புதன், 3 மே, 2023

மனிதமூளை - கணினி மூளை - மொழித்திறன் வடிவம்

 மனிதமூளையில் உள்ள மொழித்திறன் வடிவமும் (Human Brain Language Modelling) கணினி மூளையில் உருவாக்கப்பட்டுள்ள மொழித்திறன் வடிவமும்.(Computational Language Modelling)

-------------------------------------------------------------- -----------------------------------------------------------------

இன்றைய இயற்கைமொழிகள் பற்றிய செயற்கை அறிவுத்திறனுக்கு (Artificial Intelligence - AI) மொழித்தொடர்களின் அல்லது முழு உரையாடலின் பொருளை - பொருண்மையை- புரிந்துகொண்டு செயல்படும் திறன் இல்லை.
மொழித்தொடர்களில் அமைந்துள்ள சொற்களின் பொருண்மை, சொல்லமைப்பு இலக்கணம் , தொடரமைப்பு இலக்கணம், சொற்களின் பொருண்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட மொழித்தொடரை ஆராய்ந்து, அத்தொடர் என்ன கூறவருகிறது என்ற அடிப்படையில் செயற்கை அறிவுத்திறன் செயல்படவில்லை.
மாறாக, சொற்களின் வருகையை - எந்தச் சொல்லுக்கு முன்னர் எந்தச் சொல் வருகிறது, எந்தத் தொடருக்குமுன்னர் எந்தத் தொடர் வருகிறது என்பதை கோடியே கோடி மொழித்தொடர்களைக்கொண்ட தரவுகளின்மீது, நிகழ்தகவு ஆய்வுமுறையைப் (probability) பயன்படுத்திப் புரிந்துகொள்கிறது.
எவ்வாறு இந்த அறிவைப் பயன்படுத்துவதில்தான் பல்வேறுவகைப்பட்ட அறிவுத்திறன் மென்பொருள்கள் தங்களுக்குள் வேறுபடுகின்றன.
ஆனால் மனிதமூளையானது இயற்கைமொழிகளை இந்தவகையில் புரிந்துகொள்ளவில்லை. மொழித்தொடர்களின் பொருண்மையைப் புரிந்துகொள்ளக் குறிப்பிட்ட மொழியின் சொற்பொருள், சொல் இலக்கணம், தொடர் இலக்கணம், பொருண்மையியல் போன்ற பல்வேறு கூறுகளை அடிப்படையாகக்கொண்டுதான் புரிந்துகொள்கிறது.
இந்த அறிவு - திறன்- மனித மூளைக்கே உரிய அறிவுத்திறன் ஆகும். இலட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தனது பரிணாம வளர்ச்சியில் மனித மூளை வளர்ச்சியடைந்து, இந்தத் திறனைப் பெற்றுள்ளது.
மொழியைப் புரிந்துகொள்ள மனிதமூளையில் நிலவுகிற மொழி வடிவமானது (Human Brain Language Modelling) , மேற்குறிப்பிட்ட செயற்கை அறிவுத்திறன் மென்பொருள்கள் பயன்படுத்துகிற மொழி வடிவத்துடன் (Computational Language Modelling) மாறுபட்டது ஆகும்.
மனிதமூளையின் இந்த மொழி வடிவமானது முழுமையாக ஆராயப்பட்டு, அதன் அமைப்பைக் கணினியில் கொண்டுவரும்போதுதான் செயற்கை அறிவுத்திறன் மென்பொருள் மனிதமூளைபோன்று செயல்படமுடியும். அதற்கு மேலும் பல மொழியியல் ஆய்வுகள் தேவை. இப்போதைக்கு வினாவுக்கு விடை கிடைத்தால்போதும், எந்த முறையில் வந்தால் என்ன ? என்ற கருத்தே நிலவுகிறது.
கணினிமொழியியல் ஆய்வின் தொடர்ந்த வளர்ச்சியையொட்டித்தான் மனிதமூளைத் திறனைக் கணினிமூளை பெறமுடியும். மொழியியல், கணினிமொழியியல் மேலும் மேலும் வளர்ச்சியடையவேண்டும். வளர்ந்தும் வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India