புதன், 3 மே, 2023

தமிழ்மொழிக்கல்வியும் தமிழ்மொழியைப்பற்றிய கல்வியும்

 

தமிழ்மொழிக்கல்வியும் தமிழ்மொழியைப்பற்றிய கல்வியும்

---------------------------------------------------------------------------------------------------------- ஆங்கிலம் ஆகட்டும், தமிழ் ஆகட்டும் அவற்றின் இன்றைய மொழி அமைப்பையும்     மொழிச்செயல்பாட்டையும் அறிந்துகொள்வது அந்த மொழிகளைக் கற்றலின்             முக்கிய அங்கமாகும். ஒரு மொழியைக் கற்றலையும் (learning the language) அந்த             மொழியைப்பற்றிக் கற்றலையும் ( learning about the language) - இரண்டையும்                         இணைத்துக் குழப்புவது தவறே.

இன்று வகுப்பறையில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும் இலக்கணம் சில நூற்றாண்டுகளுக்குமுன்பு நிலவிய தமிழ்மொழியின் அமைப்புக்கான இலக்கணமே!
இந்த இலக்கணம்பற்றிய கல்வியும் தேவைதான்! அப்போதுதான் தமிழ்மொழியின் வளர்ச்சிபற்றிய அறிவு மாணவர்களுக்குக் கிடைக்கும். இதில் ஐயமே இல்லை!

அதேவேளையில் தமிழ்மொழிபற்றிய தமிழ் மாணவர்களுக்கான கல்வியில், தமிழ்மொழியானது தனது அடிப்படை அமைப்பு மாறாமல், ஆனால் அதேவேளையில் தமிழ்ச்சமுதாயத்தின் மொழிச்செயல்பாட்டுத் தேவைகளுக்கேற்ப எவ்வாறு மாறி . . . வளர்ந்துவருகிறது ( language development through history) என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பல நூற்றாண்டுகளுக்குமுன்னரே தொல்காப்பியர் மொழிபற்றிய ஆய்வில் எந்த அளவு தெளிவைப் பெற்றிருந்தார் என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். அவருடைய இலக்கணக் கோட்பாடு ( grammatical theories) எந்த அளவு புறவயமான கோட்பாடாக ( objective analysis) அமைந்திருக்கிறது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவரது ஆய்வுமுறையாகட்டும் (research methodology) , ஆய்வின் முடிவை எந்த வரிசையில் ( presentation methodology) முன்வைத்து விளக்கவேண்டும் என்பதாகட்டும், மிகவும் வியக்கத்தக்க அளவில் அமைந்துள்ளன என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு தொல்காப்பியர், நன்னூலார் உட்பட தமிழ் இலக்கண ஆசிரியர்கள் பலரின் இலக்கணங்களின் சிறப்புக்கள் தமிழ்மொழிபற்றிய கல்வியில் (learning about Tamil Language) இடம்பெறவேண்டும்.
ஆனால் இங்கு ஒன்றில் தெளிவு வேண்டும். தமிழ்மொழியை இன்றைய பயன்பாட்டுக்காக - கருத்துப்புலப்படுத்தத்திற்காக - கற்கின்ற மாணவர்களுக்கும் (பொதுநிலை), தமிழ்மொழியைப்பற்றி விரிவாகக் கற்கிற மாணவர்களுக்கும் (சிறப்புநிலை) அளிக்கப்படுகிற தமிழ்மொழிபற்றிய கல்வியில் வேறுபாடு தேவை.
இன்றைய பயன்பாட்டுக்கான தமிழ்மொழிக்கல்வியில் இரண்டு பிரிவினர்களின் தேவையும் ஒன்றுதான்! ஆனால் தமிழ்மொழியைப்பற்றிக் கல்வியில் இந்த இரண்டுவகையினர்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கவேண்டும். இரண்டையும் இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
மீண்டும் வலியுறுத்துகிறேன் . . . மொழிக்கல்வி (language teaching) வேறு! மொழியைப்பற்றிய கல்வி ( teaching about the language) வேறு! தமிழ்நாட்டில் இந்த வேறுபாடு பள்ளிக்கூடப் பாடங்களில் தேவையான அளவுக்கு உணரப்படவில்லை என்பதே எனது கருத்து! எனவேதான் மாணவர்களுக்குத் தமிழைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் . . . ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதிலும் சிக்கல்!
இன்றைய எழுத்துத்தமிழின் அமைப்பைத் தேவையான அளவுக்கு எடுத்துக்கூறுகிற ''தற்காலத் தமிழ் இலக்கணம்'' முழுமையாக உருவாக்கப்படவில்லை! இது ''கணினித்தமிழ் '' வளர்ச்சியிலும் தனது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் மொழி ஆய்வு மென்பொருள் கருவிகள் உருவாக்கப்பட்டு, அவற்றை இன்றைய எழுத்துத்தமிழுக்குப் பயன்படுத்திப்பார்த்தால், இன்றைய தமிழுக்கும் அன்றைய தமிழுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை , வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளமுடியும். தெளிவான வரலாற்று இலக்கணமும் உருவாக்கமுடியும். தொல்காப்பியர். நன்னூலார் போன்றோரின் சிறப்பையும் தெளிவாக முன்வைக்கமுடியும்.
அதுபோன்று, பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துத்தமிழை இன்றைய தமிழுக்கான மென்பொருள் கருவிகள்கொண்டு ஆராய்ந்தால், எங்கு வேறுபாடு, எங்கு ஒற்றுமை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்!
அன்றைய எழுத்துத் தமிழ் செய்யுள் வடிவங்களில்தான் மிகுதியாக நிலவியது. ஆனால் . . . இன்று உரைநடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது. பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிற தமிழ் உரைநடைக்கான தமிழே!
இதனால் உறுதியாக இன்றைய எழுத்துத்தமிழில் மாற்றமும் வளர்ச்சியும் இருக்கும்.
இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் வரலாற்று இலக்கணத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும். இன்றைய தமிழுக்கான - மக்களுக்குத் தேவையான - மென்பொருள் கருவிகளையும் உருவாக்கமுடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India