பிழையோ தவறோ இல்லாமல் எழுத்துத்தமிழில் அனைவராலும் எழுதமுடியுமா?
----------------------------------------------------------------------------------------------------------
நேற்று நான் இட்ட பதிவில் எழுத்துத்தமிழில் எழுத்துப்பிழையோ ஒற்றுப்பிழையோ சொற்றொடர்ப்பிழையோ இல்லாமல் ஒருவர் எழுதினால் சிறப்பு எனக் கூறியிருந்தேன். அதையொட்டியதுதான் இந்தப் பதிவு.
எழுத்துத்தமிழைப் பயன்படுத்துபவர்களை இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, முறைசார்ப் பள்ளிக் கல்வியில் தமிழைக் கற்றவர்கள். அடுத்து, அவ்வாறு பள்ளிக்குச் செல்லாமலேயே நடைமுறையில் தமிழைக் கற்றுக்கொண்டவர்கள்.
பள்ளிக்கல்வியில் இரண்டாம் மொழியாக ( அல்லது முதல்மொழியாக) ஆங்கிலக் கல்வியைப் பெறுபவர்கள் , தங்கள் சொந்த விருப்பம், முயற்சி போன்றவற்றின் அடிப்படையில் தங்களது ஆங்கில (எழுத்து) மொழித்திறனை மிகவும் உழைத்துக் கற்றுக்கொள்கிறார்கள். He is coming என்றுதான் எழுதவேண்டும். மாறாக, He are coming என்று எழுதக்கூடாது என்று தெளிவாகக் கற்றுக்கொள்கிறார்கள். நேரடியாக ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதுமூலம் அல்லது நேரடிப் பழக்கத்தின்மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
(எழுத்துத்தமிழை) முதல்மொழியாகப் படித்தாலும் அல்லது இரண்டாம் மொழியாகப் படித்தாலும், ஆங்கிலம்போன்று தமிழைக் கற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளன. வாசிப்பது, கேட்பது மூலம் தமிழைக் கற்றுக்கொள்வதற்குச் சுற்றுப்புற வாய்ப்பு ஏராளம். அவ்வாறு இருந்தும் முறைசார்க் கல்விமூலம் தமிழைக் கற்றவர்கள் ஏன் தவறு செய்யவேண்டும்? ஆங்கிலத்திற்கு அளிக்கிற முக்கியத்துவத்தைத் தமிழுக்கு அவர்கள் ஆங்கிலத்திற்கு அளிப்பதில்லை. இதற்கு ஆங்கிலம் பற்றிய அவர்களது நோக்குக்கும் தமிழ்பற்றிய அவர்களது நோக்குக்கும் இடையில் உள்ள வேறுபாடே.
பேச்சுத்தமிழை இயற்கையாகப் பெற்றுக்கொள்கிற குழந்தைகள் மூன்று வயதுக்குள் பேச்சுத் தமிழ் இலக்கணத்தை (முறைசார் கற்றல் மூலம் இல்லை!) கற்றுக்கொள்கின்றன. தங்களது சூழலில் கிடைக்கிற தரவுகளை வைத்துக்கொண்டே கற்றுக்கொள்கின்றன. எந்த ஒரு குழந்தையும் தனது ஐந்து வயதில் ''நான் நாளைக்கு வந்தேன்'' என்று கூறாது. நேரடியாகக் குழந்தை எந்தவொரு இலக்கண விதியையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
அடுத்து, இன்று ஒரு மிகப் பரந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் தங்களுக்கு அளிக்கப்படுகிற கோடியே கோடித் தரவுகளைப் பயன்படுத்தி ( நேரடியாக இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளாமல்) எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்கின்றன.
அவ்வாறு இருக்கும்போது, எழுத்துத்தமிழைமட்டும் சரியாகக் கற்றுக்கொள்ள சிலரால் ஏன் முடிவதில்லை? ஒற்று இடுவது தேவையா, எழுத்துப்பிழை இருந்தால் என்ன நட்டம் போன்ற கேள்விகளை முன்வைத்துத் தங்கள் எழுத்துத்தமிழ் பற்றாக்குறையை - இயலாமையை - முயற்சியின்மையை - நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தில் அவ்வாறு தவறு செய்வார்களா? மாட்டார்கள். ஏன்?
அடுத்து, முறைசார்த் தமிழ்க் கல்வி பெறாதவர்கள்கூட எழுத்துத்தமிழ் இதழ்களை நாம் வாசித்துக்காட்டினால் தெளிவாகப் புரிந்துகொள்கவார்கள். மேடையில் எழுத்துத்தமிழில் பேசினால் புரிந்துகொள்கிறார்கள். எனவே பெரும்பான்மையான இலக்கண விதிகள் பேச்சுத்தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பொதுவானவேயே. இரண்டும் வேறு வேறு மொழிகள் இல்லை. இரட்டைவழக்குமொழி. அவ்வளவுதான்!
ஒற்று இடுவதற்குக் காரணம் உண்டு. பொருண்மையைச் சரியாக வெளிப்படுத்த அது தேவை. மேலும் ஒற்று விதிகள் ஒன்றும் நூற்றுக்கணக்கில் இல்லை. அதுபோன்று சொல் அமைப்பு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றிற்கான விதிகளும் நூற்றுக்கணக்கில் கிடையாது. எனவே விதிகளின் எண்ணிக்கை இங்குப் பிரச்சினை இல்லை.
தமிழ்மொழிபற்றிய நமது நோக்கே - தாழ்வாகப் பார்க்கிற நோக்கே - தமிழைத் தவறாக எழுதுவதற்கு அடிப்படை. தமிழ்ப் பயன்பாடும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.
உண்மையில்லாத காரணங்களைக் கூறித் தமிழைத் தவறாக எழுதுவதை நியாயப்படுத்துவது சரி இல்லை. தவறாக ஆங்கிலம் எழுதிவிட்டு அதற்கு ஆங்கில மொழி அமைப்பே , இலக்கணமே கடினமாக இருக்கிறது யாராவது கூறுகிறார்களா? கூறமாட்டார்கள்.
எனவே முறையாக, தவறுகள் இல்லாமல், எழுத்துத்தமிழை நாம் கற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் முயற்சி தேவை. விருப்பமும் தேவை. தமிழ்மொழி நமது இனத்தின் மொழி - அடையாளம் - என்ற தாய்மொழி உணர்வும் தேவை.
ஆங்கிலத்தைத் தவறு இல்லாமல் பேசவும் எழுதவும் முயல்கிற நாம் . . . அதே உணர்வுடன் எழுத்துத்தமிழையும் தவறு இல்லாமல் எழுத முயலலாமே. எழுத்துத்தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்கும் இடையில் சொற்களில் அமைகிற எழுத்துக்களில் சற்று வேறுபாடு உண்டு. அவ்வளவுதான். ''ஒலகம்'' என்று சொல்வதை ''உலகம்'' என்று எழுதுகிறோம். இந்த உ - ஒ வேறுபாட்டுக்கும் தெளிவான விதி இருக்கிறது. 'உண்மை' என்ற சொல் பேச்சுத்தமிழில் 'ஒண்மை' என்று மாறுவது கிடையாது. இதுபோன்ற விதிகள் ஏறத்தாழ 30 விதிகள் உள்ளன. அவ்வளவுதான். மற்றபடி சொற்றொடர் அமைப்பில் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.
எனவே, மொழிபற்றிய தெளிவான கொள்கை, மொழி கற்றல்பற்றிய தெளிவான கொள்கை, தாய்மொழி உணர்வு , கற்றுக்கொள்வதற்கான முயற்சி - இவையே நமக்குத் தேவை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக