வினா : அறிவியலென்பது இயற்கையிலேயே இருப்பது,சமூக அறிவியலென்பது மனித இனத்தின் மனக்கூறுகள் சம்பந்தப்பட்டதல்லவா,மாரக்ஸின் காலகட்டத்தில் இருந்தது போன்றா மனிதமனங்கள் இன்று இருக்கின்றன?
விடை : இயற்கை, சமுதாயம், மனம் - மூன்றுமே அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டவைதான். எனவேதான் உளவியல்துறையும் அறிவியல்கீழ் வருகிறது. நிலவும் சமுதாயம்தான் தன்னைப்பற்றி - தன் பண்புகள்பற்றி - நமது மனத்தில் வெளிப்படுத்துகிறது. மனமும் உண்மைதான்... ஆனால் அது புற உலகத்தைப்பற்றிய ( இயற்கை, சமுதாயம் இரண்டுமே) ஒரு பதிவு. சமூக அறிவியல் மனம் சம்பந்தப்பட்டது என்று தாங்கள் கூறுவதில் ஒரு உண்மை உண்டு. இன்றைய சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுற்று இருப்பதால், ஒருவரின் வர்க்க நிலைபாடானது, தன்னைச் சுற்றியுள்ள சமுதாய நிகழ்வுகளைப் பார்க்கும் கோணத்தைப் பாதிக்கும். இது தவிர்க்க இயலாது. அதனால்தான் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒருவர் வறுமையில் வாடும்போது, அதை நான் இந்த சமுதாயத்தின் விளைபாடு என்று பார்க்கிறேன். ஆனால் வேறு வர்க்க நிலைபாடு உள்ளவர்கள் இந்த வறுமைக்குக் காரணம், அவர் முன்ஜென்மத்தில் செய்த பாவம் என்று பார்க்கலாம். அல்லது அவர் வேலைசெய்யத் தயாரில்லை என்று கூறலாம். வறுமையும் அதற்கான புறக்காரணிகளும் யதார்த்தமானவை. ஆனால் அதற்குக் கொடுக்கப்படுகிற விளக்கங்களை ஒருவரின் வர்க்க நிலைபாடு பாதிக்கும். எனவே சமூக அறிவியலானது இயற்கை அறிவியல்போன்று முழுமையாகப் புறவயமாக இருக்காது. ஆனால் இயற்கைபோன்று, சமுதாயமும் யதார்த்தமானது. வறுமையும் அதற்கான காரணிகளும் யதார்த்தமானது. புறச் சமுதாயம் ஒன்றுதான். எனவே அதைப்பற்றிய மனமும் ஒன்றுபோல்தான் இருக்கவேண்டும். ஆனால் வர்க்க சமுதாயத்தில் அவ்வாறு இருக்காது. நாம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, புறத்தே கூச்சலாக இருந்தாலும், அதைத் தவிர்த்துவிட்டு, நமது உரையாடலைமட்டுமே புரிந்துகொளகிறமாதிரி, புறச் சமுதாயத்தை ஆய்வுசெய்யும்போதும், முதலாளித்துவக் கூச்சல்களைப் புறந்தள்ளிவிட்டு, உணமைகளைக் கண்டறியவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவிடாமல், முதலாளித்துவமும் ''அறிவு'' என்ற பெயரில் தேவையற்ற குப்பைகளை நமது மூளையில் திணிக்கும். நாம்தான் போராடி, சரியான திசையில் செல்லவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக