திங்கள், 8 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(17)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (17)
----------------------------------------------------------------------------------------
முந்தைய உரையில் முதன்மைப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்ட கருத்தாடல், இரண்டாம்நிலைப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்ட கருத்தாடல் என்ற வகைப்பாட்டைப் பற்றிக் கூறியிருந்தேன். இங்கு நான் முதன்மை, இரண்டாம் நிலைப் பண்பாடுகளைப்பற்றிக் கூறும்போது, ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்ற பொருளில் கூறவில்லை. முதன்மைப் பண்பாடானது ஒருவரின் பிறந்து, வளர்கின்ற சமூகச்சூழல்களால் பெறப்படுவது ஆகும். இரண்டாம்நிலைப் பண்பாடானது ஒருவர் கல்வி, பதவி, தொழில் ஆகியவற்றால் பெறுகின்ற பண்பாடாகும். இந்தப் பண்பாட்டில் குடும்பம், சாதி, ஊர் பழக்கவழக்கங்கள் செல்வாக்கு செலுத்தாது. மேலும் முதன்மைப் பண்பாடானது பெரும்பான்மை தானாகவே நம்மிடம் '' தொற்றிக்கொள்ளும்''. ஆனால் இரண்டாம்நிலைப் பண்பாட்டை நாம் முயன்றுதான் கற்றுக்கொள்கிறோம்.

இரண்டாம்நிலைப் பண்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். ஆய்வுக் கட்டுரைகள் எழுதும்போது, ஒரு சில நடைகளைக் கையாளவேண்டும் என்று கூறப்படுகிறதே! இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எம் எல் ஏ நடை, சிகாக்கோ நடை, ஏ பி ஐ நடை என்று சில நடைகளை ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். துணைநூற்பட்டியல் மட்டுமல்ல.... ஒரு வரையறை எப்படி அமையவேண்டும், ஒரு விளக்கம் எப்படி அமையவேண்டும், அடிக்குறிப்பு எப்படி அமையவேண்டும் ... என்று பல வரைமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏன்? ஒரு ஆய்வேடு அல்லது ஆய்வுக் கட்டுரை உலக அளவில்.... அந்தத் துறை சார்ந்த உலகளாவிய அறிஞர்களால் .... கருத்துரைக்கப்படலாம். அப்படியென்றால், அது ஒரு குறிப்பிட்ட வரையறைகளைப் பின்பற்றினால்தானே அது சாத்தியமாகும்? இதிலும்கூட.... இயற்கை அறிவியல் ஆய்வுரைகள் இந்த நடையைப் பின்பற்றலாம், சமூகவியல் ஆய்வுரைகள் அந்த நடையைப் பின்பற்றலாம் என்று கூறப்படுகிறது. இதுதான் இரண்டாம்நிலைப் பாண்பாட்டுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!
இதுபோன்று.... கருத்தரங்குகள்! கருத்தரங்கில் ஆய்வுரை வழங்குபவர் எந்த நடைமுறையைப் பின்பற்றவேண்டும், ஆய்வுரைமீது கருத்துரைப்பவர்கள் எவ்வாறு அதை மேற்கொள்ளவேண்டும் என்பதற்கெல்லாம் வரையறைகள் உண்டு. இங்குச் சில கருத்தரங்குகளைப் பார்க்கும்போது, நாம் வேதனைப்படுவோம். ஆய்வுரையின்மீது கருத்துரைப்பவர் தொடங்கும்போதே '' இது ஒரு ஆய்வுரையா? '' அல்லது '' இதைப் போய் ஒரு கட்டுரை என்று வழங்கவந்துவிட்டீர்களே'' அல்லது '' இந்தக் கட்டுரை ஒரு ஐந்தாம்வகுப்பு கட்டுரைபோல் அமைந்திருக்கிறது'' என்றெல்லாம் கொஞ்சம்கூடப் பண்பாடு இல்லாமல் பேசுவதைப் பார்த்திருக்கலாம்.
ஒருவரின் ஆய்வுரைமீது நமக்கு கருத்துவேறுபாடு இருந்தால் ... அதைத் தெரிவிப்பதற்கு ஒரு பண்பாடு உண்டு. '' ஐயா, தங்கள் ஆய்வில் எனக்குச் சற்று வேறுபாடு உள்ளது '' என்று கூறலாம்... ''ஐயா, தங்களின் கருத்துரையில் எனக்குச் சில இடங்களில் உடன்பாடில்லை. அதற்குக் காரணம் .... '' என்று தொடங்கலாம். அல்லது '' ஐயா, தங்கள் உரையை தற்போது நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஆனாலும் சில ஐயங்கள் .... '' என்று கூறலாம். ஆய்வுரை வழங்குபவரும் '' ஐயா, தாங்கள் எழுப்பும் ஐயங்கள் சரிதான். அவற்றிற்கு எனக்கு இயன்ற அளவு விளக்கம் அளிக்கிறேன்'' என்று கூறலாம். அல்லது '' ஐயா தாங்கள் கேட்பது சரிதான். எனக்கும் அந்த ஐயங்கள் உள்ளன. ஆனால் உடனடியாக எனக்கு விளக்கம் அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்'' என்று கூறலாம்.
இவைபோன்ற கருத்தாடல்கள் ... உரை வழங்குபவருக்கும் அதன்மீது கருத்துரை வழங்குபவர்களுக்கும் இடையில் நடைபெற்றால், கருத்தரங்கு வெற்றிபெறும். அதைவிட்டுவிட்டு, உரை வழங்குபவர், அதன்மீது கருத்துரை வழங்குபவர்கள் இருவருமே ஆணவத்துடன்.... தனிப்பட்ட விரோதமனப்பான்மையில்... கருத்தாடலை மேற்கொண்டால்... அது கருத்தரங்கமாக இருக்காது. சந்தைக்கடையாகவும் ... சண்டைக்காடாகவும் ஆகிவிடும்.
அதுபோல,,, ஒரு கூட்டத்தில் வரவேற்புரை ... வாழ்த்துரை... தலைமையுரை... முதன்மையுரை... நன்றியுரை .... இவையெல்லாம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு வரைமுறைகள் உண்டு. ஆனால் சில இடங்களில் பார்க்கலாம்... தலைமையுரை ஆற்றுபவர் அவரே முதன்மைச் சொற்பொழிவாளர் ஆற்றவேண்டிய சொற்பொழிவை ஆற்றிவிட்டு, '' இப்போது சொற்பொழிவாளர் உரையாற்றுவார் '' என்று கூறி, சொற்பொழிவாளருக்கு ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கிவிடுவார். அதுபோல, வரவேற்புரையில் ஒருவர் யார் யார்களையெல்லாம் வரவேற்றுப் பேசினாரோ, அத்தனை நபர்களையும் நன்றியுரை சொல்பவர் மீண்டும் திருப்பிக்கூறுவார். கூட்டத்தினரோ பொறுமையிழந்துவிடுவார்கள். அல்லது கலையத்தொடங்கிவிடுவார்கள்!
( உலக அளவிலான விளையாட்டுகளிலும் ஒரு பொதுமை விதிகள் உண்டு. இந்தியாவில் கிரிக்கெட், ஆக்கி போன்ற விளையாட்டுகளுக்கு ஒரு வகை விதிகள் ... பிற நாடுகளில் வேறுவகை விதிகள் என்று இருக்கமுடியுமா? அப்படி இருந்தால் ஒலிம்பிக் போன்ற உலக அளவிலான போட்டிகள் நடக்கமுடியுமா? ஜல்லிக்கட்டு , சடுகுடு போன்ற தமிழகத்திற்கே உரிய விளையாட்டுகள் வேறு.. இவை முதன்மைப் பண்பாட்டு அடிப்படையிலான விளையாட்டுகள்! ஆனால் கிரிக்கெட், ஆக்கி, செஸ் போன்றவை இரண்டாம் நிலைப் பண்பாட்டு அடிப்படையிலான விளையாட்டுகள் என்று கூறலாம் எனத் தோன்றுகிறது. சரிதானே! )
எனவே ஒரு மொழியைக் கற்றுக்கொடுக்கும்போது... அம்மொழியை உலக அளவிலான பொதுப் பண்பாட்டுக் கருத்தாடல்களுக்கு எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கவேண்டும். இதுவே அந்த மொழியை உலகக் கருத்தாடல் தரத்திற்கு வளர்த்தெடுக்கிறோம் என்று பொருள்படும்! உலக அளவில் ... உயர்நிலைக் கருத்தாடல்களுக்கு... நமது மொழியைப் பயன்படுத்துவதற்கு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்!
-----------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் நிலைப் பண்பாடுகளின் கருத்தாடல் அமைப்பு உலகப் பொதுமையானது. அது எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் சார்ந்தது இல்லை. எனவே ஆங்கிலப் பண்பாடு என்று அவற்றைக் கருதுவது தவறு. பொதுவாகவே கருத்தாடல் அமைப்பு பொதுவானது. அதை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட மொழிசார்ந்த பனுவல் குறிப்பானது. இதுபற்றி விரிவாக எழுத எண்ணியுள்ளேன்.
------------------------------------------------------------------------------------------
முதலாம்நிலைப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்ட கருத்தாடல்களும் குறிப்பிட்ட மொழிச் சமுதாயத்தினருக்குப் பொதுமையானதுதான். அவற்றை வெளிப்படுத்தும் சொல்கள், தொடரமைப்பு போன்றவைதான் நபருக்கு நபருக்கு வேறுபடும். விருந்தினரை வரவேற்கும் முதலாம் நிலைப் பண்பாட்டில் ... '' கொஞ்சம் காப்பி சாப்பிடுங்களேன்'', '' கொஞ்சம் காப்பி சாப்பிடலாமா?' '' கொஞ்சமா காப்பி?'', ''கொஞ்சம் காப்பி குடிக்கலாமா?'' '' ஏதாவது குடிக்கலாமா?'', '' என்ன சாப்பிடலாம்? சொல்லுங்க'' என்று பலவகைகளில் சொல்களும் தொடர்களும் அமையலாம். இவை அனைத்துமே - அனைத்துப் பனுவல்களுமே - ஒரு குறிப்பிட்ட செயலை .... விருந்தோம்பல் செயலை - அதற்கான கருத்தாடல் செயலை - மேற்கொள்கின்றன. எனவே கருத்தாடலைப் புதைவடிவமாகக் ( Deep Structure) கொண்டால் ... பனுவல்கள் அவற்றை வெளிப்படுத்தும் புறவடிவங்கள் ( Surface Structures) ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India