வியாழன், 16 மே, 2024

பழந்தமிழில் ஒலிப்புள்ள மெய்யொலிகள் // ஒலிப்புள்ள வல்லின மெய்யொலிகள் உண்டா?

 பழந்தமிழில் ஒலிப்புள்ள மெய்யொலிகள் // ஒலிப்புள்ள வல்லின மெய்யொலிகள் உண்டா என்பதுபற்றி முகநூல்பதிவில் இடப்பட்ட ஒரு பதிவில் எனது கருத்துக்கள் . . .

------------------------------------------------------------------------
நண்பர் திரு. மணி மணிவண்ணன்
---------------------------------------------------
(1) //பண்டைத்தமிழில் ஒலிப்புடை மெய்யொலிகள் இல்லை என்று ஐராவதம் மகாதேவன் ஒரு கூற்றை முன்வைத்தார். அதனால்தான், தமிழி எழுத்துமுறை பிராமியிலிருந்து கிளைத்திருந்தாலும் வர்க்க எழுத்துகளை (ஒலிப்புடை, காற்றொலி)த் தமிழி எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார். தொல்காப்பியம் ஒலிப்புடை மெய்யொலியைக் குறிப்பிடவில்லை என்பதை இந்தக் கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகிறார்.
அகம், அம்பு, பந்து, பாம்பு, முருகன், வண்டு (അകം, അമ്പ്, പന്ത്, പാമ്പ്, മുരുകൻ, വണ്ട്) என்ற சொற்களில் இன்று தமிழில் ஒலிப்புடை ஒலி இருப்பது போல் மலையாளத்திலும் இருக்கிறது. இதே போன்ற பிற திராவிட மொழிகளில் உள்ள சொற்களிலும் ஒலிப்பிலா ஒலிகள் மெலிந்திருக்கின்றனவா? இல்லை இனமான சொற்கள் தெலுங்கிலும், கன்னடத்திலும் ஒலிப்பிலா ஒலிகளாகவே இருக்கின்றனவா? கொம்பு என்ற தமிழ்ச்சொல்லைக் கன்னடத்தில் ಕೊಂಬು என்று எழுதுகிறார்கள். அதில் பகரம் ஒலிப்புடை ஒலியாகத்தான் இருக்கிறது என்று கூகிள் மொழிபெயர்ப்பு சொல்கிறது. ஆனால், ப-கரம் எழுத்திலும் ஒலிப்புடை எழுத்தாகத்தான் தெரிகிறது.
மகாதேவனின் இந்தக் கட்டுரை பற்றிப் பிற தமிழறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள்?
(கட்டுரையின் சுட்டி கருத்துப்பெட்டியில்)//
(2) //தமிழில் ஒலிப்புள்ள வல்லின மெய்யொலிகளே இல்லை என்பதால்தான் பிராமியிலிருந்து எழுத்துகளைத் தமிழ் எடுத்துக்கொண்டபோது ஒலிப்புள்ள ஒலிகள், காற்றொலிகளுக்கான எழுத்துகளை நீக்கிவிட்டது என்கிறார். கால்டுவெல்லின் விதி மாற்றொலிகள் பற்றியது. அது தொடக்கத்தில் இருந்திருக்காது என்பது அவர் கூற்று. அதை அவர் தமிழ்ச் சொற்களைப் பிற மொழிகளில் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்றும் பார்க்கிறார். வேறு சில ஆய்வாளர்களும் தமிழ்ச்சொற்களைச் சிங்களத்தில் எழுதும்போது இன்று ஒலிப்புடை மெய்யொலிகளாக இருப்பவற்றைத் தமிழில் எழுதுவது போலவே ஒலிப்பிலா மெய்யெழுத்துகளைக் கொண்டு எழுதுவதால், தமிழில் தொடக்கத்தில் இவை ஒலிப்பிலா ஒலிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். தமிழ் எழுத்துகள் பிராமியிலிருந்து வந்தனவா இல்லையா என்ற ஆய்வில் இதுவும் ஒரு முதன்மையான கூற்று.//
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------
(1) //நான் தாங்கள் கூறுகிற கட்டுரையை நான் படிக்கவில்லை. மன்னிக்கவும். இது முழுக்க முழுக்கப் பேச்சொலிகளுக்கும் (Speech sounds / phones/ allophones) , ஒலியன்கள் (Phonemes) அல்லது எழுத்துக்களுக்கும் (Graphemes) இடையில் வேறுபாடு பார்க்காமல் சொல்கின்ற கருத்து என்று நான் கருதுகிறேன். மேலும் ஒலிப்புடை மெய்யொலிகள் (Voiced consonants) அன்றைய தமிழில் இருந்ததா இல்லையா என்பதை எப்படிப் பழைய ஆவணங்களின் எழுத்துத் தமிழை வைத்துக்கொண்டு கூறமுடியும்? அன்றைய தமிழின் பேச்சுமொழி ஆவணங்கள் ( ஒலிநாடா போன்றவை) இன்று கிடைக்காது.
மேலும் அன்றைய தமிழில் ங்,ஞ், ண், ம், ன், ந் ஆகியவை கிடையாதா? மெல்லின ஒலிகள் எல்லாம் ஒலிப்புடை ஒலிதானே (Voiced consonants) ! மேலும் அவை ஒலியன்களாகவும் (Phonemes) நீடிக்கின்றன. எனவேதான் அவற்றிற்கு எழுத்துக்கள் (Graphemes) இருக்கின்றன. வல்லினங்களில்தான் ஒலிப்புடைய மெய்யொலிகள் (allophones for Stop Phonemes) இருந்ததா இல்லையா என்பது ஆராயவேண்டியது. ஏனென்றால் அவை இன்று மாற்றொலிகளாக (allophones) இருப்பதுபோல அன்றும் இருந்திருக்கும். எனவே அதற்கு எழுத்துக்கள் இல்லை. அதனால் திட்டவட்டமாக வல்லின மெல்லினப் பேச்சொலிகள் (Voiced Stop Phones) இல்லை என்று கூறுவது சரியாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
மீண்டும் நான் கூறுகிறேன், நான் தாங்கள் கூறியுள்ள கட்டுரையை படிக்கவில்லை. மேலும் ஐராவதம் மகாதேவன் மொழி இலக்கண அறிவு உள்ளவர்தான். ஏதோ சில காரணங்களுக்காக அவ்வாறு கூறியிருக்கிறார். அவர் ஒலிப்புள்ள வல்லின (மெய்) பேச்சொலிகள்பற்றித்தான் பேசியிருப்பார் எனக் கருதுகிறேன்.//
(2) //நண்பரே, நான் இந்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு குழப்பம் இருக்கிறது. வல்லின ஒலியன்களுக்கு ஒலிப்புள்ள மாற்றொலிகள் உண்டா இல்லையா என்பதுபற்றியே இந்தக் கட்டுரை. தமிழில் ஒலிப்புள்ள மெய்யொலிகள் கிடையாது என்று அவர் கூறவில்லை. இது எல்லா ஆய்வாளர்களுக்கும் உள்ள பிரச்சினை . மாற்றொலிகளுக்குத் தமிழில் எழுத்துக் கிடையாது. அவ்வாறு இருக்கும்போது எழுத்து ஆவணங்களில் ஒலிப்புள்ள வல்லின மாற்றொலிகள் அப்போது இருந்தன, அல்லது இல்லை என்பதில் முடிவு எடுக்கமுடியாது. ஒலிப்புள்ள வல்லின மெய்யொலிகள்பற்றிய மட்டுமே அவர் கூறியிருக்கிறார். ஆனால் தொடக்கத்தில் ஒலிப்புள்ள வல்லின மெய்யொலிகள் இருந்தனவா இல்லையா என்று பேசத்தொடங்கிய அவர் பின்னர் பொதுவாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் என்று கூறத்தொடங்குகிறார். அதுதான் பிரச்சினை. இன்றைய தமிழில் ஒவ்வொரு வல்லின ஒலியன்களுக்கும் மூன்று மாற்றொலிகள் உண்டு. ஒன்று, ஒலிப்புள்ள வல்லினப் பேச்சொலி. மற்றொன்று உரசல் தன்மை உள்ள மாற்றொலி. இன்றைய தமிழ்ப் பேச்சொலி ஆய்வில், 18 மெய் ஒலியன்கள். அவற்றில் வல்லினங்களான க, ச, ட. த ப, ற ஆகிய ஆறு ஒலியன்களுக்கு 18 பேச்சொலிகள். மெல்லினங்கள், இடையினங்களில் மாற்றொலிகள் கிடையாது.//
(3) //தமிழில் ஒலிப்புள்ள வல்லின மெய்யொலிகளே இல்லை// - இல்லை என்பதை இன்று கூறமுடியாது. அன்றைய பேச்சுக்கான தரவுகள் கிடையாது.
ஆனால் ஒலிப்புள்ள மெய்யொலிகளே என்று கூறுவது சரி இல்லை. இதில் தெளிவு தேவை. மேலும் புறக்காரணங்களை வைத்துக்கொண்டும் முடிவுக்கு வரமுடியாது. ஒரு மொழியின் உள்வரலாறு (Internal history or internal reconstruction) , புற வரலாறு (External history or external reconstruction) என்ற இரண்டையும் வைத்துத்தான் மொழி ஆராய்ச்சி முடிவுகள் அமையவேண்டும். கட்டுரையில் கூறப்பட்டவை எல்லாம் புறவரலாற்றுச் செய்திகள்; உள்வரலாறு அல்லது அகவரலாற்றை அடிப்படையாகக்கொண்டு கூறப்படவில்லை. மாற்றொலிகள் பற்றி அன்றைய இலக்கண ஆசிரியர்கள் கூறியிருக்கலாம். ஆனால் நமது இலக்கணங்களில் குறிப்புக் காணப்படவில்லை. மற்றொன்று, பேச்சு பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடா போன்றவை. அதற்கு வாய்ப்பே இல்லை.//

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India