கீழ்க்கண்டவற்றைப் பிரித்து எழுதலாமா? (2)
-----------------------------------------------------------------------
ஒருவர் விருப்பப்பட்டால் பிரித்து எழுதும் நடையை ஏற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் தாம் எழுதிய கூட்டுச்சொல்களையே தக்கவைத்துக்கொள்ளலாம்.
எங்கு பிரிக்கவேண்டும், எங்கு பிரிக்கக்கூடாது என்பதற்கான விதிகளை நாம் தெளிவாக்கவேண்டும். ''வானொலி (ஒரு சொல்நீர்மை உடையது) '' என்பதை 'வான் ஒலி ' என்று பிரிக்கக்கூடாது; ''பாற்குடம் (வேற்றுமைத்தொகை) '' என்பதைப் ''பாற்/ பால் குடம்'' என்று பிரிக்கக்கூடாது; ''கண்டுபிடி'' என்பதைக் ''கண்டு பிடி' என்று பிரிக்கக்கூடாது.
ஆனால் ''வந்துசாப்பிட்டான்'' என்பதை ''வந்து சாப்பிட்டான்'' என்று பிரிக்கலாம்; பிரிக்கவேண்டும். 'அவனில்லாமல்'' என்பதை ''அவன் இல்லாமல்'' என்று பிரிக்கலாம். ''விஷமருந்து'' என்பதை ''விஷம் அருந்து'' என்றும் ''விஷம் மருந்து'' என்றும் பிரிக்கலாம். இதில் பொருள் மயக்கத்தையும் தவிர்க்கலாம்.
இவைபோன்ற செயல்களே மொழிவளர்ச்சிக்கான - மொழிமேம்பாட்டுக்கான - திட்டத்தில் அடங்கும். ஆனால் இந்தப் பணியைத் தனிநபர்கள் மேற்கொள்ளமுடியாது. தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுத்து, தமிழறிஞர் குழு ஒன்றை ஏற்படுத்தி, எது சரி, எது தவறு என்பதைப்பற்றி முடிவெடுக்கவேண்டும். அதன்பின் அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவேண்டும். ஒருவரை இப்படித்தான் எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது. ஆனால் அரசு தனது பணிகளில் அவற்றைப் பின்பற்றத் தொடங்கலாம். முறைசார் கல்வியில் செயல்படுத்தலாம்.
இது எனது கருத்துத்தான். இது எந்தவகையிலும் தமிழ் இலக்கணத்தைப் பாதிக்காது. நடைத்தெளிவுதான் ஏற்படும். இந்தக் கருத்தை நான் முன்வைப்பதால் உடனே ''தமிழ்த்துரோகி'' என்று பட்டம் சூட்டிவிடவேண்டாம்.
முதல் கட்டத்தில் இதை ஒரு விருப்பத்தின் அடிப்படையிலான செயலாக முன்வக்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தவேண்டாம். காலம் செல்லச் சொல்ல இது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று என்றால் நீடிக்கும். இல்லையென்றால் மறைந்துவிடும்.
எனது நடையிலே இதுபோன்று சேர்த்து எழுதுவதுதான் தற்போது நீடிக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். இனி மாற்றலாம் எனக் கருதுகிறேன். ஆனால் இந்த நடை எளிதாக வந்துவிடாது. சற்று முயலவேண்டும்.
என்னைப் பொறுத்தமட்டில், ஒருவர் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், கால வளர்ச்சியில் இதுபோன்ற எளிமை நடைதான் தோன்றி நீடிக்கும். செய்யுள் நடையிலிருந்து மாறுபட்டு, உரைநடை நடை ஒன்று தோன்றி வளர்ந்துள்ளதுபோல, இந்த உரைநடை எளிமையும் சமுதாயத்தில் தேவைப்பட்டால் தோன்றி வளரத்தான் செய்யும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக