திங்கள், 20 ஜூன், 2016

மொழிவழிச் செயல் ( Speech Act) : மனிதமூளையும் கணினியும்

         மொழிவழிச் செயல் ( Speech Act) : மனிதமூளையும் கணினியும்
-----------------------------------------------------------------------------------------------------------------
நாம் ஒரு தொடரை முன்வைக்கும்போது, அத்தொடரானது ஒரு பொருளை - பொருண்மையை- தருவதோடு, ஒரு செயலையும் செய்கிறது. '' நாளைக்கு வருகிறேன்'' என்று ஒருவர் சொல்லும்போது.. ...
1) அவர் தான் வருகிற செய்தியைத் தெரிவிக்கிறாரா ?, (தெரிவித்தல் செயல்)
2) அல்லது கேட்பவரிடம் தன் வருகையை உறுதிப்படுத்துகிறாரா?, (உறுதிப்படுத்தும் செயல்)
3) அல்லது இன்று தன்னை அழைப்பவரிடம் தன் இயலாமையைத் தெரிவித்து, நாளைக்கு வருகிறேன் என்று ஒரு மாற்றை முன்வைக்கிறாரா ? ( இயலாமையைத் தெரிவித்து , ஒரு மாற்றை முன்வைக்கும் செயல்)
4) அல்லது கேட்பவரிடம் தன் நாளைக்கு வந்து அவருடைய சிக்கலைத் தீர்த்துவைக்கிறேன், கவலைவேண்டாம் என்று ஆறுதல் கூறுகிறாரா.?( ஆறுதலளிக்கும் செயல்)
எனவே கேட்பவர், தான் கேட்கிற தொடருக்குப் பின்னால் இருக்கிற மொழிவழிச்செயலைப் புரிந்துகொண்டால்தான், அத்தொடரைப் புரிந்துகொண்டதாக அமையும். வெறும் சொற்றொடரின் பொருண்மையை மட்டும் தெரிந்துகொண்டால் பயனில்லை. சில இடங்களில் இந்த மொழிவழிச்செயலை வெளிப்படையாகவே உணர்த்தும் வினைச்சொற்கள் ( Performative Verb) அமையும். '' நீ வரக்கூடாது என்று என்னை அவன் மிரட்டினான்'' . இங்கு ''மிரட்டல் '' என்ற செயல் நடைபெற்றுள்ளது. ''நாளைக்குப் பணம் தருகிறேன் என்று அவன் உறுதியளித்தான்'' . இங்கு ''உறுதியளிப்பு'' என்ற செயல் நடைபெறுகிறது. '' இதைத் தொடாதே என்று கெஞ்சினான்'' . இங்கு 'கெஞ்சல்'' என்ற செயல் நடைபெறுகிறது. ''இவர் இந்த வேலைக்குப் பொருத்தமானவர்''. இங்கு ''பரிந்துரைப்பு'' என்ற செயல் நடைபெறுகிறது.
இதை இங்கு நான் கூறுவதற்குக் காரணம்.... மொழிவழிக்கருத்தாடலில் இந்த மொழிச்செயல்பற்றிய கண்ணோட்டம் மிகத் தேவையான ஒன்று. தொடரமைப்பு, முன்பின் தொடர்கள், கருத்தாடல் சூழல், உரையாடுபவர்களுக்கிடையே உள்ள புரிதல் போன்றவையெல்லாம் இங்குச் செயல்படுகின்றன. எனவே நாம் எழுதும்போதும், உரையாடும்போதும் இதில் கவனமாக இல்லையென்றால்.... தொடரின் உண்மையான பொருள் முழுமையாக வெளிப்படாது. பிரச்சினையும் ஏற்படும். இதுபற்றிய ஆய்வுகள் சமூகமொழியியலில் நடைபெற்றுள்ளன. ( AL Austin, John Searle).
இச்சூழலில் கணினிக்கு நமது இயற்கைமொழிகளைக் கற்றுக்கொடுத்து, புரியவைக்கும்போது, இச்சிக்கல்களையெல்லாம் தீர்ப்பதற்கு வழிதேடவேண்டும். ஐந்து வயது குழந்தைக்கு உள்ள இதுதொடர்பான திறமையைக்கூட Super computer -க்குக் கொடுப்பது மிகச் சிக்கலான பணி. எனவே கணினியானது நம்மைப்போல, நமது மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறும்போது, கவனமாக இருக்கவேண்டும். மனிதமூளையின் திறனே வேறு. அதனுடைய மொழித்திறனே வேறு. கணினியின் திறமை வேறு.
தொல்காப்பியத்தில் இதுபற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்பது ஒரு சிறப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சொற்றொடரின் பொருண்மையை மூன்று முக்கியக் கூறுகள் தீர்மானிக்கின்றன. (1) சொற்றொடரில் உள்ள சொற்கள், சொல்லமைப்பு இலக்கணம், சந்தியிலக்கணம், தொடரிலக்கணம் ஆகியவை எல்லாம் இணைந்து அளிக்கும் பொருண்மை ( Linguistic features) (2) குறிப்பிட்ட தொடரோடு இணைந்துள்ள அசையழுத்தம், சொல்லழுத்தம், தொடரின் ஏற்ற இறக்கங்கள் ( Paralinguistic features / Prosodic features) அளிக்கும் பொருண்மை (3) சொற்றொடர் பயன்படுத்தப்படுகிற மொழிசாராக் கூறுகள் ( Extralinguistic features) . இவற்றோடு நான் மேலே சொல்லிய மொழிவழிச்செயல் - அதாவது குறிப்பிட்ட தொடர்வழியாகப் பேசுபவர் மேற்கொள்கிற செயல்.( Speech Act) . இவை எல்லாவற்றையும் இணைத்து ஒரு சொற்றொடரை மனிதமூளை புரிந்துகொள்கிறது. இதற்கு அடிப்படை, மனிதமூளை பெற்றுள்ள பின்புல உலகறிவு.( Pragmatic knowledge) இந்தத் திறனைக் கணினிக்கு அளிக்கும்போதுதான் கணினியானது இயற்கைமொழிக் கருத்தாடலை மேற்கொள்ளமுடியும். Natural Language Processing ( Generation and Understanding) செயலைக் கணினியால் மேற்கொள்ளமுடியும். எனவே கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் என்பது ஒரு கடினமான அறிவியல், தொழில்நுட்பத்துறையாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
நான் மேலே மிக நீளமான விளக்கங்களைக் கொடுத்தற்குக் காரணம், மொழியியல் ஆய்வு என்பது வெறும் எழுத்து, சொல், தொடர் இலக்கணங்களோடு நின்றுவிடுவதில்லை என்பதை வலியுறுத்துவதற்கேயாகும். மொழியமைப்பியல், உளவியல், சமூவியல் போன்ற பல்துறை சார்ந்த ஒரு இயலே மொழியியலாகும். இவற்றில் ஏதோ ஒன்றுமட்டுமே மொழியாய்வாக அமைந்துவிடாது. மொழியிலக்கணம்மட்டுமே மொழியாய்வாக அமைந்துவிடாது. அது ஒரு முக்கியமான பகுதி என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மட்டுமே போதாது. மனம்/ மூளை , சமுதாயம், மொழியியலக்கணம் மூன்றையும் இணைத்த ஒன்றுதான் மொழியியல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India