''சொல்கள்'' - ''சொற்கள்'' ? ''நாள்கள் - நாட்கள்''? - ஓர் ஐயம்! (2)
--------------------------------------------------------------------------
இதன் முதல் பகுதியில் பின்னூட்டங்கள் அதிகமாகி விட்டதால் (47 கருத்துக்கள்), அதன் தொடர்ச்சியாக என் கருத்தை அடுத்த பதிவாக இடுகிறேன். நண்பர்கள் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன், திரு. மாலன், பேரா. செல்வக்குமார், பேரா. கி. கருணாகரன், மருத்துவர் ஐயா திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம், பேரா. வாசு இரங்கநாதன், பேரா. கிருஷ்ணா ரெட்டி அன்பன், நண்பர் கலாப்பிரியா, நண்பர் மகுடேஸ்வரன், பேரா. மருதூர் அரங்கராசன் உட்பட பலர் பின்னூட்டத்தில் தங்கள் கருத்துக்களைத் தெளிவுபடுத்தியிருந்தனர். அவர்களுக்கு மிக்க நன்றி. (அமெரிக்காவைச் சேர்ந்த நண்பர் இராமசாமி செல்வராஜ் அவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.)
எனது கருத்துக்கள் எல்லாம் இன்றைய எழுத்துத்தமிழை அடிப்படையாகக்கொண்டவை. எனக்குப் பழந்தமிழ் இலக்கிய நடை பற்றிய அறிவு கிடையாது! மேலும் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ளவே இந்தப் பதிவுகளை இடுகிறேன். இது கருதுகோள்தான். முடிந்த முடிவு இல்லை! நண்பர்களுடைய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு இறுதியில் என்னுடைய கருத்துக்களைத் தொகுத்தளிக்கிறேன்.
வேற்றுமைப்புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் மூன்றும் நடைபெறும். ஆனால் அல்வழிப்புணர்ச்சியில் தோன்றல் உண்டா?
மெய்மயக்க விதிகள்
-----------------------------
மெய்மயக்க விதிகளின் அடிப்படையில் (அல்வழிப்புணர்ச்சியில்??) அடுத்துநிற்கிற சொல்லின் முதல் எழுத்தைப்பொறுத்து, நிலைமொழியின் இறுதி எழுத்து மாறும் ( வருமொழி முதல் எழுத்தின் மெல்லினமாக அமையும். ) . மரம் + கள் -> மரங்கள். இங்கு 'ம்' என்பது 'க' மெய்யுக்கு இணையான மெல்லினம் இல்லை. எனவே 'ம்' ஆனது 'க்' எழுத்துக்கு இணையான 'ங்' எழுத்தாக மாறுகிறது (ஆனால் 'க்' என்று மாறவில்லை!) . இது ஒருவகையான திரிதல் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது வேற்றுமைப் புணர்ச்சியில் நடைபெறுகிற திரிதல் இல்லை. நிலைமொழியானது நேரடியாக 'கள்' என்ற பன்மை விகுதியுடன் இணையும்போது 'ம்க்' என்பது தமிழின் மெய் மயக்க விதிக்கு உட்பட்டது இல்லை என்பதால் 'ங்க்' என்று மாறுகிறது.
(எ-கா.) மரம் + செடி --> மரஞ்செடி;
பெரும் + தோள் --> பெருந்தோள்.
பெரும் + படை --> பெரும்படை.
இங்கு நிலைமொழியின் இறுதியில் நிற்கிற 'ம்' ஆனது 'ப்' என்பதற்கு இணையான மெல்லினமாக இருப்பதால் மாற்றத்திற்குத் தேவை இல்லை.
எனவே நிலைமொழியன் இறுதி 'ம்' ஆனது வருமொழியின் முதல் எழுத்தைப்பொறுத்து மாறி அமைகிறது. 'ம்' ஆனது 'ங்', 'ஞ்' 'ந்' என்று மாறி அமைகிறது.
(தமிழில் நிலைமொழியின் இறுதியில் 'ம்' தவிர 'ண்' 'ன்' 'ய்' ர்' 'ல்' 'ள்' 'ழ்' ஆகிய ஆறு எழுத்துக்களும் வரும்போது இந்த மாற்றம் ஏற்படாது.கண்கள், பொன்கள், வாய்கள், தேர்கள், வால்கள், வாள்கள் )
வேற்றுமைப்புணர்ச்சி
---------------------------------
ஆனால் (வேற்றுமைப்புணர்ச்சியில்) மரம் + கட்டை என்ற வேற்றுமைத்தொகையில் 'நிலைமொழியின் இறுதி எழுத்தான 'ம்' ஆனது வருமொழியின் முதல் எழுத்தான 'க்' போன்று மாறுகிறது (ஆனால் 'ங்' என்று மாறவில்லை) . இந்த மாற்றத்தை இரண்டுவகைகளில் பார்க்கலாம்.
(1) மரம் + க் + கட்டை; மரம்க் + கட்டை -> மரக்கட்டை . இங்கு 'ம்க்' என்பது ஆனது 'க்' ஆக மாறுகிறது; பல் + பசை என்பதிலும் பல் + ப் + பசை என்பதில் 'ல்ப்' என்பது 'ல்' என்பதற்கு இணையான வல்லினமாக - ற் - என்று மாறுகிறது. இதுபோன்று 'ன்க்' --> ற் என்றும் (பொன் + குடம் --> பொற்குடம்) 'ள்க்' --> ட் என்றும் (கள் + குடம் --> கட்குடம்) , 'ண்க்' என்பது 'ட்' என்றும் ( மண் + குடம்--> மட்குடம்) மாறுகின்றன.
(2) மரம் + கட்டை என்பதில் நிலைமொழி இறுதியான 'ம்' வருமொழியின் வல்லின மெய்யெழுத்துக்குத்தகுந்தபடி 'க்' திரிகிறது என்றும் கூறலாம். ஆனால் இறுதி விளைவு ஒன்றுதான் - ''மரக்கட்டை''. இதுபோன்றே நிலைமொழியின் இறுதி எழுத்துக்களான 'ல்'
'ள்' 'ன்' 'ண்' ஆகியவை முறையே 'ற்' 'ட்' 'ற்' ' ண்' என்று மாற்கின்றன (கல்+ குடம் --> கற்குடம்; வாள்+ போர் --> வாட்போர்; பொன் + குடம் --> பொற்குடம்; மண் + குடம் --> மட்குடம்)
எனவே, மரங்கள் என்பது மெய் மயக்க விதிகளை அடிப்படையாகக்கொண்டது என்றும் மரக்கட்டை என்பது வேற்றுமைத்தொகைக்கு உரிய புணர்ச்சி அல்லது சந்தி என்றும் கூறலாமா? இது ஒரு கருதுகோள்தான்.
எனது கருத்து - மெய்மயக்க விதிகள் வேறு; புணர்ச்சி அல்லது சந்தி விதிகள் வேறு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக