வியாழன், 22 ஆகஸ்ட், 2024

தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் .

 தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் . . .

----------------------------------------------------------------------
தமிழ் இரட்டைவழக்குபற்றிய என் பதிவில் நண்பர் திரு. மாலன் இரண்டு ஐயங்களை எழுப்பியுள்ளார். உண்மையில் வரவேற்கவேண்டிய ஐயங்கள் இந்த இரண்டும். இதற்கான விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்பதால், இதைத் தனிப்பதிவாக இடுகிறேன்.
ஐயம் 1 : இரட்டை வழக்குத் தோன்றுவதற்கான சூழல்/சமூகக் காரணிகள் என்ன?
ஐயம் 2 : பேச்சிலிருந்து எழுத்தா, எழுத்திலிருந்து பேச்சா என்ற புதிருக்கான விடையை அறிதல் இயலுமா?
ஐயம் 2-க்கான பதிலை முதலில் விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன். எழுத்துமொழி உள்ள எந்தவொரு (இயற்கை) மொழியிலும் பேச்சுமொழி இல்லாமல் இருக்காது. இந்தப் பேச்சுமொழிதான் அந்த மொழிச்சமுதாயத்தில் முதலில் நீடித்திருக்கமுடியும். அந்த மொழிச்சமுதாயத்தின் வளர்ச்சியையொட்டி - அந்தப் பேச்சுமொழிக்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அங்கு ஒரு பேச்சுவழக்குதான் இருந்திருந்தால், அந்தப் பேச்சுமொழிக்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் இருந்திருந்தால், அச்சமுதாயத்தில் ''உயர்ந்தோர்'' பேச்சுவழக்குக்கு வரிவடிவம் கொடுப்பது என்பது இயற்கைதான். அந்த வர்க்கத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தேவைகளுக்காக அதனுடைய 'பேச்சுவழக்கு' எழுத்துவழக்காகவும் வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால் ஒன்று உறுதி . . . பேச்சுவழக்குதான் எந்தவொரு சமுதாயத்திலும் தோன்றி நீடித்திருக்கமுடியும். எழுத்துமொழி பின்னர்தான் - ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பேச்சுமொழிக்கான எழுத்துவடிவமாக - தோன்றியிருக்கமுடியும். இதில் ஐயத்திற்கு இடமே இல்லை என்பது எனது கருத்து.
இப்போது ஐயம் 1-க்கான பதிலை அறிய முயலலாம்.
எழுத்துவழக்கு தோன்றிய முதல் காலகட்டத்தில் எழுத்துவழக்குக்கும் பேச்சுவழக்குக்கும் இடையில் வேறுபாடு இருந்திருக்கமுடியாது. அவ்வாறு உருவாக்கப்பட்ட எழுத்துமொழியில் இலக்கணங்கள், இலக்கியங்கள் உருவாகும்போது, ஒருவகையான தரப்படுத்தம் - codification, standardization, modernization - மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
இந்தத் தரப்படுத்தப்பட்ட எழுத்துமொழியானது, தொடர்ந்து தன் பண்புக்கூறுகளை மாற்றாமல் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த எழுத்து வழக்கிற்கு அடிப்படையான பேச்சுவழக்கு சமுதாயத்தின் தேவைகளையொட்டி மாறிக்கொண்டுதான் இருக்கும். அதை எந்தவொரு தனிமனிதராலும் அல்லது குழுவாலும் தடுத்துநிறுத்தமுடியாது.
ஆனால் எழுத்துமொழியை மாற்றாமல் அப்படியே தக்கவைக்க குறிப்பிட்ட குழுவால் முடியும். இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வளர்ந்து , மாறிவந்த பேச்சுமொழிக்கும் ஒரு குழுவின் தேவைக்காகத் தரப்படுத்தப்பட்டு, அவ்வளவு சீக்கிரத்தில் - பேச்சுவழக்கின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மாறாத எழுத்துமொழிக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கும். எழுத்துவழக்கும் காலப்போக்கில் சற்று மாறலாம். ஆனால் அந்த மாற்றத்தை அந்த ஆதிக்கக்குழுவினர் கட்டுப்படுத்தமுடியும். ஆனால் பேச்சுவழக்கைக் கட்டுப்படுத்தமுடியாது.
அதன் விளைவு . . . இரண்டு வழக்குக்கிற்கும் இடையில் வேறுபாடு - இலக்கண அமைப்பு, மொழிச்செயல்பாடு, சமுதாயநோக்கு ஆகியவற்றில் வேறுபாடு - தோன்றுவது இயற்கையே. இதன் விளைவுதான் இரட்டைவழக்குகள் தோற்றமும் நீடிப்பும் ஆகும்.
பொதுவாக, மிகவும் பழமையான மொழிகளில்தான் - கிரேக்கம், லத்தீன், தமிழ் போன்ற மொழிகளில்தான் - இந்த இரட்டைவழக்குச் சூழல் நீடிக்கிறது. ஆனால் இந்த இரட்டைவழக்குச்சூழல் தோன்றுவதற்கு மொழிக்குடும்பமோ அல்லது பூகோள வரையறையோ காரணம் கிடையாது.
'இரட்டை வழக்கு' தமிழ் ஒரு திராவிட மொழிக்குடும்பம் (பூகோளப் பகுதி தென்னிந்தியா); 'இரட்டைவழக்கு' சிங்களம் இந்தோ-ஆரியக்குடும்பம் (பூகோளப்பகுதி இலங்கை) ; 'இரட்டை வழக்கு' கிரேக்கம்' இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் (பூகோளப்பகுதி கிரீக்) ; 'இரட்டை வழக்கு 'அரபுமொழி' செமிட்டிக் குடும்பம் (பூகோளப்பகுதி அராபியநாடுகள்).
இரட்டைவழக்குச் சூழல் நிலவிய அல்லது நிலவுகிற மொழிகள் சில:
கிரேக்கம், அரபுமொழி, ஸ்விஸ் ஜெர்மன், ஹைத்தியன் கிரியோல், தமிழ், சிங்களம், வங்காளம், தெலுங்கு, கன்னடம். இவற்றில் தற்போது வங்காளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் இரட்டைவழக்குச் சூழல் மறைந்துவிட்டன அல்லது மறைந்துவருகின்றன.
இரட்டைவழக்குமொழிகளைப்பொறுத்தவரையில் உயர்வாகக் கருதப்படுகிற 'எழுத்துமொழி அல்லது இலக்கியமொழி' தனது வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட குழுவின் வழக்காக இல்லாமல், ஒரு பொதுவழக்காக மாறி அமைகிறது. ஆனால் பேச்சுவழக்குகள் அவ்வாறு இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பேச்சுவழக்குகள் நீடிக்கலாம். அவற்றின் இடையே ஒற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளும் நீடிக்கும்.
சில கட்டங்களில் எழுத்துமொழிகளில்கூட ஒன்றுக்குமேற்பட்ட பிரிவுகள் தோன்றலாம். 'செந்தமிழ்ச்செல்வி' போன்ற தமிழ் இலக்கிய இதழ்களின் எழுத்துத்தமிழ் நடை அனைவருக்கும அவ்வளவாகப் புரியாது. ஆனால் தினமணி, தினத்தந்தி, தினமலர், ஆனந்த விகடன், கல்கி, பாடநூல்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிற எழுத்துத்தமிழை அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும். இருப்பினும் பேச்சுத்தமிழில் இருக்கிற பல்வேறு வழக்குகள் போன்று பல்வேறு எழுத்துவழக்குகள் இருக்காது.
தமிழில் நீடிக்கிற எழுத்துவழக்கு- பேச்சுவழக்கு வேறுபாடுபற்றி பேராசிரியர்கள் ரா.பி. சேதுப்பிள்ள, முத்துச்சண்முகம் ஆகியோர் ஆய்ந்து இருந்தாலும், அவர்களது ஆய்வுகள் தமிழைத் தாண்டிச் செல்லவில்லை. ஆனால் Ferguson என்ற சமூகமொழியியல் அறிஞர் உலகில் நீடிக்கின்ற பல்வேறு இரட்டைவழக்கு மொழிகளை ஆய்ந்து, 'இரட்டைவழக்கு - Diglossia ' என்ற ஒரு மொழியியல் வகைப்பாட்டை முன்வைத்தார். அவரும் இரட்டைவழக்கு மொழிகளுக்கான அனைத்துப் பண்புகளும் உடைய மொழிக்கான எடுத்துக்காட்டாக, தமிழ்மொழியைக் கூறினார். அதற்குப்பின்னர் மொழியியல் அறிஞர்கள் பலர் பலமுனைகளில் இரட்டைவழக்குச் சூழல்பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றனர்.
இரட்டைவழக்குத் தமிழில் எழுத்துவழக்கானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதியினரின் அல்லது பகுதியின் வழக்கு இல்லை; ஆனால் பேச்சு வழக்குகள் தமிழில் பூகோளப் பகுதிகளையொட்டி - மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், குமரித்தமிழ், சென்னைத் தமிழ் என்று - பல வழக்குகளாக நீடிக்கின்றன. ஆனால் இன்றைய தமிழகத்தில் கல்வி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சியால் ஒரு பொதுப் பேச்சுத்தமிழும் (Common Spoken Tamil) தோன்றி நீடிக்கிறது. இன்றைய திரைப்படங்களில் பயன்படுத்துகிற பேச்சு வழக்கு ஒரு பொது வழக்காக இருப்பதால்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. (பழைய தமிழ்த் திரைப்படங்களில் அரசர்கள் உட்பட உயர்ந்த நிலைந்த நிலையில் உள்ள மக்கள் எழுத்துத்தமிழில் பேசினார்கள். நகைச்சுவைக்காகப் பேசும் பாத்திரங்களே பேச்சுத்தமிழில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இன்றும் திரைப்படங்களில் பாத்திரங்களின் யதார்த்தத்திற்காகக் குறிப்பிட்ட பகுதிகளின் வழக்குகள் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். மற்றபடி பொதுப்பேச்சுத்தமிழ்தான் பயன்படுத்தப்படுகிறது.
இரட்டைவழக்குச் சூழல் உண்மையில் மாற்றப்படவேண்டிய ஒன்று. இது ஒரு சமூகமொழியியல் பிரச்சினை. ஆனால் எவ்வாறு இதைத் தீர்ப்பது என்பதில் பல கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. பொதுப்பேச்சுவழக்கையே எழுத்துவழக்காகக் கொள்ளலாம்; அல்லது எழுத்துவழக்கையே பேச்சுவழக்காக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டுக்குமே நடைமுறை யதார்த்தத்தில் வாய்ப்பு இல்லை. இதற்கு மாற்றாக, பொதுப் பேச்சுவழக்குக்கும் பொது எழுத்துவழக்குக்கும் இடைவெளியைக் குறைக்க முயலலாம். இதற்கான மொழி மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளலாம். இதுபற்றித் தனியாக விவாதிக்கவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India