வியாழன், 23 ஜூன், 2016

தமிழ்ச்சொல் வகைப்பாட்டில் வளர்ச்சி !

தமிழ்மொழி அமைப்பின் சிறப்புகளில் சில ..... (தமிழிலக்கணத்தில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.. மற்றவர்களுக்கு அலுப்பு தட்டலாம் ... முன்னெச்சரிக்கை) 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தொன்மையும் தொடர்ச்சியுமுடைய தமிழ்மொழி தனது மொழிச்சமுதாயத்தின் தேவைகளையொட்டித் தொடர்ந்து வளர்ந்துவருகிறது. அவ்வாறு வளர்ச்சியடையும்போது, மிகத் தெளிவான வரையறைகள் அல்லது விதிகளுக்கு உட்பட்டு மாறவும் வளரவும் செய்கிறது. நமது இலக்கண ஆசிரியர்கள் இதை மிக நுட்பமாக ஆய்ந்து வகைப்படுத்தியுள்ளார்கள்!



(1) தமிழ்ச்சொற்கள் பெயர், வினை என்று வகைப்படுத்தப்படுகின்றன. பெயர்ச்சொல் தனக்கு முன் பெயரடைகள் அல்லது பெயரெச்சங்களையும் தனக்குப்பின்னால் வேற்றுமைவிகுதிகளையும் ஏற்கிறது ( ''அழகான குழந்தையை''') . அதாவது + பெயரடை , + வேற்றுமை என்பது அதன் அடிப்படைப் பண்புகள். வினைச்சொல்லானது தனக்கு முன்னர் வினையடைகள் அல்லது வினையெச்சங்களையும் பின்னர்க் கால விகுதிகளையும் பெறுகிறது ( ''அழகாக இருக்கிறது''). அதாவது + வினையடை, + காலவிகுதி அதன் அடிப்படைப் பண்புகள். ஆனால் சில சொற்கள் + வினையடை + வேற்றுமை என்று அமைகின்றன. அதாவது வினையின் ஒரு பண்பையும் ( வினையடை ஏற்பது : + வினையடை) பெயரின் ஒரு பண்பையும் ( வேற்றுமை விகுதிகளை ஏற்பது: + வேற்றுமை) . 'வேகமாகப் படித்தவனை ' - இங்கு 'படித்தவன் ' என்பது வினையடியாகப் பிறந்து, வினையடையை ஏற்கிறது. அப்படியென்றால், இதை வினை என்று சொல்லலாமா? முடியாது. ஏனென்றால், பெயருக்குரிய + வேற்றுமைப் பண்பையும் ஏற்கிறது. அப்படியென்றால் இதைப் பெயர் என்று கூறலாமா? கூறமுடியாது. பெயர், வினை இரண்டின் பண்புகளையும் கொண்டிருக்கிறது. எனவேதான் இதை நமது இலக்கண ஆசிரியர்கள் 'வினையாலணையும் பெயர்' என்று வகைப்படுத்தினார்கள். என்ன ஒரு அருமையான வகைப்பாடு! ''படித்தல்'' என்பதும் தற்காலத்திய 'படிக்கிறது', 'படித்தது' 'படிப்பது' என்று காலம் காட்டும் சொற்களும் ''தொழிற்பெயர்'' என்று அழைக்கப்படுகிறது. இவையும் வினையாலணையும்பெயர்போன்று பெயர், வினை இரண்டின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. (' வேகமாகப் படித்தலை'', '' அழகாகப் படிப்பதை'') . வினையாலணையும் பெயர் , தொழிற்பெயர் இரண்டும் பெயர், வினை இரண்டுக்கும் பொதுவான ஒன்றாக அமைந்துள்ளன. ( + பெயர் , + வினை)

(2) வரலாற்றில் வினையாலணையும் பெயர்களாக நீடித்த சில சொற்கள், தமக்கு முன்பாக வினையடையைப் பெறுவதை விட்டுவிட்டு, பெயரடையைப் பெறத் தொடங்கியவுடன், அவை முழுப்பெயர்களாக அமைந்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக ''பெற்றோர்'' ''உற்றோர்'' என்ற இரண்டு சொற்களும் '' வந்தோர்'' , '' சாப்பிட்டோர்'' போன்ற அமைப்புகளை உடையவைதான். ஆனால் அவை '' அன்பான பெற்றோரை'' என்று முன்னால் பெயரடையும் பின்னால் வேற்றுமையும் ஏற்கிறது. எனவே வினையின் பண்பைவிட்டுவிட்டு, முழுக்க முழுக்கப் பெயரின் பண்புகளை ஏற்றுக்கொள்வதால், இதைத் தற்போது நாம் வினையாலணையும் பெயராகப் பார்ப்பது இல்லை. மாறாக, பெயராகவே பார்க்கிறோம். ஆனால் ''அன்பான வந்தோர்களை'' என்று சொல்லமுடியாததால், இந்தச் சொல், இன்னும் வினையலாணையும்பெயராகவே நீடிக்கிறது. பெயராக மாற்றம் அடையவில்லை. ''ஆகியோர்'', ''என்போர்'' போன்ற சொற்களையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.
(3) ''பாடல்'' ''ஆடல்'' ''செயல்'' போன்ற இன்றைய பெயர்ச்சொற்களின் ( அன்றைய தொழிற்பெயர்கள்) வரலாறும் இவ்வாறு இருக்கலாம். '' பாடல்'' என்ற சொல்லுக்கு இணையாக ''பாட்டு'' என்று பெயர்ச்சொல் இருப்பதையும் ''ஆடல்'' என்ற ''ஆட்டம்'' என்ற பெயர்ச்சொல் இருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆராயலாம். ஆனால் சில இடங்களில் ''வேகமாகப் பாடல்'' '' வேகமாக ஆடல்'' என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன். மாற்றம் முழுமையாக நடக்கவில்லையோ?


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India