சேட்ஜிபிடி (ChatGPT ) - எச்சரிக்கை தேவை!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேட்ஜிபிடி - செயற்கை
அறிவுத்திறன் கொண்ட இந்த மென்பொருள் உண்மையில் தொழில்நுட்ப உலகில் (Technology world) ஒரு பெரும் புரட்சி அல்லது வளர்ச்சி என்பதை யாராலும்
மறுக்கமுடியாது! மனிதனால் இதுபோன்ற மென்பொருளையும் உருவாக்கமுடியும் என்பதற்கு இது
ஒரு பெரிய சாட்சி! ஐயமே கிடையாது!
ஆனால் . . . இந்த மென்பொருளே தன்னைப்பற்றி ஒரு சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளது.---------------------------------------------------------------------------------------------------------------------
[ ''கற்றலுக்கும் ஆராய்ச்சிக்கும் இதுபோன்ற மென்பொருள்கள்
உதவினாலும்,
கல்வித்துறையில் இதை
முழுமையாக சார்ந்து இருக்கக்கூடாது.
இதுபோன்ற மென்பொருள்கள் மிக
மிகப் பெரிய தரவுத் தளங்களின்மீது பயிற்றுவிக்கப்பட்டுள்ளது; அதனிடம் முன்வைக்கப்படுகிற வினா அல்லது ஐயத் தொடர்களின்
பொருளை அல்லது பொருண்மையைத் தெரிந்துகொண்டு அல்லது புரிந்துகொண்டு தனது பதில்களைத்
தருவது இல்லை;
மாறாக, முன்வைக்கப்படுகிற வினா அல்லது ஐயத் தொடரின் முறைசார் அமைப்புவகைப்பாட்டை (Structural patterns) அடிப்படையாகக்கொண்டு, குறிப்பிட்ட அமைப்பு வகைப்பாட்டுக்கு இணையான தொடர்களைத் தேடிக் கண்டறிந்து, அதனடிப்படையில் அந்தத் தொடர்களின் அருகில் இருக்கிற தொடர்களைக் கொண்டு பதில் அளிக்கிறது. எனவே. அதனால் தரப்படுகிற பதில்கள் மிகச் சரியானதாகவோ அல்லது முன்வைக்கப்பட்ட தொடர்களின் பொருண்மைச் சூழலுக்குப் பொருத்தமானதாகவோ இருக்காது".]
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனவே,மனிதர்களைப்போல இந்த மென்பொருள் செயல்படவில்லை.
1) மனித மூளைச் செயல்பாடு : நம்மிடம் கேட்கப்படுகிற வினா
அல்லது ஐயத்தைப் புரிந்துகொள்ள, நாம் கேட்கிற அல்லது
வாசிக்கிற மொழித்தொடர்களை நமது மொழி அறிவின் துணைகொண்டு புரிந்துகொள்கிறோம் ( meaning
understanding) - Decoding process.
மென்பொருள் செயல்பாடு : இந்த மென்பொருள் அவ்வாறு மொழித்தொடர்களின் பொருண்மை அல்லது பொருளைப் புரிந்துகொள்வதில்லை; மாறாக, குறிப்பிட்ட மொழித்தொடரின் முறைசார் அமைப்பை ( formal sentence structure or pattern) , தன்னிடம் திரட்டி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மொழித்தொடர் தரவுகளில் ( huge corpus ) தேடிக் கண்டறிந்து, கண்டறியப்பட்ட தொடர்களே அதனிடம் முன்வைக்கப்பட்ட தொடர் - அனுமானப் புள்ளியியல் (Probabilistic Statistics) என்று முடிவுக்கு வருகிறது.
2) மனிதமூளைச் செயல்பாடு: நம்மிடம் கேட்கப்பட்ட ஐயத்தைப்
புரிந்துகொண்டு,
அதற்கான விளக்கங்கள் அல்லது
விடைகளை நமது மூளையின் அறிவுத்திறன் புலத்தில் (cognition / knowledge domain) சேகரித்து வைத்துள்ள அறிவுத் தரவில் இருந்து பெறுகிறோம்.
மென்பொருள் செயல்பாடு: இந்த மென்பொருள் அவ்வாறு செயல்படுவதில்லை; அதற்கான திறன் அதற்குக் கிடையாது. மாறாக, தனக்கு முன்வைக்கப்பட்ட மொழித்தொடர் அமைப்புக்கு இணையான தொடர்கள் (similar or parallel patterns) காணப்படுகிற தொடர்களையே பதிலாகக் கொள்கிறது.
3) மனிதமூளைச் செயல்பாடு: நாம் நமது பதிலைத் தயார்செய்தபிறகு, அதை வெளிப்படுத்துவதற்கான மொழித்தொடர்களை நமது மொழியறிவு (Linguistic knowledge) கொண்டு உருவாக்குகிறோம். அதாவது பதிலை மொழியில் உள்ளீடு செய்கிறோம் (encoding).
ஆனால் அது திரட்டிவைத்துள்ள கோடியே கோடி மொழித்தொடர்களிலிருந்து , அமைப்பு ஒப்புமை (pattern similarity) அடிப்படையில், அருகாமைத் தொடர்களைத் தேர்ந்தடுத்து நமக்கு அளிக்கிறது. அதாவது கருத்து -> மொழித்தொடர் என்று அது செயல்படுவதில்லை.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது - இந்த மென்பொருளானது மொழித்தொடர்களிலிருந்து அவற்றில் பொதிந்துள்ள பொருளை அல்லது பொருண்மையை அல்லது கருத்தைப் புரிந்துகொள்வதில்லை. அதுபோல பதில்களையும் கருத்தாக முதலில் உருவாக்கி, பின்னர் அதை மொழித்தொடர்களில் உள்ளீடு செய்து நமக்குத் தருவதில்லை.
ஆகவே, மனிதமூளையின் அறிவுத்திறன், மொழித்திறன் ஆகியவற்றைக் கணினிக்கு அளித்துவிட்டோம் என்று கூறுவதைவிட . . . தரவுகள், புள்ளியியல் அடிப்படையில் கணினியை நாம் மேற்கொள்கிற கருத்துப்புலப்படுத்தச் செயல்பாடுகளைச் செய்யவைக்கமுடியும் என்று கூறலாம்.
எனவே இதைத் தொழில்நுட்ப வளர்ச்சி (Technology) என்று கூறலாம்; அறிவியல் வளர்ச்சி (Science) என்று கூறமுடியாது எனக் கருதுகிறேன்.
ஆனால் வியக்கத்தக்க
தொழில்நுட்ப வளர்ச்சி. இதில் ஐயமே இல்லை.
ஒரு சிக்கல் இதில்.
மனிதர்கள் மூளையின் துணைகொண்டு அறிவியலை வளர்ப்பதற்குப் பதிலாக, இந்தத் தொழில்நுட்பத்தைமட்டும் சார்ந்து செயல்படலாம் அல்லது
வாழலாம் என்ற ஒரு தவறான கருத்துக்குச் சென்றுவிடக்கூடாது.
கணினியின் வளர்ச்சியும்
அனுமானப் புள்ளியியலும் மிகப் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை நாம்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! அது வேறு.
ஆனால் உலக அறிவு, மொழி அறிவு ஆகியவற்றைக் கொண்டுள்ள மனித மூளையின் திறனை இந்தக் கணினி பெற்றுவிட்டது என்று கூறமுடியுமா?
மேலும் மனித மொழிகளின்
அறிவைக் கணினிக்குக் கொடுக்க முயல்கிற கணினிமொழியியல் (Computational
Linguistics) அடிப்படை வேறு.
கணினிமொழியியலுக்குள் சில செயல்பாடுகளுக்குப் புள்ளியியலைக் கொண்டுவருவது வேறு; மாறாக, கணினிமொழியியலே தேவையில்லை -
கணினியின் செயல்திறன்,
கோடிக்கணக்கான தரவுகள் , அனுமானப் புள்ளியல் என்ற மூன்றுமே போதும் என்று கூறுவது
அறிவியல் ஆகாது.
நண்பர்களின் கருத்துக்களை
எதிர்பார்க்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக