திங்கள், 20 ஜூன், 2016

மொழியியலாளர்களும் பேச்சுத்தமிழும்

                           மொழியியலாளர்களும் பேச்சுத்தமிழும்            
                            
அண்மையில் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் ... '' நீங்கள் மொழியியலாளர்கள் பேச்சுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். பேச்சுத்தமிழைப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வற்புறுத்துகிறீர்கள். இது சரியா?'' என்று!
1) பேச்சுத்தமிழும் தமிழின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று. காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும்வரை அன்றாட உரையாடல்களுக்குப் பயன்படுத்துவது பேச்சுத்தமிழே. இந்தத் தமிழும் தெளிவான இலக்கணத்தைக் கொண்டதே! எனவே அதைத் தரக்குறைவாக நினைப்பது சரியல்ல. எனவே தமிழ்மொழி ஆய்வு என்பது பேச்சுத்தமிழையும் உள்ளடக்கியே இருக்கவேண்டும். இதைத்தான் தமிழ் மொழியியலாளர்கள் செய்கிறார்கள்.
2) தமிழகத்தில் பேச்சுத்தமிழைக் குழந்தைகள் பிறந்து வளரும்போதே இயற்கையாகப் பெற்றுக்கொள்கிறார்கள். இது உயிரியல் அடிப்படையில் நடைபெறுகிற ஒன்று. எனவே தமிழகத்தில் பேச்சுத்தமிழைப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கத் தேவையேயில்லை. அவ்வாறு கற்றுக்கொடுக்கவேண்டுமென்று எந்த மொழியியலாளரும் கூறவில்லை. செவித்திறன் குறையுடைய அல்லது மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு - உயிரியல் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு - பேச்சுத்தமிழை அவர்களால் இயற்கையாகப் பெறமுடியாததால் கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மற்றபடி பள்ளிகளில் கற்றுக்கொடுக்கவேண்டியது நிச்சயமாக எழுத்துத்தமிழே ! இதில் ஐயமே வேண்டாம்!
3) இலங்கையிலும் பேச்சுத்தமிழை இயற்கையாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே அவர்களுக்கும் பள்ளிகளில் எழுத்துத்தமிழையே கற்றுக்கொள்கிறார்கள்.
4) மலேசியாவில்கூட பேச்சுத்தமிழைப் பள்ளிகளில் பொதுவாகக் கற்றுக்கொடுக்கவேண்டிய தேவையில்லை. எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அது சரியே!
5) சிங்கப்பூரில் பள்ளிகளில் எழுத்துத்தமிழே கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் வீடுகளில் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் ஆங்கிலம் அல்லது சீனத்தையே பயன்படுத்துகிறார்கள். பேச்சுத்தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்று இன, மொழி உணர்வுள்ள பெற்றோர்கள் விரும்புகிறார்கள். எனவே பள்ளிகளில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுத்தபோதிலும், அன்றாட உரையாடல்களுக்குப் பேச்சுத்தமிழைப் பயன்படுத்தப் பயிற்சி அளிக்க அங்குள்ள தாய்மொழிக்கல்வித்திட்டத்தை அமுல்படுத்தும் கல்வித்துறையினர் முயல்கின்றனர். எழுத்துத்தமிழைப் புறக்கணிக்கவில்லை.
6) அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாட்களில் அன்றாட உரையாடல்களுக்குப் பேச்சுத்தமிழைப் பயன்படுத்தும் சூழலே இல்லாததால், தமிழ்ப்பள்ளிகளில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இது சரியே!
7) தமிழகத்திற்கு வந்து கள ஆய்வு செய்ய விரும்பும் அயலக ஆய்வாளர்கள், இங்குள்ள மக்களிடையே இயற்கையாக உரையாட விரும்பி, பேச்சுத்தமிழையும் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். அதேவேளையில் நூல்களையும் இதழ்களையும் படிக்க எழுத்துத்தமிழையும் கற்றுக்கொள்கிறார்கள் .
மேற்குறிப்பிட்ட கருத்துகளின் அடிப்படையில், பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்கவேண்டிய சமூகச்சூழல் உடைய நாடுகளில் மட்டுமே பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்கத் தமிழ் மொழியியலாளர்கள் பாடம் தயாரித்து அளிக்கிறார்கள். இப்பாடங்கள் தமிழகத்துக் குழந்தைகளுக்கு இல்லை.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ்க்கல்விபற்றிய கருத்தரங்கில் சிங்கப்பூர், மலேசியா ஆசிரியர்கள் தங்களுடைய நாடுகளில் பேச்சுத்தமிழை எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பதுபற்றி பல கட்டுரைகளை வழங்கியுள்ளார்கள்.
மேலும் தமிழகத்தில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்கவேண்டிய ஒரு சூழலில் பேச்சுத்தமிழின் பாதிப்பு அதில் இல்லாமல் இருப்பதற்கும் உதவிகளை மொழியியலாளர்கள் செய்துவருகிறார்கள். எழுத்துத்தமிழையே அதற்கான சூழல்களில் பயன்படுத்தவேண்டும் என்பதில் ஐயமே தேவையேயில்லை.
இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல், மொழியியலாளர்கள் ... பேச்சுத்தமிழை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் .... எழுத்துத்தமிழைப் புறக்கணிக்கிறார்கள் ... சிதைக்க விரும்புகிறார்கள் என்று சிலர் நினைப்பது தவறானது என்பதில் ஐயமேயில்லை.
------------------------------------------------------------------
நாங்கள் உருவாக்கியுள்ள மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர், மென்தமிழ் - சந்தித்துணைவன், மென்தமிழ் - ஆய்வுத்துணைவன் ஆகியவையெல்லாம் எழுத்துத்தமிழுக்கானதே! ஏனென்றால் கணினியில் கோப்புகளை, ஆவணங்களை, எழுத்துத்தமிழில்தான் தயாரிக்கவேண்டும். பேச்சுத்தமிழ் கூடாது. எதிர்காலத்தில் பேச்சுத்தமிழை மட்டுமே பெற்றுக்கொண்ட - எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்ளாத - தமிழர்களுக்குப் பேச்சுத்தமிழில் அவர்கள் பேசுவதைத் தானாகவே எழுத்துத்தமிழில் மாற்றுவதற்கான மென்பொருளைத் தயாரிக்கும் திட்டமும் உண்டு எங்களுக்கு! அதற்கு நீண்ட காலம் ஆராய்ச்சியும் நிதியும் தேவை.
------------------------------------------------------------------------
தமிழ்க்கணினிமொழியியலில் எனது விருப்பம் ... எழுத்துத்தமிழைப் பள்ளியில் சென்று கற்றுக்கொள்ளமுடியாதவர்கள்கூட , அவர்கள் பேச்சுத்தமிழில் பேசினால், அதை எழுத்துத்தமிழ் உரையாக மாற்றி, அந்த உரையைத் எழுத்துத்தமிழ் பனுவலாக மாற்றவேண்டும். மக்களுக்குத் தேவையான தகவல்கள் எல்லாம் கணினியில் எழுத்துத்தமிழில் இருந்தாலும், மேற்கூறிய வகையில் மென்பொருள் உதவிகொண்டு, மக்களுக்கு அவர்களுக்குப் புரிகிற தமிழில் கிடைக்கவேண்டும். பேச்சுத்தமிழ் உரை ( Spoken utterance ) ----> எழுத்துத்தமிழ் உரை ( Written Speech Utterance) -----> எழுத்துத்தமிழ் பனுவல் ( Written Text) -----> ----------> தகவல் தளம் ( Information Database) ------> எழுத்துத்தமிழ் பனுவல் -( Written Text) ----> எழுத்துத்தமிழ் உரை ( Written Tamil Utterance) ------> பேச்சுத்தமிழ் உரை ( Spoken Tamil utterance) . ... எதிர்காலத்தில் இந்த வளர்ச்சி ஏற்பட்டால், சாதாராண மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும். இது சாத்தியமே! ஆனால மிகக் கடுமையாகப் பணிமேற்கொள்ளவேண்டும். தமிழ்ப் பேச்சை ( பேச்சுத்தமிழ்) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வளர்ச்சிநிலையையும் பெறமுடியும் ... தேவைப்பட்டால்!
-------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India