அறிவியல், தொழில்நுடப வளர்ச்சி மனிதனுக்கு எதிராக அமைந்துவிடுமா - அச்சம் தேவையா?
------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நண்பரின் கருத்து
----------------------------------------------------------------------
மனித சமூகம் நவீன தொழிற்நுட்பம் மூலம் வளர்த்து எடுக்கும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின் போதும் தனது உள்ளாந்த ஆற்றலை இழந்து கொண்டே வருகிறது என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்..
உண்மையில் மனிதன் அடிமை ஆகிக்கொண்டே இருக்கிறான்..
முதலில் மதத்திற்கும் தற்போது அறிவியலுக்கும்..
எனது பதில்
-------------------------------------------------------------------------
இக்கருத்து சரியானது என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதன் அறிவியலுக்கு அடிமையாகிறான் என்று கூறுவதைவிட, இயற்கைபற்றிய அறிவியலைத் தனக்கு அடிமையாக்குகிறான் என்பதே உண்மை. தனது திறனைக் கூட்டுவதற்கான அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுக்கிறான். அறிவியலும் தொழில்நுட்பமும் மனிதன் ஏற்கனவே செய்துவருகிற பணிகளை - உற்பத்தி போன்ற தளங்களிலான தனது பணிகளை - தான் உருவாக்கிய தொழில்நுடபத்தின்மூலம் செய்யவைக்கிறான். அதனால் இந்த தொழில்நுட்பத்தால் செய்யமுடியாத வேறு உயர்நிலைப் பணிகளை மேற்கொள்ள அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும், இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியால் முதலாளித்துவச் சமுதாய அமைப்பில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகலாம். அதற்குக் காரணம், இலாபத்தைமட்டுமே அது குறிக்கோளாகக் கொண்டிருப்பதேயாகும். ஆனால் சோசலிச சமுதாயத்தில் அவ்வாறு இருக்காது. மேலும் மேலும் புதிய உற்பத்திக் களங்கள் உருவாகும். எனவே அறிவியல் மனிதனை அடிமையாக்குகிறது என்ற கருத்து சரியில்லை என்றே நான் கருதுகிறேன். ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கானதே அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சி என்ற ஒரு நிலை ஏற்படும்போது, அது மனித சமுதாயத்திற்குச் சாதகமாகவே இருக்கும். மார்க்சியம் என்றுமே அறிவியலுக்கு எதிராக இருக்காது. இருக்கவும் முடியாது.
அறிவியல் என்பதே மனிதன் தான் வாழும் இயற்கைபற்றிய உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே ஆகும். இயற்கைபற்றிய ஆய்வுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. ஒரு உண்மையிலிருந்து அடுத்த உண்மைக்குச் செல்லும் தொடர்பயணமே அறிவியல். இதோடு இயற்கைபற்றிய அறிவியல் முடிந்துவிட்டது என்பது கிடையாது. ஆனால் 'மதம்' என்பது அப்படி இல்லை. வர்க்கச் சமுதாயம் உருவாக்கியுள்ள ஒரு அறிவியலற்ற ஒரு ''நம்பிக்கை''. மனித சமுதாய வளர்ச்சிக்கு எதிரானது. எனவே அதோடு அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சியை ஒப்பிடுவது எந்த அளவு சரி என்பதைக் கருதிப் பார்க்கவேண்டும்.
அறிவியல் வளர்ச்சியானது எவ்வாறு மனிதனின் உள்ளாற்றலை இழக்கச்செய்கிறது? ''உள்ளாற்றல்'' என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? அவனுடைய உடல் உழைப்பு, மூளை உழைப்பு இரண்டையும் சேர்த்துக்கூறுகிறீர்களா? மனித சமுதாயம் தனது புராதானச் சமுதாய அமைப்பிலிருந்து மாறி, தனது அடுத்த கட்ட வளர்ச்சிகளைப் பெறும்போது, மனிதனுடைய உழைப்பில் - உடல் உழைப்பு, மூளை உழைப்பு இரண்டின் விகிதங்கள் மாறுதலடைகின்றன.
இயந்திரங்கள் வளர்ச்சிபெறாத சூழலில் அவன் உடல் உழைப்பை அதிகம் செலவழிக்கவேண்டியதிருந்தது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர வளர , உடல் உழைப்பு குறையும்; மூளை உழைப்பின் (அறிவியல்.தொழில்நுட்ப வளர்ச்சி) வளர்ச்சியால் இந்த மாற்றம் , வளர்ச்சி ஏற்படுகிறது. அதன் பயனாக உறுதியாக இன்று மனித மூளையின் திறன், புராதானச் சமுதாயத்திலிருந்த மனிதனின் மூளைத் திறனைவிட, இன்று வளர்ந்திருக்கும். எவ்வளவு தூரம் உடல் உழைப்பைக் குறைக்கமுடியுமோ, குறைக்கலாம். அதனால் மனித சமுதாயத்திற்கு நட்டமில்லை.
ஆனால் உடல் உழைப்பு குறையக் குறை, அவனது உடல்திறன் (physical strength) குறைகிறது என்று தாங்கள் கூறலாம். ஆனால் மனிதனது அடிப்படை உடலியல், உடலியக்கவியலில் எந்தவிதப் பாதிப்பும் அதனால் கிடையாது. அதுதான் நமக்குத் தேவை. உழைப்புதானே மனிதனைக் குரங்கிலிருந்து இன்றைய மனிதனாக்கியது. ஆனால் அது அன்றைய அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சி மிக மிகக் குறைவு. எனவே உடல் உழைப்பு அதிகமாகத் தேவைப்பட்டது. ஆனால் இன்று அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல் உழைப்பின் அளவு குறைகிறது; மூளை உழைப்பு அதிகமாகிறது. இன்னும் பத்தாயிரக்கணக்கான, லட்சக்கான ஆண்டுகள் கழித்து, மனிதனின் உடல் அமைப்பு, மூளை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று நம்மால் கூறமுடியாது. ஆனால் இயற்கையின் வளர்ச்சியில் உறுதியாக அது அடுத்த உயர் கட்டத்தையே அடையும்.
அறிவியல், தொழில்நுட்பம் என்பது மனிதன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையைத் தெரிந்துகொண்டு, தனக்கேற்றவாறு இயற்கையின் பலன்களைப் பயன்படுத்துவதேயாகும். ஆனால் ஒரு அபாயம் முதலாளித்துவச் சமுதாயத்தில்! தனிநபர் இலாபங்களுக்காக, முதலாளித்துவத்தின் நீடிப்புக்காக - இயற்கையைப் புரிந்துகொண்டு, அதை லாபத்திற்காகப் பாதிக்கிறான். இயற்கையை வெறும் லாப ஈட்டுக்கான ஒரு கருவியே என்று பார்க்கிறான். அங்குத்தான் தவறு இருக்கிறது! சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு இதனால்தான் ஏற்படுகிறது. இதைத் தடுத்துநிறுத்தக்கூடிய சோசலிசக் கட்டுமானத்திற்காக நாம் போராடவேண்டுமே ஒழிய, ''மதம்'' போன்று அறிவியல், தொழில்நுட்பம் மனித சமுதாயத்தைப் பாதிக்கும் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக