சனி, 18 மார்ச், 2023

மொழியியல் அறிவு தமிழுக்குத் தேவையில்லை !

 

மொழியியல் அறிவு தமிழுக்குத் தேவையில்லை !

---------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று கல்லூரி ஆசிரியர் பதவி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3982 இடங்கள். 73 துறைகள்!

ஆனால் இன்னும் தமிழ்நாட்டில் மொழித்துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு ( தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள் உட்பட) மொழியியல் என்ற ஒரு அறிவுத்துறையே அறிமுகப்படுத்தத் தயார் இல்லை. அப்படியென்றால் என்ன பொருள்? மொழியியலால் மொழி மாணவர்களுக்கு எந்தப் பயனும் கிடையாது என்று நினைப்பதால்தானே?

எந்த ஒரு மொழியின் பல்வேறுவிதமான பயன்பாடுகளுக்கும் - ( மொழிக்கற்றல், மொழி இலக்கணம் உருவாக்குதல், மொழி வளர்ச்சித்திட்டமிடல், கணினிமொழியியல், அகராதி உருவாக்கம் , மொழிபெயர்ப்புபோன்ற பல செயல்பாடுகளுக்கு) மொழியியல் தேவை இல்லை என்று கருதப்படும் ஒரு நிலைதானே இன்று இங்கு?

மொழிபற்றிய ஒரு அறிவியல் துறை தமிழுக்குத் தேவையில்லை என்று கருதுகிற ஒரு நிலைதானே இன்று இங்கு?

இது ஒரு மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலை! மொழிப்படிப்புக்கோ ஆய்வுக்கோ இன்றைய மொழி அறிவியல் துறை தேவை இல்லை என்று தவறாகக் கருதுகிற இந்த நிலை மாறவில்லை என்றால் . . . கணினிமொழியியல் உட்பட எந்த ஒரு உயர்நிலை வளர்ச்சியும் தமிழுக்குத் எட்டாக் கனியாகவே இருக்கும்!

நான் கடந்த 10 ஆண்டுகளில் மொழியியல் பற்றியும் அதன் முக்கியத்துவம்பற்றியும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் முகநூலில் மட்டுமே எழுதியுள்ளேன். தமிழுக்கு மொழியியல் அறிவைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்ற ஒரு தூண்டுதலில்!

ஆனால் நிலைமை மாறவே இல்லை! இந்தச் சூழலில் தொடர்ந்து முகநூல்போன்ற சமூக ஊடகங்களில் மொழியியல் அடிப்படையில் தமிழ்மொழி ஆய்வுபற்றி எழுதுவது . . . நிர்வாண ராச்சியத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் செயல்போலவே இருக்கும் எனக் கருதுகிறேன். இனித் தேவையில்லாமல் நேரத்தை விரயமாக்கவேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன்! இது காலம் கடந்த ஒரு முடிவுதான்! தெரிகிறது!

நான் எழுதுவதை நிறுத்துவதால் எந்தப் பாதிப்பும் ''தமிழுக்குக்'' கிடைக்காமல் போகாது என்று நண்பர்கள் நினைக்கலாம்! பரவாயில்லை! நினைத்துக் கொள்ளட்டும்!

மேலும் சில மேடைகளில் சிலர் வெளிப்படையாகவே எந்தவொரு அடிப்படையும் இல்லாமல், மொழியியலுக்கு எதிராகப் பேசியதையும் நான் கேட்டிருக்கிறேன்! மொழியியல் ஏதோ தமிழின் வளர்ச்சிக்குத் தடை என்று கூட சிலர் மேடைகளில் கூறுகிறார்கள்!

இந்த நிலை மாறும் என்பதில் நம்பிக்கை எனக்கு உண்டு ? ஆனால் எப்போது?

பொருள் உற்பத்தியில் . . . நாட்டின் வளங்களைப் பெருக்குவதில் . . . வணிகத்தில் . . . தமிழ்மொழி இடம்பெறும்போது . . . உறுதியாக மொழியியல் தமிழாய்வுக்குத் தேவைப்படும்!

தமிழ்மொழியின் சிறப்புக்கு . . . பெருமைக்கு ... பல அடைமொழிகள் கொடுத்து மேடைகளில் பேசுவதற்குப் பதிலாக . . . தமிழ்மொழியை 'காட்சியகத்தில்'' வைத்து ''வணங்குவதற்குப் '' பதிலாக . . . ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் இனத்தின் மொழிச் செயல்பாடுகளுக்குப் பயன்பட்டுவருகிற தமிழ்மொழியைத் தொடர்ந்து அடுத்தகட்ட உயர்நிலை மொழிச்செயல்பாடுகளுக்குப் பயன்படும்வகையில் தமிழை வளர்க்கும் உண்மையான ''தமிழ் இனப்பற்றும்'' ''தமிழ்மொழிப்பற்றும்'' தமிழகத்தில் வளரும் நிலையில்தான் . . . மொழியியல் தமிழுக்குத் தேவைப்படும்!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India