ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(16)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (16)
-----------------------------------------------------------------------------------------
மொழிபயிற்றல் அல்லது மொழிபயிலுதல் என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தையும் சொல் களஞ்சியத்தைமட்டுமே பயிற்றுவிப்பதோ அல்லது பயிலுவதோ இல்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளை இங்குப் பார்த்துள்ளோம். கருத்துப்புலப்படுத்தத்திற்கான ஒரு செயல்முனைப்புள்ள கருத்தாடலைக் குறிப்பிட்ட மொழிவழியே மேற்கொள்ளும் திறனைப் பெறுவதே மொழிபயிலுதல் ஆகும் என்று பார்த்தோம்.

இவ்விடத்தில் கருத்தாடலின் ஒரு முக்கியமான பண்பை வலியுறுத்துவது இன்றியமையாதது! கருத்தாடல்களின் அமைப்பு பெரும்பாலும் உலகப் பொதுமையானது! ஒரு குறிப்பிட்டவகைக் கருத்தாடல் ஒவ்வொரு மொழியியலும் வெளிப்படுவது.... பனுவலாக அமைவதில் வேறுபாடுகள் உண்டு! அதாவது, கருத்தாடல்கள் உலகப் பொதுமையானவை. ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட மொழிகளின் பனுவல்கள் வேறுபட்டவை. அந்தந்த மொழிகளின் வெளிப்படுத்தும் முறைகளைச் சார்ந்தவை.
எடுத்துக்காட்டாக, ''நாவல்'' என்ற ஒரு கருத்தாடல் வகையை எடுத்துக்கொள்வோம்! ஒரு ஆங்கில நாவலின் கருத்தாடல் பண்புகளும் ஒரு தமிழ் நாவலின் கருத்தாடல் பண்புகளும் ஒன்றுதான். எனவேதான் இரண்டையும் நாவல்கள் என்று கூறுகிறோம்! ஆங்கில நாவலும் தமிழ் நாவலும் இரண்டுமே தங்களது கருத்தாடல் அமைப்புகளில் ஒன்றுதான்! எனவேதான் இரண்டையும் நாவல் என்று அழைக்கிறோம். இது கவிதை. சிறுகதை , காப்பியம் போன்ற இலக்கியக் கருத்தாடல்களுக்கும் பொருந்தும்! ஆனால் அவை வெளிப்படுகிற மொழிகள் வெவ்வேறானவை! அதாவது பனுவல் பண்புகளில் வெவ்வேறானவை.
இவ்விடத்தில் ஒன்றைக் கூறவிரும்புகிறேன். கருத்தாடல்களின் அமைப்பு '' பெரும்பாலும்'' உலகப் பொதுமையானவை என்று முன்னர் கூறினேன். இந்த முன்னெச்சரிக்கைக்குக் காரணம், சில கருத்தாடல்கள் அல்லது அவற்றில் அமைகிற பேச்சுச்செயல்கள் குறிப்பிட்ட மொழிச் சமூகத்தின் முதன்மைப் பண்பாடுகளைப் பொறுத்து அமையும். முதன்மைப் பண்பாடுகள் என்பவை அச்சமுதாயத்தில் ஒருவர் பிறந்து வளரும்போது, அவர் பிறந்த குடும்பம், இனம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் ஒருவர் தனது நண்பர் ஒருவர் வீட்டுக்குச் செல்கிறார் என்று கொள்வோம். நண்பர் வந்ததும், வீட்டிலுள்ளவர் தமிழரின் விருந்தோம்பல் மரபின் அடிப்படையில் '' ஐயா, கொஞ்சம் காப்பி சாப்பிடலாமா'' என்று கேட்கிறார் என்று கொள்வோம். உடனே வந்துள்ள விருந்தினர் '' சரி, காப்பி கொடுங்கள்'' என்று கூறமாட்டார். மாறாக, '' அதெல்லாம் வேண்டாம். ( கொஞ்சநேரத்திற்குமுன்னால்தான் சாப்பிட்டுவந்தேன்)'' என்று கூறுவார். ஆனால் அவ்வாறு அவர் கூறியதற்காக அவரை நண்பர் விட்டுவிடமாட்டார். '' பரவாயில்லை... கொஞ்சம் சாப்பிடலாம்'' என்று காப்பி கொடுக்க முனைவார். விருந்தினர்தான் '' வேண்டாம்'' என்று கூறிவிட்டாரே , பிறகு ஏன் கொடுக்கவேண்டும் என்று நினைக்கமாட்டார். அவ்வாறு ஒருவேளை அவர் நினைத்துச் சும்மா இருந்துவிட்டால், வந்த விருந்தினர் தனது மனதிற்குள் '' ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அதற்காக வந்த விருந்தினருக்குக் கொஞ்சம் காப்பி கொடுக்கக்கூடாதா' என்ன விருந்தோம்பல் இது?'' என்று நினைத்துக்கொள்வார். இதற்கு மாறாக, வந்த விருந்தினரே '' சரி, காப்பி கொடுங்கள்'' என்று ஒருவேளை கூறிவிட்டார் என்று கொள்வோம். அப்போது விருந்தினரை வரவேற்றவர் தன் மனதிற்குள் '' என்ன இவர், காப்பிக்கு அலைகிறாரே .. ஒரு பேச்சுக்குக் கேட்டால்... ... '' என்று நினைத்துக்கொள்வார். இங்கு வந்தவர் '' வேண்டாம்'' என்றுதான் பொதுவாகச் சொல்வார். வீட்டுக்காரரும் அதற்காகக் காப்பி கொடுக்காமல் இருக்கமாட்டார். இது தமிழரின் விருந்தோம்பல் முறை!
ஆனால் நான் கேள்விப்பட்டவரை மேலைநாட்டு விருந்தோம்பல் மரபில் " Could you have some Coffee " அல்லது " May I offer you some Coffee?" என்று கேட்டவுடன் விருந்தினர் " No thanks" என்று சொல்லிவிட்டால், அதை மீறி, அவருக்கு வீட்டுக்காரர் காப்பி கொடுத்தால், அது ஒருவகை அவமரியாதைதான் அல்லது சரியில்லைதான்! ஆனால் "Yes , Please" என்று அவர் சொன்னார் என்றால், அவருக்குக் காப்பி கொடுக்கவில்லையென்றால் , அது அவமரியாதை! அதாவது '' வேண்டும் '' என்றுகூறினால்தான் காப்பி கொடுக்கவேண்டும். '' வேண்டாம் '' என்று கூறிவிட்டால் காப்பி கொடுக்கக்கூடாது! இது அங்குள்ள விருந்தோம்பல் கருத்தாடல் முறை! இதுபோன்று குறிப்பிட்ட மொழிச் சமூகத்தினருக்கு உரிய கருத்தாடல் மரபுகள் மீறப்பட்டால், உறவுகளே சில சமயம் முறிந்துபோகும். ஒருவர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, '' போய்விட்டுவருகிறேன்'' என்று மட்டும் ஒருவர் சொல்லாமல் திரும்பிவிட்டால், அவ்வளவுதான்! உறவுகள் முறியலாம். அதுபோல, '' வாருங்கள்'' என்று விருந்தினர் வீட்டில் நுழையும்போது, வீட்டுக்காரர் சொல்லாவிட்டால்... அவ்வளவுதான்!
ஆனால், இதே தமிழ்ச் சமுதாயத்தில், ஒரு இறப்பை ஒட்டி, அது நடைபெற்ற வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க ஒருவர் செல்லும்போது, வீட்டுக்காரர் '' வாருங்கள்'' என்று வரவேற்கவோ அல்லது அங்கிருந்து ஒருவர் திரும்பும்போது, வீட்டுக்காரரிடம் நாம் '' போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லவோகூடாது! அவ்வாறு சொன்னால், மேலும் பல இறப்புகள் அங்கு நடக்கட்டும் என்று நாம் நினைப்பதாக அமைந்துவிடும்!
இதுபோன்று , சில கருத்தாடல்கள் குறிப்பிட்ட மொழிச்சமுதாயத்தினரின் முதன்மைப் பண்பாட்டை... மரபைப் பொறுத்து அமைகின்றன. இதுபோன்ற முதன்மைக் கருத்தாடல் பண்புகளை ஒருவர் தான் பிறந்துவாழும் சமுதாயத்தில் , பிறந்து வளரும்போதே பெற்றுக்கொள்கிறார். ஆனால் இரண்டாம் வகையான கருத்தாடல் மரபுகள்... அமைப்புகள் ... பண்புகள் ஆகியவற்றை ஒருவர் தனது கல்வியின்போதும், பணிபுரியும் இடங்களிலும் பெற்றுக்கொள்கிறார் அல்லது கற்றுக்கொள்கிறார். இவை உலகப் பொதுமையானவை. அவற்றை வெளிப்படுத்தும் மொழித்தொடரின் அமைப்பும் தேர்ந்தெடுக்கும் சொல்களுமே மாறுபடும்! இதுபற்றிப் பின்னர் விளக்குகிறேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India