வெள்ளி, 24 ஜூன், 2016

இடையினம் என்பது உயிரா அல்லது மெய்யா?

தமிழ்மொழி அமைப்பின் சிறப்புகளில் சில (2)..... (தமிழிலக்கணத்தில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.. மற்றவர்களுக்கு மிகவும் அலுப்பு(த்) தட்டலாம் ... முன்னெச்சரிக்கை ... மன்னிக்கவும். 


தமிழ் ஒலியன்களில் ( எழுத்துகளில்) இடையினம்பற்றிய ஆய்வில் இலக்கண ஆசிரியர்களின் மதிநுட்பம் ...

இடையினம் என்பது வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஒன்றா? அல்லது உயிருக்கும் மெய்யுக்கும் இடையிலான ஒன்றா? எனக்கு ஒரு ஐயம் .. ஐயம்தான் !
பேச்சொலியியல் ( Phonetics) அடிப்படையில் பேச்சொலிகளை இரண்டாக வகைப்படுத்தலாம். (1) மூச்சுக்குழாயிலிருந்து வாயறைக்கு வரும் காற்றை எவ்விதத் தடையும் செய்யாமல், ஒலி பிறப்பித்தால் .... தடையற்ற ஒலியாக இருந்தால் ... அது உயிரொலி. (2) வாயறைக்கு வந்த காற்றைத் தடுத்துநிறுத்தி, ஒலி பிறப்பித்தால் ... தடையுள்ள ஒலியாக இருந்தால்... அது மெய்யொலி.
12 உயிரொலிகளும் தமிழில் தடையற்ற பேச்சொலிகள்...

வல்லினம், மெல்லினம் , இடையினம்உட்பட 18 மெய்யொலிகளும் தடையுடன் பிறக்கிற பேச்சொலிகள் ஆகும். இவற்றில் க் -ங் , ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன் ஆகியவை இன ஒலி ( homorganic phones) இணைகள். வல்லின ''க்'' பிறக்கிற இடத்தில்தான் ... பின்னண்ணத்தைப் பின்னாக்கானது தொடும் இடத்தில்தான் ... இது பிறக்கிறது. மெல்லின ''ங்'' -உம் இதே இடத்தில்தான் பிறக்கிறது. இரண்டுமே தடையொலிகள்தான். பிறப்பிடமும் (Position of Articulation) ஒன்றுதான். ஒரே வேறுபாடு... வல்லின ''க்'' வாயின்வழியே வெளிவருகிறது. மெல்லின ''ங்'' மூக்குவழியே வருகிறது. அத்தோடு, மெல்லினங்களுக்கான காற்று தொண்டையில் குரல்வளைநாண்களை அதிரவைத்துக்கொண்டு வெளிவரும். இதுபோன்றதுதான், மேற்குறிப்பிட்ட பிற இன ஒலி இணைகளும்! ஆனால் இடையின ஒலிகள் .... இவை வாயறையில் தடையின்றியும் வெளிவரவில்லை. அதேவேளை முழுத்தடையோடும் வெளிவரவில்லை. அதிகமான உயிரொலித்தன்மையும் இருக்கிறது... கொஞ்சம் மெய்யொலித் தன்மையும் இருக்கிறது. இவற்றை APPROXIMANTS என்று அழைப்பார்கள். இவற்றை உயிரொலிகளோடு வைத்துவிடலாம். ஆனால் இலக்கண ஆசிரியர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஏன் என்பதுதான் எனது ஐயம்!

பேச்சொலிகள் நேரடியாக பொருள்தரும் உருபனாக அல்லது சொல்லாக அமைவதில்லை. மொழியசைகளாக ( Linguistic Syllables) அமைந்து, பின்னர்தான் உருபனாக அமைகிறது. அசையில் மூன்று உறுப்புகள்.... (1) அசையின் தொடக்கம் (ONSET) (2) உச்சி அல்லது சிகரம் (PEAK) (3) ஒடுக்கம் அல்லது இறுதி (CODA). இவற்றில் உச்சி அல்லது சிகரமாக எல்லா மொழிகளிலும் அமைவது ( ஆங்கிலத்தில் சிறிது வேறுபாடு உண்டு) உயிரொலிகளே. தொடக்கமாகவும் ஒடுக்கமாகவும் அமைவது மெய்யொலிகள். ஒரு அசை தொடக்கம் அல்லது ஒடுக்கம் இல்லாமல் அமையலாம். ஆனால் உச்சி அல்லது சிகரம் இல்லாமல் அமையாது. 12 உயிரொலிகளும் தனித்தனி அசைகளே! எனவே மெய்கள் இல்லாமல் அவற்றைத் தனியே உச்சரிக்கமுடிகிறது. ஆனால் மெய்களோ உயிர் என்ற உச்சியுடைய அசையில்மட்டுமே வரமுடியும். அதாவது உயிரின்றி மெய்கள் தனித்து வரமுடியாது. ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தும் ( மெய் + உயிர் .... க்+அ = க) ஒரு தனி அசை.
இடையின ஒலிகள் அதிகமான உயிரொலித்தன்மை ( SONARANCE) உடையதாக இருந்தாலும், அவை தமிழில் அசையின் உச்சியாக அமைவதில்லை. உச்சிகளாக அமைந்தால்தான் ''உயிர்'' என்ற முழுத்தகுதி கிடைக்கும். இல்லையென்றால், ''மெய்'' என்ற தகுதிதான் கிடைக்கும். எனவேதான் இலக்கண ஆசிரியர்கள் இடையின ஒலிகளைத் தமிழில் மெய்களோடு சேர்த்துக் கூறியுள்ளதாகக் கூறலாமா?
பேச்சொலியியல் அடிப்படையில், தடையில்லா ஒலிகளை VOCOID என்றும் தடையொலிகளை CONTOIDS என்றும் கூறுவார்கள். பின்னர் எந்த ஒலிகள் அசைகளின் உச்சிகளாக அமைகின்றனவோ அவற்றை VOWELS என்றும் அவ்வாறு அமையாமல் அசைகளின் தொடக்கம் அல்லது இறுதியில் அமைகின்ற ஒலிகளை CONSONANTS என்றும் கூறுவார்கள் முதல் வகைப்பாடானது பேச்சொலித்தன்மையில் அமைவதாகும். இரண்டாவது வகைப்பாடு அசைக்கூறுகளின் அடிப்படையில் அமைவதாகும். பொதுவாக VOCOIDS அசைகளின் உச்சிகளாக அமையும். CONTOIDS அசைகளின் தொடக்கம் அல்லது இறுதியாக அமையும். ஆனால் சில மொழிகளில் CONTOIDS அசையின் உச்சிகளாக அமையலாம். ஆங்கிலத்தில் bottle என்ற ஈரசைச்சொல்லில் இரண்டாவது அசையில் " l " உச்சியாக அமைகிறது. button என்பதில் இரண்டாவது அசையில் " n " உச்சியாக அமைகிறது. ஆனால் தமிழில் இவ்வாறு கிடையாது. மாறாக, VOCOIDS தன்மையுடைய இடையின ஒலிகள் அசைகளின் உச்சிகளாக அமைவதில்லை. எனவே அசைகளின் தொடக்கமாகவும் இறுதியாகவும் மட்டுமே அமைகின்றன. எனவே, அவற்றை இலக்கண ஆசிரியர்கள் உயிர்களோடு ( VOWELS) சேர்க்காமல், மெய்களோடு ( CONSONANTS) சேர்த்தார்கள் என்று கூறலாம். எனவே இடையின ஒலிகளின் ஒலிப்புத்தன்மையில் உயிரொலித்தன்மை அதிகமாகயிருந்தாலும், அசைகளின் உச்சிகளாக ஆகும் தகுதி இல்லாததால், அவை மெய்யொலிகளோடு வைக்கப்பட்டுள்ளன.
எனவே இடையின ஒலியன்களை ... எழுத்துகளை வல்லினங்களுக்கும் மெல்லினங்களுக்கும் இடைப்பட்டவை என்று இலக்கண ஆசிரியர்கள் கருதாமல், உயிர்களுக்கும் மெய்களுக்கும் இடைப்பட்டவை என்று கருதினார்கள் என்று கூறலாம் என்பது எனது கருத்து. இது முடிந்த முடிவல்ல. நாளை இந்த இடையின ஒலியன்களின் சிறப்பான ... மற்ற மெய்களுக்கு இல்லாத தனிப்பட்ட ... பண்புகளைப்பற்றிக் கூறலாமென நினைக்கிறேன். இந்த உரை மிகவும் நீண்டதற்கு மன்னிக்கவும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India