இயற்கையின் ஆழிப்பேரலையும் சமுதாயத்தின்
புரட்சிகரப் பேரலையும் . . . (வேறொரு பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் இது!)
---------------------------------------------------------------------------------------------------------------
இயற்கையின்
உள்ளார்ந்த அமைப்பால் ஏற்படுகிற ஒன்றே ஆழிப்பேரலை. பூகம்பம்,
எரிமலை,
புயல் போன்ற
இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த வகையே.நமது விருப்பு வெறுப்பைப்பொறுத்து அவை
இல்லை. அதுபோன்றதே சோசலிச, கம்யூனிசப் பேரலை.
சமுதாய அமைப்பில்
உள்ள முரண்பாடுகள் வரலாற்றில் அவ்வப்போது சமுதாய மாற்றத்திற்கான அலைகளை
உருவாக்கியே தீரும். அதை யாராலும் தடுக்கமுடியாது. இதைத்தான் காரல் மார்க்சும்
பிரடரிக் எங்கல்சும் ஆய்ந்து கூறினார்கள். இது அவர்களின் 'விருப்பு
வெறுப்புக்களைச்'' சார்ந்த ஒன்று இல்லை!
இயற்கை
நிகழ்ச்சிகளுக்கும் சமுதாய நிகழ்ச்சிகளுக்கும் ஒரு வேறுபாடு . . . ஆழிப்பேரலை
நிகழ்ச்சியில் மனிதர்களுக்குப் பங்கு கிடையாது. இயற்கையின் புறவய விதிகள் மட்டுமே
அதில் செயல்படுகிறது. ஆனால் சமுதாயப் புரட்சியில் மனிதர்களின் அகவய வளர்ச்சிக்கும்
முன்முயற்சிகளுக்கு இடம் உண்டு.
ஆனால் தனி
மனிதர்களின் அகவய உணர்வுகளுக்கு அப்பால் . . . வெளியே . . . புறவயமாக நீடிக்கிற
அடிப்படைக் காரணங்களால் ஏற்படுவதே சமுதாய மாற்றம். அதில் மனிதர்களின் அகவயச்
செயல்பாடுகளுக்கு பங்கு உண்டு. ஆனால் அவையே புறவயவிதிகளைமீறி,
சமுதாய
மாற்றத்தைத் தடுத்துவிடமுடியாது.
இதுதான்
வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை.
ஓராயிரம் சாரு
மசூம்தார்கள் கொல்லப்பட்டாலும், ஒருபோதும் சமுதாய மாற்றம் நின்றுவிடாது.
இந்த நம்பிக்கை ஒருவருக்கு வேண்டும். என் வாழ்க்கையிலேயே - நான் இறப்பதற்குமுன்னே
- அந்தச் சமுதாய மாற்றத்தைப் பார்த்துவிடமுடியும் என்று நான் எண்ணிவிடக்கூடாது.
அவ்வாறு எண்ணுவது ஒரு குட்டிமுதலாளித்துச் சிந்தனைப் போக்கே. ஒருவரின் வாழ்க்கை
உச்சபட்சம் 100 நூறாண்டுகள். ஆனால் சமுதாயமாற்றங்கள் நிகழ்வதற்கு அதைத்
தாண்டிய காலம் தேவைப்படலாம். தேவைப்படும். 1970-களில் பத்தாண்டுகளில் புரட்சி
வெற்றிபெற்றுவிடும் ( Decade of Liberation) என்று கூறப்பட்டது
இளைஞர்களின் எழுச்சிக்காக முன்வைக்கப்பட்ட ஒரு முழக்கமே. அவ்வளவுதான்.
இதில் ஒன்றை
உணரவேண்டும். கம்யூனிசப் புரட்சி நடைபெறும் என்று புறவய விதிகளைக்கொண்டு விளக்கிய
காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் தம் காலத்திலேயே அதைப் பார்க்கவில்லை. அவ்வாறு
பார்த்துவிடலாம் என்று அவர்கள் கருதியதும் இல்லை. மேலைநாடுகளில் நிலப்பிரபுத்துவச்
சமுதாய அமைப்பு ஒரு முதலாளித்துவச் சமுதாய அமைப்பாக முழுமையாக மாறுவதற்கு சுமார்
நான்கு நூற்றாண்டுகள் ஆகியது என்பதே உண்மை.
ஒன்றுபட்ட
புரட்சிகர இயக்கங்கள் உறுதியாக உருவாகத்தான் செய்யும். சமுதாயத்தில் புரட்சிகர
மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் தீரும். ஒருவர் இதை விரும்புவதாலோ அல்லது ஒருவர் இதை
விரும்பாததாலோ இது நடக்காமல் இருக்காது.
ஆனால் ஒரு
எச்சரிக்கை. ''காலம் கனியும் அல்லது கனியட்டும்;
அப்போது நானும்
அதில் இணைவேன்'' என்று ஒருவர் கூறி, தமது செயலற்றப் பண்பை
நியாயப்படுத்திவிடக்கூடாது! சமுதாய மாற்றங்களில் மனிதர்களுக்குப் பங்கு உண்டு. இதை
ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது! ''காற்று அடிக்கட்டும்,
தூசி விலகும்''
என்று
இருக்கக்கூடாது! ''மலையை அகற்றிய மூடக்கிழவன்'' என்ற சீனக்
கதையின் பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக