மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (14)
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
ஒரு குறிப்பிட்ட மொழியை ஒருவருக்குக் பயிற்றுவிப்பது என்பது... பயில்பவர் தனது கருத்துப்புலப்படுத்தச் செயலை... அதாவது செயல்முனைப்புள்ள ஒரு கருத்தாடலை .... அந்தக் குறிப்பிட்ட மொழிவாயிலாக எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் பயிற்றுவிப்பதே ஆகும் என்று முன்னர் கூறியுள்ளேன். அவரது கருத்தாடலுக்குக் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறவகையில்... அவர் மொழிவாயிலாகக் கருத்தாடலை வெற்றிகரமாக மேற்கொள்ளும் திறன் பெறவேண்டும்.
''எதற்காகக் கருத்தாடல் மேற்கொள்கிறோம்? ... யாரிடம் கருத்தாடல் மேற்கொள்கிறோம்?... எந்தச் சூழலில் மேற்கொள்கிறோம்? '' போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். பொதுவாக நாம் அனைவருமே இதில் கவனமாகத்தான் இருப்போம். எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் ஒரு உதவியைப் பெறவேண்டும் என்ற ஒரு சூழலில் .. அவரிடம் நாம் எப்போது உதவி கேட்டால் .... எப்படி உதவி கேட்டால்.... அந்த உதவியைப் பெறமுடியும் என்பதில் தெளிவாக இருப்போம் அல்லவா? தமிழில் ஒரு பழமொழி உண்டே... ''ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும்.. ..பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்!'' எனவே ஒரு மொழியின் சொற்களும், இலக்கணமும் தெரிந்தால்மட்டும் போதாது. நாம் கற்றுக்கொண்ட மொழி அறிவை வெளிப்படுத்துவதற்காக நாம் பேசவில்லை. நமது குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம்! சில சமயம் நண்பர்கள் சொல்வார்கள் '' அவர் பண உதவி கேட்டார். ஆனால் அவர் உதவி கேட்டமாதிரித் தெரியவில்லை.. ஏதோ என்னிடம் அவர் பணம் கொடுத்துவைத்த்துமாதிரி கேட்டார். இதுதான் உதவி கேட்கிற லட்சணமா? பிறகு எப்படி நான் பணம் கொடுப்பேன்? அவர் பேச்சே அவருக்கு எதிரி!''
எனவேதான்.. மொழிபயிற்றல் என்பது நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட மொழியின் வழியே ...பல்வேறுவகையான கருத்தாடல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதைக் கற்றுக்கொடுப்பதேயாகும்! ஒரு எழுத்தாளருக்குத் தேவை ... இலக்கியக் கருத்தாடல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதேயாகும்! ஒரு ஆசிரியருக்குத் தேவை , வகுப்பறைக் கருத்தாடல்களை எவ்வாறு மேற்கொண்டு, மாணவர்களுக்கு அறிவை எவ்வாறு அளிப்பது என்பதாகும்! ஒவ்வொரு கருத்தாடலுக்கும் ஒவ்வொரு அமைப்பு உண்டு! பட்டிமன்றக் கருத்தாடல் வேறு... சொற்பொழிவுக் கருத்தாடல் வேறு! கருத்தரங்கக் கருத்தாடல் வேறு! வகுப்பறைக் கருத்தாடல் வேறு! அறிவியல் கருத்தாடல் வேறு. இலக்கியக் கருத்தாடல் வேறு. ஊடகக்கருத்தாடல் வேறு. திரைப்படக் கருத்தாடல் வேறு!
ஒரு இலக்கியப் படைப்பாளி ... எடுத்துக்காட்டாக ஒரு சிறந்த நாவலாசியர் நாவல்களை எழுதுவதில் மிகத் திறமையாக இருக்கலாம். அவரது நாவல்கள் மிகச் சிறந்த நாவல்களாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவரது நாவல்கள் திரைப்படங்களுக்கு ஏற்ற கருத்தாடல்களாக அமைந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எனவேதான்... அவரது நாவல் கதையைத் திரைப்படத்திற்கு ஏற்ற கருத்தாடல்களாக மாற்றுவதற்கு... திரைக்கதை ஆசிரியர் ஒருவர் தனியாகத் தேவைப்படுகிறார். எழுத்துவழியே ஒரு கதை அல்லது கருத்தை வெளிப்படுத்தும் கருத்தாடல் வேறு. அதையே திரை ஊடகத்தின் வழியே வெளிப்படுத்தும் கருத்தாடல் வேறு! பாடல், ஆடல், உரையாடல், செயல் , ஒளிப்பதிவு போன்ற பல ஊடகங்களின்வழியே வெளிப்படுவதே திரைப்படக் கருத்தாடல்! இன்னும் சொல்லப்போனால்... திரைப்படக் கருத்தாடல்களுக்கும் சின்னத்திரைக் கருத்தாடல்களுக்கும் இடையில்கூட பல வேறுபாடுகள் உண்டு!
இலக்கியக் கருத்தாடலுக்கு சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். '' சீதையை நான் கண்டேன்'' என்றுதான் நான் எழுதியிருப்பேன்! ஆனால் படைப்பாளியோ '' கண்டேன் சீதையை! '' என்று எழுதுகிறார். எழுவாயும் பயனிலையும் இடம் மாறி அமையும்போது... அது வெறும் சொற்றொடர் இடம்மாற்றம் இல்லை! அனுமன் சீதையைக் கண்டபோது, எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்திருக்கிறான் என்பதைப் படைப்பாளி வெளிப்படுத்துகிறார்... புலப்படுத்துகிறார்! அதனால்தான் கம்பர் கவிச் சக்கரவர்த்தியாக இருக்கிறார். வெறும் கதையோ அல்லது கற்பனையோ மட்டும் ஒருவரை இலக்கியப் படைப்பாளியாக மாற்றிவிடுவதில்லை! இலக்கியக் கருத்தாடலுக்கு அவர் பயன்படுத்தும் சொல்லாட்சி... மொழிநடை ... தனிச் சிறப்புவாய்ந்தவை! '' திலீபா, உன்னை நாங்கள் புதைக்கவில்லை ... புதிய ஈழத்திற்காக விதைக்கிறோம்!'' இதுவே இலக்கியக் கருத்தாடல் நடை! ''புதை '', ''விதை'' இந்த இரண்டு சொல்களும் எவ்வளவு பெரிய கருத்தை முன்வைக்கிறது! நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிற சொற்களையும், இலக்கணத்தையும்தான் படைப்பாளியும் பயன்படுத்துகிறார். அவரொன்றும் '' அவன் வந்தார்'' என்று எழுதமாட்டார்! ''நான் நேற்று வருவேன்'' என்று எழுதமாட்டார். ஆனால் அவற்றை அவர் பயன்படுத்துவதில்தான்.. அவர் எழுத்து ஒரு இலக்கியமாகிறது!
சிலவேளைகளில் படைப்பாளி இலக்கணவிதியை மீறுவார். ஆனால் அவ்வாறு அவர் மீறுவதற்குக் காரணம்... அவருக்கு இலக்கணம் தெரியாதது என்பது இல்லை! '' அவள் வந்தான் '' என்று எழுதுகிறார் என்று கொள்வோம். அதற்கு ஒரு காரணம் இருக்கும். ''வந்த அந்தப் பெண்'' ஆண்மைக்குரிய வீரத்துடன் வந்தாள்'' என்பதைக் குறிப்பதற்காக அவர் எழுதியிருக்கலாம். பெயர்ச்சொல்களை வினைச்சொல்களாகப் பயன்படுத்துவது... வினைச்சொல்களைப் பெயர்ச்சொல்களாகப் பயன்படுத்துவது .. இவையெல்லாம் இலக்கியக் கருத்தாடலுக்குரிய .... இலக்கண விதிகளை மாற்றிப் பயன்படுத்தப் படைப்பாளிக்கு உள்ள உரிமத்தைக் காட்டக்கூடியவையாகும்! சில இடங்களில் படைப்பாளி நாம் அனைவரும் எதிர்பார்க்கிற ஒரு சொல்லுக்குப் பதிலாக... வேறொரு சொல்லைப் பயன்படுத்தலாம். கவிஞர் கனிமொழி அவர்களின் ஒரு வரி ... முழுமையாக நினைவில் இல்லை.. '' சாதிவிட்டு சாதி திருமணம் செய்துகொண்டதற்காக.. இன்றளவும் தன் தங்கையை ஒதுக்கிவைக்கும் ?????'' . நாம் அனைவரும் எதிர்பார்ப்பது ... ''அண்ணன்'' என்ற சொல்! ஆனால் அவர் பயன்படுத்தியது '' என் தாத்தா''! மூன்று தலைமுறைகள் கடந்தும் தன் தாத்தா இன்னும் மாறவில்லை என்ற ஒரு கருத்தைப் புலப்படுத்துவதற்காக அவர் அதைக் கையாண்டுள்ளார்!
மொழிபயிற்றலில் இலக்கியங்களின் பங்கைப்பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக