தமிழ் தேவையா ? இல்லையா ?
---------------------------------------------------------------------------------------------------------
என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் - தமிழ்த் தேசிய இனம் நீடிக்கிற தமிழ்நாட்டில் - அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய மொழிச்செயல்பாடுகள் அனைத்துக்கும் தமிழ் இனத்தின் அடையாளமான தமிழ்மொழியையே பயன்படுத்தவேண்டும் என நான் கருதுகிறேன். ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி, வழிபாட்டுமொழி என்று அனைத்துத் துறைகளுக்கும் தமிழ் தேவை.
பிறமொழிகளை - குறிப்பாக ஆங்கிலத்தை- கற்கவேண்டாம் என்று நான் கூறவரவில்லை. தமிழ்த் தேசிய இனமக்கள் தங்களது இனத்தின் அடையாளமான தமிழ்மொழியிலேயே உலகில் வளர்ந்துநிற்கிற அனைத்துத்துறைகளின் அறிவும் பெற வழிசெய்யவேண்டும். அது அவர்களின் உரிமை என நான் கருதுகிறேன். எந்த ஒரு துறையின் அறிவும் அவர்களுக்குத் தமிழில் கிடைக்காமல் இருக்கக்கூடாது.
தமிழின மக்கள் வேறு பிற நாடுகளுக்குச் செல்லும்போது, என்ன செய்வது என்ற வினா முன்நிற்கும். அதற்கு ஆங்கிலம் பயன்படுத்தலாமா? எந்த நாடுகளுக்குச் செல்கிறார்களோ, அந்த நாட்டின் மொழியை அவர் கற்றுக்கொள்ளவேண்டுமென்று எனது கருத்து. தமிழகத்திற்கு பணிபுரிய வருபவர்கள் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும். அதுபோல்தான் இதுவும்.
தாய்மொழி உணர்வு தேவை. ஆனால் தேவையற்ற மொழி வெறி கூடாது என்பது எனது கருத்து. பிற தேசிய இனங்களின் தாய்மொழி உணர்வை மதிக்கவேண்டும்.
தமிழர்களுக்குத் தமிழ்மொழி வெறும் பயன்பாட்டு மொழி மட்டுமல்ல; தங்கள் தேசிய இனத்தின் முக்கிய அடையாளமும் ஆகும். எனவே தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தமிழ் என்பதை வலியுறுத்தவேண்டும். ஆனால் பிறமொழிகளை அவர்கள் கற்றுக்கொண்டு பயன்படுத்துவதற்கு முழுக்க முழுக்க மொழிப்பயன்பாடுகளே காரணமாக அமைகின்றன. அது தமிழகத்தில் என்றாலும் சரி; அயல்நாடுகளுக்குச் சென்றாலும் சரி.
தமிழகத்தில் இருக்கிற ஒரு தமிழருக்கு ஜெர்மனியில் எழுதப்பட்ட நூல்கள் அவருடைய அறிவு வளர்ச்சிக்கு - துறைப் பயன்பாட்டுக்கு - தேவைப்பட்டால் அவர் ஜெர்மனியைக் கற்றுக்கொள்ளலாம். அதுபோல அயல்நாடுகளில் பணியாற்றும்போது, அங்குள்ள தேசிய இனங்களின் மொழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்த இனங்களின் உரிமைகளை நாம் மதிப்பதாக அமையும்.
நமது தாய்மொழியான தமிழைக் கற்றுக்கொண்டு தமிழகத்தில் அனைத்துத் தறைகளில் பயன்படுத்துவது என்பது இரண்டு நோக்கங்களைக் கொண்டது:
(1) தமிழ்த் தேசிய இனத்தின் தாய்மொழி
(2) அதேவேளையில் தாய்மொழியை வெறும் வழிபடுகிற மொழியாக - அருங்காட்சியகத்தில் வைக்கிற மொழியாக - பார்க்காமல் சமுதாயத்தின் அடிப்படை பொருளாதாரத் துறையில் முதன்மைப் பங்கு வகிக்கும் மொழியாக மாற்றவேண்டும். தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தவேண்டிய மொழி ; அதாவது பயன்பாட்டு நோக்கம் இதில் உண்டு.
குறிப்பாக, தமிழகத்தில் பொருள் உற்பத்தியில், வணிகத்தில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படவேண்டும். அப்போதுதான் தமிழ்மொழி தனது அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெறும். இதையும் முழுமையாகத் தமிழர்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.
ஒருவர் தமிழ்மொழியை வெறும் ''தேசிய இன அடையாளமாக'' மட்டும் பார்த்துக்கொண்டு, பொருள் உற்பத்தியில் அதன் முதன்மையான பங்கைப் புறக்கணித்தால், அவர் தனது தேசிய இனத்தையே புறக்கணிப்பது ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக