சனி, 18 மார்ச், 2023

மொழியியல் என்பது ஆங்கில இலக்கணமா?

 

மொழியியல் என்பது ஆங்கில இலக்கணமா?

--------------------------------------------------------------------------------------------------------------------------

மொழியியலுக்கும் ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்திற்கும் இடையில் உள்ள உறவுபற்றி நண்பர்கள் சிலருக்குக் குழப்பம் ஏற்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ''நான் மொழியியல் மாணவர்'' என்று கூறும்போது, ''அப்படியென்றால் தமிழ்மொழியியலா, அல்லது ஆங்கிலமொழியியலா?'' என்று நண்பர்கள் சிலர் கேட்பது உண்டு. ''இல்லை நண்பரே, மொழியியல் என்பது எந்தவொரு மனித இயற்கைமொழியையும் ஆராய்வதற்கான ஆய்வுமுறைகளை உள்ளடக்கிய ஒரு தனி அறிவியல் துறை'' என்று நான் கூறுவேன். ''அப்படியென்றால் தொல்காப்பியர் ஒரு மொழியியலாளரா அல்லது தமிழ் இலக்கண ஆசிரியரா?'' என்று ஒரு ஐயத்தை முன்வைப்பார்கள்.

 

''தொல்காப்பியர் ஒரு மொழியியலாளர்... அதேவேளையில் தமிழ் இலக்கண ஆசிரியர்'' என்பதே எனது பதிலாக இருக்கும். ''அதெப்படி இரண்டாகவும் ஒருவர் இருக்கமுடியும்?'' என்று கேட்பார்கள். ''தொல்காப்பியர் தமிழ்மொழியின் அமைப்பைக் கண்டறிவதற்குச் சில தெளிவான முறைகளை - புறவயமான ஆய்வுமுறைகளை- பின்பற்றியுள்ளார். அதுபோன்று தான் கண்டறிந்த தமிழ் இலக்கணத்தை ஒரு நூலாக முன்வைக்கும்போது, எந்த வரிசையில் எதைக் கூறவேண்டும் என்பதுபற்றியும் ஒரு தெளிவான அறிவைக் கொண்டிருந்தார். எனவே அவர் ஒரு மொழியியலாளர். அதேவேளையில் அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது தமிழ்மொழி அமைப்பு ... இலக்கணம். அந்தவகையில் அவர் தமிழ் இலக்கண ஆசிரியர்'' என்று நான் கூறுவேன்.

 

தொல்காப்பியர் ஒரு மொழியியலாளராக இல்லையென்றால் அவரால் தொல்காப்பியம் என்ற ஒரு மாபெரும் தமிழ் இலக்கண நூலை உருவாக்கி- யிருக்கமுடியாது. தன் காலத்திற்கு முந்தியும் தன் காலத்திலும் நிலவிய தமிழ் இலக்கியங்களையும் பிற தமிழ் வழக்குக்களையும் முறையான ஆய்வுமுறைகொண்டு, தரவுகளாக உருவாக்கி... பின்னர் தான் உருவாக்கிய தமிழ்த்தரவுகளை முறையான ஆய்வுமுறைகொண்டு ஆராய்ந்து .... தமிழ் அமைப்புபற்றிய ஒரு தெளிவைப் பெற்றார். பின்னர் தான் பெற்ற தமிழ்மொழி அமைப்பு அறிவை முன்வைக்கும்போது, எந்த இயலை முதலில் வைக்கவேண்டும், எந்த இயலை பின்னர் வைக்கவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஒரு தெளிவின் அடிப்படையில் ''தொல்காப்பியம்'' என்ற ஒரு மிகச் சிறந்த ''தமிழ் இலக்கண நூலை'' உருவாக்கினார். இதற்காக அவர் தான் பின்பற்றிய ஆய்வுமுறைகளைத் தனியே எடுத்து எழுதியிருந்தால், அவர் ''மொழியியல்'' நூலையும் படைத்தவராக இருந்திருப்பார். மேலும் தமிழ்மட்டுமல்லாமல், வேறு மொழிகளையும் ஆராய்வதற்கு அவருக்குத் தேவை ஏற்பட்டிருந்தால், தனது மொழி ஆய்வில் காணப்படும் பொதுமைக்கூறுகளை ஒரு மிகச் சிறந்த மொழியியல் நூல்மூலம் வெளிப்படுத்தியிருப்பார். இதுபோன்ற ஒரு வாய்ப்பு... மொழி ஆய்வில் வளர்ச்சிநிலை .. மனித சமூக வளர்ச்சியில் பிற்காலத்தில்தான் - குறிப்பாக 17 ஆவது நூற்றாண்டுக்குப்பின்னர்தான் ஏற்பட்டது. தத்துவவாதிகள் சிலர் தங்களது தத்துவங்களில் மனித அறிவுக்கும் மொழிக்கும் இடையில் உள்ள உறவுகள்பற்றி ஆங்காங்கே சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஆனால் ''மொழியியல்'' என்ற ஒரு தனி அறிவியல் அப்போது தோன்றி வளரவில்லை.

 

மனித இனத்திற்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் இடையிலான உறவுகள்பற்றி அறவியலாளர்கள் ஜே டி பர்னால் ( JD Barnal - "Science in History") , ஜோசப் நீதாம் (Joseph Needham - "Science and Civilization in Ancient China") போன்ற நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஒரு அறிவியல் கண்டுபிடிப்புக்கு - ஒரு அறிவியல் துறைக்கு - தேவையான வளர்ச்சிநிலையும் அதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்போதுதான் அத்துறை தோன்றி நீடிக்கும். இன்றைக்கு உள்ள பல்வேறு அறிவியல் துறைகள் சென்ற நூற்றாண்டில் கிடையாது.

 

அதுபோன்றே பல்வேறு நாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டபோது .... பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மனித இனத்தினரிடையே உறவுகள் ஏற்படும்போது - ஒருமொழி தாண்டி, பல மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பும் தேவையும் ஏற்படும்போதுதான் ... பொதுவான மொழியியல் தோன்றமுடியும். எனவேதான் 17 ஆவது நூற்றாண்டுக்குப்பின்னர்தான் ''மொழியியல்'' என்ற ஒருதுறை தோன்றி நீடிக்கத்தொடங்கியது. மனித மொழிகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவற்றிற்கான அமைப்புக்களில் பல ஒற்றுமைக் கூறுகள் கண்டறியப்பட்டன. மொழி ஆய்விலும் பல பொதுமைக் கருத்துக்கள் தோன்றி நிலவின.

இந்த வளர்ச்சிக்குப்பின்னர் ... எந்த ஒரு மொழி ஆய்வையும் மேற்கொள்ள... பொதுவான, தெளிவான, புறவயமான ஆய்வுமுறைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் ஒரு மொழியின் அமைப்பை மட்டுமல்லாமல், மொழிக்கும் மனித சமூகத்திற்கும் இடையில் உள்ள உறவுகள், மொழிக்கும் மனித மூளை, மனம் ஆகியவற்றிற்கிடையில் உள்ள உறவுகள் போன்றவைபற்றியும் மொழியியலில் கிளைகள் தோன்றி வளர்ந்துள்ளன. மேலும் ஒரு மொழிக்கான அகராதியை எவ்வாறு உருவாக்குவது, ஒரு மொழியை எவ்வாறு கற்றுக்கொடுப்பது, மொழிபெயர்ப்பை எவ்வாறு மேற்கொள்வது, மொழியைத் திட்டமிட்டு எவ்வாறு வளர்ப்பது, கணினிக்கு எவ்வாறு மொழி அறிவைக் கொடுப்பது போன்ற பல துறைகள் தோன்றி இன்று நிலவுகின்றன.

 

மொழியியல் துறையில் முறையான பயிற்சி பெற்றவர்கள் .. தங்கள் தாய்மொழியைமட்டுமல்லாமல் .. பிற எந்தவொரு மொழியையும் ஆய்வு செய்யும் நுட்பங்களையும் கற்றிருப்பார்கள். எழுத்துவடிவமே இல்லாத பழங்குடி மக்களின் மொழிகளையும் கள ஆய்வுமூலம் தரவுகள் சேகரித்து, அந்த மொழிகளுக்கான இலக்கணங்களை உருவாக்கி முன்வைப்பார்கள்.

தமிழகத்தில் உள்ள மொழியியல் துறையினர் தாங்கள் கற்ற மொழியியல் ஆய்வுமுறைகளைக்கொண்டு, இன்றைய தமிழின் பல்வேறு பண்புகளைக் கண்டறிகிறார்கள். தொல்காப்பியம், நன்னூல் போன்ற தமிழ் இலக்கண ஆசிரியர்களின் மதிநுட்பங்களை உலக அளவில் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இந்த ''மொழியியல்'' துறையைச் சிலர் ''ஆங்கில இலக்கணம்'' என்று தாங்களே நினைத்துக்- கொள்கின்றனர். இது தவறு. தமிழ்நாட்டில் பிற அறிவியல் நூல்கள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருப்பதுபோன்று, மொழியியல் நூல்களும் ஆங்கிலத்திலேயே இங்குக் கிடைக்கின்றன. இந்த நிலை மாறவேண்டும என்பது உண்மை. ஆனால் அதற்காக மொழியியலே 'ஆங்கில இலக்கணம்'' என்று நினைத்துவிடக்கூடாது. அப்படியென்றால் 'ஆங்கில இயற்பியல்' 'ஆங்கில வேதியியல்' 'ஆங்கில உயிரியல்' என்று நாம் கற்கும் அறிவியல்துறைகளைக் கூறமுடியுமா?

 

இவ்விடத்தில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். தமிழின் சிறப்பையும், தமிழ் இலக்கணங்களின் சிறப்பையும் உலக அளவில் கொண்டு செல்வதற்கு மொழியியல் துறை மிகவும் பயன்படும். நமக்குள்ளேயே நமது பெருமைகளைக் கூறிக்கொண்டிருக்காமல், பிற மொழியினரும் தமிழின் சிறப்பை அறிந்துகொள்ள மொழியியல் துறையே மிகவும் பயன்படும்.

 

ஆனால் மொழியியல் துறையைச் சேர்ந்த ஒருவர் முதலில் தன் தாய்மொழி இலக்கணத்தை நன்குத் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் அவரால் மொழியியல் துறையில் பங்காற்றமுடியும். அதுபோன்று தமிழ்மொழி ஆய்வாளர்களும் மொழியியல் துறையில் பயிற்சிபெற்றிருக்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஒரு மொழி ஆய்வாளர் தனது மொழியில் சிறந்த புலமை பெறவேண்டுமென்றால் ... தமிழ் இலக்கணங்கள் (தொல்காப்பியம் முதல்) , மொழியியல் இரண்டிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்கவேண்டும். தமிழின் வரலாற்று இலக்கணத்தில் புலமைபெறவேண்டுமென்றால், பழந்தமிழ் இலக்கியங்களிலும் தேர்ச்சி உடையவர்களாக இருக்கவேண்டும். தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் இடையில் உள்ள உறவுகள் பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர்கள் ''வேர்ச்சொல் அகரமுதலி' துறையிலும் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.

 

இங்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புவது.... மொழியியலையும் இலக்கணங்களையும் எதிரெதிரே நிறுத்தக்கூடாது. மொழியியல் துறையில் சிறப்பு பெற, தமிழ் இலக்கணங்களில் புலமை வேண்டும். தமிழ் இலக்கணங்களில் தேர்ச்சிபெற மொழியியல் துறை அறிவும் தேவைப்படும்.

எனவே மொழியியல் துறையை ஆங்கில இலக்கணம் என்று கருதக்கூடாது; கருதவேகூடாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India