''சொல்கள்'' - ''சொற்கள்'' ? ''நாள்கள் - நாட்கள்''? - ஓர் ஐயம்! (1)
-----------------------------------------------------------------------
தமிழில் தொகைச்சொல்களில் இரண்டு பெயர்களுக்கு இடையில் ஒற்று மிகும் அல்லது திரிதல் நடைபெறும். தொகை என்பதைச் சுட்டிக்காட்டி நிற்க இந்தப் புணர்ச்சி தேவைப்படுகிறது.
ஆனால் ஒரு பெயர்ச்சொல்லும் அதனுடன் பன்மை விகுதியும் இணையும்போது தொகைச்சொற்களுக்கு உரிய புணர்ச்சி நடைபெறுமா?
1) பல் + பசை -> பற்பசை (தொகை)
2) கல் + குடம் --> கற்குடம் (தொகை)
3) மண் + பானை -->மட்பானை (தொகை)
4) பொன் + குடம் -->பொற்குடம் (தொகை)
---------------------------------------------------------------------
5) நாள் + கள் ( அருந்தும் ஒரு பானம்)
நாட்கள் (தொகை)
6) பனை + கள் ( பனையின் பன்மை வடிவம்)
பனைக்கள் (தொகை)
ஆனால் ‘கள்’ என்பது பன்மைவிகுதியாக இருந்தால் – அதாவது பெயர்ச்சொல்லாக இல்லாமல் இருந்தால் – தொகைக்குரிய புணர்ச்சி நடைபெறுமா?
7) நாள் + கள் – நாள்கள். இங்கு புணர்ச்சி செயல்பட்டால், இதற்கும் மேலே குறிப்பிட்ட (5) -இல் உள்ள ‘நாட்கள்’ (நாட்பட்ட கள்) என்பதற்கும் வேறுபாடு இல்லாமல் போகும்.
8 ) அதுபோன்று பனை + கள் --> பனைகள். இங்கு புணர்ச்சி செயல்பட்டால் , இதற்கும் மேலே குறிப்பிட்ட (6) ‘பனைக்கள்’ (பனையிலிருந்து கிடைக்கப்பெற்ற ''கள்'') என்பதற்கும் வேறுபாடு இல்லாமல் போகும்.
தொகைச்சொல்லான பாடம் + கருத்து --> பாடக்கருத்து. கெடுதலும் தோன்றலும் நடைபெறுகின்றன.
ஆனால் பாடம் + கள் (பன்மை விகுதி) --> பாடக்கள் என்று அமையாமல் ‘பாடங்கள்’ என்றுதான் அமைகிறது. இங்கு ‘பாடம்’ என்பதில் உள்ள ‘ம்’ ஆனது ‘ங்’ என்று மாறியதற்குக் காரணம் தமிழ் மெய்மயக்க விதிகளே ஆகும். புணர்ச்சி இல்லை எனக் கருதுகிறேன். புணர்ச்சியாக இருந்திருந்தால், ‘பாடக்கள்’ என்று அமைந்திருக்கவேண்டும்.
அப்படியென்றால், பற்கள், சொற்கள், கற்கள் என்பவை சரி இல்லையா?
மாறாக, பல்கள், சொல்கள், கல்கள் என்பவையே சரியா?
பற்பசை – தொகை
சொற்குற்றம் – தொகை
சொற்போர் - தொகை
கற்குடம் – தொகை
மட்குடம் – தொகை
பொற்குடம் – தொகை
எனவே, தொகை என்பதைக் காட்டிநிற்கிற புணர்ச்சியானது , பெயர் + பன்மை விகுதி என்று அமையும்போது நடைபெறுமா?
நிலைமொழியின் இறுதி எழுத்து, வருமொழியின் முதல் எழுத்து என்று அடிப்படையில் ஒற்று மிகுதல் அல்லது திரிதல் நடைபெறுகிறதா?
அல்லது நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் உள்ள இலக்கண உறவு அடிப்படையில் ஒற்று மிகுகிறதா?
நண்பர்களின் கருத்து அறிய விரும்புகிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக