வியாழன், 16 மே, 2024

மொழியியல் தமிழுக்கு எதிரானதா?

மொழியியல் தமிழுக்கு எதிரானதா? 

மொழியியலே தமிழ்மொழி ஆய்வுக்கு எதிரானது என்று இன்னும் ஆங்காங்கே குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆங்கில இலக்கணத்தைத் தமிழுக்குப் புகுத்த முயல்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது கணினிமொழியியல் துறை வளர்ச்சி அடையும்போது மொழியியல் ஆய்வாளர்கள் அந்தத் துறையைப் பயன்படுத்தித் தமிழ்ச்சமுதாயத்திற்கு ஏதாவது பயனுள்ள பணிகளை மேற்கொள்ளமுடியுமா என்று கருதிப்பார்க்கிறார்கள்.
மேலைநாட்டு அறிவியல் வளர்ச்சியைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் என்ன தவறு இருக்கிறது? அறிவியலில் மேலைநாடு, கீழைநாடு என்று பார்ப்பது சரி இல்லை. மொழியியல் துறையில் புதிய புதிய கோட்பாடுகள் உலக அளவிலான மொழியியல் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அவற்றைத் தமிழ்க்குச் செயல்படுத்திப் பார்த்து, அந்தக் கோட்பாடுகள் சரியா தவறா என்று மொழியியல் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்யவேண்டும்.
மொழியியல் என்றால் ஆங்கில இலக்கணம் என்று கூறப்பட்டது . தற்போது மொழியியல் துறையானது கணினியை வைத்துக்கொண்டு தமிழைச் சிதைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒலித்துவருகிறது.

தமிழகத்தில் மொழியியலுக்கு எதிராகப் பேசுபவர்கள் முதலில் மொழியியல் துறைபற்றி நன்கு தெரிந்துகொண்டு பேசவேண்டும். அனைத்து மனித மொழிகளின் பண்புகளையும் ஆய்வுசெய்யக்கூடிய ஒரு துறை மொழியியல். மொழியியல் அனைத்து மொழித்துறைகளுக்கும் பொதுவானது. அதை ஆங்கிலத்திற்கும் பயன்படுத்தலாம், தமிழுக்கும் பயன்படுத்தலாம், வளர்ச்சியடையாத மொழிகளையும் ஆய்வு செய்யலாம். ஆங்கிலத்திற்கு ஒரு ஆய்வுமுறை, தமிழுக்கு ஒரு முறை, பழங்குடி மக்களின் மொழிகளுக்கு ஒரு ஆய்வுமுறை என்று மொழியியலில் கிடையாது. இயற்பியல், வேதியில் போன்று இதுவும் ஒரு அறிவியல் துறை.

இன்றைக்கு அதிகமாகப் பேசப்பட்டுவருகிற செய்யறிவுத்திறன் தொழில்நுட்பம் 50 ஆண்டுகளுக்குமுன்பு தோன்றி வளர்ந்திருக்கமுடியாது. தற்போது ஏற்பட்டுள்ள கணினியியல் வளர்ச்சியும் அதற்கான உட்கட்டுமானமும் (Infra structure) இதைச் சாத்தியமாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கானவர்களின் கூட்டு உழைப்பால்தான் இது சாத்தியமாகியுள்ளது. இப்போதும்கூட ஒரு தனிநபர் அதைப் பயன்படுத்தமுடியுமேதவிர, அதுபோன்ற ஒன்றைத் தனியே உருவாக்கமுடியாது. கோடிக்கணக்கான பணம் தேவை. ஆயிரக்கணக்கானவர்களின் கூட்டு உழைப்பு தேவை. இது தற்போதுதான் சாத்தியம். இதில் என்ன பிரச்சினை என்றால் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்தான் உருவாக்கமுடிகிறது. மற்றவர்கள் அதைப் பயன்படுத்தலாம். உருவாக்குவது கடினம்.
எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் தேவை ஒரு சமுதாயத்தில் உருவாகவேண்டும். மேலும் அதற்கான உள்கட்டமான வசதி வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட அறிவியல் தோன்றி வளரமுடியும் ( இதுபற்றி இரண்டு நூல்களை ஆர்வமுள்ளவர்கள் படிக்கவேண்டும். ஒன்று, பெர்னால் அவர்களின் ''வரலாற்றில் அறிவியல் - Science in History) '';. மற்றொன்று ஜோசப் நீதாம் அவர்களின் '' சீனத்தில் அறிவியலும் நாகரிகமும் - Science and Civilization in China: இதுபோன்று ஒரு நூலை இந்தியாவில் தேபி பிரசாத் சட்டோபாத்யாயாய எழுதியுள்ளார்) இன்றைக்குச் செய்யறிவுத்திறன் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தேவைப்படுகிறது. அதற்கான வசதியும் அவர்களிடம் இருக்கிறது. நாம் அதைப் பயன்படுத்தாலம். நமக்கேற்றமுறையில் சற்று மாற்றலாம். அவ்வளவுதான்.

மற்றொரு கருத்தையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். நானோ அல்லது தமிழகத்தின் மொழியியல் ஆசிரியர்கள் , ஆய்வாளர்களோ எந்தவொரு இடத்திலும் தமிழ்மொழியின் இலக்கணத்தை அல்லது தமிழ்மொழியின் அமைப்பு நுட்பங்களைப் புறக்கணிக்கவோ அல்லது தவிர்க்கவோ அல்லது எதிராகப் பேசவோ செய்தது கிடையாது. ஒரு மொழியின் வளத்தை மேலும் திட்டமிட்டு அம்மொழிச்சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுப்பதற்கான கருத்துக்களை முன்வைப்பது தமிழ்மொழிக்கு எதிரானது கிடையாது. மாறாக, தமிழ்மொழிக்குத் திட்டம்மிட்டு வளத்தைக் கூட்டுவதே ஆகும்.
இதுபோன்றுதான் தற்போதைய கணினி மொழியியல் அல்லது இயற்கைமொழி ஆய்வுத் துறை. இந்தத் துறையானது தனது மொழி ஆய்வில் எங்கும் நிலவுகிற இன்றைய எழுத்துத்தமிழின் மொழிநுட்பங்களைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை. எனது வருத்தமே இந்தக் கணினிமொழியியல் துறை, செய்யறிவுத்திறன் மென்பொருள் உருவாக்கம் போன்றவற்றைப் பற்றிப் புரிதல் இல்லாமல் அல்லது செயற்படுத்திப்பார்க்காமல், குறைகூறுவதுதான். இந்த அணுகுமுறை தமிழ்மொழி வளர்ச்சிக்கு எதிரானது என்று கூறக்கூடாது. இந்த மொழி அறிவைக் கணினிக்குக் கொடுப்பதில் அது கணிதத்தையும் புள்ளியியலையும் கணினியியலையும் இணைத்துக்கொளவதில் எவ்விதத் தவறும் இல்லை. இந்த முயற்சி உறுதியாகத் தமிழுக்கு வளம் சேர்க்கும்; தமிழ்ச்சமுதாயத்தின் மொழிச்செயல்பாடுகளுக்கு உதவும்.
மாறாக, இன்றைய தமிழ்மொழியின் தரவுகளை எவ்வாறு கணினிக்கு அளித்தால், கணினி அதைப் புரிந்துகொண்டு அல்லது கற்றுக்கொண்டு தமிழுக்குச் செயல்படுத்தலாம் என்பதே இத்துறையின் ஆய்வு அல்லது முயற்சி ஆகும். கணினி அவ்வாறு புரிந்துகொண்டால் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பலவகைகளில் மொழிப்பயன்பாடுகளில் உதவும். கணினியின் இந்த மொழிகற்றலில் தமிழின் எந்தவொரு மொழிநுட்பத்தையும் புறக்கணிக்கவோ அல்லது கைவிடவோ அது சொல்வது இல்லை. மாறாக, தமிழ்மொழியின் நுட்பங்களைக் கணிதம், புள்ளியியல், கணினியியல்போன்ற துறைகளின் அறிவோடு இணைத்து, தமிழ்மொழி ஆய்வை அடுத்த உயர்கட்டத்திற்குக் கொண்டுசெல்வதுதான்.
எனவே இந்த புதிய துறையைப்பற்றிய அறிவை நாம் உள்வாங்கிக்கொள்ளாமல், செயல்படுத்திப்பார்க்காமல், தொடக்கத்திலேயே இத்துறையானது தமிழ்மொழிக்கு எதிரானது என்று கூறுவது சரி கிடையாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India