தமிழ் இலக்கணவியல்,
மொழியியல் துறைகளின் முக்கியத்துவம் . . .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் இலக்கணவியல் என்பது பழந்தமிழ் இலக்கணங்களைமட்டும் -
குறிப்பாக, தொல்காப்பியம், நன்னூல் இலக்கணங்களைமட்டும் - உள்ளடக்கியது இல்லை. அவை
தோன்றிய காலத்தில் நிலவிய தமிழ்மொழி தமிழ்ச்சமூகத்தின் தேவையையும் வளர்ச்சியையும் ஒட்டி,
இன்று மாறியும் வளர்ந்தும் உள்ளது என்பதில் எவ்வித ஐயமும்
இல்லை! குறிப்பாக, செய்யுள்
வடிவங்களில்மட்டும் நீடித்துவந்த எழுத்துத்தமிழ்,
கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றி நீடிக்கிற உரைநடைத்
தமிழில்தான் இன்று பெரும்பான்மை நீடித்துவருகிறது. செய்யுள்களும் கூட இன்று
உரைநடைக்கு நெருங்கிய கவிதை வடிவங்களை எடுத்துள்ளன. புதுக்கவிதைகள் ஒரு நல்ல
எடுத்துக்காட்டு.
எனவே , இன்றைய
உரைநடைத்தமிழில் நீடிக்கிற எழுத்துத்தமிழின் அமைப்பை - இலக்கணப் பண்புகளை -
பழந்தமிழ் இலக்கணங்கள் முழுமையாக விளக்கிவிடமுடியாது. அதற்குக் காரணம், புதிய இலக்கணக்கூறுகள் தோன்றியுள்ளதே ஆகும். எனவே, இன்றைய எழுத்துத் தமிழுக்கு ஒரு முழுமையான இலக்கணம்
தேவைப்படுகிறது.
மேலும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் இயற்கைமொழிகளைக்
கணினி புரிந்து- கொள்வதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று- வருகின்றன. இந்த
முயற்சிகளில் தமிழ்மொழியைப் புரிந்துகொள்ளும் மென்பொருள்களை உருவாக்கவும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த முயற்சியில் தமிழ்மொழி ஆய்வாளர்களின்
முன்முயற்சி மிகவும் தேவைப்படுகிறது.
எனவே தமிழ் இலக்கணவியலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு
எடுத்துச்செல்லவேண்டும். அதற்கு மிகவும் உதவியாக அமைவது இன்றைய மொழியியல். மனித
இயற்கைமொழிகளின் பொதுத்தன்மையையும் குறிப்பிட்ட மொழிகளின் தனித்த பண்புகளையும்
அறிந்துகொள்ளவும், அந்த அறிவை
அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமொழிகளின்
அமைப்பை வெளிப்படுத்தவும், பல்வேறு முறைசார் இலக்கண வடிவங்கள் மொழியியலில்
முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழ்மொழி
ஆர்வலர்கள், ஆய்வாளர்கள்
பண்டைத்தமிழ் இலக்கணவியலை இன்றைய தமிழுக்கு ஏற்றவகையில் மேம்படுத்த - மரபு
இலக்கணங்களையும் மொழியியலையும் அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
இன்றைய தேவைகள்
. . .
1) பண்டைய தமிழ் இலக்கணவியல்
2) இன்றைய மொழியியல்
3) இன்றைய எழுத்துத்தமிழ்த் தரவுத்தளம் ( Written Tamil Corpora)
மேற்குறிப்பிட்ட மூன்றுமே இன்றைய தமிழை அடுத்த கட்ட
வளர்ச்சிக்கு இட்டுச்செல்லவும், செய்யறிவுத்திறனுக்கான
( Artificial Intelligence - AI) தமிழ்மொழி ஆய்வை
வளர்க்கவும் உதவி செய்யும். ( பேச்சுத்தமிழ் ஆய்வு - அதுபற்றித் தனியாக
விவாதிக்கவேண்டும். எழுத்து-பேச்சு (Text
to Speech- TTS) , பேச்சு-எழுத்து (Speech
to Text ) மென்பொருள்களை உருவாக்குவதற்குமட்டுமல்லாமல், சமுதாயத் தேவைகள் நேரடியாகப் பேச்சுத்தமிழை அடுத்த கட்ட
வளர்ச்சிக்கு எவ்வாறு வளர்த்துவந்துள்ளன என்பதை அறியவும் பேச்சுத்தமிழ் ஆய்வு
தேவை)
எனவே, மேற்கூறிய
நோக்கில் தமிழ் மொழி ஆய்வு வளர்ந்தால்தான் . . . . தமிழ்மொழியை அடுத்தகட்ட
வளர்ச்சிக்கு நம்மால் இட்டுச்செல்லமுடியும்.
முறையாக உருவாக்கப்பட்ட தமிழ்த்தரவுகள் தேவையான இலக்கணக்
குறிப்புக்களுடன் இன்று இருந்தால்,
செய்யறிவுத்திறன் பொருளை மிகச் சிறப்பாகத் தமிழுக்கு
நுட்பமாக (Fine-tuning of Pre-trained Large
Language model) மாற்றி அமைக்கமுடியும். அது இன்று இல்லை என்பதே 100 விழுக்காடு உண்மை! பிழைகள் களையப்பட்ட , தரப்படுத்தப்பட்ட ,
இலக்கணக்கூறுகளை உள்ளடக்கிய தமிழ்த் தரவுகள்
(Cleaned, normalized, linguistically annotated corpora) இன்று இல்லை!
இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் ''தமிழ் வாழ்க'' என்ற வெறும் முழக்கத்தால் எவ்விதப் பயனும் இல்லை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக