சனி, 11 மார்ச், 2023

குழந்தையின் மொழித்திறன்

குழந்தையின் மொழித்திறன்

-------------------------------------------------------------------------------------------------------------------- 

குழந்தை பிறக்கும்போது அதன் மூளைக்குள் இருக்கிற (Language Acquisition Device (LAD)) - இல் அனைத்து மொழிகளின் இலக்கணத்தையும் நிர்ணயிக்கிற Principles குறைந்த எண்ணிக்கையில் ( அப்போது 8 ) இருக்கின்றன என்பது சாம்ஸ்கியின் 1979 கோட்பாடு கூறுகிறது. இந்த ஒவ்வொரு கொள்கைக்கும் இரண்டே இரண்டு options உண்டு. + or -. இதை parameter என்று அழைக்கிறார்கள்.

பிறந்த குழந்தையின் மூளை (LAD) இந்தக் கொள்கைகளுக்குத் தன் தாய்மொழியில் உள்ள மதிப்பைக் கண்டறியவேண்டும் (value). எடுத்துக்காட்டாக, எந்தவொரு தொடருக்கும் ஒரு தலைமை (Head) உண்டு. ஆனால் இந்தத் தலைமையானது தொடரில் முதலில் வருமா அல்லது பின்னர் வருமா என்பதைத் தீர்மானிக்கவேண்டும். ஆங்கிலத்தில் தலைமையானது தொடரின் முதலில் வரும் ( 'went fast). இதில் வினைச்சொல்லே முதலில் வரும். ஆனால் தமிழில் 'வேகமாகச் சென்றது' என்று வரும். இதில் தலைமை தொடரின் பின்னர் வரும். இந்த Head first / Head Last என்பது Head என்ற கொள்கைக்கு உள்ள parameter. இந்த parameter -ஐத் தீர்மானித்தவுடன் குழந்தைக்குத் தன் தாய்மொழியின் இலக்கணம் முழுமையடையும். குழந்தையைச் சுற்றிப் பேசப்படுகிற மொழித்தொடர்கள், குழந்தைக்கு இந்தப் பணியைச் செய்ய உதவுகின்றன. இந்த பாராமீட்டருக்கு இரண்டே இரண்டு options தான் உண்டு.

மேற்கூறப்பட்ட சாம்ஸ்கியின் மொழிக்கொள்கை அல்லது கோட்பாடானது ( Principles and Parameter/ Government and Binding theory) கடந்த 40 ஆண்டுகளில் மேலும் பல மாற்றங்களை - வளர்ச்சிகளைக் கொண்டுள்ளது. அது Minimalism என்று அழைக்கப்படுகிறது. 1956-இல் சாம்ஸ்கி தனது மொழிக்கோட்பாட்டை முன்வைத்தார். கடந்த 65 ஆண்டுகளில் தொடர்ந்து அதை மாற்றியும் வளர்த்தும் வருகிறார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

பிறந்த குழந்தை மிகக் குறைவான காலத்தில் ( a short period) . . . மிகக் குறைவான மொழித்தரவுகளைக்கொண்டு ( less linguistic data) . . . தனது தாய்மொழியின் இலக்கணத்தையும் அகரமுதலியையும் பெற்றுக்கொள்கிறது. ஆனால் கணினிக்குக் கோடியே கோடி (in billions) மொழித்தரவுகள் தேவைப்படுகின்றன; அனுமானப் புள்ளியியல் (நிகழ்தகவு - Probabilistic Statistics) தேவைப்படுகிறது. அப்படியிருந்தும் ஒரு குழந்தைக்கு 4 அல்லது 5 வயதில் உள்ள மொழித்திறனை (Linguistic Competence and Language Capacity) - கருத்துப்புலப்படுத்தத்திறனை (Communicative ability) - கணினியால் பெறமுடிவதில்லை. அதற்குக காரணம் . . . உலகிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த (highly developed) - மிகச் சிக்கலான செயற்பாடுகளைக்கொண்ட (more complex organ) - உயிர்த்தன்மையுள்ள ஒரு பொருள் (living matter) மனித மூளையாகும். முழுமையான மனிதமூளைக்கு ஈடாகக் கணினியைத் தகுதிப்படுத்தும் முயற்சி இன்று நம்மால் மேற்கொள்ளப்பட்டாலும், இன்றுவரை மனிதமூளைக்கு ஈடாகக் கணினித்தொழில்நுட்பம் வளரவில்லை. (எதிர்காலத்தில் வளரலாம். அதுபற்றித் தற்போது கருத்து கூறுவது இயலாது.)

---------------------------------------------------------------------------------------------------------------------சாம்ஸ்கியின் ஒரு முக்கியமான கருத்து . . . பிறந்த குழந்தைக்கு மூளையும் காதும் நன்றாக இருந்தால், அதனுடைய தாய்மொழி - சுற்றுப்புறமொழி - தானாக அதற்கு வந்துசேரும். அதாவது குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை(not learned) ; மாறக, பெற்றுக்கொள்கிறது (acquired). தவழ்தல், நடத்தல் போன்றவை குழந்தைக்கு எப்படித் தானாக வருகிறதோ, அதுபோன்று மொழியும் வந்துசேரும் (it comes to the child) . மனித மரபணுக்களால் (இந்தத் திறன் குழந்தைக்கு உள்ளார்ந்து இருக்கிறது ( genetically determined - biological development) . இந்த மொழித்திறன் மனிதனைத்தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது.

மொழியியலில் மொழி கற்றல்பற்றி சாம்ஸ்கியின் கோட்பாடு மட்டுமல்ல, வேறு பல கோட்பாடுகளும் உள்ளன.

மேலும் மொழி அறிவு மட்டுமே ஒருவருக்குப் போதாது. ஒருவர் தனது சமுதாயத்தில் மற்றவர்களுடன் கருத்துப்புலப்படுத்த நடவடிக்கையில் ஈடுபடும்போது, மொழியை எந்த இடத்தில், எந்தப் பயனுக்கு, எப்படிப் பேசவேண்டும் என்ற மொழிப்பயன்பாட்டுத் திறனும் (Communicative Competence) அவருக்குத் தேவை. இது குழந்தைக்கு 5,6 வயதுகளில் வளரும். இதுபற்றி Dell Hymes என்ற மொழியியலாளர் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்த இரண்டும் - மொழித்திறன் (linguistic competence), கருத்துப்புலப்படுத்தத்திறன் (communicative competence) - , - இணைந்ததே Language Capacity ஆகும். இதுபற்றிச் சமூகமொழியியல், Ethnography of Speaking போன்ற துறைகள் விளக்குகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India