்களையும் தொழிற்பெயர் எடுக்கிறது.

'' காலத் தொழில்பெயர்- வினையடியாகப் பிறந்து கால இடைநிலைகளைப் பெற்றுக் காலம், எதிர்மறைகளைக் காட்டும் தொழில்பெயர் காலத் தொழில்பெயர் எனப்படும். 'வந்தது, வருவது, வராமல் இருப்பது, வருகின்றது ஆகியவை காலத் தொழில்பெயர்கள். இவை வருதல் தொழிலையும் முறையே இறந்தகால, நிகழ்கால, எதிர்கால இடைநிலைகளைக்கொண்டு இக்காலங்களைக் காட்டுவது காணத்தக்கது. ''அவன் வந்ததைக் கண்டேன், வருகின்றதைக் கண்டேன், வருவதைக் காண்பேன் / கண்டேன்'' போன்று வேற்றுமை ஏற்று வருவதும், ''அவன் அங்கு / வேகமாக வருவதைக் கண்டேன்' போன்று பல்வேறு வினையடைகளையும் பிறவற்றையும் ஏற்றுவருவதும் காணத்தக்கது. மேலும் இது 'வராதது' என எதிர்மறையிலும் வரும். இதன் அமைப்பு ''வினையடி + காலம் / எதிர்மறை + அது / மை '' எனக் காட்டலாம். இதன் உருபு , -அது, / மை என்பன ஆகும்.

'அவன் வந்தது/ வருகின்றது / வருவது / வராதது நல்லது'' என வருதல் காண்க. குறிப்புவினையிலும் இது 'இல்லாதது' போன்று வருதல் காணத் தக்கது. அவன் '' அங்கு உள்ளது / இல்லாதது எனக்குத் தெரியும்'' என்பதுபோன்று இவை வருதல் காண்க. முன்னர்க் குறிப்பிட்டதுபோன்று இவ்வகைத் தொழில் பெயர்களே தற்காலத் தமிழில் அதிகமாகப் பயன்படுகின்றது. (பழந்தமிழில் வந்தமை, வாராமை போன்ற மையீற்றுத் தொழில் பெயர்களும் உள்ளன'' - முனைவர் ச. அகத்தியலிங்கம் 'தமிழ்மொழி அமைப்பியல்''மெய்யப்பன் பதிப்பகம் , பக்கம் 233.

பேராசிரியர் பொற்கோ அவர்களும் ''இக்காலத் தமிழிலக்கணம்'' என்ற நூலில் ''வினைநடைப் பெயர்'' என்று அழைப்பார். இதுபற்றி இந்த நூலில் பக்கம் 94-97 பார்க்கவும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சொற்களின் வரிசை மாறாமலும் இருக்கலாம். ''குழந்தை பாடம் படித்தது மிக வியப்பாக இருக்கிறது என்ற தொடரில் ''(குழந்தை பாடம் படித்தது - பெயர்த்தொடர் ) (மிக வியப்பாக இருக்கிறது - வினைத்தொடர்.)'' இங்குப் ''படித்தது'' என்பது தொழிற்பெயர் அல்லது வினை நடைப் பெயராகத்தான் தோன்றுகிறது. ஆனால் ''குழந்தை நேற்று பாடம் படித்தது என்று ஆசிரியர் கூறினார்'' - இதில் 'படித்தது'' வினைமுற்று. ''குழந்தை நேற்று படித்தது அறிவியல் பாடம்'' என்பதில் ''படித்தது'' என்பது வினையாலணையும் பெயராகத் தோன்றுகிறது. முழுத்தொடரை அடிப்படையாகக்கொண்டுதான் இதைத் தீர்மானிக்கவேண்டும். தனிச்சொல்லாகப் பார்த்தால், மூன்று சொல் வகைப்பாடுகளும் இதற்குப் பொருந்தும். எனவே ''அது'' என்பதைக் கணினி முதலில் வினைமுற்று விகுதி, வினையாலணையும்பெயருக்குரிய எண்-பால் விகுதி, தொழிற்பெயருக்குரிய விகுதி என்று மூன்று வகைப்பாடுகளையும் அளிக்கும். இந்த மயக்கத்தைக் கணினியானது n-gram model அல்லது HMM model அடிப்படையில் தீர்க்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இதனால்தானே இயற்கைமொழி ஆய்வு என்பது ஒரு கடுமையான பணியாக இருக்கிறது. இதைத் தீர்க்க மொழியியலார்கள் விதிகளைப் பயன்படுத்தும்போது, பெரிய கணினி நிறுவனங்கள் corpus, Probabilistic statistics போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன. அதுதானே Machine learning, neural network, deep learning, artificial intelligence என்று அழைக்கப்படுகின்றன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India