கீழ்க்கண்டவற்றைப் பிரித்து எழுதலாமா? (1)
--------------------------------------------------------------------
தமிழில் எந்தவொரு இலக்கணவிகுதியும் அல்லது இலக்கணச்சொல்லும் தனது இலக்கணப்பண்பை ஏற்கிற அகராதிச்சொல்லுடன் இணையவேண்டும். வேற்றுமைவிகுதி அல்லது பின்னொட்டு பெயர்ச்சொல்களோடு இணையவேண்டும் ( நூலை, நூலைப்பற்றி, நூல்கள்) . காலவிகுதி வினைச்சொல்களோடு இணைந்துதான் வரும்.
(தமிழில் தொகை, கூட்டுவினைகளில் சொல்கள் இணைந்து வரும். இது கட்டாயவிதி. ) ஆனால் மற்ற இடங்களிலும் அகராதிச்சொல்களைத் தற்போது இணைத்தும் எழுதுகிறோம். தனித்தும் எழுதுகிறோம். ''ஆதாரமல்லாமல்'' ''ஆதாரமுண்டு'' என்று எழுதுகிறோம்; ''ஆதாரம் அல்லாமல்'' ''ஆதாரம் உண்டு''என்றும் எழுதுகிறோம். இரண்டையுமே தற்போது சரி என்றே கருதுகிறோம். இது ஒருவருடைய நடையைப் பொறுத்தது என்று கூறுகிறோம். ''ஆதாரம்'' என்பது ஒரு தனி அகராதிச்சொல்; அதுபோன்று ''அல்லாமல்'' என்பதும் மற்றொரு தனி அகராதிச்சொல்லின் திரிபுவடிவம்.
எனது கருத்து : ஏன் நாம் இதில் ஏதாவது ஒன்றைப் பொதுநடையாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? பிரித்து எழுதினால் எளிமைதானே? இவ்வாறு பிரித்து எழுதுவதால் ஏதாவது சிக்கல் உண்டா? நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். ஒருவர் 'ஆதாரமில்லாமல்' என்று எழுதினால் தவறு என்று கூறவேண்டாம். ஆனால் 'ஆதாரம் இல்லாமல்' என்று எழுதினால் தவறு இல்லை, மேலும் எளிமையாக இருக்கும் என்று கருதக்கூடாதா? எங்கு , எவற்றைச் சேர்த்து எழுதவேண்டும், எதைச் சேர்த்து எழுதக்கூடாது என்று விதிகளை ஏன் முன்வைக்கக்கூடாது? இதனால் தமிழ்மொழியின் அமைப்புக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுமா? தமிழ்மொழி அமைப்புக்கு இதனால் தீமை ஏதாவது உண்டா? தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவ்வளவுதான்! உரைநடைத் தமிழைத் தமிழமைப்பைச் சிதைக்காமல் இதுபோன்று எளிமைப்படுத்துவது தவறா?
ஆதாரமில்லாமல் - ஆதாரம் இல்லாமல்
தூக்கமில்லாமல் - தூக்கம் இல்லாமல்
உடல்நலமில்லாமல் - உடல்நலம் இல்லாமல்
பேச்சுமூச்சில்லாமல் - பேச்சுமூச்சு இல்லாமல்
சரியில்லை - சரி இல்லை
செல்வதில்லை. - செல்வது இல்லை
வருவதில்லை - வருவது இல்லை
வருவதில்லை - வருவது இல்லை
சரியில்லையே! -சரி இல்லையே
கொழுகொம்பின்றி - கொழுகொம்பு இன்றி
உடற்குறையின்றி - உடற்குறை இன்றி
சரியல்ல - சரி அல்ல
நார்ச்சத்துள்ள - நார்ச்சத்து உள்ள
நறுமணமுள்ள - நறுமணம் உள்ள
வாசமுள்ள - வாசம் உள்ள
0 கருத்துகள்:
கருத்துரையிடுக