வியாழன், 16 மே, 2024

தமிழில் புணர்ச்சி தேவையான ஒன்றா இல்லையா?

 தமிழில் புணர்ச்சி தேவையான ஒன்றா இல்லையா என்ற கருத்தாடலில் வேறொரு பதிவுல் இடம்பெற்ற கருத்துக்கள்

--------------------------------------------------------------------
மருத்துவர் ஐயா திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம் அவர்கள்
------------------------------------------------------------------
//பண்டிதர்களிடையேகூட ஒற்றுமிகுதல் பற்றிய ஒருமித்த கருத்து கிடையாது. இலக்கண நூல்களோ மேம்போக்காகச் சொல்லிச் சென்றுவிடுகின்றன. அவற்றிடையேகூட ஒரு தெளிவு இல்லை. நன்னூலும் தொல்காப்பியமும் வெவ்வேறு முறையில் புணர்ச்சி விதி கூறுகின்றன. இந்த அழகில் 'க்' இல்லை 'ப்' இல்லை என மருட்டினால் பல இளைஞர்கள் தமிழே வேண்டாம் என ஓடிப்போய்விடுவார்கள்.//
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------
//ஒற்று மிகுதல் தொடர்பானவற்றில் மிகச் சில இடங்களில்தான் ஒருமித்த கருத்து இல்லை. வேற்றுமைத்தொகை, தொடரியல் போன்றவற்றில் பொருண்மை மயக்கங்களைத் தீர்ப்பதற்குப் புணர்ச்சி உதவுகிறது. இதை யாரும் மறுக்கமுடியாது. வாழ்த்துக்கள் - வாழ்த்துகள் போன்ற சில இடங்களில் வேறுபாடு இருக்கலாம்.
ஆங்கிலம் சரியாகத் தெரியாத ஒருவன் தவறுதலாக ஆங்கிலம் எழுதும்போது , அவனுக்காக ஆங்கில இலக்கணத்தைப் பின்பற்றமால் இருப்பார்களா? அதுபோன்றதுதான் தமிழில் உள்ள சிக்கலும்.
எழுத்துத்தமிழைப்பொறுத்தவரை முறைசார் கல்வியில்தான் ஒருவர் தமிழ் படிக்கிறார். அப்போது அவருக்குத் தெளிவாகக் கற்றுக்கொடுத்தால் சிக்கல் வராது. அவரும் தெளிவாகக் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்.
தாங்கள் கூறுகிற 'பல இளைஞர்கள்' யார்? முறைசார் கல்வியில் எழுத்துத்தமிழ் கற்றுக்கொண்டவரா? அப்படியிருந்தால் அவர் தவறு செய்யக்கூடாது. 'தமிழே வேண்டாம் என ஓடிப்போய்விடக்கூடாது''! தங்கள் எழுத்துத்தமிழ் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். எதிலும் கற்கவேண்டியதைக் கற்றுத்தானே ஆகவேண்டும். ஒரு சிறு பிழை ஆங்கிலத்தில் செய்துவிட்டால் எவ்வளவு வருத்தப்படுகிறார்கள்? வெட்கப்படுகிறார்கள்! அதே மனநிலை தமிழைப் பயன்படுத்துவதில் - அதுவும் தமிழர்கள் பயன்படுத்துவதில் தேவை இல்லையா?//
மருத்துவர் ஐயா திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம் அவர்கள்
--------------------------------------------------------------------
//வேற்றுமைப் புணர்ச்சியிலும் இலக்கணிகளுக்குக் குழப்பம் உண்டு. "காவிரி புரக்கும் நாடு கிழவோனே", "பழமுதிர் சோலை மலைகிழவோனே" என பத்துப்பாட்டுகள் முடிந்தமைக்கு சரியான விளக்கம் கிடையாது. மிக நெருக்கினால் விதிவிலக்கு, புலவர் உரிமை (poetic license) என எதையாவது மழுப்பலாகக்கூறி தப்பித்துக்கொள்கிறார்கள். ஆங்கிலம் போல தமிழ் நெகிழ்ந்துகொடுக்க வில்லை.....இல்லை....இல்லை....நெகிழ்ந்துகொடுக்க விடமாட்டேன் என்கிறார்கள் என்பதே என் ஆதங்கம். Colour என்பதை color என்றும், Paediatric என்பதை pediatric என்றும் அவர்கள் எழுதத்தொடங்கி வெகுகாலமாயிற்று. தமிழறிஞர்களாக இருந்திருந்தால் அங்கே a விட்டுப்போச்சு இங்கே u விட்டுப்போச்சு எனக் குறைகண்டு மனநிறைவு பெற்றிருப்பார்கள். ஒற்று மிகுதலின் தேவை ஒலிப்பினிமை என்றே கருதுகிறேன். அதை அவரவர் விருப்பமாக (optional? விடாமல் விதி செய்ததே இலக்கணிகள் செய்த பிழை. செய்த விதிகளையும் அரைகுறையாகச் செய்தது அடுத்த குறை. முன்னுக்குப்பின் முரண்படச் செய்தது மூன்றாவது குறை. இன்னும் குறைகளை அடுக்கலாம்....ஆனால் குறை காணும் தமிழாசிரியர்கள் மாறவா போகிறார்கள்?//
ந. தெய்வ சுந்தரம்
----------------------------------------------------------------------
//நன்றி மருத்துவர் ஐயா. தாங்கள் கூறிய ஆங்கிலச் சிக்கலுக்குக் காரணம் வேறு. ஒன்று இங்கிலாந்து ஆங்கிலம் ( Paediatric ; colour) மற்றொன்று அமெரிக்க ஆங்கிலம் (Pediatric, color). இரண்டும் ஆங்கிலம் என்ற இருந்தாலும் இரு நாடுகளுமே தங்கள் ஆங்கிலம் வேறு வேறு என்று கூறுகிறார்கள்.
ஒற்று அல்லது சந்தி அல்லது புணர்ச்சி என்பதில் பேச்சொலியியல், மொழியசை அமைப்பு, உருபனியல், தொடரியல், பொருண்மையியல் என்று பல நிலைகளுக்கும் பங்கு உண்டு. எனவே இது வெறும் ஒற்று நினைத்துவிடக்கூடாது. சில ஒற்றுப் பிரச்சினைகள் வேண்டுமென்றால் அவரவர் விருப்பமாக இருக்கலாம். ஆனால் எல்லாம் அப்படி இல்லை.
மேலும் விதி என்றது இருப்பதைக் கண்டறிந்து கூறுவதுதான். அவ்வாறு விதி கண்டறிந்தபிறகு அதைக் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும். அப்போதுதான் ஒருவர் எழுதுவது அடுத்தவருக்குப் புரியும். எல்லா இலக்கண விதிகளும் அப்படியே.
இலக்கண விதிகள் செய்யப்படுவதில்லை; உருவாக்கப்படுவதில்லை. புவியீர்ப்பு விசைக்கான விதி போன்று இலக்கண விதிகளும் கண்டறியப்பட்டவையே. யாப்பு இலக்கணம்கூட இந்த ஓசைக்கு, இந்தப் பொருளுக்கு, பேச்சொலி, எழுத்து, உருபன், தொடர் அமைப்பு என்பவை இப்படி இருக்கவேண்டும் என்று நடைமுறை அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்டவையே என்று நான் கருதுகிறேன்.
இருப்பவற்றைக் கண்டறிவது வேறு; மேலே இருந்து கற்பனையில் ஒன்றில் முடிவுக்கு வந்து அதைத் திணிப்பது என்பது வேறு. நான் விதிகள் என்று கூறுபவை மேற்குறிப்பிட்ட முதல்வகை.//


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India