எழுத்துமொழி உள்ள மொழிகளில் உறுதியாக பேச்சுமொழியும் இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஆங்கிலத்திலும் பேச்சுமொழி உண்டு. எழுத்துமொழி உண்டு. ஆனால் இரட்டை வழக்குமொழி என்று ஒரு மொழியைச் சொல்லவேண்டுமென்றால் ( to categorize) இவை இரண்டுக்கும் இடையில் உள்ள அமைப்பு வேறுபாடு (Structural difference) அதிகமாக இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டறிவது? எவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் (Quantification of differences) ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறலாம்? இதற்கு எழுத்துமொழி, பேச்சுமொழி இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அளக்கவேண்டும். எவ்வாறு அளப்பது? எழுத்துமொழிச் சொற்களைப் பேச்சுமொழிச் சொற்களாக மாற்றுவதற்கு எத்தனை மாற்று விதிகள் (Conversion rules) தேவைப்படுகின்றன என்பதை வைத்து அளக்கலாம்.
1) தலை - தலெ (இடைவெளி ஒரு விதி).
2) இலை - எலெ (இடைவெளி இரண்டு விதிகள்)
3) தேய்த்துக்கொள் - தேச்சுக்கோ (இடைவெளி மூன்று விதிகள்)
4) உடைத்தான் - ஒடெச்சா(ன்) (இடைவெளி நான்கு விதிகள்)
தமிழில் இவ்வாறு சில சொற்களுக்கு நான்கு மாற்றுவிதிகள் தேவைப்படுகின்றன. ஆங்கிலம்போன்ற மொழிகளில் இந்த அளவுக்கு இடைவெளி கிடையாது. தமிழில் மாற்றுவிதிகள் சுமார் 30 உள்ளன.
மேலும் இரட்டைவழக்குமொழிகளில் எழுத்து, பேச்சுமொழிகள் இரண்டையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால்ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுத்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டால், பேச்சுக்குத் தக்க பேச்சுமொழியாக மாற்றமுடியும். எனவேதான் தமிழ்மொழி படிக்க வருகிற அந்நியர்களிடம் முதலில் கேட்கப்படவேண்டியது அவர்கள் கற்க விரும்புவது எழுத்துமொழியையா அல்லது பேச்சுமொழியையா என்ற வினா. கள ஆய்வுக்கு போகவிரும்புகிறவர்கள் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள், தமிழ் நூல்களைமட்டும் வைத்துக்கொண்டு ஆய்வுசெய்யவிரும்புபவர்கள் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் தேவைப்படுகிறவர்கள் ஒன்றை முதலில் கற்றுக்கொண்டு மற்றொன்றை அடுத்துத் தனியாகக் கற்பார்கள். இரட்டைவழக்கு இல்லாத ஆங்கிலம்போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் மற்றொன்றைச் சில மாற்றங்களுடன் நடைமுறையில் கற்றுக்கொள்ளலாம். இதுபற்றிய நீண்ட ஆய்வுகள் சமூகமொழியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரட்டைவழக்குமொழிச்சூழல் என்பது ஒரு சமூகமொழியியல்ச் சூழல். இதுபற்றிப் பெர்குசன்(Ferguson), பிஷ்மேன் (Fishman) , டி சில்வா (De Silva) போன்றோர் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழுக்குப் பேரா. இரா.பி.சேதுப்பிள்ளை, பேரா. முத்துச்சண்முகம், பேரா. ஞானசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர். இரண்டு முனைவர் பட்ட ஆய்வேடுகள் ( ஒன்று, எனது ஆய்வேடு, மற்றொன்று ஜான் பிரிட்டோ (அமெரிக்க வாழ் பேராசிரியரின் ஆய்வேடு. ). நான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படிக்கும்போது இங்கிலாந்து யார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் வருகைதரு பேராசிரியராக வந்திருந்தார். அவரிடம் நான் சமூகமொழியியல் கற்றுக்கொண்டேன். அவர் தமிழ் இரட்டைவழக்குபற்றி ஒரு சிறப்பான நூலை எழுதியுள்ளார்.
இடைவெளியை மாற்றுவிதிகள் கொண்டு அளக்கலாம் என்ற கருத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் பேரா. பொற்கோ. அவருடைய வழிகாட்டுதலில்தான் நான் முனைவர் பட்ட ஆய்வே மேற்கொண்டேன்.
சமூகமொழியியலில் இரட்டைவழக்கு என்பது துறைசார்ந்த ஒரு முக்கியமான கருத்து.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக