புதன், 8 மார்ச், 2023

மொழிபற்றிய ஆய்வுகளில் கண்டறியவேண்டிய முக்கியமானவை:

 மொழிபற்றிய ஆய்வுகளில் கண்டறியவேண்டிய முக்கியமானவை:

--------------------------------------------------------------------------
1) ஒரு தொடரில் உள்ள சொற்களின் பொருண்மையை ( word meaning) எவ்வாறு புரிந்துகொள்கிறோம்? அதற்குத் தேவையான மொழி அறிவு என்ன?
2) ஒரு மொழித்தொடரின் பொருண்மையை (sentence meaning) எவ்வாறு நாம் புரிந்துகொள்கிறோம்?
3) பல்வேறு தொடர்கள் இடம்பெற்ற ஒரு முழுமையான பனுவலை (Text) எவ்வாறு புரிந்துகொள்கிறோம்?
4) சொல், தொடர், பனுவல் ஆகியவற்றோடு பிற மொழிசாரக் கூறுகளான (non-verbal means) குரல் ஏற்றம் - இறக்கம், சொல் அழுத்தம், தொடர் அழுத்தம் (Para-linguistic features) , படம், அட்டவணை போன்ற மொழிசாராப் பிறவற்றையும் எவ்வாறு இணைத்து நாம் நமது கருத்துப்புலப்படுத்தச் செயலுக்கான (communication) கருத்தாடலை (Discourse) மேற்கொள்கிறோம்?
5) கருத்தாடல் மேற்கொள்ளும்போது அது நிகழ்கிற சூழல் (non-linguistic features) , கருத்தாடல் தளம் (topic / domain)போன்றவை எவ்வாறு பனுவலோடு இணைந்து கருத்தாடலை மேற்கொள்கின்றன?
6) மொழிப் பனுவல், கருத்தாடல் ஆகியவற்றின் அமைப்பில் எவ்வாறு பிற சமூகக் கூறுகள் ( பால், வயது, தொழில் போன்றவை) வெளிப்படுகின்றன (Sociolinguistics) ?
7) ஒருவரின் கருத்தாடலுக்கும் அவரது மனம் அல்லது உள்ள நிலைக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன (Psycholinguistics) ?
8 ) பிறந்த குழந்தை தனது மொழியை எவ்வாறு பெற்றுக்கொள்கிறது? எந்த வயதில் அது தன் தாய்மொழியின் சொற்களையும் அமைப்பையும் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறது (Language Acquisition) ?
9) இயற்கைமொழியானது மனித இனத்திற்கே உள்ள ஒன்றா? அல்லது பிற உயிரினங்களுக்கும் உண்டா? மரபணு சார்ந்ததா (Genetically determined one - Biolinguistics, Neurolinguistics) ) ?
10) ஒருவரின் மொழித்திறனுக்கு அடிப்படையான அகரமுதலி, இலக்கண அமைப்பு போன்றவை எவ்வாறு மனித மூளையில் சேமிக்கப்பட்டுள்ளன (language domain in brain) ?
இதுபோன்ற மொழி அறிவியல் வினாக்களுக்கு விடை தேவை.
இதற்குக் கணினியை எவ்வாறு பயன்படுத்தலாம்?
ஆய்வில் கிடைக்கப்பெறுகிற மொழியறிவைக் கணினிக்கு அளிக்க இயலுமா?
மனிதன்போன்று கணினியும் மனித இயற்கைமொழிகளைப் பயன்படுத்தி, நம்முடன் கருத்தாடல் புரியமுடியுமா?
இந்த வினாக்களுக்கு விடை தேடுவதே மொழியியலும், கணினிமொழியியலும்!
தற்போதைய அனுமானப் புள்ளியியல் (Probabilistic Statistics) , கணினி கற்றல் (Machine Learning) , நரம்புவலைப் பின்னல் (Neural Network) , செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence - AI) போன்றவை மேற்கண்ட வினாக்களுக்கு விடை அளிக்கிறதா?
மேற்கண்ட மொழியறிவுடன்தான் (Knowledge of Language) இன்றைய செயற்கை அறிவுத்திறன் மென்பொருளானது தானியங்கு மொழிபெயர்ப்பு (Automatic Machine Translation) , வினாக்களுக்கு விடை அளித்தல் (Conversation) போன்றவற்றை மேற்கொள்கிறதா?
தற்போது வெளிவந்துள்ள ''சேட்ஜிபிடி ( ChatGPT)'' , கூகுளின் ''பர்ட் (BURD)" போன்ற செயற்கை அறிவுத்திறன் மென்பொருள்கள் நான் மேலே கொடுத்துள்ள வினாக்களுக்கு - ஐயங்களுக்கு - ஏதேனும் விடை அளிக்கின்றனவா?
மொழி அறிவியல் (Science of Language - Linguistics) என்பது மேற்குறிப்பிட்ட வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்!
இந்தப் புதிய மென்பொருள்கள். 'டூரிங்க் மெஷின் (Turing Machine)" 'எலிசா (ELIZA) போன்ற முந்தைய முயற்சிகளின் தொடர்ச்சிகள்தானா? வெறும் தொழில்நுட்பம்தானா?
இதைத் தெரிந்துகொள்ளவே மொழியியல் மாணவன் என்ற முறையில் முயல்கிறேன். ஏதாவது ஒரு வகையில் இந்த மென்பொருள்களின் வளர்ச்சியானது மொழியியல் துறைக்கு உதவும் என நம்புகிறேன்! பார்க்கலாம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India